கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 21,685 
 
 

வெளியில் பெய்த வெள்ளை மழைச் சாரலினால் யன்னல் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. கதிரவனின் மஞ்சள் ஒளி யன்னலைத் தாண்டி உள்ளே பரவியிருந்தது. நேரத்தைப் பார்க்கிறேன். மணி பத்தை காட்டுகிறது.வழமையாக இப்பொழுது வேலைக்கு போயிருக்கவேண்டும்,கொரோனா ஊரடங்கில் உலகமே ஸ்தம்பித்திந்தது,அதனால் நேரம் பற்றி எந்த பிரக்ஜையும் இல்லாது கதகதப்பான போர்வையை விலக்காமலே விட்டத்தை பார்த்தபடி கிடக்கிறேன்.மனதில் மகிழ்ச்சி இல்லை. சலிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. இப்படியே எத்தனைநாள் வேலையில்லாது இருப்பது.?

எனது கைத்தொலை பேசி ஒலிக்கிறது,

அந்த அழைப்பு வந்த எண் புதிதாக இருந்தது.

61 இல் தொடங்குவதால் அவுஸ்ரேலியாவாக இருக்க வேண்டும்.

பொதுமுடக்க காலத்தில் பொதுவாக எல்லோரும் வற்சப் முதலான தொடர்பு ஊடகங்களூடாகத் தமது நட்பு வட்டத்தைப் புதுப்பித்து விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர்…

பள்ளிக்கூடக் குரூப் பல்கலைக்கழகக் குரூப் உறவினர் குரூப் என பல வட்டங்கள் .

வாழ்க்கைக்காக ஓடுவது சற்று ஓய்தபோது… பொழுபோகாத போது எதோ ஒருகட்டத்தில் தம்மோடு பயணித்தவர்கள் பற்றி அறிவதற்கான ஆர்வம் எல்லொலொரிடமும் ஓங்கி இருந்த வேளை.

அப்படி ஒரு அழைப்பாக இருக்கக் கூடும் என எண்ணியபடி அழைப்பில் இணைந்து கொள்கிறேன்.

“கலோ சங்கர் எப்படி இருக்கிறீர்” என உரிமையோடு ஒரு தடித்த குரல் .. எனக்கு அதனை அடையாளப்படுத்த முடியவில்லை.

“கலோ … நீங்கள்..” என இழுக்கிறேன்,

“நான் கொக்குவில் குமார். ஞாபகம் இருக்கா… கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஏ ..எல் வரை ஒண்ணாபடிச்சனாங்கள்..குமாரசாமி மாஸ்ரற்ற மகன்.:.”

இப்பொழுது அவன் முகம் மனக்கண் முன் தெளிவாகத்தெரிகிறது. கொக்கத்தடிபோல் உயர்ந்த மெல்லிய தேகம் .அதனால் அவனை நெட்டை குமார் என அழைப்போம். வகுப்பில் இருவர் சிவகுமார் என்ற பெயரில் இருந்ததால் இந்த ஏற்பாடு.

நல்லா படிப்பான். எங்கள் வகுப்பில் மொரட்டுவப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான ஒரே மாணவன் அவன்.

“ஓம் ஓம் உம்ம ஞாபகமில்லாமல் இருக்குமா ..எப்படி இருக்கிறீர்?.”

“நான் நல்லா இருக்கிறன் .” சற்று தயக்க்த்தின் பின் தொடருகிறான்.”வெரி வெரி சொரி, உம்மடஅம்மா…தவறிட்டா எண்டு அறிஞ்சன்…”

முதலில் எனது மூளை அவன் சொன்னதைச் சரியாகக் கிரகிக்க மறுத்தது.

லைன் கிளியரில்லை என்பது போல கேட்டகவில்லை என்று பாசாங்கு செய்கிறேன்…

அவன் மறுபடியும் சொன்னதையே சொல்கிறான்.

நான் அதிர்ச்சியில் வாய்பேச மறந்து உறைந்துபோனேன்.

கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காது வடிகிறது.

என்மனநிலை அறியாது அவன் தொடர்கிறான்.

“என்ற வைஃப் உங்கட அத்தானிண்ட தூரத்துச் சொந்தம். எப்பவாவது கொண்டாட்டங்களில் அவுஸ்திரேலியாவில் சந்திக்கிறனாங்கள். ஆனால் என்ற வைஃபுக்கும் உம்மட தங்கச்சிக்கும் நல்லசினேகிதம் . அவை ரெலிபோனில நெடுகக்கதைச்சுக் கொள்ளுவினம்.கொரோனா எண்டதால செத்தவீட்டுக்கு போக முடியேல்ல.உம்மோட கதைக்க வேணுமெண்டு ஒருகிழமையா முயற்சி பண்ணி இப்பத்தான் எடுக்கமுடிஞ்சது.”.

அம்மாவின் இறப்பு பற்றி எனக்கு தெரியாது என்பதை அவனிடம் எப்படிச் சொல்லுவது..?

அக்கா அத்தான் எப்படி கொடூரமானவர்களாக இருப்பார்களா?… என்னால் நம்மபவே முடியவில்லை.

பெற்ற தாயின் மரணத்தை மகனிடம் மறைக்குமளவுக்கு நான் அவர்களுக்கு என்ன செய்து விட்டேன்.

குழறி அழுதால்தான் மனம் சிறிது ஆறுதல் அடையும் போல இருந்தது. இணைப்பத்துண்டித்து விட்டு விக்கி விக்கி அழுகிறேன்.

எனக்கு பத்து வயது இருக்கும் போது அப்பா லொறி விபத்தொன்றில் தவறிய போது அக்கா கௌசலியாவுக்கு பன்னிரண்டு வயது. தங்கை சுமித்திரைக்கு வயது வெறும் மூன்று மாதங்களே.

அம்மாவிடம் அப்பாவின் திடீர் இழப்பின் அதிர்ச்சியையும் வேதனையையும் மீறி பிள்ளைகளை எப்படி வளர்ப்பது , என்ற கேள்வியே பூதாகரமாய் எழுந்து நின்றது, இருந்த சொத்து மூன்று பரப்புக்க காணியில் ஒரு கொட்டில் வீடும் பசு மாடும் மட்டுமே.

அப்பா செய்து வந்த காய்கறி வியாபாரத்தைச் செய்யலாம் தான். அனால் அது வீடு என்ற வட்டத்தைவிட்டு அதிகம்வெளியுலகில் புலங்காத அம்மா போன்றவர்களுக்கு அப்படி ஒன்றும் இலகுவானது அல்ல. அதோடு சுமித்திரையை ஆரிடம் விட்டுச் செல்வது..’?சொந்தமும் பந்தமும் பத்து நாள்வரைதான் …அப்பாவின் உறவுகள் தங்கள் மீது பொறுப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் எட்டுச் செலவோடு மெல்ல நழுவிக் கொண்டன.

அம்மாவின் உறவு என்று சொல்ல அவவின் அக்கா ஒருத்தியே இருந்தா. அவவும் திருகோணமலையில் வாழுகிறா..அவவிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை…

ஆழ்ந்து சிந்தித்ததில் ஒரு வழி புலப்பட்டது…வீட்டிலிருந்தே செய்யக்கூடியதும் அம்மாவுக்கு கைவந்ததுமான சமையல் கலையைக் கையில் எடுப்பது என்று அம்மா தீர்மானித்தா.

பால் வியாபாரமும் கோழி வளர்ப்பும் அம்மாவின் வருவாயில் கணிசமான பங்கை வழங்கின.

ஆஸ்மா வருத்தம் தரும் அவஸ்தைகளைக் கூடப் பொறுத்துக்கொண்டு ஒரு நாளில் 16 மணித்தியாளங்கள் உழைப்பு உழைப்பு…

அவவின் இந்த அசுர உழைப்பால் நாங்கள் என்றுமே பசிகிடக்காதவாறு பார்த்துக் கொண்டா… அக்காவை பல்கலைக்கழகம் வரை படிப்பித்தா.

நான் க.பொ உயர்தரப் பரீட்டையில் ஒருதடவைக்கு மேல் முயற்சி செய்யாது வெளிநாட்டுக்கு வருவதற்கு நாட்டுப் பிரச்சினை மட்டும் காரணம் இல்லை.அம்மாவின் சுமையை நீக்கி சகோதிரிகளை கரைசேர்க்க வேண்டும் என்பதே பிரதானமாக இருந்தது.

அக்காவுக்கு நல்ல சீதனம் கொடுத்தாவது நல்ல படித்த மாப்பிளையை கட்டிவைக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை மட்டுமல்ல எனதுந்தான்.

அதனால் ஓப்பின் விசா வாய்ப்பைப் பயன்படுத்தி 1983 இல் ஜேர்மனிக்கு வந்தேன். இங்வந்தபோதும் அகதி அந்தஸ்துப் பெற்ற எங்களுக்கு முதல் நான்கு ஆண்டுகள் வேலை செய்வதற்கான் அனுமதி இருக்கவில்லை. அரசு எமது செலவுக்கு எனத்தரும் சொற்ப பணத்தையும் சேர்த்து அம்மாவுக்கு அனுப்பினேன். அக்காவுக்கு ஒரு கல்வீடு கட்ட வேண்டும் என்ற எனது எண்ணத்துக்கு அது அச்சாரமாக அமையப்போவதில்லையாயினும் அம்மா அப்பணத்தையும் தனது சிறு சேமிப்பையும்கொண்டு சில நகைகளை செய்யத்தொடங்கினா.

எனக்கு வேலை செய்ய அனுமதி கிடைத்தவுடன் வீடுகட்டுவதற்கான பணத்தை அனுப்பிவைக்கலாம் என்ற உறுதியுடன் அம்மாவுக்கு வாக்கும் அளித்திருந்தேன்.

எனக்கும் அம்மா, சகோதரிக்களுக்கும் இடையே அக்காவின் கணவர் புகுந்த போதுதான் எல்லாம் மாறிப் போயிற்று.

அக்கா பல்கலைக்கழகத்தில் படித்தபோது அறிமுகமாகிய கீதன் பின் அவவின் காதலனாகினார். படிப்பு முடிந்தவுடன் உடனேயே கலியாணம் செய்யவேண்டும் என அவசரப்பட்டார்கள்.

அக்காவின் மனதுக்க பிடித்த ,அழகான படித்த மாப்பிள்ளை கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால்

மாப்பிள்ளை வீட்டார் போட்ட நிபந்தனைகள்…..

எம்மைத் திக்குமுக்காடச் செய்தன.

அத்தானின் குடும்பத்தில் எல்லோரும் மிகவும் படித்தவர்கள் .அதனால் சமையல் காரியின் பிள்ளையைக் கட்டுவது அவர்களுக்கு கௌரவக் குறைவாகப்பட்டது.உண்மையில் அத்தான் பிடிவாதமாக அக்காவைக் கட்டுவதாக நின்றதால் தான் கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டனர்.

அதனால் அம்மா சமையல் வேலை செய்யக்கூடாது என்பது முதல் நிபந்தனையாக இருந்தது.

அம்மா மூன்றுபரப்புக் காணியையும் சரி பாகமாகப் பிரித்து கௌசலைக்கும் சுமித்திரைக்கும் வழங்கவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தா.

ஆனால் மாப்பிளை வீட்டார் வீடு இல்லாத காரணத்தால் மூன்றுபரப்பையும் தங்களுக்கே தரவேண்டும் என்றும் வீடு கட்டி முடித்தவுடன் பாதிக்காணியைச் சுமித்திரைக்கு எழுதிவைப்பதாகவும் சொன்னார்கள்.

இந்த இரண்டு நிபந்தனைகளுமே அம்மாவையும் பதினொரே வயதான சுமித்திரையையும் அக்கா அத்தானை சார்ந்து இருப்பதற்கான நிலையை எற்படுத்தும் என்பதை எண்ணி அம்மா குழம்பிப் போய் இருந்தா. அக்காவின் காதல் விவகாரம் இடையில் இருகாவிட்டால் இந்தச்சம்பந்தத்துக்கு அம்மா ஒரு போதும் சம்மதித்திருக்க மாட்டா.

அம்மா நெருப்போடு அல்லாடுவது எனக்கும் சம்மதமில்லைத்தான். நான் சரியாக சம்பதிக்கத்தொடங்கியவுடன் அம்மாவுக்கு ஓய்வு கொடுப்பதையே முதல் காரியமாக எண்ணியிருந்தேன்.

அக்கா காணியை திருப்பித்தராவிட்டாலும் சுமித்திரைக்கு காணிவாங்கி வீடுகட்டிக்கொடுக்க முடியும் என்ற உறுதி என்னிடம் இருந்ததால் இவைபற்றிச் சிந்திக்காது கலியாணவேலைகளைப் பார்க்குமாறு அம்மாவை வற்புறுத்திக் கூறினேன்.

காணி, நகை விவகாரம் ஒருமாதிரி ஒப்பேறினாலும் கலியாணத்தை ஆடம்பரமாக்கி அதன் பெரும் பங்கை மாப்பிள்ளை வீட்டார் எம் தலையில் கட்டிய போது அப்பா தவறிய போதுகூட கடன் வாங்காத அம்மா வட்டிக்கு பணம் வாங்கினா.

அக்கா கலியாணமாகி ஒருவருடத்தின் பின்பே எனக்கு வேலை கிடைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டுச் செலவுக்கு மட்டும் கொஞ்சப் பணம் அனுப்ப முடிந்தது.

அக்காவும் அத்தானும் பட்டதாரிகளாக இருந்தபோதும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் ஆசிரியநியமனம் கிடைக்க ஓரிரண்டு ஆண்டுகள் செல்லும் என்றார்கள்.அக்கா ருயூசன் கொடுத்து உழைத்தா அது குடும்பம் நடத்த எந்த மூலைக்குப் போதும். அத்தான் வீட்டில் இவர்கள் வேண்டா விருந்தாளி போலத்தான். இந்தக் கசப்பை அத்தான் எங்கள் மீது வன்மமாக ஆக்கிக் கொண்டாரோ என்னமோ..? வீடுகட்ட என்னைப் பணம் அனுப்புமாறு நச்சரிக்கத் தொடங்கினார்.

எனக்கு வேலை கிடைத்தவுடனே எனது அறை வாடகை சாப்பாட்டு காசு போக சுலையாகப் பணம் அனுப்பத்தொடங்கினேன். நான் செய்த பெரிய பிழை அம்மாவுக்கு அக்காவுக்கு எனப் பணத்தைப் பிரித்து அனுப்பாது அத்தானது பெயருக்கே இருவருக்குமான பணத்தை அனுப்பிவைத்ததுதான். அதற்கு காரணம் இல்லாமலில்லை.யாழ்ப்பாண ரவுனுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்ததது. அம்மாவாலோ பதினாறு வயதே ஆன தங்கச்சியாலோ கோண்டாவிலில் இருந்து நகருக்கு வருவது கடினமென்று எண்ணிச் செய்தது பிழையாகிப் போனது.

அதனால் பணவிவகாரம் முழுவதும் அத்தானாலேயே கையாளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சண்டை உக்கிரம் அடைந்த நேரம் .எல்லோரும் இடம் பெயர்ந்துகொண்டிருந்தனர் ,இந்த நிலையில் வீடு கட்டுமாறு அத்தானை வற்புறுத்த முடியவில்லை.

இன்றும் எனக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கிறது.

1987 …..மார்ச் 8ஆம் திகதி

இந்தியாவில் இருந்து ஒரு போன் வந்தது

யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் தொலைபேசியை எடுத்தேன்

மறுமுனையில் அத்தான்.இவர் எப்பொழுது இந்தியா வந்தார்.ஒரு பக்கம் ஆச்சரியம் . மறுபக்கம்…சொல்லமுடியாத ஓர் உணர்வு,,,

“சங்கர் …யாழ்ப்பாணத்தில் பிரச்சினை நல்லா கூடிக்கொண்டு வருகுது. அதால நாங்கள் போட்டில இந்தியாவுக்கு வந்திட்டம்”.

மாமியும் ..சுமியும்..எங்களோட இந்தியாவுக்கு வந்திட்டினம் .”

அத்தான் மேலும் பலதையும் கதைக்கிறார். ஆனால் எனது மனம் அம்மா

ஒரு கிழமைக்கு முன் எழுதிய கடிதத்தினையே சுற்றுகிறது..

“தம்பி..நான் உன்னை குழப்பிரனெண்டு நினைக்காத. உன்ற அத்தானிண்ட நடவடிக்கயள் எனக்கு பிடிக்கேல்ல .அவர் எங்கட குடும்ப விசயங்களில் அதிகமா தலையிடுகிறார். அப்பா இறந்தபோது எல்லா சொந்தமும் கைகழுவிட்டு போன போது நான் கலங்காம இந்த குடும்பத்த சரியா வழிநடத்தி இருக்கிறன் எண்டு நம்பிறன். ஆனா இப்ப என்னால சுயமா எதையும் முடிவு செய்ய அத்தான் விடுகிறாரில்ல. இனி எங்களுக்கு அனுப்புகிற காச தனியா அனுப்ப வழி செய்…”

அத்தானின் கதையில் இருந்து ஒரு விடயம் மட்டும் மிகத்தெளிவாகத்தெரிகிறது,

அவர்கள் இந்தியாவில் இருக்கும் காலம் முழுவதும் குடும்பத்துக்கான அனைத்துச் செலவையும் நானே ஏற்றுக்கொள்ள வேண்டும் ….

அத்தான் போனை அம்மாவிடம் கொடுக்கிறார்.

“தம்பி எனக்கு இந்தியாவுக்கு வர தொடுகிலும் விருப்பமில்லை.ஊரோட ஒத்ததுதானே.விருப்பமெண்டா உன்ற அத்தானையும் அக்காவையும் மட்டும் இந்தியாவுக்கு போகச்சொன்னனான். அவர்தான் எங்களையும் வற்புறுத்திக் கூட்டி வந்துவிட்டார்.” அவவின் குரல் என்றிமில்லாதவாறு நிதான மற்று படபடக்கிற்து. கோபத்தின் தனல் அதில் மிகுதியாகத் தொனிக்கிறது.

அம்மா மிகவும் பொறுமைசாலி. தன்னைப் புறக்கணிக்கும் உறவுகளைக் கூட எடுத்தெறியும் பழக்கம் இல்லாதவ.

எந்த உறவாக இருந்தாலும் அவசரப்பட்டு கொட்டும் வார்த்தைகளால் முறிந்துவிடும்,அவ்வாறு யாரையும் முறிக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவ.

அப்படிபட்டவதான் இப்படிக் குமுறுகிறா…அதுவும் அத்தானின் முன்னிலையிலேயே….சுதந்திரம் பறிக்கப்பட்ட பறவை செட்டைகளை அடித்துக்கொண்டு கடைசியாக ஓலமிடுமே…. அந்த ஓலம் போலவே எனக்கு அவவின் குரல் தொனிக்கிறது.எமது குடும்பத்தில் இயக்கத்தொடர்புகள் எதுவும் இல்லை .இதனால்அத்தான் அக்காகூட அவசரமாய் இந்தியா வர தேவையில்லை என எனக்குத் தோன்றுகிறது.

இந்தச் சிக்கலில் இருந்து எப்படி அம்மாவையும் சுமியையும் மீட்பது….

என்னிடமிருந்து பணம் பெறுவதற்கு ஒரு கேடயமாகவே…அத்தான் அம்மாவையும் சுமியையும் பயன் படுத்தினார் என்பது பின்வந்த காலத்தில் அவரது செயல்களாலும் அம்மாதனியாக இருக்கும்போது பெசியவற்றாலும் எனக்கு புரிகிறது.

நான்கு வருடங்கள் இப்படியே தொடர்கிறது.சுமியின் படிப்புச் செலவும் அக்காவிற்கு குழந்தை கிடைக்கவே அந்தச் செலவும் மேலதிகமாகச் சேர்ந்து கொள்கிறது. நான் பகுதி நேர வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறேன், 1990களில் எற்பட்ட சமாதானநிலையின் போது அம்மாவையும் சுமியையுமாது ஊருக்கு அனுப்பிவைக்குமாறு அத்தானிட்ம் கேட்கிறேன். ஆனால் அவளின் படிப்பைக் காரணம் காட்டி அத்தான் மறுத்துவிடுகிறார். ஆறுமாதங்களில் சமாதான ஒப்பத்தம் முறிந்து ஈழப்போர் வலுவடையவே அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் அத்தான் கனடாவுக்கோ அல்லது அவுஸ்ரேலியாவுக்கோ ஏயென்சியூடாக போவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்படி ஒருமுறை அவுஸ்ரேலியாவுக்குப் அழைத்துச்செல்ல்வதாக ஒரு ஏயென்சியை நம்பி குடும்பத்துடன் வெளிக்கிட்டு தாய்லாந்துக்கு போனார், ஆனால் ஏய்ன்சிக்காரனிடம் முப்பது இலட்டசம் இந்திய ரூபாவையும் தாய்லாந்தில் இரண்டு மூன்று மாதங்கள் தங்கியதனால் மேலும் மூன்று இலட்சத்தையும் இழந்ததுதான் மிச்சம். இந்தச் செலவும் என் தலையிலேயே விடிந்தது. நான் தெரியாத இடத்தில் அம்பிட்டு கொண்டார்கள் என்பதால் கடன் வாங்கியே இந்தப் பணத்தை வழங்கியிருந்தேன், உண்மையில் நான் அவர்களுக்கு பணம் அனுப்பிக் களைத்திருந்தேன்.

அந்தநேரத்தில் என்னோடு ரெஸ்ரோன்றில் வேலைசெய்த கமலநாதனின் தங்கை குமுதாவுக்கும் எனக்குமான நட்பு காதலாக மலர்ந்தது.எங்கள் உறவு மிக நெருக்கமானதாக மாறிய போது கமலநாதன் தன் தங்கையை கலியாணம் செய்யுமாறு அவசரப்படுத்தினான்… வற்புறுத்தினான். . . அவன் பக்கம் முழு நியாயமும் இருந்தது.

எனக்கும் 34 வயதாகி இருந்தது. பதிநான்கு வருடம் தொடர்ச்சியாக உழைத்து என் குடும்பத்துக்கு மட்டுமே வழங்கி வந்திருக்கிறேன்,எனக்கென்று ஒருசதம் கூடச் சேர்த்து வைக்கவில்லை மாறாகக் கடன் மட்டுமே இருந்தது.

காசு எதுவும் இல்லாத நிலையில் கலியாணம் பற்றி நினைக்கத் தயக்கமாக இருந்தது. இந்தியாவில் அம்மா தங்கச்சி அக்கா குடும்பம் என்னை நம்பி இருக்கிறது என்ற நினைப்பு வேறு என்னை வாட்டியது. ஆனாலும்

கடைசியில் குமுதாவின் காதலும் கமலநாதனின் வற்புறுத்தலும் சேர்ந்து கலியாணத்துக்கு என்னை ஒப்புக்கொள்ள வைத்தன.எனது கலியாணத்தைப் பற்றி எனது குடும்பத்துக்குத் தெரிவித்தபோது அத்தான் தாம் தூம் என்று குதித்தார்

“நீ.எங்களை நடுத்தெருவில விட்டிட்டு உன்ற சுகத்தப் பாக்கிறாய். உனக்கு கலியாணம் செய்யாத தங்கச்சி ஒண்டு இருக்குது எண்டதப் பற்றி அக்கறையே இல்லை”.

நீர் நீ ஆனது…அத்தானது குரல் கோபத்தால் கரகரத்தது.

நான் மௌனமாக்கக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“சுமியின் கலியாணத்துக்குப் பிறகு நல்ல இடத்தில நல்ல சீதனத்தோட உனக்கு சம்பந்தம் பேசி முடிப்பம் எண்டு இருந்தன் “

“இல்ல அத்தான் பொம்பிள வீட்டார் அவசரப்படுத்தினம்”

நான் எனது நிலையை விபரிக்க முயன்றேன்.

“அவை அவசரப்பட்டால் வேற இடத்தில கலியாணத்தைப் பேசட்டுமன்.”

“நானும் குமுதாவும் காதலிக்கிறம்.”

“நல்லா உழைக்கிறவனைக் கண்டால் வளைச்சுப்போட வந்திடுவாளவ.”

அத்தான் இதோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பறுவாயில்லை. சொல்லக் கூசும் வார்த்தைகளால் முகமறியாத குமுதாவையும் அவள் குடும்ப்பத்தையும் இழிவுபடுத்தி வன்மத்துடன் ஏதோதோ ஏசினார் . அவரது கதையில் இருந்த குத்தலும் நக்கலும் என்னை ஆத்திரமூட்டுகின்றன..

அவரது தேவைகளுக்கு எல்லாம் பணம் தரும் எ. டி.எம் மெசினாக என்னை பயன்படுத்தியவர் அன்று அந்த மெசின் பறிபோவதைக்கண்டு போறுக்காத குமுறல் வார்த்தைகளாகி என்னைக் கொதிப்படையச் செய்தன, நான் அப்படிச் சொல்லி இருக்கச்க்கூடாதுதான் ஆத்திரம் எனது கண்களை மறைத்துவிட்டது.

“நீங்கள் ஆம்பிளையாக உங்கட குடும்பத்தைஉழைச்சு காப்பாத்த மாட்டீங்கள். கலியாணம் செய்த காலம் தொடக்கம் என்ற உழைப்பில வாழுறியல் .இன்னும் எத்தனை காலம் நான் உங்களுக்கே உழைச்சுக்கொண்டு இருக்கிறது.”

எனது மனதில் புகைந்துகொண்டிருந்த அக்கினி வார்த்தையாகி அத்தானின்

இயலாமையை சுட்டுவிட்டது.

“மாமியையும் சுமியையும் என்ற குடும்பமத்தில ஒராக்களா வைச்சு இண்டைக்கு மட்டும் நான் போற இடமெல்லாம் கொண்டு திரிஞ்சு காப்பாத்திறன். அதுக்கு நீ நல்ல கைமாறு செய்திட்டாய் “என்று அத்தான் கத்தினார்.

“இண்டையோட என்ற குடும்பத்துக்கும் உனக்கும் உள்ள சம்பந்தம் முடியுது, உன்ற அக்கா மட்டுமல்ல மாமியும் சுமியும் கூட உன்னோட பேசமாட்டினம். அப்பிடி மீறிப் பேசினால் அவையிண்ட உறவையும் நான் முறிச்சுக் கொள்ளுவன்.”

என வெட்டொன்று துண்டென்று எனச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அதற்கு பின் எத்தனையோ வகையில் நான் அம்மா சுமியோடாவது தொடர்பு கொள்ள முனைந்து தோற்றுப்போனதுதான் மிச்சம்.

மீண்டும் ரெலிபோன் அடிக்கிறது.

குமார் தான்.

அவனுக்கு எங்கள் குடும்பப் பிரச்சினை முழுவதும் தெரிந்திருந்தது. இப்பொழுதும் சுமி என்னோடு தொடர்பு கொண்டு அம்மாவின் விடயத்தை சொல்லுமாறு கேட்டதாலேயே அவன் கடும் முயற்சியெடுத்து என்னிடம் பேசி இருக்கிறான்.

அத்தானுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை முறிந்து இரண்டு மூன்று மாதங்களின் பின் அத்தானின் நெருங்கிய ஒரு உறவினரிடம் கடன் பெற்று இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அக்கா குடும்பத்துடன் அம்மா சுமியும் போய்விட்டார்கள் என நான் முன்பே அறிந்திருந்தேன். அவர்கள் அங்கு நல்லாக இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேற எந்த விபரங்களும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.அவர்கள் நல்லாக இருப்பது எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. என்னுடைய தொழிலிலும் எனது குடும்ப வாழ்விலும் மூழ்கி அதன் எற்ற இறக்கங்களில் என்னைத்தொலைத்திருந்தேன்.. .. அம்மா, சுமி பற்றி அறிய வேண்டும் என்ற ஆசையும் எதிர்பாப்பும் அடிமனதில் இருந்தாலும் அதற்காக நான் அதிகம் முயற்சி செய்யவில்லை . அவர்களுக்கு எத்தனையோ செய்திருக்கிறேன் . அத்தான் கதைக்காவிட்டால் பறுவாயில்லை. . அம்மா ,சுமியாவது முயற்சி செய்து என்னோடு கதைத்திருக்கலாமே என்று சிலசமயம் பொறுமியதும் உண்டு.

அவுஸ்ரேலியாவுக்கு சென்ற போதும் ஒரு வருடமாக அத்தானுக்கோ அக்காவுக்கோ சரியாக வேலை கிடைக்கவில்லை- இந்தியாவில் கொம்பூற்ற சயன்சில் முதுநிலை முடித்த சுமிக்கு நல்ல வேலை கிடைக்கவே அவளின் உழைப்பிலேயே ஒருவருடத்துக்கு மேல் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அத்தானுக்கு வேலை கிடைத்தவுடன் கூட அவுஸ்ரேலியாவுக்கு வர ஏற்பட்ட கடனை சுமியே உழைத்து அடைத்திருக்கிறாள்..

உழைப்பிலேயே தன்னை மூழ்கடித்த சுமிக்கு நல்ல இடத்தில் கலியாணம் செய்து வைக்கக் கூட அத்தான் முயற்சி செய்யவில்லை . நாற்பது வயதில் அவள் தனியேலே ரோசி என்ற அவுஸ்ரேலிய குடியுக்ப்ரிமை பெற்ற இத்தாலியரை மணம் முடித்திருக்கிறாள். அவ்வாழ்க்கையும் சிறிது காலத்தில் முறிந்துவிட இப்பொழுது நான்கு வயதில் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்கிறாள் சுமி.. அம்மாவையும் அவளே கடைசிவரை வைத்துப் பாத்திருக்கிறாள்.

இந்தச் செய்திகளை யெல்லாம் குமார் கூறி இப்பொழுதுதான் தெரிந்து கொள்கிறேன்.

“சுமியோ அம்மாவோ ஒருபோதும் உன்னை அத்தான் போல வெறுக்கவில்லை சங்கர். அம்மா வாழ்நாள் முழுவதும் உன் நினைவாகவே இருந்தா “

குமார் கூறிய போது எனது மனம் விம்மித்தணிகிறது. மனதில் இதுவரை காவித்திரிந்த பெருஞ் சுமை விலகியதாக ஓர் உணர்வு எற்படுகிறது.

“சுமியாவது என்னோட கதைக்க முயற்சி செய்திருக்கலாமே”.

மிகுந்த ஆதங்கத்திலும் தாங்கமுடியாத வேதனையிலும் எனது குரல் தழுதழுக்கிறது.

எனது மனநிலையைக் குமார் புரிந்துகொண்டிருக்க வேண்டும் .

“அம்மா, அத்தானுக்கு கொடுத்த சத்தியத்தை மீற விரும்பவில்லை. அதோட சத்தியத்தை மீறி கதைக்க வெளிக்கிட்டால் கௌசி அக்காவிண்ட வாழ்க்கையிலும் குழப்பம் வரும் எண்டு பயந்தா. உன்ற அத்தான் சரியான் வன்மம் பிடிச்ச ஆளாத்தான் இப்பவும் இருக்கிறார்,”

அம்மாபக்க நியாயம் சரியானதாகவே எனக்கும் படுகிறது,-நானும் என்பக்கமாக கட்டாயம் விடா முயற்சி செய்திருந்தால் அம்மா சாகமுதல் ஒருதடவையாவது கதைத்திருக்கலாம் .காலங்கடந்த ஞானத்தால் எந்தப் பயனும் இல்லை.,இந்தக் குற்ற உணர்வில் இருந்து நான் சாகும் வரை விடுபடப்போவதில்லை என்ற உண்மை உறைத்த போது வேதனையால் மனம் சோர்ந்து போகிறது.

சுமி என்னோட கதைப்பாளா..? குமாரிடம் கேட்கிறேன்.

“உடன் கதைப்பாவா எண்டு தெரியேல்ல..அனா எதிர்காலத்தில கட்டாயம் கதைப்பா எண்டு நம்பிறன்.”

“அப்படி அவள் கதைச்சால் எனக்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும் கட்டாயமாக அவளைப் போன் எடுக்கசொல்லும் குமார்.” என்கிறேன்.

குமாரோடு கதைத்து மூன்று கிழமை ஆகிவிட்டது, ஒவ்வொரு நாளும் போன் அடிக்கும்போது சுமியாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தோடு நாட்கள் நகருகின்றன,

அம்மாவின் அந்தியேட்டி அன்று சமைத்து அம்மாவின் படத்தின் முன் வைத்து மானசீகமாக வணங்கியபோது அம்மாவுக்கான கடனைச் செய்த திருப்தி ஏற்படுகிறது.

அன்று இரவு நான் எதிர்பார்த்திருந்த சுமியின் போனும் வருகிறது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *