தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 11,624 
 
 

அந்தச் சிறிய நகரத்தை விட்டு, சிறிது தூரம் தள்ளி, ஊருக்கு வெளியே அந்தப் பெரிய கட்டடம் தலை நிமிர்ந்து நின்றது. வாயில் கேட்டிற்கு மேலே, “சக்தி ஸ்பின்னிங் மில்ஸ்’ என்ற போர்டு பளபளப்போடு வீற்றிருந்தது. உள்ளே, அந்தப் பெரிய கேட்டின் இருபுறங்களிலும், இரண்டு செக்யூரிட்டிகள் டிரிம்மாக காக்கி யூனிபார்ம் அணிந்து, சிறிது படப்படப்போடு வெளியே எட்டிப் பார்த்தபடி, யாருடைய வருகைக்காகவோ காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

காலை எட்டு மணி ஷிப்டுக்கு வர வேண்டிய தொழிலாளர்களை ஏற்றி வந்த இரண்டு மகேந்திரா வேன்களும், ஓரமாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்து கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக ஐம்பது பேர் கையில் சாப்பாட்டுக் கூடைகளுடன் இறங்கி, மடமடவென்று கட்டடத்தின் உள்ளே சென்றனர்.

விரியாத சிறகுகள்

அவசர, அவசரமாக அங்கு வந்த, நைட் ஷிப்ட் சூப்பர்வைசர் சண்முகம், “”ஏய் சின்னப்பேச்சி… நீ எல்லாருக்கும் முன்னால் சீக்கிரம் உள்ளே போயிடு… மேடம் வரப் போறாங்க. “நீ இப்ப, அவங்க கண்ணிலே பட வேண்டாம்…’ன்னு மேனேஜர் உங்கிட்டே சொல்லச் சொன்னாரு. சீக்கிரம் உள்ளே போ,” என, அடித் தொண்டையில் அதட்டினான்.

“சின்னப்பேச்சி’ என அழைக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு, பத்து அல்லது பதினொரு வயது இருக்கும். கறுத்து, மெலிந்த உடலில் சாயம் போன பூப்போட்ட பாவாடையும், நாள்பட்டு வெளுத்துப்போன சட்டையும் அணிந்திருந்தாள். எண்ணெய் காணாத செம்பட்டை முடி, சிறு பின்னலாகி, ஒரு சிறிய குருவியின் வால் போன்று, பின்னால் தொங்கியது.
அம்மாவின் கிழிந்த சேலையின் ஒரு பகுதியை, தாவணி போன்று மேலே அணிந்து, அது தோளை விட்டு நழுவி விடாமல் இருக்க, கைகளால் இழுத்துச் செருக முயன்று தோற்று, கைகளில் சுருட்டி எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.

அந்த மில்லின் உள்ளே அமைந்த பெரிய ஹாலில், பஞ்சை நூலாக மாற்றிக் கொடுக்கும் பத்து இயந்திரங்களும், அதற்கு உதவியாக இருக்கும் மற்ற சிறு மிஷின்களும் வரிசையாக நின்று பெரும் அதிர்வோடு ஓடிக் கொண்டிருந்தன. தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அந்தந்த இடங்களில் நின்று, அன்றைய பணியில் ஈடுபட்டனர்.

உள்ளே நுழைந்து, சின்னப்பேச்சியை நோக்கி வந்த பகல் ஷிப்ட் சூப்பர்வைசர் சுப்பிரமணியன், “”சின்னப்பேச்சி… அங்க பாரு… குடி தண்ணீர் டிரம்முக்கு கீழே தண்ணீர் சிந்தி வழியுது. அதை சீக்கிரம் தொடச்சு எடு. அந்த மூலையில், நைட் ஷிப்டுகாரனுங்க வேண்டாத வேஸ்ட்டைப் போட்டு, அடைச்சு வச்சிருக்கானுங்க. அதை அள்ளிக்கிட்டு போய் குடோன்ல போடு. சீக்கிரம் ஓடு… அம்மா இப்ப ரவுண்ட்ஸ் வருவாங்க.”

“”இதோ போறேன் அண்ணே,” சின்னப்பேச்சி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ய வேகமாக ஓடினாள்.
பின்னால், நின்றிருந்த பேக்கிங் செக்ஷன் மணி,

“”சின்னப்பேச்சி… இதோ, இங்கே கெடக்குற இந்த வேண்டாத பேக்கிங் பைகளையும் குடோன்ல போய் போட்டுரு, சீக்கிரம் போ… அம்மா இப்ப வந்துருவாங்க…” என, படப்படத்தான்.

“”சரி அண்ணாச்சி!”

சின்னப்பேச்சி சாக்கு நிறைய வேண்டாத பொருட்களை அள்ளிக் கொண்டு, குடோனை நோக்கி ஓடினாள்.

“அம்மா…’ என்றும், “மேடம்…’ என்றும், மிகவும் மரியாதையோடு அழைக்கப்பட்ட முதலாளி அம்மா, ஒருமாத வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, காரிலிருந்து இறங்கி செக்யூரிட்டிகள் அடித்த விறைப்பான சல்யூட்டை, சற்றே தலை அசைத்து ஏற்றுக் கொண்டு, வேகமாகத் தன் அலுவலக அறையை நோக்கி நடந்தாள்.

நடையின் மிடுக்கும், பல ஆண்டு நிர்வாகப் பொறுப்பால், முகத்தில் ஆழ்ந்து படிந்து விட்ட கண்டிப்பும், சிரிப்பு காணாது சிந்தனை மட்டும் பூசிக் கொண்ட முகமும், தொழிலாளர்கள் மனதில் மரியாதையையும், சற்றே அச்சத்தையும் ஏற்படுத்தியது.

“எம்.டி., ரூம்’ என சொல்லப்படும் அந்த விசாலமான அறையில், தன் இருக்கையில் அமர்ந்த முதலாளி அம்மா, “”மிஸ்டர் ராகவன்… இந்த மாதம் புதுசா எத்தனை பேரை வேலைக்கு எடுத்திருக்கீங்க?”

“”மேடம்… மொத்தம் ஏழு பேர். மிக்சிங்கில் ரெண்டு பேர், சைடர்ல ஐந்து பேர் எடுத்திருக்கிறோம். அவங்களை இப்ப வரச் சொல்லட்டுமா மேடம்… நீங்க ஒரு தடவை பார்த்துடறீங்களா?”

“”இப்ப வேண்டாம். லஞ்ச்க்கு அப்புறம் பார்க்கிறேன்…” எனக் கூறிய முதலாளி அம்மா, தன் இருக்கையை விட்டு ஏழ, மேனேஜர் தயங்கி, தயங்கி, “”அது வந்து மேடம்… “சின்னப் பேச்சி’ன்னு ஒரு பொண்ணு…” என, ஏதோ சொல்ல வந்தார்.

“”மற்றதை, அப்புறம் பேசலாம். இப்ப ரவுண்ட்ஸ் போகலாம்… வாங்க…” எனச் சொல்லி, அறையை விட்டு வெளியேறினாள்.
குடோனுக்குப் போய் வேலையை முடித்து விட்டு, அவசரமாக ஓடி வரும் சின்னப் பேச்சியை, பிட்டர் முருகன் தடுத்து நிறுத்தி, “”ஏய் சின்னப் பேச்சி… இங்கே எதுக்கு வந்துக்கிட்டிருக்கே? அம்மா வர்ற நேரமாச்சு. நீ இப்ப இங்க நின்னுக்கிட்டிருக்காதே… கடைசி மிஷின் லெப்ட் சைடிலே மறைவாய் போய் நில்லு… பிறகு பார்ப்போம்”

“”சரி அண்ணாச்சி!” என்றவாறு சின்னப்பேச்சி கடைசி மெஷினின் இடது புறத்துக்கு ஓடினாள்.

அங்கு மறைந்து, எட்டிப் பார்க்கும் போது முதலாளி அம்மா நுழைவதும், மேனேஜர் கையைக் கட்டி அவள் பின்னால் வருவதும் தெரிந்தது.

முதலாளி அம்மா ஒவ்வொரு மிஷினாகப் பார்த்துக் கொண்டு வருவதையும், பிட்டர் முருகனிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்து, “எங்கே தான் மறைந்து நிற்கும் பத்தாவது மெஷினுக்கு முதலாளி அம்மா வந்து விடுவாரோ…’ என்ற பயத்தில், சின்னப்பேச்சிக்கு வியர்த்தது.

முருகனிடம் பேசி விட்டு, முதலாளி அம்மா ஹாலை விட்டு வெளியேறுவதைப் பார்த்தவுடன், சின்னப்பேச்சி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“”சின்னப்பேச்சி… இங்கே வா, இந்த சைடு நிறைய பிரேக்ஸ் ஆகுது, கொஞ்சம் சைடை ஏத்திக் கொடுத்துட்டுப் போ…” என, ஏழாவது மெஷின் ரைட் சைடு திலகா அவளைக் கூப்பிட்டாள்.

“”சரி அக்கா…” சின்னப்பேச்சி, அந்த சைடில் அறுந்து தொங்கும் நூலின் இழைகளை, மடமடவென்று இணைத்துக் கட்டினாள். சின்னப்பேச்சி வேலை செய்யும் வேகத்தைக் கண்டு, வியந்து போனாள் திலகா.

“”சின்னப்பேச்சி… இவ்வளவு நல்லா இழை கட்டறியே… “அம்மா எதுக்கு உன்னை வேலைக்கு வேண்டாம்…’ன்னு சொல்லப் போறாங்க?”

“”தெரியல அக்கா… மேனேஜர் சார் தான், “அம்மா உன்னை வேலைக்கு எடுத்துக்கறது சந்தேகம் தான்…’ன்னு சொன்னாரு!”
டிராயிங் மெஷின்னில் வேலை செய்து கொண்டிருக்கும் அனிதா ஓடி வந்து, “”என்னாச்சு, சின்னப்பேச்சி… அம்மா உன்னைப் பார்த்து பேசிட்டாங்களா?” எனக் கேட்டாள்.

“”இல்ல அக்கா… புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறவங்க எல்லாரையும் மதியத்துக்கு மேலதான் பார்க்கப் போறாங்களாம்.”

சின்னப்பேச்சி பேசிக் கொண்டே தாவணி நழுவி விடாமல், இழுத்துச் செருகிக் கொண்டாள். இதைப் பார்த்த அனிதாவுக்கு சிரிப்பு வந்தது.

“”ஆமா, இது என்ன புது வேஷம்; தாவணி எல்லாம் புதுசா போட்டிருக்க?”

“”அது வந்துக்கா, “தாவணியைச் சுத்திகிட்டா பெரிய பொண்ணு மாதிரி தெரியும். அம்மா முன்னால் போகும் போது தாவணியோட போய் நில்லு…’ன்னு ஈஸ்வரி அக்காதான் சொன்னாங்க… அதான்.”

“”அப்படியா… சரி, சரி சாமிய நல்லா வேண்டிக்கோ… உனக்கு இந்த வேலை நிலைக்கணும்ன்னு நானும் சாமிய வேண்டிக்கிறேன்…”

பகல் இரண்டு மணிக்கு தன் வேலைகளை முடித்து விட்டு, மில்லின் பின்புறம் அடர்ந்த மரங்களுக்கு இடையில் அமைந்த தன் சிறிய பங்களாவை நோக்கி நடந்தாள் முதலாளி அம்மா. வேலைக்காரி வள்ளியம்மாள் தன் அறையில் இருந்த குளியலறைக்கு வெளியில், கையில் துடைப்பத்துடன் நிற்பது தூரத்திலிருந்தே தெரிந்தது.

தான் வெளிநாடு செல்வதற்கு முன், தன் குளியல் அறையின் வெளிப்புறத்தில் உயரமான வென்டிலேட்டரில் ஆணும், பெண்ணுமாக இரண்டு மைனாக்கள் கூடு கட்டி, இரண்டு முட்டைகள் இட்டு, அடைகாத்து வந்தது நினைவு வந்தது.

“”என்ன வள்ளியம்மா… மைனாக்கள் எப்படி இருக்கு?” என, வேலைக்காரியிடம் கேட்டாள்.

“”அம்மா… ரெண்டு முட்டையிலிருந்தும், ரெண்டு குஞ்சு வந்திருக்கு.”

“”அப்படியா?” முதலாளி அம்மாவின் குரலில் மகிழ்ச்சி.

“”ஆமாம்மா… ரெண்டும், “கீச் கீச்’னு கத்திக்கிட்டே கெடக்குங்கம்மா. தாயும், தகப்பனும் அதுகளுக்கு ஊர் உலகத்தில் இருக்கும் அத்தனை புழு பூச்சிகளையும் கொண்டாந்து வாயிலே ஊட்டி விடுதம்மா… இந்த இடம் பூரா நாஸ்தி ஆகுதும்மா. நானும் சுத்தம் பண்ணிப் பண்ணி பார்த்துட்டம்மா…”

“”அப்படியா?” மகிழ்ச்சியோடு அந்த மைனாக் கூட்டை அண்ணாந்து பார்த்து விட்டு, தன் அறைக்குள் நுழைந்தாள் முதலாளி அம்மா. அறைக்கு வெளியே சாலையில் ஏதோ சத்தம் கேட்க, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

“குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக…
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழாக்காதே!’

என்ற போர்டுகளை ஏந்தியவாறு, கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் மனித சங்கிலி அமைத்து, கைக் கோர்த்து நின்று, கோஷமிடுவது கேட்டது.

“இன்று, ஜூன் 12; குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அல்லவா?’ என்று நினைத்துக் கொண்டாள்.

பகல் மூன்று மணி. புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஏழு பேரும், ஒருவர் பின் ஒருவராக எம்.டி., அறைக்குள் சென்று, முதலாளி அம்மாவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.

எல்லாருக்கும் கடைசியாக, தாவணி நழுவாமல் இழுத்துப் பிடித்த படி, கண்களில் ஒருவித கலக்கத்தோடு உள்ளே நுழைந்தாள் சின்னப்பேச்சி. மறு நிமிடம், முதலாளி அம்மாவின் குரல் கோபத்தோடு ஓங்கி ஒலித்தது.

“”மிஸ்டர் ராகவன்… என்ன இது? இந்தப் பெண்ணை எதுக்கு வேலைக்கு எடுத்தீர்கள்? நம்முடைய மில்லில், “சைல்டு லேபர்’ இருக்கக் கூடாதுன்னு உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்?”

“”அது வந்து மேடம்…” மேனேஜர் திக்கித் திணறி ஏதோ சொல்ல வர, முதலாளி முன்னைக் காட்டிலும் அதிக கோபத்தோடு சின்னப் பேச்சியைப் பார்த்து, “”இந்தா பெண்ணே… உனக்கு இங்கே வேலை இல்லை. இதுவரை வேலை செய்த நாட்களுக்குச் சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுக்குப் போ!” என்று கத்தினாள்.

வியர்த்து, வெலவெலத்து, தாவணியைக் கையில் பிடித்தப்படி வேகமாக அறையைவிட்டு வெளியே ஓடினாள் சின்னப்பேச்சி. சிறிது நேரத்தில் முதலாளி அம்மா கோபம் குறைந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.

மேனேஜர், “”மேடம்….” என ஏதோ சொல்ல வர, அவள் மீண்டும் கோபத்தோடு அவர் பக்கம் திரும்பினாள்.

“”நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்… அதன் பின் என்ன செய்யலாம் என சொல்லுங்கள். இந்தப் பெண்ணின் தகப்பன் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்; நல்ல உழைப்பாளி. சென்ற வருடம் திடீரென்று இறந்து விட்டார். இவருடைய தாயும் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்…

“”ஒரு நாள் பஸ் ஸ்டாண்டில் இந்தச் சிறுமி கூனிக் குறுகிப் போய் நிற்பதைப் பார்த்து, அவளிடம் என்னவென்று விசாரித்தேன். “என்னை யாருமே, வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டேங்கறாங்க. அதனால்… நான் பிச்சை எடுக்கலாம் என இங்கு வந்திருக்கிறேன். ஆனால், எப்படி, என்ன சொல்லிப் பிச்சை கேட்பது எனத் தெரியாமல் நிற்கிறேன்…’ என விசும்பினாள்.

“”என்னால் இதைப் தாங்கிக் கொள்ள முடியவில்லை மேடம். “சரி… என்னுடன் வா… நான் அம்மாவிடம் பேசி, உனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன்…’ என்று, அவளை இங்கு அழைத்து வந்து விட்டேன் மேடம்…” என தலைகுனிந்து நின்றார்.

“”எங்காவது, அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து விடுவது தானே.”

“” நான் அதையும் சொன்னேன் மேடம்; ஆனால், அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “வேண்டாம் சார்… எங்கம்மாவை எப்படியாவது நான் காப்பாற்ற வேண்டும். அவங்களுக்கு, என்னை விட்டா, வேற யார் இருக்காங்க? எனக்கு வேலை தான் வேணும். வேறு எதுவும் வேண்டாம்…’ன்னு சொல்லிட்டா மேடம்!”

“”அதுக்கு நாம் என்ன செய்வது ராகவன். “சைல்டு லேபர்’ என்பது சமுதாயத்தீமை. அதை ஒழிப்பது நம்மைப் போன்றவர்களின் கடமை. தவிர, நம்ம மில்லுக்கு, “பேக்டரி ஆக்ட்’காரங்க வரும்போது, என்ன பதில் சொல்வது? அவர்கள் கேஸ் போட்டால், நான் அல்லவா கோர்ட் படியேற வேண்டும். அபராதம் இருபதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். இதெல்லாம் தேவையா நமக்கு?”

மேனேஜர் மவுனமாக அறையை விட்டு வெளியேறினார்.
மாலை நான்கு மணி அளவில், மனம் சிறிது லேசாகி முதலாளி அம்மா தன் பங்களாவை நோக்கி நடந்து வருகையில், தோட்டாக்கார முனியன் ஏணியை எடுத்து சுவற்றில் வைத்து, மைனாக் கூட்டை நோக்கிக் கால் எடுத்து வைத்தான். இதனால், தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்து மைனாக்குஞ்சுகள் இரண்டும், “கீச் கீச்’ என, அலறுவதையும் தூரத்திலிருந்தே பார்த்த முதலாளி அம்மா, “”ஏய் முனியா… என்ன செய்யறே? உடனே கீழே இறங்கு…” என, கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.

முதலாளி அம்மாவின் கோபத்தைக் கண்டு பயந்து விட்ட முனியன், “”அம்மா… இந்த மைனாக் கூட்டை எடுத்து வெளியே எறிஞ்சுடலாம். குப்பையும், பூச்சி புழுக்களும் உங்க அறைக்குள்ளே விழுந்துகிட்டே இருக்கும்மா… அதான்.”

“”அந்தக் கூட்டுக்குள்ளே இரண்டு மைனாக் குஞ்சுகள் இருக்கில்லே. இப்போது கூட்டைத் தூக்கி எறிந்தால், அந்தக் குஞ்சுகள் இரண்டும் காக்கை, கழுகுகளுக்கு விருந்தாகிவிடும் முனியா. அது ரெண்டும் சிறகு விரிச்சுப் பறந்து போகட்டும். அதுக்குப் பிறகு கூட்டைக் தூக்கி வீசி விடலாம். நீ இப்ப கீழே இறங்கு,” என்றாள்.

“”அம்மா… அதுங்க சிறகு விரிச்சுப் பறந்து போறதுக்கு, இன்னும் ஒரு மாசத்துக்கு மேலே ஆகும்மா. பாவம்… விரியாத சிறகுகளை வைத்துக் கொண்டு அதுங்க என்ன செய்யும்?”
சட்டென்று ஏதோ நெருடியது முதலாளி அம்மாவுக்கு, மூளையில் மின்னல் வேகத்தில் பொறி தட்டியது.

“விரியாத சிறகுகள்… ஓ காட்… அந்தச் சிறிய பெண், அதன்… அதன்… சிறகுகள் விரிய சில நாட்களில் அல்லது மாதங்களில் அது மலர்ந்து விடும். பாதுகாப்பாற்ற நிலையில்… அப்போது… அது கழுகு போன்ற மனிதர்களுக்கு இரையாக வேண்டுமா?’ முதலாளி அம்மாவுக்கு முகம் வியர்த்தது.

“”முனியா… சீக்கிரம் ஓடிப்போய் சின்னப்பேச்சியை இங்கே அழைத்து வா…” என, உத்தரவிட்டாள்.

தங்களுக்கு வந்த ஆபத்து விலகி விட்டதை உணர்ந்து, மைனாக்குஞ்சுகள் இரண்டும் கூட்டுக்குள் அமைதியாக உறங்கின.

“”அண்ணே… என்னை விடுங்க… நான் வரலை. அவங்க என்னைத் திட்டுவாங்க,” என்றபடியே வர மறுக்கும் சின்னப்பேச்சியை, பலவந்தாமாக முதலாளி அம்மாவின் முன்னால், இழுத்து வந்து நிறுத்தினான் முனியன்.
முதலாளி அம்மா சின்னப்பேச்சியின் தோளை மென்மையாகத் தட்டி, “”சின்னப்பேச்சி… உனக்கு மில்லில் வேலை இல்லை; ஆனால், இங்கே வீட்டில் வேலை செய்யலாம்,” என்றாள்.

“”சொல்லுங்கம்மா… என்ன வேலைங்கம்மா? என்ன வேலையானாலும், நான் நல்ல வேகமாக செஞ்சுறுவேன் அம்மா!” மகிழ்ச்சியில் படபடத்தாள் சின்னப்பேச்சி.

“”நாளை முதல் நீ ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போக வேண்டும்… நன்றாக படிக்க வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் இங்கு வந்து சாப்பிட வேண்டும். சனிக்கிழமை எப்போதும் போல் வாரச் சம்பளத்தை இந்த வீட்டில் வாங்கிக் கொண்டு போய், உன் அம்மாவிடம் கொடுக்க வேண்டும்… சரியா?”

“”அம்மா… என்ன வேலை?”

“”உன் வேலை என்ன தெரியுமா? அதோ அந்தக் கூட்டுக்குள் இருக்கும், மைனாக்குஞ்சுகள் இரண்டும் எப்போது சிறகு விரித்துப் பறந்து போகின்றன என்பதை தினமும் பார்த்து, என்னிடம் சொல்ல வேண்டும். சரியா?”

முதலாளி அம்மாவின் முகத்தில் வெகு அபூர்வமாகத் தோன்றும் அந்தக் குறும்புப் புன்னகை ஒரு கணம் தோன்றி மறைந்தது.

“”ஓ… இப்படிக் கூட ஒரு வேலை இருக்கிறதா!” என அதிசயித்து, வாயைப் பிளந்தபடி முதலாளி அம்மாவையே பார்த்து நின்றாள் சின்னப்பேச்சி.

– கவுசல்யா நாகராஜன் (ஜனவரி 09,2011)

இவர், ஆங்கிலம், இந்தி, வரலாறு, நிர்வாகவியல் ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ஆங்கில பேராசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில், இவர் எழுதிய பல கதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. பின், தற்போது, வாரமலர் இதழில், டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிக்காக இவர் எழுதிய சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிடுகிறார்.

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 10

Print Friendly, PDF & Email

1 thought on “விரியாத சிறகுகள்

  1. விரியாத சிறகுகள் சிறுகதை அனைவருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதியுள்ளார் . மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைக்க கூடாது என்பதை சமூகப் பொறுப்புடன் சட்டத்தினை மதிக்க வேண்டும் என்பதையும் கதை மூலம் விளக்கியுள்ளார் . சின்ன பேச சியை தனது வீட்டில் வேலை செய்யுமாறு முதலை அம்மாள் கூறுவது மனிதநேயத்தையும் கதையில் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

    பூ. சுப்ரமணியன், பள்ளிகரணை , சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *