கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 18,794 
 
 

“ அவனுக்கு என்ன வயசாகுது ? “

“ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு . அந்த டாக்டருக்கும் மானமில்லாமப் போச்சு . அவனே அந்தப் பொண்ணை மாடிக்கு அனுப்பிவைப்பான் போல இருக்கு . “

“ டெளரி ப்ராப்ளம் ஈஸியா ஸால்வாயிடுதுன்னு நினைக்கிறானோ?’

தொடர்ந்து கரகரத்த குரலில் கேட்ட சிரிப்பு என்னுள் சுட்டது . பாஸ்டர்ட்ஸ் !

“ அவன் எங்கே சார் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான் . சும்மா கொஞ்ச நாளைக்குதான் . “

“ பக்கத்தில இருக்கற உங்களுக்கெல்லாம் சங்கடமா இருக்குமே ?”

“ இருக்காம . அதுவும் அவனும் அதுவும் சேர்ந்து சிரிக்கிற சப்தம் கேட்கறப்ப உடம்பெல்லாம் குத்தும் . வெளியே வந்துட்டா ஏதோ யோக்கியன் மாதிரி தள்ளி நின்னுதான் பேசுவான் . உள்ளே என்னன்ன அசிங்கம் நடக்குதோ ! பக்கத்தில உள்ளவங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறாங்க . “

” அதானே . கொஞ்ச நாளில விஷயம் வெளியே தெரிஞ்சிடும் . “

“ அதுக்கு முன்னாடியே நாமா வேற இடத்துக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன் . இதைப் பார்த்து நம்ம பொண்ணுங்களும் கெட்டுடறதுக்கு முன்னால நாமா விலகிக்கிறது நல்லது இல்லையா ? “

நான் இருக்கும் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருந்த சிவராமன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் .

மனதினுள் ஏற்பட்ட வெறியை அடக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன் .

வழி முழுவதும் மனதில் குழப்பம் .

“ ச்சீ ! எப்படி இவர்களால் இவ்வளவு அசிங்கமான எண்ணங்களை மனதில் உருவாக்க முடிகிறது ! “

தினமும் மாடிப்படி ஏறும்போதே கீழே இருந்து கேட்கும் உமாவின் குரல் காதில் ரீங்காரமிட்டது .

“ குட் ஈவினிங் “

எவ்வளவு வித்தியாசமான பெண் ! உருவத்தால் மட்டுமில்லை ; மனதாலும் அழகானவள் .

உமாவைப் பற்றிய நினைவுகள் சிவராமன் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த கசப்பை விரட்டியடித்தன .

மூன்று மாதங்களுக்கு முன்னால் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த போதுதான் டாக்டர் எனக்கு அறிமுகமானார் . மாடியில் பயன்படுத்தாமல் கிடந்த அறையை எனக்கு வாடகைக்கு விட்டார் .

அந்த பழக்கம் வெறும் வாடகைக் கணக்கோடு நின்றுவிடவில்லை . பழகியவர்களை விட்டு வெகு தூரத்திற்கு வந்திருந்ததனால் மனதில் ஏற்பட்டிருந்த தனிமை உணர்வுகளை எவ்வளவு எளிதாக விலக்கிவிட்டார்கள் டாக்டரும் அவர் மனைவியும் .

அன்பை மட்டும்தான் தந்தார்கள் அவர்கள் . அன்போடு ஆச்சரியத்தையும் தந்தாள் உமா . டாக்டரின் மகள் . இந்துமதியின் கற்பனைகளில்கூட உருவாக முடியாத ஒரு பெண் ஜீனியஸ் , ப்ளஸ் டூ படிக்கும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு விஸ்தாரமான சிந்தனைகளா ! ஆக்கரீதியான அவளது சிந்தனைகள் , விஸ்தாரமான விவாதங்கள் , அறிவு பூர்வமான உரையாடல்கள்… பதினைந்து வயதில் இப்படி ஓர் அறிவுஜீவியா ! சுயமாக சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் என் மனம் தேடிக்கொண்டிருந்த ஒரு துணையை அவளிடம் கண்டபோது வெகு எளிதாக என்னை அவளோடு இணைத்துக் கொண்டேன் .

மாடி அறைக்கு நான் குடிபுகுந்த மாலை டாக்டரோடு என் அறைக்கு வந்தவள் நான் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்து வியந்தாள் .

“ வாட் எ லவ்லி கலெக்‌ஷன் . இதையெல்லாம் எனக்குப் படிக்க்க் கொடுப்பீங்களா ? “

நான் இலேசாகச் சிரித்தேன் .

“ தீஸ் ஆர் நாட் மில்ஸ் அண்ட் பூன் டைப்ஸ் . எல்லாமே ஹெவி சப்ஜெக்ட்ஸ் . உனக்கு போரடிக்கும் . “

அவள் முகம் வாடியது .

“ இல்லை அங்க்கிள் . ஹெவி சப்ஜெக்ட்ல எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்ட் . இந்த ஊரில இத மாதிரி சப்ஜெக்ட் எல்லாம் கிடைக்கறதே இல்லை . அப்படியே எனக்குப் புரியாட்டாகூட உங்களுக்கு டைம் கிடைக்கறப்போ உங்ககிட்டே கேட்கலாமே . “

நான் டாக்டரைப் பார்த்தேன் . புன்னகை செய்தார் .

“ ஸோ , மை கிரேஸி டாட்டர் ஹேஸ் காட் எ கிரேஸி கம்பானியன் அட் லாஸ்ட் . “

“ அங்கிள் ! உங்ககிட்டே நீட்ஷே வொர்க்ஸ் இருக்குதா ? நீட்ஷே படிக்க ரொம்ப ஆசை . ஆனால் இதுவரைக்கும் எதுவுமே கிடைக்கலே . அப்பாகிட்டே கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு . “

நான் எத்வும் பேசாமல் Ecce Homo – வை எடுத்து நீட்டினேன் . வாங்கியவள் தாங்க்ஸ் சொல்லிவிட்டுப் போய்விட்டாள் .

மறுநாள் மாலை நான் படிகளில் ஏறும்போது குட்ஈவினிங் சொன்னவள் என்னுடன் மாடிக்கு ஏறிவந்தாள் .

“ நீட்ஷே ரொம்ப போரடித்து விட்டாரா ? “

“ போரா ? கொயட் இன்ட்ரஸ்டிங் . எப்படி இவ்வளவு வித்தியாசமா அவரால திங்க் பண்ண முடிஞ்சதுன்னு ஆச்சரியமா இருக்கு . “

அதன்பின் ஒவ்வொரு நாளும் அவள் புதுப்புது உமாவாகத் தோன்றினாள் எனக்கு . ஃப்ராய்டையும் ஜங்கையும் வேறுபடுத்தும் உமாவாக ; ஸார்த்தேக்கு புதுக்கோணத்தில் விளக்கம் அளிக்கும் உமாவாக; பைரனையும் , கீட்ஸையும் படித்து மனமுருகும் உமாவாக …

அந்தப் பதினைந்து வயது மனதின் உண்மை விஸ்தீரணம் என்னைப் பிரமிக்க வைத்தது .

என் மனதில் வரையப்பட்டிருந்த அழகான ஓவியத்தை எவ்வளவு எளிதாகச் சிதைத்துவிட்டார்கள் .

நோ ! அந்த அழகான ஓவியம் சிதைந்து விடக்கூடாது . என்னோடு பேசுவதால் உமாவின் பெயருக்கு இழுக்கு வருமென்றால் இனி அவள் என்னோடு பேசவே வேண்டாம் . எங்கள் சந்திப்புகள் அவளைப் பார்த்து மற்ரவர்களைச் சிரிக்க வைக்குமென்றால் இனி அந்தச் சந்திப்புகள் நிகழவே வேண்டாம் .

சாப்பிட்டுவிட்டு , வீட்டிற்குத் திரும்பியபோது உமா தூங்கிவிட்டிருந்தாள் . டாக்டர் மட்டும்தான் விழித்துக் கொண்டிருந்தார் .

“ என்ன இவ்வளவு லேட் ? உமா ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தா . ஜான் லாக் படிச்சுட்டு ஏதோ சந்தேகமாம் . “

“ ஸாரி . ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஃப்ரண்டைப் பார்த்தேன் . பேசிக்கிட்டுருந்ததில் நேரம் போனதே தெரியலை . “

வேகமாகப் படியேறியவன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு படுக்கையில் விழுந்தேன் . தூக்கம் வரவில்லை . முடிவில்லாத குழப்பங்கல் .

காலையில் சீக்கிரமாக எழுந்து , உமாவின் பார்வையில் படுவதைத் தவிர்த்து வெளியேறி , மாலை நேரங்களைக் குளக்கரையின் தனிமையில் கழித்து , இரவு தாமதமாக அறைக்குத் திரும்பி … அந்த மூன்று நாட்களில் என் மனதில் வலி பெரிதாகிவிட்டிருந்தது .

மூன்றாவது நாள் இரவு அறைக்குத் திரும்பியபோது பாரபட் சுவரில் உட்கார்ந்திருந்த உமா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் .

“ என்ன , இரண்டு நாளா இவ்வளவு லேட் ? “

“ ஃபிலிம் போயிட்டேன் . அது சரி , நீ இன்னும் தூங்கலே ? “

“ நாளைக்கு லீவ்தானே . “

என்னோடு அவளும் உள்ளே வந்தாள் . வெளிச்சத்தில் என்னைப் பார்த்ததும் அவள் குரலில் ஏற்பட்ட மாற்றம் என்னை மேலும் பாதித்தது .

“ ஏன் இப்படி இருக்கீங்க ? ‘

நான் வாழ்க்கையில் முதன் முதலாக அழுதேன் . சிவராமனின் வார்த்தைகளால் ஏற்பட்டிருந்த பாதிப்பை அவளிடம் கொட்டினேன் .

அவள் மிக இலேசாகச் சிரித்தாள் .

“ அங்க்கிள் ! அவங்க நம்மை சரியாகப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களேன்னு இவ்வளவு வருத்தப்படறீங்களே … பட் , நீங்களும் அவங்களைச் சரியாப் புரிஞ்சிக்கிடலையே . அவங்க பேச்செல்லாம் வெறும் வார்த்தைகள்தான் . வெறும் வார்த்தைகளால் களங்கப்படற அளவுக்கு நம்ம நட்பு பலவீனமானதில்லை . சராசரி மனித மனத்தில் பிறக்கும் சாதாரண எண்ணங்களுக்காக நம்மோட அசாதாரணமான நட்பை நாமே சிதைச்சுக்கணுமா … சும்மா மனசைக் குழப்பிக்காம நல்லா தூங்குங்க . நாளைக்கு பேசிக்கலாம் . குட்நைட் . “

அவள் இறங்கிப் போய்விட்டாள் . அவளது அருகாமையால் , அவளது குரலால் இறக்கப்பட்டிருந்த கனம் மீண்டும் என் மனதி புகுந்துகொண்டது .

மறுநாள் காலையில் உமா எழுவதற்கு முன்னரே வெளியே கிளம்பிவிட்டேன் . பாய் கடையில் சிகரட் பற்றவைத்துக்கொண்டு நகர்ந்தபோது ஷீ லேஸ்கள் அவிழ்ந்திருப்பது கண்ணில் பட்டது . வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த அவசரத்திலும் , குழப்பத்திலும் கவனிக்காமலேயே வந்துவிட்டிருக்கிறேன் .

லேஸ் முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது தெருவில் திருப்பத்தில் இருந்து வந்த குரல்கள் காதில் நுழைந்தன .

“ ஏண்டி சரோஜா , அந்த சாவித்ரியம்மா வூட்ல வேலைக்குப் போகாம நின்னுட்டியாமே . சம்பளம் சரியா தரலையா ? “

சாவித்ரியம்மா , சிவராமனின் மனைவி .

“ த்தூ … எவ்வளவு சம்பளம் தந்தாலும் அந்த வூட்டுக்கு நான் வேலைக்குப் போகமாட்டேன் . மனுஷனா அவன் ? அன்னிக்கு அந்தம்மா ஊருக்குப் போயிருக்கே , வீட்டைத் தெளிச்சு ஒரு கோலம் போடலாம்னு போனேன் . அந்த ஆளு கதவைச் சாத்திட்டு எங்கிட்டே பேசின பேச்சு … சை … யாரு பண்ண புண்ணியமோ அன்னிக்கு தப்பிச்சேன் . வெளியே தெரிஞ்சா அந்தம்மா வருத்தப்படுமேன்னு சும்மா இருக்கேன் . அந்த விவஸ்தை கெட்ட மனுஷன் வீட்ல இனி எப்படி வேலை பாக்குறது ? “

உமா சொன்னதுபோல் , இவர்களின் உண்மை உருவங்களை இனங் கண்டுகொள்ளாமல் நானாகவே மனதில் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் . உமா அளவிற்கு மனதால் பக்குவமடைய நானே இன்னும் வெகுநாட்கள் காத்திருக்க வேண்டும் .

திரைகளை அடுத்தவர்கள் போட்டுக்கொண்டிருப்பதாகப் பிரமைகளை ஏற்படுத்தும் இந்தச் சிவராமன்களுக்கு மத்தியில்தான் வாழவேண்டும் . தங்களை மறைக்க திரைகள் போட்டிருந்தால்கூடப் பரவாயில்லை . எளிதில் இனங் கண்டு கொள்ளலாம் . திரைகளையே உடைகளாக அணிந்திருக்கும் கபட வேஷதாரிகள் இவர்கள் . இவர்களிடம் இருந்து காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு , ஒரு அழகிய மலரின் இதழ்களை நானே பிய்த்துப் போட நினைத்துவிட்டேனே .

நான் திரும்பி வீட்டை நோக்கி நடந்தேன் .

“ இன்னைக்கு ஹாலிடேன்னு மறந்திட்டீங்களா ? “

புதிதாக விரிந்த மலராக உமா புன்னகையோடு கேட்டாள் .

“ எஸ் . சின்ன குழப்பம் . வா . ஜான் லாக்ல என்ன சந்தேகம் ? கமான் , டெல் மீ . “

அவள் என்னைத் தொடர்ந்து படிகளில் ஏறி வந்தாள் .

– 08.11.1981 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்த சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *