கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 15,528 
 
 

என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது.

“சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன்.

“எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …”

“ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா என்ன நடந்தாலும் எனக்கது தெரியோணும். அம்மாக்கு என்னத்தை எண்டாலும் சொல்லலாமெண்ட துணிவு உனக்கிருக்கோணும்.”

சுமி தலையை ஆட்டினபடி என்னை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“ம்ம், ஓகே, புத்தகம் வாசிப்பமா குட்டி? பிள்ளையின்ரை சின்னக் காலாலை ஓடிப்போய் விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாடா.”

ரொபேட் மஞ்சின் ‘லுக் அற் மீ’ வாசித்து முடிந்ததும் பழையபடி அவள் கலகலப்பானாள். பிள்ளைகளின் சிறப்பே இதுதான். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்துது.

“குட் நைற் சுவீட்டி,” அவளின்ர நெத்தியில முத்தமிட்ட நான் அவளை வடிவாய்ப் போத்திவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினன்.

ஒருக்களித்துப் படுத்திருந்தபடி புத்தகத்தில் மூழ்கிப்போயிருந்தார் மோகன். பக்கத்திலபோய் நானும் படுத்துக்கொண்டன். புத்தகத்தை மூடினவர் அதைப் பக்கத்திலிருந்த மேசையில வைச்சார். ‘டான்ஸ் ஒஃப் அங்கர்’ எண்ட அந்தத் தலையங்கம் என்னைப் பாத்து விழித்தது.

“அவளோடை நான் அப்பிடிச் சத்தம் போட்டிருக்கக்கூடாது, என்ன? கவலையாயிருக்கப்பா’

“சும்மா, அவசரப்பட்டுக் கத்துறது, பிறகு கவலைப்படுகிறது, இதுதானே என்ரை யசோ.”

“என்ரை அம்மாக்கு நான் எல்லாத்தையும் சொன்னதில்லை. அதைப்போலையில்லாம அவள் எல்லாத்தையும் என்னோடை பகிரோணும். இப்பவிருந்தே அவள் அதைப் பழகோணுமெண்டு நான் நினைக்கிறன்…”

“சரியப்பா, சின்னப்பிள்ளைதானே, அதை அவள் மறந்திருக்கவும்கூடும். அதோடை அந்த ரீச்சர் பேசினது முழுசா அவளுக்கு விளங்கியிருந்தாத்தானே அது அவளைப் பாதிச்சிருந்திருக்கும், அம்மாக்குச் சொல்லோணுமெண்டு தோன்றியிருக்கும்…”

மோகன் என்ரை தலைய ஆதரவாகத் தடவி, என்னை மென்மையா முத்தமிட்டார். பிறகு அவற்ரை மூச்சுக்காற்றுச் சூடு என்னில படுமளவுக்குக் கிட்டவாவந்து என்ர மார்பை ஆசையோடை வருடினார்.

அவற்ரை கையை அவசரமாக நான் விலத்தினன். “இண்டைக்கு வேண்டாம், மோகன், பிளீஸ்,” சொன்ன நான் லைற்றை ஓவ் பண்ணினன்.

என்னை ஆரோ அமுக்குவது போலிருந்தது. என்ரை உடம்பு நடுங்கினது.

காற்றின் அசுர வேகத்தைத் தாங்கமாட்டாத மழை யன்னலிலை மோதிமோதி சர் சர் எண்டு ஓயாமல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்துது.

அப்பா எண்ட அந்த உறவை அசிங்கப்படுத்தின என்ரை அப்பா தன்ரை ஆணுறுப்பைச் சாரத்துக்குள்ளாலை நீவினபடி எனக்குள் கோரத்தாண்டவமாடினார்.

***

`புதிசா வீடு கட்டிக் குடிபுகுந்திருந்தம். என்ரை அறையை எப்பிடி அலங்கரிக்கிறது எண்டதில எனக்கு ஒரே பரபரப்பாக இருந்துது. கதிரையிலை ஏறிநிண்டுகொண்டு வகுப்பிலை நான் கீறியிருந்த வானவில் படமொண்டை பிரேம் ஒண்டுக்குள்ளை போட்டு சுவரிலை மாட்டிக்கொண்டிருந்தன்.

“சாமத்தியப்பட்டதோடை உன்ரை ரசனைகளும் அழகாயிட்டுது,” அப்பா பின்னாலைவந்து நிண்டு கட்டிப்பிடிச்சுக் கன்னத்திலை கொஞ்சினார். அவற்ரை மீசை மயிர் என்ரை முகத்தில கரகரத்தது. கையிலை நான் வைச்சிருந்த படம் சடாரென்று நிலத்திலை விழுந்துடைஞ்சுது. ‘என்ன சத்தமது’, எண்டு கேட்ட அம்மான்ரை குரலைக் கேட்டதும், என்ர மார்பிலை சுண்டிப்போட்டு அவர் வெளியிலை போனார். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

அண்டு ராத்திரி திடுக்கிட்டு முழிக்கிறன். என்ரை கட்டிலின்ரை விளிம்பிலை என்னையே பாத்தபடி ஒருருவம் இருக்குது. அம்மாவெண்டு அலறின என்ரை வாயைத் தன்ரை வாயாலை அவர் கெளவேக்கைதான் அது அப்பாவெண்டது எனக்குத் தெரிஞ்சுது. என்னாலை மூச்செடுக்கேலேல்லை. வேகமா அவரைத் தள்ளிப்போட்டு திமிறிக்கொண்டு எழும்பினன். எழும்பின என்னை அலாக்காகத் தூக்கித் திரும்பவும் கட்டில்லை போட்டார். என்ரை உடம்பெங்கும் மேய்ஞ்ச அவற்ரை கையைத் தடுக்கேலாமல் தவிச்சன்.

செத்துப்போனாலென்ன எண்ட நினைப்பெழுந்துது. அடுப்பெரிக்கேக்கை அதிலை என்னையும் எரிச்சாலென்ன எண்டு யோசிச்சன். மனம் ஊண்டிப் படிக்கேலேல்லை. நித்திரை கொள்ளுறதுக்கு பயமாயிருந்துது. கண்மூடாமல் அறைக் கதவையே வெறிச்சுப் பாத்துக்கொண்டிருக்கிறது என்ரை வழமையாச்சுது. சத்தம் ஏதாவது கேட்டால், அது அப்பாவோ எண்ட அச்சத்தில என்ரை இதயம் பலமடங்கு துடிக்க ஆரம்பிச்சுது. வீட்டைவிட்டு ஓடியிடலாமா, அல்லது இயக்கங்கள் எதிலாவது சேரலாமா எண்டெல்லாம் விரக்தி பரவியது. ஆனா எதுக்கும் எனக்குத் துணிவு வரேல்லை. எனக்குள்ளேயே செத்து செத்துமடிஞ்சன்.

ஒருநாள் ரா அம்மா செத்தவீடொண்டுக்கு போட்டா. எனக்கு ஒரே திகிலா இருந்துது. அவர் ரீவி பாத்துக்கொண்டிருந்தார். நான் வாஷ்ரூமுக்குள்ளை நிண்டுகொண்டு என்ரை கையளைத் திரும்பத்திரும்பக் கழுவிக்கொண்டிருந்தன். அச்சம் என்னைத் திண்டுகொண்டேயிருந்துது.

சட்டென, “யசோ, யசோ” எண்டு பலத்ததொரு அலறல், மெதுவா வெளியிலை எட்டிப்பாக்கிறன். பதினெட்டடி தூரத்தில அவர் தன்ரை நெஞ்சைப் பொத்திக்கொண்டு கத்துறார். எனக்குள்ளை ஒரு குரூர மகிழ்ச்சி! அப்பிடியே செத்துப்போகட்டும், பேசாமலிருப்பமெண்டு மனம் சொன்னது.

இருந்தாலும் அவர் கேட்டதுக்காண்டி பக்கத்து வீட்டு மாமா வீட்டுக்கு ஓடினன். ஆஸ்பத்திரிக்குப் போறதுக்காக காரோடை மாமா வாறதுக்கிடையிலை அவர் போட்டார். எனக்கு வந்த நிம்மதிக்கு அளவில்லை.

அடுத்த நாள் வானம் வெளிச்சிருந்துது.

அவர் அதிபரா இருந்த பள்ளிக்கூடப் பிள்ளையள் திரள்திரளா வந்திச்சினம். சிரேஷ்ட மாணவ தலைவர்களும் ஆசிரியர்களும் அவர் புகழ் பாடிச்சினம். எனக்கு ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரேல்லை. அந்தப் புகழ்மாலைகள் என்னைச் சரியா அசெளகரியப்படுத்திச்சு. கண்ணீர்விட்டு அழுத அம்மாவைப் பாத்தபோது, அவ நடிக்கிறாவா எண்டு எனக்குக் குழப்பமாய் இருந்துது. நான் அதிர்ச்சியடைந்திருக்கிறன் எண்டு வந்தவை பேசிக்கொண்டினம்.

***

போராலை இடப்பெயந்து சாவகச்சேரிக்குப் போயிருந்தம். அங்கைதான் மோகனின்ர அறிமுகம் கிடைச்சுது. என்னைக் கலியாணம் கட்டுறதுக்கு அவர் ஆசைப்பட்டார். பொம்பிளை கேட்டு அவற்ரை தாய்தேப்பன் வீட்டை வந்திச்சினம். எனக்குக் கலியாணமே வேண்டாமெண்டு நான் பிடிவாதமா நிண்டன். அதாலை அம்மாக்கும் எனக்கும் ஒரே சச்சரவானது.

குடும்ப வாழ்க்கை வேண்டாமெண்ட முடிவை அம்மா வாழ்ந்த வாழ்க்கை எனக்குள்ளை ஆழமாவே விதைச்சிருந்துது. அம்மாவும் ரீச்சர்,அப்பாவும் ரீச்சர். ஆனா வீட்டு வேலையெல்லாம் அம்மாதான் செய்யோணும். சாப்பிட்ட கோப்பைகூட அவர் கழுவமாட்டார். போதாததுக்கு அம்மா செய்யிற அத்தனையிலும் பிழை பிடிச்சுக்கொண்டிருப்பர்.

“இடியட், என்னடி சமையல் சமைக்கிறாய்,எத்தனை வருஷத்துக்கெண்டு இந்தக் குப்பையை நானும் சாப்பாட்டுக் கொண்டிருக்கிறது?”

சொதியில் போட்ட பிஞ்சு மிளகாய் அவியேல்லை எண்டு ஒரு நாள் அவர் போட்ட கூத்திலை மிரண்ட அம்மா அந்த இடத்தை விட்டு வேகமா வெளியேறப்பாத்தா. அதுக்கிடையிலை அவர் எறிஞ்ச அந்தச் சாப்பாட்டுக் கோப்பை அம்மான்ரை சொண்டை வெட்டினதிலை அவவின்ரை சொண்டிலிருந்து ரத்தம்பீறிட்டுது. நெத்தியிலும் கொட்டைப் பாக்களவுக்கு வீக்கம். நாளங்களெல்லாம் கடும்பச்சை நிறத்தில புடைச்சிருந்துது. தோல் கடும்செந்நிறமா மாறியிருந்தது. அவருக்கு மேலை ஏறிநிண்டு அவரை உழக்கோணும், தும்புத்தடியையெடுத்து அவருக்கு விளாசோணும் எண்டெல்லாம் எனக்கு ஆவேசம் வந்தது. காயத்துக்கு ஒத்தடம் குடுத்தபடி பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்ட அம்மாவைப் பாக்க எனக்கு எரிச்சலாயும் கோவமாயும் இருந்துது.

இன்னொரு நாள் அவற்ரை வகுப்புப் பிள்ளையளின்ரை சோதினைப்பேப்பருகளை அவர் சொன்னநேரத்துக்குத் திருத்திக் குடுக்கேல்லையெண்டு கத்தத்துடங்கினார்….

“இண்டைக்கு என்ரை பிள்ளையளின்ரை மார்க்சும் குடுக்கோணும். வீட்டு வேலையளோடை எத்தினையெண்டு …”

அவ சொல்லிமுடிக்கேல்லை அவவின்ரை மேசைலகிடந்த அந்தப் சோதினைப்பேப்பரெல்லாத்தையும் கசக்கிச் சுழட்டியெறிஞ்சார். மேசேல கிடந்த ஒண்டுரண்டையும் குறுக்காய் கிழிச்சார். அழுதபடி அதுகளைப்பொறுக்கியெடுக்க வெளிக்கிட்ட அம்மான்ரை தலைமயிரைப் பிடிச்சிழுத்து அவவின்ர கன்னத்திலை அறைஞ்சார்.

நான் பேயறைஞ்சமாதிரி அதைப் பாத்துக் கொண்டிருந்தன்.

இப்பிடிப் பல… அப்ப இதுக்கெல்லாம் என்ன செய்கிறதெண்டு எனக்குத் தெரியேல்லை. அதுகளைப் பத்திக் கதைக்கக்கூட அம்மா விரும்பேல்லை. அப்பாமார் மட்டுமில்லை, நம்பிப் பழகிற பல பேர் இப்பிடி இளம்பொம்பிளைகளின்ரை வாழ்க்கையைச் சூறையாடுற கதையளை வாசிச்சறிஞ்சபோது ஆம்பிளையளிலை எனக்கு அருவருப்பும், வெறுப்பும், அச்சமும், ஆத்திரமும் வந்தது. அப்பான்ரை இந்த நடத்தையெல்லாம் அம்மாக்கும் தெரிஞ்சிருக்கலாமெண்டதும் விளங்கினது.

***

“யசோ, நீங்க என்னைக் கலியாணம் செய்யோணுமெண்டு நான் எதிர்பாக்கேலாது, ஆனா ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டு கேட்கலாமோ? காரணம் தெரிஞ்சால் அது என்னைத் திருத்திக்கொள்ளறதுக்கு உதவும்,” ஒரு நாள் அப்பிடி என்னை மோகன் கேட்டார்.

என்னைத் திருத்திக்கொள்ளறதுக்கு உதவுமெண்டு மோகன் சொன்னது என்ரை மனசைத் தொட்டது. ஒரு ஆம்பிளை இப்பிடியும் யோசிப்பானா எண்டு வியப்பு வந்தது. தொடர்ந்து நடந்த விசயங்கள் அவர் மேல ஒரு மதிப்பையும் ஏற்படுத்தின. தனிப்பட்ட காரணங்களுக்கா திருமணம் செய்யிறது எனக்குப் பிடிக்கேல்லை எண்டதைச் சொன்னன்.

“சரி, அப்ப சினேகிதரா எண்டாலும் இருப்பமே, விதி எங்கை கொண்டுபோய்ச் சேர்க்குதோ அங்கை சேர்க்கட்டுமன்,” எண்டார்.

அப்பிடியே அடுத்த எட்டு மாதங்களிலை வாழ்க்கை திசைமாறிப்போனது. அம்மாக்கு வந்த கான்சரும், மோசமாய்ப் போன நாட்டுநிலைமையளும் கலியாணம் கட்டுறது ஒரு கட்டாயதேவை எண்டொரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தின. முடிவிலை திருமதி. மோகன் ஆனேன். கனடாக்கு வந்த மோகன் பிறகு என்னையும் சுமியையும் இங்கை கூப்பிட்டிருந்தார்.

இருபத்தி ஐந்து வருஷமா இருட்டுக்கை தடுமாறின என்ரை வாழ்க்கைக்கு ஒரு பற்றுக்கோட்டை மோகன் தந்திருந்தாலும்கூட, கடந்துவந்த சுவடுகள் என்னை விட்டு நீங்கினபாடில்லை, காயங்கள் கிளறப்பட்டபடியே இருந்தன. கனநாளா என்னை நெருங்கவிடாமத் தூரத்திலேயே அவரை நான் வைச்சிருந்தன். அவர் சும்மா தொட்டாலே எனக்குள்ளை ஒரு நெருப்புப் பத்திச்சு.

கடைசியிலை, “என்ரை வாழ்க்கேலை நடந்த கசப்பான சம்பவங்களைத் தாண்டிவாறதுக்கு என்னாலை ஏலாமலிருக்கு, கொஞ்சம் பொறுமையா இருப்பியளே?” எண்டு கெஞ்சினன். மனிச மனங்களின்ர உணர்வுகளைப் புரிஞ்ச ஒராளாய் மோகன் இருந்தார்.

முடிவிலை அவற்ரை பொறுமை என்னை அவரிட்டை ஒப்படைச்சுது. துவக்கத்தில மிக கஷ்டமாயிருந்த நெருக்கம், பிறகு மெல்லமெல்லப் பழகிப்போனது. கவுன்சலிங்கும், மோகனின் மென்மையான சுபாவமும், அதிர்ந்து பேசத்தெரியாத இயல்பும்தான் அதுக்கெல்லாம் காரணமெண்டும் சொல்லலாம்.

காலம் ரணங்களை மெல்லமெல்ல ஆத்தியிருந்தாலுங்கூட அந்த வடுக்கள் இடையிடையே வலிக்காமலில்லை.

ரண்டு வருஷத்திலை கர்ப்பமானன். ஆம்பிளைப் பிள்ளை பிறக்கோணுமெண்டு மனசார வேண்டினன். இன்னொரு பொம்பிளை இந்த உலகத்தில் பிறந்து அவஸ்தைப்பட வேண்டாமெண்டு நினைச்சன். அதாலை சுமி பிறந்தபோது எனக்கு சந்தோஷத்திலும் பாக்க அங்கலாய்ப்புத்தான் கூட இருந்துது.

***

சுமியின்ர பள்ளிக்கூடத்திலை வேலைசெய்யிற லோகாவை யாழ்ப்பாணத்திலை இருக்கேக்கையே எனக்குத் தெரியும். அவ போனிலை கூப்பிட்டு, “உங்கட மகள் ஏதாவது சொன்னவோ?” எண்டபோது எனக்கு தொண்டேக்கை அடைச்சுது.

சுமியும் மோகனும் மும்மரமாக மெமரி காட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தினம்.

“ஏன், என்ன நடந்தது?” என்ரை குரல் பதறியது.

“இண்டைக்கு, பார்க்கிலை விளையாடிப்போட்டு வரேக்கே, ரீச்சருக்குச் சொல்லாமல் லைனை விட்டிட்டு ஓடிப்போய் இவ தண்ணிகுடிச்சிருக்கிறா. அதாலை அந்த ரீச்சர் அவவைச் சரியாய் பேசிப்போட்டார். தெரியாதே, இவங்களெல்லாம் துவேஷசம் பிடிச்சவங்கள். எனக்கது பிடிக்கேல்லை …”

அவர் துவேஷம் பிடிச்சவரோ என்னவோ, அவருக்குச் சொல்லாமல் இவள் ஓடியிருக்கிறாள் எண்டதைவிட அப்பிடியொண்டு நடந்ததெண்டு எனக்குச் சொல்லேல்லை எண்டதுதான் எனக்குப் பெரிசாத் தெரிஞ்சுது.

ஒரு நிமிஷத்துக்குள்ளை என்ரை உடம்பிலை சூடேறினது.

“சுமி இண்டைக்குப் பள்ளிக்கூடத்திலை என்ன நடந்தது?”

“ம்ம், என்னன…?” அவளின் கவனம் விளையாட்டில இருந்தது.

“கேட்கிறது உனக்கு விளங்கேல்லையே …! பார்க்கிலை விளையாடிப்போட்டுப் போகேக்கை லைனை விட்டிட்டு ஓடினியாம்!”

அவள் எதுவும் சொல்லாமல் என்னைப் பாத்தாள்.

எனக்குக் கோபம் உச்சிக்கேறியது. குரல் உயர்ந்தது. மோகன் குழப்பத்துடன் என்னைப் பாத்தார். திரும்பவும் கத்தினன்.

“ரீச்சரிட்டைப் பேச்சுவாங்கின கதையைப் பள்ளிக்கூடத்தாலை வரேக்கே எனக்கேன் நீ சொல்லேல்லை?”

என்ரை கோபம் அவளைப் பயப்படுத்தியதோ என்னவோ, அப்பவும் அவள் பேசாமல் நிண்டாள். எனக்கு வந்த ஆத்திரத்திலை அவளின்ரை பிஷ்டத்திலை ரண்டு அடி போட்டன். அவள் என்ரை சட்டையிலை தொங்கிக்கொண்டு அழத்தொடங்கினாள். நான் அவளைத் தள்ளிப்போட்டு விலகிப்போனன். அவள் அழுதுகொண்டேயிருந்தாள். என்ரை அடியைவிட நான் அடிச்சுப்போட்டன் எண்டதுதான் அவளை உலுக்கியிருக்கும் எண்டது எனக்கு விளங்கினது. சட்டென்று என்ரை பிழை எனக்கு உறைச்சுது. வாஷ்ரூமுக்குள்ளை போய் முகத்தைக் குளிர் தண்ணில நல்லாய்க் கழுவினன். ஆழமாய் சில தடவைகள் மூச்செடுத்தன்.

“அம்மா, எனக்குப் பீபீ வந்தால் என்னெண்டு நான் ரீச்சருக்குச் சொல்றது? அங்கை கதைக்கிறது ஒண்டும் விளங்காட்டி நான் என்னசெய்யிறது…?” பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு முதல் நாள் அவள் கவலைப்பட்ட விசயங்கள் என்ரை ஞாபகத்துக்கு வந்துது.

“அம்மா, அம்மா,” அழுதபடி திரும்பவும் அவள் என்னட்டை ஓடிவந்தாள்.

“சரி, சரி, நேரம்போட்டுது படுக்கவா,” அவளைத் தூக்கிக்கொண்டுபோய் கட்டிலில் கிடத்தினன். என்ரை கோபத்தை என்னால கட்டுப்படுத்த முடியாததுக்காக மனசார அவளுக்குச் சொறி சொன்னன். அதுக்குப்பிறகும் அவள் விம்மியது என்ரை நெஞ்சுக்குள்ளை ஊடுருவி நிண்டு என்னைத் திண்டுகொண்டிருந்துது.

மோகன் நித்திரையாகிப் போயிருந்தார். என்னால நித்திரைகொள்ள ஏலேல்லை, என்ரை காலுக்கு மேலிருந்த மோகன்ரை காலை மெல்லவா இறக்கினன். சத்தம்போடாமல் எழும்பிப்போய் சுமியைக் கட்டிக்கொண்டு அவளோடை படுத்துக்கொண்டன். அப்பவும் என்ரை தலையணை நனைஞ்சுது. நிர்மலமான முகத்துடன் மிக அமைதியா அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

நன்றி: நடு ஜூலை 2020, பதிவுகள் ஒக்ரோபர் 2020, இலக்கியப்பூக்கள் இதழ் 166

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *