பண்ணையார் தனஞ்செயனிடம் ஏராளமான கம்பளி ஆடுகள் வளர்ந்து வந்தன. அந்த ஆடுகளை எல்லாம் மேய்ப்பதற்கு சரியான ஆளைத்தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரான்சிஸ் என்பவன், பண்ணையாரிடம் வேலை கேட்டுச் சென்றது மிகவும் வசதியாகப்படவே, பண்ணையில் உள்ள ஆடுகளை மேய்க்கும்படி கூறினார்.
ஒருநாள் கூட தவறாமல் ஆடுகளை ஓட்டிச் சென்று, அருகே இருக்கும் புல்வெளியில் மேய்த்து வந்தான் பிரான்சிஸ். அவனுக்கு, இரண்டு ரொட்டித் துண்டுகளை மட்டுமே சம்பளமாகக் கொடுத்து வந்தார் பண்ணையார்.
பிரான்சிஸ்சிற்கு அது கட்டுப்படியாகவில்லை. தான் மேய்த்து வருகிற கம்பளி ஆடுகளின் மீது அதிகமான பாசம் வைத்திருந்தான் அவன். அதனால், அவைகளை விட்டுப் பிரிந்து செல்ல மனமில்லாமல், தனக்குக் கிடைக்கும் ரொட்டித் துண்டுகளையும், ஆடுகளுக்குக் கொடுத்துவிட்டு அமைதியாகப் படுத்து விடுவான்.
புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் எல்லாம், பிரான்சிஸ்சை பரிதாபமாகப் பார்த்து கொண்டிருக்கும். பிரான்சிஸ் பசியோடு படுத்திருப்பதைக் கண்ட ஆடுகள் எல்லாம், அவன் மீது இரக்கப்பட்டு, அவன் முன்னே ஒன்று கூடின.
“”பிரான்சிஸ்! நீ எங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாய். அதனால், உன்னைப் பிரிந்து செல்ல எங்களுக்கு மனம் இல்லை. நாங்கள் எல்லாரும் உன்னுடனேயே வந்துவிடுகிறோம். எங்கள் உடலில் உள்ள கம்பளி ரோமங்களை விற்பனை செய்தாலே, உனக்கு ஏராளமாகப் பணம் கிடைக்கும்!” என்று ஆலோசனை வழங்கின.
“”ஆடுகளே! நான் எனது முதலாளிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன். எனவே, உங்கள் எண்ணத்திற்கு நான் கட்டுப்படமாட்டேன்,” என்று கூறினான்.
ஆடுகளோ, பிரான்சிஸ்சின் நல்லெண்ணத்தைப் பாராட்டத் தொடங்கின.
“”பிரான்சிஸ்… பண்ணையார் உன்னை நன்றாகவே ஏமாற்றி வருகிறார். உனக்கு இரண்டு ரொட்டித் துண்டுகளை மட்டும் கொடுத்துவிட்டு, உன்னைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, எங்களைப் புல்வெளியில் மேயவிடுகிறார். நாங்கள் நன்றாக உடல் பருத்து வளர்ந்ததும், எங்களையும் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். எனவே, நாங்களும், அவரைவிட்டு எப்படியாவது தப்பிச் செல்லவேண்டுமென முடிவு செய்துள்ளோம்!” என்றன.
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான் பிரான்சிஸ். இந்த ஆடுகள் சொல்வதும் ஒரு வகையில் நியாயமாகத்தான் படுகிறது. நாம் இந்த ஆடுகளோடு சென்றுவிட்டால், இந்த ஆடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்துவிடும்; அதோடு, எனக்கும் சுதந்திரம் கிடைத்துவிடும். பண்ணையாரின் கொடிய பிடியிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்!” என்று முடிவு செய்தான்.
மறுநாள், அதிகாலையிலேயே தன் படுக்கையை விட்டு எழுந்துக் கொண்டான் பிரான்சிஸ். பண்ணையாருக்குத் தெரியாமல், மெல்ல வீட்டை விட்டு வெளியேறினான். பண்ணையின் வெளியே, ஆடுகளும் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தன.
ஆடுகளை ஓட்டிக்கொண்டு, பண்ணையை விட்டு வெளியேறி, வேறு ஊருக்குப் புறப்பட்டான் பிரான்சிஸ். அவனோடு, ஆடுகளும் சந்தோஷமாக செல்லத் தொடங்கின.
பண்ணையில் ஆடுகள் இல்லாதிருப்பதைக் கண்டு திகைப்படைந்தார் பண்ணையார். பிரான்சிஸ்சையும் அங்கு தேடிப்பார்த்தார். அவனையும் அங்கு காணாததால், குழப்பத்துடன், பண்ணையாட்கள் வேலை செய்கிற இடத்தை நோக்கி சென்றார்.
அந்த நேரம், பண்ணை வேலையாள் ஒருவன் ஓடி வந்து, “”முதலாளி! பண்ணையில் உள்ள ஆடுகளை, இன்று அதிகாலையிலேயே பிரான்சிஸ் ஓட்டிச் சென்று விட்டான்!” என்று கூறினான்.
உடனே, புல்வெளி பக்கமாக ஓடி வந்தார் பண்ணையார். அங்கே பிரான்சிஸ்சையும் காணவில்லை, ஆடுகளையும் காணவில்லை. ஒரு ரிஷி மட்டும், அந்தப் பாதையின் வழியாக வந்து கொண்டிருந்தார். காவி உடையுடனும், சடையுடனும் இருக்கும் அந்த ரிஷியைப் பார்த்ததும், அவர் முன்னே கைகட்டி நின்று கொண்டார் பண்ணையார்.
“”சுவாமி! எனக்கு தாங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். தாங்கள் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், அந்த உதவியை செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்!” என்றவாறு, ரிஷியின் காலில் பயபக்தியுடன் விழுந்த விட்டார் பண்ணையார்.
“”உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள்! தாராளமாக செய்கிறேன்!” என்றார் ரிஷி.
“”சுவாமி! என் வேலைக்காரன் ஒருவன், எனக்கு சொந்தமான ஆடுகளை, எங்கோ ஓட்டிச் சென்று விட்டான். அவைகள் எல்லாம் மீண்டும் எனக்குத் திரும்பக் கிடைக்குமா? என் ஆடுகள் எங்கே சென்றுள்ளன. அவற்றை நான் மீண்டும் கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் உங்கள் உதவியை வேண்டி நிற்கிறேன்!” என்று கூறினார்.
கண்களை மூடியபடி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார் ரிஷி.
“”மகனே! நீ செய்த கொடுமைகளின் காரணமாக, உன்னிடமிருந்த வேலைக்காரனும், ஆடுகளும் தப்பிச் சென்று விட்டனர். நீ, ஆடுகளுக்கு சரியான உணவு கொடுக்காமல் கஷ்டப்படுத்தினாய்! உன் வேலைக்காரனுக்கும், இரண்டு ரொட்டித் துண்டுகளை மட்டுமே கொடுத்து வந்தாய். பசிக் கொடுமையைத் தாங்கிக்கொண்டு, இத்தனை நாட்களும் உன் வேலைக்காரன் உனக்கு வேலை செய்து வந்திருக்கிறான். இன்று அவன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே உன் இருப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டான்!” என்றார்.
அதைக் கேட்ட பண்ணையாரால் பதில் எதுவும் பேச முடியவில்லை. அப்படியே செய்வதறியாது திதைத்தபடி நின்று கொண்டிருந்தான். உடனே ரிஷி, மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“”மகனே! உன் வேலைக்காரனையும் உன்னைப் போன்று எண்ண வேண்டும். நீ வளர்க்கிற உயிரினங்களையும் உன் உயிராகவே எண்ண வேண்டும். உன்னை சார்ந்தவர்களிடம் நீ அன்பாக நடந்து கொண்டால், யாருமே உன்னை விட்டுப் பிரியமாட்டார்கள்!” என்று கூறினார்.
“”சுவாமி! இதுவரையிலும் நான், பணக்காரன் என்ற ஆணவத்தால், ஏழைகளை மதிக்காமல் நடந்து விட்டேன். இனிமேல், எல்லா மக்களும் மனத்தாலே ஒன்றுபட்டவர்கள் என்பதைப் புரிந்து வாழ்வேன்!” என்றான்.
“”மகனே! “எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் மக்கள்’ என்று சான்றோர்கள் கூறியுள்ளனர். இனிமேல், பணத்தால் யாரையும் பிரித்துப் பார்க்காதே. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் வாழக் கற்றுக்கொள்!” என்று கூறினார்.
– ஜூன் 25,2010