தப்புத் தப்பாய் ஒரு கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 11,330 
 

ஆபீஸ் ப்யூன் மாணிக்கம் வீட்டைத்தேடி வந்து ஒரு சின்ன குறிப்புச் சீட்டை என்னிடம் நீட்டிய போது விடியற்காலை ஐந்து மணி. கொசப்பாளையம், புத்திரகாமாட்சியம்மன் கோவிலுக்கு காலை ஏழு மணிக்குள் போ. போய் கவர் பண்ணு.

எடிட்டர் “அங்க அப்பிடி என்னவாம்யா?”

அவன் உதட்டைப் பிதுக்கினான். இரண்டு கோனிக்கா ரோலை பையில் போட்டுக்கொண்டு, என் யாஷிக்காஎஸ்.எல்.ஆர். ஜூம்மை தூக்கிக்கொண்டு ஓடினேன். பாவி..பாவி…இதை நேத்திக்கே சொல்லியிருக்கலாமில்ல?. லாஸ்ட் மினிட்ல சொல்லி ஹும்! எப்ப குளிச்சி, எப்ப சாப்பிட்டு? அடச்சே! என்னை பாந்தி வாங்கறதே இந்தாளுக்கு வேலையாப்போச்சி. டூ வீலரில் கிளம்பிவிட்டேன். போகிறபோது வழியெங்கும் அங்கங்கே விசாரிச்சி தகவல் திரட்டியதில் ஒருமாதிரி மேட்டர் அவுட்லைன் ரெடியாகிவிட்டது.அது நிறைய கல்யாணங்கள் நடக்கும் ஒரு கோவில் .சீஸன் டைமில் ஒரே நேரத்தில் பத்து பதினைந்து கல்யாணங்கள் கூட நடக்குமாம். அவ்வளவு ராசியான கோவிலாம்.

போய் பார்த்தபோது ச்சீ! என்றாகிவிட்டது. மொத்தமே பத்தடிக்கு பத்தடிதான் விஸ்தீரணம். அதிலிருந்து பிதுங்கியபடி ஒரு ஐந்துக்கு எட்டடி இருக்கலாம். அது மூலஸ்தானம். வெளியே சின்னதாய் ஒரு பந்தல். கோவில் கட்டுமாணத்தில் அதன் புராதனம் தெரிகிறது. அதற்கப்புறம் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தியதாக தெரியவில்லை. வசூலாகிற பணமெல்லாம் எங்கே போகிறதோ?.கண்டிப்பாய் ஆண்டவனுக்குக்கூட தெரிஞ்சிருக்க முடியாது.

வெளியே வேட்டிகளும், கூரைப்புடவைகளும், அவைகளின் உறவுகளும் என்று கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளேயிருந்து குருக்கள் பணம் செலுத்திய வரிசைப்படி பெயர்களைப் படிக்க, நாலு நாலு ஜோடிகளாய் உள்ளேபோய், கற்பூரம், சாம்பிரானி புகையில் மூச்சு திணறி,கண்கள் எரிய, தாலியை கட்டிக்கொண்டு வெளியே ஓடி வந்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே லாங் ஷாட்டில் ஒரு க்ளிக்.ஜும் பண்ணி கலர்கலராய் நிற்கும் பெண்கள் கும்பலை ஒரு க்ளிக். சற்றுத்தள்ளி ஆலமரத்தடியில் கோழி அறுத்து,பொங்கலிட்டுக் கொண்டிருக்கும் கும்பல் பக்கங்களில் சில க்ளிக்குகள்.ரங்கராட்டினத்தில் பயத்தில் வீறிட்டலறியபடி சுற்றும் குழந்தைகள், கலர்கலராய் சாயமேற்றி விற்கும் ஜூஸ் கடையை மொய்க்கும் சிறுவர்கள் கூட்டம், இளைஞிகளை தின்றுக்கொண்டிருக்கும் இளைஞர்கள் கும்பல் என்று விதவிதமாய் கவர் பண்ணி முடித்தேன்.

மரத்தடியில் சேர் போட்டு உட்கார்ந்துக் கொண்டு எஸ்.ஐ. ஒருத்தர் கான்ஸ்டபிளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

” யோவ் பலராமா! போய் மந்திரத்தை சுருக்கமாய் சொல்லி சட்னு முடிக்கச் சொல்லு. முகூர்த்த நேரம் இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. பத்து ஜோடிகளுக்கு மேல வெளியே நிக்குது பாரு. சீக்கிரம் போ.”

“ சார்! உள்ளே போய் ஒரு போட்டோ எடுக்கணும்.”

“யாரு நீ? ப்ரஸ்ஸா?”

“ஆமாம் சார் ஆமா இம்மா சின்ன கோவில்ல இத்தனை கல்யாணம் நடக்கிறதுக்கு அப்பிடி என்ன காரணம்?. கொடுமையா இல்ல இருக்கு. நாட்ல வேற கோவிலா இல்ல?.”

“யாருக்குத் தெரியும்? எவனாவது ஒரு பெரிய ஆக்டர் வந்து கும்பிட்டு விட்டு சக்தி வாய்ந்த அம்மன்னு சொல்லிட்டு போயிருப்பான், இல்லே கோவில் வேப்பமரத்தில பால் வடியுதுன்னு எவனாவது சரடு விட்டிருப்பான். அதோ கோவிலுக்குப் பின்னால புத்து வளர்ந்திருக்கு பாரு. இவ்வளவு போதாதா நம்ம ஜனங்களுக்கு?. பேரை பாரு புத்திர காமாட்சியம்மன். வசவசன்னு புள்ள பொறக்குமோ என்னவோ?.”. . …

அந்த நேரம் திடீரென்று கோவிலின் உள்ளேயிருந்து ஒரே கூச்சலும், அழுகையும், கூக்குரலும் கேட்டன. நாங்கள் எழுந்து ஓடினோம். உள்ளே புகை நெடி தாங்காமல் யாராவது மயக்கம் போட்டு விழுந்து விட்டார்களா?. வாசலை அடைத்துக் கொண்டு ஒரே கூட்டம். எஸ். ஐ. லட்டியை சுழற்றினார்.

“டாய்!…டாய்!…ஒத்து..ஒத்துடா…தூரப்போ..ச்சீ! ஓட்றா அப்பால நாயே!. யோவ்! த்ரீ நாட் ஃபோர்! என்னாச்சிய்யா?.”

எல்லாரும் கையை பிசைந்துக் கொண்டிருக்க, ஒரு கல்யாணப் பொண்ணு மட்டும் முகத்தைப் பொத்திக் கொண்டு கேவிக்கேவி அழுதுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஒரு கிழவி, அவளுடைய பாட்டியாய் இருக்க வேண்டும். தப் தப்பென்று மார்பில் அடித்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தாள்.

“ அடிப்பாவி! இப்படி பண்ணிட்டீயே?, இன்னா பண்ணுவேன்? உங்கப்பன் மானஸ்தனாச்சே. ஐயோ ஈஸ்வரா!.”

“சார்! ஒரு தப்பு நடந்துப்போச்சிசார். ஜோடி மாறிப்போச்சி சார். ஒரு முதலியார் பொண்ணுக்கு யாதவப் பையன் தாலிய கட்டிட்டான் சார்.”

“வ்வாட்?.

அந்தப் பையன் மிரள..மிரள பார்த்துக் கொண்டு நின்றான். நாலைந்து பெண் வீட்டுக்காரர்கள் ஓடிப்போய் ஆவேசமாய் அவனை உதைக்க ஆரம்பித்தார்கள். தொம்…தொம் என்று அடி மாறி மாறி விழுந்துக் கொண்டிருக்க, அந்த யாதவர் பெற்றோர் கூக்குரல் போட்டபடி அவர்களை தடுக்க முயல, எஸ்.ஐ. இடையில் புகுந்து எல்லோரையும் நெட்டித்தள்ளி விட்டு பையனை மீட்டார். அவன் வெடவெட வென்று நடுங்கிக்கொண்டிருந்தான். குருக்கள் ”அம்மா தாயே! அகிலாண்டீஸ்வரி! அம்பிகே! உன் சன்னிதானத்தில இது என்ன சோதனை?. எப்பவும் இப்படி நடந்ததில்லையே.ஐயோ!.”

எஸ்.ஐ. எல்லாரையும் ஓரங்கட்டிவிட்டு, அந்த பையனையும், பெண்ணையும் எதிரில் நிறுத்தி கொஞ்ச நேரம் தீர்க்கமாய் முறைத்தார். அதுங்க இரண்டும் திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்றன.

“ஏய்! ரெண்டு பேருக்கும் சொல்றேன், மரியாதையா எங்கிட்ட உண்மையை ஒத்துக்குங்க. நானே உங்களை சேர்த்து வைக்கிறேன்.கவலைப்படாதீங்க. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே காதல். சாதிவிட்டு சாதி கட்டிக்க முடியாது, ஊர்ல பலி போட்ருவாங்க. அதனால திட்டம் போட்டீங்க. கூட்டத்தில தற்செயலா நடந்தமாதிரி செஞ்சி, எல்லார் காதிலயும் பூ வெச்சிட்டீங்க. சூப்பர்டா.”

“சார்!…சார்!…சத்தியமா அப்பிடியெல்லாம் இல்லை சார். எப்பிடி இது நடந்துச்சின்னே தெரியல சார்..”

”சார்! அவனை நம்பாதீங்க. திருடனாட்டம் முழிக்கிறான் பாரு. டாய்! உன்னை பலி போட்றதே சரி. வுடமாட்டோம்டா. பாவி! என் குடும்பத்துக்கே தீராப் பழிய கொண்டாந்து சேர்த்துட்டியடா. டாய் பாடூஸ் பையா உன்னை சும்மா வுடமாட்டேண்டா..” கத்திய பெண் வீட்டுக்காரனை இன்ஸ்பெக்டர் முறைக்கவும், யாரோ தள்ளிக்கொண்டு போனார்கள். அந்தப் பெண் தலைதலையென்று அடித்துக் கொண்டு அழுதாள். எஸ்.ஐ. இப்போது கொக்கி போட்டார்.

“எப்பிட்ரா?, தாலி கட்டும்போது கூடவா மூஞ்சை பார்க்கல?நம்பமுடியலியே. பாவம் உங்க ரெண்டு பேருக்கும் ஜோடி சேரவேண்டிய பொண்ணும், புள்ளையும் வழிதெரியாம அங்க முழிச்சிக்கிட்டு நிக்குது பாருங்க. சரி சரி இனிமே என்ன பண்றது?. எல்லாரையும் சரிக்கட்டி அனுப்பறேன். பயப்படாம போங்க. வாழ்த்துக்கள்.”——-கையை நீட்டினார். அவள் இப்போது கிட்டக்க வந்து நின்றாள். எதுவும் பேசவில்லை. மாலைமாலையாய் கண்ணீர் வழிகிறது.

“இந்தாளு யாருன்னே தெரியாது சார். குனிஞ்ச தலை நிமிராம நின்னதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாதே. சார்! என்னை காப்பாத்துங்க சார்!. ஐயோ! எங்க ஊர்ல நான் எப்பிடி முழிப்பேன்?”——அவள் தலையைப் பிடித்துக் கொண்டு கதறி தீர்த்து விட்டாள்.

“சார்!…சார்!…எங்களை கைவுட்ராதீங்க சார். வோணும்னு செய்யல சார். தம்மாம் எடத்தில நாலு ஜோடிங்க ஒரே நேரத்தில தாலி கட்னதில தப்பாயிடுச்சிசார்.கஜகஜன்னு கும்பலு. சுத்தியும் எங்காளுங்கதான நிக்கிறாங்கன்னு ஏமாந்துட்டேன் சார். ஒரே புகை, இருட்டு வேற. நான் கட்டிக்க வேண்டிய பொண்ணுக்குத்தான் தாலிய கட்றோம்னு, ஐயோ பாவம் இந்த பொண்ணுக்கு பாதகம் பண்ணிப்புட்டேனே. ஐயோ! சார். சார்! எங்களை பிரிச்சி வுட்ருங்க சார்..”

கோவில் குருக்கள் அங்கே வந்து நின்றார். “என்ன சொல்றான் அம்பி? இன்ஸ்பெக்டர்வாள்! இது முடிஞ்சிப் போன கதை. அடுத்ததைப் பாருங்கோ. இன்னும் ஏழெட்டு டிக்கெட்டுகள் வெளியே நிக்கிறதுகள்.”

“மொதல்ல உம்மை உதைக்கணும். ஆறு ஏழரை முகூர்த்த நேரம். நீர் அஞ்சு மணிக்கே வந்து அம்பாள் அபிஷேகத்தை முடிச்சிருந்தா, எல்லாம் ஒழுங்கா நடந்திருக்கும். நீர் வந்தது லேட்டு. ஆறரை மணிக்கு மேலதான் மொத தாலியை எடுத்துக் கொடுத்தீரு. பத்துக்குபத்து குண்டு சட்டி இடத்தில கஜகஜன்னு அவங்கவங்க சொந்தக்காரங்களையெல்லாம் கும்பல் சேர்த்துக்கிட்டு, யாரு பக்கத்தில யாருன்னு கூட தெரியாம புகை மூட்டம் போட்டுட்டு, ஜல்தி ஜல்தின்னு பறந்தா, இப்படித்தான்யா ஆவும். சரி நீர் போய் வெய்ட் பண்ணும்.. இன்னைக்கே ஒன்பது பத்தரைக்கு இன்னொரு முகூர்த்த நேரம் இருக்கு பார்க்கலாம்..”—–இப்போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்காரர்களையும், பிள்ளை வீட்டுக்காரர்களையும் பார்த்து தன் அஸ்திரத்தை விட்டார்.

“சரி…சரி..இது ஒரு ஆக்ஸிடெண்ட். தெரியாம நடந்திட்ட தவறு. இதுக்கு யார்மேலேயும் குத்தம் சொல்ல முடியாது. உ..ம்..தோ..பொண்ணூ! தாலிய கழட்டி அவன் கையில குடுத்துட்டு, உன் ஜோடியோட போய் நில்லு. ஒன்பது பத்தரையில ஒழுங்கா பதட்டமில்லாம நடத்திடலாம்.

“ இனிமே அது நடக்காது சார்.”— அந்த பெண்ணை கட்டிக்கவிருந்த முதலியார் இன பையனுடைய அப்பா “ஏன்யா?.” “ என்ன பேச்சிசார் இது?. தாலி ஏறிட்ட கழுத்துக்கு எம்புள்ள ரெண்டாந்தாலி கட்டமாட்டாங்கோ.”. அதை கேட்டுவிட்டு பெண்ணைப் பெற்றவர் மடேர்..மடேரென்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார். பெண் வீட்டுப் பெண்டுகளும் ஒரு ஓரமாக உட்கார்ந்து மூக்கை சிந்திக்கொண்டிருந்தனர். அந்தப் பெண் முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப என்னதான்யா சொல்ற?.” “என்ன சொல்றது சார்?. ஆயிட்ட கல்யாணத்துக்கு மீனமேஷம் பார்த்துக்கிட்டு. முடியாது சார். இனிமே அதைப் பேசி பிரயோசனமில்லை. தாலி கட்னவன் கூடவே கூட்டியனுப்புங்க. அவங்களும் வசதியாத்தான் தெரியுது..”— அந்தாள் சொல்லிவிட்டு சிரித்தார். பெண்ணைப் பெற்றவர் ஓடி வந்து கையைப் பற்றினார்.

” சம்பந்தி!…சம்பந்தி!…எதிர் பார்க்காம நடந்துப் போச்சி.இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு பேசாதீங்க.”

“சம்பந்தியா? யாரு நானா?. ஹ..ஹ..ஹா..அதோ நிக்கிறார் பாரு உன் சம்பந்தி..”

எனக்கு அருமையான நியூஸ். எடிட்டர் கிட்ட பாராட்டு கிடைக்கும். மெதுவாக நகர்ந்து பிரச்சினையாகிவிட்ட அந்த பெண்ணிடமும், பிள்ளையிடமும் பேச்சு கொடுத்துக் கொண்டே அவர்களறியாமல் ஃப்ளாஷ் போடாம ரெண்டு மூணு க்ளிக்குகள் கிளிக்கிக் கொண்டேன். போதும் மீதியை டேபிள் ஒர்க்கில் பார்த்துக்கலாம். என் செயலை இன்ஸ்பெக்டர் கவனித்து விட்டார். வேகமாய் வந்து என் கேமராவை பிடுங்கிக் கொண்டார்.

“டேய்! வெட்கமாய் இல்லே?. ஸ்கூப் நியூஸ் வோணுமா?,சென்சேஷனலா செய்தி வோணுமா?. அந்தப் பொண்ணோட வாழ்க்கையை நெனைச்சிப் பார்க்கத்தேவல?.போ அப்பால. கெளம்பும் போது வந்து கேமராவை வாங்கிக்க.”

இந்த சந்தடியில் அந்தப் பெண்ணை கட்டிக்க இருந்த பையனும், யாதவ பையனுக்கு ஜோடி சேர இருந்த பெண்ணும்,அவரவர்களைச் சார்ந்த கூட்டமும் சத்தமில்லாமல் இடத்தை காலி பண்ணி கொண்டிருந்தனர். பெண்ணைப் பெற்றவர் அதிர்ச்சியில் பிரமை தட்டியவராய் அசையாமல் நின்றுக்கொண்டிருந்தார். யாதவ மாப்பிள்ளை தனக்கு வரவிருந்த பெண் குடும்பத்தினரிடம், நான் வேணும்னு செய்யல, வேணும்னு செய்யல என்று கதறிக் கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் தவறாய் தாலி கட்டிக்கொண்ட பெண்ணின் அப்பா எஸ்.ஐ.யிடம்

“ஐயா! எங்கொழந்தை….எங்கொழந்தை…..இன்னா பண்ணுவேன்?. இதுக்குக் கீழே ரெண்டு இருக்கு சார். ரெண்டும் பொட்டை பிள்ளைங்க. எல்லாம் சமைஞ்சி வெலையாவாம கெடக்குதுங்களே. இப்படி சாதி மாறி பூட்ச்சின்னு தெரிஞ்சா, அப்புறம் எவன் வூட்ல காலை வெப்பான்?. முருகா…முருகா…”

எஸ்.ஐ. போய் அந்த பெண்ணுக்காக வரிக்கப்பட்ட சதாசிவம் என்ற முதலியார் பையனை நெருங்கினார்.

“நீ என்ன சொல்றப்பா?. உன் ஸ்டேட்மெண்ட்தான் முக்கியம்.”.

“ஊர் அறிய தாலி கட்டியாச்சி. இனிமே நான் என்ன சார் சொல்றது?. மானக்கேடு.”
ஒருத்தன் சம்மன் இல்லாம ஆஜர் ஆனான்.

“எதுக்கு வெட்டியா பேசிக்கிட்டு இருக்கீங்க?.கட்ன தாலி கட்னதுதானுங்க. மறுதாலி கட்டச் சொல்றீங்களா எங்க பையனை? கம்னு போங்க சார். ஆமா நீங்க இன்னா அவங்களுக்கு வக்காலத்தா?”

எஸ்.ஐ.க்கு கோபம் வந்துவிட்டது. “நீ புள்ளைக்கு என்னா உறவுய்யா?. “சொந்தம் இல்ல சார். ஊர்க்காரன்.”

“த்ரீ நாட் ஃபோர்?. இந்த நாயை அடிச்சி வெளியே தொரத்துய்யா.பெருசா ஞாயம் பேசறதுக்கு தோள்ல துண்டை போட்டுக்குணு வந்துட்றானுங்க. டேய்! இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்ன ,மவனே நானே உன்னை பொலி போட்ருவேன்.”——அந்தாளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்.

“தம்பீ சதாசிவம்! இந்த சம்பவத்தில எந்த உள் நோக்கமும் இல்லை. குனிஞ்சி உட்காரு..குனிஞ்சி உட்காருன்னு சொல்லிச் சொல்லி, நாம எப்ப அவளை நிமிர விட்டோம்?. குனிஞ்சே கிடந்ததாலதான் இந்த தப்பு நடந்துப் போச்சி. நீதான் கட்றேன்னு நம்பி கழுத்தை நீட்டின இந்தப் பொண்ணும், தன் ஜோடிக்குத்தான் கட்றேன்னு நினைச்சி தாலி கட்டின அந்தப் பையனும் எப்படி குற்றவாளிகளாவாங்க?. யோசிப்பா.”

ஹும்! எல்லாம் வேஸ்ட். அவன் பதிலேதும் சொல்லாமல் வெளியேற ஆரம்பித்தான்.

“தம்பீ!…தம்பீ!…கட்டவேண்டியவன் கட்டினாத்தான் அந்த தாலிக்கு மரியாதை. ஒருத்தன் பொண்ணு விருப்பமில்லாமல் பலவந்தமா தாலி கட்டிட்டான்னு வெச்சிக்கோ, அது செல்லுமா?.” “செல்லாது.” “அதேதான் இதுவும். தாலிய கழட்டி எரிய வேண்டியதுதான் .”

எஸ்.ஐ. சொன்னதில் அவர்கள் யாரும் கொஞ்சம் கூட அசரவில்லை. பிள்ளை வீட்டார்கள் ஒவ்வொருத்தராய் வெளியேற ஆரம்பித்தனர். தடுத்து நிறுத்த வழி தெரியாமல் எஸ்.ஐ. திகைத்து நிற்க அந்த ஊரின் பெருந்தனக்காரர் என்று கிடாமீசையுடன்,,கட்டுமஸ்தாய் ஒருத்தர் வந்து, அவர்களை வழி மறித்து நின்றார். கூடவே அவருடைய கைத்தடிகளும்.

“யோவ்! இன்னமோ அறத்துவுட்ட கோழிகணக்கா எல்லாரும் துள்ளிக்கிணு ஓட்றீங்களே. எங்களை மீறி பூடுவீங்களா?. .ஊர்பெர்தனம்னு நாங்க இன்னாத்துக்கு இருக்கிறோம்?. உக்காருங்க பேசுவோம். அத்த வுட்டுட்டு…”

“ஆயிட்ட கண்ணாலத்துக்கு நீ இன்னாய்யா பேசப்போற?.மிரட்றீயா?.” “இது மெரட்டல் இல்லைய்யா இதுல பல பேருடைய மானம் ஊசலாடுது. அட! ஒக்காருய்யா சர்தான். இப்பிடி ஒரு சம்பவம் நடக்கக்கூடாதுதான். இதுவரைக்கும் நடந்ததில்லை. ஆனா இப்ப நடந்துடுச்சி. அதுக்கு இன்னா பண்றதுன்னு பேசுவோம்.”

“தோ பாருங்க.நீங்கள்லாம் கூடி ஆயிரம் பேசலாம். ஏன்னா புள்ள உங்களுது இல்லை. நான் கேக்கறேன் அதுவே புள்ள உங்களுதா இருந்தா ரெண்டாந்தாலி கட்டச் சொல்வீங்களா?..” “அத்த விட அந்தப் பொண்ணு உம்பொண்ணா இருந்தா? ன்னு யோசிச்சிப்பாரு.”—இது எஸ்.ஐ.

“என்னா சொன்னாலும் சரி கட்னதை கட்ற சாதி நாங்க இல்லய்யா. ஆன முகூர்த்தம் ஆனதுதான், கட்ன தாலி கட்னதுதான்..”—பிள்ளையின் அப்பா எழுந்துக் கொண்டு தன் துண்டை உதறி தோளில் போட்டார். இனிமேல் எதுவும் வழியில்லை.சே! இந்தாளு நாட்டு வக்கீலு போல.

“தோ பொண்ணு! தெரிஞ்சோ,தெரியாமலோ தாலி கட்டிட்டான். பேசாம அவன் கூடவே போயிடு.இதான் பிரம்ம முடுச்சின்றது. போ நல்லா வெச்சி காப்பாத்துவான். எனக்கு வேற வழி தெரியலம்மா. இவனுங்களை மாத்த முடியாது..”

இதுவரைக்கும் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு, முகத்தை புதைத்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள். கண்களில் தாரைதாரையாய் வழிகிறது. இந்த இக்கட்டிலிருந்து தன்னை யாரும் மீட்கப் போவதில்லை என்ற நிஜம் புரிய, மீண்டும் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். திடும் என எழுந்து தனக்கு வரவேண்டிய மாப்பிள்ளை சதாசிவத்தின் அப்பாவின் எதிரில் போய் நின்று தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“மாமா! எல்லாரும் என்னை குத்தஞ் சொல்றாங்களே?. எனுக்கு ஒண்ணுந்தெரியாது. உங்க புள்ளை கட்றாங்கன்னுதான் கழுத்தை நீட்டினேன். அவுங்க கட்டாத தாலி எப்பிடி எந்தாலி ஆவும்?. சொல்லு மாமா..”

யாரும் எதிர்பாராமல் கழுத்திலிருந்த தாலியைக் கழட்டி வீசியடித்து விட்டு, ஓவென கதறியபடி அவர் காலடியில் சரிந்தாள். அவர் சங்கடமாய் நெளிய, அதைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளை பையன் சதாசிவம் தாளாமல் கிட்ட வந்து அவளை தொட்டு தூக்கினான். அவள் நிமிர்ந்து மலங்க மலங்க அவனைப் பார்த்துவிட்டு, இன்னும் பெருசாய் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். அவன் தட்டிக் கொடுத்தான். பின்பு நிதானமாய் கையிலிருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்ட ஆரம்பித்தான். கூடியிருந்த ஜனங்கள் ஒரு நொடி திகைத்து,அவசர அவசரமாய் ஓடிப்போய் அட்சதையை எடுத்து வந்து போட, எஸ்.ஐ. சிலையாகிப் போயிருந்தார். கண்கள் லேசாக கலங்கியிருந்தன.எனக்குந்தான். எல்லாம் ஓய்ந்து அடங்கிய பின்பு சாவகாசமாக மரத்தடியில் வந்து உட்கார்ந்தோம். சிப்பந்திகள் கோவிலை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். குருக்கள் கோவிலை பூட்டுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அவர் இதுக்கப்புறம் போய் தர்மகர்த்தாவிடம் சாவியையும், கணக்கு வழக்குகளையும் ஒப்படைக்க வேண்டும்.

“எஸ்.ஐ.சார்! முகஸ்துதிக்காக சொல்லல, நிஜமாகவே நீங்க வித்தியாசமான இன்ஸ்பெக்டர்தான். இந்த நிமிஷம் வரைக்கும் நான் உங்களையேத்தான் பார்த்துக் கிட்டிருந்தேன். ஏதோ உங்க பொண்ணுக்குத்தான் ஆயிட்ட மாதிரி துடிச்சிப் போயிட்டீங்களே. உங்க மிடுக்கையெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு பிள்ளை வீட்டுக்காரனிடம் அப்படி கெஞ்சினீங்களே.”

“எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்குதப்பா. என்ன பண்றது?.முள்ளுமேல துணி போட்டுட்ட மாதிரியான விவகாரம் இது. இதில ஒரு விஷயத்தை கவனிச்சியா? நான் அவ்வளவு கெஞ்சி இன்னா?,ஊரு பெர்தனக்காரன்லயிருந்து எல்லாருந்தான் மல்லுக்கட்டினோம். ஏதாவது முடிஞ்சிதா?. அந்தப் பொண்ணு நாலேநாலு வரிதான் டயலாக் விட்டாள், கண்ணில கொஞ்சம் தண்ணி, அவ்வளவுதான் பையன் க்ளீன் போல்ட்…ஹ..ஹ..ஹா. பொட்டப்புள்ளைங்களுக்கு யாரும் வித்தை சொல்லித் தர வேணாம்யா. ஆம்பிளைங்களை எங்க தட்டினா எப்பிடி விழுவான்னு தெரியுது பாரு.”—சொல்லிவிட்டு கெக்..கெக்..கேன்னு சிரிக்க, நானும் மனம் நெகிழ்ந்து சிரித்தேன்..

– 05-03-1998

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *