கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 13,768 
 
 

சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை. மாறாக, தேய்க்காமலேயே உருண்டை வடிவத்தில் எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு வடை சுடுவதுபோல் சுட்டு எடுக்கிறார்கள். நல்ல சுவை.
நான் இந்த ஊருக்கு மூன்றாவது முறையாக வந்திருக்கிறேன்.

தங்கச்சி மடம்.

இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பகுதி.

புதிதாக யார் வந்தாலும் அந்த ஊரில் கால்சட்டை போடாத குழந்தைக்குக் கூட தெரிந்துவிடும். முதல் முறை வந்தபோது எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

சாப்பிட்டுவிட்டு அந்த வீட்டுக்கு நடந்தேன்.

வீடு பூட்டப்பட்டிருந்தது.

முதலில் வந்தபோதும் பூட்டியிருந்ததால்தான் சாப்பிட்டு வந்து பார்க்கலாம் என்று சென்றேன். இப்போதும் பூட்டியே கிடக்கிறது.

சிறிது நேரம் காத்திருந்தேன்.

நான் காத்திருப்பது ஒரு பெண்ணுக்காக.

அவளுக்கு என்னைவிட இரண்டு மூன்று வயது குறைவாகத்தான் இருக்கும். ஆனால் அவள் என் அப்பாவின் இரண்டாவது மனைவி.

பொதுவாகவே பல ஆண்களுக்கு இருக்கும் அலைபாயும் மனது என் அப்பாவுக்கும் இருந்தது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணம் ஆகும்வரைதான் தனக்காகவே நூறு சதவீதம் யோசிக்க முடியும். மணமான பிறகு ஐம்பது சதவீதம் மட்டுமே தனக்காக, மீதி ஐம்பது சதவீதம் தன் வாழ்க்கைத் துணைக்காக, குழந்தை பிறந்த பிறகு தனக்கா, இருபத்தைந்து சதவீதம் மட்டுமே, மீதமுள்ள எழுபத்தைந்து சதவீதம் தன் குடும்பத்தினருக்காக யோசிக்க வேண்டும் . ஆனால் என் அப்பா கடைசி மகனான நான் பிறந்த பிறகும் தனக்காகவே நூறு சதவீதம் வாழ்ந்தார்.

அதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி பிரச்சனையாகும்.

பிரச்சனைகள் எல்லையிலாமல் போய்க் கொண்டிருந்ததால் அம்மா எங்களை அழைத்துக் கொண்டு மதுரையிலிருந்து சென்னை அழைத்து வந்துவிட்டார். சென்னை வந்து பல வருடம் ஆகிவிட்டது. எங்களுக்கும் அப்பாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவர் சமீபகாலமாக தங்கச்சி மடத்தில் இருப்பதாக ஒரு தகவல்.

ஒருநாள் அப்பா இறந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது.

அதிர்ச்சியாக இருந்தது உண்மை. ஆனால் அதில் பெரிய அளவில் துக்கம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு தந்தையின் கடமைகளை நிறைவேற்றவில்லை. அதனால் எங்களுக்கும் கவலைப்படத் தோன்றவில்லை. ஆனால் பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்திய அம்மாவுக்காக வேறு வழியின்றி நாங்கள் புறப்பட்டோம்.

அப்போது தான் நாங்கள் முதல் முறையாகத் தங்கச்சி மடத்திற்கு வந்தோம்.

உடலை வைத்திருந்த ஐஸ் பெட்டிக்குப் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அப்போதுதான் எங்களுக்கும் தெரிந்தது. முதுமையும் தனிமையும் அவரை இப்படி ஒரு துணை தேட வைத்திருக்கிறது. கொஞ்ச நேரத்திற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காததால் நாங்கள் அன்று இரவே கிளம்பிவிட்டோம். இறுதிச்சடங்குகள் கூட அவளது பிள்ளைகளை வைத்துத்தான் செய்ததாகச் சொன்னார்கள்.

நாங்கள் செய்தது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. மனிதர்களைப் பொறுத்தவரை சரியும் தவறும் அறிவுபூர்வமாகத் தீர்மானிக்கப்படுவதைவிட அதிகமாக உணர்வுபூர்வமாகத்தான் தீர்மானிக்கப்படுகின்றது.

இவை நடந்து முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் அண்ணன் அதாவது என் பெரியப்பாவின் மகனிடமிருந்து அழைப்பு வந்தது. என் அப்பா ஒரு முன்னாள் இராணுவ வீரராக இருந்ததால், அவருக்கு வந்து கொண்டிருந்த ஓய்வூதியத் தொகை அம்மாவுக்குத்தான் சேரவேண்டும் என்றார். எனக்கும் அண்ணனுக்கும் இதில் உடன்பாடில்லைதான். இருந்தவரை அப்பாவாகவே நடந்து கொள்ளாதவர் இறந்தபின் அவரால் வரும் எந்த நன்மையும் தேவையில்லை என்றுதான் இருந்தோம். ஆனால் வாழ்ந்தவரை எந்த நிம்மதியும் கிடைக்காததால், இந்த குறைந்தபட்ச நிம்மதியாவது அம்மாவுக்குக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக இங்கு வந்தோம்.

இது நடுத்தர வர்க்கத்தின் கட்டாயம்.

ஆனால் ஓய்வூதியம் வாங்குவதற்கான ஆவணங்கள், சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் எல்லாம் தங்கச்சி மடத்தில்தான் இருக்கிறது. வேறு வழியில்லாமல் அவளிடம்தான் வந்தோம் நானும் என் அண்ணனும்.

அன்றுதான் அவளை முதன்முதலில் சந்தித்தேன். வீட்டிற்கும் செல்லப் பிடிக்கவில்லை. வெளியிலேயே நின்றிருந்த என்னை அண்ணன் வற்புறுத்தியதால் உள்ளே சென்றேன். அவள் சற்று மனமுதிர்ச்சி குறைந்தவள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்படித் தெரியவில்லை. சிரித்த முகத்தோடு வரவேற்றாள். குடிக்க நீர் கொடுத்தாள். செம்பை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். வீட்டுக்குள் அவளது பிள்ளைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் வெளியே போனவள் சிறிது நேரத்தில் டீயோடு வந்தாள் டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். என் அண்ணன்தான் பேச்சை ஆரம்பித்தார். என்ன தேவை என்பதை தெளிவாகச் சொன்னார்.

அது சம்பந்தமாகத் தன்னிடம் எதுவும் இல்லையென்றாள். அவள் பேச்சில் சூதில்லாமல் இருந்தாலும்கூட அவள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் திடீரென வெளியே சென்றாள். அவளைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது.

எந்த ஒரு மனிதரைப் பற்றியும் நாம் ஒரு கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது, அந்த மனிதர் அப்படித் தெரியாத பட்சத்தில் குழப்பமாகத்தான் இருக்கும். அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்று எதிர்பார்த்து இருவரும் காத்திருந்தோம். உள்ளே வந்தவள் அந்த ஊர்ப்பெரியவரிடம் தான் இது பற்றி கேட்டதாகவும், அவர் முயற்சி செய்வதாகவும் சொன்னாள்.

அங்கிருந்து புறப்பட்டோம்.

வரும் வழியில் அண்ணன் அவளைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இவளது அப்பா, அம்மா உட்பட சொந்தக்காரர்கள் எல்லோரும் இவளை ஒதுக்கிவிட்டதாகச் சொன்னார். அப்பா இவள் பெயரில் வாங்கிக் கொடுத்த ஒரு குடிசை வீட்டில் இருந்து கொண்டு, கூடையில் மீன் விற்றுத் தன்னையும் தன் பிள்ளைகளையையும் காப்பாற்றிக் கொள்கிறாள்.

அன்று போனவன், சில மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் வந்திருக்கிறேன், அம்மாவுக்காக. சிறிது நேரம் காத்திருந்தும் அவள் வராததால் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். பல வருடங்களுக்கு முன்பு அப்பாவின் நண்பர் ஒருவர் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வதாகக் கேள்வி. அவர் மூலமாகத்தான் அப்பா இராமேஸ்வரம் வந்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். அவரைச் சந்தித்தால் ஏதாவது வழி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கு செல்லத் தீர்மானித்தேன்.
சில வித்தியாசமான பெயர்களை நம்மால் எளிதில் மறக்க முடியாது. அவர் பெயர் சுயம்பு.

வட்டாட்சியர் அலுவலகம்.

உள்ளே நுழைந்ததும் இடது பக்கமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த வெள்ளைச் சட்டை நபரிடம் அவர் பெயரைச் சொல்லிக் கேட்டேன். காண்பித்தார். அவர் டேபிளுக்குச் சென்றேன். பான்பராக் வாயோடு அவர் நிமிர்ந்து பார்த்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

“ஓ, அப்படியா?…”

என்றவர் டேபிளில் பேப்பர் வெயிட்டை எடுத்து வைத்து விட்டு எழுந்து வந்தார்.

ஆபீஸுக்கு எதிரில் இருக்கும் பெட்டிக் கடைக்கு சென்று டீ குடித்தோம். அவர் ஒரு சிகரெட் பிடித்தார். ஒரு சிகரெட்டை என்னிடம் நீட்டினார். மறுத்துவிட்டேன்.

விவரம் கேட்டார்.

சொன்னேன்.

ஒரு பான் பராக் பாக்கெட்டைப் பிரித்துக்கொண்டே,

“இப்ப உங்களுக்கு அப்பாவோட டெத் சர்டிபிகேட் வேணும், அப்படித்தான தம்பி?…”

“ஆமா சார்…”

பார் பராக்கை வாயில் கொட்டிவிட்டு வாயிலிருந்து பக்குத்தூள் பறக்கப் பேசினார்.

“போன மாசம் வரைக்கும் நான் அந்த செக்க்ஷன்ல இருந்தேன் தம்பி, ஆனா, ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சனை. இப்ப நான் அங்க இல்லை… வேற ஒருத்தர்தான் பாக்குறார். ஆனா பிரச்சனையே அவருக்கும் எனக்கும்தான்… அதனால உனக்கு என்னால உதவி செய்யமுடியல… தயவு செஞ்சு என்ன மன்னிச்சுருப்பா… “

இடியாக விழுந்தது அவர் சொன்னது எனக்கு. ஓரளவு நம்பிக்கையோடு வந்த எனக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம்.

“வேற ஏதாச்சு உதவி வேணும்னா கேளு, செய்யிறேன்…”

என்றபடியே ஆபீஸ் உள்ளே நுழைந்தார். அவருடன் நானும் நுழைந்தே. அவர் நாற்காலியில் அமர்ந்ததும்,

“சரி தம்பி… கிளம்புங்க… அப்புறம் பாப்போம்…

என்றார்.

“சார், ஒரு சின்ன டீட்டெயில்… இப்ப யார்கிட்ட இந்த சர்டிபிகேட் வாங்கணும்னு சொல்ல முடியுமா?…”

“அதோ, அவர்தான்…”

என்றதும் திரும்பிப்பார்த்த எனக்கு ஒரு சிறிய அதிர்ச்சி.

அவர் நாற்காலிக்குப் பக்கத்தில் நின்று யாரோ சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். லேசான தயக்கத்துடன் அருகில் சென்று பார்த்தேன். சண்டை போட்டுக் கொண்டிருந்தது அவள்தான். ஆனால் அவல் என்னைக் கவனிக்கவில்லை. கோபமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

“இதோட நாலாந்தரமா வாரேன்…இன்னும் எத்தனவாட்டி வரச் சொல்றீங்க… நான் வேற ஏதும் பொழப்ப பாக்கவேணாமா?…”

இடுப்பில் இருந்த கூடையைக் கீழே வைத்தாள்.

“ஒவ்வொரு தரம் வர்றப்பயும் நூறு நூறாக் கேட்டீங்க, குடுத்தேன்… வாங்கி வாங்கி உம்பாட்டுக்கு எதுவும் செய்யாம இருந்தா எப்படி?…”

போனமுறை அவள் காதில் போட்டிருந்த சிறிய கம்மலையும் இப்போது காணவில்லை.

“இன்னும் எத்தன வாட்டி அலையச் சொல்றீங்க?… என் புருசன் செத்துப் போயிட்டான்னு சர்டிபிட்டு குடுக்குறதுக்கு உங்களுக்கு ஏன் வலிக்குது?… ஏன் இப்படி அலைய விட்றீங்க?… ஆங்?…

என்று அவள் சொன்னபோது அவள் கண்கள் கலங்கியதைப் பார்த்தேன். சுற்றியிருந்தவர்கள் அவளைப் பார்க்க, முந்தானையால் கண்களில் வழிய இருந்த நீரைத் துடைத்தாள். பிறகு எதார்த்தமாக சுற்றும்முற்றும் பார்த்தவள் என்னைக் கவனித்துவிட,

“வாங்க… எப்ப வந்தீக?…

என்றாள்.

நான் பதில் சொல்வதற்குள் அந்த அரசு அலுவலர்,

“ஏம்மா சும்மா கத்திக்கிட்டிருக்க? பெரிய ஆபீஸர் கையெழுத்துக்காகத்தான் வச்சிருக்கேன்னு சொல்றேன்ல?… இங்கியே இருந்து தொல… பத்து நிமிஷத்துக்குள்ள எடுத்துத் தாரேன்…”

என்று சொல்லி உள்ளே போனார்.

அவள் என்னிடம்,

“அங்க உக்காருங்க…”

ஓரத்திலிருந்த பெஞ்ச்சை காண்பித்தாள்.

“இருக்கட்டும் பரவாயில்ல…”

என்று சொல்லிப் பக்கத்திலேயே நின்றேன், வேண்டாவெறுப்பாகவே.

அவள் கால்களில் செருப்பு கூட இல்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளேயிருந்து வந்தவர் அவள் முன் சான்றிதழை வைத்துவிட்டு,

“இந்தா, உன் சங்காத்தமே வேணாம்… முதல்ல, இங்கிருந்து கிளம்பு…”

அந்த வார்த்தையால் கோபப்பட்டவள்,

“ம்ம்… நாங்கதான் அழுதிட்டிருக்கோம்… ஒஞ்சங்காத்தத்துக்கு…”

“ப்ச்ச்… மொதல்ல இடத்தக் காலி பண்ணு…”

“ந்தாதான் போயிக்கிட்டுருக்கம்ல?…”

என்று அவரிடம் எரிந்து விழுந்துவிட்டு கையிலிருந்த சான்றிதழை என்னிடம் கொடுத்தபடி வெளியே வந்தாள். அங்கு நடந்தவற்றை நான் எதிர்பார்க்கவில்லை.
எதுவும் பேசாமல் கூடையுடன் முன்னால் நடந்தாள். அடுத்த நிமிடம் குழம்பியபடி தயக்கத்துடன் நடந்த என்னிடம் அவள்,

“வாங்க… அம்மா எப்படி இருக்காங்க?… அந்த பென்ஜின் புக்கும் எங்க இருக்குன்னு தெரிஞ்சுருச்சு… அதையும் இப்பயே வாங்கிக் குடுத்துர்றேன்…”

என்னிடம் பதிலே எதிர்பார்க்காமல் பேசினாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதுவும் பேசாமல் பின்னாலேயே நடந்தேன். பஸ் ஸ்டாண்டு வந்ததும் நின்றாள். நான்கு அடிகள் தள்ளி நானும் நின்றேன்.

பஸ்ஸில் வரும்போதெல்லாம், அவளைப்பற்றி முதலில் கேள்விப்பட்டதையும், இப்போது காண்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி இருந்தேன். எதுவுமே பொருந்தவில்லை. அவள் மிகவும் தெளிவாகவே இருக்கிறாள். ஆனால் அவளுக்கு நடந்த திருமணம் முழு சம்மதம் இல்லாமல், அவள் பெற்றோரின் கட்டாயத்தில்தான் நடந்தது என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.

அவளுடைய வீடு வந்து சேர்ந்தோம். என்னை உட்கார வைத்துவிட்டு அவள் வெளியே சென்றாள். இவளை இவள் வீட்டிலிருந்து எல்லோருமே ஒதுக்கி விட்டதால் தன் பிள்ளைகளோடு இங்கு வாழ்ந்து வருகிறாள். படிப்பறிவும் இல்லை.

என் அப்பா இருந்தவரை அவர் தன் பென்ஷன் பணத்தை குடித்தே அழித்தார். இவர்களுக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர் இறந்தபின் இந்தக் குடும்பம் அவ்வளவுதான் என்று எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள். இருந்தாலும் நம்பிக்கையோடு வாழ்ந்து தன் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.
இதெல்லாம் அண்ணன் சொல்லித்தான் எனக்கும் தெரியும்.

நீண்ட நேரமாக அவள் வராததால் வெளியே வந்து நின்றேன். சிறிது நேரத்தில் அவள் தென்பட்டாள் வீட்டுக்குள் நுழைந்து கொண்டே,

“உள்ள வாங்க… நேரமாச்சா?…”

என்றாள்.

உள்ளே சென்றேன்.

“இந்தாங்க…”

பென்ஷன் புக்கை நீட்டினாள். அதை வாங்கும்போதுதான் கவனித்தேன். அட்டையில் இருந்த கிழிசல்களை செல்லோடேப்பால் மறைக்கப் பட்டிருந்த அந்த புத்தகத்தில் சிறியதாய் ரத்தக் கறை இருந்தது. அது இன்னும் காயாமல் இருந்தது. அதை வாங்கப் போன் நான் ரத்தக்கரையைப் பார்த்துவிட்டு சற்றுத் தயங்கியதை உணர்ந்த அவள்,

“அய்யய்யோ… இதுலயும் பட்டுருச்சா?…”

என்றபடி அதைத் துடைக்க முயற்சித்தவள் கையிலும் சிறுசிறு கீறல்கள் தெரிந்தது. அதிர்ச்சியோடு பார்த்த என்னிடம்,

“அது ஒன்னுமில்ல… இந்த புக்க உங்கப்பா அஞ்சாயிரம் ரூவாய்க்காக ஒருத்தன்கிட்ட அடமானம் வச்சிருந்தாராம்…”

அதைக் கேட்டது அப்பா என்ற அந்த மனிதர்மேல் எனக்கு கோபம் அதிகமாகியது.

“மொதல்ல அதக் கேட்டப்போ, அஞ்சாயிரம் குடுத்துட்டு, புக்க வாங்கிக்கன்னும் சொன்னான்… சரின்னு நானும் நகையெல்லாம் வச்சு, கடன வாங்கிக் காரு குடுத்தா… பொண்டுகப்பய, வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே, பொண்டாட்டிய அனுப்பி வட்டி கேக்குறான்… ஏழாயிரத்தி ஐநூறு ரூவா குடுத்தாத்தான் புக்க குடுப்பானாம்… அதான், அவனப் புடிச்சு நல்லா கேட்டு உட்டேன்… உங்கப்பா இருந்தவரைக்கு வட்டி குடுத்திருக்கார் மனுசன்… அவளுக்கு இன்னும் வேணுமாம், (……….) போயி ஊரு மேய வேண்டியதான?… என்னால குடுக்க முடியாதுன்னு சண்ட போட்டுட்டேன்… அவளே எடுத்துட்டு வந்து குடுத்துட்டா…”

சில வினாடிகள் நிறுத்திவிட்டுப் பிறகு,

“சனியன்… புக்க குடுத்ததுக்கப்புறம் புடிச்சு தள்ளி விட்டுட்டா… வேலி முள்ளுல கைய ஊனி விழுந்துட்டேன்… அதான் கையெல்லாம் ரத்தம்…”

என்றபடி ரத்தத்தைத் துடைத்துவிட்டு,

“இந்தாங்க…”

என்றாள்.

அதை வாங்கிய எனக்கு முதல் முறையாக அவளிடம் பேசத் தோன்றியது.
கைகளைக் கும்பிட்டபடி,

“ரொம்ப நன்றிங்க…”

என்றேன்…

“அய்யய்யோ…”

என்றபடி இரண்டடி பின்னால் சென்றவள்,

“நாயமா பாத்தா இந்தப் பென்ஜின் கின்ஜின் எல்லாம் ஒங்கம்மாவுக்குத்தான் வரணும்… நல்லபடியா வாங்கிக் குடுங்க…. ஒரு அஞ்சாறு வருஷம் வாழ்ந்த எனக்கே, அவுக இல்லாம எவ்வளவு கஷ்டமா இருக்கு… ஆனா பதினஞ்சு வருசம் வாழ்ந்து அதுக்கப்புறம் இருந்து இல்லாம தனிமரமா இருந்து உங்கள் வளத்து ஆளாக்கிருக்காங்க… அவுக எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு எனக்கு நல்லா தெரியும்…”

அவள் பேசியதில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது.

“விசாரிச்சேன்… பென்சின் காசு நிறைய வரும்னாங்க…”

அவளைக் கேள்விக் குறியோடு பார்த்தேன்.

“எனக்கு எந்தக் காசும் வேண்டாம்… ஒங்கப்பாவால, ஒங்களுக்கோ, ஒங்கம்மாவுக்கோ எந்த சந்தோசமும் கிடைக்கல… இதாவது கிடைக்கட்டும்… எம் புள்ளங்கள நானே எப்படியாச்சும் கரை சேத்துக்குவேன்….
உங்களுக்கு இது சம்பந்தமா வேற ஏதாச்சும் வேணும்னாலும் கேளுங்க… என்னால முடிஞ்சத செய்யிறேன்…”

அவள் பேசப்பேச என்னால் சரி என்று தலையசைக்க முடிந்ததே தவிர, அவள் மேல் எனக்கிருந்த கோபம், தவறான எண்ணம் எதுவுமே தலைகாட்டவில்லை.

“உங்ககிட்ட பணங்காசெல்லாம் கேக்கல… நீங்க அன்னக்கி எப்படி கதியில்லாம நின்னீங்களோ, அதே மாதித்தான் இன்னக்கி நாங்க நிக்கிறோம்… எங்க வீட்டாளுக யாரும் எங்களை பாத்துக்குறதில்ல… உங்களால முடிஞ்சா…”

என்று சொல்லி நிறுத்தியவளை நிமிர்ந்து பார்த்தேன். கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே,

“என் புள்ளங்கள மட்டும் எப்பவாவது வந்து பாருங்க… வேற எந்த ஒதவியும் வேணாம்…”

அவள் பேச்சில் அப்படி ஒரு அழுத்தம்.

எல்லோராலும் ஒதுக்கப்பட்டு நிராதரவாக நிற்கும் அந்த சூழ்நிலையிலும்கூட பாதிக்கப்பட்ட தன்னைப் போல் ஒரு பெண்ணுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவத் துடிக்கும் எண்ணம். அதற்கும் மேலாக யார் உதவியும் இல்லாமல் தன்னாலும் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கை.

அவள் பெண்மையில் ஒரு ஆண்மையை, ஒரு ஆளுமையை உணர்ந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

அவளைப் பற்றி என் மனதில் இருந்த எண்ணமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன்.

கையிலிருந்த பென்ஷன் புத்தகத்தில் துடைத்த பிறகும்கூட அவளது ரத்தத்தின் பிசுபிசுப்பு விரலில் ஒட்டியது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “தங்கச்சி மடம்

  1. ஒரு நல்ல கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது. மிகவும் எளிய நடை. யதார்த்தம். மீண்டும் கதைகளைத் தருக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *