தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,168 
 
 

கோஸி நதிக்கரையிலிருந்த காடு ஒன்றில் விலங்குகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு நாள் முயல், மான், கரடி மூன்றும் உரையாடிக் கொண்டிருந்தன.

“நம்மிடையே நாளுக்கு நாள் சண்டை வலுத்துக் கொணடே செல்கிறதே. இதைத் தீர்க்க ஓர் அரசன் இருந்தா நல்லா இருக்குமே!’ என்றது முயல். இதைக் கேட்ட மான் சொன்னது, “ஆமாமா அப்போதான் நம்ம சண்டை முடிவுக்கு வரும்.’

“ஆனா யார் காட்டுக்கு ராஜா ஆவது?’ – இது கரடி.

இதை வைத்தே ஒரு ரகளை ஆரம்பமானது பாருங்கள்.

“நான்தான் இந்தக் காட்டுக்கு ராஜா’ என்று உரக்கக் கூறியது முயல்.

கரடி அதைவிட குரலை உயர்த்திச் சொன்னது, “ஏய்… நீ இல்ல; நான்தான் மன்னன் ஆவேன்!’

இதைக் கேட்ட மான் சும்மா இருக்குமா? “இல்லவே இல்லை, நான்தான் அரசன்!’ என்றது.

சிறிது நாட்களுக்கு முன்தான் ஏதோ ஒரு காட்டிலிருந்து நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு கிழட்டுச் சிங்கம் இக்காட்டிற்கு வந்திருந்தது. அதன் தூக்கம் இந்த மூவரின் சண்டையால் கலைந்தது.

“என்ன ஒரே சத்தம்!’ என்றவாறே கரடி, மான், முயல் இருந்த இடத்திற்கு சிங்கம் வந்தது.

சிங்கத்தைப் பார்த்த முயல் சொன்னது.

“இந்த சிங்கத்தையே நம்ம ராஜா ஆக்கிட்டா என்ன?’

மான், “நீ சரியா சொன்னே…’ என்றது.

விலங்குகள் அனைத்தும் கூடின. “தங்களுக்குள் அடிக்கடி நிகழும் சண்டைப் பிரச்னையை சிங்கத்திடம் கூறி… நீங்கதான் எங்க ராஜாவா இருந்து ஆட்சி செய்யணும்..’ என வேண்டுகோள் விடுத்தன.

சிங்கத்தின் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்!

“ஆஹா! என்னே அதிர்ஷ்டம். இப்படிகூட வீடு தேடிவருமா? உம்ம்ம்… என் கெட்ட நேரம் முடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன்…’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டது.

சிறிது நேரம் யோசிப்பது போன்று பாவனை செய்தது.

“சரி! அரசனாகிறதில எனக்கொன்னும் ஆட்சேபம் இல்லை. ஆனா விஷயம் (உங்களுக்குள் நடக்கும் சண்டை) ரொம்ப கடினமா இருந்தா மட்டும்தான் நான் மரண தண்டனை கொடுப்பேன். அதுவும் நல்லா விசாரிச்சுதான் முடிவு எடுப்பேன்’ என்றது சிங்கம்.

விலங்குகளுக்கோ ஒரே சந்தோஷம். “நமக்கு அரசன் வந்துட்டாரே…’ என்று குதூகலமிட்டன.

முயல், “கொடுமைன்னா எங்களுக்கும் பயம்தான். ஆனா மகாராஜா, குற்றம் செஞ்சா கண்டிப்பா நியாயமா தண்டனை கிடைக்கணும்…’

இதைக் கேட்ட சிங்கம் மனதுக்குள் எண்ணியது, “ஆமாம்… ஆமாம்… அடிக்கடி நானும் மரண தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் வரும்தான்..’

அடுத்த நாளே வழக்கம் போல ஒரு முயலும் கெüதாரியும் ஒரு பொந்திற்காக சண்டையிட்டுக் கொண்டன.

முயல்: இந்த வீடு என்னோடது.

கெüதாரி: இல்லே என்னோடது. நான்தான் முதல்ல பார்த்தேன்.

முயல்: நீ வெறுமே பாக்கத்தான் செஞ்சே… இது என் அப்பா உருவாக்கினாரு..

கெüதாரி: ஆனா அவர் விட்டுட்டுப் போயிட்டாரே.. இப்ப இதில நான்தானே இருக்கேன்?’

இறுதியில் இரண்டும் சிங்க ராஜாவிடம் செல்ல முடிவெடுத்தன.

கெüதாரி சிங்கத்திடம் கூறியது.

“மன்னர் மன்னா! எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்…’

“ஏன்… என்னாச்சு?’ என்று கேட்டது சிங்கம்.

முயலும் கெüதாரியும் கூண்டுப் பிரச்னையைப் பற்றி சிங்கத்திடம் கூறின.

“இருங்க எனக்கு வயசாயிடுச்சி இல்லையா? நீங்க இரண்டு பேரும் என்ன சொன்னீங்கன்னு சரியா கேட்கலை. என் பக்கத்துல வாங்க. இங்க வந்து சொல்லுங்க. என்ன பிரச்னைன்னு…’ என்றது மிகவும் சாதுர்யமாக.

சிங்கத்தின் தந்திரம் அறியாத முயலும் கெüதாரியும் அதனருகில் சென்றன. உடனே இரண்டையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டது சிங்கம்.

“காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’ இருவரின் குரல் கேட்டு மற்ற விலங்குகள் அங்கு ஓடிவந்தன. சிங்கம் முயலையும் கெüதாரியையும் தன் இரையாக்கிக் கொண்டது. அதை நேரில் கண்ட மிருகங்கள் தமக்குள் பேசிக் கொண்டன…

“தன் கையே தனக்குதவின்னு நம்ம பிரச்னையை நாமே தீர்த்துக்கிட்டிருந்தா நம்மோட இரண்டு தோழர்களை நாம இழந்திருக்க மாட்டோம். அவசரப்பட்டுட்டோமே….’ என்று தம்மைத்தாமே நொந்து கொண்டன.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *