கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,909 
 
 

காரைக்கால்-புதுச்சேரி பேருந்தில் ஏறியதுமே திகைப்பு. எங்கும் தலைகள்.! உட்கார இடம் இருககிறதா என்று அலசி வர….இருவர் இருக்கையில் ஒருத்தி.

‘அட !’ என்று ஆச்சாரியப்படும் போதுதான் அவளும் என்னைப் பார்த்தாள்.

“வா… வா உட்கார் !” மலர்;ச்சியாய் அழைத்து நன்றாக நகர்ந்து இடம் விட்டாள்.

அமர்ந்தேன்.

சஞ்சனா ! இவள் என் நண்பனின் தங்கை. நானும் இவள் அண்ணன் சங்கரும் முன்னால் படித்துக் கொண்டே போக…. இரண்டு வருடங்கள் தள்ளி இவள் பின்னால் எங்களைத் துரத்திக்கொண்டே வந்தாள். நான் அடுத்த ஊரென்றாலும் படித்த காலங்கள் வரை நானும் இவள் அண்ணனும் இணைபிரியாத தோழர்கள். அதனால்…. படிப்பு முடியும் வரை காலை மாலை அவன் வீட்டிற்குச் செல்லாமல் நான் வீடு திரும்பியது கிடையாது. பெரும்பாலும் படிப்பும் அவன் வீட்டில்தான் நாங்கள் சேர்ந்து படிப்பது. இதனால் ஏறக்குறைய நான் அந்த குடும்பத்தில் ஒருவன். இப்போதும் அப்படித்தானென்றாலும் வேலைக் கிடைத்து குடும்பம் குட்டி ஆனபிறகு போக்குவரத்து கொஞ்சம் குறைச்சல்.

நானும் சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கலாம். காரணம்…..அவள் படித்து முடித்தவுடன் சென்னையில் வேலை. தீபாவளி, பொங்கல், விடுப்பு விசேசங்களுக்கு அவள் வந்தாலும் எங்களுக்குள் சந்திப்பில்லை. நான் செல்லும் போது அவள் இருப்பதில்லை.

“எப்படி இருக்கே வினோ ? ” ஆர்வமாய் அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்.

“நல்லா இருக்கேன். உன்னைப் பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். எதிர்பாராத சந்திப்பு.”

“நானும் விடுமுறையில வீட்டுக்கு வந்தால் அம்மா, அண்ணன்கிட்ட உன்னை விசாரிப்பேன். இப்போ சந்திச்சதுல எனக்கும் மகிழ்ச்சி. இன்னும் கல்லூரியில் படிச்ச பையன் மாதிரியே இருக்கே.!” ஆச்சரியப்பட்டாள்.

“நீயும்தான். ஆனா கொஞ்சம் உடல் பூசல்!” என்றேன்.

அவள் முகத்தில் கொஞ்சம் செம்மை.

“உன்னைப் பார்த்து பேசனும்ன்னு ரொம்ப நாளாய் எனக்குத் தேடல். இன்னைக்கு மாட்டினே!.” எனக்குச் சந்தர்;ப்பத்தை விட மனமில்லை.

“அப்படியா ?!” அவள் கண்களை அகல விரித்தாள்.

“ஆமாம். நீ ஏன் திருமணம் வேணாம்ன்னு நிக்கிறே ? ” சுற்றி வலைக்காமல் கேட்டேன்.

“யார் சொன்னா ?”

“அம்மா.”

“உன்கிட்டேயும் புலம்பிட்டாங்களா ?!”

“அது புலம்பலில்லே சஞ்சு. கவலை.! பெத்தப் புள்ளைங்கள்ல நீ மட்டும் அதுவும் பெண் திருமணமாகாமலிருக்கிற வருத்தம். பெத்த மனசு என்ன பாடுபடும் தெரியுமா ? சரி. விடு உனக்கு ஏன் திருமணத்து மேல விருப்பமில்லே.? ”

“பிடிக்கலை.”

“பிடிக்கலைன்னா ?”

“பிடிக்கலை !” அழுத்தமாகச் சொன்னாள்.

“அதுக்குக் காரணம் இருக்கும் சொல்லு ? ”

“ஆண் – பெண் தடையில்லா தாம்பத்தியத்துக்காகத்தான் திருமணம் பண்ணிக்கிறாங்க என்பது என் அபிப்பிராயம். செக்ஸ், பிள்ளைக் குட்டி. என்ன வாழ்க்கை!? ” முகம் சுளித்தாள்.
“தப்பு சஞ்சானா. நீ வாழ்க்கையைத் தப்பா புரிஞ்சிருக்கே. தாம்பத்தியமே வாழ்க்கைக் கிடையாது. அது வாழ்க்கையில ஒரு அங்கம். சிற்றின்பம்.”

“அந்த சிற்றின்பம்தான் வாழ்க்கையின் முதுகெலும்பு. நடைமுறை உண்மை சரியா ?”

நான் யோசித்து….. “சரி” மெல்ல சொலல்லி தலையாட்டினேன்.

“அதான் பிடிக்கலை !” மறுபடியும் அவள் முகம் சிறுத்து வெறுப்பை உமிழ்ந்தாள்.

“தாம்பத்தியத்தைப் பத்தி உன் மனசுல தவறான விதை விழுந்திருக்கு. அதை விதைச்சது யார் ? நீயா ?.. இல்லே, உன் விடுதி தோழிங்களா ? ”

“யாருமில்லே. படிக்கிறது, பார்க்கிறது, கேட்கிறது… எல்லாமே.!”

“செக்ஸ் அசிங்கமில்லே. வாழ்க்கையின் பலம். இனவிருத்தி பாலம். அடுத்த தலைமுறைக்கான வித்து. இந்த வித்து ஒருத்தரை ஒருத்தர் இணைக்குது. குடும்பமாக்குது. அன்பை இன்னும் பரவலாக்குது.”

“என்ன உபதேசமா ? குடும்பம்ன்னா சிக்கல்ப்பா !”

“அதாவது….. நீ கஷ்டம் பார்த்து பயப்படுறே. சிக்கல் கண்டு ஒதுங்குறே? உண்மையைச் செல்லப்போனா பிரச்சனைகளைச் சந்திக்க தைரியமில்லாத கோழையாய் நீ இருக்கே சரியா சஞ்சனா ?”

“அப்படியெல்லாம் இல்லே. உனக்குத் தெரியும். எனக்கு எதிலும் பயம் கெடையாது.”

“அப்புறம் எதுக்குத் தயக்கம்.? நீ தனியா வாழ்ந்தாலும், தோப்பாய் வாழ்ந்தாலும் கஷ்டம் நஷ்டம் தவிர்க்க முடியாதது. அப்படி இருக்கும்போது தோப்பாய் வாழலாமே. இந்த மண்ணுக்கு வாரிசைக் கொடுக்கலாமே. இப்போ உன் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அத்தனைப் பேருக்கும் வருத்தத்தைக் கொடுக்கிறே. அடுத்து நீ இந்த மண்ணுக்கு ஒரு வாரிசைக் கொடுக்காமலிருக்கே. பிறந்த தாய் வயிற்றுக்கும் மண்ணுக்கும் இதுதான் நீ செய்யிற பிரதி உபகாரமா ? ”

“புருசன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை வரும்ப்பா.”

“இப்போ மட்டும் நீ மத்தவங்களோட சண்டை, வலி, வருத்தம் இல்லாமலா வாழறே.? விட்டுக்கொடுத்து வாழு. வாழ்க்கையில விட்டுக்கொடுப்பு இல்லாம வாழவே முடியாது. நான் சங்கரை மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்றேன்.”

“வேணாம். பொறு வினோத். நான் யோசிக்கனும்.”

“வயசு 32 ஆகுது. இன்னும் யோசனைன்னா.. இளமைப் போகும். பெத்த வயிற்றைக் குளிர வைச்சு நாட்டுக்குப் புத்திசாலிப் புள்ளைங்களைப் பெத்துக் கொடு.”

“ஏன் அது மக்காய் பிறந்து மண்ணுக்குப் பாரமாகக் கூடாதா ? ”

“நீ எல்லாத்தையும் தப்புத் தப்பாவே யோசிக்கிறே.! புத்திசாலி பெத்தப் புள்ளைங்க புத்திசாலியாத்தான் இருக்கும். நீ, உன் குடும்பம் மொத்தமுமே படிச்ச புத்திசாலிங்க. அந்த திசு அப்படி பொறக்க வைக்காது. மேலும் குழந்தைங்க எடுப்பார் கைப்பிள்ளைங்க. வளர்வதைப் போலத்தான் வாழும். நீ பொறுப்பாய் வளர்த்து நாட்டுக்கும் உனக்கும் நல்லது கொடுக்கலாமே !?.”

சஞ்சனா முகத்தில் சட்டென்று யோசனைக் கோடுகள். மௌனம்.

“என்ன யோசனை ? ”

“………….பார்க்கலாம். !”

“இன்னும் அரை மனசாய் இருக்கே. ரொம்ப குழம்பாதே தெளியவிடு.”

“நீ குழப்பிட்டே. சரி. அந்தப் பேச்சை விடு. நீ எங்கே போறே வினோத்?”

“விழுப்புரம்.”

“ஏன் ? ”

“அடுத்த மாதம் என் புத்தகம் ஒன்னு வெளி வருது. அதுக்காகப் போறேன்.”

“ஆமாம் நீ கதை எழுதறவனில்லே. ?!” ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“ஆமாம். ஆயிரம் சிறுகதைகள், அம்பது நாவல்கள் பிரசுரமாகிருக்கு. இருபது புத்தகங்கள் வந்திருக்கு. இது இருபத்தி ஒன்னு. நீ எங்கே போறே சஞ்சு? ”

“எம்ஃபில் பண்றேன். அண்ணாமலைப் பல்கலைகழத்துல இன்னைக்குச் செமினார்.”

“வேலை. ? ”

“அதுவும் உண்டு. ……….அப்புறம் எனக்கு நம்ம ஊர் கல்லுரியிலேயே வேலை கிடைச்சுடுச்சு. ஒரு மாசமாய் வீட்டுல அண்ணன் அம்மாவோடதான் இருக்கேன். நீதான் வீட்டுக்கு அடிக்கடி வர்றதில்லே. குடும்பமானபிறகு அப்படியெல்லாம் வர்றதில்லே முடிவா ?”

“அப்படியெல்லாம் இல்லே. வேலை தொந்தரவு. நினைச்சால் வருவேன்.”

“ஆனா… நினைக்க முடியலை அப்படித்தானே ? ”

“மன்னிச்சுக்கோ எழுத்துப்பணி.” என்றேன்.

சரியாய் சிதம்பரத்தில் பேருந்து நிற்க….. அவள் விடைபெற்றாள்.

மறுநாளுக்கும் மறுநாள் நான் சங்கர் வீட்டைஅடைந்தபோது சஞ்சனா சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

என் தலையைப் பார்த்ததும் “வாவா..” மலர்ச்சியாய் வரவேற்றாள்.

வீட்டில் எவருமில்லாத அறிகுறி.

“சங்கர், அம்மா ? ” சுற்றும் முற்றும் பார்த்தேன்.

“யாருமில்லே. நான் மட்டும்தான். எல்லாரும் ஒரு திருமணத்துக்குப் போயிருக்காங்க. இப்போ திரும்புவாங்க. நான் சொன்னதுக்காக வீட்டுக்கு வந்தியா ? ”

“அப்படியெல்லாமில்லே. முக்கியமா அண்ணன் அம்மாவைப் பார்த்து உனக்கு மாப்பிள்ளைத் தேடச் சொல்ல வந்தேன்.”

“தேவை இல்லே.”

“என்ன உன் முடிவுல மாத்தமில்லையா ?!”

“மாறியாச்சு.”

“அப்போ மாப்பிள்ளை தயாரா ? ”

“தயார்.”

“யார் ? ”

“நீ..!”

“ஏய்…!!” எனக்குள் இடி. ஏகப்பட்ட அதிர்ச்சி.

“என்ன உளர்றே ?!!!!”

“நான் ஒன்னும் உளறலை வினோ. உனக்கு திருமணம் முடிஞ்சு ரெண்டு குழந்தைங்க இருக்கு. ஒன்னாம் வகுப்பு, மூணாம் வகுப்பு படிக்கிறாங்க. மனைவி காலமாகி ஒரு வருசமாகியும் புள்ளைங்களுக்காக மறுமணம் வேணாம்ன்னு நிக்கிறே, கஷ்டப்படுறே. எனக்கும் உன்னோடு சேர்ந்து கஷ்டப்பட ஆசை. உன்னோட எனக்கு இன்னும் ரெண்டு புத்திசாலிப் புள்ளைங்க பெத்துக்க விருப்பம். நான்…. அம்மா, அண்ணன்கிட்டே எல்லாம் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் தான் உனக்கு மனைவி. மாத்தமில்லே. நீ மாறலைன்னா நானும் மாறலை.” அதிரடியாய் சொல்லி ஆழமாகப் பார்த்தாள்.

எனக்குத் தலையைச் சுற்றியது.

“ஆமாம்டா மாப்பிள்ளே !” வாசலில் சங்கர் குரல் அட்டகாசமாய்க் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.

சங்கர்,அவன் மனைவி, மகள், அவன் அம்மா என்று மொத்த குடும்பமுமே மலர்ச்சியாய் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *