ஒத்தப்புளிக்காடு

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,575 
 
 

அகிலாண்டபுரம் என்ற கிராமத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது ஒத்தப்புளிக்காடு. அதாவது அந்தப் பகுதியில் வெகுகாலத்திற்கு முன்னர் ஒரு புளியமரம் மட்டுமே இருந்ததாம். அதனால் அப்பகுதிக்கு ஒத்தப்புளிக்காடு என்று பெயர் வந்தது என கிராமத்தினர் கூறிவருகிறார்கள்.

அந்த ஒத்தப்புளிக்காட்டில் மாரிமுத்துவுக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலமும், அவரது தம்பி குணசேகரனுக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலமும் இருந்தது. இருவரும் ஒரே கிணற்றிலிருந்துதான் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

ஒத்தப்புளிக்காடுஎனவே, பெரும்பாலும் இருவரும் மாட்டு வண்டியைப் பூட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் விவசாய வேலைக்குச் செல்வதுண்டு. இருவரும் ஒற்றுமையாகச் செயல்படுவதை ஊரே ஆச்சரியமாகப் பேசியது.

இந்த நிலையில், ஒரு நாள் வழக்கம்போல இருவரும் மாட்டு வண்டியில் தோட்டத்துக்குச் சென்றனர். அங்கு தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு, இருவரும் கிணற்றருகே இருந்த மாமரத்தின் கீழ் மதிய உணவு உண்ணத் தொடங்கினர். அப்போது அந்தப் பாதை வழியே சென்ற பிச்சைக்காரி ஒருத்தி அவர்களிடம் வந்தாள்.

அழுக்கடைந்த சேலை, கையில் அழுக்கான பை ஒன்றை வைத்துக்கொண்டு, அவர்களை நெருங்கியதும், குணசேகரன் முகத்தைச் சுளித்தான். “குளித்து எத்தனைநாள் ஆனதோ!’ என முணுமுணுத்தான். அந்தப் பிச்சைக்காரி, “ஐயா, எனக்கு மிகவும் பசியாக உள்ளது. நீங்கள் வைத்திருக்கும் உணவில் சிறிது கொடுங்களேன்’ என கையை நீட்டினாள்.

“வீடுகளில் பிச்சை எடுப்பதைவிட்டுவிட்டு, இப்போது காட்டுக்கும் வந்துவிட்டீர்களா..? போ, போ’ என விரட்டினான் குணசேகரன்.

மாரிமுத்து, “தம்பி அப்படிச் சொல்லாதே, நம்பி வந்தவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ எனக் கூறி, பித்தளை தூக்குவாளியின் மூடியில் சிறிது கேப்பைக்கழியையும், சிறிது ஊறுகாயையும் வைத்து பிச்சைக்காரியிடம் கொடுத்தான்.

அதனைப் பெற்றுக்கொண்ட பிச்சைக்காரி, ஓர் ஒரமாகச் சென்று அதனைச் சாப்பிட்டாள். பின்னர் தொட்டியில் கிடந்த தண்ணீரில், அந்த தூக்குவாளியின் மூடியைக் கழுவிக் கொடுத்துவிட்டு, கையெடுத்துக் கும்பிட்டாள். “மிகவும் நன்றி ஐயா. இந்த உணவை நான் சாப்பிட்டதால், ஊர் வரை களைப்பில்லாமல் நடந்து சென்றுவிடுவேன்’ எனக் கூறி, விடைபெற்றுச் சென்றாள்.

அடுத்தநாள். யாராவது வழிப்போக்கர் வந்தால் சாப்பிடக் கொடுக்கலாம் என கூடுதலாத ஒரு தூக்குச்சட்டியில் கேப்பைக்கழியைக் கொண்டு சென்றான் மாரிமுத்து. மறுநாளும் இருவரும் மதிய உணவு அருந்தும்போது அந்தப் பிச்சைக்காரி வந்துவிட்டாள்.

வந்ததே கோபம்… குணசேகரனுக்கு! அருகில் கிடந்த கம்பை எடுத்தான். அதனைத் தடுத்த மாரிமுத்து, “தம்பி தர்மம் தலைகாக்கும் என நமது தந்தை கூறியதை மறக்காதே. பிறருக்கு முடிந்த மட்டும் உதவ வேண்டும் என தாயார் கூறியதையும் நினைவில் கொள்’ என்றான்.

பின்னர் கூடுதலாகக் கொண்டு வந்திருந்த தூக்குச்சட்டியை பிச்சைக்காரியிடம் கொடுத்து, “நீ சாப்பிடு’ என்றான்.

பிச்சைக்காரியும் ஓரமாக நின்று சாப்பிட்டுவிட்டு, தூக்குச்சட்டியைக் கழுவி மாரிமுத்துவின் அருகில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். மாரிமுத்து சாப்பிட்டுவிட்டு, பிச்சைக்காரி வைத்துவிட்டுப் போன தூக்குச்சட்டியை கையில் எடுத்தபோது, அது கனமாக இருந்தது. ஆச்சரியத்துடன் திறந்து பார்த்தபோது, அதில் நிறைய தங்கக் காசுகள் இருந்தன. தங்கக் காசுகளை இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சுதாரித்துக் கொண்ட மாரிமுத்து, அந்த பிச்சைக்காரியைத் தேடி ஓடினான். அருகில் உள்ள கிணற்றின் அருகே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள் அந்தப் பிச்சைக்காரி. “அம்மா நீ கொடுத்த தூக்குவாளியில் தங்கக் காசுகள் இருந்தன. பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என எனது பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். எனவே, இதனை நீயே வைத்துக்கொள்’ என்று கூறிய மாரிமுத்து, பிச்சைக்காரியிடம் தூக்குவாளியை நீட்டினான். கலகலவென சிரித்த பிச்சைக்காரி, ஒரு தேவதையாக மாறினாள்.

“நான் வனதேவதை. உன்னைச் சோதிக்கவே நான் பிச்சைக்காரி வேடத்தில் வந்தேன். இந்த தங்கக்காசுகளை வைத்து மேலும் பலருடைய பசியைத் தீர்த்து வை’ என்று கூறிவிட்டு மறைந்தது அந்த தேவதை.

பின்னர் மாரிமுத்து, பல தர்ம காரியங்களில் ஈடுபட்டான். உறுதுணையாக தம்பி குணசேகரனையும் வைத்துக்கொண்டான்.

– எஸ்.பாலசுந்தரராஜ் (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *