கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 13,858 
 
 

வானிலிருந்து சின்னச்சின்ன ஊசிகள் பூமியில் விழுவதுபோல் இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. தூறலில் நனைந்தபடி நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதுமே, தொலைக்காட்சிப்பெட்டி திடீரென கத்தத் தொடங்கியது. தரமற்ற திருட்டுவீடியோ படத்தின் பிரதியில் அண்மைக்கால அதிரடிகதாநாயகன், தொடக்கத்திலேயே குத்தாட்டம் போடத்தொடங்கினான்.அந்த ஒழுங்கற்ற ஓசையை என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது? பயணங்களில் இயற்கையை ரசிக்கும் காலங்கள் தொலைந்துவிட்டது. ஒழுங்கற்ற வீடியோ ஓசையிலிருந்து கவனம் திருப்ப ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓடவிட்டேன்…

எத்தனைபயணங்கள்.எவ்வளவு அனுபவங்கள்…ஒருவகையில் வாழ்வே பயணங்களின் தொகுப்புதானே! பொதுவாக பேருந்துப் பயணமெனில் நான் மூன்று முக்கியமானவர்களை பயணத்தொடக்கத்திலேயே கூர்ந்து கவனிப்பதுண்டு. பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், பக்கத்து இருக்கையின் சகபயணி. இந்த `மும்மூர்த்தி’களின் ஒத்துழைப்பு இருந்தால்தானே ஒவ்வொருவரும் நிம்மதியாக ஊர் போய்ச் சேர முடியும்!

மாயவரத்திலிருந்து (மயிலாடுதுறை என்ற புதிய பெயரில் மனம் ஒட்ட மறுக்கிறது!) சென்னை செல்லும், இந்தப் பேருந்து பயணத்தின் மூன்று முக்கிய அம்சங்களில் ஒன்று சரியாக அமைந்துவிட்டது. சக இருக்கைப்பயணி. இல்லை பயணிகள். ஆம்! என் மனைவியும் மகளுமே எனது பக்கத்து இருக்கைக்காரர்கள். உரத்த குறட்டைச் சத்தத்துடன், தூங்கியபடி சாய்ந்து விழும் ஒரு மாமிச மலையோ, தண்ணி அடித்துவிட்டு உளறும் ஒரு பெருங்குடிமகனோ பக்கத்தில் வாய்க்காதது இந்தப் பயணத்தின் முதல் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்!

ஓட்டுநர் நிதானமானவரா, அனுபவம் மிக்கவரா, அடாவடிப் பேர்வழியா என்பது பேருந்து வேகம் பிடிக்கப் பிடிக்கத்தான் தெரியும். பயணச்சீட்டு கொடுத்து, இரண்டு மூன்று ஊர்களில் பேருந்து நின்று, கிளம்பும்போது நடத்துநரின் குணாம்சமும் ஓரளவு புரிந்துவிடும். இந்த கோணத்தில்தான் நான் எல்லா பயணங்களையும் எதிர்கொள்வேன். ஓட்டுநர் லாபியிலிருந்து, நடத்துநர் வருகிறாரா என கவனித்தபோதுதான், ஜெயபேரிகைபோல் எழுந்தது அவருடைய நீண்ட விசில் சத்தம். பேருந்து சட்டென நின்றது. வெளியே பார்த்தேன். பச்சைப்பசேல் வயல்வெளிகள் நிறைந்த மாயவரத்தின் எல்லைப்பகுதி.

“இறங்குயா…சொல்றேன்ல, இறங்கு!’’- நடத்துநரின் காட்டமான குரல். சிறிது நேர
மௌனத்திற்குப் பின் பேருந்தின் கதவு மூடப்படும் ஓசை. நான் அவசரமாகப் பக்கவாட்டு கண்ணாடி ஜன்னல் வழியே தலையை நீட்டிப் பார்த்தேன். எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர், மெல்ல இறங்கி சாரலில் நனைந்தபடியே செய்வதறியாது சாலையோரத்தில் விக்கித்து நின்றார். பேருந்து புறப்பட்டு விட்டது. “சில்லறை ப்ரச்னை போலிருக்கு… பாவம் பெரியவரு!’’ என்றாள் என் மனைவி.

கதவு சாத்தப்பட்ட ஓட்டுநர் முன்அறைக்குள், முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே என்ன ப்ரச்னை ஏற்பட்டிருக்கும் என என்னால் அனுமானிக்க இயலவில்லை. எனினும் நடத்துநரின் நடத்தையில் தெரிந்த அதிகாரத்திமிர், அவர் மேல் சட்டென ஒரு மரியாதைக் குறைவை ஏற்படுத்தியது. வெளியே மழை பொழிகிறது. பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஒரு முதியவரின் மேல் ஒரு சகமனிதன் என்கிற சாதாரண பரிவுகூட ஒரு நடுத்தரவயது மனிதனுக்கு இல்லையே.

கனிவோ ஈரமோ இல்லாத இவருடைய வழிகாட்டுதலில்தான் நாம் ஏழெட்டு மணி நேரங்கள் பயணம் செய்தாக வேண்டும். கொஞ்சம் எனக்குள் ஆயாசம். நடத்துநரின் கடுமையான குரலுக்கு, நடுங்கியபடியே, பேருந்திலிருந்து இறங்கிய முதியவரின் முகம் என்னவோ செய்தது! முதுமையும் தனிமையும் சின்ன அதிர்ச்சியைக்கூட தாங்காதே! அவர் வேறு பேருந்தில் ஏறி இருப்பாரா? வீடு போய்ச் சேர்ந்திருப்பாரா?- பல கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டே இருந்தன…

கல்லூரிப் பருவத்திலிருந்த மகளிடம், என் வாழ்வின் பயணங்களில் ஏற்பட்ட
அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே வந்தேன். காலமாற்றமும், மனிதர்களின் மன மாற்றங்களும் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. நிறைய சந்தேகங்களைத் தெளிபடுத்திக் கொண்டாள். இடைஇடையே என் மனைவியும், திருமணத்திற்கு முந்தைய அவளுடைய பயண அனுபவங்களை மகளிடம் விவரித்தாள்.

பேருந்து கொள்ளிடம் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது…

எப்போதும் நீரின்றி காய்ந்து கிடக்கும் ஆறு, இடைவிடாத மழையால் நிரம்பித் தளும்பியது. ஊசித்தூறல்கள் இப்போது சற்றே வலுத்து நீர்க்கணைகளாக ஆற்றில் பாயிந்து அலைவட்டம் எழுப்பிய காட்சி அழகாய் இருந்தது. பேருந்தின் பின்புறமிருந்த இளைஞர் ஒருவர், ஒரு ஐந்து வயது சிறுமியின் கையைப்பிடித்து அழைத்தபடி ஓட்டுநர் அறையை நோக்கி நடந்தார். கதவைத் திறந்து, நடத்துநரிடம் மெல்லிய குரலில் ஏதோ சொன்ன அவர் என்ன பேசினார் என்பது யாருக்கும் கேட்கவில்லை.

ஆனால் அவரிடம், நடத்துநர் பெருங்குரலில் சொன்ன பதில், பேருந்தில் இருந்த அனைவருக்கும் கேட்கும்படி இருந்தது வீடியோ இரைச்சலையும் மீறி. “உங்க இஷ்டத்துக்கெல்லாம் பஸ் நிக்காது. இவ்ளோ நேரம் மாயவரத்துல நிக்கும்போதே குழந்தையை யூரின் போக வச்சிருக்கலாம்ல. திண்டிவனத்துகிட்ட ஒரு இடத்துலதான் பஸ் நிக்கும். நான்ஸ்டாப் ஸர்வீஸ்னு எழுதியிருக்கிறத
கவனிக்கலியா? இடையில நிறுத்தறதுக்கு எங்களுக்கு பர்மிஷன் இல்ல. உள்ள போய் உக்காருங்க!’’

அந்த இளைஞர் வாடிய முகத்துடன் சிறுமியை அழைத்துக் கொண்டு இருக்கை நோக்கி இயலாமையுடன் நடந்தார். சிறுநீரை அடக்க முடியாத இயலாமையும், அது நடத்துநரால் அனைவருக்கும் தெரிந்துவிட்டதே என்ற அவமானமும் சேர்ந்து அவள் முகத்தை வாடச்செய்திருந்தது.

எனக்குள் பதட்டம் அதிகமானது. ஒரு பெண் குழந்தையின் அவசர இயற்கை உபாதைக்கு ஏன் இத்தனை கெடுபிடியாக அனுமதி மறுக்கவேண்டும்? சாலையில் ஓடும் பேருந்தை அவசரத்துக்கு நிறுத்த, ஒரு அரசுப் பேருந்து நடத்துநர் யாரிடம் அனுமதி பெற வேண்டும்? என்னால் என்னை கட்டுபடுத்த இயலவில்லை.

“பாவம் சின்னக்குழந்தை… என்ன அடாவடித்தனம் இது… சும்மா விடக்கூடாது அந்தாள…’’ என்று கோபத்துடன் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்த என்னை, கையைப் பிடித்து சட்டென்று உட்கார வைத்தாள் என் சகதர்மினி.

“அந்தப் பொண்ணோட அப்பாவே சைலண்டா இருக்கார்! நீங்க ஏன் உணர்ச்சி வசப்படுறீங்க? சக மனுஷங்க மேல கரிசனம் காட்டுற காலம் இல்ல இது. ஓண்ணு வேடிக்கை பாக்கலாம். இல்ல கண்ணை மூடிக்கிட்டு முகத்த வேற பக்கம் திருப்பிக்கலாம். அவ்ளோதான் செய்ய முடியும் நம்மால. அமைதியா உக்காருங்க!’’

‘பாதிக்கப்பட்டவரே மௌனமாக இருக்கும்போது நீங்கள் ஏன் பதட்டப்பட வேண்டும்’ என்று என் மனைவி கேட்ட கேள்வியின் நியாயம் சட்டென பொறிதட்ட, அமைதியாக இருக்கையில் அமர்ந்தேன். அப்போதுதான் பின் இருக்கையிலிருந்து ஒரு கை ஆறுதலாக என் தோளைத் தட்டியது. திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரியவர். மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார்:

“தம்பி! என்னத் தப்பா நெனக்க வேணாம். உங்க மனைவி சொல்றதுதான் சரி. உங்க கோபம், உணர்ச்சி எனக்குப் புரியுது. ஆனா நம்மால எதுவும் செய்ய முடியாது. இதுதான் நிதர்சனம். ஏன்னா வன்முறைங்கறது அப்பல்லாம் சில மனுஷங்ககிட்ட மட்டும் இருந்துச்சி. ஆனா இப்ப எல்லா மட்டத்துலேயும், புரையோடிப் போயிருச்சி. உங்க மனைவி மகளோட பத்திரமா நீங்க வீடு போய் சேர்றதுதான் முக்கியம். அமைதியா இருங்க!

பெரியவரின் வார்த்தைகள் சற்றே என் பதட்டைத் தணித்தது. ஆனால் ஆழ்மனதில் கொதிப்பு பல்வேறு கேள்விகளாக எனக்குள் எழுந்து எழுந்து அடங்கியதைத் தவிர்க்க முடியவில்லை. நாம், நம் நாடு என்பதெல்லாம் அர்த்தமற்ற வார்த்தைகளா? சுதந்திரம் என்பதன் பொருள் இங்கு உள்நாட்டு அடிமைத்தனம் என மாறிவிட்டதா?

மனிதர்களிடையே மனிதநேயம் என்பது முற்றிலுமே துடைத்தெறியப்பட்டு விட்டதா? சகமனிதன் என்ற வார்த்தை முழுவதுமாக அர்த்தம் இழந்துவிட்டதா? பக்கத்து இருக்கைக்காரன் படும் அவமானத்தையும் துயரையும் வேடிக்கை பார்க்க மட்டும்தான் நம்மால் இயலுமா? இது இயலாமையா? கையலாகத்தனமா? சிறுமை கண்டு பொங்காதது கயமை இல்லையா? அநீதி கண்டு ரௌத்ரம் காட்டவில்லையெனில் நாம் மனிதர்கள்தானா?…

சரம் சரமாக இறங்கிய மழை, இப்போது சடசடவென வேகம் பிடித்து மேலும் அடர்த்தியாய் பெய்யத் தொடங்கியது. வெளியே மழைச் சத்தமும் பேருந்து ஓடும் சத்தமும் தவிர வேறு ஓசைகளில்லை. எனக்குள் எழுந்து பறந்த ஆவேசமான கேள்விகள் இயலாமையின் நிதர்சனத் தீயில் விழுந்து சிறகு பொசுங்கி சாம்பலாகிப் போயின…

நடத்துநர் சொன்னபடி பேருந்து இடையில் எங்குமே நிற்கவில்லை. கடலூர் பண்ருட்டி மார்க்கமாக விழுப்புரம் திண்டிவனம் புதிய நெடுஞ்சாலையில், ஒரு சாலையோர உணவு விடுதிக்குள் சென்று நின்றது. சிறுநீர் கழிக்க முடியாத சிறுமியை அழைத்துக் கொண்டு, பதடட அவசரமாக கீழிறங்கினார் அந்த இளைஞர். இதர பயணிகளும் வரிசையாக இறங்கத் தொடங்கினர்…

மனைவி மகளுடன் நானும் பேருந்தை விட்டு இறங்கினேன். கழிவறைகளை நோக்கி நடந்தோம். வெளியே வந்து அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். “யூரின் போக அஞ்சு ரூபாயாம்…ரொம்ப அநியாயம்!’’ என்றாள் என் மனைவி. நான் ஒன்றும் பேசவில்லை.

“ஃபைவ் ருபீஸ் சரிம்மா… டாய்லெட் சுத்தமாவா இருந்துச்சு, வெரி வொர்ஸ்ட்!’’ என்றாள் முகம் சுளித்தபடி என் மகள். நான் அதற்கும் ஒன்றும் பேசவில்லை.
ஹோட்டலுக்குள் நுழையும்போதே என் மனைவி எச்சரித்துவிட்டாள். “இங்க ஒண்ணும் வாயில வைக்கற மாதிரி இருக்காது. இது டிரைவரும் கண்டக்டரும் சாப்பிடற ஹோட்டல். அதனால காபி மட்டும் சாப்பிடுவோம். பிரட் பிஸ்கட் இருக்கு. பசிச்சா சாப்பிட்டுக்கலாம்.’’

மேசையில் உட்கார்ந்து காபி ஆர்டர் செய்யும் போதுதான், பக்கத்து மேசையில் உட்கார்ந்திருந்த வயதான ஒருவர் உரத்த குரலில் உடல் நடுங்க சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“என்னய்யா அநியாயம் இது! ஒரு தோசை இருபது ரூபாயா.. வெஜிடபிள் குருமா இருபது ரூபாயா…?’’

எதிரே நின்ற சர்வர், சர்வ அலட்சியமாக பதில் சொன்னான்- “சாப்பிடுறதுக்கு முன்னாலேயே சொன்னேன்ல. அப்புறம் ஏன்யா சாப்ட்டதுக்கப்புறம் குதிக்கறே?”

“வாயில வைக்க முடியல. ஓரே புளிப்பு. தோசைக்கு சட்னி சாம்பார்தானே தரணும். குருமான்னு குடுத்துட்டு அதுக்கு இருபது ரூபாயா…”

“சட்னி சாம்பார்லாம் எங்க ஓட்டல்ல கிடையாது!’’

“இந்த தோசைக்கு அதிகபட்சம் பத்து ரூபா கொடுக்கலாம். அதுக்கு மேல தரமாட்டேன். என்ன ஆனாலும் சரி!’’

அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே எல்லாம் நடந்துவிட்டது.

சுட்டென்று அவரின் மேல் பாய்ந்த சர்வர், அவருடைய சட்டையைப் பிடித்து கழுத்தை இறுக்கத் தொடங்கினான். “பொறம்போக்கு! இதுக்குமேல ஏதாச்சும் பேசுனா `கண்டம்’ ஆயிடுவே. நாங்க யார்னு உனக்குத் தெரியுமா? காசை வச்சிட்டு, உயிரோட வெளிய போடா உருபடாத நாயே!…’’

அந்த பெரியவர் அப்படியே பேய்யரந்தது போலானார்.

சாப்பிட்டவர்கள் அனைவரும் இந்த நொடிநேர வன்முறையைக்கண்டு உறைந்துவிட்டனர். ஏற்கனவே இரண்டுமுறை கொதித்து அடங்கிய எனக்கு பதட்டம் எதுவும் ஏற்படவில்லை. அவமானத்தால் மேலும் நடுங்கிய அந்த முதியவரின் உடலும், கூனிக்குறுகிச் சிறுத்த அவருடைய முகமும் பரிதாபமாக தெரிந்தது. செய்வதறியாது விக்கித்துப் போனார்.

ஆனால் கண் முன்னால் நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு யாரும் ரௌத்ரம்
கொள்ளவில்லை, என்னையும் சேர்த்து!.

“பெரியவரே! ஏன் வீணா ப்ரச்னை பண்ணி அசிங்கப்படுற… பிடிச்சா சாப்பிடணும். இல்லே காப்பியோட நிறுத்திக்கணும். வண்டிய எடுக்கப் போறோம். பில்ல குடுத்துட்டு வர்றேன்னா வா…இல்லே இங்கேய நின்னு சண்டை போட்டுக்கிட்டு இரு…’’ என்றபடி ஹோட்டலைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார் எங்கள் பேருந்தின் நடத்துநர்.

ஒன்றும் பேச முடியவில்லை அந்தப் பெரியவரால். கையில் பில்லுடன் கல்லாவை நோக்கி நடந்தார். நாங்கள் மௌனமாக வெளியேறி பேருந்தில் உட்கார்ந்தோம்.

அந்தப் பெரியவரும் எங்களது சக பயணிதான் என்ற தெரிந்தபோது எனக்கு உடம்பெல்லாம் கூசியது. பாரதியின் `ரௌத்ரம் பழகு’ என்ற இரட்டைச் சொல் இடி முழக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இனி இந்த நெருப்பு வார்த்தைகளை வாசிப்பதுகூட அவனுக்கு நாம் செய்யும் அவமரியாதையோ என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் உறுத்தத் தொடங்கியது.

பேருந்தில் உட்கார்ந்த பின்னும், முன்-பின் இருக்கைக்காரர்களின் கோபமும் இயலாமையும் தாழ்ந்த தொனியில் புலம்பல்களாய் கசிந்தன…

“பத்து ரூபா கூல்டிரிங் இருபது ரூபாயாம். அநியாயம்!’’

“இருபத்தஞ்சு ரூபா சிகரெட் பாக்கெட் முப்பத்தஞ்சு ருபாய். பகல் கொள்ளையடிக்கிறானுங்க.’’

“பதிமுணு ரூபா வாட்டர் பாட்டில் இருபத்து மூணுரூபா… கேக்கறதுக்கு நாதியில்ல… இந்த நாடு எப்படி உருப்படும்?’’

பேருந்து மீண்டும் புறப்பட்டது.

முன்பு எனக்கு ஆறுதல் சொன்ன பின்இருக்கைப் பெரியவர், மீண்டும் லேசாகத் தோளைத் தட்டினார். திரும்பினேன்.

“தம்பி! நான் சொன்னேன்ல. உணர்ச்சி வசப்பட்டா, நமக்கும் அவருக்கு ஏற்பட்ட
அவமானந்தான் பரிசு. எவனும் வாயத் தொறக்க மாட்டான். இந்த ஹோட்டல் ஓனர்,
மினிஸ்டரோட பினாமி. இங்க மட்டும்தான் எல்லா பஸ்ஸும் நிக்கும். எல்லா டிரைவர் கண்டக்டருக்கும் சாப்பாடு, டிபன், கூல்டிரிங்ஸ், சிகரெட்னு எவ்ளோ சாப்ட்டாலும் எல்லாம் ஃப்ரி. இங்க பஸ்ஸ நிறுத்தலேன்னாலும், வேற எங்க நிறுத்துனாலும் ட்யூட்டி முடிச்சிட்டு போகும்போது டிரைவருக்கும் கண்டக்டருக்கும் மெமோ ரெடியா இருக்கும். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறிங்களா… போன வருசந்தான் நானும் டிரான்ஸ்போர்ட்லேருந்து
ரிட்டயரானவன். ஹோட்டல்ல இருக்கறத, அநியாய விலைக்கு சாப்பிடுறது, ஓட்டு போட்ட நமக்குத் தலைவிதி. தட்டிக் கேட்டா அடி உதை அவமானந்தான். இதெல்லாம் எப்ப மாறும்? யாரு மாத்தப்போறாங்கன்னு தெரியல? மனைவியும், வயசுக்கு வந்த பெண்ணும் இருந்ததாலதான் உங்ககிட்ட கொஞ்சம் அதிகமா அக்கறை எடுத்துகிட்டேன். ஸாரி!’’ என்றவரிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளியேறியது.

என் மனைவியும் மகளும் அமைதியாக பேருந்துக்கு வெளியே பார்வையைத் திருப்பிக் கொண்டனர். ஓரிடத்தில் நிலைகொள்ள இயலாத என் பார்வைகள் பேருந்துக்கு உள்ளும் வெளியுமாக அலையத்தொடங்கின. ஊசித் தூறலாகத் தொடங்கி, நீர்க்கணைகளாக வளர்ந்து, சடசடவென அடர்மழையாக வலுத்து, இப்போது பேயமழையாகக் கொட்டத் தொடங்கியது வானம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *