கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 11,306 
 
 

இருள் பகலை வெறிபிடித்துத் துரத்தியது. ஜன்னல் கம்பிகளினூடே ஊர்கள் மெல்ல ஓட, ஓட மனம் இறுகிப்பிடிக்க ஆரம்பித்தது. இன்னும் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் அம்மா இருக்கிறாள். அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்த நாளிலிருந்தே நான் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியவில்லை. எப்போதும் அவளது நினைவுகளில் நெஞ்சுக்குள் கண்ணீர் சிந்திய வண்ணமிருந்தேன்.

நடத்துனரின் விசில் குண்டு சுழல எங்கள் ஊரை ஒட்டி வண்டி நின்றது. மெல்ல இறங்கி தெருக்களை ஊற்றுப் பார்த்தவாரே நடந்தேன்.தெருக்கடைகளின் பழைய ரம்மியம் குறைந்து நலிந்திருந்தது. சீனிக்கிழவி பெட்டிக்கடையில் பாதி உயிராய் அமர்ந்திருந்தாள். எப்போதும் அவள் வைக்கும் வட்டப்பொட்டை தவிர மற்ற எதுவும் உயிர்ப்புடனில்லை. போஸ்ட் மரங்களின் தூர்கள் கூட கஞ்சிக்கு வழியற்றது போல் மெலிந்து கம்பிகள் தெரியக் காட்சி அளித்தது.போன வாரம் கூட அது அப்படியாகத்தான் இருத்திருக்கும். ஆனால் இந்த வாரத்தில் தான் அதன் தோற்றத்தைக் கவனிக்கும் படியாக மனம் பிசைந்தது.

நாட்டாமை வீட்டுக்கு எதிர் வீடு தான் எங்கள் வீடு . ஆனால் வீட்டின் அளவோ அவர்கள் வீட்டு மோட்டர் ரூமை விட மிகச்சிறியது. கல்யாணம் ஆன மூன்று வருடத்திலேயே கணவனை விபத்தில் பறிகொடுத்தவளுக்கு பிறந்த வீடு தான் பாதுகாப்பான இடமாக இருந்தது. ஆண்களை இழந்த பெண்கள் ஆண்களுக்குப் பயந்து வாழ வேண்டிய அச்சம் அவளை அந்த முடிவிற்குத் தள்ளியது.

அக்காளும், நானும் நாட்டாமை வீட்டு வாசலில் ஓடிப்பிடித்து ஆடிக்கொண்டிருக்க, அவள் அக்கம், பக்கத்து வீடுகளுக்குப் போய் பாத்திரம் தேய்க்கப் போவாள். அந்த வேலையை மட்டுமே தனது வாழ்நாள் முழுதும் செய்தால் எனக்கூடச் சொல்லலாம். அக்கா வயதுக்கு வந்ததும் மில்லில் போய்ச் சேர்ந்து அவளது கல்யாணத்திற்கான செலவை அவளே பார்த்துக்கொண்டாள். மாப்பிள்ளை கூட அவளது ஏற்பாடாகவே இருந்தது வேறு விசயம்.

அம்மாவுக்கு 35 வயதிலேயே சர்க்கரை நோய் வந்தது. அன்று முதல் இப்போது வரை சர்க்கரை நோய் தான் அவளது ஒரே துணை. நானும் வேறொரு ஊரில் வேலை செய்து கொண்டிருந்ததால் தனது பெருவாரியான காலத்தைத் தனிமையோடு தான் வாழ்ந்தாள். வீட்டில் ஒரு இரும்புப் பெட்டியிருக்கும் அது தான் அவளது பொக்கிசம் . தான் சிறு வயதிலிருந்து சேர்த்து வைத்த சில்லறைக் காசுகளை அதில் தான் சேலையில் கட்டி வைத்திருப்பாள். ஒரு நாளுக்கு நான்கு தடவையாவது பெட்டியைத் திறந்து காசு இருக்கிறதா எனத் தொட்டுப் பார்ப்பாள். வீட்டில் டீவி, ரேடியோ எந்த சமாச்சாரமுமில்லை. நாட்டாமை வீட்டில் வேலை செய்யும் போது அவள் கேட்கும் சிவாஜி பாடல்களை பாடி ஒவ்வொரு இரவையும் நிரப்புவாள்,நான் என்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம் ஆனால் பணம் தான் மனிதனுக்குப் பிரியமான ஒன்றாக இருக்க வேண்டுமென என்னை வெளி ஊருக்கு வேலைக்கு அனுப்பி விடுவாள்.

சர்க்கரை நோய் பல வருடமாக இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்து ,கழித்து சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்தன. நாள் ஆக ஆக அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை வந்தது. கிட்னி இரண்டும் பாதிப்படைந்து உடல் ஊத ஆரம்பித்து படுத்த படுக்கையாகக் கிடந்தாள்.

எனக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உண்டு.பெண்டாட்டிக்கும் அம்மாவுக்கு ஆகவே ஆகாது. எப்போது பார்த்தாலும் சண்டை தான் கடைசிக் காலத்தில் அம்மாவை கவனிக்கக் கூட அவள் முன் வரவில்லை. “உன் அம்மாவை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது”என்கிறாள்.

படுத்த படுக்கையாகக் கிடந்த அம்மாவின் உடல் கொஞ்சம், கொஞ்சமாகத் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் வாரத்திற்கு ஒருமுறை வந்து அம்மாவைப் பார்த்து விட்டுப் போவதுண்டு.ரொம்ப முடியாத காலகட்டங்களில் அங்கேயே தங்க வேண்டிய நிலையும் வந்தது. நான் இல்லாத நாட்களில் அக்கம்,பக்கத்தினர் அவளைப் பார்த்துக் கொண்டனர். மனிதர்களை நாம் எவ்வளவு கேவலமாக மதிப்பிட்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றியது. நல்ல மனிதர்களின் பிடியில் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது எனப் புரிந்தது.

உடல் நிறைய நாளாய் படுக்கையிலே கிடப்பதால் வீட்டுக்குள் நுழைந்தாலே நாற்றம் குடலை பிடுங்கும். அதனால் சொந்த பந்தங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அம்மாவை கவனித்துக்கொள்ள வருவதை நிறுத்திக் கொண்டனர். அக்காவும் கூட அந்த நாற்றத்தை வெறுக்கவே செய்தாள்.

அம்மாவைக் குளிப்பாட்டி பல மாதங்கள் ஆகிவிட்டது. அவள் மலம் இருப்பது அரிதான காரியம் அப்படி அவள் மலமிருந்தால் கூட அதனை நான் தான் சுத்தம் செய்வேன். எத்தனையோ முறை அம்மாவைக் கவனிக்க அக்காவையும், சொந்தக் காரர்களையும் கூப்பிட்டுப் பார்த்தும் யாரும் முன்வரவில்லை. சலிப்பில் எல்லா பணிவிடைகளையும் அம்மாவுக்கு நானே செய்தேன்.

முந்தா நாள் தான் பார்த்து விட்டுப்போனேன், அதற்குள் என்ன நினைத்தாலோ தெரியவில்லை தூக்கு மாத்திரைகளை வாங்கி போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். காலையில் எப்போதும் கதவைத் திறந்து சாப்பாடு தரும் அண்டை வீட்டுக் காரர்கள் அம்மாவின் நிலைமையைப் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள்.நானோ பாதி வேலையைப் போட்டு விட்டு அலறி அடித்து ஓடி வந்திருக்கிறேன். இவளுக்கு ஏன் இவ்வளவு அவசரமெனத் தெரியவில்லை. பெற்ற பெண் பிள்ளை தன்னை கவனிக்காத சோகமா, தனிமை கால வெறுமையா, யாருக்குத் தெரியும், நோயாளிகள் அதிகப்பட்ச ஆசை என்னவாக இருக்கப்போகிறது, முடியாத காலத்தில் அன்பான வார்த்தைகளை பேச அருகில் யாராவது இருக்க வேண்டும் அவ்வளவு தானே?

வீட்டுக்குள் நுழைய முடியவில்லை, நாற்றம் பயங்கரமாக அடித்தது, பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் வாசலில் மூக்கை போர்த்தி உட்கார்ந்திருந்தனர். அம்மா உயிரற்ற பிணத்தைப் போலக் கட்டிலில் கிடந்தாள், அவளது மூச்சு மட்டும் தனது இருப்பை காட்ட முயற்சி செய்து கொண்டிருந்தது. சொந்தக் காரர்கள் சிலர் வந்து பார்த்து விட்டு “நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது, பிழைப்பது கடினம் அதனால் ஒரு ஊசியைப் போட்டு கருணை கொலை செய்து விடு” எனச் சொன்னார்கள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி மனிதர்களால் இப்படி சாதாரணமாகப் பேசிவிட முடிகிறது . உயிர் அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா? மனிதனை, மனிதன் கொல்வது இயற்கைக்குப் புறம்பானது என்று இவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் என் அம்மாவின் மீது இரக்கப்படுகிறார்களா ? இல்லை இத்தனை கஷ்டங்களோடு அவளைக் கவனிக்கிறானே என்று என் மீது அனுதாபப்படுகிறார்களா?

2 நாட்களாகியும் அம்மாவால் கண் விழித்துப் பார்க்க முடியவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இமைகள் திறந்து கருவிழிகள் என்னைப் பார்த்தன. அப்போது அவள் எனை பார்த்துப் புன்னகைத்தற்காகவே எனது ஆயுளை அவளுக்குத் தந்திருப்பேன். சிறுநீர் வெளியேற முடியாமல் உடல் பருத்து வீங்கியிருந்தது. அவளால் கொஞ்சம் கூட அசைந்து படுக்க முடியவில்லை.

கண்களைச் சிமிட்டி, சிமிட்டி காலில் சீழ் பிடித்து அழுகிப்போயிருந்த காயத்தை சுட்டிக்காட்டினாள். சுகர் இருப்பதால் அந்த புண் அழுகி பூஞ்சை பிடித்துப் பார்க்கவே கோரமாக இருந்தது. நான் அதன் சீல்களை உடைத்து மருந்திட்டுக் கட்டுப்போட்டு விட்டேன். தலைக்குக் குளிக்காமல் தலை முடி ஈறும் பேணுமாய் பார்க்கவே முடியவில்லை. முடிதிருத்துபவரை கூப்பிட்டு அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டேன்.

உடலின் நாற்றம் அளவுக்கு அதிகமாக இருந்ததை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. எப்படியாவது அவளைக் குளிப்பாட்டி விட வேண்டும். அக்கம்பக்கத்தில் எந்த பெண்பிள்ளைகளைக் கூப்பிட்டாலும் வரமறுக்கிறார்கள். ஏன் அக்கா கூட முகம் சுழித்துக்கொண்டு மறுத்துவிட்டாள். வேறு வழியில்லாமல் நான் தான் அம்மாவை உட்காரவைத்து துணிகளை அகற்றி குளிப்பாட்டினேன். எத்தனை முறை எனை அவள் சிறு வயதில் அம்மணமாக நிற்க வைத்து உடல் தேய்த்து குளிக்க வைத்திருப்பாள். எனக்கு அம்மாவின் உடல் ஒரு குழந்தையின் உடலைப் போலத் தான் தோன்றியது, முதுகு தேய்க்கும் போது அழுக்கு குவியல் குவியலாக வந்தது. நான் முதன்முதலில் ஒரு தாயானேன், அம்மா நான் பெற்ற குழந்தையைப் போல் நான் குளிப்பாட்டி விடுவதை ரசித்துக்கொண்டிருந்தாள். குளித்து முடித்ததும் வெயிலைப் பார்க்க வேண்டுமென அவளுக்குத் தோன்றியதோ என்னவோ, கையை வெளியே நீட்டிய வண்ணமிருந்தாள்.

குளிக்க வைத்து அக்காவின் நைட்டி ஒன்றை மாற்றிவிட்டு என் குழந்தையை அள்ளி தூக்கி வெயில் படுமாறு சுவரோடு சுவர் சாய்த்து உட்கார வைத்தேன், முகத்தில் அவள் எப்போதும் வைக்கும் பெரிய வட்ட ஸ்டிக்கர் பொட்டை வைத்து பவுடர் அடித்து விட்டேன், சூரிய கதிர்கள் அவள் கண்களில் பட்டு பயங்கரமாக மிளிர்ந்தது. என் கையை இறுகப்பற்றிக் கொண்டு தோளில் சாய்ந்தாள். போகப் போக கைகளின் இறுக்கம் அதிகரித்து அதிகரித்து கொஞ்சமாகத் தளர்ந்தது. நான் சூரியனைப் பார்த்தேன், அது கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. சில நொடிக்கு முன்பு வரை என் மார்பில் உரசிக்கொண்டிருந்த மூச்சு காற்று இப்போது நின்றிருந்தது. நான் சூரியன் நிறம் மாறுவதைக் கூர்மையாகக் கவனித்தேன், அது இப்போது முழுமையாக அம்மாவின் சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டாக உருவெடுத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *