(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொலைதூரத்தில் ஆரவாரிக்கும் நாய்கள். அதனுடன் கலைந்து போய்விடுகிற மனம்.
உச்சி வெயிலை சூரியன் உரமாக அள்ளி வீசிக் கொண்டிருந்தான்.
தெருக்கள் சனங்களைச் சில நிமிடங்களுக்கு மறந்து போயிருந்தன.
நீர் தேங்கி நின்ற அந்த களிமண் பரப்பில் இருந்த முதலையண்ணா நீர்ப்பரப்பின் எல்லைக்கு மெதுவாக வந்தார். தனது பெரிய வாயை ஆவெனப் பிளந்து வைத்துக் கொண்டு யாருக்கோ காவல் இருந்தார்.
“நீ வரும் உலா… என் தெருவில் எனக்குத் திருவிழா’ என்று மனதிற்குள் பாடிக் கொண்டார்.
சிறிது நேரத்தில், சன நடமாட்டமற்ற அந்தப் பிரதேசத்தில் அவரது சிநேகிதி வந்தாள். அவள் வேறு யாருமல்லள்.
ஒரு சின்ன நீர்க்குருவி.
அவள் பெயர் “புளோவர்”
அவள் எந்தவித தயக்கமுமின்றி “விசுக்” கென்று பறந்து வந்து முதலையண்ணாவின் வாயில் அமர்ந்து கொண்டாள்.
இவரது பல் இடைவெளிகளில் இருந்து உணவைக் கொத்திக்கொத்தி உண்டு மகிழ்ந்தாள்.
முதலை அண்ணாவின் வாய் சுத்தமாகிக் கொண்டிருந்தது. குருவித் தங்கைக்கும் உணவு கிடைத்துக் கொண்டிருந்தது.
திடீரென …..
குருவித் தங்கையின் இளைய மனதில் ஒரு புயல் நுழைந்தது. தெருவில் யாரோ மனிதர்கள் வரும் அறிகுறி தெரிந்தது. அதை உணர்ந்து கொண்ட குருவீத் தங்கை,
“யாரோ வருகிறார்கள். உள்ளே போய்விடுங்கள் அண்ணா” என்று முதலைக்கு அறிவித்துவிட்டு வேகமாய்ப் பறந்து போனாள்.
“சீச்சீ… இந்தப் பல்லை ஒழுங்காக துப்பரவு செய்வதற்கிடையில் அபாயம் வந்துவிட்டது… நாளைக்குப் பார்ப்போம்.” என்று அலுத்துக் கொண்டு நீரினுள் ஓடி மறைந்தது முதலை.
“பல் வைத்திய நிபுணர் உன் பல்லை துப்பரவு செய்தமைக்கு எத்தனை காசு கொடுத்தாய்?”
உள்ளே வந்த முதலையை இப்படிக் கேட்டது சுறா.
“காசா? மனிதர்களல்லவா காசில் ஆசை கொண்ட வர்கள். குருவித் தங்கை என்னை ஒரு போதும் காசு கேட்பதில்லை.” என்று புழுகினார் முதலை அண்ணா.
– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.