சிட்டுக்குருவி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 4,970 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டுக் கொல்லையில் அவரைப் பந்தலில் கீழே சிட்டுக் குருவி கூடு கட்டியிருந்தது. அதை முதல் முதலில் கண்டுபிடித்தவள் சரோஜாதான்.

“ராஜி, ராஜி! பாரேன், வந்து பாரேன்!” என்று கத்திக் கொண்டே அவள் சமையலறைக்குள் ஓடிவந்தாள்.

சாதம் வடிக்க உட்கார்ந்த ராஜி, எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுக் கொல்லைப்பக்கம் ஓடிவிட்டாள். விஷயத்தைப் கேட்டு, ராஜியினுடைய அவசரத்தையும் கண்ட நான், “சரிதான்! இன்று குழைந்துபோன சாதந்தான் கிடைக்கும் ” என்றேன். ராஜி நான் சொன்னதைக் காதில் வாங்காமலே போய்விட்டாள். ஆனால் நானும் அடுத்த நிமிஷமே அவர்கள் இருவரையும் பின்பற்றிக் கொல்லைப் பக்கம் போனேன். “உஸ் உஸ்!” என்று அக்காவும் தங்கையும் சைகை காட்ட, நானும் சிட்டுக்குருவியின் கூட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். அதில், மூன்று சிறிய முட்டைகள் இருந்தன.

அன்று எனக்கு உண்மையிலேயே குழைந்துபோன சாதந்தான் கிடைத்தது. ஆனால் சாதம் குழைந்து போயிருந்தது என்பதைக் கவனிக்க எனக்கு அவகாசமில்லை . ரெயிலுக்கு நேரமாகிவிட்டது. அள்ளி அள்ளிப் போட்டுக்கொண்டு எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு வாசல் பக்கம் போனபோது, சரோஜா சொன்னாள்:

“கும்பகோணத்தில் நல்லதாக மலிவாய்க் கிடைக்குமாமே, சின்னதா, அழகா, எனக்கு ஒரு குருவிக்கூண்டு வாங்கிண்டு வாங்கோ!”

“இரண்டாக வாங்கிண்டு வாங்கோ! நானும் ஒரு குருவிக் குஞ்சைப் பிடித்து வளர்க்கப் போறேன்” என்றாள் ராஜி.

“ஆகா! முட்டைதான் மூன்றிருக்கிறதே! எனக்கு மட்டும் ஒரு குருவி வேண்டாமோ!” என்று நான் பதில் அளித்து விட்டு வண்டியில் ஏறிக்கொண்டேன். இப்படியாக அந்தச் சிட்டுக் குருவிகள் பிறக்கு முன்னரே, அவற்றின் விதி எங்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

கும்பகோணத்தில் எனக்கு இரண்டொரு நாள்தான் அலுவல் இருந்தது. முடித்துக்கொண்டு திரும்பியபோது, நான் குருவிக் கூண்டு வாங்கி வரவில்லை. அப்படி நான் வாங்காமல் வந்ததற்கு இரண்டொரு காரணங்கள் உண்டு. முக்கியமாக, சரோஜாவும் ராஜியும் இந்த இரண்டொரு தினங்களில் குருவிகளை மறந்தே போயிருப்பார்கள்; குருவிக் குஞ்சுகள் தப்பியிருக்கும் என்று நான் எண்ணினேன். அப்படி அவர்கள் மறக்காமல் இருப்பார்களே யானால், பார்த்துக் கொள்ளலாம். குருவிக் கூண்டு வாங்குவது பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபமும் கிடையாது. கூடியவரையில் சண்டை சச்சரவு இல்லாமலே வாழ்க்கை நடத்திவிட வேண்டு மென்பதுதான் என் லட்சியம். அதனால் நான் அநேகமாக எல்லா விஷயங்களிலுமே ‘அவள்’ சொல்லுகிறபடியே நடந்து விட முயலுவேன். சிட்டுக்குருவி விஷயத்தில் மட்டும் விதி விலக்குச் செய்வானேன்!

நான் குருவிக்கூண்டு வாங்கி வராதது பற்றிச் சரோஜாவுக்கும் ராஜிக்கும் வருத்தந்தான். ஆனால் சிட்டுக் குருவிகள் கூட்டில் முட்டைகள் அப்படியே இருந்தன.

“குஞ்சு பொரிக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் போல் இருக்கிறது!” என்றாள் ராஜி.

“அதற்கப்புறம் இரண்டு வாரமாகும், அவைகளுக்கு இறக்கை முளைத்துப் பறக்க ஆரம்பிக்க!” என்றேன் நான்.

“குருவிக் கூண்டு வாங்கித் தராமே இருக்கத்தானே இது வழி!” என்று அழாத குறையாக முகத்தைக் கோணிக் கொண்டாள் சரோஜா.

“அசடே! வாங்கித் தரேன்னால் நான் வாங்கித் தருவேன். பாரேன்!..தவிரவும் புதுக் குருவிக் குஞ்சைப் புதுக்கூண்டிலே அடைச்சாத்தான் நன்னாருக்கும். இப்பவே கூண்டை வாங்கினால் அது பழசாகப் போயிடுமே!” என்று சரோஜாவுக்கு நான் சமாதானம் சொன்னேன்.

பொறுப்பற்ற சுதந்திரமான எனது வாழ்க்கையிலே எனக்கு உள்ளவை இரண்டே இரண்டு கடமைகள்தாம். முதல் கடமை; ராஜியின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்புவது; இரண்டாவது, சரோஜாவின் கோப தாபங்களைச் சமாதானம் செய்வது. இந்த இரண்டு கடமைகளை மட்டும் இவ்வுலகில் நான் சரிவரச் செய்து விட்டேனானால், மோட்சம் கிட்டிவிடும் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

அதற்கப்புறம் பல நாட்கள் சென்றன. ‘காலண்டர்’ கணக்குப் படி ஒரு வாரந்தான்; ஆனால் பேச்சு வார்த்தைகள் கணக்கில் பார்த்தால் ஒரு யுகம்போலத் தோன்றுகிறது.

சதா சிட்டுக்குருவி, அல்லது அது சம்பந்தமான பேச்சுத்தான் வீட்டில். குருவிகளின் பழக்க வழக்கங்கள், பூனை நாய் போன்றவைகளின் பழக்க வழக்கங்கள் இவைகளை எல்லாம் எங்களுக்குத் தெரிந்தவரையில் ஒத்திட்டுப் பார்த்துக் கொண்டோம். அடுத்த அகத்து வேலைக்காரன் இப்படிச் சொன்னான் என்பாள் ராஜி. அடுத்த அகத்து மாமி அப்படிச் சொன்னாள் என்பாள் சரோஜா. நான் இருவருக்கும் சமாதானமாகப் பதில் சொல்லப் பார்ப்பேன்; சில சமயம் அது இருவரையும் இன்னும் அதிகமாகத் தூண்டிவிடும். அந்த ஒரு வாரத்தில் நான் பறவையினங்களின் வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அறிந்து கொண்டேன். நான் கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு எனக்கு ஏதாவது ஒரு சர்வகலாசாலை ‘டாக்டர்’ பட்டம் கொடுக்க வேண்டும்; அது சர்வகலாசாலையார் தாமாகவே தெரிந்து கொண்டு மனமுவந்து செய்ய வேண்டியது; நான் சொல்லிக் கொள்ளக் கூடாதுதான்; எனினும் சொல்லி வைத்தேன். ஆனால், ஒன்று: நான் அப்படி அறிந்து கொண்டதில் எதெது சரி தப்பு என்று அப்போதோ பின்னரோ விசாரிக்கப் புகவில்லை. அது வியர்த்தமான ஆராய்ச்சியாகி விடும். தவிரவும், சிறந்த சர்வ கலாசாலைகளில் தான் ஆகட்டும்; மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டது சரியா தப்பா என்று யோசிக்கத் துணிகிறதுண்டா என்ன?

மூன்று முட்டைகளிலிருந்து இரண்டே இரண்டு குஞ்சுகள் தாம் வெளிவந்தன. மூன்றாவது முட்டை என்ன ஆயிற்று என்று எங்களில் யாருக்கும் – ராஜிக்கும் கூடத்தான்- தெரியவில்லை .

“நாய் பூனை மாதிரி தன் குஞ்சுகளில் ஒன்றைச் சிட்டுக் குருவியும் தின்றிருக்கும்” என்றாள் ராஜி.

“நாய் பூனை மாதிரி சிட்டுக்குருவி மாமிசபட்சிணி இல்லையே” என்று நான் ஆட்சேபித்தேன்.

“அப்படியானால் மூணாவது குஞ்சு என்ன ஆச்சு? நீங்களே சொல்லுங்களேன்’ என்று ராஜி சவால் விடுத்தாள்.

நான் மௌனம் சாதித்தேன்.

கொல்லையில் கூட்டில் குருவிக் குஞ்சுகள் பிறந்த அன்றே சரோஜா ஊருக்குப் போக நேர்ந்துவிட்டது. அவள் பாட்டி பட்டணத்திலிருந்து வந்திருந்தாள். காவேரிக் கரையில் ஒரு கிராமத்துக்குப் போக இருந்தாள். பேத்தியையும் அழைத்துக் கொண்டு போய்த் தன்னுடன் சிலநாள் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

சரோஜா முதலில் கிளம்ப மறுத்தாள். “என் சிட்டுக் குருவியை விட்டுட்டு நான் வரமாட்டேன் போ” என்றாள். “நான் வரமாட்டேன். நீ இப்பவே ஸ்டேஷனுக்குப் போய்விடு, பாட்டி” என்று பாட்டியை விரட்டினாள்.

ஆனால் பாட்டிக்குத் தெரியாதா குழந்தையின் மனம்? முறுக்குப் பண்ணித் தருகிறேன் என்றாள்; பச்சைப் பாவாடை தைத்துத் தருகிறேன் என்றாள்; கை நிறையக் காலணாக் காசு தருகிறேன் என்றாள்; காவேரியிலே ஸ்நானம் பண்ணத் தினம் அழைத்துக் கொண்டு போறேன் என்றாள். சரோஜா குதித்துக் கொண்டு பாட்டியுடன் கிளம்பத் தயாராகிவிட்டாள்!

அப்படியும், அவள் குருவிக் குஞ்சை மறந்துவிடவில்லை. “ராஜி, குருவிக் குஞ்சை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ. நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றாள். “எனக்காக இரண்டு குஞ்சையும் கூண்டிலே பிடிச்சுவையுங்கோ. நான் வந்து கேட்பேன்” என்றாள் என்னிடம்.

நான், “ஆகட்டும்” என்றேன்.

மறுபடியும் ஒருதரம், ரெயிலில் ஏறி உட்கார்ந்தபின் அவள் எனக்கு அதை ஞாபகப்படுத்தினாள்.

சரோஜா ஊருக்குப் போனதும், வீடு வெறிச்சென்றிருந்தது. குருவிக் குஞ்சுகளை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டு ராஜி ஏதோ கொஞ்சம் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தாள்.

குருவிக் குஞ்சுகளுக்கு மூக்கைத் தவிர வேறு ஒன்றும் சரியாக உருவடையாத பருவத்தில் ஒரு நாள், நாங்கள் இருவரும் குருவிக் கூட்டண்டை அவரைப் பந்தலின் கீழ் நின்றுகொண்டிருந்தோம். முருங்கை மரக்கிளையில் உட்கார்ந்து ஒரு குருவி உரக்க, அசாதாரணமான குரலில் ‘டிக் டிக்’ என்று சப்தம் செய்து கொண்டிருந்தது.

ராஜி சொன்னாள்: ”பார்த்தேளா அதிசயத்தை! நாம் கூட்டண்டை வறோம்னு தாய்க்குருவி, ஆபத்து, ஆபத்து’ என்று கத்தித் தன் குஞ்சுகளை எச்சரிக்கிறது.”

நான், “உம்” என்றேன்.

“நான் சொன்னா உங்களுக்கு நம்பிக்கையாக இல்லையோ? பின் ஏன் இந்தக் குருவி வழக்கம்போலக் கிறீச்சிடாமல் வேறு தினுசாகக் கிறீச்சிடுகிறதாம்?” என்றாள் ராஜி. “ஆமாம், ஆமாம்! நீ சொல்றபடிதான் இருக்கவேண்டும்” என்று சொல்லி விவாதத்தி லிருந்து தப்பப் பார்த்தேன்.

“இன்னும் சந்தேகமாயிருந்தால் நான் சொல்லுகிறபடி செய்து பாருங்களேன்! இரண்டு பேரும் இப்போ உள்ளே போவோம்; உடனே அந்தக் குருவி கிறீச்சிடுவதை நிறுத்திவிடுகிறதா இல்லையா பாருங்கள்” என்றாள் ராஜி.

“மறுபடியும் திரும்பி வந்தோமானால் மறுபடியும் கிறீச்சிட ஆரம்பித்துவிடும்” என்றேன்.

“வந்தேளா வழிக்கு?”

“வழிக்கு வராமல் எங்கே போவதாம்?” என்று பதிலளித்தேன் நான். “சரி, சாப்பிடலாமே! நாழியாகல்லையா?”

ராஜிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது: ”ஐயையோ! அடுப்பிலே ஈயச் சொம்பைப் போட்டுட்டு வந்துட்டேனே! என்ன ஆச்சோ” என்று சொல்லிக்கொண்டே ராஜி இரண்டெட்டில் என்னைத் தாண்டிக் கொண்டு சமையலறைக்குள் ஓடினாள்.

“போயிடுத்தா ஈயச்சொம்பு! என்ன அஜாக்கிரதை?” என்று எக்களிப்புடன் கூறிக்கொண்டே நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். ‘இந்தக் காலத்திலே ஈயம் சேர் என்ன விலை விற்கிறது! இவ்வளவு அஜாக்கிரதையாக, அழகாகக் குடித்தனம் நடத்தினால்…’

நான் என்னுடைய வாக்கியத்தை முடிக்கவில்லை. கையில் உருகாத ஈயச் செம்புடன் ராஜி நின்றுகொண்டிருந்தாள். எரிந்து கொண்டிருந்த அடுப்பின் மேல் வைக்காமல் அவள் சிட்டுக்குருவி பார்க்கப்போன அவசரத்தில் கீழேயே வைத்துவிட்டுப் போய் விட்டாள். ஈயச் செம்பு தப்பிற்று. எனக்கு வருத்தந்தான். அவசரப்பட்டுச் சொன்ன சொற்களை வாபஸ் வாங்கிக் கொண்டு தான் ஆகவேண்டும்!

“நான் குடித்தனம் பண்ற அழகுக்கு என்ன வந்தது இப்போ ! அப்படிச் சொம்பு போனாத்தான் என்ன? எங்கம்மா வாங்கிக் கொடுத்ததுதானே! நீங்க சம்பாதிச்சு வாங்கிக் கொடுத்தது என்ன கெட்டுப்போச்சு?” என்றாள். இது பாய்ச்சலின் முன் பதுங்கல்.

“வாசல்லே யாரோ கூப்பிடறாப்போல இருக்கே” என்று நான் அங்கிருந்து தப்பித்துக் கொள்ள முயன்றேன்.

“நீங்க சம்பாதிச்சுப் போடற அழகுக்கு நான் குடித்தனம் பண்ற அழகு ஒண்ணும் கெட்டுப் போயிடல்லை. ஆறு மாசத்துக்கொரு தரம் ஏதாவதொரு பத்திரிகையிலே ஒரு கதையை எழுதிவிட்டு, வருஷத்தில் மற்ற ஆறு மாசமும் அதைப்பற்றிப் பெருமை அடிச்சுக் கொண்டிருந்தால் சரியாப் போச்சா! கதைக்கு வள்ளிசா ஒன்பதே முக்காலே அரைக்கால் ரூபா வந்துவிடும். அதை வச்சிண்டு ஜோரா ஒரு வருஷம் குடித்தனம் பண்ணவேண்டியதுதான், குடித்தனம்! என் குடித்தனம் கெட்டுப் போச்சாமே!….ம்…”

நான் பேச்சை ஹாஸ்ய பாவத்துக்குத் திருப்பப் பார்த்தேன்: “கதைக்குச் சம்மானம் மணியார்டராக அனுப்பினால் தான் ஒன்பதே முக்காலே அரைக்கால் வரும். இப்போ செக்கான்னு எல்லாரும் அனுப்பிச்சு விடறான்; கால் ரூபாய் கமிஷன் போயிடறது” என்று சொல்லிச் சிரித்தேன்.

“சிரிப்பு வேறு வேண்டிக் கிடக்கில்லையா?” என்று ராஜி சினந்துகொண்டாள். “அதுக்குள்ளேயே இலையை எடுத்துப் போட்டுண்டு என் பிராணனை வாங்காதேங்கோ. ஒரு மணி நேரம் கழித்து வாங்கோ . ரசம் இனிமேல் தான் ஆகணும்…நான் குடித்தனம் பண்ற அழகு பிடிக்கலையாமே!”

“ரசம் வைக்க ஒருமணி நேரமா ஆகும்?” என்று அசட்டுத் தனமாக, என்ன கேட்கிறோம் என்று பசி வேகத்தில் அறியாமல் கேட்டுவிட்டேன்.

அவ்வளவுதான். என் குற்றங்குறைகள் எல்லாம், சரமாரியாக என் மேல் விசிறப்பட்டன. நல்லவேளையாக அந்தச் சமயம் வெளிக்கதவை யாரோ உண்மையிலேயே தட்டவே நான் ஒருவழியாக, செத்தேன் பிழைத்தேன் என்று ஓடிவிட்டேன்.

வந்தவருடன் பேசி, அவரை அனுப்பிவிட்டு நான் அரைமணி நேரங்கழித்துத்தான் வீட்டுக்குள் போனேன். சமையலறையில் இலை போட்டிருந்தது. வழக்கத்துக்கு விரோதமாக ராஜி கோபத்திலும் மௌனமாகவே இருந்தாள். ஆனால், இந்தக் கோபமும் மௌனமும் அன்று அதிக நேரம் நீடிக்கவில்லை . சிட்டுக் குருவியைப் பற்றிய ஏதோ ஒரு உற்சாகமான வார்த்தையில் கரைந்து போய்விட்டது.

நாளடைவில் கூட்டிலிருந்த குருவிக் குஞ்சுகள் வளர்ந்து பெரியவையாயின. நாங்கள் கூட்டண்டை போனால் அவை முதலில் வாயைப் பிளக்கும் – தாய்க் குருவிதான் உணவு கொண்டு வந்திருக்கிறது என்ற எண்ணத்தினால். அவற்றின் வாயுந்தான் எவ்வளவு அழகாயிருந்தது! பிறகு கடுகு போன்ற சிறு கண்களை மிரள மிரள விழித்துப் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் பயத்துடன் கிறீச்சிடும். அந்தக் குரலில் தான் என்ன பயம் தொனித்தது!

“ஐயையோ! தாய்க் குருவி இரை கொண்டுவந்திருக்கு; உள்ளே வந்துடுங்கோ. அது இரை கொடுத்துட்டுப் போயிடட்டும். இல்லா விட்டால், இரையில்லாமல் குருவிக்குஞ்சு செத்துப் போய்விடும். பாவம் நமக்குத்தான்” என்று ராஜி என்னை அவசரப்படுத்துவாள். ஆனால் நான் உள்ளே போய்ப் பத்து நிமிஷமான பிறகுதான் அவள் வருவாள்.

தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டுவந்து தருவது தாய்க் குருவியா, தகப்பன் குருவியா என்று எங்களுக்குள் ஒருநாள் விவாதம் மூண்டது; இன்னமும் அது முடிய வில்லை . சிட்டுக்குருவிக் குஞ்சுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெரியவையாகிக் கொண்டிருந்தன.

(நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்கிற தொடர், பழங்கதையின் எந்தக் கதாநாயக நாயகியையும் விட, என் கதாநாயகர்களுக்கு ரொம்பவும் பொருந்தும் என்று நான் எண்ணுகிறேன்). சிறகுகள் வளர்ந்து பறக்கத் துடித்துக் கொண்டிருந்தன.

அச்சமயம் ஒருநாள் இரவு காற்றும் மழையும் பலமாக அடித்தது. – இரவு மூன்று மணி இருக்கும். ஒரு பலத்த இடிச் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட ராஜி , விலகியிருந்த போர்வையை இழுத்த மூடியபடியே சொன்னாள்: “பாவம்! கொல்லையிலே கூட்டில் குருவிக் குஞ்சுகள் இந்தக் காத்திலும் மழையிலும் குளிரிலும் என்ன பாடு படுகின்றனவோ?”

“நான் போய்ப் பார்த்துவிட்டு வரட்டுமா?” என்றேன் நான், என் போர்வைக்குள்ளிருந்து.

ராஜிக்குத் தூக்கக் கலக்கம். பதில் சொல்லவில்லை.

மறுநாள் காலையில் எழுந்து கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தபோது, குருவியின் கூடு மழையில் நைந்து அறுந்து கீழே கிடந்தது – திட்டுத் திட்டாகத் தேங்கியிருந்த ஜலத்தில், மூச்சுக் காட்டாமல் கூட்டில் குஞ்சுகள் ஒண்டிக்கொண்டிருந்தன.

கூட்டோடு அவற்றைத் தூக்கிக் கொண்டுவந்து கொல்லைத் தாழ்வாரத்தில் உலர்ந்திருந்த இடத்தில் போட்டேன்.

“ஐயோ பாவமே!” என்று அளவுகடந்த அனுதாபத்துடன் சொல்லிக் கொண்டு வந்த ராஜி தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவளால் அந்தக் குஞ்சுகளை விட்டுக் கண்ணை எடுக்கவே முடியவில்லை.

வெயில் காய ஆரம்பித்ததும் வழக்கம் போலத் தாய்க்குருவி தன் குஞ்சுகளைத் தேடிக்கொண்டு வந்தது போலும். வழக்கமான இடத்தில் கூட்டையோ குஞ்சுகளையோ காணாமல், அது உடனே கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. அந்தச் சிறு குருவியின் குரல் தெருவை நிரப்பி அதற்கப்பாலும் பரவிநின்றது. ஊர் முழுவதுமே, ஏன் உலகம் முழுவதுமே, அதற்கப்பாலுமே, அந்தத் தாயின் சோகக் குரல் எட்டும் என்று எனக்குத் தோன்றிற்று.

“பாவம்! குருவி வந்து தன் குஞ்சுகளைக் காணோமே என்று தவிக்கிறது!” என்றாள் ராஜி. அவள் குரலிலும் அளவுகடந்த பரிதாபம் தொனித்தது.

சிறிது நேரத்தில் அந்தக் குருவியின் கூக்குரலை அவளால் சகிக்க முடியாமல் போய்விட்டது. “அது நம்மை வாயாரச் சபிக்கிறது. பாருங்களேன். பேசாமல் அந்தக் குஞ்சுகளைக் கொல்லையிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுங்கள். குருவியின் பாடு; குஞ்சுகளின் பாடு கொண்டுபோய் விட்டுவிடுங்கள்” என்றாள் ராஜி.

குருவிக் குஞ்சுகளைத் தான் எடுத்து வளர்க்கவேண்டுமென்ற ஆசை, குருவியின் சோகக் குரலைக் கேட்டபின் ராஜிக்கு அற்றுப் போய்விட்டது. எனக்கு அப்படியில்லை. சரோஜாவுக்காக அவற்றை வளர்க்கலாமே என்று தோன்றிற்று.

குருவிக்குஞ்சுகளின் மேல் ஒரு கூடையைக் கவிழ்த்து மூடி வைத்தேன்.

ராஜி இன்னமும் லேசாக ஆட்சேபங்கள் சொல்லிக்கொண்டே யிருந்தாள்.

“சிட்டுக் குருவி வளர்ப்பது ரொம்பவும் சிரமம் என்று அடுத்தாத்துப் பாட்டி சொல்லுகிறாள்” என்றாள் ஒருதரம்; “பூனை எல்லாக் குருவிகளையும் தின்று விடுமாமே!” என்றாள். “குருவியைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தால் அடுத்த ஜன்மத்தில் சிறைவாசம் செய்ய நேருமாம்” என்றாள் ஒருதரம்.

ஆனால் நான் அதையெல்லாம் காதில் வாங்காமல் சிட்டுக் குருவிகளை அன்று முழுவதும் சிறைப்படுத்தியே வைத்திருந்தேன். பெரிய குருவி அன்று பகல் பூராவும், விட்டுவிட்டு, தன் அபயக் குரலை எழுப்பிக்கொண்டேயிருந்தது. முன்னே எங்கள் தோட்டத்தில் பார்த்தேயிராத பல ஜாதிக் குருவிகள் அதற்கு ஒத்துப்பாட வந்து சேர்ந்துகொண்டன. கொல்லைப்பக்கம் போனால் ‘கசமுச்’ வென்று பல பறவைகளின் குரல்கள் ஒலித்தன.

“அவையெல்லாமாகச் சேர்ந்து கொண்டு நம்மைச் சபிக்கின்றன” என்றாள் ராஜி.

இரவு, குருவிக் குஞ்சுகள் பூனை கையில் அகப்படாமல் இருக்க வேண்டுமே என்று என் படுக்கைக்கருகில் தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு படுத்திருந்தேன். ராஜிக்கோ எனக்கோ சரியான தூக்கமில்லை. அவள் ஏதோ சொப்பனங் கண்டு பிதற்றிக் கொண்டிருந்தாள். கண்ணை மூடினால் போதும்; காதிலே லட்சக் கணக்கான பறவைகளின் குரல் ஒலிக்கத் தொடங்கிற்று.

விடியற் காலையிலேயே எழுந்து குருவிக் குஞ்சுகளை அவரைப் பந்தலின் கீழே கொண்டு போய் விட்டுவிட்டேன். அவை சோர்ந்து போனவைபோல் ஒன்றோடொன்று ஒண்டிக்கொண்டு கிடந்தன. நான் அவற்றைவிட்டு நகர்ந்தவுடன் முருங்கை மரக் கிளையிலிருந்து தாய்க் குருவி பறந்து வந்து அவற்றண்டை உட்கார்ந்து கொண்டது. குஞ்சுகளும் சோர்வு நீங்கி மெல்லிய குரலில் கிறீச்சிடலாயின.

தூங்கி எழுந்து வந்த ராஜியிடம் நான் குருவிகளை விட்டு விட்ட விஷயத்தைச் சொன்னேன்.

“விட்டு விட்டேளா?” என்று சற்று வருத்தத்துடனேயே அவள் கேட்டாள்.

அரை மணி நேரம் கழித்துக் கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தபோது, குருவியையோ குருவிக் குஞ்சுகளையோ அங்கே காணவில்லை .

“அதோ அடுத்தாத்துப் பக்கம் பந்தலிலே இருக்கு, நம்மாத்துக் குருவி” என்று ராஜி காட்டினாள்.

“நம்மாத்துக் குருவியா?” என்று சொல்லிச் சிரித்தேன் நான்.

என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போல் இருந்தது. ஆனால் ராஜிக்கு மட்டும் வருத்தந்தான்.

– 1955, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

1 thought on “சிட்டுக்குருவி

  1. வீட்டின் மரக்கிளையில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறித்த குருவியையும், குருவிக்குஞ்சுகளையும் மையமாக வைத்து, ஒரு ஜீவனுள்ள குடும்ப உறவுகளைச் சித்திரிக்கும் பாங்கு வெகு இயல்பாக இருக்கிறது. கநாசுவின் தனித்தன்மையான எழுத்து, இதில் மிளிர்கிறது.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *