தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,417 
 

ரஷ்ய தேசத்து நாடோடிக் கதை:

ரஷ்யா என்றதுமே நம் நினைவுக்கு வருவது பனி மலைகளும், கரடியும்தான். அந்த ரஷ்யாவில் ஒரு காலத்தில் நடந்தது இந்தக் கதை.

உணவைத் தேடி...ஒரு வயதான ஓநாய் பசியில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. பனிமலைப் பகுதிகளில் அலைந்து திரிந்து வாய்க்கு ருசியான விலங்கு கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுத் தேடியது. வெகுநேரம் தேடியும் எதுவும் கிடைக்காததால் அதற்குப் பசி அதிகமாகியது. அந்த நேரத்தில் அதன் கண்ணில் ஒரு சின்ன ஓடை தென்பட்டது. ஓடை மட்டும் இல்லை. ஓடையில் நீர் அருந்திக் கொண்டிருந்த செம்மறியாடு ஒன்றும் அதன் கண்ணில் பட்டது.

ஓநாய்க்கு அதைப் பார்த்த உடனேயே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது. மெல்ல அதன் அருகில் போனது. தாகத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்தாலும் ஓநாய் வருவதைப் பார்த்து விட்டது செம்மறியாடு. தைரியமாக நின்றது.

ஓநாயோ, “”செம்மறியாடே, எனக்கு நல்ல பசி, மதியத்திலிருந்தே உணவு இல்லை, எனது இரவு உணவாக உன்னை அடித்துத் தின்னப் போகிறேன்” என்றது. அதைக் கேட்ட செம்மறியாடு கொஞ்சமும் பயப்படாமல், “”அது சரிதான், நீ யார் முதலில் அதைச் சொல், என்னை உணவாக உண்ணப் போவது யார் என்று எனக்குத் தெரிய வேண்டாமா” என்று கேட்டது.

அதற்கு ஓநாய், “”நான்தான் ஓநாய், என்னைப் பார்த்தால் தெரியவில்லையா” என்று கேட்டது.

செம்மறியாடு, “”நீ ஓநாயா? சரிதான்! நீ ஓநாய் இல்லை, நீ ஒரு நாய், என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்று கேட்டதும், ஓநாய் கொஞ்சம் கோபம் அடைந்து, “”நான் நாய் இல்லை, ஓநாய்தான்” என்றது.

அதற்கு செம்மறியாடு, “”அப்படியானால் ஓரு வேலை செய், பெரிய மலையின் அடிவாரத்தில் நின்று, உனது வாயைத் திறந்து உனது கோரமான பற்களைக் காட்டு பார்க்கலாம்” என்றது.

“”அப்படிக் காட்டி விட்டால் என்ன செய்வாய்?” என்று கேட்டது ஓநாய்.

செம்மறியாடு கொஞ்சமும் சளைக்காமல், “”உனது வாயை அகலத் திறந்து வைத்தால் நான் மேலே மலையின் உச்சியில் இருந்து உன் திறந்த வாயில் நேரிடையாகக் குதித்து விடுவேன், நீ என்னை உண்ணலாம்” என்றது.

”ஓ அப்படியா, அப்படியே செய்கிறேன்” என்றது ஓநாய்.

செம்மறியாட்டை உண்ணும் ஆசையில் மலையடிவாரத்தில் போய் நின்ற ஓநாய், வாயை அகலத் திறந்து மேலே பார்த்துக் காத்திருந்தது. சரிவாக இருந்த அந்த மலையின் உச்சிக்குச் சென்றுவிட்ட அந்த செம்மறியாடு மேலிருந்து வேகமாய் ஓடி வந்து தன் கூர்மையான கொம்புகளால் ஓநாயை முட்டித் தள்ளியது.

அதைச் சற்றும் எதிர்பார்க்காத ஓநாய், செம்மறியாடு மோதிய வேகத்தில் பத்தடி தள்ளி உருண்டு புரண்டு விழுந்தது. செம்மறியாடோ, விட்டது சவாரி.

ஓநாய் நொந்து போனது. “சே… என்ன ஒரு மடத்தனம். நம்மை இப்படி ஏமாற்றி முட்டி மோதி உருட்டித் தள்ளிவிட்டு ஓடி விட்டதே இந்த செம்மறியாடு. கொஞ்சம்கூடப் புத்தி இல்லாமல் வாய்க்கு அருகில் வந்த உணவை விட்டு விட்டேனே’ என்று புலம்பியபடியே நடந்தது. பசியும் அதிகமாக, அது பார்வையை நாலாபக்கமும் பாய விட்டபடி நடக்க ஆரம்பித்தது.

அப்பொழுது அதன் கண்ணில் பட்டது குதிரை ஒன்று. அது நீர் நிலையை ஒட்டி வளர்ந்திருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஓநாயின் வாயில் மீண்டும் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது.

இந்தக் கொழுத்த குதிரையை உணவாக்கிக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தது. அது குதிரையின் அருகில் சென்று, “”குதிரையே உன்னை நான் தின்னப் போகிறேன்” என்றது. அதற்கு அந்தக் குதிரை, “”என்னைத் தின்னப் போகிறாயா, இருக்கட்டும். முதலில் நீ யார் என்பதை என்னிடம் சொல். நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா” என்று கேட்டது.

அதற்கு ஓநாய், “”சரிதான், என்னை யார் என்றா கேட்கிறாய்? நான்தான் ஓநாய், என் கோரமான பற்களைப் பார்” என்று வாயை அகலத் திறந்து காட்டியது.

“”நீ ஓநாய் இல்லை, நீ ஒரு நாய், யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்” என்றது குதிரை.

ஓநாய், “”நான் ஓநாய்தான்” என்றது.

உடனே குதிரை, “”அப்படியா, ஒரு வேலை செய். என் உடல் இன்னும் கொழுக்கவில்லை. நான் புற்களைத் தின்று கொண்டே இருக்கிறேன். நீ என் வால் பகுதியில் இருந்து என்னைத் தின்னத் தொடங்கு” என்றது.

ஓநாய் குஷியானது.

இந்தக் குதிரைக்கு மூளையே இல்லை, சொன்ன உடனேயே வால் பகுதியில் இருந்து தின்னு என்கிறதே என்று தனக்குள் சொல்லிக் கொண்டே குதிரையின் வால் பக்கம் சென்றது.

வாயில் ஜொள்ளு கொட்டிக் கொண்டே, குதிரையின் வாலைக் கவ்வப் போன நேரத்தில் குதிரை தன் பலம் அனைத்தையும் சேர்த்து ஒரு உதை விட்டது. அவ்வளவுதான்…. அலறிக் கொண்டே பத்தடி தூரத்தில் போய் சுருண்டு விழுந்தது ஓநாய். குதிரை குதித்து ஓடி மறைந்தது.

எலும்புகளெல்லாம் வலிக்க எழுந்து நின்றது ஓநாய்.

“சே, நான் மீண்டும் முட்டாளாகி விட்டேனே, வாலிலிருந்து தின்னு என்று அது சொன்ன உடனே உஷாராகி இருக்க வேண்டாமா’ என்று புலம்பியபடி வலி, பசி, வேதனை சேர நடக்க ஆரம்பித்தது.

அப்பொழுது அது ஒரு பன்றியைப் பார்த்தது. அதைப் பார்த்ததும் ஓநாய் குஷியானது. இந்தப் பன்றியையாவது தின்று அகோரப் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து அதன் அருகில் சென்றது.

“”பன்றியே, உன்னைத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறேன்” என்றது.

பன்றி ஓநாயைப் பார்த்து, “”யார் நீ? என்னைத் தின்னப் போகிறேன் என்று சொல்கிறாய்? என்னைத் தின்னப் போவது யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா” என்று கேட்டது.

”நான்தான் ஓநாய், என்னைப் பார்த்தால் தெரியவில்லையா?” என்று கேட்டது.

“”அப்படியா? நான் உன்னைப் பார்த்ததும் நாய் என்றுதான் நினைத்தேன்” என்றது பன்றி.

“”இல்லை, நான் ஓநாய்தான்” என்று சொன்னது பசியில் இருந்த ஓநாய்.

பன்றியோ, “”அவ்வளவுதானே! நீ ஏன் என்னைச் சாப்பிட்டுவிட்டு உன் இருப்பிடம் வரை நடந்து செல்ல வேண்டும்? என் முதுகில் ஏறிக் கொள். உன் இடத்துக்குப் போவோம்… அங்கே வைத்து, நீ என்னைப் பொறுமையாய் தின்னலாம்” என்றது.

ஓநாயும், “சரி’ என்று சொல்லி, பன்றியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.

பன்றி ஓட்டம் எடுத்து மக்கள் வசிக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது.

அங்கு இருந்த நாய்கள் ஓநாயைக் கடித்துக் குதறின.

ஓநாயினால் அதற்கு இருந்த பசியில் எதிர்த்துக் கூட போராட முடியவில்லை.

தப்பித்தால் போதும் என்று காயங்களுடன் ஓடியே போனது.

– ஆ. ஸ்ரீதரன் (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *