கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 9,702 
 
 

1

”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு! என்ன இடி இடிக்கிறது! ஐப்பசி மாதம் அடை மழை என்பார்களே, சரியாய்த்தான் இருக்கிறது. குழந்தைகள் துணிமணி ஒன்றுகூட உலரவில்லை. புடவை ஒரே தெப்பல். இந்தப் புடவைகளே உலரமாட்டேனென்கின்றன. இன்னும் கதர் வேண்டுமாம். கதர்! தூலம் தூலமாய் இரட்டையும் ஜமக்காளத்தையும் வாங்கினால் யாரால் தூக்கி உடுத்த முடியும்? சொல்லப் போனால் பொல்லாப்பு. நான் கதர் உடுத்திக்கொள்ளவில்லையென்னுதான் ‘சுயராஜ்யம்’ வராமெ வழியிலே நின்றுகொண்டிருக்கிறதாக்கும்! இதைத் தவிர மீதியெல்லாம் பண்ணினால் போறலையாக்கும்! போன வருஷமாவது தேவலை. இவ்வளவு மழை இல்லை. இந்த வருஷம் ரொம்ப அக்கிரமம். இந்த மாதிரி சொட்டச் சொட்ட வந்தேன். தோழி, கதவைத்திறன்னு நாலு நாள் வேலை செய்தால்? அப்புறம், அப்புறந்தான். யாரால்தான் சாத்தியம், என்னால் முடியவே இல்லை” என்று நிறுத்தினாள் செல்லம்.

”ஆகிவிட்டதோ, இன்னும் பாக்கி உண்டோ?” என்றேன்.

”ஆமாம். உங்களுக்கென்ன; ஏதடா பாவம். ஒண்டியாய் குழந்தைகளுடன் அலைகிறாளே என்ற எண்ணம் இருந்தால் தானே? உக்கார்ந்தபடியே பரிகாசத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆகா! போருமே சவரணை!” என்று முகத்தைக் கோணிக் கொண்டாள்.

”ஏன் ஒண்டியாய்த் திண்டாடுவானேன்? எல்லாம் நீயாகப் பண்ணிக்கொண்ட விவகாரந்தானே? அம்மா இருந்தால் உன்னை இவ்வளவு அலையவிடுவாளா? மடி விழுப்பு என்று நன்றாய்த்தான் உன்னை உட்கார வைத்துச் சிசுருஷை செய்துகொண்டிருந்தாள். நீயாகத்தானே வீண்பழி சுமத்தினாய்? ஒன்றும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தவிக்கிறேன். நீ ஆனாலும் அநியாயம்! அம்மா காதிலும் படும்படிச் சொல்லிவிட்டாய். என்னதான் இருந்தாலும் பெரியவர்களை அப்படி மனம் நோகப் பேசலாமா?”

”ஆகா! நான் முதலில் சொன்னபொழுது என்னை வெருட்டினீர்கள். குட்டியம்மாளிடமிருந்து, ‘நீ அனுப்பிய ரூபாய் ஐம்பதும் வந்து சேர்ந்தது’ என்ற காகிதத்திற்கு என்ன சொல்லுகிறீர்கள்? உங்களை அறியாமல் அம்மாவுக்குத் திடீரென்று ஐம்பது ரூபாய் ஏது? அதை யோசித்துப் பாருங்களேன். தவிர, நான் மோதிரத்தைப் பற்றி ஸந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், தைரியமாய்க் கேட்கிறதுதானே? துலா காவேரி ஸ்னானத்துக்குப் போகிறேனென்று சொல்லிக்கொண்டு பெண்ணகத்தில் போய் ஏறிக்கொள்வானேன்? நானும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்த்தேன். மாதம் தவறாமல் அப்பளமும் வடாமும் அவலும் யார் போனாலும் டப்பி டப்பியாய்க் கொடுத்துக் கொடுத்து வசங்கண்டு போயிற்று. இங்கே இடுவதற்குக் கூலிக்காரி நான் ஒருத்தி இருக்கிறோனோ இல்லையோ? பெண் கை சளைத்துவிட்டால்தான் என்ன? இப்படி ஒரு அடியாய்ப் பிள்ளை வீட்டை மொட்டை அடிக்கிறதுண்டா? வீட்டில் ஒரு தகரம் பாக்கி கிடையாது. பொரி விளங்காய் வேணுமென்னு ஆசைப்பட்டாளாம். மாவை ஒரு டப்பி, திணியத் திணியக் கோடியாத்து அம்மாவிடம் கொடுத்தனுப்பினாள். ஏன், அந்தப் பொரிவிளங்காயை இங்கேயே உருண்டையாய்ப் பிடித்தால், நானும் என் குழந்தைகளும் தின்றால் உடம்புக்காகாதோ? உங்களுக்கு என்னமோ உலகத்தில் இல்லாத அதிசயமாய் அம்மாவைப் படைத்து விட்டதாக எண்ணம்! இந்தச் சின்ன ஸங்கதிகளிலேயே இவ்வளவு சூதும் வினையுமானால் மோதிரத்துக்கு நான் சொன்னது குற்றமாய் விட்டதோ? தலைவாரிக்கொள்ளும் பொழுது சுழற்றிப் பக்கத்தில் வைத்துக் கொண்டது. வேலைக்காரியா, குழந்தையா, ஒரு பிராணி வரவில்லை. எங்கே போய்விடும்? அதுதான் போகட்டும்! ஐம்பது ரூபாய் எப்படி முளைத்தது? அதுக்கேன் பதில் இல்லை?”

”சரி, சரி, இதென்ன தலைவேதனை? போதும். நிறுத்துன்னா நிறுத்து மற்ற ஸமாச்சரங்கள் ஏதோ பெண் என்ற சபலத்தினால் சொல்கிறாள் என்றால், அதற்காக ஒரேயடியாய் திருட்டுப் பட்டம் கட்டுகிறதோ? அதோடு விட்டாயா? நான் ‘கேம்ப்’ போய் வருவதற்குள் ஊரைவிட்டே ஓட்டியும் விட்டாயே! என்ன நீலியடி நீ! ஒண்டியாய் அலைகிறாளாம்! நன்றாய் அலையேன்; யாருக்கு என்ன?”

”ஆகா! குறைச்சல் இல்லை. வேணுமென்று நான் ஆசைப்பட்டுக் கேட்டேன் என்ற அப்பா எவ்வளவோ பொறுக்கிப் பொறுக்கி வாங்கினார் நடுப் பச்சையை. அருமையாய் இருந்தது மோதிரம். நிமிஷத்தில் தொலைந்தாயிற்று. நீங்கள் பணம் போட்டு வாங்கியிருந்தால் தெரியும். எப்பேர்ப்பட்ட ‘ப்ளூ ஜாகர்’ வைரம்! இரண்டு கல்லும் இரண்டு நட்சத்திரம் மாதிரி ஜொலிக்குமே.”

”சரி, சரி, நிறுத்தப் போகிறாயா இல்லையா? குழந்தைகளுக்குப் போர்த்து இருக்கிறதா பார்” என்றேன்.

”அம்மாடி! இப்பொழுதுதான் உக்கார்ந்தேன். உடனே எழுந்திரு என்கிறீர்கள். எப்பொழுதுமே நான் சற்றே உக்கார்ந்தால் மனலாகாது; நீங்க மட்டும் சுகமாய் நாள் முழுக்க வெற்றிலை மென்றுகொண்டே ‘ஈஸிசேரி’ல் படுத்திருக்கலாம். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், ஏதோ வீணாய் போய்விட்ட மாதிரிப் பறக்கிறேன். ஒன்றும் அகப்படாவிட்டால் ‘வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போய்ப் பார்’ என்பீர்கள். நீங்கள்தான் எஜமான் என்பதை என்னிடம் காட்டாமல் வேறே யாரிடம் காட்டுகிறது” என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்தாள் செல்லம்.

இடியும் மின்னலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டே வந்தன. மழை சற்று நின்றது போல் தோன்றிற்று. காற்று ‘ஹோ’ என்று பலமாய் அடிக்கத் தொடங்கிற்று. காற்றுடன் கடலோசையும் கலந்து சமுத்திரமே அருகே நகர்ந்து வருவது போலவும், மரங்கள் ‘விர் விர்’ என்று சுழல்வது போலவும் ஓசை கேட்கலாயிற்று.

2

செல்லத்துக்கு இடி என்றால் ஒடுக்கம், இரவு முழுவதும் தானும் தூங்கமாட்டாள். பிறரையும் தூங்கவிடமாட்டாள். அதிலும் நாங்கள் குடியிருந்த வீடோ வெகு அற்புதம். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்து ஏலத்தில் எடுத்த பனங்கட்டைகளையும், ஓடுகளையும் வைத்துக் கட்டப்பெற்ற மாளிகை. வீட்டுக்காரர் பத்து வருஷங்களுக்கு ஒரு முறைதான் மராமத்துச் செய்வார். அது வரையில், குடியிருப்பவர் ஏதோ பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு மழைக்கும் வீடு ஓர் அடி கீழே இறங்கிவிடும். அவர்கள் பூகம்ப வெடிப்புகள் போல் வெடிக்கும். குடியிருப்பவர்களுடைய ஆசிர்வாதங்கள் நடக்கும். என்ன ஆனால்தான் என்ன? சொந்தக்காரருக்கு வாடகை வந்து விடும். அந்தச் சொந்தக்காரருக்கு இதே மாதிரிப் பலவீடுகள் உண்டு. ஓடு மாற்ற நேரிட்டால், இந்த வீட்டு ஓடுகளை அந்த வீட்டிற்கும், அந்த வீட்டு ஓடுகளை இந்த வீட்டிற்கும் மாற்றி விடுவார். ஓடு மாற்ற வேண்டியதுதானே!

கட கட மட மடவென்று ஒரு பெரிய இடி இடித்தது.

பாவம்! இடியோசை கேட்டுச் செல்லம் நடுநடுங்கி விட்டாள்.

”காற்றடிக்குது கால் குமுறுது கண்ணே

விழிப்பாயென் நாயகி,

தூற்றல் கதவு சாளர மெல்லாம்

தொளைத் துடிக்குது பள்ளியிலே”

என்று பாடலானேன்.

”போதுமே பாட்டு! என்னக் காற்று, என்னக் கண்ராவிப் புயலடிக்கிறதே என்னமோ!”

”புயல்தான். நேற்றே பேப்பரில் போட்டிருந்தது. சொன்னால் நீ நச்சு நச்சென்று கழுத்தை அறுத்துவிடுவாய் என்றுதான் சொல்லவில்லை. நாகப்பட்டினம் வழியாகத்தான் வருகிறதாம்”

”ஆமாம், பொய்யும் புளுகும்! நாகப்பட்டினம் வழியாய் ரெயிலில் வருகிறதோ, கட்டை வண்டியில் வருகிறதோ?”

”நிஜத்தைச் சொன்னால் பொய் என்கிறாய், மணிக்கு இத்தனை மைல் வீதமென்று கூடக் கணக்கிட்டிக்கிறார்கள், கதவைத் திறக்கிறேன் பார்”

”வேண்டாம், வேண்டாம்” என்று ஆத்திரத்துடன் கூவினாள் செல்லம். நான் ஜன்னலின் ஏழு கதவை மட்டும் திறந்தேன்.

‘அடாடா, என்ன வேகம்! தென்னை மரங்கள் பேயாடுவது போல் தலை சுற்றிப் பயங்கரமாய் ஆடிக் கொண்டிருந்தன. காற்றின் வேகத்தினால் திறந்த கதவு படீரென்று மோதிற்று. மறுபடியும் மூடினேன்.

செல்லம் தலையையும் சேர்த்துப் போர்வையால் மூடியவளாய், இரு கைகளாலும் காதுகளை இறுகப்பொத்திக் கொண்டு சுருண்டு உட்கார்ந்திருந்தாள். நான் எழுந்து குழந்தைகளின் போர்வைகளை ஒழுங்குபடுத்திவிட்டுப் படுத்தேன். ”என்ன? நீங்கள் தூங்கப்போகிறீர்களா?”

“எனக்குத் தூக்கம் தலையைச் சுற்றுகிறது. உன்னைப்போல் கொட்டு… கொட்டு… என்று உட்கார்ந்திருந்தால் நாளைக்கு வேலை போய்விடும்” என்று சொல்லிக்கொண்டே போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.

3

”என்ன! எனக்குக் கொஞ்சம் துணை வருகிறீர்களா?” என்று கெஞ்சினாள் செல்லம்.

”துணை என்ன? என்னால் முடியாது, போ!”

செல்லத்துக்கு இந்த நெருக்கடியான சமயத்தில்தான், ”அடடா, மாமியாரை வெரட்டி விட்டோமே” என்ற ஞானோதயம் ஏற்படலாயிற்று. ”என்னமோ நீங்கள் இல்லாத பிகு பண்ணுகிறீர்கள், அம்மா இருந்தால் உங்களை லட்சியம் செய்து யார் கூப்பிடக் காத்திருக்கிறார்கள்?” என்று முணுமுணுத்தாள் செல்லம்.

”அம்மாவை வெரட்டினது நீயோ, நானோ? காகிதம் வந்தால்தான் என்ன? உடனே படபடவென்று உளறணுமோ?”என்று சொல்கையில் ‘மள மள’ வென்று ஏதோ முறிவது போலவும் சாய்வது போலவும் பிரமாதமான ஓசை கேட்டது. நானும் நடுங்கிவிட்டேன். தெருவில் வீட்டிற்கு எதிர் வரிசையில் பெரிய கிழத் தூங்குமூஞ்சி மரம் ஒன்று உண்டு. அதுதான் முறிந்திருக்க வேண்டும். வீட்டின் மேல் விழுந்தால் வீடும் நாங்களும் ‘சட்னி’தான் என்று தோன்றவே சுருட்டி வாரிக்கொண்டு எழுந்தேன்.

என்னை அறியாமலே என் கரங்கள் குவிந்தன.

”தீனக்குழந்தைகள் துன்பங்கள் படாதிருக்க

தேவியருள் செய்ய வேண்டுகிறேன்”

என்ற தொடர் என் மனத்துள் எழுந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டேன் ”ஐயோ!” என்று அலறியவளாய் என்னைத் தழுவி நின்றாள் செல்லம்.

4

”நல்ல வேளை. இந்த மட்டில் வீடு பிழைத்ததே” என்று ஆனந்தப்பட்டார் வீட்டுக்காரர். ‘மாப்பிள்ளை தலை போனாலும் போகட்டும், பழைய நாளைய உரல் மிஞ்சிற்றே’ என்று சொன்ன மாமியாரின் நினைவு வந்தது. செல்லத்துக்கு அசாத்தியக் கோபம். வீட்டுக்காரரை அப்படியே எரித்துவிடுபவள்போல் பார்த்து, ”சிரிக்கத்தான் வேண்டும்! இவ்வளவு பெரிய மரம் வீட்டில் சாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ வீடு தொட்டால் விழுந்துவிடும் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் வாடகைக்கு மாத்திரம் மாசம் முடிவதற்கு முந்தி இருபத்தேழாந்தேதியே ஆள் வந்து விடுகிறது. குடியிருப்பவர்கள் எப்படிச் செத்தாலென்ன? இந்தப் பாழும் ஊரில் ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் குடிவந்து விடுகிறார்கள். நல்ல வேளையாய் வீடு பிழைத்ததாம்! மனிதர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும், நம் வீட்டிற்குப் பழுது வராமல் இருந்தால் சரி. இந்த மாதம் வாடகையைச் செலவழித்தாவது ஏதாவது செய்யட்டுமே, இல்லாவிட்டால் வாடகையைக் கொடுக்கப் போகிறதில்லை. இவர் வாங்குகிறபடி வாங்கிக்கொள்ளட்டும் பார்க்கிறேன்” என்று உறுமிக்கொண்டே உள்ளே போனாள்.

வீட்டுக்காரர் சர்வ சாதாரணமான குரலில் மிகவும் மெதுவாய் நிறுத்தி நிறுத்தி, ”இல்லே ஸார், இல்லை என்ன! மற்றவர்களைப் போல் நான் பத்து வருஷங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்கிறேனே? வருஷா வருஷம் பொங்கலுக்கு முன்னாலேயே ஆள் விட்டு, போனது வந்தது பழுது பார்த்து, ஒட்டடை கூட என் செலவிலேயே அடித்துக் கொடுக்கவில்லையா? அம்மா, ஏதோ ரொம்பக் கோபப்படுகிறார்கள். நானும் ஸம்ஸாரிதானே? போன வருஷம் மராமத்துக்கு வந்தபோது நீங்கள்தான் ‘குழந்தைகளுக்கு இருமல்; இப்போ வேலை செய்ய முடியாது’ என்றீர்கள். எனக்கும் கையோடு கையாய்ச் செய்தால்தான் முடிகிறது. இல்லாவிட்டால் எங்கே முடிகிறது” என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னார். எனக்கோ கோபம் ஒரு பக்கம். சிரிப்பு ஒரு பக்கம். ஒன்றும் பதிலே சொல்ல முடியவில்லை.

”என்ன ஸார்! பதிலே சொல்லவில்லை. நானே இந்த மழைக்காலத்துக்கு முன்னே இந்தத் தூங்குமூஞ்சி மரத்தை வெட்டிவிட வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனாலும், அநியாயக் கூலி கேட்டான். தாம்புக்கயிறு ஒரு சுருள் வேணுமென்றான். ஏதோ வாயு பகவான் கிருபை அதுவும் லாபம். பாருங்கள்; விறகு நன்றாய் நின்று எரியும். தை பிறந்ததும் வெட்டித் துண்டு போடலாம்” என்று சொல்லியவராய் ”அட கோவிந்தா! முனியனை அழைத்துக் கொணர்ந்து சீக்கிரம் மரத்தை எடுங்கள். எலெக்ட்ரிக் கம்பி மேலே விழுந்து அது வேற போய் விட்டது. அந்த மட்டும் நம்ம வீட்டுக் கம்பிமேலே விழவில்லை. முனிஸிபாலிடி கம்பிதான்” என்றார்.

“இல்லேங்க, நம்ப கம்பிகூடப் பூட்டுதுங்க” என்றான் கோவிந்தன்.

”அடடா, சரியாய் பார். சீக்கிரம் மரத்தை அப்புறப்படுத்துங்கள். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் கிளை கிளையாய் ஒடித்துக் கொண்டு போய்விடுவார்கள். சீக்கிரம் சீக்கிரம்?” என்று அவசரப்படுத்தினார் வீட்டுக்காரர்.

5

”எப்போதும் இதே தொல்லைதான். வாசல் மரத்தை இன்னும் எடுத்தபாடில்லை. இந்தக் குட்டிகள் ஏறி இறங்கிக் கைகால்களை முறித்து தொலைத்துக்கொள்ளப் போகிறதுகள்! நான் வீட்டு வேலை செய்கிறதோ, குழந்தைகளை மேய்க்கிறதா? லீவுதானே. அந்த நாவலை இராத்திரி படித்தால் என்ன?” என்று சொல்லிக்கொண்டே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தாள் செல்லம்.

வாயிற்புறத்து ரேழியில் ஏக அமளி. ”ஐயோ! அப்பா! நான் மாட்டேன்; அடிக்கிறானே. எனக்குத்தான். நான்தானே முதலில் கண்டுபிடித்தேன்” என்று பற்பல ஸ்தாயிகளில் குரல்கள் கேட்டன. நான் படிப்பை நிறுத்தாமல், ”என்ன அமர்க்களம்! சண்டை இல்லாமல் பகிர்ந்துகொள்றதுதானே?” என்று சொல்லிவிட்டு ”செல்லம்! நீயாவது பார்த்துத் தொலைக்கப்படாதா? என்ன இரைச்சல்; சந்தைகூட கெட்டது! நல்ல குழந்தைகள்! தலைவேதனை; ச்சீ” என்று சீறினேன்.

செல்லத்துக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. ”அடுப்பில் ஒன்றும் துடுப்பில் ஒன்றுமாக இருக்கும்பொழுதே பகிர்ந்துக் கொடுக்க அவசரமா? நன்றாய்க் கிடந்து அலைகிறதுகள்! அவர்கள் இரைச்சலைவிட நீங்கள் இரைவதுதான் நன்றாய் இருக்கிறது! அதுகள் கூட இவ்வளவு அவசரப்படுத்தவில்லை. நீங்கள் எல்லோரையும் கூட பச்சைக் குழந்தை என்று சொல்லி மோவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள்.

எனக்கும் கோபந்தான்; படித்துவிட்டுக் கோபித்துக் கொள்ளலாமென்று மேலும் படிக்க, குழந்தைகள் மூவரும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி வந்து என் கால் தடுக்கி ஒருவர் மேலொருவராய் விழுந்தார்கள். என் கணுக்கால் எலும்பிலும் அடிபட்டு விட்டது. என்ன யார் என்று கூடக் கவனியாமல் அகப்பட்ட முதுகில் ஒரு அறை அறைந்தேன்.

அழுத குரலுடன் ”நாந்தான் முதலில் பார்த்தேன்” என்றான் சீனு.

”என்னடா அது?”

”தூக்கணாங் குருவிக்கூடு” என்றான் சீனு.

”அண்ணா பொய் சொல்றான். அப்பா கூடு இல்லே;” நான் போட்டது, அதுக்குள்ள இருக்கிற குர்நாப் பட்டை.

”ஏதுடா கூடு” என்று அவன் கையில் இருந்த கூட்டை கையில் வாங்கினேன்.

”வாசல் மரத்திலே இருந்தது; கோவிந்தன் கொடுத்தான்”.

”சீ, சீ, ஆபாஸம்” என்று வீசி எறியப்போனேன்.

”அப்பா, அப்பா! எறியாதே, அதிலே நிறைய மின் மினாம் பூச்சி இருக்குமாம். இராத்திரியிலே நஷத்ரம் மாதிரி மினுங்குமாம்” என்று என் கைகளைப் பற்றிக் கொண்டாள் தங்கம்.

கூட்டை திருப்பினேன், பளிச்சென்று மின்னிற்று. ”அடியே! செல்லம், ஓடிவா, ஓடிவா” என்று ஆச்சிரிய மிகுதியில் கூவினேன்.

என்ன வந்துவிட்டது வேலை அதற்குள்?

“காரியம் இல்லாத மாமியார் கல்லையும் நெல்லையும் கலந்தானாம் என்கிற மாதிரி வந்து கேட்டால் ஒன்றும் இராது. தெரிந்த சங்கதிதானே?” என்று வெகு அலட்சியத்துடன் சொல்லிக் கொண்டே வந்தாள் செல்லம்.

”இன்னமும் மாமியாரைத்தானே கரிக்கிறாய் நீ? இந்தா உன் மோதிரம், எங்க அம்மாள்…” என்று சொல்லிக் கொண்டே மோதிரத்தை நீட்டினேன்.

செல்லம் இடைமறித்து, ”மோதிரமா! எங்கேயிருந்து அகப்பட்டது?” என்று கேட்டவள், என்னைச் சூழ்ந்து நின்ற குழந்தைகளையும் கையில் பாதியும் தரையில் பாதியுமாகச் சிதறிக் கிடந்த குருவிக் கூட்டையும் பார்த்துவிட்டு மௌனமாகி விட்டாள். இருந்தாலும், அவளுக்குத் தோல்வியை ஒப்புக்கொள்ள இஷ்டம் இல்லை. “இதுதான் இப்படி இருக்கட்டும் அந்த ஐம்பது ரூபாய் உங்களை அறியாமல் எப்படி முளைத்…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவள்.

தேவகி முதலிய கதைகள் – சிறுகதைத் தொகுப்பு 1949லிருந்து… (இரண்டாம் பதிப்பு)

***
குகப்பிரியை

பழைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். பத்திரிகையாளர். ‘மங்கை’ என்னும் இதழை ஓராண்டிற்கும் மேலாகத் தனிக் கவனத்துடன் நடத்தியவர். பேச்சாளர்.

‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல், சிறுகதைகளுக்காக முதல் பரிசுப் பெற்றவர். காந்தியத்தின் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால் தன் வாழ்நாளின் இறுதிவரை கதராடையை அணிந்தார்.

நூல்கள்: சந்திரிகா, இருள், ஒலி, திப்பு சுல்தான், மார்த்தாண்டவர்மன், தேவகி முதலிய கதைகள், ஜீவகலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *