வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த கேசவனின் அப்பா சிவகுமார் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது அறையிலுள்ள ஹேங்கரில் மாட்டியதைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் கேசவன்.
அம்மா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். சட்டையை மாட்டிய சிவகுமார் துண்டை எடுத்துக் கொண்டு முகம் அலம்புவதற்காக குளியலறை நோக்கிச் சென்றார்.
மெதுவாக எழுந்த கேசவன் சுற்றுமுற்றும் பார்த்தான். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.
அப்பாவின் அறைக்குள் சென்று அவருடைய சட்டைப் பைக்குள் கைவிட்டான்.
பத்து, இருபது, ஐம்பது, நூறு என ரூபாய் நோட்டுகள் இருந்தன.
பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துத் தனது பாக்கெட்டில் திணித்துக் கொண்டு, மீதிப் பணத்தை அப்படியே அப்பாவின் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு ஏதுமறியாதவன் போல வெளியே வந்த அமர்ந்து கொண்டு பாடப்புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டான். படிப்பது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தான் கேசவன்.
மறுநாள் பள்ளி சென்றபோது, அப்பாவின் பாக்கெட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்த பத்து ரூபாய்க்கு ஆசைதீர தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிட்டான்.
அன்று பத்து ரூபாய் காணாமல் போனது பற்றி அப்பா யாரிடமும் கேட்கவில்லை. இருக்கும் அத்தனை பணத்தில் ஒரே ஒரு பத்து ரூபாய் காணாமல் போனது பற்றி அப்பாவுக்குக் கணக்கு தெரியவில்லை என எண்ணிக் கொண்டான் கேசவன்.
அடுத்த நாள், அப்பா சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டுப் போக, கேசவன் இப்போது இருபது ரூபாயை எடுத்துத் தனது சட்டைப் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டான். மறுநாள் பள்ளி சென்றபோது, இன்னும் நிறையத் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தான்.
அந்த இருபது ரூபாய் பற்றியும் அப்பா ஒன்றுமே பேசாததால் கேசவனுக்குத் தைரியம் அதிகமாகிப் போனது.
அடுத்த நாள் அப்பா கழற்றிப் போட்ட சட்டையிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துத் தனது பாக்கெட்டுக்குள் திணித்தபோது –
“”டேய், கேசவா… பத்து இருபதாகி இருபது ஐம்பதாகிவிட்டதா? இது நியாயமாடா? அப்பாவின் சட்டைப் பைக்குள்ளிருந்து தெரியாமல் பணத்தை எடுத்துத் தின்பண்டங்கள் வாங்க செலவு செய்வது திருட்டுத்தனம் இல்லையா? படிக்கிற மாணவன் இப்படிச் செய்யலாமா?” என்று யாரோ கேட்கும் குரல் கேட்டது.
குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தான் கேசவன். அங்கே அவனைத் தவிர யாரும் இல்லை… இப்போது பயத்தினால் அவனது முகம் குப்பென்று வியர்க்கத் தொடங்கியது. கைகால்கள் நடுங்கின…
மெதுவாக, ”யார் அது?” என்று கேட்டான்.
“”டேய் கேசவா… இன்னுமாடா நான் யார் என்று தெரியவில்லை? நன்றாக யோசி… நான்தான் உன்னுடைய மனச்சாட்சி!” என்றது அந்தக் குரல்.
தப்புதான்… யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் தவறு செய்துவிட்டேன். ஆனால், என்னுடன் எப்போதும் இருக்கும், எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கும், மெüனமாகப் பேசும் மனசாட்சி இருப்பதை மறந்துவிட்டேன். இது தவறுதான்… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன். இது சத்தியம்! என்று எண்ணியபடி ஐம்பது ரூபாயை மீண்டும் அப்பாவின் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, மானசீகமாக மனச்சாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் கேசவன்.
கேசவன் இப்பொழுதெல்லாம் தனக்குத் தின்பண்டங்கள் வேண்டும் என்றால் அப்பா அல்லது அம்மாவிடம் கேட்டுப் பணம் வாங்கிக் கொள்கிறான். திருடவேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு வருவதில்லை. காரணம் அவனுடைய மனச்சாட்சி!
– டே.கிருபாதேவி (மே 2012)
மனிதர்கள் எக்காலத்திலும் மனசாட்சிக்குப் பயந்து நின்றால் போலீஸ் கோர்ட் எதுவும் வேண்டாமே! கதை நல்ல அறிவு புகட்டுவது சிறப்புத்தான். நன்று. வாழ்த்துக்கள். லென்ஸ்