புது வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,066 
 

(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பெரியவர்?”

“யாழ்ப்பாண ஆஸ்பத்திரி மோனை.”

“தம்பி?”

“நெல்லியடி.”

“ஆச்சி?”

“உனக்குக் கிழவியோடைதானடா பகுடிப் பேச்சு… வேறை எங்கை போறது? சந்தைக்குத் தானடா மோனை…”

“அக்கா ?”

‘வானு’க்கு முன் ஆசனத்தில் சாரதிக்குப் பக்கத்தில், கைக் குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த கந்தசாமி, ஆச்சிபோல அக்காவும் ஏதாவது சொல்லுவாள் என எண்ணித் திரும்பிப் பார்க்கிறான். அக்கா மணியத்தின் கேள்விக்கு ஒன்றுமே பேசாது சிமிட்டிக் கொண்டே சிரிக்கிறாள்.

வானின் கதவுகளை அடித்துச் சாத்திக் கொண்டே ‘றயிட்’ என்கிறான் மணியம். ‘வான்’ மந்திகை முச்சந்தியைவிட்டுக் கிளம்புகிறது.

வான்’ ஓட்டத்திலே பெயர்போன லயின் ‘களில் பருத்தித்துறை – யாழ்ப்பாண லயி’ னும் ஒன்று. பருத்தித்துறை – யாழ்ப்பாண லயி’ னுக்கு வான் ஓடிப் பலர் பணக்காரர்களாகியிருக்கிறார்கள். ‘காட்ஸ்’ விளையாடிக் கொண்டு, காவாலியாக ‘லாட்ரி அடித்த செல்லத்துரை இன்று நான்கு ‘வான்’ களும், இரண்டு கார் களுமல்லவா வைத்து ஓடுகிறான். மேலும், நல்ல வருமானம் நல்கும் காராஜ் ஒன்றின் ஏகபோக உரிமையாளனும்.

வான்’ நெல்லியடிக்கு வந்துவிட்டது. கைப்பெட்டியுடன் இறங்கிச் சந்தையை நோக்கி நடக்கலானாள் மாம்பழவள்ளி. ஐந்தாறு ‘லோங்ஸ், போட்டவர்கள் வானில் ஏறுகிறார்கள்.

இது, யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்பவர்களைச் சுமந்து செல்லும் கச்சேரி வான்! செல்லத்துரையின் வான்களில் இதுவும் ஒன்று. இதன் முதல் ‘றிப் காலை ஏழரை மணிக்கெல்லாம் பருத்தித்துறையில் ஆரம்பமாகும். கச்சேரியில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் சிலர், மாம்பழவள்ளி. கனகேஸ்வரி ஆகியோர் வாடிக்கைக்காரர். இடம் இருந்தால், வேறு சிலரையும் பனங்கிழங்கடுக்கியது போல் அடுக்கிக்கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாக அசைந்தாடிச் செல்லும் அந்த வான்’ செல்லத்துரைக்கு மற்றைய வான்’ களைவிட இந்த வான் தான் அதிக பணத்தைத் தேடிக்கொடுத்தது. இதற்குக் காரணம் மணியம் என்று தான் சொல்ல வேண்டும்.

மணியம் பத்து வயதாக இருக்கும் பொழுது, கிளீனராகச் செல்லத்துரையின் வானி’ல் சேர்ந்தவன். எட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. மணியத்தினுடைய ‘வானி’ல் ஆட்கள் சேருவது அதிகம். ஆட்கள் விழுந்தடித்துக்கொண்டு அவ்வானுக்கு வருவதின் காரணம் மணியம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு ஆதரவாக ஆட்களோடு பழகுவான் மணியம். பெரியவர், ஆச்சி, அக்கா, அண்ணை , தம்பி, தங்கச்சி என்று அடைமொழி கொண்டு முன்பு பழகியவர்கள் போலல்லவா அழைப்பான் அவன்? மணியத்தை அருமையான பொடியன்’ தங்கக் கம்பி’ என்று எத்னையோ பேர்கள் பாராட்டியிருக்கிறார்கள். ‘போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும் மோனை, சாத்திரியார் முருகேசர் வீட்டுக் குச்சு ஒழுங்கையில் ஒருக்கால் இறக்கிவிடு’ என்று கேட்பவர்களுக்குச் செவிசாய்த்து ஒழுங்கை வீடு முதலியவற்றின் விபரங்களையும் சொல்வான் மணியம்.

‘உண்ணானை உந்தத் தகரப் படலையிலை ஒருக்கால் மறியடா இராசா’ என்று எத்தனைபேர் அவனை இராசா’ வாக்கியிருக்கிறார்கள்.

“தம்பி! மனிசனுக்குப் புது நோயெல்லாம் வருகுது. ருசியாக்காரன் – அமெரிக்கன் போட்ட குண்டுதான் காரணமோ” என்று பெரியவர் ஒருவர் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப்போட்டு, ‘வானில் நிலவிய அமைதியைக் குலைக்கிறார்.

அருகிலிருந்த சீவ்கிளாக்’ பதில் சொன்னார். “ஓம் பாருங்கோ. காற்றையும் நாசங்கெட்டவர்கள் நஞ்சாக்கிறாங்கள்.”

பெரியவர் தொடக்கி விட்ட கதை வளர்ந்து கிளைவிடுகிறது. கனகேஸ்வரி சுருக்கமாக இடைக்கிடை அபிப்பிராயம் தெரிவித்தாள். கந்தசாமி இதில் பங்குகொள்ளவில்லை. எங்கோ தன் சிந்தனைக் குதிரையை மேயவிடுகிறான்.

வான்’ வல்லை வெளிக்கு வந்துவிட்டது. வேகமும் அதிகரித்து விட்டது.

காற்றிலே, கனகேஸ்வரியின் கன்னங்களில் அவள் தலைமயிர்கள் தவழ்ந்து விளையாடுகின்றன. குறும்புக் குழந்தையாக விளையாடும் மயிர்களைக் கூட்டிவிடுகிறாள் அவள்.

கனகேஸ்வரி சுமாரான அழகிதான். அவளது களை நிறைந்த முகத்திலே ஒரு தனிக் கவர்ச்சி உண்டு.

‘வானில் அமைதி நிலவுகிறது.

அமைதியைக் குலைத்துக் கொண்டே கந்தசாமி பேசுகிறான்.

“மணியம்! இந்தா ஒன்றை எடு” சீகரெட் பைக்கற் ஒன்றை நீட்டுகிறான் கந்தசாமி. மணியம் வாங்க மறுக்கிறான். கனகேஸ்வரி மணியத்தை நோக்குகிறாள். மணியம் அழகான முகவெட்டுடையவன். நல்ல சிவலை. உரோமம் இல்லாத பட்டுக்கன்னம். நன்றாக ஒட்டவெட்டிய பொலிஸ் குறோம். மணியம் எப்பொழுதும் வெனியனும் சாரமும் தான் அணிந்திருப்பான்.

“பறவாயில்லை … எடு…”

கந்தசாமியின் குரலில் நளினம் ததும்புகிறது.

“வேண்டாம்…” – மணியம் வெறுப்பை முகபாவனையில் வெளிப்படுத்துகிறான்.

“குடிக்கும் தொகை இன்று கூடியிருப்பதற்குக் காரணம் சிநேகிதர்களும் கூடியிருப்பவர்களும் தான்” என்று சிமிட்டிக் கொண்டே கனகேஸ்வரி கூறுகிறாள்.

சிரித்தலைப்போன்று சிமிட்டலும் உணர்ச்சியை எடுத்துரைக்கும் கருவியாகக் கனகேஸ்வரி பாவிப்பாள். கந்தசாமி ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் சொல்லவில்லை. கந்தசாமியும் சாரதியும் ஏதோ குசுகுசுத்தனர்.

‘வான்’ யாழ்ப்பாண டவுனைத் தாண்டி வேம்படி மகளிர் பாடசாலையை நோக்கிச் செல்கிறது.

கந்தசாமிக்குக் கனகேஸ்வரியின் வீடு ஒரு மைலுக்கு அப்பால் இருந்த பொழுதிலும், அவளது வாழ்வில் நடைபெறுவதெல்லாம் தெரியும். அதை அறிவதில் கூட அவனுக்கு ஏனோ ஒருவித ஆவல்.

மணியம் புகைப்பதுண்டு. கனகேஸ்வரியின் முன் அவன் புகைப்பதில்லை. அவளிடம் மணியத்துக்கு ஏனோ ஒருவித மரியாதை. சில சமயங்களில் எல்லோரும் ஒரு பக்கமாக நின்று மணியத்தைக் கேலி செய்வார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் பக்கம் நிற்பாள்.

கனகேஸ்வரியை “அக்கா! அக்கா!” என்று குழைவாக அன்புடன் அழைப்பான்.

‘வான்’ வேம்படி மகளிர் பாடசாலையை அடைந்து விட்டது. மணியம் கதவைத் திறக்கிறான். கனகேஸ்வரி இறங்கி நடக்கிறாள். கனகேஸ்வரியின் உருவம் மறையும் வரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் மணியம்.

வேலையால் வீடு திரும்பும் தந்தையிடம் வீட்டில் நடைபெற்றதை மதலை மொழியில் பேசத்தவிக்கும் குழந்தையைப் போல் எப்பொழுது கனகேஸ்வரி போவாள் மணியத்தைக் கிண்டல் செய்ய எனத் தவித்த கந்தசாமி, “மணியம், எத்தனை நாளைக்குத் தாய்ச் சோறும் தனிப்படுக்கையுமாக இருக்கிறது…. மணியம் றை பண்ணு. அக்கா உன்னிலை நல்ல அணைவாக இருக்கு. வாய்ச்சாலும் வாய்க்கும்……

“கிளாக்கர் ஐயா! உங்கடை வாயிலை புற்றெல்லோ எழும்பப் போகுது…..? சகோதரி மாதிரிப் பிழங்கிற அக்காவை….”

“அக்கா, தங்கை எண்டு தான் ஆரம்பிக்கிறது. எனக்கு எத்தனை பேரத் தெரியும். உந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்றிருந்த ஆட்கள் எல்லாம் ….” எனச் சொல்லிக் கொண்டே சாரதி பீடா வெற்றிலை ஒன்றை வாய்க்குள் செலுத்துகிறான்.

“சரியாகச் சொன்னாய் றைவர்….” என்றான் கந்தசாமி சிரிப்புடன் .

“தம்பி! இப்ப இறங்கின பெடிச்சி யார்” என்றார் சமீபத்தில் கச்சேரிக்கு மாற்றப்பட்ட கிளாக்கர் ஒருவர்.

“இவள் பாருங்கோ புலோலிலை தான் இருக்கிறவள் – ‘கிராட் யூவேற்’ – பட்டதாரி. வேம்படியிலை படிப்பிக்கிறாள். இருபத்தொன்பது, முப்பது வயதிருக்கும். நல்ல சாதி தான். ஆனால், இன்னும் கலியாணமாகவில்லை. சொந்த மச்சான் கூடக் கலியாணம் செய்ய மறுத்துவிட்டான்.”

“ஏன் பெடிச்சி ஏதாவது நடைத்தை பிழையோ?”

“தெரியாதே இந்தக் காலத்து கொழும்பு கண்டிக்குப் படிக்கப் போற பெட்டைகளை பற்றி என்றார் ஒருவர்.

“அப்படி ஒன்றுமில்லை. தகப்பன் செத்துப் போனார். குடும்பப் பொறுப்பெல்லாம் அவளோடு தான் மச்சான்காரப் பொடியன் இருபதினாயிரம் கேட்டிருக்க வேணும். மனசார இவையெட்ட எங்காலை காசு? பெடியன் நல்ல சொத்துள்ள இடத்திலை முடித்து விட்டான்.”

மணியத்தின் இமைகள் சிந்தனையின் பிரதிபலிப்பாகச் சிறகடிக்கின்றன. முகத்தில் சோக ரேகைகள் படர்கின்றன. அவன் பெருமூச்சொன்றை மெல்ல உதிர்க்கிறான்.

“இப்பத்தைப் பெடியள் எவ்வளவு சீதனம் வாங்குதுகள்? நாலு பெம்பிளைப்பிள்ளை பிறந்தால் அதைத்தானே பங்குபோட வேணும்” என்றார் சீவ்ளாக்’.

“ஏன் நீர் காணும் அந்நேரம் விட்டனீரோ” என்றார் அருகில் இருந்தவர். பா – எல்லோரும் சிரிக்கின்றனர். வான் கச்சேரியை அடைகிறது.

மாம்பழவள்ளி பருத்தித்துறைச் சந்தையிலே சுறுசுறுப்புடன் கடை பரப்பிக் கொண்டிருக்கிறாள். பலரக மாம்பழங்களால் கோபுரம் கட்டப்பட்டிருக்கிறது.

நெஞ்சின் பெரும்பரப்பு பிறந்த மேனியாக இருக்க, மார்பகங்களை மறைத்துக் கட்டியிருந்த குறுக்குச் சேலையை அவிழ்த்து, இறுக்கி வரிந்து கட்டிக்கொண்டு அன்றைய வியாபாரத்தை ஆரம்பிக்கிறாள்.

தூரத்திலே பிரம்புக் கூடையுடன் வருபவன் மாம்பழத்தைத் தேடித்தான் வருகிறான் என்பதை நோட்டமிட்டு, இராசா! எது வேணும்? கறுத்தக் கொழும்பான்,

அம்பலவீ, செம்பட்டான், பாண்டி, களைகட்டி, அலரி, கிளிமூக்கன்……. இந்தா மோனை கறுத்தக் கொழும்பான் மலிவாத்தாறன். ஒரு துண்டைத் திண்டுபார். விடியக் காலத்தாலை முன்னம் முன்னம் கைவியளமாய் ஆம்பிளைப் புள்ளைக்கு……” என்று சொலலிக்கொண்டே மாம்பழத்தை அவனது கூடைக்குள் போட்டுவிட்டு லாவகமாக விலையைக் கூறுகிறாள்.

மாம்பழவள்ளி என்ற பெயர் அவளுக்கு வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்புதான் கிடைத்தது. பருத்தித்துறைச் சந்தையில் வியாபாரத்தின் ஏகபோக உரிமை அவளுக்கென்றே சொல்லலாம். கடந்த பதினைந்தாண்டுகளாக வியாபாரம் செய்கிறாள்.

மாம்பழவள்ளி வியாபாரத்தில் கட்டியடிக்கும்’ அநியாயம் என்றும் இல்லை. ஆனால் கையில் கடிக்கும்படி’ கொள்விலையிலும் குறைத்துக் கேட்டுவிட்டால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். அவளுக்குக் கோபம் வந்தால் பார்க்கவும் வேண்டுமா? அகராதியில் இல்லாதவற்றை எல்லாம் அடுக்கடுக்காகப்பேசி வாய்க்காறி’ யாகிவிடுவாள்.

சந்தையில் வியாபாரம் செய்துதான் அவள் கணவன் ஈட்டிலை விட்டிட்டுப்போன வீடுவளவை மீட்டவள். இரண்டறையில் சின்னக் கல்வீடும் கட்டிவிட்டாள் அக்கைம் பெண்.

வீடு கட்டக் கடன் கொஞ்சம் செல்லத்துரையிடம் பன்னிரண்டு வீத வட்டிக் கெடுத்தாள், அத்துடன், சின்னத்தம்பி யாற்றை’ மகளுக்கு வள்ளியின் மகளுடைய சங்கிலி அடகு.

மாம்பழவள்ளிக்கு வாழ்விலே ஒரேயொரு ஆவல், தனது ஒரேயொரு மகள் செல்லம்மாவை நல்ல இடத்தில் கலியாணம் செய்து வைத்துச் சீரும் சிறப்புடனும் பார்க்க வேண்டு மென்பதுவே அது.

ஒரு சின்ன உத்தியோகத்தனுக்காவது செல்லம்மாவைக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை அவள் உள்ளத்திலே ஒளித்திருந்தது. உத்தியோக மாப்பிள்ளையை எங்கு எடுக்கப்போகிறாள் மாம்பழவள்ளி? சுவிப் ரிக்கற் போல ரொக்கப் பணம் ஆயிரக்கணக்காகக் கேட்கும் உத்தியோகத்தருக்குக் கொடுக்க பணம் அவளிடம் எங்கு இருக்கிறது?

‘யாரும் கடைகன்னியிலை உள்ள பெடியனைத்தான் பார்க்க வேணும்’ என்று முடிவுகட்டி கொண்டிருக்கும் பொழுது தான், செல்லத்துரை மாம்பழவள்ளியைச் சந்தித்தது. வாட்டம் வடிவெடுத்து நின்ற மாம்பழவள்ளியின் முகத்திலே குதூகலம் குடி கொண்டது.

ஊரில் பெரும் கையாக மதிக்கப்படும் செல்லத்துரைக்குப் பெண் கொடுப்பதென்றால் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா? வெள்ளை வேட்டிகட்டி பட்டுச்சால்வை போட்டு, கழுத்திலே தங்கச் சங்கலி மின்ன, கம்பீரமாகச் செல்லத்துரை நடந்து செல்வதைக் கண்டால் அவனுக்கு முப்பத்தியாறு வயதிருக்கும் என்பதை யாரும் இலகுவில் நம்பமாட்டார்கள்.

செல்லத்துரை சாரதியாக இருந்த காலத்திலே மாம்பழவள்ளியோடு கூடவே அவளது மகள் செல்லம்மாவும் வருவாள். செல்லத்துரை செல்லம்மாவின் அழகை வான்’ முன் கண்ணாடியின் ஊடாக நன்றாக ரசித்திருக்கிறான், அள்ளிப்பருகியிருக்கிறான். அப்பொழுது அவளுக்கு வயது பன்னிரண்டுதான் இருக்கும். வயதுக்கு மிஞ்சி அவளது உறுப்புகள் வளர்ந்திருந்தன. கட்டவிழ்த்து மணம் வீசப்போகும் அழகிய மலர் ஒன்றின் மோகம் ததும்பும் பொட்டாக அவள் அப்பொழுது இருந்தாள்.

செல்லம்மா செம்மாம்பழம் போல சிவப்பு. நல்ல முகவெட்டும் எடுப்பான மூக்கும்.

மாம்பழவள்ளியின் மகளை மணம்புரிவதற்கு செல்லத்துரை ஒரு நிபந்தனை விதித்தான். கடும் நிபந்தனை தான் அது.

“இரண்டு மாத காலத்துக்கு நான் உனது மகளை கலியாணம் செய்த கதையை யாருக்குமே சொல்லக்கூடாது. எனது வீட்டுக்காரருக்கும் தெரியக்கூடாது. இரண்டு மாதத்திற்கு பிறகு கலியாணத்தையும் சீதனத்தையும் எழுதலாம். வீட்டுக்காரர் என் வழியில் வரக் கொஞ்சம் காலம் புடிக்கும். அதுதான்….

செல்லத்துரை இரவு பத்து மணிக்குப் பிறகு ஊர் உறங்கும் வேளையில் செல்லம்மாவிடம் வருவான்.

மாம்பழவள்ளிக்கு மகளின் வாழ்வு வேதனையைக் கொடுத்தது. ஒளிவு மறைவாகச் செல்லத்துரை மகளிடம் வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

செல்லம்மாவின் வாழ்வு ஒரு தாசி வாழ்வாகவே அவளுக்குப்பட்டது. ஊரறிய மகள் குடும்பமாக வாழவேண்டும் என்று அந்தத் தாயுள்ளம் விரும்பியதில் வியப்பில்லை.

இரண்டு மாதங்கள் பறந்தோடிவிட்டன.

செல்லம்மாவுக்கு வீட்டுத் தூரமாகும் நாள் வந்து போயிற்று. அவள் ‘கரிக்கோலம்’ போட்டு ஒதுங்கியிருக்கவில்லை. ‘இனிக் கலியாணத்தை ஊரறியச் செய்யச்சுணக்கக்கூடாது’ என்று நினைக்கும் பொழுது, கடந்த ஒருவார காலமாகச் செல்லத்துரை செல்லம்மாவிடம் வரவில்லை என்ற உண்மையும் புலப்படுகின்றது.

“எங்கடை கந்தையற்றை செல்லத்துரைக்கு வேம்படியிலை படிப்பிக்கிற பொடிச்சியைச் சம்மந்தம் பேசி முடிவாப் போச்சாம்” என்று யாரோ சந்தையில் கதைத்தது மாம்பழவள்ளியின் காதுக்கெட்டியது. மாம்பழவள்ளிக்கு யாரோ கன்னத்தில் ஐந்து விரல்கள் படிய ஓங்கி அடித்தது போல் இருந்தது.

அவள் சந்தை முடிந்ததும் செல்லத்துரையின் வீட்டுக்குப் போனாள். மாம்பழவள்ளி வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததும் சுடு சொற்களே அவளை வரவேற்றன.

“எடி வேசை! என் மோனைக் கெடுக்கிறதற்கு வந்துவிட்டியோ? போடி வெளியிலை. உன்னாலை நான் வெளியிலை கண்முழிக்காமல் இருக்கு. மாயமருந்து போட்டிட்டியோ?”

‘செல்லத்துரை மகளைக் கைவிட்டால்…..?” மாம்பழவள்ளியின் நெஞ்சு வேதனையால் வெடித்துவிடும் போல இருந்தது.

செல்லத்துரை ஏமாற்றி விட்டால் பெண்ணாகப் பிறந்த அவள் என்ன செய்வாள்? யாரிடம் சொல்வாள்? நல்ல நிலையில் இருக்கும் பொழுது சொந்தம் பாராட்டிவிட்டு, நொந்து கெட்டுப் போகும் பொழுது மறந்து வாழ்கிறார்களே, அவளுக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடியவர்கள் – சொந்தக்காரர்கள் இருந்தாலும் கூட இந்த விடயத்தில் அவர்கள் என்ன செய்யமுடியும்? செல்லத்துரையின் சொல்லில் நம்பிக்கை வைத்தல்லவா செல்லம்மாவை மாம்பழவள்ளி அவனுக்குக் கொடுத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டால், அவளால் என்ன செய்யமுடியும்? கலியாண எழுத்து இருந்தால் கோட்டுக்காவது இழுக்கலாம்.

செல்லத்துரை வீட்டால் வந்து “சுகமில்லை” என்று மகளுக்குச் சொல்லிவிட்டுக் கிடந்து விட்டாள் மாம்பழவள்ளி.

மகளுக்கு அவள் ஒன்றுமே சொல்லவில்லை. அவளுக்கு நெஞ்சு பெருவலி எடுக்கிறது. சென்ற வருட மாம்பழக் காலத்தில் சிலநாளாய் சுகயீனமாகப் பாயிலை கிடந்தாள். அப்பொழுது கூட இவ்வளவு வேதனைப்பட்டிருக்க மாட்டாள்.

“ஆத்தா, என்னணை செய்யுது? இந்தாணை எப்பன் தேத்தண்ணியைக் குடித்துப் பார் எணை.” தேநீரைச் சிரட்டைக்குள் கொண்டு கையில் சீனியுடன் செல்லம்மா வருகிறாள்.

நிலவு உச்சிக்கு வந்துவிட்டது. எங்கிருந்தோ சாமக்கோழி கூவியது. ஓர் உருவம் தகரப்படலையைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் புகுகிறது.

மாம்பழவள்ளிக்கு நித்திரையில்லை. நிம்மதியற்ற உள்ளத்திலே நிம்மதிக்கு இடமேது?

“யார் அது”

“நான் தான் செல்லத்துரை.”

“பிள்ளையை எழுப்பட்டே?”

“வேண்டாம். சுகமில்லாதவளை எழுப்ப வேண்டாம்.”

இப்பதிலில் இருந்து தனது மகளை கைவிட்டு விட்டான் செல்லத்துரை என்று எண்ணினாள் மாம்பழவள்ளி,

“எட தம்பி! நீ இப்படிச் செய்வாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் நம்பி எல்லோ பிழைமோசம் போட்டன்” ஒப்பாரி ராகத்தில் அலறுகிறாள் மாம்பழவள்ளி.

“ஆச்சி! மெல்லமாகக் கதையெணை. நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நாளைக்கு மணியத்துக்கும் செல்லம்மாவுக்கும் கச்சேரியில் கல்யாணத்தை எழுதுவம்,”

“என்ன ?” மாம்பழவள்ளி பாம்பை மிதித்தவள் போல திடுக்குற்றாள்.

நிலவு வெளிச்சத்தில் மாம்பழவள்ளியின் சுருக்கு நிறைந்த முகத்தை உற்றுப் பார்க்கிறான் செல்லத்துரை.

“ஆச்சி உண்மையைச் சொல்லிறன். நான் செல்லம்மாவை ‘வைப்பு’ ஆக வைத்திருக்கவே முதல் யோசித்தன். ஆனால், தங்கமான குணமுடைய செல்லம்மாவைத் தாசி என்று உலகம் தூற்றவிட நான் விரும்பவில்லை. அத்தோடு செல்லம்மா ஊரறியக் குடும்பமாக வாழவேண்டுமென்ற உனது ஆசையையும் நான் கெடுக்கவில்லை. அது தான் குறுக்கு வழியில் இறங்கினனான்.

மாம்பழவள்ளியின் வேதனையடைத்த நெஞ்சைப் பிளந்து கொண்டு பெருமூச்சு வெளிவருகின்றது.

– “நான் செய்தது குற்றம்தான் ஆச்சி. நான் செல்லம்மாவைக் கைவிட்டிட்டு ஓடவில்லை. அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறது நான் எல்லோ. உண்ணாணை ஆச்சி காலத்தாலை சாப்பிட்ட சாப்பாடுதான். இது விஷயமாகத்தான் ஓடித்திரியிறன். நான் கட்டிப் போடுவன். வீட்டிலை ஒருவருக்குமே விருப்பமில்லை. அப்படியென்றால் உற்றார் பெற்றார் எல்லோரையும் மறக்கவேணும். அத்தோடை நாலு விஷயம் தெரிந்த நாலு பேரோடை நானும் மனிசனாக உலாவமுடியாது.”

செல்லத்துரையின் பேச்சில் தெளிவு இருந்தது. அவனது உள்ளக் கிடக்கு பேச்சில் எதிரொலிக்கிறது.

“என்ரை வானில் வேலை செய்யிற பெடியன் மணியம் கரவெட்டியில் நல்லசாதியில் பிறந்தவன். தாய் சின்ன வயதிலை செத்துப்போனாள். தேப்பன் இரண்டாம் தாரம் கட்டிப்போட்டார். தேப்பன் என்னோடை விட்டிருக்கிறார். அருமையான பெடியன். நான் சொன்னால் கேட்பான். நீ ஒன்றுக்கும் பயப்படாதை, மணியம் நல்லவடிவாய் குடும்பம் நடத்துவான்.”

மாம்பழவள்ளி எதையோ வெறிச்சென்று பார்க்கிறாள். என்னத்தையோ யோசிக்கிறாள்.

“ஆச்சி நீ ஒன்றையும் யோசியாதை. செல்லம்மா இதை ஒத்துக் கொள்வாள். ஆச்சி நீ எனக்குத் தரவேண்டிய காசைத் தரவேண்டாம். செல்லம்மாவுடைய சங்கிலியை அடைவு எடு. செல்லம்மா பின்னுக்கு அவள் மனம் போல நல்லாய் இருப்பாள்..

ஏனோ செல்லத்துரையின் கண்கள் கலங்குகின்றன. சில நிமிடங்கள் இருவரும் கதைக்கவில்லை . அமைதி நிலவுகின்றது.

செல்லத்துரை எதையோ சொல்ல நினைக்கிறான். எப்படிச் சொல்வது என்று அவனுக்கே புரியவில்லை .

இறுதியில் இரகசியமாக மாம்பழவள்ளிக்குச் செல்லத்துரை ஏதோ சொல்கிறான்.

“சரி, அப்ப நான் வாறன். இந்தா இப்போதையச் செலவுக்கு இதை வைத்துக்கொள். நாளைக்குக் காலமை ஒம்பது மணிக்கு தனிக்காரிலை கச்சேரிக்கு வாருங்கோ .”

செல்லத்துரை நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டுகிறான்.

மறுநாட்காலை கச்சேரியில் மணியத்திற்கும் செல்லம்மாவுக்கும் கலியாண எழுத்து நடந்தது.

செல்லத்துரை சாட்சியாகக் கையெழுத்திட்டான்.

அன்று இரவு பத்து மணி இருக்கும். எங்கும் நிசப்தம் நிலவிக் கொண்டிருக்கிறது.

மந்திகைச் சந்தியில் மணியத்தை இறக்கிவிட்டுச் செல்லத்துரையின் கார் செல்கிறது.

மந்திகை சந்தியில் இறங்கி பெற்றோல் செட் அடியில் நிற்கிறான் மணியம். மந்திகைச் சந்தி மணியத்துக்கு எப்பொழுதும் வெள்ளை ‘சூட்டுடன் வரும் கந்தசாமியை நினைவூட்டுகிறது.

கந்தசாமி தன்னையும் கனகேஸ்வரி அக்காவையும் இணைத்துக் கதைப்பதை எண்ணிப்பார்க்கிறான் மணியம்.

கனகேஸ்வரியின் முகம் மணியத்தின் மனக்கண் முன் வருகிறது.

புதுவாழ்வு வாழப்போகும் கனகேஸ்வரி அக்கா மணப் பெண்ணாக நாணிக் கோணி முதலாளி செல்லத்துரையின் அருகில் நிற்கப்போகும் மணக்கோலத்தை மணியத்தின் நெஞ்சம் நினைக்கின்றது.

“வாருங்கோவன்” என்று கூறி மாம்பழவள்ளி மணியத்தைக் கூட்டிக் கொண்டு செல்கிறாள்.

மணியம் பெண்பிள்ளை வீட்டுக்குப் போகிறான். கொட்டு மேளம் இல்லை, கூட்டமாக ஆட்கள் செல்லும் ஊர்வலமில்லை. அமைதியைக் கெடுக்கும் ஒலிபெருக்கி இல்லை. காசைக் கரியாக்கும் வாண வேடிக்கைகள் இல்லை. மாமியார் முன்செல்ல, மருமகன் பின் செல்கிறான்.

மணியம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தப் போகிறான். கலியாணம் செய்தவுடன் கார் ஓட்டப் பழக்குவதாக முதலாளி உறுதியளித்து விட்டார்.

மணியம் ‘கிளீன’ ராகச் சேர்ந்த சில நாட்களால் ‘றைவ’ ராக வரவேண்டுமென்ற ஆசை இருந்தது. இந்த ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. சுளை சுளையாக நூறு ரூபாவுக்கு மேல் அவன் சம்பளம் எடுக்கப் போகிறான்.

மணியத்துக்கு இனித் தனிச்சோ.றுமில்லை; தனிப் படுக்கையுமில்லை. இதோ, வீடும் வந்துவிட்டது. தகரப்படலையைத் திறந்து கொண்டு மணியம் வீட்டிற்குச் செல்கின்றான்.

மாம்பழவள்ளி அறைக்குள் சென்று பைக்குள் ஏதோ எடுத்து வைக்கிறாள். அவள் நெஞ்சு படபடக்கிறது. வெளி விறாந்தைக்குப் பையுடன் வந்து, அந்தச் சின்ன மேசைக்கு முன்னால் நிற்கிறாள்.

உருப்போட்டு வைத்ததைத் தொடர்ந்து தட்டுத் தடுமாறி ஒப்புவிக்கும் மாணவனைப் போல சொல்லுகிறாள். குரல் தடுமாறுகிறது.

“இதை முதலாளி உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார்.”

வெள்ளைச் சாராயப் போத்தலுள்ள அந்தப் பையை மேசையில் வைக்கிறாள். அந்த அவசரத்தில் மேசையிலிருந்த ஒன்று கீழே விழுந்து உருளுகின்றது.

“செல்லம்மா ஆசையாகச் சாப்பிட எடுத்துவைத்த மாம்பழம். ரெண்டு நாளாய்ப் போச்சுது” என்று மாம்பழவள்ளி சொல்லுகிறாள்.

யன்னலோரம் நின்ற செல்லம்மா, உருண்டோடும் அந்த அணில் கோந்திய நல்ல ரக மாம்பழத்தைத் தன் மருண்ட விழிகளாற் பார்த்தபடி நிற்கிறாள்.

-1966, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *