கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 10,031 
 

கிருஸ்சை சந்திப்பதற்காக கொட்டக்காட்டுப் பக்கமாக சென்றபோது வீதியில் ஒரே சனப்புழக்கமாக இருந்தது. வசந்தி உட்பட சிறுவர் சிறுமிகள் நீர் நிரப்பிய வாளிகளுடன், கைகளில் சிறிய பிளாஸ்டிக் குவளைகளை வைத்தவாறு…பரபரப்புடன் காத்திருந்தார்கள். பொம்பிள்ளைப் பிள்ளைகளின் சிரிப்பும், பேச்சும், நளின அசைவுகளும் எப்பவும் ரசிக்ககூடியனவாகவே இருக்கின்றன.காரணம் மாறுபட்ட தன்மைகள் என்பதாலோ?

இயற்கையை ஆராய்வதை விட்டு பரபரப்புகளை பார்த்தேன்.நேற்று ஸ்பீக்கர் காரில் சோதி ஒலிப்பரப்பிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது.

அவனுடைய அடைத்த குரல் எனக்கு எப்பவும் பிடிக்கும்.

“நாளை,கிழக்கராலி சரஸ்வதி வாசிகசாலை முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி,பெருமையுடன் நாடாத்தும் மரதன் ஓட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் .வாசிகசாலையில் ஆரம்பிக்கும் மரதன் ஓட்டம்..பிரதான வீதியான தெற்கராலி பஸ் வீதி வழியாக வந்து, வடக்கராலிப் பக்கமாகவிருக்கிற காரைநகர் வீதியில் …நீள ஓடி,பாலத்தடியில் திரும்பி மீளவும் வாசிகசாலையை அடையும். “

பள்ளிக்கூடத்திலேயே, சரஸ்வதிப்பூசையில் சினிமாப்பாட்டு பாடுறவன் இவன் ஒருத்தனே.“கற்பகவள்ளியின் பொற்பதங்கள் பிடித்தே நற்கதியடைவாய் “என்ற வீரமணி ஐயரின் பாடலை நல்லாவே பாடுவான். தமிழில் பண்டிதரான வள்ளுவர் மாஸ்ரர் கூட எதிர்ப்பு தெரிப்பதில்லை .

பாடவைத்தவர் விஜயம் ரீச்சரே. அவர் புதிதாக வந்த பிறகே சில மாற்றங்கள் ஏற்பட்டன.சங்கீதம் பெரிதாக படிக்காவிட்டாலும் அவர் கலாரசிகராவிருந்தார். ஒரு தாய்மைக்குரிய அன்புடன் பழகியதில்..அவருடைய மாணவர் என்று சொல்லுறளவுக்கு சிறிய கூட்டம் இருந்தது. கிருஸ்,சின்னப்பு,சோதி போன்றவர்கள்..சிலர்.
இன்று, நாமெல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிய பிறகும், அங்கே ஏதும் விசேசம் என்றால் சோதியை கூப்பிடுகிறார்கள். வெளியவிருக்கிற வாசிகசாலைகளும் அவனையே அழைக்கிறார்கள்.

இந்த ‘அராலி’ குக்கிராமம் என்றில்லை;.அதே சமயம் பெரியதும் இல்லை. கடற்கரைப் பக்கமாகவிருக்கிற…எல்லாசாதி மக்களையும் கொண்ட நடுத்தர கிராமம். நிறைய நெல்வயல்களையும், குளங்களையும் கொண்டது. வழுக்கியாறு என்கிற செயற்கையாக வெட்டப்பட்ட வாய்க்காலை வடக்குப் பக்க எல்லையாக கொண்டுள்ளது. அவ்வாறு,கடலோடு கலக்கிற பகுதியில் பல மதகுக்தவுகளைக் கொண்ட சிறிய வட்ட நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது.வீதி , மேலாகப் போவதக்காக பெரிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அப்பாலத்தைக் கடந்தே அராலிக்குள் வர முடியும்.

யாழப்பாணத்திலிருந்து காரைநகருக்கு போகிற குறும் பாதை அது.வழுக்கியாறு ‘ நல்ல முறையில் காலனியாட்சிக் காலங்களில் இருந்ததாகத் தான் சொல்கிறார்கள்.’அதில், ஓடங்களில் பயணித்தாகவும் அறியப்படுகிறது.சங்கானைப் பிரிவில் ,இதற்கருகில் இருக்கும் ஒடக்கரைக் கள்ளுத் தவறணை பேர் போனது.

இன்றிருக்கும் ஆற்றின் நிலை … பரிதாபகரமானது. தூர்ந்தும் தூராமலும்,கட்டுக்கள் சிதைந்தும் …இருந்த போதிலும் குறிப்பிட்ட தூரத்தில் மதகுக் கதவுகள் திறந்து மூடக்கூடியதாக நல்ல நிலையிலே இருக்கின்றன.’ போதியளவு நீர் தேக்காத படியால் குறைவான வயல்களே இன்று அந்நீரை பயன்படுத்துகின்றன.சரியாகப் பாராமறிக்கப்படுமாயின் ‘…சங்கானை, அராலிப் பகுதிகள் தன்னிறைவானவையாக திகழும்‘ என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், தமிழ்ப் பகுதியில் இருப்பதால் தொடர்ந்தும் பாராமுகமாகப் புறக்கணிக்கும் ஆட்சியாளர்கள்..என்று தான் மாறுவார்களோ? பெருமூச்சு எறிந்தேன்.

பாலத்தைக் கடக்கிற வீதி இடப்பக்கமாக பிரிந்து தெற்கு,கிழக்கராலிப் பக்கமாக ஒரு கிளையும்; வடக்கராலிப் பக்கமாக ….நீளவும் போகிறது. நிறைய நெல்வயல்கள் நிலப்பரப்புக்களை அங்காங்கே தனிமைப்படுத்தி பிரித்து விட்டதால், அவ்வீதிகளை மைய்யமாகக் கொண்டதாக மூன்று அராலிகள் ஏற்பட்டு விட்டிருக்கின்றன.

கடற்கரைப் பக்கமாக நீர் பெருகி நிற்பதால் உப்புச் செறிவுள்ள பயன்படுத்த முடியாத கணிசமான நிலப்பரப்புகளும் இருக்கின்றன.அந்நிலத்தில் உப்புத்தாவரப் புதர்களையும்,சிப்பி தோண்டிய மண் குவியல்களையும்,இந்து… கிருஸ்துவ சுடலைகளையும் காணலாம்.அராலியில் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் பனைமரத் தோப்புக்களை காணமுடிகிறது .பனை வடலிகளை அழித்தே மக்கள் குடியிருப்புக்களை கட்டியிருப்பார்கள் போல தோன்றுகிறது.தெற்கராலி வீதி,வளைவாக வந்து மேற்கராலி, கொட்டைக்காட்டை உள்ளடக்கியுள்ளது] வட்டுக்கோட்டையில் ..மறு வீதியை மீளவும் சந்திக்கிறது.அராலிக்காரர்கள் மரதன்வைப்பதென்றால் இந்த அரைவட்ட வீதி வழியே வைப்பார்கள்.

மற்றவர்கள் வைக்க பல வழிகள் இருந்தன.

கிருஸ்ணன் எனக்கு மச்சான் முறையானவன். என் அக்காவை அவனுடைய அண்ணரே முடித்திருந்தார். அவன் கண்ணில் படவேயில்லை.விதானையாரின் மகன் -செல்வனே எதிர்ப்பட்டான். சைக்கிளை உருட்டிக்கொண்டு அவனருகில் போனேன்.

“ சரஸ்வதி வாசிகசாலை நடாத்தும் மரதன் ஓட்டம் வந்து கொண்டிருக்கிறது.வீதியில் நிற்பவர்கள் ஒதுங்கி நின்று ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் .” சோதியின் குரல் ஸ்பீக்கரில்..தெளிவாக ஒலிக்க, ஏ.40 – கார் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது .வடக்கராலி செல்லையா காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.அது அவருடைய கார் தான்.‘நல்ல மனுசர்:விளையாட்டுப்போட்டி எங்கே வைத்தாலும்,பெற்றொல் காசை மட்டும் வாங்கிக்கொண்டு ஓட்டும் பிறவி.’அவர்க்கு பிள்ளைகள் இல்லை.”எவரும் படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டிலும் சிறந்து விழங்கவேண்டும்“ என்று சைக்கிள் கடையிலிருந்து சதா சொல்கிறவர்.அராலிப்பெடியள் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று கனவு …காண்கிறவர். அவருடைய கார்,அதனால் தான் நேற்றெல்லாம் தாராளமாக ஓடித்திருந்திருக்கிறது.

எனக்கும், ஓட்டங்களைப் பற்றி கொஞ்சம் தெரியும். பள்ளிக்கூடத்தில்…,படிக்கையில் ‘கட்டையன்களை நீண்ட ஓட்டத்தில் விலத்த முடியாது‘ என்று முதுகில் தட்டு வாங்கியிருக்கிறேன். குறுந்தூர ஓட்டத்தில் நெடுவலான குமாரை என்னால் எவ்வளவு ஓடியும் விலத்த முடியவில்லை.பள்ளிக்கூட ஓட்டங்களை விட மரதன் ஆக நீண்ட ஓட்டம். சீராக ஓட வேண்டும். ‘சக்தியைக் காட்டுகிறேன்‘ என்பதெல்லாம் சரிப்பட்டு வராது. மனவலிமை முக்கியமானது. ஓடத்தொடங்கிற போதே,வயிற்றில் கடபுடா சத்தங்களெல்லாம் வரும்.முடியுமா? என்று மலைப்பாகவிருக்கும்! ஓடத் தயாராக நிற்கும்’ வட்டுக்களை‘பார்த்துத்தான் மனத்தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு தன் பாட்டிலே..ஓடுவோம் என்பது வேறு விசயம். முடிவுக்கோட்டுக்கு 200-100மீற்றர் இருக்கிற போதே,ஆற்றலைக் காட்ட வேண்டும்.

ஆனால்,பலருக்கு பொதுவாக வேக ஓட்டம் கடைசிவரை சரிவராது.வேக ஓட்டக்காரர்களுக்கு மரதன் ஒத்துவருவதில்லை .

குமார்,எத்தனையோ தடவைகள் யாற்றையும் சைக்கிள்களில் ஏறி தான் மரதனை முடித்திருக்கிறான். வருகிற வீரர்களை பார்க்க சிறிது ஆவலாகவிருந்தது .

முதலாவதாக ரஞ்சன் தெரிந்தான். என்னோடு படித்தவன், குண்டடித்ததால் கீழ்வகுப்புக் காரர்களுடன் சேர்ந்து படிக்கிறவன் .

கிராமப்புறங்களில்,சில பெற்றோர் பிறந்தவுடனே பிறப்புச்சாட்சிப் பத்திரம் பதியாது.ஒரு வருசம் கழிச்சு பெறுகிறது பொதுவாக இருக்கிறது .

சில சலுகைகள் கிடைக்கலாம் என்பதால் இருக்கலாம் . ரஞ்சனுடையதும் அப்படி பதியப்பட்டது.அதனால் அவனுக்கு சிறிது யோகம் அடித்தது .

நான்,குமார்..எல்லாம் விலகிய பிறகு,நடந்த இல்ல வருடாந்த விளையாட்டுப் போட்டியில் எல்லா விளையாட்டிலும் அவனே கதாநாயகனாக விளங்கினான்.பள்ளிமரதனிலும் முதலாவதாக வந்தான்.அவனிடமும் திறமை இருப்பதையும் மறக்க முடியாது தான்.இரண்டாவதாக சேகர் வந்து கொண்டிருந்தான்.இவன் கீழ் வகுப்பு மாணவன்.தவிர,அயலிலுள்ள பாரதி வாசிகசாலைக் கால்பந்தாட்டக் குழுவில்’மேல் பகுதியில் நன்றாக விளையாடுகிறவன் .

மூன்றாவதாக வந்தவனைத் தான்..நம்ப முடியவில்லை

திலகன்! விஜயம் ரீச்சரின் மற்ற பிள்ளைகளைப் போலவே இவனும் புத்தகப் பூச்சி.இவன் அவர்களில் மூன்றாவது ஆள் விளையாட்டுக்காற்றே படாதவர்கள்..அராலியிலே கல்கி,விகடன்,குமுதம் வசிக்கிறவர்கள் என்றால் இவர்கள் தான்.

கிராமத்தவர்கள்’, “ரீச்சர்ர பொடி..”’என்று தனி மரியாதை குடுத்து பிழங்குவது இவனுக்கு பிடிப்பதில்லை . வகுப்பில் மற்ற பெடியள்களையும் இவனுக்கு..பிடித்திருந்தது.அராலி கடற்கிராமமாக இருந்தபோதும் கடலுக்கு போறது,மீன் பிடிப்பது எல்லாம் இவனுக்கு நிறைவேறாத கனவுகளாகவே இருந்தன.

ஒன்றாக படிக்கிற போது,’இவனின் அப்பா திடிரென மாரடைப்பால் இறந்தது’பெரிய விசயமாகவிருந்தது கிருஸ்னண்,சின்னப்பு போன்ற மாணவர்கள் செத்தவீட்டை முன்னின்று நடத்தினார்கள்.அந்த செத்தவீடு..எங்களையயும் பாதித்தது . வீட்டிலே ,கவலைப்பட்டுக் கொண்டிருந்த எங்கப்பா சரியாய் அடுத்தக் கிழமையே மண்டையைப் போட்டு விட்டார். இருவரின் சாவிற்கும் மோசமான குடி தான் காரணம்.அவர் ஒரு காலத்திலே குடித்திருந்தார்;எங்கப்பா வேலை நிமித்தம் நெடுக குடிக்கிறவர் .

அதுவரையில் வாடலாகவிருந்த இவனை ஒரு பொருட்டாக எண்ணியிராத என்னுள்,’பார்க்கிற போது ஏதோ ஒரு பாசம் ஏற்படுவதை உணர்ந்தேன்.அந்த முறை,வந்த ஆடியமாவாசைக்கு கீரிமலைக்கு போனபோது,அவனையும் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனேன் ; தர்ப்பையும் போடவைத்தேன்.பிறகு,வேற வேற நகரத்துப் பள்ளிக்கூடங்களுக்கு..பிரிந்து விட்டோம்.சந்திப்பது,கதைப்பது எல்லாம் பெரிதாகவிருக்கவில்லை .

கனநாளைக்குப் பிறகு,சனி,ஞாயிறு தினங்களில் அவன் நமசிவாயம் மேசனோடு வேலைக்கு போவதாக கேள்விப்பட்டேன்.அராலிப்பெடியள் கைச்செலவை சமாளிக்க..இப்படி போறது வழக்கம்.சந்திரன் அவன்ர கூட்டாளி.’அவன் கூட்டிச் சென்றிருப்பான்’என்று பட்டது.

அந்த காசில் ஒரு பழைய சைக்கிளை வாங்கியிருந்தான்.எங்க வீட்டில்,ஜெயமண்ணை”சரிவர பிரேக் பிடிக்காத அதை அவன் வாங்கியிருக்க வேண்டாம்”கருத்து தெறிவித்தான்.ரீ£ச்சருக்கு எலலாரும் வளர்ந்த பிள்ளைகள்;படிப்பவர்கள்..என்றால் என்ன செய்வார்!

திலகனுடைய அப்பாவிற்கு சைக்கிள் விடத்தெரியாது.அதனால்,சிறுவயது முதலே அங்கே சைக்கிள் கிடையாது.அவனுடைய அண்ணன் நகரத்திலே இருக்கிற ஆச்சி வீட்டிலே இருந்து படிப்பவன்.அவனும் பழைய சைக்கிள்ளை வாங்கி பாவித்துக் கொண்டிருந்தான் .

திலகன் சைக்கிள் விட பழகியதே..லேட்டாகத் தான் .

ரீச்சர சம்பளம் வீட்டுச் செலவுகளை சமாளிக்கவே போதியதாகவிருக்கவில்லை.கிராமத்திலே இருந்த எல்லாக்கடைகளிலும்..அவருக்கு கடன் கொப்பிகள் இருந்தன.என்னோடு,திலகன் வாரசமயங்களில் பாலு,சங்கர்க் கடைக்காரர்கள்”தம்பி ஒருக்காய் அம்மாட்ட கணக்கை அடைக்க சொல்லு” என்பார்கள்.அப்ப அவனுடைய முகம் சுருங்குவதைப் பார்த்திருக்கிறேன்.எல்லா வீடுகளிலும்’வெளிப்படையாகத் தெறியாது நிலவுகிற இந்த வறுமை மோசமானது தான்.

அவன் சைக்கிள் விடுறதைப் பார்த்திருந்த குணத்தார் “என்ன லோகு,உன்ர கூட்டாளி சந்தி வராமல் எல்லாம் ஓடுகிறான் “ என்று பகிடியாக சொன்னார்.எங்க அண்ணை பயந்த மாதிரியே ஒரு நாள்..நடந்து விட்டது.

நவாலிப் பக்கமாக வேகமாக வந்த போது,சிறுமி ஒருத்தி குறுக்காலே ஓட..ஒருபக்கமாகவிருந்த உக்கிய கறுக்கு மட்ட வேலிக்குள் அவன் சைக்கிள்ளை இறக்கி விட்டிருந்தான். சைக்கிளுக்கு காயம் இல்லை.அவனுடைய கைவிரல் ஒன்றிலே உடைந்த கறுக்குச் சிதறல்கள் ஏறி விட்டிருந்தன சிறுமிட தகப்பன் வெளிய வந்து,அவனை வீட்டுக்குள் கூட்டிச் சென்று தேத்தண்ணியும் கொடுத்து,மெல்ல மெல்ல கறுக்குகளை எடுத்து விட்டார்.மருத்துவ அறிவு அவ்வளவில்லாத அவர் மருந்தையும் வைத்து கட்டி விட்டிருந்தார். அவனால் ஏலும் என்று சொல்லவே போக விட்டார்

அராலிப்பரியாரியிடம் வந்து அவன் காயத்தைக் காட்டிய போது,’‘மருந்து வைத்து கட்டியதால் இழை பிடித்தால் இரசாயன தாக்கங்கள் ஏதாவது ஏற்பட்டு பாதித்து விடலாம்,இனி முடியாது’என்று கூறி பிரித்து,அற்ககோலால் கழுவி,சரியான மருந்தை வைத்து கட்டி அனுப்பினார்.

அவனுடைய அந்த விரல் சொத்தியாகவே போய் விட்டது!

அவனுடைய நகரத்து பள்ளிக்கூடத்திலே சுந்தரம் மாஸ்டர் “ ஓடினால் உடம்பு வைக்கும்” என்று சொன்னதை நம்பி,சைக்கிளை அராலியிலே விட்டு விட்டு யாழ்ப்பாணத்திலிருக்கிற ஆச்சி வீட்டுக்கு 2- 1 நாள் கல்லுண்டாய் வீதி வழியால் ஓடிப்போய்யிருக்கிறான்.அந்த முயற்சி தான் இதிலேயும் ஓட வைத்திருக்க வேண்டும் .

ரஞ்சனும் சேகரும் வேக ஓட்டத்தில் ஒருத்தரை ஒருத்தர் விலத்தப் பார்ப்பதாக பட்டது.வசந்தி திலகன் மேல் தண்ணியை அள்ளி அள்ளி எத்தி “ஓடு..ஓடு “ என்று கத்தினாள். சிறுமிக்கூட்டமும் “ ஓடு அண்ணை..ஓடு அண்ணை “ என்று கத்தியது.அவன் அங்கே பழகிய முகம் .

பக்கத்திலே யாரும் சைக்கிளிலே வராமல் தனிய வந்து கொண்டிருந்த திலகனில் , அந்த ஆர்ப்பரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் .ரஞ்சனுக்கும்,சேகருக்கும் பக்கத்திலே ‘சைக்கிளை விட்டுக் கொண்டிருந்தவர்களின் அவசரப்புத்தி ‘இருவரின் ஓட்டத்தையும் கெடுத்து விட்டததாகப் பட்டது.

திலகன் கலங்கிய கண்களுடன் எங்களைப் பார்த்தான் .“ நீ அவனோட போவண்டா” என்றான் செல்வன் .

பிறகு..வாரவர்களுக்கும் சிறுமிகள் உற்சாகமாக தண்ணி எத்திக் கொண்டிருந்தார்கள்.வசந்தியிடமிருந்து ஒரு தண்ணிப் போத்தலை வாங்கிக் கொண்டு “பிறகு வாரன் என்று அண்ணையிடம் சொல்லு “ என்று விட்டு திலகனை நோக்கி சைக்கிள்ளை விட்டேன் .

அவன் தலையிலே ஊத்தியவாறு “விடாமல் ஓடு!சேகரை விலத்தி விடலாம் ” என்றேன்.சேகர், மூச்சாக ஓடியதால் வேகம் குறைந்து பின் தங்கிக் கொண்டிருந்தான் .

“இப்படியே சிலோ பண்ணாமல் வா “ கத்தினேன். அவனுக்கு வாய்யில் நுரை தள்ளியது .

“கொஞ்சம் இடைவெளி எடுத்தால் நல்லது,விடாதே ஓடு “ சைக்கிளையும் சீராக விட்டேன்.திலகன் ஒருவாறு சேகரை விலத்தி விட்டான் . ரஞ்சனை அணுகிக்கொண்டிருந்தோம்.எனக்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது.முன்னால் காரில் போய்க் கொண்டிருந்த சோதி “ரீச்சர்ர பொடி களைக்காமல் வாரான்” என்று பக்கத்திலிருந்தவனுடன் மெதுவாக கதைப்பது ஸ்பீக்கரில் கேட்டது .

“மாபெரும் மரதன் ஓட்டம் வந்து கொண்டிருக்கிறது; வீதியில் நிற்பவர்கள் ஒதுங்கி நின்று..ஒத்துழைக்க வேண்டுகிறோம் ”என்று ஒலிப்பரப்புவதுடன், வேணுமென்றே பக்கத்திலிருந்தவனுடன் இடையிடையே கதைத்தும் வந்தான் .

“காரிலே போறவர்களும் பார்த்து விட்டார்கள்.விடாதே ஓடு!” விரட்டினேன்.ரஞ்சன் விடுவதாக இல்லை.கிட்ட போவது..பின்னால் வருவது..ஆக ஓடிக் கொண்டிருந்தோம்.நானும் திலகனை சோர விடாமல்’ஏதோதோ சொல்லிக் கொண்டே வந்தேன் .

சேர்ச்சடிப்பக்கம் வர,ரஞ்சனுக்கு உதவியாய் வந்தவன் ஏனோ? கழன்று விட்டான்.அது அவனை மனச்சோர்வுக்குள் தள்ளி விட்டதாகப் பட்டது .அவனுடைய பிடி தளர்ந்து, ஓட்டம் குறைந்து விட்டிருந்தது .

“.திலகன் விடாதே! இப்ப,உன்னால் பிடிக்கலாம். ஓடு ஓடு “ மெதுவாக சொன்னேன்.ஆச்சரியப்படும் வகையில் ரஞ்சனை விலத்தி விட்டான் .

நாமெல்லாம் ஒன்றாய் படித்தவர்கள்,’ இவன் முதலாவதாக வரட்டுமே என்று விட்டுக் கொடுத்தானோ? பின் தங்கி ஓடிவந்து காண்டிருந்தான் திலகன் விரைவு ஓட்டக்காரன் இல்லை என்று எனக்குத் தெரியும்.எனவே,உள்ளுக்குள் சிறிது பயம் இருந்து கொண்டேயிருந்தது ‘

“ கொஞ்சம் கூடவாய் இடைவெளி எடுத்து விட்டாய் என்றால்,அவனால் உன்னை பிடிக்க முடியாது” விரைவு படுத்தினேன் .

கணிசமாய் இடைவெளி எடுத்த பிறகே,அப்பாடா! என்றிருந்தது. அவனுடைய வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் .

“ கொஞ்ச தூரம் தான்.. ஒரே மூச்சாக ஓடி முடி “ அவன் எப்படி ஓடுறேன் என்று தெறியாமல் ஓடிக் கொண்டிருந்தான் .

இன்னமும் 500 – 600 மீற்றர் தூரமே இருந்தது. விரைவு ஓட்டத்தில் அவனை தள்ளி விட முயற்சித்தேன் .

“ ரீச்சர்ர பொடி அப்படியே வாரான்ரா “ சோதி வியப்புடன் கதைப்பது மெதுவாகக் கேட்டது.

“ உன்னுடைய ஓட்டம் பராவாயில்லை, பயப்படாமல் நீ வேகமாக ஓடலாமடா” என்றேன் .

“ 5 கி.மீ ஓட்டம் முடிவுக்கோட்டை அண்மித்துக்கொண்டிருக்கிறது, வீரர்களை உற்சாகமாக வரவேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” சோதியின் குரல் முழக்கத்துடன் ஒலிப்பரப்பாகியது

“ஞாயமான வித்தியாசத்திலே வந்திட்டே, நீ தான் முதல்வன்” என்றேன்.எனக்கு களைப்பாகவிருந்தது.

கார், மண் பாதையில் இறங்கியது . முடிவுக்கோட்டை தாண்டிய பிறகு திலகன் துவண்டு, எங்கேயோ போய் இருக்கப்போனான்.சைக்கிள் கடை ரமேஸ் ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தான் .

திலகனின் தோளைத் தட்டி “அவசரப்பட்டு இருந்திராதே! காலிலே சரணவாதம் பிடித்து விடும்” சிறிது தூரம் நடக்க வைத்தேன் .

2 -வதாக,ரஞ்சன் வந்தான்.அடுத்ததாக சேகர்..என ஓடியவர்களெல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள்.ரமேஸ் சிரிச்ச முகத்துடன் , எல்லோருக்கும் ஜுஸ் கொடுத்துக்கொண்டிருந்தான் .
திலகன்,கணேஸ் -குகன் இருந்த பனங்குற்றியை நோக்கி நடந்தான்.சைக்கிளை அவனுக்குப் பக்கத்திலே நிறுத்தி விட்டு

‘ நீர் கழிப்பதற்காக பனைமர மறைவை நாடி,வாசிகசாலைக்கு பின் புறமாக போனேன். ரவியும்,சிவாவும் நின்று ரகசியமாக குசுகுசுப்பதைக் கண்டேன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை.‘ என்ன கதைக்கிறார்கள்? ‘அறியும் ஆவல் ஏற்பட்டது.சத்தமில்லாது,கிட்டவாகவிருந்த பனை மறைவில் போய் நின்றேன்.“

“ரஞ்சனே வருவான் என்று முழு நம்பிக்கையோடு வாசிகசாலைக் கமிட்டி இருந்தது.இவன் வந்ததில் அவர்களுக்கு திருப்தி இல்லை .” சிவா .

“ எப்படியடா எதிர்பார்க்க முடியும் ? “ ரவி .

“ எங்கட பெடியள் வந்தால் 2 சிறிய குத்துவிளக்குகள் குடுக்கிறதாக இருந்தவயள்.இப்ப ஒன்றாக குறைத்து விட்டினம் “ சிவா .

“ இங்கேயும் அரசியலா ? “ ரவி .

“ எங்கட பெடியள்ளை ஊக்குவிக்க தானே இந்த போட்டியையே வைச்சவயள் .“ சிவா .

“ வேற சாதிப் பெடியள் பங்கு பற்றுறதை உள்ளூர விரும்பவில்லையா” வியப்புடன் ரவி .

“ இல்லை தான்.வெளிப்படையாய் சொல்ல முடியுமா ? திலகனை விட, மற்றவர்கள் எல்லாம் எங்கட பெடியள் தானே! “ சிவா.

‘ யார் தான் சரியானவர்கள் ? ,இவர்களை..பரவாய்யில்லை என்று தான் சொல்ல வேண்டும்.எல்லாச் சாதிகளையும் சுயநலம் பிடித்து ஆட்டுவதாகவே இருக்கின்றன ‘ஓட ‘என வாரவர்களை மறுக்காது தளர்வாக நின்றார்களே, அது பெருந்தன்மை தான்!

தெளிவானவர்களும் ,படித்தவர்களும் கணிசமாகிற போது ‘நேர்மையான அணுகுமுறைகளே இவர்கள் மத்தியிலும் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ‘என்பதை புரிந்து கொள்வார்கள்.எல்லாவற்றையும் விட.. திலகன் ‘ வெள்ளோட்டத்திலேயே முதலாவதாக வந்தது பெரிய பரிசாற்றே !

சத்தமில்லாது நழுவிகிறேன் .

– ஜூலை 2002

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *