கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 11,622 
 

“ஹலோ… யாரு பேசுறது?”

“சுந்தர்’தானே?”

சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு, “மாமா….?!” சுந்தரின் வார்த்தை
ஆச்சரியத்தை உமிழ்ந்தது…

“ஆமாப்பா….”

“எப்டி இருக்கீங்க?… எவ்வளவு நாள் ஆச்சுல்ல?… என்னைய இன்னும் ஞாபகம்
வச்சிருக்கிங்களா?” உற்சாகம் ஒரு பக்கமும், பதட்டம் மறுபக்கமுமாக
வார்த்தைகள் இரண்டிற்கும் நடுவே பயணித்தது…

“அதல்லாம் அப்புறம் பேசிக்கலாம் மாப்ள… முதல்ல நீ ஊருக்கு வா…”

“என்ன மாமா? என்னாச்சு?… எதுவும் பிரச்சினையா?”

“உங்க அப்பாவுக்கு முடியாம ஆஸ்பத்திரியில சேத்திருக்கு…”

இதற்கு மேல் எதுவும் விளக்கமோ, விவரிப்போ சுந்தருக்கு தேவைப்படவில்லை…
மறுநொடியே பயணத்திற்கு ஆயத்தமானான், தஞ்சையில் தனக்காக காத்திருக்கும்
வசவுகளையும், எதிர்ப்புகளையும் எதிர்பார்த்தபடியே கிளம்பிவிட்டான்…

ஊருக்கு செல்லும் வழியெல்லாம் சுந்தரின் நினைவுகள் அப்பாவை சுற்றியே
சுழன்றுகொண்டு இருந்தது… சாலையின் இருமருங்கிலும் சூழப்பட்டுள்ள
வயல்வெளிகள், ரசனையைவிட அதிகமான “அப்பாவின் நினைவுகளையே” அசைபோட
வைத்தது… வயலிலிருந்து வீட்டுக்குள் வியர்வையில் குளித்தபடி நுழையும்
அப்பா, சுந்தரின் காதோரம் வழியும் வியர்வையை கண்டால் மட்டும்
துடித்துப்போவார்… “அந்த பேனை போட்டுக்கிட்டு படிச்சா என்னப்பா? சளி
கிளி புடிச்சிட போவுது!” காற்றாடியின் சுவிட்ச்சை தட்டிவிட்டு, ஒரு
துண்டால் மகனின் வியர்வையை துடைத்துவிடும் அப்பா எத்தனை பேருக்கு
வாய்த்திருப்பர்?…

அண்ணன்மார்கள் இருவரைவிட கடைக்குட்டியான சுந்தருக்கு மட்டும் எப்போதும்
வீட்டில் தனி சலுகைகள் உண்டு… “நீங்கள்லாம் உங்க அம்மாவோட
வாழ்ந்திருக்கிங்க…. அவனுக்கு விவரம் தெரியுறதுக்கு முன்னமே உங்கம்மா
செத்துப்போய்ட்டாடா… அந்த குறை தெரியாம நாமதான் சுந்தரை பாத்துக்கணும்”
பலநாட்கள் அண்ணன்களிடம் அப்பா இப்படி சொல்வதற்கான காரணம் சுந்தருக்கு
புரியாது…. ஒரு பட்டம் சூட்டப்படாத இளவரசனாகத்தான் அந்த வீட்டில்
சுந்தர் வலம்வந்தான், ஆறு வருடங்களுக்கு முன்புவரை…. நினைவுகள் எல்லாம்
அவன் மனதை பிழிய, சாறுபோல வழிந்தது கண்ணீர்…

தஞ்சையின் அந்த பிரபலமான மருத்துவமனையின் வாசலில் மகிழுந்து நின்றபோது
மாமாதான் மருத்துவமனை வாசலில் நின்று சுந்தரை வரவேற்றார்… ஆறு
வருடங்களுக்கு பிறகு சந்திப்பதற்கான ஒரு மகிழ்ச்சியோ, சம்பிரதாய சிரிப்போ
கூட இருவரிடமும் இல்லை.. அவன் கண்கள் மருத்துவமனையை ஊடுருவியது, ஏதோ ஒரு அறைக்குள்தான் அவன் குலதெய்வம் படுத்திருக்கக்கூடும்…

மருத்துவமனையின் வரவேற்பில் நின்று பணத்தை எண்ணிக்கொண்டிருந்த பெரிய
அண்ணன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை…. மாமாவின் அருகே வரும் அந்த
இளைஞன், தன் தம்பிதான் என்று அடையாளம் காணவே அவனுக்கு சில நிமிடங்கள்
தேவைப்பட்டது…

சுந்தரின் நடையில் ஒரு தயக்கம் தெரிந்தது என்றாலும், நடையை மீறி நகர்ந்த
பார்வையில் அப்பாவை பார்க்க வேண்டுமென்ற வேகம் மிளிர்ந்தது… இருவரையும்
மேற்கொண்டு நகரவிடாமல் இடை மறித்து நின்றான் அண்ணன்… இத்தனை
ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் அண்ணனிடம் எப்படிப்பட்ட உணர்வுகளை
வெளிப்படுத்துவது? என்று தெரியாமல் தடுமாறி நின்றான் சுந்தர்… அதைவிட
அண்ணன் என்னவிதமான உணர்வை எதிர்பார்க்கிறான்? என்பதில்தான் அவன் இன்னும்
அதிக குழப்பமாக இருந்தான்… சுந்தரின் குழப்பம் அடுத்த சில நொடிகளில்
அண்ணனிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளால் தெளிவானது….. மாமாவை
பார்த்து, “என்ன மாமா?.. இருக்குற பிரச்சினை போதாதுன்னு புது பிரச்சினைய
கொண்டு வந்திருக்கிய?” அண்ணன் வார்த்தைகளில் அனலை கக்கினான்….

“புது பிரச்சின இல்ல மாப்ள, பழைய பிரச்சினை தான்.. ஆறு வருஷம் கழிச்சு
பாக்குறதால புதுசா ஆகிடாதுப்பா…”

“அதான் ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்னு தண்ணி தொளிச்சாச்சுல்ல?..
அப்புறம் என்ன இப்ப புதுசா உறவு மொளைக்குது?… அப்பா, குடும்பல்லாம்
வேணாம்’னுதானே எங்கள அசிங்கப்படுத்துற மாதிரி ஒரு ஆம்பள கூட
ஓடிப்போனான்?.. இப்ப பாசம் என்ன பொத்துகிட்டு வருதோ?… அப்பா முடியாம
கெடக்குறாரு, சொத்துல பங்கு கேக்கலாம்னு வந்திருக்கானா பொட்டப்பய….”

வார்த்தைகள் எல்லைகளை கடந்து செல்வதை உணர்ந்த மாமா, அண்ணனை அமைதியாக்க முயன்றார்….ஏதோ சண்டையென வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்கைந்து பேரும், “என்னங்க இங்க சத்தம் போட்டுக்கிட்டு?.. டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற
நேரம்…. வெளில போங்க” வார்த்தைகளில் கண்டிப்பை வெளிப்படுத்திய
செவிலியரும் அண்ணனின் வார்த்தைகளை ஒருவழியாக அணைபோட்டு நிறுத்தினர்…

“என்னப்பா இதல்லாம்?… உங்கப்பா உள்ள சாவ கெடக்குறாரு!… நீ சொத்த
பத்தி பேசுற?.. வாழ்ந்த காலம் முழுக்க கஷ்டப்பட்டே வாழ்ந்த மனுஷன்,
சாகுறப்பவாச்சும் நிம்மதியா போகவிடுங்க சாமிகளா, உங்களுக்கு புண்ணியமா
போவும்!” சொல்லிவிட்டு அண்ணனின் பதிலை எதிர்பார்க்காமல், சுந்தரின் கை
பிடித்து மேற்கொண்டு மருத்துவமனைக்குள் அழைத்து சென்றார் மாமா…
அண்ணனின் இந்த வார்த்தைகளை சுந்தர் எதிர்பார்த்தே வந்திருந்தான், அந்த
வார்த்தைகளின் அர்த்தத்தை ஆராயவல்லாம் அவனுக்கு தோன்றவில்லை… அவன்
நினைவு முழுக்க “அப்பா” தான் நிறைந்து இருந்தார்…

வழக்கமான மருந்து நெடிகளுக்கு மத்தியில், வரிசையாக நீண்டிருந்த
அறைக்கதவுகளின் வரிசையில், ஒரு கதவிற்கு முன்னால் நின்றிருந்த சில
முகங்கள் சுந்தருக்கு பரிச்சயமானதாக தோன்றியது… மூத்த அண்ணனின்
மனைவியும், இளைய அண்ணனும் அதில் முதல் பார்வையில் அடையாளம்
தெரிந்துவிட்டார்கள்….

சின்ன அண்ணனா இது?… ஆறு வருடங்கள் அவனை நிறைய மாற்றிவிட்டது, அருகில்
ஒரு பெண்… திருமணம் கூட ஆகிவிட்டது போலும்… பெரிய அண்ணியின் கையில்
ஒரு குழந்தை, இரண்டு வயது மதிக்கத்தக்கது… பெரிய அண்ணனின் திருமணம்
முடிந்த ஒரு வருடம் வரை வீட்டில்தான் இருந்தான் சுந்தரும், குழந்தை
மட்டும் இப்போது புதிது… யாரும் சுந்தரோடு சமாதானம் ஆகிட
விரும்பாதவர்களாக, சில அடிகள் தூரம் விலகி நகர்ந்தனர்… ஆறு வருட விலகலை
விட, இந்த சில அடிகள் விலகல் சுந்தரை கொஞ்சம் அதிகமாகவே மனதினுள்
வருத்தியது…

அந்த அறைக்கதவினுள் லேசாக எட்டிப்பார்த்த மாமா, சுந்தரை நோக்கி திரும்பி
வந்து, “அப்பா தூங்குறாரு… நீ போயி பாருப்பா” என்றார்… அத்தனை
காலத்தின் பிரிவுக்கு பிறகு, அப்பாவை பார்க்கப்போகும் அந்த தருணம் அவனுள்
விவரிக்க முடியாத உணர்வுகளை திணித்தது… அறையின் கதவை, அவனுடைய நடுங்கிய கைகள் திறந்த அந்த கணம், சுந்தரின் வாழ்க்கையின் மிக தடுமாற்றமான தருணம் என்றுதான் சொல்லவேண்டும்… கதவுகளுக்கு அந்த பக்கம், இருபது
வருடங்களுக்கு மேலாக தன் பிள்ளைகளுக்காகவே உழைத்து, உணர்வுகள்
பொசுக்கப்பட்ட நிலையில், அரைபிணமாக படுக்கையில் போடப்பட்டிருக்கிறார்
அந்த தகப்பன்…

ஆறு வருடங்களுக்கு முன்பு பார்த்த அத்தனை நபர்களையும் எளிதாக அடையாளம்
கண்டு, பழைய நினைவுகளை மீட்க முடிந்த சுந்தரால் அப்பாவை மட்டும் அவ்வளவு
எளிதாக அடையாளம் காணமுடியவில்லை.. இந்த கால இடைவெளி அவரை நிறையவே
உருக்குழைத்துவிட்டது… வற்றிய தேகமும், சுருங்கிய தோலும், நரைத்து
உதிர்ந்த முடிகளும், ஒட்டிய கன்னங்களும்… அப்பப்பா!!!…. ஒரு மனிதனை
காலம் இவ்வளவு கோரமாக மாற்றிவிடுமா?…

மூச்சுவிடுவதால் அவ்வப்போது நெஞ்சுக்கூடு மட்டும் நகர்ந்தபடி அவர்
இருப்பை உணர்த்தியது… சிறுநீர் பை கூட காலியாகவே தொங்கிக்கொண்டு
இருக்கிறது… “இனி இவற்றால் பயனில்லை” என்று அணைக்கப்பட்டு அருகில்
நிறுத்தப்பட்டிருக்கும் கணினி திரை கூட ஒருவித பயத்தை சுந்தருக்குள்
ஏற்படுத்தியது… கையில் ஊசிமூலம் ஏற்றப்பட்டிருக்கும் ஒரு சலைன்
பாட்டில் மட்டுமே இப்போதைக்கு, அவரின் உணவும் மருந்தும் என்கிற இறுதிகட்ட
நிலையில் தந்தையை பார்ப்பது அவனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியது… சில நிமிடங்கள் அழக்கூட மறந்தவனாக ஸ்தம்பித்து
நின்றான்…

தன்னிலை மீட்டபடி தடுமாறிய நடையோடு, அந்த படுக்கையின் அருகே கிடந்த
இருக்கையில் அமர்ந்தான்… அப்பாவின் கையை மெல்ல வருடினான்,
சில்லிட்டது… அந்த தொடுதல் அத்தனை வருட பாவங்களையும் புனித நீரால்
கரைத்துவிட்டது போல அவனுள் தோன்றியது… அப்பாவை கட்டிப்பிடித்து, சத்தம்
போட்டு அழவேண்டும் போல தோன்றியது… அது சாத்தியமற்ற எண்ணம் என்பதால்,
அந்த கையை தன் முகத்தோடு ஒத்தியபடி கண்ணீரால் ஈரமாக்கினான்…
சுயநினைவே அற்றிருந்தாலும் கூட, பிள்ளையின் அழுகை நினைவை மீட்டுவிடும்
என்பார்கள்… உறங்கிக்கொண்டிருந்த அப்பாவும் கூட அதற்கு விதிவிலக்கில்லை, கண்களை திறந்து அருகில் அமர்ந்திருக்கும் சுந்தரை ஆச்சரியமாக பார்த்தார்… கண்ணின் கருவிழியை புரை படர்ந்து மறைத்திருந்த போதிலும், அப்பா அவனை எளிதாக இனம் கண்டார்.. பிள்ளையின் வாசம் புரியாதா அப்பாவிற்கு!… சுந்தரின் கண்களில் ஒத்தப்பட்டிருந்த கைகளை விலக்கி, கண்ணீரை தன் உள்ளங்கையால் துடைத்துவிட்டார்… அந்த செய்கைக்கே அப்பாவிற்கு கடுமையான மெனக்கடல் தேவைப்பட்டது, அந்த அளவிற்கு உடல் வலுவிழந்து கிடந்தது… அவரின் பார்வையில் கனிவும், விவரிக்க இயலாத மகிழ்ச்சியும் பளிச்சிட்டது…

“நல்லா இருக்கியாய்யா?” அப்பாவின் வார்த்தைகள் காற்றோடு கலந்தே வெளிப்பட்டது…
அதற்கு மேலும் அடக்கமாட்டாதவனாக “அப்பா…. என்ன மன்னிச்சிடுங்கப்பா….”
என்று வார்த்தைகள் ஓலங்களாக வெளிப்பட்டு, கண்ணீர் அருவி போல ஓடியது…
சில நிமட சுவாசத்தை மறக்க செய்த அழுகை, அத்தனை காலத்தின் சோகத்தையும் சில
நிமிடத்தில் வெளிப்படுத்த பிராயத்தனம் செய்தது…

“அழுவாதய்யா… உன்ன பாக்குறதுக்காகவே உசுர கைல புடிச்சுகிட்டு
கெடந்தேன்… இனி நிம்மதியா போவேன்யா…” கண்ணீர் வழிந்தபோதிலும்,
அப்பாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பும் இழையோடிக்கொண்டு இருந்தது…
“ஏம்பா இப்டி பேசுறீங்க?… உங்களுக்கு ஒண்ணுமில்ல… வெறும்
இன்பக்ஷன்தான்… ரெண்டு நாள்ல சரியாகிடும்… அப்புறம் என்னோட
உங்களையும் சென்னைக்கு கூட்டிட்டு போயி அங்க அப்பல்லோல உங்களுக்கு
காமிக்கலாம்…” அழுகை மறந்து, அப்பாவை கவலை மறக்க செய்வதில்தான்
சுந்தரின் முழு கவனமும் சூழ்ந்தது…

ஏதேதோ சொல்லி அப்பாவை சமாதானப்படுத்தினாலும், வரும்போது மாமா சொன்ன
வார்த்தைகளை தன்னுள் நினைத்துக்கொண்டான் சுந்தர்… “அவ்வளவுதானாம்…
ரெண்டு கிட்னியும் செயல் இழந்துடுச்சாம்… கல்லீரலும் பாதிச்சு, மஞ்சள்
காமாலை இருக்காம்… சுகரு, ப்ரெஷருன்னு ஒன்னும் பாக்கியில்லை… இனி
ட்ரீட்மெண்ட் கொடுக்குறதும் பயனில்லைன்னு சொல்லிட்டாக… உசுரோட
வீட்டுக்கு தூக்கிட்டு போகவேனாம்னுதான், ஏதோ கடமைக்குன்னு இங்க
வச்சிருக்கு…. இளநீர் கொடுத்து, தலைல தண்ணி ஊத்தி உசுர போக்கலாம்ன்ற
அளவுக்கு உங்க அண்ணன்மாருக யோசிச்சாணுக… ஆனாலும், அவரு உசுரு இன்னும்
இழுத்துகிட்டு இருக்குறதுக்கு காரணமே உன்ன பாக்கனும்னுதான்னு தோனுச்சு…
அதான், எங்கெங்கேயோ தேடி உன்ன கண்டுபிடிச்சேன்…”… உண்மைதான், இத்தனை
காலம் பேச்சே இல்லாமல் கிடந்த அப்பா இப்போது காற்றில் வார்த்தைகளை
உருவாக்கும் அளவிற்கு முன்னேற்றமாகிவிட்டார்….

“அந்த பையன் எங்கய்யா?” அப்பா இந்த கேள்வியை கேட்பார்! என்று சுந்தர்
நினைத்துக்கூட பார்க்கவில்லை… தானே தன் வாழ்க்கைத்துனைவனை பற்றிய
பேச்சை தஞ்சையில் எடுக்கக்கூடாது என்று தீர்க்கமாக நினைத்திருந்த
வேளையில், அப்பா இப்படி அவனைப்பற்றி கேட்பதென்பது ஆச்சரியமான
ஒன்றுதான்…

“வெளிநாட்டுக்கு ஒரு வேலை விஷயமா போயிருக்கான்பா… அடுத்த வாரம்
வந்திடுவான்…” சொல்லும்போது சுந்தரின் முகம் பொலிவானதை அப்பா
ரசித்தார்… அப்படி ரசிப்பதற்காகத்தான் அப்பா இதைப்பற்றியே
கேட்டிருப்பாரோ என்னவோ!….

சுந்தரின் வலது பக்க கன்னத்தை தொட்டுப்பார்த்தார்… சுந்தருக்கு அதற்கான
காரணம் புரிந்தது….

“ஆம்பளயாடா நீ?… ஆம்பளையோட வாழப்போறேன்னு சொல்றியே, உனக்கு புத்தி
கெட்டுப்போச்சா?” சொல்லிக்கொண்டே அப்பா ஆறு வருடங்களுக்கு முன்பு
அறைந்ததில் ரத்தம் வந்த இடம் அது…

அப்பாவின் கை இப்போது சுந்தரின் இடது கையில் எதையோ தேடியது….
“சொல்றத கேட்டுகிட்டு கெடக்கலைனா உன்ன கொன்னு காவேரி ஆத்துல
வீசிப்புடுவேன்…” என்றபடியே சுந்தரை பிடித்து தள்ளியதில், ஜன்னலின்
கம்பி குற்றி ரத்தம் வழிந்த இடம் அந்த இடது கை…

அதன்பிறகு கிழிந்த உடையோடு, யாருமறியாமல் வீட்டை விட்டு வெளியேறிய
சுந்தரை தேட யாரும் முயற்சிக்கவில்லை… சுந்தர் உயிரோடு இருப்பதே
அப்பாவால் இப்போதுதான் ஊர்சிதமாக நம்பமுடிந்தது…

பழைய நினைவுகள் அப்பாவை இன்னும் காயப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது…
அப்போது தன்னால் உண்டான காயங்களை இப்போதும் நினைத்து வருந்துகிறார்…
இந்த வருத்தங்கள் இப்போதைக்கு அப்பாவிற்கு தேவையற்றது, கொஞ்சம்
ஆபத்தானதும் கூட…

மெல்ல சுந்தர் அப்பாவின் நினைவுகளை திசைதிருப்ப முயன்றான்….

“சின்ன அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சாப்பா?”

மீண்டும் எதையோ யோசித்தவராக அப்பா, “பெரியவன் உன்கூட பேசுனானா?…
திட்டவல்லாம் இல்லைல?”

“இல்லப்பா… அண்ணன் அமைதியாத்தான் இருந்துச்சு… கோபம்
இருக்கும்தானே!… கொஞ்சநாள்ல சரி ஆகிடும்…”

“ஹ்ம்ம்… ஆகணும்…” அப்பா பெருமூச்சு விட்டுக்கொண்டார்… கவலை
ரேகைகள் அவர் முகத்தில் மீண்டும் படர்ந்தது… நிறைய கவலைகள் அவருக்குள்
நிறைந்து கிடக்கிறது… இப்படிப்பட்ட கவலைகள் தான் அப்பாவை இந்த அளவிற்கு
படுக்கையில் கிடத்தி இருப்பதாய் தோன்றியது சுந்தருக்குள்… இப்போதைக்கு
தன்னை பற்றிய பேச்சுதான் அப்பாவை ஓரளவு நிம்மதியாக்கும் என்பதை உணர்ந்து,
தன் பணி, இருப்பிடம் எல்லாவற்றையும் பற்றி சொன்னான் சுந்தர்… ஒரு
குழந்தையை போல மாறிய அப்பாவும், அளவோடு தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டியபடிnமகனின் வார்த்தைகளை ரசித்துக்கொண்டிருந்தார்…

நெடுநேரம் பேசிவிட்டதை கதவை திறந்து உள்ளே வந்த செவிலியர்தான் உணரவைத்தார்…

“என்ன தாத்தா இன்னிக்கு ஆளே ரொம்ப உற்சாகமா இருக்கீங்க?” சலைன் பாட்டிலை
மாற்றியபடியே கேட்டாள் செவிலிப்பெண்…

“என் மவனை பாத்தாச்சுல்ல, இனி எழுந்து ஓட வேண்டியதுதான் பாக்கி…”
சிரித்தார் அப்பாவும்…

“சரி சரி.. அப்புறம் ஓடிக்கலாம்… இப்போ நேரமாச்சு, தூங்குங்க…”
சிரித்தபடியே சொல்லிவிட்டு வெளியேறினாள்…

சுந்தரும் அப்போதுதான் நேரம் அதிகமானதாக உணர்ந்தான்… கடிகாரத்தில்
மணியை பார்த்தான், ஒன்பதென காட்டியது…

“நீ சாப்புட்டு வாய்யா…” அப்பா சொன்னார்…

“இருக்கட்டும்பா… நீங்க தூங்குங்க…” சொல்லிக்கொண்டே அப்பாவின்
கால்களை பிடித்துவிட்டான்…

“அடவிடுய்யா…. நான் நல்லாத்தான் இருக்கேன்… நீ போயி முதல்ல சாப்பிடு…”
“போறேன்பா… உங்களுக்கு இப்ப என்ன சாப்பாடு?”

“அதான் பாட்டிலை மாத்திவிட்டுட்டு போனுச்சே நர்சு… அதான் நைட்டு
சாப்பாடு… வாய்வழியா சாப்புட முடியலைய்யா…” சிரித்துக்கொண்டே அப்பா
சொன்னாலும், அந்த வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்த சுந்தர் சில
நிமிடங்கள் அமைதியாகவே அமர்ந்திருந்தான்….

“நான் என்னப்பத்தி மட்டுமே யோசிச்சுட்டேனாப்பா?… நான்
சுயநலவாதியாப்பா?” அப்பாவை பழைய நினைவுகளை மறக்க செய்வதில் முனைப்பு
காட்டிய சுந்தர், ஏனோ இப்போது தானே ஆறு வருடங்களுக்கு முன்னோக்கிய
நினைவுகளை ஓடவிட்டான்……

அப்பா இதற்கு பதில் சொல்லி, இன்னும் பேச்சை வளர்க்க விரும்பவில்லை… இனி
அதனால் பயனொன்றும் இல்லை என்று உணர்ந்தவராக, “ஏன்யா இப்படியல்லாம்
பேசுற?… நீ மொதல்ல போய் சாப்பிடுய்யா” இப்போதைக்கு மகனின் வயிற்றை
நிறைப்பது மட்டுமே இந்த அப்பாவின் முக்கிய எண்ணமாக தோன்றியது….
எழ முற்பட்டபோது எதையோ சொல்ல மறந்தவராக அப்பா, “தம்பி, ஊருக்கு
போகும்போது உன்னோட என்னையும் கூட்டிட்டு போய்டுய்யா…” என்றார்…

ஒருவேளை மகன் அப்படியே சென்றுவிடுவானோ? என்று யோசித்ததாலோ என்னவோ, அப்பா இப்படி சொன்னார்… அவர் சொன்ன வார்த்தைகளில் ஏமாற்றங்களும்,
விரக்திகளும், அளவில்லாத வலியும் அப்பட்டமாக வெளிப்பட்டது…

இதை கேட்டதும் அதுவரை தயங்கி இருந்த கண்ணீர், வழிந்தபடியே அப்பாவின்
கைமேல் விழுந்தது… மகனின் கண்கள் கலங்குவதை உணர்ந்த அப்பா, மெல்ல தன்
கைகளால் அதை துடைத்துவிட்டு, “சரிய்யா… நீ போயி சாப்புடு” என்றார்…

அப்பாவின் தூக்கத்திற்காவது வழிவிட நினைத்தவனாக அந்த அறையிலிருந்து
வெளியேறினான் சுந்தர்… மாமா சுந்தரை எதிர்பார்த்து அறையின் வாசலிலேயே
நின்றிருந்தார்… அண்ணிகள் இருவரும் முந்தைய நாள் சீரியலில் “சரவணனுக்கு
பெண் பார்க்கும் கதையை” பரிமாறிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்… சின்ன
அண்ணன் காதில் ஹெட்செட் மாட்டியபடியே விகடனை
புரட்டிக்கொண்டிருக்கிறார்… மாமாவும் சுந்தரும் அவர்களை கடந்ததை கூட
அவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை…

சில துக்கங்களை பகிர்ந்துகொள்வதற்காகவே அந்த இரவிலும் ஒரு பெட்டிக்கடை
சிகரெட்டை விற்றுக்கொண்டு இருந்தது… சோடியம் விளக்கின் வெளிச்சத்தில்
மாமா புகைவிட்டு மனதை ஆற்றிக்கொண்டு இருக்க, மாமாவின் வற்ப்புறுத்தலின்
விளைவால் ஒரு வாழைப்பழத்தை தின்னாமல் கையில் வைத்தபடி ஏதோ
யோசித்துக்கொண்டிருந்தான் சுந்தர்…

சில நிமிட மௌனம் நிறைய நினைவுகளை அவனுள் சுழலவிட்டுக்கொண்டு இருந்தது…
மாமாதான் பேச்சை தொடங்கினார்…

“உங்கப்பா இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு பேசுறாரு… இந்த அஞ்சாறு
வருஷத்துல ரொம்ப வேதனை பட்டுட்டார்… ஒரு காரணத்துக்காக உன்னை ஒதுக்க
துணிஞ்ச அவருக்கு, ஆயிரம் காரணங்கள் இருந்தும் உங்க அண்ணன்களை ஒதுக்க
முடியல… கொஞ்சநஞ்சம் இல்ல, சொத்துக்காக அவரை அடிக்குற அளவுக்கு
போய்ட்டாணுக… நீ செஞ்ச தப்பை என்னால இப்பவும் ஏத்துக்க முடியல, ஆனாலும்
உன் அண்ணனுக செஞ்சுகிட்டு இருக்குற கொடுமைகள பாக்குறப்ப உன்னோட தப்பு
பெருசா தெரியல…. உங்கப்பாவும் அதை இப்பதான் புரிஞ்சிருக்காரு…”

“இத்தன வருஷம் கழிச்சு அப்பாவ பாத்ததுக்கு சந்தோஷப்படுறதா? இந்த நிலைமைல
அவரை பார்த்ததுக்கு வருத்தப்படுறதா?ன்னு கூட எனக்கு புரியல மாமா….

இப்பவும் என்னை உறுத்திகிட்டு இருக்குற கேள்வி, நான் சுயநலவாதியா மாமா?”
மாமா இதற்கு பதில் சொல்லவில்லை… அரை மணிநேரமாக அங்கு நின்றுவிட்டதை
தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, அந்த கேள்வியை தவிர்த்தபடி மாமா
மருத்துவமனையை நோக்கி நகர செய்தார்…

மருத்துவமனையின் அந்த அறைக்கதவின் வாசலில் முன்பை விட கொஞ்சம் அதிக
கூட்டம்… அண்ணிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த பைகளை மறக்காமல் சரி
பார்த்துக்கொண்டு இருந்தனர்… அண்ணன் பணத்தை எண்ணிக்கொண்டு, கேஷ்
கவுன்ட்டரை நோக்கி விரைந்துகொண்டிருந்தான்… அறைக்குள்ளிருந்து
வெளிப்பட்ட செவிலியர், பாதி முடிந்த சலைன் பாட்டிலை கையில் வைத்தபடி
நகர்ந்தார்…

யாரும் சொல்லி புரிய வேண்டாத அளவிற்கு, அப்பாவின் மரணம் அனிச்சையாய்
புரிந்தது சுந்தருக்கு… ஒரு மரணத்திற்கு உரிய எவ்விதமான சலனமும் அங்கு
வெளிப்பட்டிடவில்லை…

மறுநாள் காலை, தஞ்சையின் அருகே மணலூர் கிராமம்…

தாரை தப்பட்டைகள் முழங்க, ஊரெங்கும் மஞ்சள், சிவப்பு நிற பூக்களின்
ஆக்கிரமிப்பில் அப்பாவை வழியனுப்ப ஆயத்தமாகினர் சுற்றத்தார்…

அப்பாவின் வாழ்தலுக்கு அடையாளமாக ஊரெங்கும் ஒப்பாரி சத்தம் எதிரொலித்தது,
சுவர்களில் “கண்ணீர் அஞ்சலி” ஒட்டப்பட்டிருந்தது, அம்பாசிடர் கார் ஒன்று
ஒலிபெருக்கி கட்டி “அன்னாரின் இறுதிசடங்கு நல்லடக்கம் இன்று மதியம்
மணலூர் மயான அரங்கில் நடைபெறும்” அறிவிப்பு செய்துகொண்டிருந்தது…
வழக்கமான சடங்குகள் வழக்கத்தைவிட வேகமாக நடந்து முடிந்தது…. “சீக்கிரம்
குளிப்பாட்டுங்க, நல்லா வாழ்ந்த மனுஷன் ரொம்ப நேரம் கெடத்திட வேணாம்…”
பரபரப்பாக இயங்கினர் சுற்றத்தார்… எந்த சடங்கிலும் சுந்தருக்கு
“மகனுக்கான” அங்கீகாரம் கிடைத்திடக்கூடாது என்பதில் அண்ணன்கள் இருவரும்
உறுதியாக ஒற்றுமையுடன் செயல்பட்டனர்…

கொள்ளி வைப்பதில் கூட இருவரும் சிக்கல் செய்தனர்….

“தாய்க்கு தலை பிள்ளையும், தகப்பனுக்கு கடைசி பிள்ளையும் கொள்ளி
வைக்கிறதுதான் நம்ம வழக்கம்… அதனால சுந்தரு தீ மூட்டுறதுதான் முறை…”

இதுதான் அண்ணன்களின் சிக்கலுக்கு காரணமான ஒரு தாத்தா சொன்ன கருத்து…

“அதெப்புடி அவன் கொள்ளி வைக்கிறது?… அவனைத்தான் எங்கப்பாவே வேணாம்னு
ஒதுக்கிட்டாருல்ல?… எங்கப்பனுக்கு நாங்க ரெண்டு மகனுகதான்… வாங்கி
தின்னி பயலுக எவனாச்சும் அந்த பொட்டப்பயலுக்கு பரிஞ்சு பேசுனியன்னா
எங்கப்பன் பொணத்துக்கு துணைப்பொணமாத்தான் போவனும் பாத்துக்குங்க…”

கிட்டத்தட்ட சடலத்திற்கு தீ மூட்டும்வரை கூட அப்பாவை நிம்மதியாக
விடவில்லை அண்ணன்கள்… இந்த பேச்சு வீட்டிற்கு வந்ததற்கு பிறகும்
தொடர்ந்தது….

“அவன போக சொல்லிடுங்க மாமா… இனி இங்க இருந்து சொத்துல பங்கு
கேக்குறதல்லாம் இருக்கக்கூடாது….”

“என்ன சொல்ற மாப்ள?… நீ ஏத்துக்கலைனாலும் உங்கப்பாவுக்கு அவனும்
புள்ளைதான்… நாளைக்கு அவன் கோர்ட்டு கேசுன்னு போய்ட்டா, அவன் பங்கை
கொடுத்துத்தான் ஆகணும்….”

“நீங்களே அவனுக்கு யோசனை சொல்லி கொடுப்பிங்க போல இருக்கே?… சரி…
ஆனால், மூணுல ஒரு பங்கல்லாம் கொடுக்க முடியாது… கால்வாசி கொடுக்குறோம்,
அதுவும் கூட பொறந்த பாவத்துக்காக”

இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் சுந்தர் வீட்டிற்குள்
நுழைந்தான்… வழக்கம்போல மாமா மட்டும்தான் இப்போதும் அவனிடம்
பேசினார்…

“சுந்தரு… உனக்கு வேனும்குறத கேளு… நாளைக்கு சொத்தால மறுபடியும்
எதுவும் பிரச்சின வந்துடக்கூடாது….”

சில நிமிட யோசிப்புக்கு பிறகு சுந்தர் தொடங்கினான் “எனக்கு ஒன்னே ஒன்னு
மட்டும் போதும்… வேற சொத்தல்லாம் வேணாம்…”

“என்ன?” மாமா வார்த்தையால் கேட்டார், மற்றவர்கள் எல்லோரும் பார்வையால் கேட்டனர்….

“அப்பாவோட அஸ்தி…” இது யாவருக்கும் ஆச்சரியம்தான்…. பல ஏக்கர்
நிலங்கள் அந்த வெற்று சாம்பலுக்கு ஈடாகுமா?… அண்ணன்கள் இருவரும்
மனதிற்குள் மகிழ்ந்தபடி, “ராமேஸ்வரம் போற வேலை மிச்சம்” என்று
நினைத்துக்கொண்டே சம்மதம் சொன்னார்கள்…. அதே மகிழ்ச்சியோடு வாங்க
வேண்டிய பத்திரங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ஊரார்
சாட்சியுடன் பத்திரம் செய்வதிலும் முனைப்பு காட்டினர் அந்த அதிகாரப்பூர்வ
“மகன்கள்” இருவரும்…

மகிழுந்து சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது… அலைபேசி அடித்தது,
வெளிநாட்டு எண்… சுந்தரின் வாழ்க்கை துணைவன்தான்…

“எங்க இருக்க சுந்தர்? ஏன் காலைலேந்து கால் அட்டன்ட் பண்ணவே இல்ல…
தஞ்சாவூர்ல என்ன ஆச்சு? ”

“நான் சென்னை வந்துட்டு இருக்கேன்… நீ ஊருக்கு வந்ததுக்கப்புறம்
எல்லாத்தையும் விவரமா சொல்றேன்…”

“சரிடா… நீ மட்டும்தான் சென்னை வரியா?”

“இல்ல… அப்பாவும் கூட வர்றார்…” மேற்கொண்டு எந்த கேள்விக்கான
பதிலையும் சுந்தரால் சொல்லமுடியவில்லை… தொண்டை அடைத்துக்கொண்டு, பேச்சு
குழறியது….

அழைப்பை துண்டித்தான்….

கண்களை இறுக்க மூடிக்கொண்டு, கையில் அப்பாவின் அஸ்தி குடுவையை இறுக்க
பிடித்திருந்தான்…

“நீ ஊருக்கு போகும்போது, என்னையும் கூட்டிட்டு போய்டுய்யா….” அப்பாவின்
கடைசி வார்த்தைகள் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தது…. கண்ணீர் வழிந்து
அந்த குடுவையில் விழுந்தது… ஏனோ இப்போது அந்த கண்ணீரை துடைக்க
அப்பாவின் கை நீளவில்லை….

சுந்தரின் ஒரு கேள்விக்கு மட்டும் இப்போவரை பதில் கிடைக்கவில்லை…

நீங்களாவது சொல்லுங்கள், “சுந்தரா சுயநலவாதி?????”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *