கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 11,162 
 

இங்கிலாந்து-2008

கடந்த சில நாட்களாகப் பெருங்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.பக்கத்து வீட்டில் பிரமாண்டமாகக் கிளைவிட்டு வளர்ந்து நிற்கும் ஒரு பெரிய மரம், காற்றின் வேகத்தில் வேரோடு பிடுங்கப்படும்போல் ஆட்டம் போடுகிறது. மாதவனின்,தோட்டத்தில் வளர்ந்து கிடக்கும் செடிகளும் கொடிகளும் அடங்காத காற்றுக்கு நின்று பிடிக்க முடியாமல் அல்லாடுகின்றன. சில கிழமைகளாக அவன் வீட்டில் தொடரும் பிரச்சினைகளால் மாதவனின் மனமும் அப்படித்தான் நிம்மதியின்றி தவிக்கிறது.

அவன். தனது வேலிக்கு அப்பால் நிற்கும், பக்கத்து வீட்டுக் கிழவரை ஏறிட்டுப் பார்த்தான். கடந்த சில மாதங்களாக அவன் படும் பாட்டை யாரிடமாவது சொல்லியழவேண்டும் போலிருந்து. மிஸ்டர் லிவிங்ஸ்டன்,அவர்களின் வீடுகளுக்கு இடையிலுள்ள வேலிக்கு மேலால் ஒருத்தொருக்கொருத்தர் வழமைபோல்,’குட்மோர்னிங்’ சொல்லிக் கொண்டபோது அவன் பதிலுக்குக் ‘குட்மோர்ணிங்’ என்றான்.அவன் குரலில் சோர்வு, கண்களில் சோகம், முகத்தில் ஒரு அளவிடமுடியாத பயம் என்பவற்றை அவதானித்த லிவிங்ஸ்டன்,’ என்ன, சின்னக் குழந்தை பெரிய தலையிடி தருகிறதா?’ என்று வேடிக்கையாகக் கேட்டார்.

‘எனக்குப் பிறந்த சின்னக் குழந்தை பிரச்சினை தரவில்லை,ஆனால் அதைப் பெற்றெடுத்த பெரிய குழந்தை பிரச்சினை தருகிறது’ அவன் தனது குரலில் வேடிக்கைத் தொனியை வரவழைத்துக்கொண்டு அவருக்குச் சொன்னான்.

அந்த ஆங்கிலேயக் கிழவர், குழந்தை பிறந்தவுடன் யாரும் துணையில்லாமல்த் தனியாக வாழும் அடுத்த வீட்டு இளம் தம்பதிகளில் மிகவும் பரிதாபப் படுபவர்.

‘உனது மனைவிக்கு உன்னைக் கவனித்துக்கொள்ள நேரமில்லை என்று மனவருத்தப் படுகிறாயா, முதற்குழந்தை பிறந்ததும் பெரும்பாலான தாய்மார் அவர்களுக்குக் கணவன் இருப்பதையே மறந்தவிடுவார்கள்.அதிலும் உதவிக்கு யாருமில்லாத சூழ்நிலையில்,அவள் குழந்தையுடன் கூடநேரத்தைச் செலவிடுவது சகஜம்’ அவர் ஆறுதலாகச் சொன்னார்.

அவரின் மனைவி, அவர்களின் மகளின் பிரசவம் பார்க்க,மாதவன் தம்பதிகள் பக்கத்து வீட்டுக்கு வந்த சில நாட்களில் கனடா சென்று விட்டாள்.

மாதவன்;, நித்யா தம்பதிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர்களின் முதற் குழந்தை பிறந்திருக்கிறது. அவர்கள் அந்த வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகின்றன. மாதவனும்; மிஸ்டர் லிவிங்ஸடனும பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றாலும், இன,மத, வயது வித்தியாசத்தால் மிகவும் வித்தியாசமானவர்கள்.

‘முதற்பிள்ளை பிறந்தபோது நாங்களும்தான் அந்தக் குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்வது என்று மிகவும் குழம்பிப்போனோம்.. முதல் சில மாதங்கள்; மிகவும் கஷ்டமாக இருக்கும் அதன்பின் தாயும் சேயும் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொள்வார்கள்’

மாதவன், பக்கத்து வீட்டுக் கிழவரின் குரலில் தொனித்த பாசத்தை உள்வாங்கிக் கொண்டபோது நெகிழ்ந்து விட்டான். அவனின் மனதில் நிறைந்து கிடக்கும் பல பிரச்சினைகளை அவரிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்போலிருந்தது. ‘தாயும் பிள்ளைக்குமிடையிலான பிரச்சினையில்லை..’அவன் மேலதிகமாகச் சொல்லத் தயங்கினான். கிழவர் அவனை உற்றுப் பார்த்தார். அவரும் ஒருகாலத்தில் இளவயதுத் தகப்பனாக இருந்து,மனைவிக்கு ஆறுதல் சொன்னவர்.தனக்குப் பக்கத்து வீட்டு இளம் தகப்பனின் நிலை அவருக்குப் புரிந்ததோ என்னவோ,’என்னவென்றாலும் யாருக்கும் சொன்னால் மனப் பாரம் குறையும்’ என்றார்.

அதிகாலையில் வேலைக்குப் போகும் அவசரத்துடனிருந்தவன், ‘உங்களுக்கு நேரமிருந்தால் பின்னேரம் வாருங்களேன், சேர்ந்திருந்து பீர் அடிக்கவேண்டும்போலிருக்கிறது’ என்றான். கிழவர் மிகச் சந்தோசத்துடன் சம்மதம் தெரிவித்தார்.அவர் இப்போதுதான் மாதவன் வீட்டில் உறைப்பான கோழிக்கறி சாப்பிடப் பழகுகிறார். எழுபதுவயதான அவரின் மனைவி நீண்டகாலமாக மகளுடன் தங்கியிருப்பதால் உண்டான தனிமையை மாதவன்-நித்தியா தம்பதிகள் குறைத்திருக்கிறார்கள்

அந்தத் தெருவிலுள்ள கடைசி வீடுகளில் அவர்கள் குடியிருக்கிறார்கள். முன்பக்கத்தில் ஒரு பெரிய பார்க் இருக்கிறது. மாதவனின் வீடு தெருவின் கடைசி வீடு. தெருவை அடுத்துப் பெரிய விளையாட்டுத் திடல்,அங்கு,சிலவேளைகளில் ஆரவாரத்துடன் இளைஞர்கள் பந்தடித்து விளையாடுவார்கள். அதையொட்டிய குழந்தைகள் பாடசாலை,காலையிலிருந்து பின்னேரம் வரை கல கலவென்றிருக்கும். அவைகளைவிட மற்ற நேரங்களில்,,வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய ஜனநடமாட்டமில்லை, இப்படியான அமைதியான இடம் நித்யாவுக்குப் பிடித்துக் கொண்டதால் நித்யா இந்த வீட்டை வாங்க விரும்பினாள்.

அருகில் உள்ள முதுமையான தம்பதிகளை அவர்களுடன் பேசிய சில நிமிடங்ளிலேயே, ‘நல்ல மனிதர்கள், கனிவான தொனியில் பேசுபவர்கள்’ என்றெல்லாம் அவர்கள் இருவருக்கும்; பிடித்துக் கொண்டது. வீpட்டைத்; தாண்டியிருக்கும் ஆரம்பப் பாடசாலை அவர்களுக்கு இன்னும் சில வருடங்களில் மிக மிக வேண்டியதாகவிருந்தது. முன்னாலிருக்கும் பிரமாண்டமான பார்க்கை மிகவும் பிடித்துக் கொண்டது. அங்கு மிகவும்,வயதுபோன பிரமாண்டமான மரங்கள் கிளைவிட்டு வளர்ந்திருந்தன அவைகளின் வயது பல நூற்றுக்கணக்கானவையாக இருக்கலாம் பல தலைமுறை மனிதர்களையும்,பல்வேறு சரித்திரங்களையும் கண்டிருக்கலாம்.

அவர்களின்;; பக்கத்து வீட்டுக்காரின் வீட்டுக்குப் பின்னாலும் ஒரு பெரிய மரமிருக்கிறது. மாதவன் வீட்டுக்குப் பக்கம் அந்த மரத்தின் கிளைகள் வந்து வெளிச்சத்தை மறைக்காமல் மிஸ்டர் லிவிங்ஸ்டன் கிழவர் அடிக்கடி அந்த மரத்தின் கிளைகளைத் வெட்டிக் கொள்வார் என்று சொன்னார். முக்கியமாக, இருபக்க வீடுகளையும் பிரிக்கும், அந்தப் பிரமாண்டமான மரத்திற்கு அண்மையிலிருந்த கிறீன் ஹவுஸ் அவனின் மனைவி நித்யாவுக்கு அளவுக்கு மீறியளவுக்குப் பிடித்ததாக இருந்தது.

மாதவனும், நித்யாவும் அந்த வீட்டைப் பார்க்க வந்தபோது,அந்த வீட்டுச் சொந்தக்காரனான அல்பேர்ட,;,நித்யாவின் அளவுக்கு மீறியஆனந்தத்தைப்பார்த்து,’எனது மனைவியும் உங்களைப் போற்தான். இந்தக் கிறீன் ஹவுசில் உயிராயிருந்தாள்..’அவன் குரலில் சோகம். மாதவனும்,நித்யாவும் அந்த வீட்டைப்பார்க்க வந்தபோது அல்போர்ட்; மட்டும்தானிருந்தான்.மனைவி வீட்டிலில்லை என்றான்.அவர்கள் அதுபற்றி கேள்வி கேட்காமால், வீட்டைப்பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘இந்த நாட்டில் வெளியில் வைத்து வளர்க்க முடியாத மலர்களையும் கொடிகளையும் வளர்க்க மிகவும் அருமையாக இந்த கிறீன் ஹவுஸை அமைத்திருக்கிறார்கள்’ என்று பூரிப்பில் கூவினாள் நித்யா. மனம் திறந்த மகிழ்வுடன் அவள் சிரிக்கும்போது மலர்கள் குலுங்குவதுபோலிருக்கும். அவளின் அழகிய மலர்ந்த பூரிப்பை மாதவன் ரசித்தான்.

அவள் ஆசைப் பட்ட அந்த வீட்டை வாங்குவது என்று அந்த நிமிடமே மாதவன் முடிவு செய்துவிட்டான்.

அவள் அழகான பெண் என்ற அவள் கணவன் மாதவனுக்குப் பெருமை. அவனை விட ஆறுவயது குறைந்த அவளை அவன் ஏதோ ஒரு சிறு குழந்தைபோலப் பார்த்துக்கொள்வான் அதற்குக் காரணம், அவளின் கள்ளம் கபடமற்ற பேச்சு, கண்ணைக் கவரும் அழகு,அளவுக்கு மீறாத தேவைகள்,அவளிடமிருந்து அவனுக்குக் கிடைக்கும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அன்பு என்று எத்தனையையோ அடுக்கிக் கொண்டு போகலாம். பெரும்பாலான மனைவிகள்போல், கணவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காதவள்.அதற்குக் காரணம், தாய் தகப்பனின்றிப் பாட்டி, பாட்டனின் அன்பில் வளர்ந்ததும், அவர்கள் அவளின் தேவைகளை அவள் கேட்காமல் அவர்கள் நிறைவேற்றி வைத்ததும் ஒருகாரணமாகவிருக்கலாம்.

மாதவன், லண்டனில் வேலைசெய்பவன். நகர சபை ஒன்றில் வேலைசெய்கிறான். ஓரளவு உயர்ந்தவேலையிலிருப்பவன் வசதியாக வீடுவாங்க வளமுள்ளவன். நித்யா,லண்டனில் கொம்பனியில் செய்துகொண்டிருந்த வேலையை இராஜினாமா செய்துவிட்டு தங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஒரு அமைதியான இடத்தில் வளரவேண்டும் என்று லண்டனுக்கு வெளியில் வீடு தேடினாள்.

அவர்கள் வீடு பார்த்த இடம் லண்டனை விட்டு எத்தனையோ மைல்கள் தள்ளிய தூரத்திலுள்ள செல்ம்ஸ்போர்ட் என்ற நகரையண்டியிருக்கிறது.ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் சரித்திரத்துடன் சம்பந்தப் பட்ட பழைய தடயங்களை அழிப்பது பிடிக்காது. அதனால் அவற்றைக் காப்பாற்றப் பாராளுமன்றத்தால் பல சட்ட திட்டங்களையுண்டாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடிவந்த கிராமமும் அப்படியான பழைய சரித்திரச்; சான்றுகளைத் தன்னுடையதாக்கிய பழைய கிராமம். அங்கு,ஓரு பத்திரிகைக் கடை, ஒரு மரக்கறிக்கடை, ஒரு மாமிச்கடை ஒரு தபால் நிலையம், அந்தக் கிராமத்தார் ஒன்று கூடிக் குடிக்கவும் பேசிப் பழகுவதற்குமான ஒரு ‘பப்’;, கல்யாண,இறப்பு,பிறப்பு,சடங்குகளுக்கு இன்றியமையாத ஒரு தேவாலயம் அத்துடன், பொதுக் கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கான ஒரு மண்டபம் என்பதுபோல் அமைந்த ஆங்கிலேயக் கிராமம் அது. அதைவிட மேலதிக தேவைகளான புகையிரத நிலையம், சுப்பர் மார்க்கெட், பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள் என்பன போன்ற தேவைகளுக்கு, ,இரண்டு மைல்களுக்கப்பால் ஒரு நகரிருக்கிறது.

மாதவன்,தனது காரில் ட்ரெயில்வே நிலையம் சென்று அங்கு காரைப் பார்க் பண்ணி விட்டு லண்டன் பிரயாணத்தைத் தொடங்குவான். மனைவிக்குப் பிடித்த வீட்டை வாங்கிக்கொடுத்து அவளைச் சந்தோசப் படுத்தியதில் மாதவன் அளப்பரிய ஆனந்தமடைந்தான்.அந்த வீடு, கிட்டத்தட்ட இருநுர்று வருட சரித்திரத்தைக் கொண்ட புராதன வீடு;. எத்தனையோ தலைமுறை அந்த வீட்டில் பிறந்து, வாழ்ந்து இறந்திருக்கலாம். மத்திய தரப் பிரித்தானியரின் மிக வசதியான பழைய வீடுகள்போல் நான்கு அறைகள், மூன்று பாத்றூம்கள், பெரிய ஹால்,சமயலறை. டைனிங்றூம், ஸ்ரடி றூம்,பாதாள அறை என்று பல வசதிகளைக் கொண்டிருந்தது.

நித்யாவுக்கு அந்த வீட்டின் வசதிகளைப் பற்றிப் பெரிய அக்கறையில்லை.அவள் இலங்கையில்,கிழக்குப் பகுதிக் கிராhமம் ஒன்றில் அங்குள்ள எல்லா மக்களையும்போல், பல மலர் கொடியுள்ள இடத்தில்;, தென்னையும், பலாமரமும், பப்பாளி, தோடை,எலுமிச்சை என்று எத்தனையோ ரகமான இயற்கைவளம் மிகுந்த இடத்திலுள்ள ஒரு சிறு தனிவீட்டில் பிறந்து வளர்ந்தவள்.தனது, சிறுவயது நினைவுகளைத் தூண்டும்,இந்தக் கிராமத்து வீட்டை நித்யா தெரிவு செய்ததில் மாதவனுக்கு எந்த ஆச்சரியமில்லை. மாதவன் இலங்கையில் கொழும்பு மாநகரிற் பிறந்தவன்,வளர்ந்தவன்,பதினாறு வயதுவரை படித்தவன்,லண்டன் மாநகரில் காலடி எடுத்து வைத்ததும் அதன் பிரமாண்டம் அவனை மலைக்கப் பண்ணினாலும், அதுவரையும் நகரில் வாழ்ந்த பழக்கத்தால் அவன் அந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டான்.

நித்யா அவளின் ஆசைக்காக வாங்கிய அந்த வீட்டுக்குக் குடிவந்த அடுத்த நாளே நித்தியா அவளின் ஆசையின் சின்னமான அந்த ‘கிறீன்’ஹவுஸ்க்குள் தன்னை இணைத்துக் கொண்டாள். அந்தப் பழைய வீட்டில் அந்த,’கிறீன் ஹவுஸ்’ புதிதாகக் கட்டப்பட்டிருந்தது.

அந்தப் புது வீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பெரும்பாலான நேரத்தை அந்தக் கிறீன் ஹவுசில் போக்கினாள். அந்த இடத்தில் ஏதோ பல காலம் வாழ்ந்த பெண் போல் மிகவும் கவனமாக அந்த இடத்தைப் பராமரித்துக் கொள்ளத் தொடங்கிளாள்.

அவர்களுக்கு முதல் அந்த வீட்டில் குடியிருந்த ஆங்கிலேயத் தம்பதிகளும் அந்தக்,’கிறீன்ஹவுசுடன்’ மிகவும் இணைந்திருந்ததாகப் பக்கத்து வீட்டுக் கிழவர் சொன்னார். அந்த வீடடிலிருந்த தம்பதிகளான அல்பேர்ட்டும் அவன் மனைவி இஸபெல்லாவும் அதிக காலம் அந்த வீட்டில் தங்கவில்லை என்றும் கிழவர் சொல்லியிருந்தார். இஸபெல்லா,சட்டென்று அல்போர்ட்டைப் பிரிந்து போனபின் அவளின் பிரிவு தாங்கமுடியாத அவள் கணவன் வீட்டை விற்க முடிவு செய்ததாகவும் கிழவர் சொல்லியிருந்தார்.

மாதவன் ட்;ரெயினில் ஏறியதும், வீட்டுக்கு வந்து பினனேரம், கிழவர் லிவிங்ஸ்டனுக்குத் தன் பிரச்சினைகளை எப்படிச் சொல்வது என்று யோசித்தான்.அவர் இவன் சொல்லப் போவதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் அவனால் யோசிக்க முடியாதிருந்தது.

‘எங்கள் வீட்டு,’கிறின் ஹவுஸில்’பேயிருப்பதாக’ அவள் மனைவி நித்யா சொல்கிறாள் என்பதைக் கிழவருக்குச் சொல்ல அவனுக்கு வெட்கமாகவிருந்தது. அவன் சமயவாதியல்ல.பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன்,உண்மைகளை விஞ்ஞான ரீதியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் சிறுவயதிலிரு;து பிடிவாதமாகவிருப்பவன்.

நித்யா சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்.இலங்கையின் கிழக்குப் பகுதியில்,இயற்கையின் அத்தனை அழகுகளுடனும் சுற்றி வளைக்கப்பட்ட அந்தக் கிராமம் பேய் பிசாசு, செய்வினை சூனியத்திற்கு மிகவும் பெயர் போனது.சிறுவயதில் தாய் தகப்பனும்,அவளின் ஒரேயொரு தமயனுயும் சிங்கள இனவாதத்திற்குப் பலியான நாளிலிருந்து, அந்நியமான மனிதர்களையோ அல்லது அவளுக்குப் பிடிக்காத எதையும் பார்த்தால் பயந்து நடுங்குபவள் என்று அவனுக்குச் சொல்லியிருக்கிறாள்.

ஐந்து வயதில் தனது பெற்றோரும்; தமையனும்; அகால மரணத்தில் இறந்தபோது, அவர்களுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு நித்யா ஆடு,மாடு,பூனைகள்,நாய்களுடன் மட்டுமல்லாமல் அவள் தாய் அதிகாலையில் பூசைக்கு மலர் மலர் பறிக்கும் மல்லிகை மரங்களிடமும் பேசிக் கொண்டிருந்ததாக அவளின் பாட்டனார் அவனுக்குச் சொல்லியிருந்தார்.

அந்தப் பழைய நினைவுகளுடன்தான் இந்த கிறீன் ஹவுஸில் தன்னைப் பிணத்துக்கொண்டாளா?

அந்த வீடடுத்; தோட்டமும், சூடான நாடுகளில் வளரும் செடிகொடிகளையம் கண்டதும் அவளுக்குத் தாய் தகப்பன் தமயன் நினைவு வந்திருக்கிறதா? மாதவன் பல கேள்விகளைத் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

ஆங்கில நாட்டில் வளரமுடியாத சூடான நாட்டுப் பூக்கள், மிகவும் கவனமான திட்டத்துடன கட்டப்பட்ட, கண்ணாடிக் கூரைகள் கொண்ட அந்தக் கிறின் ஹவுஸில் பாதுகாப்பாக வளர்கிறது. ஓரு மல்லிகைக் கொடியும் வளர்கிறது!

தாய் தகப்பனையிழந்த அவளை அவளின் தாத்தா பாட்டியார் பாதுகாத்தார்கள்.அன்பும் ஆசையாயுடனும் அவள் வாழ்க்கையைக் கொண்டு நடத்த உதவினார்கள். அவளுக்குப் பதினெட்டு வயதானதும் அவளின் மாமாவின் உதவியுடன் லண்டனுக்குப் படிக்க வந்தவள். லண்டனுக்கு வந்து இரண்டு வருடங்கள் தனது ஆங்கில அறிவை விரிவாக்கிக்கொண்டு பல்கலைகழகப் படிப்பைத் தொடங்கியிருந்தாள்.

மிகவும் இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்து பழகிய நித்யாவுக்;கு லண்டனில் பிரமாண்டமான வாழ்க்கை பயத்தைத் தந்ததாக அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். படித்து முடித்ததும்,திரும்பவும் தாத்தா பாட்டியிடம் போய்ச் சேரவேண்டும் என்ற துடிப்புடன் தனது படிப்பை லண்டனில் ஆரம்பித்தாள்.அவள் பிறந்த அழகிய கோளாவில் கிராமமும்,;அதைத் தழுவியோடும் புனல் பொங்கும் தில்லையாறும்,கோளாவில்; கிராமத்து மக்களும்,அவர்களின் சடங்குகளும்,கிராமத்துப் பாடல்களும அவள் இறக்கும்வரை அவள் மூச்சோடு இணைந்திருப்பவை என்று அவனுக்குத் தெரியும்.

அவன் லண்டன் பல்கலைக்கழகத்தில் நித்யாவைக் கண்டதும் அவளில் காதல் வயப்பட்டதும்,அவன் தனது வாழ்க்கையில் கற்பனைகூட செய்திருக்காத ஏதோ கனவுபோன்ற விடயங்கள்.

அவன் அவளைக் கண்டது ஒரு அவசரமான காலைப் பொழுதில், லண்டனின் மத்தியிலுள்ள மிகவும் பிஸியான றஸ்ஸல் சதுக்கப் பாதாளப் புகையிரத நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, நடந்த ஒரு சிறிய சந்தர்ப்பமாகும்.

பாடசாலைகள், யூனிவசிட்டிகள் எல்லாம் வசந்தகாலத்தின்; ஆறுகிழமை விடுமுறைக்குப் பின் லண்டன் மாணவர் கூட்டத்தால் பொங்கி வழியத் தொடங்கி விட்டது. 2001ம்; ஆண்டு,செப்டம்பர் மாதத்தில் முதற்கிழமையில் ஓருநாள்,லண்டன் மாநகர் இடைவிடாத மழையாலும் பெருங்காற்றாலும் வதைபட்டுக் கொண்டிருந்தபோது, பாதாள ட்ரெயினால் இறங்கித் தனது யூனிவர்சிட்டிக்குப் போகத் தெருவை அவசரமாகத் தாண்டிக் கொண்டிக் கொண்டிருந்தபோது,பெருவாரியான ஜனக்கூட்டத்தில் அவளுக்குப் பக்கத்தால் வந்து கொண்டிருந்தவனுடன் நித்தியா மோதிக்கொண்டாள்.

அவள்.மிகப் பரபரப்புடன்.தர்மசங்கடத்துடன்,அழாதகுறையாகத் தனது பார்வையை நிமிர்த்தி,’ஐ யாம் சாரி..’என்றாள்,நீரில் தவழும் மீன்களாக அவள் கண்கள் ஒரு கணம்; அவன் முகத்iதில் நீச்சலடித்தன..

மாதவன்,’பரவாயில்லை..மழையில் பாதையெல்லாம் நெரிசலாக இருக்கிறது’ என்றான். அவளின் கண்களில் பிரதிபலித்த ஏதோ ஒரு அசாதாரண சக்தியில் அவன் ஒரு கணம் திடுக்கிட்ட விட்டான்.அவனின் பார்வை தன் முகத்தில் பதிந்திருப்பதை அவதானித்த,அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அவசரமாக ஓடிவிட்டாள். அதன்பின் அவன் பிரயாணம் செய்யும் ட்ரெயினில் அவள் வந்து ஏறுவதைப பலநாட்கள் அவன் அவதானித்தான். அவனுக்கு அப்போது இருபத்தி ஆறுவயது. முதலாம் பட்டம் பெற்று இருவருடங்கள் ஒரு இடத்தில் உத்தியோகம் பார்த்தபின்,அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது பட்டப்படிப்பான முதுகலைப் படிப்பை அவன் ஆரம்பித்திருந்தான்.

அவள் அவனின் யூனிவர்சிட்டிக்குப் பக்கத்திருக்கும் பல பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முதலாவது மாணவியாயிருக்கலாம் என்று அவன் நினைத்தான். அவள் இலங்கை அல்லது இந்தியாவைச் சேர்ந்தவள் என்றும் லண்டனுக்கு அண்மையிற்தான் வந்திருக்கவேண்டும் என்றும் ஊகித்தான்;.அவன் அவனது பதினாறாவது வயதில் லண்டனுக்கு வந்தவன். இலங்கையில் நடந்துகொண்டிருந்த அரசியற் பிரச்சினைகளால் அவர்கள் குடும்பம் அகதிகளாக ஓடிவந்தபோது அவன் வந்தான்.அவன் லண்டனுக்கு வந்து சிலவருடங்கள் அவளைப் போலத்தான் பரபரப்பான பார்வையுடன் தவித்தான்.

அவள் யார் என்று தெரியவேண்டும் போலிருந்தது, ஆனால் அவள்,ட்ரெயினில் ஏறியதும் யாரையும் பார்க்காமல் எப்போதும் எதையோ வாசித்துக் கொண்டிருப்பாள்.அவளின் அமைதியான, ஆடம்பரமற்ற தோற்றம் அவனைக் கவர்ந்தது.லண்டன் டரெயினில் யாருடனும் யாரும் பேசிக் கொள்ளமாட்டார்கள். வருடக் கணக்காக ஒரே நேரத்தில் அதே ட்ரெயினில் பிரயாணம் செய்பவர்களாகவிருப்பார்கள் ஆனால் ஒருத்தொருக்கொருத்தர் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.அவளிடம் பேசி அவள் பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள அவன் மனம் விரும்பினாலும் அவை சாத்தியமான காரியமாகத் தெரியவில்லை.

அவள் லண்டனுக்கு வெளியிலிருந்து வருபவள் என்பது அவளின் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்தது.அதாவது, வெளியூர்ப் பிராயணங்களின் கேந்திர இடங்களிலொன்றான கிங்க் க்றாஸ் ஸ்ரேசனில் பாதாள ட்ரெயின் நிற்கும்போது அவள் வந்து ஏறுவாள். அவர்கள் மோதிக் கொண்ட சிலவாரங்களின் பின் அவன் இரண்டாம் பட்டத்திற்கான படிப்புப் படித்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பகிரங்க செமினாருக்கு அடுத்தடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தபோது அவளும் அவர்களில் ஒருத்தியாகவிருந்தாள்.

செமினார் முடிந்ததும் மாணவர் கூட்டம் ‘ஸ்ருடன்ஸ் பாரை’ முற்றுகையிட்டுக்கொண்டிருந்தது. அந்த நெருசலில் அவன் அவளைத் தேடினான். பாரின் ஒரு மூலையில்,ஒருசில மாணவிகளுடன் ஆரன்ஞ் சாறை உறிஞ்சிக் கொண்டு ஏதோ கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அவன் துணிவாக அந்தப் பக்கம்; போனான். தயக்கமில்லாமல், அந்த மாணவிகளுக்கு அருகில் வந்து, ‘எக்ஸ்கியுஸ் மி’ என்று பொதுப் படையாகச் சொன்னான். அங்கிருந்த மாணவிகள் இவன் யார் என்பதுபோல் ஒருத்தொருக்கொருத்தர் பார்த்துக் கொண்டனர். அவன்,நித்யாவைப் பார்த்து ,’ஹலோ’ சொன்னான். அவனை ஏறிடடுப் பார்த்த நித்யா அவன் யார் என்று தெரிந்த தோரணையில் தனது பார்வையை அவன் முகத்தில் பதித்துக்கொண்டு தர்மசங்கடத்துடன் அவனை எடைபோட்டாள்.

‘ஞாபகமிருக்கிருக்கிறதா..அன்று மழையில் ஓடிக்கொண்டிருந்தபோது..’ அவன் முடிக்கவில்லை,அவள் அவனை ‘நன்றாக’..ஞாபகம் வந்த பாவனை கலந்த புன்முறுவலுடன்,’ஹலோ’ சொன்னாள்.

‘ உங்களைக் குழப்புவதற்கு மன்னிக்கவும்..எனது பெயர் மாதவன்..இந்த யுனியில் மாஸ்டர் செய்துகொண்டிருக்கிறேன்’ என்றான்.

‘ஹலோ.. நான் நித்யா..அடுத்த யூனியில் பர்ஸ்ட் டிகிரி செய்துகொண்டிருக்கிறேன்’என்றாள்.

இருவரும் மழையில் நனைந்தபோது மோதிக்கொண்ட சந்திப்பைத் தங்களுடன் வந்த சினேகிதிகளுக்குச் சொல்லிக் கொண்டார்கள்.

அதன் பின் அவன் நீண்ட நேரம் அவளுடன் வந்திருந்த மாணவிகள் கூட்டத்துடன் அன்று நடந்த செமினார் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

அதன்பின் இருவரும் அடுத்த சில நாட்களில் ஒருத்தரை ஒருத்தர் ட்ரெயினில் கண்டதும் ‘ஹலோ’ சொல்லத் தொடங்கி இருவரையும் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

அடுத்த நாள் எப்போது வரும் அவளைக் காண எவ்வளவு நேரமெடுக்கும் என அவன் மனம் தவிக்கத் தொடங்கியது.

இங்கிலாந்தின் நான்கு பருவங்களும் ஒன்றையொன்று துரத்தியடித்தன.ஒருவருடம் எப்படி ஓடியது என்று யோசிக்முதல் அடுத்த வருடம் வந்து விட்டது.

தனது படிப்பு முடிய அமெரிக்கா போவதாகத் தான் யோசித்திருப்பதாக அவன் சொன்னபோது,’ ஏன் ஊருக்குத் திரும்பிப்போகும் யோசனை இல்லையா?’ என்று கேட்டவள்,அவன் மறுமொழி சொல்ல வாய்திறக்க முதலே,தான தனது படிப்பு முடிய ஊருக்குப் போகத் துடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள்.

லண்டனுக்கு வருவதற்கு உலகெங்கிலுமள்ள மக்கள் ஏதோவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவள் என்னவென்றால்?

அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். ‘பணம் மட்டும்தானா வாழ்க்கையில் சந்தோசத்தையும்,முழுமையையும் தரும்?’அவள் அவனிடம் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அப்போது இருபத்தியொரு வயது.அவர்கள் சந்தித்து ஒருவருடமாகிறது. அவனின் படிப்பு முடியப் போகிறது. இனி அவளை அவன் அடிக்கடி காணமுடியாது. ட்;ரெயினில் பக்கத்திலிருந்து பேசிக்கொணN;ட பிரயாணம் செய்யமுடியாது. றஸ்ஸல் சந்தியில் பிரிந்து தங்கள் யுனிவர்சிட்டிகளுக்குப் போகமுடியாது.

அவனின் படிப்பு முடிந்து வேலை செய்யத் தொடங்கியதும்;, அவர்கள் வீட்டுக்கு அம்மாவின் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள்.மகனுக்குப் படிப்பு முடிந்து விட்டதைத் தெரிந்து கொண்ட உறவினர்கள் அவனுக்குக் கல்யாணம் பேச முனைவது மாதவனின் தாய்க்குத் தெரியும். அவனிடம் அவள் மெல்லமாக அவர்களின் வருகையின் காரணத்தைச் சொன்னபோது,அவன் தாயை ஏறிட்டுப்பார்த்தான். அவன் தங்கைக்குக் கல்யாணமாகிவிட்டது. அவனின் திருமணத்தையும் சீக்கிரத்தில் நடத்தி முடிக்கவேண்டும் என்று அவனின் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

‘அம்மா. தயவு செய்து இரண்டு வருடத்தக்கு என்னை வற்புறுத்தவேண்டாம்’ அவன் குரலில் தொனித்த உறுதி அவனுக்கே புரியவில்லை.

ஏன் இரண்டு வருடம் என்று அம்மா கேட்டால்,’நான் நித்யாவின் படிப்பு முடியும்வரை காத்திருக்கப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பானா? அதுவும் அவனுக்குத் தெரியாது,ஏனென்றால் நித்யாவும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்களா என்று அவனுக்கே சரியாகத் தெரியாது. ஆனால் நித்யாவில் அவனுக்குள்ள ஈர்ப்பை அவன் மறுக்க முடியாது.

மகனின் பிடிவாத குணத்தைத் தெரிந்து கொண்ட அம்மா மௌனமானாள். இரண்டு வருடங்கள் பறந்தன.

ஏப்போதாவது நடக்கும் பொது செமினார்க்களில் நித்யாவும் அவனும் சந்தித்துக் கொண்டார்கள். அவளின் மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவள் படிப்பில் மிகவும் கவனமாக இருந்ததால் அவள் செமினார்களுக்கு வருவதையும் தவிர்த்திருந்தாள். இ மெயில்களில் பொது நலன்களை ஏதோ ஒரு சாட்டுக்கு வைத்துக்கொண்டு அவர்கள் தொடர்பு தொடர்ந்தது.

அவள் படிப்பு முடிந்து விட்டது. பட்டமளிப்புப் படத்தையனுப்பியிருந்தாள்.அவன் தாமதிக்கவில்லை.

‘ஐ லவ் யு..’என்று தொடங்கி, அவளை அவன் ஏன்விரும்புகிறான் என்பதை விளக்கி.அவள் அவனைத் திருமணம் செய்யச் சம்மதித்தால் அவன் மிகவும் அதிர்ஷ்டசாலியானவனாக நினைத்தக்கொள்வான் என்று சுருக்கமாக எழுதினான்.

அவளிடமிருந்து சில வாரங்களுக்கு மேல் பதிலே வரவேயில்லை.

அவன் சோர்ந்து போகவில்லை. நித்யா அவனைப் பற்றியும் அவனுடன் இணையப்போகும் அவளின் எதிர்காலத்தையும் பற்றியும் நன்றாக யோசிக்கடடு;ம் என்று நினைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தான்.

ஒரு நாள் அவன் எதிர்பார்த்திருந்த இமெயில் வந்தது. அவளை அவன் சவுத்பாங்க் என்ற இடத்தில் சந்திக்க முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தாள்.

லண்டன் மத்தியில் வாட்டாலூ என்ற இடத்திலுள்ள சவுத்பாங்க் என்ற இடம் பல தரப்பட்ட கலைக்கூடங்களின் நிகழ்விடம். ஓரு பக்கத்தில் பிரமாண்டமான பிரித்தானிய பாராளுமன்றமும்,அதைத் தழுவி ஓடும்; தேம்ஸ் நதி, அதையண்டிய பல தரப்பட்ட பிரபலமான இடங்கள்,அவள் அவனை அவ்விடத்திற்கு வரச் சொல்லியிருந்தாள். அந்தப் பின்னேரம், மிகவும் முக்கியமானதாக அவன் மனம் சொல்லியது.

அவள் வந்தாள்.அவள் இப்போது ஒரு ஐ.டி.கம்பனியில் வேலை செய்வதாகச் சொன்னாள். அந்த மாலைவெயிலின் பிரதிபலிப்பில்,அழகாகத் தோன்றினாள்.அள்ளியணைக்க அவன் மனம் துடித்தது,அடக்கிகொண்டான்.

அவனை நேரடியாகப் பார்க்கத் தர்ம சங்கடப்பட்டாள். அவன் அதை எதிர்பார்த்ததால் அலட்டிக்கொள்ளவில்லை.அவன் இருவருக்கும் குளிர் பானங்கள் ஆர்டர் பண்ணினான்.அவள் எதையோ தீவிரமாக யோசிப்பது அவனுக்குத் தெரிந்தது.

‘என்னைத் திருமணம் செய்து கொள்வதால் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?’ அவள் உடனடியாக விடயத்துக்கு வந்தது அவனுக்குத் திருப்தியாகவிருந்தது.அவளின் கேள்வியில்,’நான் உன்னைத் திருமணம் செய்யச் சம்மதம்’ என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

அவன் அவளைப் பார்த்து மெல்லமாகச் சிரித்தான்.’ உன்னுடன் நரகத்துக்குப் போவதாக இருந்தாலும் அதை என் எனது பாக்கியமாகக் கருதுவேன்’.

அவன் குறும்புத்தனமாகச் சொன்னான்.

‘நான் அமானுஷ சக்தியை நம்புவள்’ அவள் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். இறங்கு வெயிலின் வெளிச்சம் அவளின் கண்களில் பிரதிபலித்தது. ஏதோ ஒரு சக்தி அவனை ,’மௌனமாகவிருந்து அவள் சொல்வதைக்கேள்’ எனறு ஆணித்தரமாகக் கட்டளையிட்டது போலிருந்தது.

‘ எனக்கு சோகம் வரும் நேரங்களில் என்னைவிட்டுப் பிரிந்துபோன எனது தாய் தகப்பன், தமயனுடன் எனக்குப் பேசவேண்டும போலிருக்கும். அப்போது அவர்களுக்குப் பிடித்த மலர்கள்,கடவுள் படங்களைக்கண்டால் அவற்றுடன் பேசுவேன். அதைப் பைத்தியத்தனம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் எனக்கு என் அம்மா கனவில் வந்து எனக்கு என்ன நடக்கும் என்று எனது எதிர்காலத்தைச் சூசகமாகச் சொல்வதுண்டு..’அவள் அவனை நேரே பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவன் ஏதோ ஒரு ஆணைக்குக்; கட்டுப் பட்ட உணர்வுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘உங்களைக் காணுவதற்கு…மோதிக்கொள்வதற்கு முதல் நாளிரவு எனது தாய் எனக்குப் பிடித்த மல்லிகை மலர்களைத் தந்ததாகக் கனவு கண்டேன். அவள் சந்தோசமாக அதைக்கொடுத்தாள்;’ அவள் கண்களிலிருந்து சட்டென்று நீர்வழியத் தொடங்கியது.அதை வழித்துத் துடைக்க அவன் கரங்கள் துடித்தன.அவன் தன் மன நிலையை அடக்கிக்கொண்டான்.அவளின் பேச்சால் அபரிமிதமான அமைதி அவர்களைச் சுற்றிவருவதாக அவன் உணர்ந்தான்.

அவன் உடம்பு சில்லிட்டது.

‘ லண்டன் யூனிவாசிட்டிக்குப் போவதை அவள் ஆசிர்வாதிப்பதாக நினைத்தேன்’ அவள் கண்கள் அவனில் நிலைத்திருந்தது.

அவன் பேச்சு மூச்சற்றுப்போய் அவள் சொல்வதைக்கேட்டுக் கொண்டிருந்தான்

‘நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யக் கேட்பீர்கள் என்று எனக்கு எப்போதோ தெரியும்’ அவள் வார்த்தைகள் அவன் மனத்தை ஊடுருவியது.

அவள் அவனின் மன உணர்வுகளை அப்பட்டமாகப் புரிந்துகொண்டவள் மாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘அன்று நீங்கள் என்னிடம் செமினார் அன்று பேசியதற்கு முதல் இரவு உங்களையும் அம்மாவையும் கனவில் கண்டேன். அம்மா எங்களை ஆசிர்வதித்தாள்’

அவள் சொல்வதெல்லாம் அவள் கண்ட கனவின் பிரதிபலிப்பா? அல்லது அவர்களின் சந்திப்பால் தொடர்ந்த அவள் மனத்தின் கற்பனை வடிவங்களா?அவனுக்குத் தெரியாது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களை அவன் நம்புவதா என்பது அவனுக்குப் பிரச்சினையில்லை.

அவனுக்குள் அவள்; நுழைந்து விட்டாள். அவன் மூச்சில்,அவள் நாமம் இணைந்திருக்கிறது.

அவனுக்கு அவளுடன் சேர்ந்த எதிர்காலம் வேண்டும்.அவனால் அவனுள் வரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள்த் தள்ளப் பட்டிருப்பதைப் புரிந்துகொண்டபோது அவனுக்கு மெய்சிலிர்த்தது.

அவள் சொல்வதுபோல் அமானுஷ சக்திகள் உள்ளவளா?

இவளுக்கும் எனக்கும் முன்பிறப்பில் தொடர்பிருந்ததா?

இன்னும் எத்தனை பிறப்புகளுக்குள்ளும் அவன் அவளுடன் இணையத் தயார். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.அது அவளுக்குக் கேட்டதுபோல்,’எனக்கு லண்டன் பிடிக்காது’ அவள் தொடர்ந்தாள் அவள் தனக்கு இங்கிலாந்த பிடிக்காது என்று சொல்லவில்லை என்பது அவனுக்குத் திருப்தியாகவிருந்தது.

‘நீங்கள் நன்றாக யோசித்து விட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கள்’அவள் எழுந்தாள்.

போய்விட்டாள்.இவனைச் சரியாகப் புரிந்துவிட்ட தொனி அவள் குரலில்.

அமானுஷத்தை நம்புவளாம்!.அவன் விஞ்ஞான விளக்கக்களின் மூலம் உலகை அளவிடுபவன்.

மாதவன் சில நாட்கள் தீவிரமாக யோசித்தான்.அவனுக்கு இருபத்தியொன்பது வயது. பல விதமான முற்போக்குக் கொள்கைகளையுடையவன். பேய் பிசாசுகள் பற்றிப் பேசுபவர்களை இதுவரைப் புரிந்து கொள்ளாதவன். இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தெரிந்து கொண்டே, பேய் பிசாசுகளை நம்பும் ஒரு பெண்ணைச் செய்வதா?

அவனின் நண்பன் சிவராம், மனிதர்களின் அபரிமிதமான,சக்திகளை உணர்வுகளைப் பற்றிய விடயங்களில் அக்கறையுள்ளவன். முப்பது வருடகாலமாக இலங்கையில் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துமிடையில் நடந்த போரில் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் ஏராளம். மறைந்து போன அந்தத் தமிழர்கள் பலருக்கு என்ன நடந்தத என்று தெரியாமற் தவிக்குப் பல்லாயிரக்கணக்கான், தாய் தகப்பன்கள், மனைவியர், குழந்தைகள்,என்போர்; பலர் தங்களிடமிருந்து பல கருத்துக்களை, கனவுகளை, நம்பிக்கைகளைச் சுமந்துகொண்டு துயர வாழ்க்கை நடத்தம் துன்பத்தின் பல கதைகளை அவர்களிடமிருந்து கேட்டவன். மாதவன் சிவராமிடம் நித்யாவின் பெயரைச் சொல்லாமல் அவள் சொன்ன அமானுஷ விடயங்கள் பற்றிக் கேட்டான்.

‘நீ சொல்லும் பெண்ணின், வாழக்கையில் சட்டென்று மிக மிகத் துன்பமான இழப்புகளைச் சந்திதத்தால் அந்தப் பெண் இறந்து விட்ட மனிதர்கள் இன்னும் தன்னுடன் வாழ்வதாக நினைத்துக்கொள்வதில் திருப்தி கொள்கிறாள். அவர்களுக்குப் பிடித்த விடயங்கள், பொருட்களில் தன்னைப் பிணைத்துக்கொள்வதில் சந்தோசப் படுகிறாள். இறந்து விட்ட எங்கள் மூதாதையர்களுக்கும் நாங்கள் அந்த நம்பிக்கையிற்தானே சடங்குகள் செய்கிறோம்.’அவன் தொடர்ந்தான்.

‘சிறு குழந்தைகள் கற்பனைச் சிநேகிதர்களை வைத்திருப்பது உனக்குத் தெரியும். ஓரு சில மனிதர்கள்;, அகாலமாக இறந்து விட்ட தங்களின் அன்புக்கு உரியவர்களைக் கனவு காண்பதும், அவர்களின் ஆவி தங்களுடன் பேசுவதாகவும் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பாய்.

துக்கமான குடும்ப சரித்திரத்தைக் கொண்ட குழந்தைகள் தங்கள் துயர் மறக்க மலரிலும், செடியிலும் சிலவேளை பூனை நாய் போன்ற மிருகங்களிலும்,அளவுக்கு மீறிய அக்கறை காட்டுவார்கள்.இது ஒரு மன நோயல்ல..ஆனால் அது எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளுக்கு அவள் எப்படி முகம் கொடுக்கப்போகிறது என்பதை இனித்தான் அவதானிக்கவேண்டும்’ என்று விளக்கி முடித்தான்.

மாதவன், அவனுக்குப் பிடித்த நித்யாவைத் திருமணம் செய்வதை அவனுடைய குடும்பம் அவ்வளவாக விரும்பவில்லை. அவர்கள் இலங்கையில் வடக்கின் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். நித்யா கிழக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போதுதான் லண்டனுக்கு வந்திருப்பவள். வித்தியாசமான குடும்ப, பொருளாதார, கல்வி நிலைகளிலிருந்து வந்தவர்கள்.

மாதவனின் பிடிவாதத்துக்கு அவர்கள் இடம் கொடுத்து நித்யாவை மருமகளாக்கிக் கொண்டார்கள். அவளின் அழகும், பவித்திரமான குணங்களும் மாமியாரைக் கவர்ந்து விட்டது. ஆனால் மாதவனின் பாட்டியார், மிகவும் பழைய கொள்கைகள் உள்ளவள். மாதவன்,எப்போதும் நித்யாவுனுடன் ஒட்டிக் கொண்டிருப்பதையும் மாதவன் நித்யாவைத் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டாடுவதையும் அவள் வெறுத்தாள்.

‘என்ன இவன் ஏதோ அவள் போட்ட வசிய மந்திரத்துக்கு அடிமைப்பட்டதுபோல் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்?’ எரிச்சல் தாங்காத பாட்டி பொரிந்து தள்ளினாள்

மாதவன் கல்யாணமாகி ஒருசில மாதங்களில் தனிவீடு வாங்கிக்கொண்டு நித்யாவுடன் வந்துவிட்டான்.அவர்களுக்குக் குழந்தை பிறக்கப்போவது தெரிந்ததும்,’ எங்களுக்கு ஆண்குழந்தைதான் பிறக்கும்’ என்று நித்யா சொன்னாள்;. அகாலமாக இறந்து விட்ட எனது தமயன் அல்லது அவள் தந்தை எனது மகனானகப் பிறக்கப்போகிறான் என்று அவள் சொல்லவில்லை. ‘பெரும்பாலான பெண்கள் முதற் குழந்தையாகப் ஆண்குழந்தையைத் தான் விரும்புவார்கள்’ அவன் தனக்கு மனதில் பட்டதைச் சொன்னான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

‘எங்களுக்கு என்ன குழந்தை பிறந்தாலும் எனக்குப் பரவாயில்லை..அது எங்களின் அன்பின் சங்கமத்தின் அடையாளம், ஆனால் எனது வயிற்றில் ஆண்குழந்தைதான் வந்திருக்கிறது என்று எனக்குத் தெரியும். எங்கள் குழந்தைக்கு விஷ்ணு என்று பெயர் வைப்போமா?’ அவள் கனவில் பேசுவது போல்ப் பேசினாள். அவன் பெயர் மாதவன். அவளின் தகப்பன் பெயர் கிருஷ்ணகுமார். இறந்து விட்ட அவளின் தமயனின் பெயர் கண்ணன். அத்தனை பெயர்களும்,காக்கும் கடவுள்,திருமாலின் பெயர்கள்.

ஆனால்,அவளின்; குடும்பம் கடவுளர்களாலும் காப்பாற்ற முடியாத விதத்தில் சிங்கள இனவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுவிட்டார்கள். அவளின் தாய் தகப்பன்,1986ம் ஆண்டு, உடல் நலமில்லாமல், வருந்தும் தங்கள் மகன் கண்ணனுக்கு வைத்தியம் பார்க்க, இலங்கையின் தலைநகரான கொழும்புக்குச் சென்றார்கள். அந்தக் காலகட்டத்தில் அப்போது அரசிலிருந்து ஐக்கிய தேசியக் கடசியின் ஆதரவுடன் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. நித்யாவின் தாய், தகப்பன், தமயனுடன்,இலங்கையின் கிழக்கிலிருந்து தலைநகரான கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பஸ்ஸில் பிரயாணம் செய்த ஐம்பத்தியாறு தமிழ் உயிர்களுக்கு என்ன நடந்ததென்று இதுவரையும் தெரியாது. அவர்களை இழந்தபோது நித்தியாவுக்கு ஐந்து வயது. தாய்,தகப்பன் தமயனின் முகத்தைச் சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத வயது. அவர்களின் படங்களை வைத்துக் கொண்டு பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறாள்.

இப்போது குழந்தைக்கு விஷ்ணு என்று பெயர் வைக்கப் போகிறாளாம்!.அவர்களைத் தனது வாழ்க்கை முழுதும் ஞாபகப் படுத்த அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாளா? மாதவன் அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்ததும் மெய் சிலிர்த்து விட்டான்.

குழந்தை வயிற்றில் வந்ததும்,அவளின் விருப்பத்தின்படி லண்டனுக்கு வெளியே வீடு வாங்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள்.

அந்தப் புதுவீட்டுக்கு வந்த நாளிலிருந்து நித்யா பெரும்பாலான நேரத்தை அந்தக் கிறீன் ஹவுஸில் செலவிடுகிறாள். பல வசதிகளையம் கொண்ட ஒரு மண்டபம் போன்றது அந்தக் கிறீன் ஹவுஸ். இருபக்கங்களும் பெரிய மேடைகள் அமைக்கப்பட்டு பலவகையான உயர்தர மலர் செடிகள் வைக்கப் பட்டன. நித்யாவுக்கு ‘ஓர்கிட்’ மலர்கள்; என்றால் பெரிய விருப்பம். அவளின் சிறுவயதில்,அவளின் தாத்தாவுடன் அவரின் வயலுக்கு,காடுகள் அடர்ந்த கோமாரி என்ற பிரதேசத்துக்குப் போகும்போது, அங்கு உள்ள மிக அடர்ந்த காடுகளில் பலவித ‘ஓர்கிட்’; மலர்களைக் கண்டு பரவசப் பட்டதாகச் சொன்னாள்.

அவர்கள் அந்த வீட்டுக்கு ஆனிமாத முற்பகுதியில் வந்தார்கள். அவள் அப்போது ஆறுமாதக் கர்ப்பவதி. மாதவன் வேலைக்குப் போனதும் அவளின் வீட்டையும் கிறீன் ஹவுஸையும் அழகு படுத்துவதில் அவள் நேரம் கழிந்தது.அந்தக் கிறீன் ஹவுஸ் அழகிய மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. அந்த மண்டபத்தில். இருவர் இருந்து சாப்பிடவோ அல்லாது தேனீர் பருகவோ ஒரு சின்ன மேசையும் இரு நாற்காலிகளுமிருந்தன. ஓரு ஓரத்தில், களைப்பு வந்தால் சாய்ந்து படுக்க ஒரு சாய்மானக்கதிரை (நாற்காலி) போடப்பட்டிருந்தது. ஏற்கனவே நீர்; வசதியும், மின்சார வசதியுமிருந்ததால் மாதவன், சில அழகிய லைட்களைப் பூட்டினான். நித்யா அவ்விடத்தில் நிறைய நேரத்தைச் செலவளிப்பதால் அவள் தேனிர் வைத்துக்கொள்ளும் வசதியும் செய்து கொடுத்தான்.

அவன் வீட்டில் நிற்கும்போது அவர்களின் மதிய சாப்பாடு கிறீன் ஹவுஸில் நடக்கும்.

ஓக்டோபர் முற்பகுதியில்,அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ‘விஷ்ணு’ என்று நிமிடத்துக்கொருதரம் சொல்லிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் நித்யா.

அப்போது சரியாகக் குளிர் வரத் தொடங்கவில்லை.பகல் நேரத்தில் அந்தக் கிறீன் ஹவுசில் அந்தக் குழந்தையுடன் நீண்ட நேரம் செலவிடுவாள்.

குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் அவனின் பாட்டி வந்து நித்யாவுக்கு உதவியாகவிருந்தாள். அந்தக் கிழவிக்கு,மாதவன் அவளைச் செல்லம் பண்ணுவதால் நித்யாவை ஏற்கனவே பெரிதாகப் பிடிக்காது. நித்யா இப்போது மாதவனைச் சட்டை செய்யாமல் குழந்தையுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுவதைப் பார்த்துவிட்ட, ‘என்ன நித்யாவுக்கு வீட்டில் புருஷன் இருக்கிறான் என்ற ஞாபகமே போய்விட்டதா’ என்று முணுமுணுத்தாள். அவனும் கிழவியைப் பொருட் படுத்தாமல்,நித்யா அவர்களின்; குழந்தையுடன் கூடநேரத்தைச் செலவிடுவதற்கு உதவி செய்தான். முதல் ஆறுகிழமையும் அவன் விடுதலை எடுத்துக் கொண்டு வீட்டோடு நின்றிருந்து அவளையும் குழந்தையையும்; பார்த்துக் கொண்டான்.

‘குளிர்வரத் தொடங்கியதும் கிறீன் ஹவுஸ் மிகவும் குளிராக இருக்கும்’அவன் அப்படிச் சொன்னபோது அவள் அவனை நீண்டநேரம் பார்த்தாள். ‘குழந்தையை நன்றாகப் போர்த்துக் கொண்டு வந்தால்ப் போயிற்று’ என்றாள்.அப்படிச் சொல்லும்போது அவளின் குரல் யாரோ குரல்போலிருந்தது.

அதன் பின் வழக்கம்போல் இலையுதிர்காலக் காற்றும் மழையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டபோது,அவன் நித்யா, குழந்தையை கிறீன் ஹவுசுக்குக் கொண்டு போகக் கூடாது என்று திட்டவட்டமாகச் சொன்னான். அவள் முகம் சட்டென்று வாடியது.

அக்டோபர் மாத இறுதியில்;; அடிக்கடி மழையாயிருந்ததால் அவள் குழந்தையைக் கிறீன் ஹவுசுக்குக் கொண்டு செல்லவில்லை. ஆனால் அடிக்கடி அந்தப் பச்சை வீட்டை வெறித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள்.

‘என்ன அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்’ என்று அவன் கேட்டபோது,

‘ கிறீன் ஹவுஸில் யாரோ நிற்பது போலிருக்கிறது’ என்றாள்.

‘ உனது அம்மாவா?;’ மாதவன் வேடிக்கையாகக் கேட்டான். அவள் அவனுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

”நித்யா, எங்களின் குழந்தையைப் பார்க்க உனது பெற்றோர் இவ்விடமில்லையே என்று துக்கப் படுவது எனக்குப் புரியும். ஆனால் தயவு செய்து, உனது அம்மாவின் ஞாபகம் வந்தபோதெல்லாம் குழந்தையை அந்தக் கிறீன் ஹவுசுக்குள் கொண்டு செல்லாதே’ அவன் அன்புடன் வேண்டிக் கொண்டான்.

ஆனால் ஒரு நடு இரவு ஏதோ சப்தம் கேட்டு எழுந்தவன், பக்கத்தில் நித்யாவையோ தொட்டிலில் குழந்தையையோ காணாததால் அலறிப் புடைத்துக்கொண்டு வெளியே வந்தான். கிறீன் ஹவுசில் லைட் எரிந்தது. அங்கு போனால் நித்யா குழந்தையுடன் அங்குள்ள சாய்ந்தாடும் நாற்காலியில் படுத்திருந்தாள்.

ஆத்திரத்தில் அவன் மனம் பற்றியெரிந்தது. என்னவென்று ஒருதாய் இப்படி ஒரு பச்சை மண்ணை இந்தக் குளிருக்குள் கொண்டுவரலாம்?

‘ என்ன உனது அம்மா உனது கனவில் வந்து உன்னை இங்கே வரச் சொன்னாளா?’ அவன் தான் என்ன பேசுகிறான் என்று தெரியாமல் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.

அவள் அவனை வெறித்துப் பார்த்தாள் அந்தப் பார்வையை அவன் விரும்பவில்லை. அவள் யாரோ ஒருத்திபோல் அவனை உறுத்துப் பார்த்தது அவனுக்கு எரிச்சலாகவிருந்தது.

சிலருக்கு நித்திரையில் எழும்பி நடக்கும் வருத்தம் இருப்பதென்றும் அந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது என்று அவன் படித்திருக்கிறான். அப்படி ஒரு நோயால் நித்யா துன்பப்படுகிறாளா? அவன் குழப்பத்துடன் பலதையும் யோசித்தபடி, தாயையும் சேயையும் கட்டியணைத்தபடி அறைக்குள் கொண்டு வந்து சேர்த்ததும்,

‘ உனக்கென்ன பைத்தியமா இப்படி இந்தப் பச்சை மண்ணை இந்தக் குளிரில் வதைப்பதற்கு?’ அவன் அவனால் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில் இரைந்தான். அவள் அவளை ஒரு அந்நியனைப் பார்ப்பதுபோல் வெறித்துப் பார்த்தாள். அந்தப் பார்வை அவனுக்குத் தர்மசங்கடத்தைத் தந்தது.அவனுக்குக் கோபம் அளவுக்கு மீறியது. தனது கோபத்தை வெளிப்படுத்த இரைந்து கத்திக் கொண்டிருந்தான்.

‘ நான் இந்த கிறீன் ஹவுஸைச் சீக்கிரம் அடித்து நொறுக்கினாற்தான் உனக்குப் புத்தி வரும்’ அவன் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தான்.

அதுதான் முதற்தடவை அவளிடம் இரைந்து பேசியது.

அவன் குழந்தையை நித்யாவிடமிருந்து பறித்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான். அவள் அப்போதுதான் ஏதோ சுயநினைவுக்கு வந்தவள்போல்,அவனைப் பார்த்து விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.

‘ நான்..நான். வேண்டுமென்றே அங்கு போகவில்லை.’அவள் மேலே சொல்லத் தெரியாமல் விம்மினாள்.

‘நித்யா எங்கள் குழந்தை இந்தக் குளிரைத் தாங்காதம்மா’ அவன் அவள் அழுகையைத் தாங்காது அணைத்தபடி சொன்னான்.

‘மன்னித்து விடுங்கள்..இனி அப்படிச் செய்ய மாட்டேன்’ அழுதபடி சொன்னாள்.மாதவனுக்கு நித்யாவைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. அவள்தனது தாயின் நினைவு வரும்போதெல்லாம் அந்தப் பச்சை வீட்டுக்குள் தஞ்சம் கேட்கிறாளா? அவனுக்கு எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் மனம் தத்தளித்தது.

அதற்கு அடுத்த நாள் அவனின் சினேகிதன் சிவராமும் அவனின் ஆங்கில மனைவி டேப்ராவும் மாதவன் தம்பதிகளைப் பார்க்க வந்திருந்தார்கள்.நித்யா சமையல் வேலையில் பிஸியாகவிருந்தாள்.நித்யாவுக்கு டேப்ராவை மிகவும் பிடிக்கும். மாதவன் மாதிரியே சிவராமும் டேப்ராவைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவன்.

டேப்ரா முற்போக்குக் கொள்கைகளையுடைய ஒரு ஆங்கிலப் பெண்ணியவாதி. உலக அரசியலில், முக்கியமாகப் பெண்கள் சம்பந்தப் பட்ட விடயங்களில் மிகவும் அக்கறையுள்ளவள்.பல்கலைக் கழகமொன்றில் பெண்களின் கல்வி சம்பந்தப்பட்ட சரித்திரத்தை ஆராயும் பாடத்தில் விரிவுரையாளராகக் கடமை புரிபவள்.

குழந்தை பிறந்த நாளிலிருந்து தொடரும் பிரச்சினைகளால்,சரியாக நித்திரை வராததால், மாதவன்; சோர்ந்து போயிருந்தான்.மிகவும் களைத்துப் போயிருந்த நித்யா,அவர்கள் வரும்போது நித்யாவும் ஏனோ தானோ என்று வந்தவர்களை வரவேற்றாள்.

வந்திருந்த சினேகிதர்களுக்கு அந்த வீடு.வழக்கமான கல கலப்பற்ற ஒரு சோகமான வீடாகத் தெரிந்தது. சிவராமும் டேப்ராவும் அந்த வீட்டுக்கு இரண்டாம் தடவையாக வந்திருக்கிறார்கள். முதற்தரம் வந்தபோது, அவர்கள் வந்து கொஞ்ச நேரத்தில் வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டபின், அந்தப் பச்சை வீட்டுக்குள் நுழைந்தார்கள். நித்யா கிட்டத் தட்ட ,அந்த கிறீன் ஹவுசிலேயே குடியிருப்பதைப் பார்த்து டேப்ரா ஒருகணம் திகைத்து விட்டாள்.

அதைப் பற்றி அவள் மாதவனுக்குச் சொல்லி ஆச்சரியப் பட்டபோது, ‘ என்ன செய்வது,நான் வேலைக்குப் போனதும் அவளின் தனிமையைப் போக்க இந்த கிறின் ஹவுஸில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறாள்’ என்றான்.

நித்யா அந்த பச்சை வீட்டுக்குள் நேற்று இரவில் குழந்தையுடன் போயிருந்தாது அவன் மனதில் அனலாக இன்னும் எரிந்து கொண்டிருந்தது. அதை இன்று வந்திருக்கும் அவர்களுக்கு எப்படிச் சொல்வது என்று மாதவன் தவித்தான். டேப்ராவின் மூலம் நித்யாவுக்குப் புத்திமதி சொல்லப் பண்ணவேண்டும் மாதவன் யோசித்தான்.

இதுவரையும்,நித்யா அவனை அந்நியனாக நடத்துவதை அவனின் சொந்தக்காரர்களுக்குச் சொல்லத் தயங்கினான்.

‘ நீதானே எதோ புதினமான புனிதமான காதல் என்றெல்லாம் புலம்பிக்கொண்டு திரிந்தாய்,இப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தாயா,ஆரம்பத்தில் அவளின் செய்த சூனியத்தின் மந்திரத்திரத்தாலோ மாயையாலோ அவளின் காலடியில் காவடி எடுத்துச் சுருண்டு கிடந்தாய். உன் தலைவிதி அப்படியாய்ப் போய்விட்டது’ என்று அவன் பாட்டி அவனில் இரங்கி நடிப்பதுபோல் நித்யாவை வறுத்தெடுப்பாள்.

‘ குழந்தை பிறந்ததும் வாழக்கையோ தலை கீழாக மாறியிருக்குமே’சிவராமன் மாதவன் நித்யா தம்பதிகளின் வாழ்க்கையின் சிக்கலைத் தெரியாமல்,குழந்தை பிறந்ததால் அந்த இளம் தம்பதியினர் ‘சாதாரண’ வாழ்க்கை முறை தடைப்பட்டதைக் கேட்டான்..

‘நித்யாவின் நடவடிக்கைகள் அசாதாரணமாகவிருக்கிறது,என்னிடம் நெருங்கப் பழகுவதையும் மனம்விட்டு விடயங்களைப் பேசுவதையும் தவிர்க்கிறாள்’ மாதவன் மென்று விழுங்கிக்கொண்டு முணுமுணுத்தான்.

டேப்ரா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.’ஆண்களுக்கு,பெண்கள் ஒரு உயிரைத் தங்கள் வயிற்றில் தாங்குவதன் தார்ப்பரியமோ. அல்லது அந்த உயிர் உலகுக்கு வந்ததும் அதை எப்படிப் பராமரிப்பது என்று ஒரு இளம் தாய்படும் துயர்களோ ஒரு நாளும் சரியாகப் புரியாது. புதிய ஒரு ஜீவனைப் பராமரிக்கும் பொறுப்பைச் சரியாக புரிந்துகொளளாமல். அவளின் நிலைக்கு உதவாமல் அவள் உங்களுடன் நெருக்கமாயில்லை என்று சொல்வது வெட்கமாயில்லையா?

டேப்ரா மாதவனைப் பார்த்து பொரிந்து தள்ளினாள்.

நித்யாவுக்கும் தனக்கும் ‘செக்ஸ் லவ்’ சரியில்லை என்று தான் சொல்வதாக டேப்ரா எடுத்துக் கொண்டதை மாதவன் உணர்ந்து கொண்டான்

அவனுக்கு அவளின் ஆத்திரம் நம்பமுடியாதிருந்தது. நித்யாவையும் குழந்தையையும் அவன் எவ்வளவு தூரம் கண்ணும் மணியுமாகப் பார்த்துக் கொள்கிறான் என்பதை எப்படி டேப்ராவுக்கு விளங்கப் படுத்துவது?

‘ டேப்ரா, ஒரு புதிய தாய் ஒரு சிறு குழந்தையுடன் என்ன பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்று உன்னை விட எனக்குக் கூடத் தெரியும். எங்களுக்குள் எங்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பிரச்சினையாகவிருக்கவில்லை. ஆனால் நித்யா சிலவேளைகளில் தன்னை மறந்து எதையோ யோசிக்கிறாள். என்னை அந்நியனாகப் பார்க்கிறாள். குழந்தையை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு இறுக அணைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் மறைந்து விடுகிறாள். அதனால்,அவளுக்கும் எனக்குமிடையில் எங்கள் குழந்தை பற்றிய தர்க்கங்கள் அடிக்கடி வருகின்றன’ அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அழுது விடுவான்போலிருந்தது.

சிவராம் மாதவனைத் துன்பப்படுத்திய டேப்ராவை முறைத்துப் பார்த்தான்.

‘மாதவன் நான் உன்னைப் புண்படுத்துவதற்காக ஒன்றும் சொல்லவில்லை. குழந்தை பிறந்ததும் ஒரு பெண்ணின் உடம்பிலும் உள்ளத்திலம் பாரிய மாற்றங்கள் நடக்கின்றன. இதன் தார்ப்பரியத்தைச் சரியாகக் கணித்துப் பராமரிக்காவிட்டால் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். குழந்தை பிரசவம் நடக்கும்போது ஒரு பெண் கிட்டத்தட்ட ஐந்நூறு மில்லி லீட்டர்ஸ் குருதிpயை இழக்கவேண்டி வரலாம் அதன் பாரதூரமான விளைவுகள் எத்தனையோ. சாதாரண மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் இழக்கும் குருதியை விடப் பிரமாண்டமானது இது.. அதனால் ஏற்படும் களைப்பு, குழந்தைக்குப் பால் கொடுக்கவேண்டியதால் அடிக்கடி எழும்பும் நித்திரையின்மை, அத்துடன் சட்டென்று உடம்பில் ஏற்படும் சுரப்பியின் மாறுதல்கள் என்பதை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளத் தெரியாத பயம் என்பதை உணர எவ்வளவு காலம் எடுக்கும் தெரியுமா, இந்தப் பிரச்சினைகளைச் சரியாக அணுகத் தெரியாத பெண்கள் டிப்ரஷனுக்கள் தள்ளப் படுவதுமுண்டு என்று தெரியுமா?’

டேப்ரா கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் நித்யா அவ்விடம் வந்து சேர்ந்தாள். கணவரையும் நண்பர்களையும் நேரடியாகப் பார்த்தாள்.

மற்ற மூன்று பேரும் தாங்கள் நித்யாவைப் பேசுவதை நிறுத்திக்கொண்டு.ஒருத்தரை ஒருத்தர் தர்ம சங்கடத்துடன் பார்த்துக் கொண்டனர்.

‘என்னுடையவர், நான் இரவில் குழந்தையுடன் கிறீன் ஹவுசுக்கு ஓடிப் போய் இருக்கிறேன் என்று சொன்னாரா?’ நித்யா ஆறுதலாகக் கேட்டாள். மாதவன் திடுக்கிட்டு விட்டான். அவன் அதைப்பற்றி டேப்ராவுக்கோ சிவராமுக்கோ மூச்சு விடவில்லை. டேப்ராவும் சிவராமும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

நித்யாவின் பார்வை அவர்களின் வீட்டுக்கு முன்னாலிருந்து பிரமாண்டமான பார்க்கில் பதிந்திருந்தது. இலையுதிர் காலம் தொடங்கிவிட்டதால் அந்தப் பார்க்கின் பல மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன.

‘என்ன ஒரேயடியாக அந்தப் பார்க்கில் கண்ணாகவிருக்கிறாய்?’ டேப்ரா சிரித்தபடி கேட்டாள். நித்யா வந்ததும்,கிறீன்ஹவுஸ் பற்றிப் பேசியதும் அதனால்; மாதவன் தர்மசங்கடப் படுவதை அவள் அவதானித்திருந்தாள்.

‘இந்த இடம் மிகவும் சோகமான பிரதேசமாக நான் உணர்கிறேன். எங்கள் கிறீன் ஹவுஸில் யாரோ இருப்பதாக நான் உணர்கிறேன். நேற்றிரவு அங்கிருந்து யாரோ என்னையழைப்பது போலிருந்தது. அங்கு நான் எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்று தெரியாது. இதை எல்லாம் இவரிடம் சொன்னால் அவர் இரைந்து கொட்டுவார் என்றபடியால் நான் வாய் திறக்கில்லை, நீங்கள் எங்களின் அன்பான சினேகிதர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.’ நித்யாவின் குரல் மிகவும் தெளிவாக இருந்தது. மற்றவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவள் அப்படிச் சொல்வாள் எனப்தை யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி அந்த இடத்தில் படர்ந்த மௌனத்தில் பளிச்சிட்டது.

‘நித்யா அந்தக் கிறின் ஹவுசுக்குப் பக்கத்தில் பக்கத்து வீட்டாரின் பெரியமரம் பிரமாண்டான கிளைகளுடன் காற்றில் அடிபடும்போது அதன் நிழல்களின் பிரதிபிம்பம் பல உருவங்களைக் காட்டுவதுபோன்ற பிரமையைத் தரும்’ மாதவன் நித்யாவின் பயத்தைப் போக்கும் தோரணையிற் சொன்னான்.

அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ‘நிழலுக்கும் நியத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்..நான் அமானுஷத்தை நம்புவள்’ என்று அவள் மிகவும் சாதாரணமாகச் சொன்னாள்.

‘நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு அக்கறையில்லை’ என்ற தொனி அவள் குரலில் அப்பட்டமாகவிருந்தது.

சிவராம் நித்யா சொல்வதை மிகவும் அவதானமாகக் கேட்டான். அவள் மிகவும் தெளிவாகப் பேசுவதை அவன் உற்றுக் கவனித்தான். ஓருகாலத்தில், மாதவன் அமானுஷத்தை நம்பும் பெண்ணைப் பற்றிச் சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவனுக்குத் தன் நண்பனின் நிலை புரியத் தொடங்கியது. குழந்தை பிறந்தைவுடன் மாரடிக்கும் களைப்பில் அவள் அந்த வார்த்தைகளைக் கொட்டவில்லை என்பதும் அப்பட்டமாகப் புரிந்தது.

டேப்ரா நித்யாவின் பேச்சை மாற்றுவதற்காக, ‘நாங்கள் இனிச் சாப்பிடுவோமா,எனக்குப் பசிக்கிறது’ என்றாள்.

எல்லோரும் டைனிங் றூமுக்குப் போனதும் அவர்களின் பேச்சு எங்கேயெல்லாமோ சுற்றித் திரிந்தது.

மாதவனால் அந்த உப்புச் சப்பற்ற சம்பாஷணைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நித்யாவின் குடும்பம் அகாலமாக இறந்துபோன கதையை அவர்களுக்குச் சொன்னான். நித்யா அமானுஷத்தை நம்புவதற்கு அவளுக்கு அவளின் குடும்பத்தில் வைத்திருந்த அளப் பரிய ஈர்ப்பு என்பதைத் தன் சினேகிதனுக்கும் மனைவிக்கும் விளங்கப் படுத்தினான்.

நித்யாவுக்குத் துன்பம் வரும்போது அவள் தனது அம்மாவின் போட்டோவை வைத்துக் கொண்டு பேசிக் கொள்வதைப் பற்றிச் சொன்னான்.

நித்யாவுக்கு அவன் மனம் திறந்து தன்னைப் பற்றிச்சினேகிதர்களுக்குச் சொன்னது திருப்தியாகவிருந்தது;.

‘இதை வேடிக்கையாகத் தயவுசெய்து எடுக்கவேண்டாம்’ நித்யா அழுதுவிடுவாள் போலிருந்தது.

‘யாராவது என்னைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்ற தாபம் அவள் குரலிற் தொனித்தது.

‘உங்கள் அம்மாவை நீங்கள் மிகவும் நேசித்ததாக அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள்..கிறீன் ஹவுஸிலிருந்து உங்களை அழைப்பது உங்கள் அம்மாவா?’

சிவராம் கேட்டான்.’இல்லை..’ அவள் சட்டென்று சொன்னாள்.

‘ பேய்க்கதைகளில் நம்பிக்கையுண்டா?’ டேப்ரா கேட்ட கேள்விக்கு நித்யா,’கிறிஸ்தவ மதத்தில் புனித தந்தை, புனித மகன்,புனித ஆவி என்றுதானே வழிபடுகிறார்கள். அவர்களெல்லாம் முட்டாள்களா?’ என்று கேட்டாள்

அதற்கு,டேப்ரா,’நித்யா நான் உன்னை ஒரு முட்டாள்ப் பெண் என்று நினைக்கவில்லை ஆனால் இந்தப் பிரதேசமும் ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை அவர்கள் சூனியக்காரிகள் என்று கொலை செய்த பல இடங்களில் ஒரு இடம்.. உனக்குத் தெரியுமா, 1484ம் ஆண்டுக்கும் 1750க்குமிடையில் சமயவாதிகள் இங்கிலாந்திலும் ஐரோப்பிலும் இருநுர்றாயிரத்தற்கும் (200.000) மேற்பட்ட பெண்களைச் சூனியக்காரிகள் என்று, மிகவும் கொடுமையான சித்திரவதைகள் செய்தும் கொலை செய்தும் உயிருடன் கொழுத்தியும் முடித்தார்கள். அவர்களின் ஆவிகள் இந்தப் பிரதேசத்தில் முக்கியமாக உங்களுக்கு முன்னாற் பரந்து கிடக்கும் பார்க் போன்ற இடங்களில் அலைவதாக எத்தனையோ கதைகள் உண்டு. நீP இந்தப் பக்கம் வீடு வாங்கிக்கொண்டு வந்தபோது யாரோ உனக்கு அந்தப் பேய்க்கதைகளைச் சொல்லியிருக்கலாம்..’ டேப்ரா சொல்லி முடிக்கவில்லை.

நித்யா இடைமறித்தாள்.’ டேப்ரா என்னையழைப்பது எனக்குப் பயம் தரவேண்டு;மென்று நினைக்கும் பேய் என்று நான் நினைக்கவில்லை’ என்றாள். மற்றவர்களுக்கு,முக்கியமாக மாதவனுக்குத் தொடர்ந்து ‘பேய்கள்’ பற்றிப் பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை.அவன் பேச்சை மாற்றினான். கணவனின் குணம் அறிந்த நித்யா பவ்யமாகத் தனது ‘பேய்க்’கதையை நிறுத்தினாள்.

சில நாட்களின் பின்,சிவராம் போன் பண்ணி நித்யாவை ஒரு டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டச் சொன்னான்.

அவள் வரமாட்டாள் என்று மாதவனுக்கத்; தெரியும்.

ஆனால் மாதவன் தனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட எடுத்துக் கொண்டு டாக்டரிடம் சென்றான்.

‘ என்ன பிரச்சினை?’ நடுத்தரவயது ஆங்கில டாக்டர் மாதவனின் மெடிக்கல் நோட்ஸ்களை ஆராய்ந்தபடி அவனை வினவினார்.

‘ எங்களுக்குக் குழந்தை பிறந்த நாளிலிருந்து எனது மனைவியின் நடத்தையால் எனக்குச் சித்தம் கலங்குகிறது’ அவன் படபடவென்று சொன்னான்.

‘ ‘முதற் பிள்ளைதானே’ டாக்டரின் கேள்விக்கு,அவன் ‘உம்’ கொட்டினான்.

‘அது சாதாரணமான விடயம்..எனது மனைவியும் ஆறுமாதத்துக்கு நான் அந்த வீட்டில் இருக்கிறேனா என்றுகூடத் தெரியாமல் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்’ டாக்டரின் முகத்தில் அவரின் பழைய ஞாபகங்கள் வந்தபடியால் ஒரு அழகான புன்முறவல்.

‘ என்னுடைய கதை வேறு விதமானது..’ அவன் தயங்கினான்.

நடுச்சாமத்தில் இந்தக் குளிரில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிறீன் ஹவுசுக்குள் எனது மனைவி போகிறாள் என்று டாக்டருக்குச் சொன்னால். என்ன நடக்கும்? அவன் சட்டென்று யோசித்தான்.

குழந்தையைச் சரியாகப் பார்க்கத் தெரியாத தாய்தகப்பன் என்று அரசாங்கம் அவர்களின் குழந்தையைப் பறித்தெடுக்குமா? அல்லது எனது மனைவி அமானுஷ சக்திகள் பற்றிப் பேசுகிறாள் என்றால் அவளைப் பைத்திக்கார வைத்தியசாலைக்கு அனுப்புவார்களா?

அவனுக்குப் பயம் வந்தது. தான் அங்கு வந்தது பிழை என்று புரிந்தது.

அவரிடம் கடைசிவரைக்கும் நித்யாவின் ‘பேய்க்’ கதைகளைச் சொல்லவேண்டாமென்று மனம் ஆணையிட்டது. நித்யாவை அவர் கேலி செய்வதை அவன் தாங்கமாட்டான்.

‘ஏன் செக்ஸ் லைவ் சரியில்லையா..கொஞ்சம் பொறுத்துக் கொள்..இன்னும் கொஞ்சநாளில் நீ அந்த வீடடிலிருப்பது அவளுக்கு ஞாபகம் வரும்’

அவர் மாதவன் மாதிரி, எத்தனையோ கணவர்கள் வந்து எனது மனைவியும் நானும் குழந்தை பிறந்தபின்,’நெருக்கமாயில்லை’ என்று ஒப்பாரி வைப்பதைக் கேட்டிருப்பார் என்பது அவனுக்குத் தெரியும்.

அவனின் முகத்தில் படரும் தர்மங்கடத்தைப் பார்த்த அவர்,கொஞசம் அவதானமாக அவனைப் பார்த்துக் கொண்டு,

‘உங்களுக்கு உங்கள் மனைவியின் மனநிலை பற்றிப் பயம் இருந்தால் அவளை ஒரு தரம் கூட்டிக்கொண்டுவாருங்கள்’ என்றார். மாதவன் அவரின் சொற்களைக் கிரகிக்க முதல் அவர் தொடர்ந்தார்..

‘குழந்தை பிறந்தபின் சில பெண்கள் அவர்களின் ,உடலில். உள்ளத்தில், வாழ்க்கைச் சூழ்நிலையில் சட்டென்று வந்த மாற்றத்தை முகம் கொடுக்க முடியாமற் தடுமாறுவார்கள்,அதனால் சிலவேளை மனஅழுத்தம் வருவதுண்டு. பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து வந்த பெண்கள் அவர்களுக்குத் தேவையான அன்பும் ஆதரவும் இல்லாதபோது இப்படியான நிலைக்குள்த் தள்ளப் படுவதை எனது அனுபவத்திற் கண்டிருக்கிறேன். ஆனால் அன்பான நல்ல பராமரிப்பான,,ஆதரவான சூழ்நிலையைத் தொடர்ந்தால் அவர்கள், ஒரு சில மாதங்களில் பெரும்பாலும் படிப்படியாகச் சரியாகிவிடுவார்கள்;. நீங்கள் இருவரும் ஒருத்தருடன் இணைந்து மிகவும் நெருக்கமான உறவைப் பேணுவது மிக மிக அத்தியாவசியமான விடயம். நான் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.அப்படியிமில்லை என்றால்..’ தொடர்ந்து மேலே சொல்லாமல் அவர் அவனைப் பார்த்தார்.

என்ன சொல்லப் போகிறார்? அவளைப் பைத்திய வைத்திய சாலையில் அனுமதிக்கவேண்டும் என்று சொல்லப் போகிறாரா? மன அழுத்ததைத்; தவிர்க்க மாத்திரைகள் கொடுத்து,அவளின் உணர்வுகளின் சுயமையைப் பறித்துவிட்டு, நடமாடும் ஒரு வெற்றுப் பிணமாக வாழலாம் என்று சொல்லப் போகிறாரா?

அல்லது அவளுக்கு மன அழுத்தத்தைத் தரும்; குழந்தையிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் அவளைப் பிரித்து வைக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாரா?

அவளிடமிருந்து குழந்தையைப் பிரித்தால் அவளுக்குக் கட்டாயம் பைத்தியம் வருவதுமட்டுமல்ல அவள் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளத் துணிந்தாலும் ஆச்சரியமில்லை. அந்தவிதமான நினைவுகள் அவன் மனதில் படரத் தொடங்கியதும் அவன் நடுங்கிவிட்டான்.

‘ அப்படி ஒரு தேவையுமில்லை..குழந்தை இரவில் அடிக்கடி எழும்புவதால் எனது நித்திரை குழம்புகிறது..அதுதான் நீங்கள் எனக்குக் கொஞ்சம் நித்திரை மாத்திரை தரமுடியுமா என்று கேட்க வந்தேன்’ என்று சாமர்த்தியமகச் சொன்னான்.

டாக்டர் கொடுத்த மாத்திரையை அவன் தொடவில்லை. நித்யா தற்செயலாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடுச்சாமத்தில் கிறீன் ஹவுசுக்குப் போய்விடுவாளோ என்ற பயத்தில் கண்ணும் கருத்துமாக அவளைக் கவனித்தான். அவனின் உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருப்பதை அடுத்த வீட்டுக் கிழவனே அவதானித்து விட்டார்.பல கேள்விகள் கேட்கிறார். பாசமுள்ள கிழவனுக்கு எப்படி நித்யாவின் ,’பேய்க்’ கதைகளைச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவருடன் பேசிய அன்று பின்னேரம், வேலையால் வீடு திரும்பும்போது அவன் மனம் பலவற்றையம் யோசித்தது. பெரும்காற்ற மிக மோசமாக வீசிக்கொண்டிருந்தது. அத்திலாந்துக் கடலில் ஏற்பட்ட காலநிலை மாறுதலால்,இன்னும் சில நாட்கள் இங்கிலாந்தில்,இப்படியான பெருங்காற்று வீசும் என்றும் அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொது மக்கள் கைக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானிய காலநிலை அவதானிப்பு நிலையம் அடிக்கடி அறிவித்திருத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த வீட்டுக் கிழவரை பியர் குடிக்கக் கூப்பிட்டது அவனுக்கு ஞாபகம் வந்தது. நித்யா இரவுச் சாப்பாடு சமைக்க முதல் கிழவருக்குச் சாப்பிடத் தக்கதான உறைப்புடன் கோழிக்கறி சமைக்கச் சொல்லவேண்டும் என்று போன்பண்ணினால் அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

அவள் குழந்தையுடன் பிசியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்து,இன்னொருதரம் போன்பண்ணினான் அதற்கும் பதில் இல்லை. அவளுக்கு என்ன நடந்திருக்கும், மோபைல் டெலிபோனிலை வீட்டில் வைத்து விட்டு கிறீன்ஹவுஸில் குழந்தையுடன் போய்த் தூங்குகிறாளா?

இந்தக் காற்றும் குளிரிலும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளித் தோட்டத்தில் திரிகிறாளா?அவனுக்கு நித்யாவில் அளவுக்கு மீறிய கோபம் வந்தது.

அவளிடம் பேசமுடியாததால் அடுத்த வீட்டுக் கிழவனுக்குப் போன் பண்ணினான். அவரிடமிருந்தும் பதிலில்லை. அவர் பின்னேரங்களில்,பெரும்பாலும் லைப்ரரிக்குப் போகிறவர். போயிருப்பார் போலும்.

மாதவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. குழந்தையை அவள் இரவில் தூக்கிக் கொண்டு திரிவதால் குழந்தைக்கு இன்னும் தடிமலோ காய்ச்சலோ வரவில்லை என்று அவன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். அவனுக்கு உடனடியாக வீட்டுக்கு ஓடவேண்டுமென்றால் முடியாத காரியம். பெரும் காற்று காரணமாகப் பெருமரம் ஒன்று தண்டவாளத்தில் வீழ்ந்ததால் அவன் போகவேண்டிய ட்ரெயின் ஒரு மணித்தியாலம் லேட்.

அட கடவுளே, தண்டவாளத்தில் முறிந்து விழுந்தகிளைபோல, கிறீன் ஹவுஸ் பக்கம் நித்யா,குழந்தையுடன் போயிருந்தபோது அடுத்த வீட்டுக் கிழவரின் பெருமரத்தின் கிளை எதும் அந்தப் பச்சை வீட்டுக் கண்ணாடிக் கூரையில் விழுந்திருந்தால்?

அப்படி நினைத்ததம்,அவன் மனம் பட்ட பாட்டை அவனைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

ட்ரெயின் அவன் இறங்கவேண்டிய இடத்தில் நின்றதும்,அவன் எத்தனை மைல் வேகத்தில் தனது காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனான் என்று அவனுக்கே தெரியாது.

தெருவின் கடைசியில் அவன் திரும்பியபோது அவன் வீட்டுக்கு முன்னால் சிவப்பு வெளிச்சங்களை வீசியபடி போலிஸ்கார் நின்றிருந்தது. அவன் வாயுலர்ந்தத. மனம் படபடவென அடித்துக் கொண்டது.

நித்யாவுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் நடந்து விட்டதா? வாயுலர, நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள,அவன் அலறாத குறையாக,’ நித்யா’ என்று இரைந்துகொண்டு ஓடினான். அவனைக் கண்டதும், ஒரு போலிசார்,’ நீங்கள் இந்த வீட்டுச் சொந்தக்காரனா?’ என்று கேட்டான்.

அப்போது மிஸ்டர் லிவிங்ஸ்டன் வெளியே வந்தார்.’ ஐ யாம் சாரி மாது’ என்றார்.

என்ன நடக்கிறது? நித்யா எங்கே போனாள்?

‘ மாது, உங்கள் கிறீன்ஹவுஸ்..’கிழவர் ஏதோ சொல்ல முனைவதையும் பொருட்படுத்தாது,அவன் கண்கள் அவளையும் குழந்தையையும் தேடின.

பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து,’நித்யா’ என்று அலறினான்.

அவள் குழந்தையை அணைத்தபடி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவன் தனது குடும்பத்தை இறுக அணைத்து முத்தமிட்டான்.

‘ஏன் இந்தப் போலிசார்கள் எங்கள்; வீட்டில்?’ மனைவியை அணைத்தபடி கேட்டான்.

‘போலிசாரைக் கேளுங்கள்’ அவள் கணவனைப் போலிசார் பக்கம் காட்டினாள். போலிசாருக்கு முன் கிழவர் அவனிடம் சொன்னார்,

‘மாது, நீ என்னோட பேசிவிட்டுப் வேலைக்குப் போய்க் கொஞ்ச நேரத்தில் என் வீட்டுப் பெரியமரம் உன் வீட்டுக் கிறீன்ஹவுஸில் ஒரேயடியாகச் சரிந்து விட்டது. உனது கிறீன் ஹவுஸ் தரை மட்டமாகி விட்டது. நல்ல காலம் உனது வீடு ஒரு சேதமுமில்லாமற் தப்பி விட்டது. கிறீன் ஹவுசின் வீட்டின் அடித்தளமே பெருமரத்தின் வீழ்ச்சியால் உடைந்து சிதறி விட்டது.தோட்டம் முழுக்கக் கிளைகளும் கண்ணாடிகளுமாகச்; சிதறியது. பெரிய மரத்தை என்னால் ஒன்றும் பண்ண முடியாது, உதவிக்கு ஆட்களையழைத்தேன், நாங்கள்; உனது கிறீன் ஹவுசில் மரத்தையகற்ற வேலை செய்தபோது..கிழவர் மேலே கொண்டு பேசமுடியாமல் விம்மத்; தொடங்கிவிட்டார்.

நித்யாவுக்குப் பிரியமான கிறின் ஹவுஸ் தனது மரத்தால் அழிந்து விட்டது என்பதற்காக அவர் இவ்வளவு துன்பப் படுகிறாரா? அவனுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது.

‘கிறீன் ஹவுஸை உடைத்துக் கொண்டு விழுந்திருந்த பெருமரத்தின் பெரும் கிளையொன்றை அகற்ற முயன்றபோது.கிறீக் ஹவுசின் அடித்தளம் உடைந்திருப்பதும் அங்கு பிளவு பட்ட குழியில்,ஏதோ அசாதாரணமாகத் தெரிந்ததால், அந்தக் குழியைப் பார்த்தபோது..’ கிழவர் குழந்தை மாதிரி அழத் தொடங்கிவிட்டார்.

அந்த நேரம் இன்னும் பல போலிஸ் கார்கள் வீட்டை முற்றுகையிட்டன.

‘சாரி சார், நீங்கள் இந்த வீட்டிலிருந்து உங்கள் தோட்டத்திற்குக் கொஞ்சகாலம் போகமுடியாமல் தடைபோடப் போகிறோம்’ அதிகார பூர்வமாக ஒரு போலிஸ் அதிகாரி சொன்னான்.’ ‘எங்கள் தோட்டத்திற்கு நாங்கள் போகக்கூடாதா?’ மாதவன் குழம்பிப் போய்க் கேட்டான்.

‘ஆமாம் நீங்கள் அங்கு போகக் கூடாது’

‘ஏன்?’

‘அது ஒரு கொலைக் கூடம் அங்கு,உங்கள் கிறீன் ஹவுஸில் ஒரு பெண்ணின் சடலம் புதைக்கப் பட்டிருக்கிறது அதைத் தோண்டியெடுத்து விசாரணை முடியும் வரைக்கும்,நீங்கள் உங்கள் வீட்டில் மட்டும் உலாவலாம் அதுமட்டுமல்ல எங்கள் விசாரணைக்குத் தேவையானால் உங்கள் வீட்டையும் அக்குவேறாகப் பிரிக்கவேண்டி வரலாம்’

போலிஸார் அதிகாரமாகச் சொல்லி விட்டு நகர்ந்தார்கள். மாதவனின் வீடு தனியான வீடென்றபடியால்,அதைச்சுற்றி வர இருவழிகள் உண்டு அதில் ; வீட்டையண்டியிருந்து, தோட்டத்திற்குப் போவதான பாதையைப் போலிசார் அடைத்து விட்டார்கள்.

இரவு தொடர்ந்தது. போலிசார் விடாமல் கிறீன்ஹவுஸை அடுத்து எதை எதையெல்லாமொ தோண்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீடடுக்கிழவர் மிகவும் உடைந்துபோனார். நித்யாவும் மாதவனும் அவருக்குச் சாப்பாடு போட்டார்கள்.

கிழவருக்குச் சாப்பாடு இறங்கவில்லை.’ இஸபெல்லா நல்ல பெண்..’ கிழவர் ஒரு குழந்தைபோற் தேம்பினார்.

மாதவனுக்கு .இப்போது சில விடயங்கள் ஞாபகம் வந்தன.அவர்கள் வீடு பார்க்க வந்தபோது அந்த வீட்டுக்காரனான அல்பேர்ட் மட்டும்தானிருந்தான். அவனின் மனைவி வீட்டிலிருக்கவில்லை.

‘எனது மனைவிக்கும் இந்த கிறீன் ஹவுஸ் மிகவும் பிடிக்கும்’ என்று அல்பேர்ட் சொன்னான்

மகளின் பிரசவம் பார்க்கக் கனடாவுக்குச் செல்லமுன்னர் கிழவரின் மனைவி, ‘ இஸபெல்லாவும் நித்யா மாதிரித்தான் அந்தக் கிறின் ஹவுஸில் உயிராகவிருந்தாள்,எந்த நேரமும் அதற்குள்ளேயே நேரத்தைச் செலவளிப்பதாக அவள் கணவன் அல்பேர்ட் முணுமுணுப்பான். அவன் ஒரு முன்கோபி எதற்கெடுத்தாலும் பிழைபிடிப்பதாக இஸபெல்லா சொல்லியிருக்கிறாள்;’ என்று சொன்னாள்.

புதைக்கப் பட்டிருப்பது இசபெல்லாவா?

யாரோ அந்த கிறீன் ஹவுஸிலிருந்து என்னைப் பார்க்கிறார்கள், அழைக்கிறார்கள் என்று நித்யா சொன்னதெல்லாம் அவளின் அமானுஷ உள்ளுணர்வால் இறந்து விட்ட இசபெல்லாவைக் கண்ட விடயங்களா?

மாதவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

போலிசார் அவர்களிடம் வந்து,’ மேலதிக தேடுதலுக்காக இந்த வீட்டையும் நாங்கள் பரிசீலனை செய்யவேண்டும். அதுவரைக்கும் நீங்கள் இந்த வீட்டை விட்டுப் போவது நல்லது’ என்றார்கள். பக்கத்து நகரில் மாதவன் தம்பதிகளுக்க ஹோட்டேல் ஒன்று ஆயத்தம் செய்து கொடுத்தார்கள்.

அவசர அவசரமாகத் தங்களுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு போலிஸ் பாதுகாப்புடன் மாதவனும் நித்யாவும் தங்கள் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் போலிசாரின் விசாரணைகளின் செய்திகள் பத்திரிகைகளில் வரத் தொடங்கின.

‘அந்த வீட்டில் கண்டெடுத்த பிணம் இஸபெல்லா டேவிட்சன் என்ற பெண்ணின் சடலமென்றும், அவள் நான்குமாதக் கர்ப்பவதியாக இருக்கும்போது கழுத்தை நெரித்துக் கொலை செய்யப் பட்டுப் புதைக்கப் பட்டிருந்தாள் எனவும் அது தொடர்பாக அவள் கணவன் அல்பேர்ட் டேவிட்ஸனைப் போலிசார் தேடுவதாகவும்’ செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன.

செய்திகள் கேள்விப் பட்ட சிவராம் மாதவனுக்கு போன் பண்ணினான்.

‘அந்த கிறீன் ஹவுஸில் இஸபெல்லாவின் உடல் பதைக்கப் பட்டிருந்ததை நித்யாவின் உள்ளுணர்வு சொல்லியதா?’ மாதவன் நண்பனைக் கேட்டான்.

‘அப்படியொன்றுமில்லை. நீ அன்றைக்குச் சொன்னதுபோல் அந்த மரக்கிளைகளின் நிழல்கள் கிறீன்ஹவுசில் பட்டு ஆடும்போது, நித்யா அதை மனித உருவமாகக் கற்பனை செய்திருக்கலாம். இனி அவள் அந்தக் கிறீன் ஹவுஸ் பற்றிப் பேசுவாள் என்று நான் நினைக்கவில்லை’ என்றான் சிவராம்

‘அந்த வீட்டுக்குத் திரும்பிப் போவதா அல்லது வேறு வீடு பார்ப்போமா’ மாதவன் மனைவியைக் கேட்டான்.

‘அந்த வீட்டுக்குப் போவம்;, ஆனால் கிறீன் ஹவுஸ் திருத்தக் கட்டப் படவேண்டாம்.அது எதையோ எனக்குச் சொல்லத் தவித்ததாக நான் உணர்ந்தேன். இஸபெல்லா தனக்கும்; தன் குழந்தைக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்று என்னைப் பாவித்தாள் என்று நினைக்கிறேன்.அதன் கதை முடிந்து விட்டது.;. ஆனால் இஸபெல்லின் ஆவி நல்லது என்று எனக்குத் தெரியும் ‘ நித்யா அமைதியாகச் சொன்னாள். அவள் குரலில் ஒரு அசாதாரணமான தொனியிருந்தது.

இஸபெ;பலாவின் ஆவி, தன்னையும் தனது குழந்தையையும் கொடுமை செய்த தனது கொலைகாரக் கணவனை உலகத்துக்குக் காட்டிக்கொடுக்க, நித்யாவின் அமானுஷ சக்தியைப் பயன் படுத்தியதா? அப்படியென்றால் தங்கள் சொந்தங்களையிழந்த தமிழர்களுக்கு எந்த சக்தியும் ஏன் இதுவரை உதவவில்லை?

தனக்கு விடை தெரியாத கேள்விகளைக் கேடடுத் தன்னைச் குழப்பிக் கொள்ள மாதவன்; தயாராகவில்லை.

(யாவும் கர்ப்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *