நம்ப முடியாத சாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 2,181 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆஸ்பத்திரி வார்ட்டில் மருந்து நெடி எனக்குப் பழகி விட்டது. அச்சிடன்ற் வார்ட்டில் நான் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாகின்றன. சிறிய விபத் துத்தான். என் வலது கால் எலும்பு முறிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கணப் பொழுதில் அந்த விபத்து நடந்து முடிந்துவிட்டது.

எனது வீட்டிற்கும் நான் கல்வி கற்பிக்கின்ற பாடசாலைக்கும் இரண்டு மைல்கள் இடை வெளித் தூரம். வழக்கமாக பஸ்ஸில்தான் பயணம் செய்து வந்தேன். திடீரென அதிகரித்து விட்ட கட்டண உயர்வு என் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதனால் சைக்கிலில் பயணம் செய்யத் தொடங்கினேன்.

ஒரு பெண், அதுவும் ஆசிரியை சைக்கிலில் செல்வதா என ஆரம்பத்தில் அயலவர்கள் முணு முணுக்கத்தான் செய்தார்கள்.- பின்னர் அது சகசமாகிவிட்டது. பெண்கள் உத்தியோகம் பார்ப்பதே சிரமம். அதுவும் இப்படிச்
சைக்கிலில் சென்று பார்ப்பதென்றால்……?

என்ன செய்வது ஏழையாகப் பிறக்கக் கூடாது. அதுவும் சீதனம் கேட்கின்ற யாழ்ப்பாணச் சமூகத்தில் பிறக்கக்கூடாது.

இன்றைக்காவது ரகு வருவாரா? நான் எழுதிய கடிதம் அவருக்குக் கிடைத்திருக்கும். நேற்றே வந்திருக்க வேண்டும். வரவில்லை. கந்தோரில் கடும் வேலையாக இருந்திருக்கும். இல்லாவிட்டால் ஓடி வந்திருப்பார்.

‘…ரகு..’ நினைவே இனி மையாக இருக்கிறது. அவருக்கும் எனக்கும் காதலுறவு ஏற்பட்டு பத்தாண்டுகள். அவர் என் வீட்டிற்கு அருகில் குடிவந்தார். அவரின் தகப்பனார் வங்கியொன்றில் மனேச்சர். வசதியான குடும்பம். கார், ரேடியோ, ரெலிவிசன் வசதிகள். மூத்தவர்தான் ரகு. அவருக்குப் பின் இரண்டு ஆண்பிள்ளைகள். ஒரு தங்கை, அவ்வளவுதான்:

என்னை அவருக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. எனக்கும் தான்.

எங்கள் காதலுறவு வெளியில் தெரிந்தபோது என் வீட்டார் திகைத்துப்போய் விட்டார்கள். அம்மா என்னைத் திட்டித் தீர்த்தாள்.

‘அடி பாவிப் பெண்னே. என்ன வேலையடி செய்தாய்? அவர்களுக்கும் எங்களுக்கும் எணி வைத்தால் கூட எட்ட முடியாதே? அன்றாடச் சீவியத்திற்கே கஷ்டப்படுகிறோம், அவர்கள் பணக்காரர் உன்னை ஏற்றுக் கொள்வார்களா?…’ அம்மா அழுதாள்.

அவரை அவள் புரிந்து கொள்ளவில்லை. மணந்தால் என்னைத் தான் மணப்பேன் என அவர் எனக்கு வாக்களித்திருக்கின்றார். அவர் எவ்வளவு தீவிரமாக என்னை நேசிக்கிறார் என்பது அம்மாவுக்குப் புரியவா போகிறது? உண்மையான காதலிற்கு பணம் தடையாகுமா?

உண்மை புரிய நீண்ட காலமாயிற்று.

ரகு வருவாரா?

மாணிக்கம் வந்தார். ஓ மணி அடித்துவிட்டதா? இப்போது ஐந்துமணியா? இல்லையே? பார்வையாளர்கள் நோயாளிகளைப் பார்ப்பது ஐந்து மணிக்குத்தானே?

என் கட்டில் அருகில் மாணிக்கம் வந்து நிற்கிறார். அவரை எனக்கு முன்னரே தெரியும். எங்கள் சந்தியில் வாடகைக்கார் வைத்திருக்கிறார்.

‘என்னால் உங்களுக்கு இப்படி நேர்ந்துவிட்டதே?’ என்கிறார் மாணிக்கம்.

‘என்னில்தான் தவறு. நான் சந்தியால் திரும்பும்போது சேலை பெடலுடன் காலில் மிதிபட்டுச் சிக்கிக் கொண்டது. என்னால் சைக்கிலைத் திருப்ப முடியவில்லை. சரியான சைற்றில் வந்து
கொண்டிருந்த உங்கள் காருடன் மோதிக் கொண்டேன். உங்களில் பிழையில்லை. என்னில்தான் பிழை. நீங்கள் சடன் பிறேக் போட்டிருக்காவிடின் கார் என் மீதே ஏறியிருக்கும். நல்ல வேளை. இம்மட்டோடு போயிற்று’

மாணிக்கம் என்னைப் பரிவோடு பார்த்தார்.

‘நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னால் உங்களுக்கு..’

நான் வேசுமாகக் குறுக்கிட்டேன்: ‘அதிலொன்றுமில்லை கவலைப்படாதீர்கள். முறிந்த கால் எலும்பு விரைவில் ஒட்டி விடுமாம்’.

மணி அடிக்கிறது. இப்போதுதான் ஐந்து மணி.

‘நான் முன்னர் வந்திட்டேன் எனக்குத் தெரிந்தவர் வார்ச்சரி’

நான் புன்முறுவல் பூத்தேன். அவர் போய்விட்டார்.

தூரத்தில் என் தம்பி பாஸ்கர் வருவது தெரிகிறது. சாப்பாடு கொண்டு வருகின்றான். அம்மா வரவில்லையா?

‘அக்கா.. யார் வந்திட்டுப் போகிறது? கார்க்கார மாணிக்கமா..?’

நான் தலையை அசைக்கின்றேன்.

‘தன்னில் வழக்கு வராதிருக்க ஏதாவது உன்னிடம் கேட்டாரா?”

‘சீச்சி அப்படியில்லை. மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போகிறார், நல்லவர் என்னில்தான் பிழை. அம்மா ஏன் வரலில்லை’

‘சின்னத் தங்கச்சி பெரியவளாகிவிட்டாள், அக்கா…’

என்னுள் பூகம்பம் வெடித் தது போல உணர்ந்தேன். தம்பி என்னைக் கவலையோடு பார்த்தான். ஐயா கமம் செய்பவர். தம்பி கராச் ஒன்றில் வெல்டிங் செய்கிறான். எங்களுக்காக இடையில் படிப்பை நிறுத்திவிட்டுக் காரச்சிற்குச் செல்கிறன்.

வீட்டில் மூன்று குமர்கள்.

நான் மூத்தவள். எனக்கு வயது இருபத்தாறு. ரகு வீட்டார் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால் எங்கள் கலியாணம் நடந்திருக்கும். சிலவேளைகளில் நான்…

அவர்கள் எங்கள் கலியாணத்திற்கு மறுக்கவில்லை. பரிபூரணமாக ஒப்புக் கொண்டார்கள். எனக்கு அந்த நாள் நல்ல நினைவில் இருக்கிறது. ரகுவின் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அம்மா மகிழ்வுடன் வரவேற்றாள். நான் பூரிப்புடன் அவர்களைப் பார்த்தேன்.

ரகு எனக்கு முதலே சொல்லியிருந்தார். அம்மா பெண் கேட்க வருவார் என்று. இவ்வளவு இலகுவாக எங்கள் காதல் நிறைவேறுகிறதே?

‘சுசீலாவை எனக்குப் பிடித் திருக்கிறது. நல்ல பெண். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது’ என்று ரகுவின் அம்மா ஆரம்பித்தார்.

‘எங்கே சின்னதுகளின் ஆசைக்கு நீங்கள் மறுத்துவிடுவீர்களோ என்று நான் மிகவும் பயந்தேன்’ என்கிறாள் என் அம்மா.

‘சீச்சி…….அப்படியெல்லாம் வாழப்போகிற பிள்ளைகளைப் பிரிக்கக்கூடாது. அந்தந்த வயதில் காதல் வருகிறது சகசம். ஏற்றதென்றால் பெற்றோர் ஒருக்காலும் மறுக்கக் கூடாது’

பணம் இருந்தாலும் ரகுவின் அம்மா எவ்வளவு பெருந்தன்மையாகப் பேசுகிறார். நான் கொடுத்து வைத்தவள்.

‘கலியாணத்திற்கு நாள் வைப்போம். ரகு பாங்கில் பெரிய உத்தியோகம். நேற்றுக் கூட அவனுக்கு ஒரு கலியாணம் பேசி வந்தது. இரண்டு லட்கம் ரூபா சீதனம். யாழ்ப்பாணத்தில் வீடு வளவு. ஐம்பதினாயிரத்திற்கு நகை. நல்ல இடம். நான்தான் அது வேண்டாம் என்று மறுத்திட்டேன். அவன் விரும்பியவளைத்தான் செய்து வைக்க வேண்டும்’

‘உங்கள் பெருந்தன்மை யாருக்கு வரும்’

ரகுவின் அம்மா முகமெல்லாம் மலரச் சிரிக்கிறார்.

“உங்களிடம் அவர்கள் தருவதாகச் சொன்னளவு சீதனம் கேட்க முடியாது. கேட்பதும் சரியில்லை. ஒரு இருபது பவுனில் நகைபோட வேண்டும்’

அம்மா திகைத்துப்போய்விட்டாள். இருபது பவுன்? ஒரு சவரன் இரண்டாயிரம் ரூபா. நாற்பதினாயிரம். எவ்வளவு பெரிய தொகை?

‘நாங்கள் பாருங்கள் பதினொரு பவுணுக்குக் குறைவாகத் தாலிக்கொடி கட்டுவதில்லை. அதுவும் நீங்கள்தான் பொறுக்க வேண்டும்’.

ரகுவின் அம்மா போய்விட்டாள். அவள் எழுப்பிவிட்ட சிக்கல் பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறது. என்னால் எதுவும் பேச முடியவில்லை.

‘காதலிக்கும் போது இது தெரியாமல் போய்விட்டது, ரகுவிற்கு. இப்ப சீதனம் வேண்டுமாம். வெட்கம் கெட்டவன். ஒரு பெண்ணிற்குத் தாலி கட்டக்கூட வக்கில்லாதவனுக்கு ஒரு கலியாணம்’ என்று என் தம்பி பாஸ்கர் குமுறினான்.

இவை நடந்ததன் பின்னர் ரகு என்னைச் சந்தித்தார்: நான் குமுறித் தீர்த்தேன்.

‘இதோ பார் சுசி நான் என்ன செய்வது? அம்மாவின் விருப்பமில்லாமல் நான் உன்னைக் கட்டிக்கொள்ள முடியாது. அம்மா உன்னைக் கலியாணம் செய்து கொள்வதை மறுக்கவில்லை. நகைகூட இல்லாமல் எப்படி ஒரு கலியாணம்?’

ரகுவின் வார்த்தைகள் எனக்குத் துயர் தந்தது: அழுதேன்.

‘உனக்காக நான் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் காத்திருக்கிறேன். நகை தேடிக் கொண்டதும் கலியாணம்…’

‘இவ்வளவு பவுணில நகை தேட யாரால் முடியும்?’

‘என்ன செய்வது? முயற்சிக் தான் வேண்டும். சுகி நீதான் என் மனைவி’

ரகு என்னைப் பார்க்க இன்று வருவாரா?

‘என்ன அக்கா. யோசனை? ‘ என்று தம்பி கேட்கிறான்.

‘ஒன்றுமில்லை.. தம்பி…தங்கச்சியும் சாமர்த்தியப்பட்டிட்டாள்….ம்…’

‘ரகு வந்தாரா, அக்கா?…’ என்று தம்பி கேட்டுவிட்டு என்னை ஊடுருவிப் பார்க்கிறான்.

‘இல்லை. இங்கு வரவில்லை: தெரியாதாக்கும்’ என்றேன் நான் ஏக்கத்துடன், அவன் சற்றுநேரம் மௌனமாக நின்றிருக்கிறான்.

‘ரகு வீட்டிலிருக்கிறார். காலை வந்தாராம் கண்டேன்’

என்னிதயத்தின் மூலையில் வலியெடுத்தது. ரகு காலை வந்திருந்தால் மத்தியானம் வந்து என்னைப் பார்த்திருக்கலாம். ஏன் வரவில்லை? எதற்காக வரவில்லை?

‘நான் வருகிறேன் அக்கா’ தம்பி போய்விட்டான்.

என் உள்ளத்தில் வேதனை தீயாக எரிகிறது.

நான் உத்தியோகத்திற்குப் போகத் தொடங்கியதும் ரகுவிற்காகத்தான். அவரின் முயற்சியால்தான் எனக்கு ஆசிரியை வேலை கிடைத்தது. யாரோ செல்வாக்கானவர்களைப் பிடித்து எனக்கு உத்தியோகம் வாங்கித் தந்திருந்தார்.

உத்தியோகம் கிடைத்ததும் நான் சந்தோசப்பட்டேன். மாதம் ஐந்நூறு ரூபா சம்பளம். ஒரு வருடம் வேலை செய்தால் ஆறாயிரம் ரூபா. இந்த வருடம் வேலை செய்தால் ரகுவை வாங்குவதற்குரிய பணத்தை உழைத்து விடலாம். நப்பாசை. நான் வாழ்க்கைப்பட என் சீதனத்திற்காக உழைக்கப் புறப்பட்டேன்.

உழைப்பின் பலன்? ஒரு தங்கச் சங்கிலியும் ஒரு சோடி காப்பும் செய்திருக்கிறேன்.

ரகு இன்று வருவாரா? எவ்வளவு அன்பை அவருக்காசு நான் என்னிதயத்தில் தேக்கி வைத்திருக்கிறேன்? என்னை ஏன் ஓடிவந்து பார்க்கவில்லை… கொழும்பிலிருந்து என் கடிதம் கிடைத்ததும் பார்க்க வந்திருக்கிறார். தாயார் தடுத்துவிட்டாரா? தடுக்க மாட்டாரே? ஏதாவது பிரச்சினையாக்கும். வராமல் இருக்க மாட்டார், வருவார்.

நான் எனக்கே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் கால் வலியிலும் பார்க்க என் இதயம் கூடுதலாக வலிக்கிறது. கண்கள் பெருக்கெடுக்குமாப்போல அவஸ்தை.

மறுநாளும் ரகு வரவில்லை, அம்மா வந்திருக்கிறாள்.

அம்மா சோர்ந்து காணப் பட்டாள். சின்னத்தங்கை பெரியவளாகிய கவலையாக இருக்கும். அம்மா வெகு நேரம் எதுவும் பேசவில்லை. கவலை படிந்த முகம் எனக்குத் துயரைத் தந்தது. குமருகள் வீட்டில் பெருமூச்செறிவது போல நிலைமை மிகய் கொடூரமானது. பெரும் சுமை, அம்மா அந்தச் சுமையால் வாடி யிருக்கிறாள்.

‘அம்மா…’

‘என்ன மனிசர். பணக்காரர் பணக்காரர்தான். நான் எவ்வளவோ சொன்னேன், நீ கேட்கவில்லை. விரும்பிவிட்டு சீதனம் கேட்கிறார்கள்… இப்ப…’ அம்மா தயங்கினாள்.

“என்ன அம்மா?…’

‘உன் கால் முறிந்துவிட்டதாம், இனி நீ நடக்கும்போது இழுத்திழுத்துத்தான். நடக்க வேண்டுமாம், டொக்டர் சொன்னாராம். அதனால் நகையோடு நன்கொடையாக இருபத்தையாயிரம் தரவேண்டுமாம்‘

‘யார் கேட்டார்கள்’ என் குரல் வியப்புடன் ஒலித்தது.

‘வேறு யார்? ரகுவின் அம்மாதான்’

என்ன மனிதர்சுள்? இந்தச் சமூகத்தில் பெண்ணிற்கு இருக்கிற மதிப்பு இவ்வளவுதானா. விலை கொடுத்துத்தான் மாப்பிள்ளை வாங்க முடியுமா?

ரகு நீங்களும் இதற்கு உடன்பாடா? உங்களை நான் அறிவேன். நீங்கள் வாயில்லாத பூச்சி. உங்களுக்குக் காதலிக்கத் தான் தெரியும், அதற்கு அப்பால் எதுவும் தெரியாது. என்னைத் தொடக்கூடத் துணிச்சலற்ற நீங்களா, உங்கள் அம்மாவை எதிர்த்து என்னை மணக்கப் போகிறீர்கள்?

என் கால்களின் பக்கமாக யாரோ நிற்கிறார்கள்.

மாணிக்கம் நிற்கிறார். அவரின் கண்களில் கவலை. என் கட்டுப்போட்டு உயர்த்தியிருந்த காலை வேதனையோடு பார்க்கிறார்.

‘இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, அம்மா… என்கிறார்.

‘அதற்கென்ன தம்பி செய்கிற;? எங்கள் விதி அப்படி’ என்று அம்மா பெருமூச்செறிகிறாள்.

‘இப்ப எப்படியிருக்கிறது’ என்று என்னிடம் மாணிக்கம் கேட்டார்.

‘காலிலிருந்த வலி, நெஞ்சிற்கு வந்திருக்கிறது’ என்றேன் முகத்தைத் திருப்பியபடி. என் கண்கள் கலங்குவதை அவர் ஏன் காணவேண்டும்?

ரகு என்னைக் காண மறுநாளும் வரவில்லை. தம்பி வந்திருந்தான்.

‘அக்கா, நான் மிடில்ஈஸ்ரிற்குப் போகப்போகிறேன்’

வியப்புடன் அவனை நான் பார்க்கிறேன்.

‘என்ன வேலை?… எப்படிக் கிடைத்தது?’

‘வெல்டிங்தான், சவுதீக்குத் தான் போகப்போகிறேன். பத்தாயிரம் கட்டியது கிடைக்கும்‘ என்கிறான்.

‘பத்தாயிரமா?…’ என்று நான் வீரிடுகிறேன். அவன் என்னைக் கவலையுடன் பார்க்கிறான்.

‘உனக்காகத்தான் அக்கா, போகப்போகிறேன். உனக்காக உழைக்கத்தான் அக்கா. உன் கலியாணத்திற்காக இரண்டு வருடம் வேலை செய்தால் போதும். அக்கா, இங்கே இருந்தால் சீவிக்கலாம். ஆனால் உழைக்க முடியாது. உனக்காகவும் தங்கச்சிகளுக்காகவும் நான் போகத்தான் வேண்டும். ரகுவைக் கண்டேன், பேசினார். மிடில் ஈஸ்ருக்குப் போய் உழைப்பது நல்லது என்றார். உழைத்து அனுப்பினால் நெதியில் உன்னைக் கலியாணம் செய்து கொள்வதாகவும் சொன்னாரக்கா…’

தம்பியை நான் நிமிர்ந்து பார்க்கிறேன். பெண் சகோதரிகளுடன் பிறந்த யாழ்ப்பாணத்துத் தம்பி அவன். இவனைப் போல எத்தனை பேர்?

‘ரகு. இப்படிச் சொன்னாரா?’

‘ஓம் அக்கா…’

அவரைக் கலியாணம் செய்து கொள்வதற்காக நான் உழைக் கிறேன். இப்போது தம்பியும் உழைக்கப்போகிறான். ரகு நீங்கள் இவ்வளவு? சேச்சே.. உங்களைப்பற்றி எவ்வளவு உயர்வாக நான் எண்ணியிருந்தேன்.

‘தம்பி, நீ உழைக்கப் போவதை நான் தடுக்கவில்லை. போய் நல்லா உழை. ஆனால் பத்தாயிரத்திற்கு என்ன செய்வாய்? …..’

‘மாணிக்கம், அவர்தான் கார்க்கார ‘மாணிக்கம். றைவராக சவுத் அரேபியாவிற்குச் செல்வதற்கு ஒரு கம்பனியில் பத்தாயிரம் கட்டியிருந்தாராம். வருகிற பத்தாம் தேதி பிளேனாம். ஆனால் அவர் போக முடியவில்லை. அவரின் தாய்க்கிழவி இருந்தாற் போல படுக்கையில் விழுந்திட்டாவாம். இன்றோ நாளையோ என்றிருக்கிறதாம். அதனால் அவர் போகவில்லை. அந்த இடத்திற்கு என்னைப் போகும்படி சொல்றார். பேசி ஒழுங்குபடுத்தி விட்டார் அக்கா. போய் தன் பணத்தை உழைத்து அனுப்பினால் போதுமாம். யாருக்கு இப்படி மனது வரும்’

என் இதயத்தின் வலி சற்றுக் குறைவது போல இருக்கிறது.

நான் சற்றும் எதிர்பாராத, அந்த மாலையில் என்னைக் கான ரகு வந்திருந்தார்.

‘சுசி….நான் இப்போது றெயிலிற்குச் செல்கிறேன். அதற்குள் அம்மாவிற்குத் தெரியாமல் உன்னை வந்து பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்கிறார். நான் அவரை ஏளனமாகப் பார்க்கிறேன். வேறு எப்படிப் பார்க்க முடியும்? கண்கள் பெருக முயல்கின்றன. அழக் கூடாது.

‘என்னால் உன்னை மறக்கவே முடியவில்லை சுசி. இன்னமும் எவ்வளவு காலம்தான் கலியாணம் செய்யாமல் இருப்பது? நல்ல வேளை பாஸ்கர் சவுதிக்குப் போகிறானாம். ஒரு வருடத்தில் எப்படியும் காசு அனுப்பிடுவேன் என்றான் அதுவரை நான் காத்திருக்கிறேன்‘

அவரை அடங்காக் கோபத்துடன் பார்க்கிறேன்.

‘நீங்கள் எல்லாம் ஒரு மனிசரா? ஆண் பிள்ளையா நீங்கள்’ என்று வீறிடுகிறேன்.

‘சுசி..’

‘உங்களுக்கு ஏன் ஒரு பெண் பிள்ளை? தாலி கட்ட வக்கில்லாமல் பொம்பிளையிடம் காசு வாங்கித் தாலி கட்டிக்கொண்டு… சீதனத்தில் சோக்குப்பண்ண…தயவு செய்து போய்விடுங்கள் காத்திருக்கிறாராம். காத்து. எனக்கா? பணத்துக்கா? உங்களுக்கு ஒரு லோங்ஸ்… சேர்ட்…’

நானா இப்படிப் பேசினேன்? ரகு மிரண்டுவிட்டார். விறு விறென்று நடக்கிறார்.

நம்பக்கூடாது. ஒருக்காலும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் நம்பமுடியாத சாதி இந்த ஆண்கள்தான்.

என் கண்கள் குளமாகின்றன. பத்தாண்டுகளாக நான் கட்டிய மனக்கோட்டைகளை எல்லாம் அழுது கரைத்துவிடும் வேகம், சீ, எவ்வளவு கேவலமான ஆண்?

அன்று மாலை அம்மா வந்திருந்தா.

அழுது வீங்கிய என் முகத்தைப் பார்த்துத் திகைத்துவிட்டாள்.

‘அழுதாயா, சுசி…..’

‘இல்லை அம்மா தம்பி வெளிநாட்டிற்குப் போகிறானாமே’

அம்மாவின் முகம் மலர்கின்றது.

‘அந்தப் பொடியன் எவ்வளவு தங்கமானது? இந்தக் காலத்தில் இப்படி யார்தான் உதவ முடியும்? யாருக்கு மனம் வரும்’ மாணிக்கத்தைப் பற்றி அம்மா புகழ்ந்து தள்ளினாள். அதற்கு அவர் உரியவர்தான்.

அம்மா தொடர்கின்றாள்: ‘மாணிக்கத்தின் தாய்க்கிழவி சாகக் கிடக்கிறா. அதற்குள் மாணிக்கத்திற்கு ஒரு கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டும். மாணிக்கத்திற்குப் பெண் தேடுகிறார்கள்.உன் சாதகத்தைத் தரகர் பொன்னப்பர் கேட்டவர், கொடுக்கட்டுமா சுசி…?’

அம்மா ஏதோ கூறத்தகாததைச் சொன்னது போல பரிதாபமாக என்னைப் பார்க்கிறாள்.

‘சரி அம்மா…’

அம்மா என்னை அடங்கா வியப்புடன் பார்க்கிறாள். அம்மாவிற்குப் புரியாது.

அன்று மாணிக்கம் வந்திருந்தார். அவரை என்னால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.

‘சாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம் என்று கூறி விட்டன்’ என்றார் அமைதியாக.

நான் துடித்துப்போய் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறேன். அவர் சிரிக்கிறார்.

‘மனப்பொருத்தம் இருந்தால் சரிதானே, சுசி..’

‘சீதனம்?…’

‘வேண்டாம்…’

‘நீங்கள்தான் சீதனம் தந்திருக்கிறீர்கள்?’ என்றேன்.

‘எப்படி..?’

‘என் தம்பிக்குப் பத்தாயிரம் டொனேசன் கொடுத்திருக்கிறீர்களே? எனக்காக…’

அவர் சிரிப்பது எனக்கு இனிமையாக இருக்கிறது.

– மல்லிகை இதழ் 154, ஆகஸ்ட் 1981

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *