வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,”தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க…” என்று சொல்லிவிட்டு அவர் இருக்கைக்குச் சென்றார்.
முதலாளியின் அறையில் அவர் இல்லை.மேசையின் மீது கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“என்னம்மா அவசரம்?…”
“மாப்பிள்ளை தம்பி வந்துருக்குடி.முக்கியமான விஷயம்.ஆபீஸ்ல சொல்லிட்டு உடனே வா.”
இன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கு.முக்கியமா சில பில் தயார் செஞ்சு அனுப்பியே ஆகணும்…முடிஞ்சதும் நூலகத்துக்குப் போகாம நேரே வீட்டுக்கு வந்துடுறேன்.அவருக்கு வேற ஏதாவது அவசர வேலை இருந்தா முடிச்சுட்டு ஆறுமணிக்கு மேல வரசொல்லு.”
பானுமதி,”முக்கியமா பேசணும்னு வந்து உட்கார்ந்திருக்கார்…அவருகிட்ட எப்படி…”என்று இழுத்தாள்.
தேன்மொழி, “சரிம்மா…நான் ஒருமணி நேரத்துல எப்பவும் போல வேலையை முடிச்சுட்டே வந்துடுறேன்.”என்று தொலைபேசி இணைப்பைத்துண்டித்தாள்.
பானுமதி திரும்பவும் வீட்டுக்குள் வந்தபோது அவள் தலை குனிந்திருந்தது.
தணிகாசலம்,”என்ன பானு…நான் போன்ல பேசுனா அவ சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு வந்துடுவேன்னு நீயே போன.இப்ப நீ பேசுனதும் உடனே வர்றேன்னு சொன்னாளா?…”என்று கிண்டலாக கேட்டார்.
“உங்க பொண்ணாச்சே. என்னைக்கு சொன்ன பேச்சைக் கேட்டா?…தம்பி…நீங்க தப்பா நினைக்காதீங்க.ஆபீஸ்ல ஏதோ முக்கியமான வேலையாம்.அதனால எப்பவும் போல ஆறுமணிக்கே கிளம்பி வர்றேன்னு சொல்லிட்டா.உங்களுக்கு வெளியில எதுவும் வேலை இருந்தா போய் முடிச்சுட்டு வந்துடுங்களேன்.”
உடனே சண்முகபாண்டியன்,”இல்லத்தே…ஒருமணி நேரம்தானே.டி.வி.பார்த்துகிட்டு இருந்தா நேரம் போறது தெரியாது.”என்றான்.
அவன் வந்ததும் நிறுத்திய தொலைக்காட்சியை இப்போது மீண்டும் தணிகாசலம் இயக்கினார்.
“என்ன மாமா…இன்னும் கலர் டி.வி. வாங்காம இருக்கீங்க?”
“இது நல்லாத்தான் இயங்கிகிட்டு இருக்கு மாப்ளே.கருப்பு-வெள்ளை டி.வியால கண்ணுக்கும் அவ்வளவா கெடுதல் இல்லை. பழுதாகுறவரைக்கும் இருந்துட்டுப்போகட்டும்னு விட்டு வெச்சிருக்கோம்.”
“சரிமாமா…தேன்மொழி ஆபீஸ்ல லீவு போடுறதெல்லாம் ரொம்பக்கஷ்டமா?”
“அப்படி எல்லாம் கிடையாது. அவ எப்பவுமே ரொம்ப அவசியமா இருந்தாதான் லீவு போடவோ பர்மிஷன் கேட்கவோ செய்வா…அதுக்காக நீங்க அவசியமில்லைன்னு தப்பா எடுத்துக்காதீங்க…”என்று தணிகாசலம் சிரித்தார்.
முந்தானையை இழுத்துப்போர்த்திக்கொண்ட பானுமதி,”இவர் கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டார்…நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க…நாங்க எப்ப செஞ்ச புண்ணியமோ…நீங்க எங்க குடும்பத்துல சம்மந்தம் பேச வந்துருக்கீங்க.”என்றாள்.
சண்முகபாண்டியன் லேசாக நெளிந்துகொண்டு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினான்.
***
தரகர் மூலமாக மூன்று மாதங்களுக்குள்ளாகவே எட்டுப்பேர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். கடைசியாக வந்தவன்தான் சண்முகபாண்டியன்.
எல்லாம் வழக்கம்போல்தான் நடந்தது.”எனக்குப் பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கும்மா…”என்று சண்முகபாண்டியன் தலையைக்குனிந்து
கொண்டான்.தேன்மொழியின் நிறத்துக்கும் அழகுக்கும் ஆசைப்படாதவர்கள் யார் இருக்க முடியும்? சண்முகபாண்டியன் தலையாட்டிவிட்டு அம்மா பிள்ளையாக உட்கார்ந்துகொண்டான். அவன் தாய் போட்ட பட்டியலில் இருசக்கர வாகனம் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று தணிகாசலம் நினைத்தார்.
“அதெல்லாம் முடியாது…நல்லா யோசிச்சு ஒருவாரத்துக்குள்ள முடிவு சொல்லுங்க..”என்ற அந்த அம்மாள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.மாப்பிள்ளையும் பேசாமலேயே தாயைப் பின்தொடர்ந்தான்.
“பையன் நல்லவனாத்தெரியுறான். தலைதீபாவளிக்கு, வண்டி வாங்கித்தர்றோம்னு சொல்லி கல்யாணத்தைப் பேசிமுடிச்சுடலாம்மா…”என்றார் தணிகாசலம்.
“அப்பா…நீங்க என்ன சொந்தத்தொழிலா செய்யுறீங்க…மத்த விஷயத்துக்கு வாங்கப்போற கடனை முடிக்கவே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகும்…அதுவரை வேற பெரிய செலவு வராம இருக்கணும்…எதிர்பாராம செய்ய முடியாமப்போச்சுன்னா ஒவ்வொரு நாளும் என்னால இம்சைப்பட முடியாது. எனக்கு வரதட்சணை குடுத்து கல்யாணம் செஞ்சுக்குறதே புடிக்கலை…இருந்தாலும் உங்க ரெண்டு பேரு சந்தோஷத்துக்காக நான் எதுவும் சொல்லலை. அதனால நம்ம சக்திக்கு தகுந்த மாதிரி இடமாப் பார்ப்போம்.” என்று தேன்மொழி உறுதியாகக் கூறினாள்.
***
எங்க வசதிக்கு இந்த இடம் ஒத்துவராதுன்னு சொல்லி அனுப்பிட்டோம். இவர் ஏன் வந்து உட்கார்ந்துருக்கார்? என்று நினைத்தவாறே தேன்மொழி வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள்.
அவனைப் பார்த்து,”வாங்க…ஒரு நிமிஷம்…முகம் கழுவிட்டு வந்துடுறேன்.எதுவும் நினைச்சுக்காதீங்க…” என்று தோள்பையை மேசையில் வைத்துவிட்டு கொல்லைப்பக்கம் சென்றாள்.
முகம் கழுவிக்கொண்டிருந்தபோது பின்னால் பானுமதி வந்து நிற்பதை உணர்ந்தாள்.
“என்னம்மா…காப்பி போட்டுக் குடுத்தியா?”என்று திரும்பாமலேயே கேட்டாள்.
“அதெல்லாம் ஆச்சு…இப்ப அம்பதாயிரம் ரூபா பணம் கொண்டு வந்துருக்கார்…அதைவெச்சு வண்டி வாங்கிக் கொடுத்துட்டு நாம செஞ்ச மாதிரி காட்டிக்கச் சொல்றார்.இந்தக் காலத்துல இப்படி ஒரு வரன் கிடைக்குமா?…நான் சம்மதம்னு சொல்றதுக்குள்ளே உங்கப்பா புகுந்து குழப்பிட்டார்…என் பொண்ணு சம்மதிச்சாத்தான்னு உறுதியா சொல்லிட்டார். நீ ஏதாவது உளறி வெக்காத…இப்படி ஒரு மாப்பிள்ளை இந்த ஜென்மத்துக்கு கிடைக்குறது சிரமம்.”
“சரிம்மா…நான் பேசிக்குறேன்…”என்று உள்ளே நுழைந்தாள். முகத்தைத் துடைத்துவிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு எப்போதும்போல் இயல்பாக கூடத்திற்கு வந்தாள்.
மற்றொரு நாற்காலியை தணிகாசலத்திற்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
பானுமதி மனதில் எரிச்சல்.”கொஞ்ச நேரம் நின்னு பேசினா என்ன?…எல்லாம் அவர் கொடுத்த இடம்”
“ம்…இப்ப விஷயத்தைச் சொல்லுங்க…”-தேன்மொழிதான் கேட்டாள். நேரே அவளைப் பார்த்துப் பேச சண்முகபாண்டியன் தடுமாறினான்.இப்போது தணிகாசலம் எழுந்து சென்று தொலைக்காட்சி இயக்கத்தை நிறுத்தினார்.
“உங்கம்மா சொல்லலியா?”
“அம்மா சொல்றது இருக்கட்டும்…நீங்க சொல்லுங்க…”
“இப்ப அம்பதாயிரம் ரூபா எடுத்துட்டு வந்துருக்கேன். என்னுடைய சேமிப்புல இருந்து எடுத்தது. இதையும் வெச்சுகிட்டு கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. என்னால நீங்க இல்லாம வாழமுடியாது. அம்மா மனசும் நோகக்கூடாது.”
இவள் என்ன சொல்லப்போகிறாளோ என்ற தவிப்பு அவன் முகத்தில் நன்றாகத்தெரிந்தது.
தேன்மொழி புன்னகைத்தாள்.
“தயவு பண்ணி நீங்க மன்னிக்கணும்…இந்தப் பணத்தை நாங்க வாங்கிக்க மாட்டோம்…வேற இடத்துல பொண்ணு பாருங்க…எங்க சக்திக்குத் தகுந்த மாதிரி நாங்க பார்த்துக்குறோம்.”என்று இரு கரங்களையும் கூப்பினாள்.
பானுமதிக்கும் சண்முகபாண்டியனுக்கும் அதிர்ச்சி. ஆனால் தணிகாசலம் முகம், இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன் என்பது போல் இருந்தது.
“ஏண்டி உனக்கு புத்தி இப்படிப் போகுது? வீடு தேடி இந்த அளவுக்கு இறங்கி வந்து பேசுறவங்களை மதிக்கமாட்டியா?…-பானுமதி கேட்டாள்.
“சார்…நான் வீடு தேடி வர்றவங்களை மட்டுமில்ல…எல்லாரையுமே மதிக்கிறேன்.அதனாலதான் இவ்வளவு பொறுமையா சொல்றேன்.”
சண்முகபாண்டியன் வார்த்தைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டான்.
“சரிங்க…என்ன காரணம்னு சொல்லுங்க.”
“இல்ல சார்…விளக்கமா சொன்னா உங்க மனசு வேதனைப்படலாம்.”
“பரவாயில்லைங்க…நீங்க இல்லைன்னு ஆனப்புறம் எதுக்கு வேதனைப்பட்டு என்ன ஆகப்போகுது?”
“சார்…உங்க அம்மாகிட்ட பேசி வரதட்சணை வேண்டாம்னு சம்மதிக்க வெச்சிருக்கலாம்.ஆனா இத்தனை வருஷம் வளர்த்தவங்களைவிட ஒருநாள் பார்த்த என்மேல உள்ள விருப்பம் உங்களுக்கு முக்கியமாயிடுச்சு. அதனாலதான் உங்க வீட்டுக்குத்தெரியாம பணத்தைக்கொடுத்து எங்களை செலவு செய்யசொல்றீங்க.நாளைக்கு இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என் கதி?…”என்று நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அப்படி ஏதாச்சும் ஆனா நாம தனிக்குடித்தனம் போயிடலாம்…”- சண்முகபாண்டியன் அவசரமாக சொன்னான்.
“எனக்காக உங்க பெற்றோரைத் தூக்கி எறியத்தயாராயிட்டீங்க.நாளைக்கு வேற காரணத்துக்காக என்னையும் ஒதுக்கி வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? அம்மாவா இருந்தாலும் மனைவியா இருந்தாலும் தப்பு செஞ்சா விஷயத்தை எடுத்துச்சொல்லி புரிய வெக்கிறவர்தான் கணவரா வரணும்னு ஆசைப்படுறேன்.பிரச்சனையைத் தீர்க்காம ஒதுங்கிப்போறவங்களை நம்பி எதுவும் செய்ய முடியாது.
நானும் பிற்காலத்துல ஒருசில தவறுகள் செய்யலாம்…சிலநேரம் கோபப்படலாம்…அது எனக்குப் புரியாத நேரத்துல, சுட்டிக்காட்டி அரவணைக்கிற புருஷன்தான் வேணும்.
எல்லாமே தப்புன்னு கொடுமைப்படுத்துறவர் மட்டுமில்ல…எல்லாத்துக்கும்அடங்கிப்போறவரும் ஆபத்துதான்.” இவ்வளவு பேசியபிறகும் தேன்மொழியின் முகத்தில் புன்னகை குறையவில்லை.
அழகில் மட்டுமல்லாமல் குணத்திலும் தேவதையான இவளுக்கு ஏற்ற கணவன் தான் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சண்முகபாண்டியன் மவுனமாக வெளியேறினான்.
– ஜனவரி 2006 அமுதசுரபி
கதையைப்பற்றிய குறிப்பு:
2006 ஜனவரி அமுதசுரபி இதழில் வசுமதிராமசாமி அறக்கட்டளையின் 1000 ரூபாய் பரிசு பெற்ற முத்திரை சிறுகதையாக பிரசுரமானது.
இலக்கியச் சிந்தனை: 1970ம் ஆண்டுமுதல் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து பரிசு கொடுத்து புத்தகமாகவும் வெளியிட்டு வரும் அமைப்பு.
2006 ஜனவரி மாத சிறுகதையாக தேன்மொழியாள் தேர்வு செய்யப்பட்டது.
“தேன்மொழி கதாபாத்திரம் ஒரு லட்சிய, ஆனால் யதார்த்த கதாபாத்திரமாக உள்ளது. பாத்திரத்தின் இறுதிக்கட்ட உரையே உருவகப்படுத்தப்பட்டு தலைப்பாகத் தந்திருப்பது அழகு! – இது கதையைத் தேர்வு செய்த எழுத்தாளர் பாலுமணிவண்ணன் அவர்கள் சொன்ன வாக்கியம்.
“குடும்பச் சிறையிலிருந்து தற்சார்பும் அதற்கான கல்வியும் பெற்று வெளி உலகில் ஆணுக்குச் சமமாக வேலை செய்யும் தேன்மொழி நாயகி. அமைதியானவள். இவளைக் கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை சண்முகமும் அம்மாவும் பார்க்க வருகிறார்கள். சவரன்-வெள்ளி-கல்யாணச்செலவுடன், இருசக்கர வாகனமும் வரதட்சணையாக விதிக்கப்படுகிறது. பெண் வேலை செய்கிறாள் என்று எத்தனை நாட்களுக்குக் கல்யாணமில்லாமல் வைத்துக்கொள்வது? ஆனால், மாப்பிள்ளை நல்லவனாகத் தெரிகிறான். அவன் சேமிப்பில் இருந்து ஐம்பதாயிரம் எடுத்து வந்து தாய்க்குத் தெரியாமல் உதவி – கல்யாணத்தை முடித்துக்கொள்ள விழைகிறான். தேன்மொழிக்குச் சம்மதம் இல்லை.பெற்றோர் அதிர்ச்சியுறுகின்றனர். தேன்மொழி காரணம் சொல்கிறாள்.”அம்மாவிடம் பேசி வரதட்சணை வேண்டாம் என்று சம்மதிக்கவைத்திருக்கலாம். ஆனால் இத்தனை வருஷம் வளர்த்தவர்களைவிட, ஒருநாள் பார்த்த என்மேல் உள்ள விருப்பம் முக்கியமாய் விட்டது…பிரச்சனையைத்தீர்க்காமல் ஒத்திப்போட்டு, ஒதுங்கிப் போறவங்களை நம்பி என் வாழ்க்கையை நிர்ணயிப்பது சரியன்று” என்று மறுத்துவிடுகிறாள். வரதட்சணை என்ற சாபக்கேடு, பெண் கல்வி கற்றும், பொருளாதார சுயச்சார்பு பெற்றும் அவள் மணவாழ்வை ஐந்து தலை நாகம் போல் இறுக்குகிறது.தேன்மொழியாள் குணநலமும் நடப்பியல் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தச் சமுதாயம் மாற வேண்டும் என்ற ஆர்வமும் உடைய பெண்ணாகத் திகழ்வதை ஆசிரியர் காட்டுகிறார். – இது 2006ம் ஆண்டின் 12 மாதச் சிறுகதைகளில் இருந்து சிறந்ததைத் தேர்வு செய்யும்போது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் தேன்மொழியாள் பற்றிக்கூறியது…
இலக்கியச்சிந்தனை அமைப்பு தேர்வு செய்த 2006ம் ஆண்டின் 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.