விசய நகரப் பேரரசு தென்னாடு முழுவதும் பரவி இருந்தது. விசய நகர அரசர்களுள் புகழ் பெற்ற வர் கிருஷ்ண தேவராயர். இவர் நீதி தவறாமல் நல் லாட்சி செய்தார். இவர் ஆட்சியில் மக்கள் குறைகள் இல்லாமல் இன்பமாக வாழ்ந்தார்கள்.
கிருஷ்ண தேவராயருடைய முதல் அமைச்சர் பெயர் அப்பாஜி. அப்பாஜி கூர்மையான நுண் ணறிவு மிகுந்தவர்.
ஒரு நாள் அரசரும் அமைச்சருமாக மாறு. வேடம் அணிந்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.. அந்தக் காலத்தில் அரசர்கள் தங்கள் குடிமக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.
அரசரும் அமைச்சரும் பம்பை ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றனர். அந்த ஆற்றங்கரையை ஒட்டியிருந்த வயல்கள் எல்லாம் – நன்றாக விளைந்து பச்சைப்பசேல் என்றிருந்தன. அவற்றுள் அறுவடை ஆகிக் காய்ந்து கிடந்த ஒரு வயலை உழவன் ஒரு.. வன் உழுது கொண்டிருந்தான்.
அவ்வழியே மூன்று பெண்கள் இடுப்பில் நீர் நிறைந்த குடங்களுடன் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உழவன் உழுது கொண்டிருந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டே போனார்கள். அவர்களுள் ஒருத்தி, “நீலா, உழவன். உழுகின்றானே, இந்த நிலம் முகத்துக்கு ஆகும்” என்று கூறினாள்.
“தவறு தவறு கமலா. இந்த நிலம் வாய்க்கு ஆகும்” என்று நீலா கூறினாள்.
மூன்றாவது பெண்ணாகிய சுந்தரி, “ அல்ல அல்ல. இந்த நிலம் பிள்ளைக்குத்தான் ஆகும். – நீங்கள் இருவரும் கூறியது சரி அல்ல” என்றாள்.
இவ்வாறு அவர்கள் மூவரும் அந்த நிலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே சென்றனர். அவர்கள் மூவரும் கூறியவைகளை அரசரும் அமைச்சரும் கேட்ட வண்ணம் அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
அந்தப் பெண்கள் கூறியவை, அரசருக்கு விளங்கவில்லை. அரசர் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே, இந்தப் பெண்கள் ஒரு நிலத்தை முகத்துக்காகும், வாய்க்காகும், பிள்ளைக்காகும் என்று கூறிக் கொண்டு போகிறார்களே, இவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டார்.
அமைச்சர் அரசரைப் பார்த்து, “அரசே, முகத்துக்கு ஆகும் என்று கூறினளே ஒருத்தி, அதன் பொருள் என்ன வென்றால், முகத்தில் பூசும் மஞ்சள் பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதா கும். மற்றொருத்தி வாய்க்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் வெற்றிலைக் கொடி பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். இன்னொருத்தி பிள்ளைக்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் தென்னம் பிள்ளை வைத்து வளர்ப்பதற்கு ஏற்ற நிலம் என்பதாகும்” என்று கூறினார்.
இந்த விளக்கத்தைக் கேட்ட அரசர் பெரும் வியப்பு அடைந்தார்; தம் அமைச்சர் கூறியது சரி தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார் ; தமக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்களை நிறுத்தி, அவர்கள் கூறியதற்கு விளக்கம் கூறுமாறு கேட்டார். அவர்கள், அமைச்சர் சொன்னதைப் போலவே கூறினர். அரசர் தம் அமைச்சரின் கூர்மையான அறிவைப் புகழ்ந்து பாராட்டினார்.
கிருஷ்ண தேவராயர், மற்றொரு முறை மாறு வேடத்தில் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். நல்ல வெய்யிலில் சுற்றி வந்த தால் அவருக்குச் சற்றுக் களைப்பாயிருந்தது. ஒரு சிற்றூரின் குளக்கரை அருகில் வந்ததும் அங்குச் சிறிது நேரம் களைப்பாற விரும்பினார்.
அந்தக் குளம் மிகப் பெரியதாகவும் நீர் நிரம்பி யும் இருந்தது. அதன் ஒரு கரையில் பெரிய ஆலமரம் ஒன்று தழைத்திருந்தது. அதன் கிளைகள் நான்கு புறமும் பரவி விழுதுகள் விட்டு அடர்ந்து, ஒரு மன்னன் தன் நால்வகைப் படைகளுடன் தங்கு வதற்கேற்றவாறு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. அக் கொடிய வெய்யிலிலும் அக்குளக்கரை யில் ஆலமரத்தின் அடியில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.
வெய்யிலில் சுற்றிவந்த கிருஷ்ண தேவராயர் அந்த ஆலமரத்தின் அடியில் தம் குதிரையை ஒரு புறம் மாகக் கட்டிவிட்டு, அமர்ந்தார். அவ்வமயம், அவ்வூர்ப் பெண்கள் சிலர் தண்ணீர் எடுத்துச் செல் வதற்காக அக்குளத்திற்கு வந்தனர். தங்கள் குடங்களில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்பிச் செல்கையில், ஆலமரத்தை ஏறிட்டு நோக்கிய ஒருத்தி, “காலும் கழியும் ஒன்றடி” என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றொருத்தி, அண்ணாந்து பார்த்து, “இறகும் இலையும் ஒன்றடி” என்று கூறினாள். இவ்விருவர் கூறியதைக் கேட்ட இன்னொருத்தி, “வாயும் கனியும் ஒன்றடி” என்றாள் இவ்வாறு பேசிக் கொண்டே அந்தப் பெண்கள் சென்று விட்டனர்.
மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டிருந்த இராயருக்கு இப் பெண்கள் கூறியதன் பொருள் விளங்க வில்லை. அவர் அரண்மனைக்குத் திரும்பிய பின் தம் அவையிலுள்ள அறிஞர்களிடம் அந்தப் பெண்கள் கூறியவற்றை எடுத்துச் சொல்லி, “அவற்றின் உட்பொருள் என்ன ?” என்று கேட்டார். அவையினர் நீண்ட நேரம் சிந்தித்துப் பார்த்தும், அவர்களுக்கு அவற்றின் உட்பொருள் விளங்க வில்லை .
ஆனால், கிருஷ்ண தேவராயரின் முதல் அமைச் சராகிய அப்பாஜி, அரசரை நோக்கி, “ அந்த மூன்று பெண்களும் ஆலமரத்தைப் பார்த்து இப் படிக் கூறினரா?” என்று கேட்டார். அரசர் ‘ஆம்’ என்று கூறினார். உடனே அப்பாஜி, அந்தப்பெண் கள் கூறியவற்றின் உட் பொருளை விளக்கத் தொடங் கினார்.
அரசே, அந்த ஆலமரத்தில் ஒரு கிளி பறந்து வந்து உட்கார்ந்தது. அதனை அந்த மூன்று பெண் களும் பார்த்தார்கள்; உடனே அதற்கு உவமை கூறத் தொடங்கி விட்டார்கள். காலுங்கழியும் ஒன்றடி’ என்று ஒருத்தி கூறியது, கிளியின் காலும் மரத்தின் கிளையும் ஒன்று போல் இருக்கின்றன என்று பொருள்படுகிறது. “இறகும் இலையும் ஒன்றடி ” என்று மற்றொருத்தி கூறியது கிளியின் இறகும், ஆலமரத்தின் இலையும் ஒன்றுபோல் இருக்கின்றன என்று பொருள் படுகிறது. “வாயுங் கனியும் ஒன்றடி” என்று இன் னொருத்தி கூறியது கிளியின் அலகும் ஆலமரத்துக் கனியும் ஒன்றுபோல் இருக்கின்றன என்று பொருள்படுகிறது. எனவே, அப்பெண்கள் கிளி யையும் ஆலமரத்தையும் இணைத்துத்தான் இவ்வாறு குறிப்பாகப் பேசியிருக்கின்றார்கள் என்று கூறினார்.
தம் முதல் அமைச்சர் கூறிய விளக்கம் பொருத் தமாக இருந்தாலும், அது சரிதானா என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கருதினார். எனவே, தம்முடன் அப்பாஜியை அழைத்துக் கொண்டு, அந்தச் சிற்றூருக்குச் சென்று அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். இரு வரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அவ்வமயம் வழக்கம் போல் நீர் எடுக்க அப்பெண் கள் குளத்திற்கு வந்தனர். அப்பெண்களை அடை யாளம் கண்டு கொண்ட அரசர், அவர்களை அழைத்து, அவர்கள் கூறியவற்றிற்கு விளக்கம் கேட்டார். அப்பெண்கள், ஆல மரத்தில் வந்து நின்ற கிளியைப் பார்த்துத் தாங்கள் அவ்வாறு கூறியதாகச் சொன்னார்கள்.
அரசர், தம் முதல் அமைச்சரின் அறிவுக் கூர்மையின் திறத்தைப் பெரிதும் மெச்சி, அவருக் குப் பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினார்.
***
கிருஷ்ண தேவராயர் ஒரு நாள் கொலு மண்ட பத்தில் அமர்ந்து, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கையில், தமிழ் நாட்டிலிருந்து நடன மகளிர் மூவர், அவர் கொலுமண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; நட னக்கலையில் பெரும் புலமை பெற்றவர்கள்; கல்வியறிவிலும் சிறந்தவர்கள். அப்பெண்கள் தங்கள் திற மையை அரசர் முன் விளக்கிப் பெருமை பெறவேண் டும் என எண்ணி விசய நகரம் வந்தனர்.
கொலுமண்டபம் வந்து அரசரைக்கண்ட அப்’ பெண்கள் அரசரை வணங்கினர். பிறகு,
“மன்னர் மன்னரே, நாங்கள் மூவரும் தமிழகப் பெண்கள். இசை பிசகாது பாடவும், விதி பிறழாது நடனம் ஆடவும், குழல் ஊதவும், யாழ் இசைக்கவும் எங்களுக்குத் தெரியும். தங்கள் முன் னிலையில் எங்கள் கலைத்திறனைக் காட்டித் தங்கள் அன்பான ஆதரவைப் பெறவே வந்துள்ளோம்” என்று அந்தப் பெண்கள் மூவரும் கூறினார்கள்.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாளின் திருப்பாசுரங்களில் மனத்தைப் பறி கொடுத்து, அப்பாசுரங்களை “ஆமுக்த மால்யதா” என்னும் பெயருடன் தெலுங்கில் எழுதியவரான கிருஷ்ண தேவராயர், அத்தமிழ்ப் பெண்களின் கலைத்திறனைக் காண விரும்பி, “நாளை நம் அவையில் உங்கள் நடனக் கலையை நாம் காணுவோம்” என்று கூறினார்.
மறு நாள் தமிழகப் பெண்களின் ஆடலைக் காணச் சபை கூடியது. நடனக் கலையில் தேர்ச்சி உடையவர்கள் பலர் தமிழ்ப் பெண்களின் கலைத்திற னைக் காண வந்திருந்தனர். மன்னர் தம் தேவியா ருடன் வந்தமர்ந்தார்.
நடன மகளிர், முதலில் மன்னருக்கும் அவையி னருக்கும் வணக்கம் செலுத்தியபின், நடனம் ஆடத் தொடங்கினர். ஆடலுக்கேற்ற இசையும் இசைக் கேற்ற ஆடலும் அவையினர் மனத்தைக் கவர்ந்தன. அப்பெண்களின் ஆடல், நடன இலக்கணத்தினின் றும் இம்மியும் பிசகாமல் சிறப்புற்றிருந்தது. மன் னரும் அவையினரும் இந்நடனத்தைப் பெரிதும் சுவைத்தனர். மன்னர் அவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தி விருதுகள் அளித்து, அவர்கள் மனம் மகிழுமாறு பரிசுகள் அளித்தார்.
நடனப் பெண்கள் மூவரும் மன்னர் மன்னரை வணங்கித் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து அப்பரிசுகளை ஏற்றுக் கொண்டனர். பிறகு, அவர்களுள் ஒருத்தி, “நம் மன்னர் முள்ளும் முரடுமடி ” என்றாள். மற்றொருத்தி, “நம் மன்னர் கல்லும் கரடும் அடி” என்றாள். இன்னொருத்தி “நம் மன்னர் வேரும் விறகும் அடி” என்றாள்.
அவர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள்? அவர்கள் கூறியவற்றின் பொருள் என்ன? என்பவற்றை அறிய மன்னர் விரும்பினார்; உடனே தம் முதலமைச் சராகிய அப்பாஜியை நோக்கினார்.
மன்னரின் கருத்தறிந்த அமைச்சர் அப்பாஜி, எழுந்து மன்னரை வணங்கிவிட்டுப் பின்வருமாறும் அப்பெண்கள் கூறியவற்றை விளக்கினார்.
“மன்னர் மன்னா! உங்களை முள்ளும் முரடும் என்றாள் இப்பெண். பலாப்பழம் முள்ளையும் முரட்டுத் தோலையும் மேற்புறத்தில் பெற்றிருக்கிறது. அதைப் போல், நீங்கள் குற்றம் செய்பவர்களுக்கும் பகை வர்க்கும் முள்போன்றவராயும் முரட்டுத்தனம் உடையவராயும் விளங்குகின்றீர்கள். அதாவது கடுமையானவராகவும் வன்மை உடையவராகவும் காணப்படுகின்றீர்கள். பலாப்பழத்தின் தோலை உரித்து விட்டால், உள்ளே பொன்போன்று விளங்கித் தேன்போல் இனிக்கும் சுளைகள் காணப் படுகின்றன. அதுபோல் நீங்களும் அகத்தில் அன்பும் இன் சொல்லும் நிறைந்து விளங்கு கின்றீர்கள். எனவே தீயவர்களுக்குக் கடுமையான வராகவும், நல்லவர்களுக்கு அன்புடையவராகவும் நீங்கள் விளங்குவதால் அப்பெண் உங்களைப் பலாப் பழத்திற்கு ஒப்பிட்டாள்.
மற்றொருத்தி உங்களைக் கல்லும் கரடும் என்றாள். கல் என்பது மலையைக் குறிக்கும். மலை நெடுந் தொலைவிலிருந்து. பார்த்தாலும் நன்கு தெரி யும். அதனுடன் பல்வேறு அரிய பொருள்களை மலை தருகிறது; அளக்கவோ அசைக்கவோ முடியாதது. அதுபோல, நீங்களும் பேராற்றல் படைத்த பகை வராலும் அசைக்க முடியாதவர். வேண்டுவோர் வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து ஆதரிக்கும் வள்ளல். உங்கள் புகழ் நெடுந்தொலை பரவியிருப் பதால் எங்கிருப்பவர்களும் உங்களை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, மலை என்று அவள் உங்களைக் கூறியது முற்றிலும் பொருந்தும். கரடு என்பது காலடி எனப் பொருள்படும். கால் உடலைத் தாங்குவதுடன் நம்மை நடமாட வைக்கிறது. அதுபோல நீங்கள் உங்கள் நாட்டைத் தாங்கி நாட்டு மக்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் நடமாட வைக்கின்றீர்கள். அதனால் அவள் உங்களைக் கால்’ –என்னும் பொருளில் கரடு எனக் கூறியது மிகவும் பொருத்தமே யாகும்.
“இன்னொருத்தி உங்களை வேரும் விறகும் என்றாள். வேர் நிறைந்து விறகுபோல் இருப்பது அடிக்கரும்பு ஆகும். அதைப்போல் புறத்தோற்றத் தில் நீங்கள் கடினமாய் இருந்தாலும் அடிக்கரும்பு மிகுந்த இனிப்புடையதாயிருப்பது போல, நீங்கள் அகத்தில் கருணையும், இன்சொல்லும், நிறைந்த வராய்க் காணப்படுவதால், வேரும் விறகும் என்று அவள் கூறியதும் பொருத்தமாகவே இருக்கிறது. –
இவ்வாறு அமைச்சர், அந்தப் பெண்கள் மூவரும் கூறியவற்றை விளக்கியதைக் கேட்ட மன்னரும் அவையினரும் பெருமகிழ்ச்சியடைந் தனர்; அமைச்சரின் அறிவுத் திறமையையும் பாராட் டினர். அரசர் அப்பெண்களுக்கு மேலும் சில பரிசளித்துப் பாராட்டி உபசரித்து அனுப்பி வைத்தார்.
பயிற்சி
1. பம்பை ஆற்றங்கரை நிகழ்ச்சி
2. சிற்றூர் குளக்கரை நிகழ்ச்சி
3. நடனமாதர் மன்னரைப் போற்றிய முறை
4. கிருஷ்ணதேவராயரும், அப்பாஜியும்
(இவை ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றரைப் பக்கங் களுக்கு மிகாமல் ஒவ்வொரு கட்டுரை எழுதுக)
– சிறுவர் கதைச் சோலை (சிறுகதைத் தொகுப்பு), ஆறாம் வகுப்புத் துணைப்பாட நூல், முதற் பதிப்பு: அக்டோபர் 1965, திருமுருகன் பதிப்பகம், வேலூர்.