கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 6,948 
 
 

ஐயய்யோ! இன்னா கொடுமைய்யா?. பத்து வயசு புள்ளைக்கு வரக்கூடிய வியாதியா இது?.”— சண்முகம் வீட்டின் முன்னால் நின்று ஒருத்தர் உரக்க பேசிக் கொண்டிருக்க, வெளியே ஒரு நாலைஞ்சி பேர் கூடியிருந்தாங்க. வீட்ல அழுவுற சத்தம் தெரு வரைக்கும் கேக்குது. தெரு ஜனங்க ஒவ்வொருத்தராக சண்முகம் வீட்டுக்கு போறதும் வர்றதுமாக இருந்தாங்க. பிரதானமாய் நெசவுத்தொழில் நடக்கும் ஊர் இது. காலையில் எழுந்ததும் எல்லாரும் தெருவுக்குத் தெரு பாவு விரிச்சி போட்டு தோயறதும், சாயங்காலம் தறியிலிருந்து இறங்கியதும் குளிச்சிட்டு நெற்றியில் திருநீற்று பட்டையுடன், வேதபுரீஸ்வரர் கோயிலில் பொன்னார் மேனியனே! யில் ஆரம்பிச்சி, தேவாரப் பதிகங்களை ஒவ்வொன்றாய் பாடியபடியே நவகிரகங்களையும் சுத்திட்டு திரும்பறதும், நூலு, சிலுப்பை, பொந்து, பெரூட்டம், நாடா, குழலு, தாரு, உண்டை, குலுக்கை, பொறை, போன்ற நெசவுத் தொழிலின் கலைச்சொற்களில் புழங்கிக் கொண்டும், இந்தப் பிறவிக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்யறதைத் தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே என்று ஜீவிக்கும் வன்முறை பழகாத, இன்றைக்கும் நூத்தி ஐம்பது கிராம் கத்தரிக்காய், நூத்தி ஐம்பது கிராம் கேரட் என்று வாங்கக் கூடிய சிக்கனம் பழகும், அப்பிராணி ஜனங்களை உள்ளடக்கிய கிராமம் இது. விஷயம் இதுதான். சண்முகத்தோட பையன் சாமிநாதனுக்கு திடீரென்று ரெண்டு கால்களும் செயலிழந்து போச்சி, அசைவே இல்லை.

“எனக்கென்னமோ இது பக்கவாதமா இருக்கும்னு படுதுப்பா.”

“அட பக்கவாதம்னு ஒரு பக்கம் விழுந்துடிச்சின்னா கூட கையும் காலும் சேர்ந்துதான விழும். இப்படி கையை வுட்டுட்டு காலு மட்டும் விழுமா இன்னா?. அத்தோட நாக்கு வேற இழுத்துக்கிச்சே. கால்ல சொரணையே அத்து போயிருக்குபா. தொட்றது தெரியல.”

“அதுவும் இத்தனூண்டு வயசிலியா?. எதனா தெய்வ குத்தமா இருக்குமோ?.”

“இல்லப்பா, இது ஏதோ செய்வினை மாதிரி படுதுடா?. பையன் சிலுத்துக்கிட்டு கெடக்கிறான் பாரு. ஏம்பா சம்முவம்! பூசாரி கிட்ட போயி வெளக்கு வெச்சி பார்க்கச் சொல்லு. மனுசன் என்ன ஏதுன்னு பளிச்னு சொல்லிடுவாப்பல.” —இது நீலகண்டன், சண்முகத்தின் பக்கத்து வீட்டுக்காரர்…

“அட இவரு ஒருத்தரு. மந்திரத்தில மாங்காய் காய்க்கும்னு சொல்றவரு. தோ பாரு சம்முவம்! இது பக்கவாதம் மாதிரிதான் தெரியுது. மசூதி சந்துல சத்தார் சாயபு கிட்ட போய் காட்டு. பக்கவாதம், மஞ்சகாமாலை, தோல் வியாதிங்க, இதுக்கெல்லாம் நாட்டு வைத்தியந்தான் சிலாக்கியம்னு புஸ்தகத்தில படிச்சேன். இங்கிலீஷ் வைத்தியம் உதவாது. அந்த டெஸ்ட்டு, இந்த டெஸ்ட்டுன்னு நம்ம பணத்த கறந்துடுவானுங்க.. இன்னா கொழந்தை கடும் பத்தியமா இருக்கோணும். இன்னா பண்றது?. இருந்துதான் ஆவணும். பத்து பாஞ்சி நாள்ல எழுந்து நடமாட்றானா இல்லையா பாரு. போன வருஷம் மூலை வூட்டு ஆதிமூலத்துக்கு பீச்சக்கை பக்கம் கை காலு விழுந்துப் போச்சே, சத்தார்பாய் தான வைத்தியம் பண்ணாரு?. இருவது நாள்ல அந்தாளு கொம்பை புடிச்சிக்கிட்டு எழுந்து நடக்கல?.”— ஒரு சிலர் பக்கத்தில எரையூர்ல போயி மொதல்ல குறி கேட்டுட்டு வரச் சொன்னாங்க. அங்க வயசான பூவாத்தா கிழவி மேல ஆஞ்சனேயரு இறங்கி பேசுது, செத்தவங்களை குறிப்பிட்டு கேட்டாலும் வந்து சொல்லும். சுத்து வட்டாரம் ஏழெட்டு ஊருக்கும் அவ சொல்ற வாக்குதான் ஏற்வை. ஏழெட்டு தடவை கொட்டாவி விட்டப்புறந்தான் கிழவிக்கு மிரளு வர்றது வழக்கம். கண்ணை உருட்டி ஆங்காரமாக, நான் ஆடலோடு.. டூ..டூ..ஊ……ஊ.. ன்னு குரலெடுத்தாள்னா பாக்கிறவங்களுக்கு அச்சத்தை குடுக்கும். நீங்க பொறந்தவங்களா?, புகுந்தவங்களா?, என்னை குறிப்பிட்டு கேக்கலாம்னு சொல்லிஆரம்பிப்பா. அப்படியே புட்டு புட்டு வெச்சிடுவாளே. அப்புறம் ஊர்ல படிச்சவங்கள்லாம் அல்லோபதி வைத்தியத்துக்குப் போகச் சொல்றாங்க.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொண்ணு சொல்லிக்கிட்டிருக்க, சண்முகம் நிறைய யோசிச்சி அப்புறம் போனதென்னவோ எல்லா சராசரி தமிழர்களையும் போல, அல்லது சராசரி இந்தியர்களைப் போல, பூசாரி ஆறுமுக பண்டாரம் கிட்டதான். விளக்கு வெச்சி தன் புள்ளைக்கு செய்வினை எதுவும் இருக்கான்னு பார்க்க சொல்லி தட்சணை வெச்சி வேண்டிக்கிட்டாரு. இந்த காலத்தில செய்வினை, சேஷ்டை, பில்லி, சூனியம், இவைகளையெல்லாம் யாரு நம்பறா?.. சண்முகத்துக்கும் இதுபத்தி எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லைதான் என்றாலும், தனக்குன்னு வரும்போது கவலையிலும், பயத்திலும் எல்லா நம்பிக்கைகளும் வந்துவிடுகின்றன. தப்பில்லை, காலங்காலமாக நம்ம முன்னோருங்க நமக்கு சொல்லிவந்த சிகிச்சைக்கான சூத்திரம் `மணி, மந்திரம், ஔஷதம்’ தானே?. அதான வரிசை முறை?. சித்தருங்க, ரசவாதிங்க, இவங்களால மட்டுமே செய்யக் கூடியதாக இருந்த பாதரசத்தினால் செய்யப்பட்ட ரசமணிதான் அந்த மணி. திரவ உலோகமான பாதரசத்தை அதன் குணங்கள் கெட்டுபோவாம திடப் பொருளாக்கும் வித்தையை அந்த நாளிலேயே தமிழன் கற்று வெச்சிருந்தான். அதனிடம் இருப்பதாக நம்பப் பட்ட மருத்துவ குணங்களுக்காகத்தான் அதை முதலில் வெச்சிருந்தாங்க.. அடுத்ததாக மாந்திரீகம். கடைசியாகத்தானே ஔஷதப் பிரயோகம்?. இந்த சித்தாந்தங்கள் காலத்துக்குக் காலம் மாறக்கூடியவைதான். இன்றைய சித்தாந்தம் என்ன தெரியுமா?. எந்த விஷயத்துக்கும் மனுஷனை நம்பாதே கம்ப்யூட்டரை நம்பு. மருத்துவ சிகிச்சையிலும் கூட வியாதி நிர்ணயங்களை முக்காலும் கம்ப்யூட்டர் உபகரணங்கள்தானே செய்கின்றன?. நாளைக்கு கம்ப்யூட்டர் இடத்தில் வேற ஏதாவது ஒண்ணு வரலாம். மாற்றங்கள் மட்டுமே மாறாதவை..

மறுநாள் சாயரட்சை நெத்தி நிறைய குங்குமத்தோடும் சிவந்த கண்களோடும் ஆறுமுக பண்டாரம் தேடிக்கிட்டு சண்முகம் வீட்டுக்கே வந்து விட்டான். அவனுடைய திறந்த மார்பில் முசுமுசுன்னு ரோமம். முக்காலும் நரைத்துக் கிடந்த அதன் அடர்த்தியினூடே விபூதியும், குங்குமமும் கலந்திருந்தன. குப்பென்று சாராய நெடி சண்முகத்துக்கு குமட்டுது.

“ஏம்பா சம்முவம்! உன் புள்ளக்கி செய்வினைதான் செஞ்சிருக்காங்கப்போவ். ஒரு பொம்மனாட்டிதான் செஞ்சிருக்கா. செஞ்சி இன்னைக்கு இருவது நாளு ஆயிப் போச்சப்பா.”

“ எனக்கு அப்படி யாரும் எதிரிங்க இல்லையேய்யா. சரி..அதுக்கு இன்னா செய்யணும்?.” —பூசாரி அதுக்கு தேவையான பொருட்களை விரல்விட்டு சொல்ல ஆரம்பித்தான்.

“வெண்கடுகு, நாய்க்கடுகு, எலுமிச்சை பழம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கோழி-1, தீபத்துக்கு எண்ணை, செப்புத்தகடு, வெள்ளை துண்டு-1, எரநூறு சாராயம், அப்புறம் தட்சணை. கோழி கருப்பு சேவலா, வெடகுஞ்சா இருக்கோணும். இன்னைக்கி வாங்கி வெச்சிப்புடு. நாளைக்கு உச்சாடனத்தை ஆரம்பிச்சிட்றேன். இல்லே எல்லாத்தையும் நானே பார்த்துக்கறதுன்னா மொத்தமா ஆயிரம் ரூவாய வெட்டிப்புடு, எல்லாத்தையும் நானே வாங்கி, என் வூட்லியே வெச்சி செஞ்சிருக்கிற செய்வினையை ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்றேன். வெச்ச ராஸ்கோலு மேல திருப்பறதுன்னாலும் செஞ்சிபுடலாம். அன்னைக்கே அவ யாருன்னு அத்தாசு காட்டிப்புடும். நான் குடுக்கிற உச்சாடனத்தில ஆத்தாள அவ பல்லு வாயெல்லாம் எகிறிப்புடுமில்ல?.” —சண்முகத்துக்கு இதெல்லாம் உண்மையோ பொய்யோ, நிஜமோ, நாடகமோ?ன்னு இருந்துச்சி.. எப்படியோ எங்கொழந்தைக்கு நல்லா ஆயிட்டா போறும். வெச்சவங்க மேல திருப்பறதெல்லாம் வாணாம்பான்னு சொல்லி பணம் ஆயிரத்தை நீட்டினார். மூணு நாளா ராவும் பகலுமாக நெச்ச லுங்கி பீஸ்களுக்கு கிடைச்ச கூலியை பூசாரியுடைய ஒருநாள் வருவாயாக தாரை வார்த்தாச்சி.

“இன்னையில இருந்து மூணாம் நாளு பையன் எழுந்து நடப்பான்.”— பூசாரி அடிச்சி சொல்லிட்டுப் போனான். இது நடந்து ஒருவாரத்துக்கு மேல ஆச்சு. ஹும்! இன்னும் சாமிநாதன் பேசாத, நடக்காத, சாமிநாதனாகவே கிடக்கிறான். போய் ஆறுமுக பண்டாரத்தை கேட்கலாம்னா எங்கே மறுபடியும் இன்னொரு ஆயிரத்துக்கு அழும்பு வந்திடுமோன்னு தண்டம் ஆயிரத்தோட போவட்டும்னு அத்தோடு மறந்துட்டாரு. அத்துடன் மந்திரவாதிங்க கிட்ட பொல்லாப்பு வெச்சிக்கக் கூடாது.

சாமிநாதனுக்கு ரெண்டு கால்களும் மடங்கிக் கிடக்குது. புடிச்சி இழுத்து நீட்டிவெச்சா அப்படியே துவண்டு நிக்கிது. புள்ளைக்கு நோவுதோ என்னமோ தெரியல அழுவுறான். அவனால ஒரு சொல்லு கூடசொல்ல முடியல. அம்மாக்காரி புள்ளையைப் பார்த்துப் பார்த்து அழுத கண்ணும் சிந்திய மூக்குமா கிடக்கிறா. மறுநாள் காலையிலேயே பையன் ஜாதகத்தை கோயில் குருக்கள் கிட்ட கொண்டுபோயி காட்டினாரு. அவரு ஜாதகத்தை நல்லா அலசி பார்த்துட்டு, ரொம்ப நேரம் கணக்குப் போட்டாரு. “

“ஏன்டா ஷண்முகம்! பையனுக்கு இப்ப எட்டாமாதி திசை நடக்றதுடா. பையனுக்கு கண்டம் இருக்குடா. அதான் வாய கட்டிடுத்து. இன்னும் ஒரு மாசம் ஆனவுட்டு வா பார்க்கலாம்.”—–னு பூடகமா சொல்லி இன்னும் பீதியை கிளப்பி விட்டுட்டாரு. அடுத்த முயற்சியாக அவன் சொன்னான் இவன் சொன்னான்னு தேரடி தெருவுல கிளினிக் வெச்சிருந்த எம்.பி.பி.எஸ். டாக்டர்கிட்ட கொண்டு போனாங்க.

வசவசன்னு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முளைச்ச பிறகு புற்றீசல்கள் மாதிரி தன்னைப் பெற்றவர்களின் பெருமைக்காக, நாற்பது லட்சம், ஐம்பது லட்சம்னு நன்கொடை குடுத்துட்டு போயி ஜாலியாய் விளையாடிக் கொண்டே டாக்டருக்கு படிச்சிட்டு நேரா வைத்தியம் பார்க்கறேன்னு வந்த அளவற்ற பணக்கார டாக்டர்களில் இவரும் ஒருத்தரு. டாக்டர் என்பது பணக்கார குடும்பங்களின் ஸ்டேட்டஸ் ஸிம்பலாக ஆயிட்டு வருது..

சாமிநாதனின் வியாதியைப் பத்தி இவங்க சொன்னதையெல்லாம் கேட்டுட்டு, வரிசையா அட்டவணை போட்டு வெச்சிட்டு செய்யறாப்பல, கண்களைப் பிதுக்கி, நாக்கை இழுத்துப் பார்த்து, முதுகை தட்டிப் பார்த்து, வயிற்றை அமுக்கி, ஸ்டெத்தோஸ்கோப்பால் அங்கங்கே ஒத்தியெடுத்து, மேற்கொண்டு எதையுமே கேட்காமல் ஊசி போட்டுவிட்டு, மாத்திரை சீட்டு எழுதிக் கொடுத்து, நூத்து ஐம்பது ரூபாயை கறந்துக்கிட்டு நெக்ஸ்ட் என்றார்.

என் புள்ளைக்கு என்னா டாக்டர்?. என்று ஏடிச்சி கேட்டதற்கு, அவரு கடுப்பாயிட்டாரு. “என்னன்னு சொன்னா உனக்குப் புரியுமாய்யா?. என்ன செய்யணுமோ அத்த செஞ்சிருக்கேன் சரியா?. பையனுக்கு வீக்னஸ்தான்யா, டெய்லி பாலு, முட்டையெல்லாம், கொடு. நாளைக்கு வா. நெக்ஸ்ட்.”— அத்தோடு அவருடைய வாய் மூடிக்கிச்சு. அடுத்த கேள்வியை கேட்க அச்சமாக இருந்துச்சி, கடுகடுன்ற முகரை. அவங்க இப்படி மூஞ்சை தூக்கி வெச்சிக்கிறதுகூட நல்ல உத்திதான் போல. அடுத்தடுத்துன்னு ஏழெட்டு தடவைக்கு மேல நடந்தாங்களே ஒழிய புள்ள பொழைச்ச பாடில்லை. எள்ளு மூக்களவு முன்னேற்றமும் இல்லை. கடைசி வரைக்கும் இன்னா வியாதின்னு அந்த டாக்டரு கண்டுபிடிச்சாரோ, இல்லையோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். என்ன கேட்டும் அங்கிருந்து பதில் வரல. அறிவாளி, அறிவிலி, இந்த ரெண்டு தரத்தாருமே எப்பவும் அதிகம் பேசறதில்லை. அதில இது கெட்டியா, போலா? என்று யூகம் பண்றது ரொம்பக் கஷ்டம். இப்படி சொல்றதுக்கு வருத்தமாத்தான் இருக்கு. என்ன பண்றது நிஜம் அப்பிடி சுடுது. அத்தோட வெறுத்துப் போயி எதுத்த வூட்டு மாரி சொன்னாப்பல சத்தார் சாயபு கிட்ட ஓடினாங்க. சத்தார் பாய் பையனின் கையைப் புடிச்சி ரொம்ப நேரம் நாடி ஆராய்ச்சி பண்ணிப்புட்டு வாதநாடிதான் உச்சத்தில பேசுதுன்னு சொல்லிப்புட்டு மேலுக்குப் பூசி மஸாஜ் பண்றதுக்கு தைலமும், உள்ளுக்கு தேன்ல சாப்பிட பஸ்பம் பொட்டலங்களையும் கொடுத்தார். தினசரி ரெண்டு வேளை பத்து நாளைக்கு. கடும் பத்தியம். சுட்ட உப்பு, சுட்ட புளிதான் சேர்த்துக்கணும். அவுத்திக்கீரை, கருவாடு, கத்தரிக்காய் கொள்ளு ஆவாது. (எந்த காலத்தில கொள்ளு பிரதான பதார்த்தமா இருந்திச்சாம்?.) பருப்புத் துவையல் ஆகும்

அந்த வைத்தியம் ஜரூராக நடந்தது. பத்துநாளு போயி அடுத்த அஞ்சி நாளு மறுபத்தியமும் ஆச்சு. இதுக்குள்ள பையன் இளைச்சி பலவீனமா ஆயிட்டான். பேசலேன்னாலும் குரலெழுப்பவே நாடி இல்லை. ஆனால் நிலைமையில எந்த முன்னேற்றமும் ஏற்படல. பையன் கிட்ட போனாலே அந்த நாத்தமெடுத்த தைலத்தின் கப்பு முக்கை அறுக்குது. தின்னு முடிச்ச பஸ்பம் மறுபத்தியத்தையும் முடிச்ச பிற்பாடுதான் நல்லா வேலை செய்யும் போல, செய்ய ஆரம்பிச்சிட்டுது. ராத்திரியில இருந்து பையனுக்கு சீதபேதி புடுங்கிக்கிச்சி. குழந்தை அழுவுறான். எல்லா வைத்திய முறைகளையும் பார்த்தாச்சி. மேற்கொண்டு என்னசெய்யறதுன்னு தெரியாம அந்தக் குடும்பமே அழுதுக்கிட்டிருக்கு. இந்தக் கட்டத்திலதான் நான் அவங்களுக்கு உதவணும்னு நுழைஞ்சேன்.

“சண்முகம் சார்! எனக்கென்னவோ பையனுக்கு ஏற்பட்டிருக்கிறது மனப் பிராந்தின்னு படுது. என் சித்தப்பா ஒரு சைக்யாட்ரிஸ்ட். வாங்க அவர்கிட்ட போவலாம். காஞ்சிபுரம் அரசாங்க ஆஸ்பிட்டலில்தான் வேலை செய்யறாரு. அங்கியே போய் அவரை பார்க்கலாம்.”—- மறுநாள் காலையிலேயே புறப்பட்டு போயிட்டோம். சாமிநாதனையும், அவன் அம்மாவையும் வெளியில் பெஞ்சில் உட்கார வெச்சிட்டு நாங்க மட்டும் உள்ளே போனோம்..சித்தப்பா வழக்கம் போல ஒரு மாச தாடியுடன், சிரத்தையில்லாத உடையில் ஏனோதானோ என்று, நெத்தியில பட்டையடிச்சிக்கிட்டு இருந்தார். அவர் பாதி சித்தர். அவர்கிட்ட சாமிநாதன் விஷயத்தைப் பத்தி சொன்னேன். கேட்டுவிட்டு சண்முகத்திடம் “பையனின் அப்பாதானே நீ?. என்னாச்சின்னு விலாவாரியா சொல்லு.”

“கன்னிமாருங்க சந்திப்பாடு ஆயிப் போச்சி சாரு.” “என்னது கன்னிமாருங்க சந்திப்பாடா?.”

“அது தேவதைங்க சாரு. ஏழு கன்னிமாருங்க. சப்த கன்னிங்கன்னு சொல்றது. பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி,.”—சண்முகம் வாய்ப்பாடு ஒப்பிக்கிறாப்பல விரல்விட்டு எண்ணிக்கொண்டே ஒப்புவித்தார்.

“அவங்க நடு ராத்திரியில நடமாடுவாங்க. அப்ப நாம எதிர்படக்கூடாது சாரு, எதிர் பட்டுட்டா ஆளை அறைஞ்சிப்புடும். பொழைக்கிறது கஷ்டம்னு சொல்லுவாங்க. எங்க ஊரு ஈஸ்வரன் கோயிலாண்ட இருந்து எங்க வுட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நாராசந்து வழியா அப்பப்ப நடுராத்திரியில கன்னிமாருங்க போறாங்க சாரு. போயி எங்க தோட்டத்து கிணத்தில நீராடிட்டு போறாங்களாம்.”—- சித்தப்பா சிரித்தார்.

எனக்கும் ஆச்சரியம். அட! இதுக்குப் பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்குதுன்னு எனக்கே இப்பத்தான தெரியுது?.

“நீ பார்த்திருக்கியா?.”

“இல்லை சாரு. ஆனா இது பொய்யில்லை. எங்க ஊருல ஏழெட்டு பேரு பார்த்திருக்காங்க. அகல் விளக்கு தீபம் மாதிரி ஏழு தீபங்கள், ஈஸ்வரன் கோயில் வாசல்ல இருந்து அந்தரத்திலேயே மிதந்துக் கிட்டு தெருவை கிராஸ் பண்ணிகிட்டு போவுதுங்களாம். போயி நாரா சந்துல நுழைஞ்சி, எங்க கிணத்தாண்ட மறைஞ்சிப் போவுதுங்களாம். அதனால எப்பவும் ராத்திரி பத்து மணிக்கு மேலயே யாரும் அந்த சந்து வழியா போவமாட்டாங்க சாரு.”

“போனா என்னாவும்?.”

“போன வருசம் எங்க தெரு கைலாச ஆச்சாரி நடுராத்திரி சந்து பக்கமா ஒண்ணுக்கு போயிருக்கான். அப்போ கன்னிங்க சந்திப்பாடு ஆயிப்போயி, ஜன்னிகண்டு ஒரு வாரம் குணப்பிறட்டா பினாத்திக்கிட்டு கெடந்தான். அவ்வளவுதான் எட்டாம் நாளு போய் சேர்ந்துட்டான் சாரு. கன்னிமாருங்க அம்மாம் உக்கிரம். ஐயோ! அதிலபோயி எங்கொழந்தை மாட்டிக்கிட்டானே”—அவர் தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சிட்டார்.

“சரீ இந்த கன்னிமாருங்க போறது வர்றது, ஏழு தீபங்கள் அந்தரத்தில நகர்றது, போயி உங்க கிணத்தில குளிக்கிறது இதெல்லாம் பையனுக்குத் தெரியுமா?.

“ தெரியும் சாரு. ஒரு நாளு பையன் கன்னிங்க நம்ம கெணத்தில ஏம்பா குளிக்க வர்றாங்க? ன்னு கேட்டான் சாரு.”

“சரிப்பா. பையனுக்கு காலுங்க இழுத்துக்கிச்சே, அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு சொல்லு.”—சண்முகம் சற்று நேரம் யோசித்து விட்டு.

“அன்னைக்கு ஆடி கிருத்திகை சாரு. சாயங்காலம் புள்ள ஸ்கூல்ல இருந்து வந்தப்புறந்தான் சாமிக்கு படையல் போட்டோம். கிணத்து மேல காக்காவுக்கு படையல் சோத்தை வைக்க எடுத்தும் போனவன், ரொம்ப நேரமாய் திரும்பி வரல. கூப்பிட்டதுக்கும் பதில் இல்லை. போய் பார்த்தா…?, அங்க பையன் நாக்கை கடிச்சிக்கிட்டு, ரெண்டு கண்ணையும் உருட்டி முறைச்சிக்கிட்டு நிக்கிறான். மேல்மூச்சு எரைக்குது. கிணத்தை சுத்தி கட்டுவேலைக்காக போட்டு வெச்சிருந்த பெரிய பெரிய கல்லுங்களை துக்கி கிணத்துல போட்றான். போயி குழந்தையை புடிச்சேன். புள்ள சரியா இல்ல. விறைச்சிக்கிட்டு நிக்கிது. கெணறு வாணாம் இடி..இடி.,…கெணத்தை உடைன்னு முணுமுணுன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். கெட்டியா புடிச்சேன் அப்படியே மயக்கமா சாஞ்சிட்டான். அப்புறம் அவனை தூக்கிம் போயி படுக்கையில போட்டோம். குழந்தை எதையோ பார்த்து பயந்திருக்கான்னு முருகனை கும்பிட்டு, நெத்தியில துன்னூரு பூசி, நானும் என் சம்சாரமும் கந்தர் சஷ்டி கவசத்தை படிச்சோம். அப்பத்தில இருந்துதான் சாரு புள்ளைக்கு காலு வரல. கொஞ்சநேரத்துக்கெல்லாம் பேச்சும் போச்சி. கேட்டுவிட்டு சித்தப்பா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.

“சரி இதுவரைக்கும் என்னென்ன வைத்தியம்பண்ணியிருக்கீங்க?.”—இந்த கேள்விக்கு பதில்சொல்லும்போதே சண்முகத்துக்கு துக்கம் பொங்கியது.

“ஒண்ணு ரெண்டா இல்ல சாரு. யார் யார் என்னன்ன சொன்னாங்களோ, அத்தினியும் செஞ்சேன். ஆறுமுக பண்டாரங்கிட்ட வெளக்கு வெச்சி பாருன்னு சொன்னாங்க. பார்த்தேன். அவன் செய்வினை செஞ்சிருக்கு எடுக்கிறேன்னான். அதுக்கு செலவு செஞ்சேன். குறி கேக்கச் சொன்னாங்கன்னு எரையுர் பூவாத்தா கிழவி கிட்ட போனேன். அவ தெய்வகுத்தம் னு சொன்னா. பச்சம்மாளுக்கு கோழி அறத்து பொங்கலிட்டு படைச்சேன், குருக்கள் அய்யரு கிட்ட ஜோஸியம் கேட்டேன். அவரு என்னன்னமோ சொல்லி அன்னைக்கெல்லாம் அழுதுக்கிட்டு கெடந்தோம். ஒருத்தன் இவன் வியாதிக்கு நாட்டு மருந்துதான் ஒஸ்தின்னு சொன்னான். சத்தார் சாயபுகிட்ட பதினஞ்சி நாளு நாட்டு வைத்தியம் பார்த்தேன், ஒண்ணுத்துக்கும் புண்ணியமில்ல. உள்ளூர்ல எம்.பி.பி.எஸ். டாக்டர் கிட்ட பாரு கைராசியானவர்னு சொன்னாங்க. பத்து நாளுக்கு மேல பார்த்தேன். பணந்தான் கரைஞ்சது. அய்யா…! . ஐயோ! இதுக்கு மேல நானு எங்க போறதுன்னு தெரியலியே. ஐயய்யோ! எம்புள்ளய கைசோர வுட்ருவனாட்டம் இருக்குதே. எப்படியாவது என் ஒத்தை புள்ளைய காப்பாத்தி குடுங்கய்யா.”— சண்முகம் தடாலென்று சரிந்து என் சித்தப்பா கால்களைப் பற்றிக் கொண்டு கதறினார். நான் அவரை விலக்கி விட்டேன்.

“சரி போயி உம்பையனை கொண்டாந்து இங்க ஸ்டுல்ல உட்கார வெச்சிட்டு நீங்கள்லாம் வெளியே இருங்க.”—- உடனே பையனை தூக்கி வந்து ஸ்டூலில் உட்கார வெச்சிட்டு வெளியே போயிட்டோம். சண்முகத்துக்கு இன்னும் அழுகை நிற்க வில்லை. பார்த்துட்டு அவர் பொண்டாட்டியும் அழுவுது. அவங்களுக்கு தைரியம் சொல்ல ஆரம்பிச்சேன். இருபது நிமிஷம் கழிச்சி எங்களை சித்தப்பா கூப்பிட்டார்.

“ உன் பையனுக்கு கன்னிங்க சந்திப்பாடுதான் ஆயிப்போச்சிப்பா. கன்வெர்ஷன் ஹிஸ்டீரியான்னு பேரு. அந்த ஏழு கன்னிங்களும் இனிமே உங்க வீட்டு கிணத்துப் பக்கமே வராம ஒழிச்சிக் கட்டணும் புரியுதா?. அதுக்கு மந்திரவாதியை வெச்சி மந்திரக்கட்டு கட்டிடுங்க. அப்புறம் பாரு அடுத்த நாளே பையன் தன்னால எழுந்து நடப்பான், பேச்சும் வந்திடும்.”—சொல்லிவிட்டு பையன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“ஐயா! என்ன சொல்றீங்….”

“உஷ்! வேற பேச்சில்லை. சொன்னதைச் செய் போ.”—-சண்முகம் விழிக்க, நான் அமைதியாய் இருந்தேன்..

மறுநாளே டாக்டர் அனுப்பினார்னு மந்திரவாதி ஒருத்தன் வந்து நின்றான்.. ஆளு கருப்பா கழுத்தில கருகமணி மாலை. அதில டாலர் மாதிரி தாயத்து தொங்கிக்கிட்டிருந்துச்சி. கண்கள் ரெண்டும் கோவைப் பழம் மாதிரி சிவந்து கிடக்க, பீடியில் கருத்துப் போன உதடுகள். வித்தியாசமா கண்ல மை இட்டிருந்தான். நெத்தியில பெருசா குங்குமப் பொட்டு. ஒரு கையில செம்பு காப்பு.“

“தோ பாருபா! டாக்டர் ஐயா அல்லாத்தையும் சொல்லிப்புட்டாரு. ஒண்ணுத்துக்கும் பயப்படாத. நான் செய்யப் போற வேலையில ஏழு கன்னிமாருங்க மட்டுமில்ல காத்து கருப்பு கூட இந்த ஏரியா பக்கமே தலை காட்டாது தெர்தா?.. கட்டு கட்டிப்புட்றேன். நான் யாரு தெரியுமில்ல எம்மேல ஆத்தா எறங்கியிருக்கிறாய்யா. அம்மாவுக்கு மிஞ்சின பவுரு இந்த லோகத்தில கீதா?. அவ லோகமாதா. அம்மா… தாயே.. பராசக்தி!…அகிலாண்ட நாயகீ!..பூவாடைக்காரீ!…”—. இரண்டு கைகளையும் மேலே தூக்கி உரக்க சத்தம் போட்டு கும்பிட்டான். அக்குளில் அடை அடையாய் அழுக்குகள். ”இந்தாபா இந்த பூஜை சாமான்களை வாங்கியாந்து வையி அப்பால வர்றேன்..”—-ஒரு லிஸ்ட்டை குடுத்துட்டு கிளம்பிட்டான்.

மறுநாளு மதியம் போல வந்தான். லிஸ்ட்படி பொருட்கள் தயாராக இருந்தன. வீட்டுக்குள்ள ஹால்ல உட்கார்ந்து தரையில கட்டம் வரைஞ்சி அதில கலசத்தை நிறுத்தினான். மேலே ஒரு தேங்காய் செருகப் பட்டது. காலையிலேயே குளிச்சிருந்தாலும் இப்ப ஒருதடவை சாமிநாதனை குளிப்பாட்டி, கலசத்துக்கு எதிரில் பிரதானமாக உட்கார வெச்சாங்க. கலசத்துக்கு தூபதீபம் காட்டி, பக்கத்தில நட்சத்திரம் மாதிரி வரைந்து அதில நசி மசி ன்னு ஏதேதோ எழுதப்பட்ட செப்புத்தகடு, வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டு, உடுக்கையடிக்க ஆரம்பிச்சான். ராகத்தோட மந்திர உச்சாடனம் ஆரம்பிச்சாச்சி. தெரு ஜனங்களும் வந்து வேடிக்கை பார்க்குதுங்க.

“ஓம் அவ்வாறே வெள்ளி அகிலாண்டத்தை ஆக்கியதோர் உவ்வா. ஒரு வெள்ளி ஓங்காரமாகிய இடப்பொருளை மழுவாதும் பதினாறும்…… ”

மந்திர உச்சாடனம் தொடர்ச்சியா அரைமணி நேரம் நடந்திச்சி. அடுத்ததாக படையலில் இருந்த உரித்த தேங்காயை எடுத்தான் அவ்வளவுதான் அவன் உடம்பு ஒரு மாதிரி முறுக்கியது. கண்களை உருட்டி, பற்களை நறநறவென்று கடித்தான். பார்க்க பயமாய் இருந்திச்சி. புஸ் புஸ்ஸுன்னு பெருமூச்சு விட்டான். உ.உம்.ம்..ஆய்…ஆய்..னு ஆவேசமா கத்தியபடியே தேங்காயை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினான். ஓடி சந்து முனையில் ஓங்கி சூரைத் தேங்காய் விட்டான். அப்படியே மயங்கி சரிந்தான். சுற்றியிருந்தவங்க ஓடிப்போயி புடிச்சி படுக்க வெச்சாங்க. அப்புறம் விழிப்பு வந்தப்புறம் எழுந்து வந்து கற்பூரம் ஏத்தி கலசத்துக்கும், யந்திர தகடுக்கும் காட்டிவிட்டு, அன்னை பராசக்திக்கு இருக்கிற அத்தனை பெயர்களையும் முணுமுணுப்பாய் உச்சரித்தபடி கலசத்தில இருந்த நீரை வீடு முழுக்கவும், பையன் மேலேயும் தெளித்து விட்டு மிச்சத்தை கிணற்றில் ஊற்றினான். சாமிநாதன் முதற்கொண்டு எல்லோரும் பார்க்க யந்திர தகட்டை கிணற்றின் உள்பக்க சுவரில் ஆணி வெச்சி அறைஞ்சான். “அவ்வளவுதாம்பா, எனக்கு உத்தரவு குடு. இத்தோட பத்து வருசத்துக்கு ஒரு காத்து கருப்பு, கன்னிமாருங்க எதுவும் இந்த ஏரியா பக்கமே தலைகாட்டாது. ஸ்ட்ராங்கா கட்டு கட்டியாச்சி. தெர்தா?. தைரியமா நடுராத்திரியில கூட இந்த சந்துல போலாம் வரலாம்.”—- கிளம்பும்போது ரகசியமாய் என்னைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்து விட்டு போனான். நான் சித்தப்பாவை நினைத்துக் கொண்டேன்.

“சூர்யா! இந்தப் பையனை குணப்படுத்த ரெண்டு வழிகள் இருக்கு. ஒண்ணு அவனுக்கு ஒரு மூணு நாலு மாசத்துக்காவது தினசரி மருந்து குடுத்து வாரா வாரம் கவுன்ஸிலிங் தரணும். சப்த கன்னிங்கன்றது மனுஷங்களோட நம்பிக்கைங்கடா, நிஜம் இல்லை. அப்புறம் ஏழு தீபங்கள் அந்தரத்தில போறதெல்லாம் மனசுல இருக்கிற கன்னிமாருங்க பத்தின நம்பிக்கை ஏற்படுத்தற மாயத் தோற்றம்டா, அதுக்கு ஹாலுஸினேஷன்னு பேரு. இத்தை சொன்னா பையன் புரிஞ்சிப்பானா?, வயசு பத்தாது. ஸோ பையன் வழியிலேயே போவணும். அவன் எந்த கன்னிமாருங்க தன் வீட்டு கிணத்தில குளிக்கக் கூடாதுன்னு நினைக்கிறானோ, அந்த கன்னிமாருங்க இந்த ஏரியா பக்கமே வராதபடிக்கு மாந்திரீகத்தில கட்டு கட்டியாச்சின்னு அவனை நம்ப வெச்சிடணும் அவ்வளவுதான்.”

இப்போதெல்லாம் சாமிநாதன் மத்த பிள்ளைங்களோடு பேச்சும் சிரிப்புமா ஸ்கூலுக்கு போறதை பாக்கறப்போ இதுக்கு சூத்திரதாரியான என் சித்தப்பாவைத்தான் நினைத்துக் கொள்கிறேன். கூடவே பகுத்தறிவு இல்லாமையால் பலவாறாக ஏமாந்து விட்ட சண்முகத்தையும்.

நன்றி—–`தாமரை’- மார்ச் 2017 இதழ்

,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *