‘அம்மா… எங்க கிளம்பிக் கிட்டு இருக்கீங்க’ என்று நறுமுகை கேட்க,
‘மாலதி அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு பார்க்கப் போறேன்’ என்றார் அம்மா.
‘சரி, சீக்கிரமா வந்துருங்க..’.
‘வந்தர்றேன் ஹீட்டர் போட்டு வை வந்ததும் குளிக்கணும்’.
‘குழந்தையைத் தான பார்க்கப் போறீங்க அதுக்கு எதுக்கு வந்து குளிக்கவேண்டும்..?’ என்று கேள்வி கேட்டாள் நறுமுகை.
‘அதெல்லாம் தீட்டு.., உனக்குப் புரியாது.’ என்றார் அம்மா.
நறுமுகை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
‘ம்மா… முறையாகப் பார்த்தால் குழந்தையைப் பார்க்கப் போறவங்க தான் குளித்துவிட்டு சுத்தமாக சுகாதாரமாப் போகவேண்டும். குழந்தைக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க..’ என்று தன் மனதில் பட்டதைச் சொன்னாள் நறுமுகை.
‘அது என்னமோ சரி தா. ஆனால் நான் இப்படியே பழகிட்டேன்.’ என்று அம்மா பதில் மொழி கூற,
‘பழகினால் என்ன…இனிமே மாற்றிக்கங்க.’ என்றாள் நறுமுகை மென்மையாக,
இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா… புருவத்தை உயர்த்தியவாறு,
“இன்றைய இளைஞர்களிடம் எதையும் பகுத்தறிந்து செய்யும் ஆற்றல் நன்றாக வளர்ந்திருக்கிறது. மனதில் தெளிவும், சமூக அக்கறையும் அதிகமாக உள்ளது. இன்றைய சூழலில் இது தான் நம் அனைவருக்கும் மிகவும் தேவையான ஒன்று.” என்று முடித்தார் அப்பா.
– பொதிகை மின்னல் மாத இதழ், பிப்ரவரி 2022