கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,210 
 
 

அது ஒரு காலை நேரம். ஆண் நரியும் பெண் நரியும் ஒரு அழகிய குகைக்குள் நுழைந்தன. அந்தக் குகை பெண் நரிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது ஒரு புலியின் குகை. அந்த குகையில் வசிக்கும் புலி காலை நேரமானதும் புறப்பட்டு வெளியே இரை தேடச் சென்று மாலையானதும் அந்த குகைக்கு திரும்பி வரும்.

“”இந்த குகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம இங்கேயே இருந்துடலாமா டியர்?’

“”அய்யோ. இது புலியோட குகை. சாயங்காலம் அது திரும்பி வந்து நம்மை இந்த குகைக்குள்ளே பார்த்துட்டா வம்பா போயிடும்.”

“”ஏதாவது ஒரு யோசனை செய்து அந்தப் புலியை இங்க வராம பண்ணிடலாம்.”

“”சரி, நீயே ஒரு யோசனை சொல்லேன்.”

பெண் நரி யோசித்தது. மாலை நேரமானது. புலி தனது குகையை நோக்கிவந்து கொண்டிருந்தது. இதை பெண் நரி பார்த்துவிட்டது. குகைக்குள் புலியின் கண்களில் படாதவாறு ஆண் நரியிடம் தனது குரலை மாற்றி சத்தம் போட்டுச் சொன்னது.

“”நம்ம பசங்க புலிக்கறி சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசைப்படறாங்க. அதோ ஒரு புலி வருது பாரு. போய் அதை அடிச்சிக் கொண்டு வா.”

இது புலியின் காதில் விழுந்தது. புலி பயந்து போனது. தன்னை இவ்வளவு சாதாரணமாக அடித்துக் கொண்டு வரச் சொல்கிறது. இது நம்மை விட பலமான விநோதமான மிருகமாக இருக்கும் என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்ட புலி பயந்து ஓடியது. வழியில் ஒரு குள்ளநரி வந்து கொண்டிருந்தது. புலி தலைதெறிக்க ஓடி வருவதைப் பார்த்த குள்ள நரி அதைத் தடுத்து நிறுத்தி விசாரித்தது.

புலி விஷயத்தைச் சொன்னது.

“”உன்னோட குகையில நரியும் அதுங்க பசங்களும் தான் இருக்கு. இதுக்குப் போய் பயந்துட்டீங்களே.”

புலி இதை நம்பவில்லை.

“”நீ சொல்றதை எப்படி நம்பறது?’

“”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன்கூட வந்து இதை நிரூபிக்கிறேன்.”

“”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னோட வாலை என்னோட வால்லே கட்டிடுவேன். பாதியிலே நீ விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா?’

குள்ளநரி இதற்கு ஒப்புக்கொண்டது. புலி தன் வாலை குள்ளநரியின் வாலுடன் இணைத்து முடிபோட்டது.

இருவரும் குகையை நோக்கி புறப்பட்டு குகையை நெருங்கினர். குகைக்குள்ளிருந்த நரி இதை கவனித்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது.

நரி இப்போது சத்தம் போட்டு கத்தியது.

“”குள்ள நரியே… நீ எனக்கு ரெண்டு புலிகளைக் கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு போனே. இப்ப ஒரே ஒரு புலியோட வர்றியே. ஒரு புலி எனக்கு போதாதுன்னு தெரியாதா உனக்கு?”

இதை உண்மை என்று நம்பிய புலி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. குள்ளநரியின் வால் புலியின் வாலுடன் கட்டப்பட்டிருந்ததால் குள்ளநரிக்கு பலத்த அடிபட்டு அது இறந்து போனது.

இப்போது வழியில் ஒரு குரங்கு வந்து கொண்டிருந்தது. புலி தலைதெறிக்க ஓடி வருவதைப் பார்த்த குரங்கு அதை தடுத்து நிறுத்தி விசாரித்தது.

புலி விஷயத்தைச் சொன்னது.

“”உன்னோட குகையில நரிதான் இருக்கு. நீ போய் எதுக்கு பயப்படறே?’

குரங்கு சொன்னதை புலி நம்பவில்லை.

“”நீ சொல்றதை எப்படி நம்பறது?”

“”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன் கூட வந்து இதை நிரூபிக்கட்டுமா?’

“”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னை என்னோட உடம்புலே கட்டிக்குவேன். பாதியிலே நீ என்னை விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா?”

குரங்கு இதற்கு ஒப்புக்கொண்டது.

புலி குரங்கை தன் உடம்புடன் வைத்து கட்டிக் கொண்டு குகையை நோக்கி நடந்தது. இருவரும் குகையை நெருங்கினர்.

குகைக்குள்ளிருந்த நரி இதை கவனித்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது.

நரி இப்போது சத்தம் போட்டு கத்தியது.

“”குரங்கே, சொன்ன சொல்லை நீ காப்பாத்த வேணாமா? நீ புலியை எனக்கு காலையிலே கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு இவ்வளவு தாமதமாகக் கொண்டு வர்றியே. எனக்கு பசிக்கும்னு தெரியாதா உனக்கு?’

இதை உண்மை என்று நம்பிய புலி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. வழியில் சில இடங்களில் கீழே விழுந்து புரண்டது. குரங்கிற்கு பலத்த அடிபட்டது.

இதற்குப் பிறகு புலி அந்த குகைப் பக்கம் வருவதே இல்லை. சமயோஜித புத்தியால் நரி தன் குடும்பத்துடன் சந்தோஷமாக அந்த குகையில் வசிக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *