கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 17,221 
 
 

ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், தமக்கு தேவையான வண்டியின் ஸ்பேர் பார்ட்சுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடையின் பின்னாலிருந்த கோடவுனிலிருந்து பொருட்கள் பெரிய பெரிய அட்டைப் பெட்டியில் வெளியே வந்து, கடை முன் நிறுத்தப்பட்டிருக்கும் டெம்போ வேன், மினி லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கடையில் ஒரு பக்கமாக உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. கனஜோராக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்தால், ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் போலிருந்தது. லாபம் மட்டுமே ஒரு நாளைக்கு பல ஆயிரம் கிடைக்கும் போலிருந்தது.

பார்ட் டைம்

ஊசிப்போகும் பொருட்களில்லை. இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாள் விற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதால், விலையும், விற்கிற விலையும், கூடிக் கொண்டே போகும்.

கல்லாவில் பெரிய தொந்தியும், தலையில் பெரிய முண்டாசும், முகத்தை அடைத்துக் கொள்ளும் மீசையுடன், கடை முதலாளி மோகன் சிங், சரக்கு வாங்க வந்தவர்களிடம் பேசுவதும், அவர்கள் கொடுக்கும் பணத்தை கல்லாவில் போட்டுக் கொள்வதுமாக படு சுறுசுறுப்பாக இருந்தார்.
அவ்வப்போது, மூர்த்தியிடம் திரும்பி திரும்பி, “ஒன் மினிட், ஒன் மினிட்…’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். மூர்த்தியும் பதிலுக்கு, “பரவாயில்லை சார், பிசினசை கவனியுங்க…’ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனை காக்க வைப்பதில், அவன் களைத்து போய் விடக்கூடாது என்று, கடை சிப்பந்தி ஒருவன், ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் சுடச்சுட டீ கொண்டு வந்து, மூர்த்தியிடம் கொடுத்தான்.

கண்ணாடி டம்ளர், சூடாக இருந்தது. அதை இடது உள்ளங்கையில் வைத்து, வலது கையால் பிடித்துக் கொண்டான் மூர்த்தி. அப்படியும் சூடு தாங்க முடியவில்லை. சட்டையின் அடிபாகத்தை தூக்கி சுருட்டி, இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டான் டீ கிளாசை.

ஏலக்காய் டீ போலிருக்கிறது. அதிலிருந்து மெல்லிய புகைக்கோடு போல எழும் டீயின் ஆவி, மூர்த்தியின் ஆர்வத்தை அதிகரித்தது. காபி, டீ போன்ற பானங்களை ஆறிய பிறகு குடிக்கக் கூடாது; சூடாக இருக்கும் போதே குடிக்க வேண்டும். ஊதி ஊதி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். அப்போது தான் அது ருசியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் குடிக்கலாம் என்ற ஆசையைத் தூண்டும்.

டீ கிளாசை வாயருகே கொண்டு சென்றான் மூர்த்தி. அதன் மணம் அவன் நாசியை துளைத்ததும், அவனுக்கு மனைவி சித்ராவின் ஞாபகம் வந்தது.
சித்ராவுக்கு டிபன், சாப்பாடு என்று எதுவும் வேண்டாம். டீயோ, காபியோ சூடாக இருந்துவிட்டால் போதும். அதை குடித்துவிட்டு, அலுப்பு சலிப்பில்லாமல் வீட்டு வேலைகளை செய்வாள். அவள் வேலை செய்ய, அவளுக்கு யானை பலம் தரும் அது.

காபியோ, டீயோ சூடாக இருக்குமே தவிர மணமாக, சுவையாக இராது. டீத்தூள், காபித்தூள் போதும் போதாததுமாக இருக்கும். சர்க்கரையாவது கொஞ்சம் அதிகமாக இருக்குமென்றால், அதுவும் இருக்காது. போதும் போதாதாக இருக்கும். ஆனால், சித்ரா அதை பருக சூடாக இருந்தால் போதும்.
ஏலக்காய் டீயை கொஞ்சம் ருசித்ததும், அதன் மணமும், சுவையும் சித்ராவின் நினைவலை, மூர்த்தியின் மனதில் அதிகரித்துவிட்டது.
அவளிடம் இந்த ஒரு முழு கப் ஏலக்காய் டீயை கொடுத்தால், ஒவ்வொரு வாய் குடிக்கும் போதும் அவள், “எவ்வளவு நல்லா இருக்கு… எவ்வளவு டேஸ்டா இருக்கு… சிங்கோட கடையிலே இது மாதிரி டீ தான் தினம் குடிப்பாளா? ஒரு நாளைக்கு நாலஞ்சு கிளாஸ் குடிப்பாளா?’ என்றெல்லாம் வாய்மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள்.

கைப்பாலில், ஆழாக்கு பாலில் தான், நான்கு ஜீவன்களுக்கு டீயோ, காபியோ. அவன், சித்ரா, பெண் ஸ்ரேயா, பிள்ளை மனோஜ். அதையே அவர்கள் பிரமாதமாய் விரும்பி குடிப்பர்.

சாப்பாடு கூட சாம்பார், ரசம், பொரியல், கூட்டு அப்பளம் என்று வகையாக இருக்காது. பருப்பு போட்டு சாம்பார் என்பது அபூர்வம் தான். நல்ல நாளிலேயே பருப்புப் போட்டு சாம்பார் வைப்பது என்பது மிகவும் அபூர்வமாகிவிட்ட விஷயம். இப்போது, துவரம் பருப்பின் விலை எக்கச்சக் கமாக ஏறிவிட்ட தில், பருப் பாவது சாம்பாராவது?

மூர்த்தி ஒரு சாதாரண கம்பெனியில் டைப்பிஸ்டாக இருந்தான்; மூவாயிரம் ரூபாய் சம்பளம். வாடகை, கரன்ட்டே 1,500 ரூபாய் போய்விடும். மீதி பணத்தில் கால் வயிறு, அரை வயிறு சாப்பிடுவதே கஷ்டம். இருப்பதை கணவனுக்கும், குழந்தைகளுக்கும் போட்டுவிட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்து, தன் சாப்பாட்டு விஷயத்தை முடித்து விடுவாள் சித்ரா.
இது கல்யாணமாகி கணவன் வீட்டிற்கு வந்த பிறகு ஏற்பட்ட புதிய நிலைமையல்ல சித்ராவுக்கு; அவள் அம்மா வீட்டிலும், இதே நிலைமை தான்.
அவளைச் சேர்த்து, அம்மா வீட்டில் மொத்தம் ஏழு ஜீவன்கள். வைதீக காரியம் பார்க்கும் அவள் அப்பாவுக்கு, மாதம் பிறந்தால் ஒண்ணாம் தேதி, “டாண்’ என்று சம்பளம் வராது. வைதீக காரியங்களுக்கு போகும் போது மட்டும் வருகிற வருமானம் தான்.

இப்போ தெல்லாம் வைதீக காரியங்கள் நடப்பது என்பது, மிகவும் குறைந்து விட்டது. தெருவை அடைத்து பந்தல் போட்டு, ஊரில் ஒரு வீட்டிலும் அடுப்பு பற்ற வைக்காமல், நான்கு நாட்கள் நடக்கும் கல்யாணமெல்லாம், ஒரே நாளில் நடக்கத் துவங்கி விட்டது.

சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம், நாளுக்கு நாள் குறைந்து, மிகவும் குறைந்த அளவிலே பெயருக்குத் தான் நடந்து வருகிறது. ஒரே ஒரு நாளில், முதல் நாள் மாலை பெயருக்கு ஜானவாசத்தோடு, மறுநாள் மதியத்திலேயே எல்லாம் முடிந்து, சத்திரத்தை காலி செய்து விடுகின்றனர்.

கல்யாணம் மட்டுமில்லை. எல்லா வைதீக காரியங்களுமே பெயருக்குத் தான் நடக்கிறது. சிரத்தையோ, பித்ருக்களுக்கு செய்யப்படும் சிரார்த்தம் கூட நெற்றியில், விபூதி ஒரு கீற்று இட்டு, அரிசி, வாழைக்காய், பருப்பு, தட்சணை என்று சிறிய அளவில் கொடுத்து முடிக்கிற நிலைமை வந்து விட்டது.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற நிலையில், சித்ராவின் அப்பாவுக்கு மூன்று பெண்கள். பெரியவள் சித்ரா; அப்புறம் அம்புஜம், மிருதுளா. எல்லாரும் இரண்டிரண்டு வயது வித்தியாசம் உள்ளவர்கள். கடைசிக் குழந்தை சேகர்; நான்கு வயது. எப்போது அவன் படித்து பெரியவனாகி, வேலைக்குப் போய், சம்பாதித்து கொண்டு வருவானோ?

தன் கல்யாணத்தை நடத்த முடியாமல் அப்பா, அம்மா மனம் குமைவதை பார்த்து, உள்ளம் குமைவாள் சித்ரா. தன்னால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாரம், சிரமம் குறைய தான் எவனுடனாவது ஓடிப்போய் விடலாமா என்று தோன்றும் சித்ராவுக்கு. அது தன் பெற்றோருக்கு தலைக்குனிவை ஏற்படுத்துவதோடு, தன் தங்கைகளின் திருமணத்தையும் பாதிக்குமே என்று, அந்த எண்ணத்தை அழித்துவிடுவாள் சித்ரா.

அம்மா வீட்டில் படுகிற கஷ்டத்தைவிட, அதிகமாக கஷ்டப்படுகிற கணவன் வீட்டில் வாழவும், அவள் தயாராகி விட்டாள். அப்பா, அம்மா சொல்கிற எந்தப் பிள்ளைக்கும் கழுத்தை நீட்டவும் தயாரானாள். தன் பாரம், அப்பா அம்மாவுக்கு குறைந்தால் போதும். அவர்களுக்கு தன்னால், கொஞ்சமாவது நிம்மதி உண்டாக வேண்டும்.

அப்பா, அம்மா இல்லாதவன் மூர்த்தி. சாதாரண உத்தியோகம் தான்; சிரமமான வாழ்க்கை தான். எல்லாம் தெரிந்து, சித்ரா அவனுக்கு வாழ்க்கைப் பட்டு விட்டாள்.

சாண் எறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை தான்… சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டாள். உப்பிருந்தால் புளி இருக்காது; காபி பொடி இருந்தால் சர்க்கரை இருக்காது. விசேஷ நாட்களில் உடுத்த ஒரு நல்ல புடவை கிடையாது. ஒரு குந்துமணி தங்கம் கிடையாது.

“”வாங்க மூர்த்தி சார்!” என்றழைத்தார் சிங்.

கடையில் வியாபாரிகளின் கூட்டம் வடிந்து விட்டிருந்தது. கொஞ்சம் ஹாயாக இருந்தார் சிங். கல்லாப் பெட்டியை அவர் மூடும் போது, ரூபாய் நோட்டுகள் அதில் நிரம்பி வழிவதை பார்த்து விட்டான் மூர்த்தி.
நல்ல வியாபாரம் நடக்கிறது. நிச்சயம் நல்ல லாபம் வரும். நல்ல லாபம் என்றால், கொள்ளை லாபம். பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்குகிற லாபம்.

தினசரி மாலை வேளையில் வந்து, கடை கணக்கை பேரேடுகளில் எழுத வேண்டும். கணக்கு வழக்குகளை பார்க்க வேண்டும். தினசரி இரண்டு மணிநேரம் வேலை பார்க்க வேண்டும். வேலை, “பெண்டு’ எடுத்து விடும். தினசரி இந்த ஏலக்காய் டீ கொடுப்பர். ஆயுத பூஜை, தீபாவளி என்றால், இனாம் ஏதாவது கொடுப்பர்.

நல்ல வியாபாரம் நடந்து, நல்ல லாபம் வரும் என்பதால், கணக்கெழுத நல்ல சம்பளம் கேட்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டான் மூர்த்தி.
தினசரி அவன் செய்ய வேண்டிய வேலைகளை விவரித்து விட்டு, “”மூர்த்தி சார், எவ்வளவு சம்பளம் எதிர்பாக்கறீங்க?” என்று, அவனிடம் கேட்டார் சிங்.

“”நீங்க என்ன தருவீங்க சிங்?” என்று கேட்டான் மூர்த்தி.

“”நீங்க சொல்லுங்க முதல்ல,” என்றார் சிங்.

“”ஐயாயிரம்!” என்றான் மூர்த்தி.

“”ஐயாயிரமா?” என்று வாயைப் பிளந்த சிங்… “”அவ்வளவு கொடுக்க முடியாது மூர்த்தி சார்… கடையிலே கூட்டத்தையும், வியாபாரத்தையும் பார்த்துட்டு அவ்வளவு பணம் கேட்கறீங்க… இன்னைக்கு நீங்க பார்த்த மாதிரி தினமும் வியாபாரம் நடக்காது… நிறைய நாள், “டல்’ அடிக்கும்… ஒரு ரூபாய் கூட போணியாகாது… நீங்க கஷ்டப்படறவராகவும், நல்லவராகவும் தெரியறீங்க… மாசம் ரெண்டாயிரம் ரூபா தரேன்!” என்றார் சிங்.

“”ரொம்பக் குறைவு சிங்… நாலாயிரத்து ஐநூறு கொடுங்க!” என்றான் மூர்த்தி.

“”கஷ்டம் மூர்த்தி சார்… உங்களுக்காக கூட ஐநூறு ரூபாய் போட்டு ரெண்டாயிரத்து ஐநூறு தரேன்… ஆயுத பூஜை, தீபாவளிக்கு ஆயிரம், ஆயிரம் ரூபாய் தரேன்!” என்றார் சிங்.

“”நாலாயிரம் கொடுங்க சிங்!”

“”உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் மூர்த்தி சார்… மூவாயிரம் ரூபா தரேன்… என்ன சொல்றீங்க,” என்ற சிங்கின் குரலில் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாதென்கிற உறுதி தெரிந்தது.

“”வரேன் சார்!” என்றபடி எழுந்து விட்டான் மூர்த்தி.

கொடுக்க முடியும் சிங்கால், கொடுக்கத்தான் மனம் வரவில்லை அவருக்கு.

“”போயிட்டு வாங்க மூர்த்தி சார்… நல்லா யோசனை பண்ணி ஒரு முடிவெடுங்க… நாளைக்கு வந்து சொல்லுங்க… இதை பஸ் செலவுக்கு வைச்சுக்கிங்க…” என்று சொல்லி, நூறு ரூபாயை மூர்த்தியிடம் கொடுத்து விட்டு கல்லாவிலிருந்து எழுந்து விட்டார்.

“நல்ல வியாபாரம் நடக்கிறது; நல்ல லாபம் வருகிறது. கொடுக்கலாம் சிங்… நான்காயிரம் கொடுத்தால் தான் வேலைக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்!’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு மூர்த்தி, தெருவில் இறங்கி நடந்த போது, ஒரு ஜவுளிக் கடையிலிருந்து சித்ரா, அடுத்த வீட்டுப் பெண் அமுதாவுடன் வெளியில் வருவதைப் பார்த்தான். அமுதாவின் கையில் நான்கைந்து பைகளில் துணிமணிகள்.

“”நீ ஒண்ணும் வாங்கலியே சித்ரா!” என்று கேட்டாள் அமுதா.

“”என் கணவர் வாங்கித் தருவார் அமுதா… அவர் நிலைமை, சம்பாத்தியம், குடும்பம் நடத்த ஆகிற செலவெல்லாம் எனக்குத் தெரியும். அதனாலே அது வேணும், இது வேணும்ன்னு கேட்டு, அவராலே முடியலேன்னு அவர் மனக்கஷ்டப்பட நான் இடம் கொடுக்க மாட்டேன். எனக்கு வாழ்க்கை எப்படி விதிக்கப்பட்டிருக்கோ, அந்த வழியிலேயே போக ஆசைப்படறேன்,” என்றாள் சித்ரா.

“”நிறைய சம்பாதிக்கிறவனை நீ கல்யாணம் பண்ணிண்டிருக்கலாம் இல்லையா சித்ரா!” என்று கேட்டாள் அமுதா.

“”அப்படி நான் ஆசைப்படலே அமுதா… எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க முடியாம, என் அப்பா – அம்மா ரொம்ப கஷ்டப் பட்டாங்க… அவங்க மனக்கஷ்டம் குறையணும்ன்னு தான், இவரை கல்யாணம் பண்ணிண்டேன். வேண்டாததை எல்லாம் கேட்டு, இவர் மனதையும் கஷ்டப்படுத்த நான் விரும்பலே அமுதா!” என்று சித்ரா சொல்வதைக் கேட்ட மூர்த்தியின் மனம் நெகிழ்ந்தது.

“சிங்கிடம் ஆயிரம் ரூபாய் அதிகம் கேட்டு, அவர் கொடுக்க முடியாதென்று சொன்னால், மூவாயிரம் ரூபாய் கிடைக்கும், “பார்ட் டைம்’ வேலையை உதறித்தள்ள நினைத்தோமே. அந்த மூவாயிரம் ரூபாயிருந்தால், தங்கமான சித்ராவை எவ்வளவு நல்லா வச்சுக்கலாம்…’ என்றெண்ணிய மூர்த்தி, வேலையை ஒப்புக் கொள்ள, சிங் கடையை நோக்கி நடந்தான்.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “பார்ட் டைம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *