கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 10,393 
 
 

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கூற்று வழக்கத்தில் உண்டு. அதுபோலத்தான் இந்த உலகில் வாழும் எந்த ஒரு உயிரினமும் இயற்கையோடு இணைந்த தன் சூழலை சுற்றுப்புறத்தை எண்ணி வியக்காமல் இருப்பதற்கு எந்த ஒரு விஷயமும் தடையாக இருப்பதில்லை. அவ்வாறாக பார்ப்போரை வியக்க வைக்கும் சூழலுள்ள ஒரு இடம்தான் அந்த கோவை மலை. இந்தியத் துணை கண்டத்தின் மேற்கு திசையில் வடக்கிருந்து தெற்கு நோக்கி தொடர்ச்சியாக வரும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் தொட்டும் தொடாமலும் ஒட்டி வரும் மலை தான் இந்த கோவை மலை.

அம்மலையைச் சுற்றியுள்ள சிறுசிறு குன்றுகள் மறம் போர்த்திய படை வீரர்களைப் போல உள்ளதாலும் அளவில் தனக்கு நிகராக உள்ள சிறு மலைகள் அவையமைச்சர்களைப் போல உள்ளதாலும் தன்னைச் சுற்றியுள்ள சிறு கிராமங்களில் வாழும் குடிமக்களைப் பெற்றுள்ளதாலும் கோட்டையைப் போல உச்சியில் ஒரு முருகன் கோவிலைக் கொண்டுள்ளதாலும் இந்த கோவை மலையை இராஜகம்பீரத்துடன் ஒரு அரசனைப் போல பார்ப்பதில் தவறேதுமில்லை.

நாகரீகம் காலம் செல்லச் செல்ல மெதுவாக வளர்வது போல அந்தந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் காலம் செல்லச் செல்ல வதந்தி, புரளி, கட்டுக்கதை போன்றவற்றால் மருவி வருகிறது. அவ்வாறு கருத்துக்களால் மாற்றம் பெற்றாலும் பெயரளவில் மாற்றம் பெறாது “கோவை மலை” என்ற பெயரை இன்றளவும் தாங்கி நிற்கிறது இந்த மலை. கோயம்புத்தூர் ஜில்லாவிற்கு அடையாளமாக இருப்பதால் தான் அம்மலைக்கு கோவை மலை எனப் பெயர் என்று பூர்வீகமாக் அங்கு வாழும் மக்கள் வதந்தியையும் படித்த ஆன்றோரும் சான்றோரும் ‘கோ’ என்றால் கடவுள் என்றும் அவர் வீற்றிருக்கும் அவைதான் அம்மலை என்பதால் கோ-அவை = கோவை மலை என்ற புரளியையும் ஆன்மீகவாதிகளும் சாமியார்களும் ‘முருகப் பெருமான் தன் தந்தையுடன் மீண்டும் சண்டையிட்டு வந்து அமர்ந்த மலையாகையால் இது கோப மலையாகிப் பின் கோவ மலை என்றாகி கோவை மலை எனத் திரிந்தது’ என்ற கட்டுக்கதைகளும் காலத்தோடு இன்றளவும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இம்மலையின் அடிவாரத்திலும் ஆங்காங்கு மலைக்கு மேலேயும் படர்ந்து வளர்ந்துள்ள கோவைக் கொடிகளின் காரணமாகவே “கோவை மலை” என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது. கரும்பச்சை நிறத்தில் போர்வை போர்த்தியது போல் அடர்ந்து வளர்ந்துள்ள கோவை இலைகளும் அதன்மீது ஆங்காங்கே பகல் நேரம் காணும் வெண்ணிற விண்மீன்களைப் போன்று ஐந்து அல்லது ஆறு இதழ்களைக் கொண்ட சிறு பூக்களும் அந்தரத்தில் தொங்கும் கோவில் மணிகளைப் போலக் கொடியுடன் பிணைந்த கரும்பச்சைக் கோவைக்காய்களும் மஞ்சள் கலந்த சிவப்புடன் தோன்றும் அரைகுறையாய் பழுத்த பழங்களும் கண்களைக் கவரும் செம்மையில் முழுதாய்ச் சிவந்த பழங்களும் அவற்றைக் கொத்தி ருசி பார்த்து உண்ண சிறகடித்துப் பறந்து வரும் கிளிகளும் என அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கே பெற்று காண்பவர் மனங்களைக் கலங்கடிக்கச் செய்துவிடும் இந்த கோவை மலை.

இது மட்டுமா, சில சமயம் தூரத்தில் இருந்து காணும் போது பச்சை நிறமானது கோவைக்கொடி இலையின் புறமா அல்லது கிளியின் உடம்பா ? என்றும் சிவப்பு நிறமானது பழுத்த கோவைப் பழமா அல்லது அதை உண்ண வரும் கிளியின் அலகா ? என்றும் வெண்மை நிறமானது அலர்ந்திருக்கும் கோவைப்பூவின் இதழா அல்லது பறவையின் எச்சமா ? என்பன போன்ற மாயைகளும் தோன்றும். மலை உச்சியில் கோவில் அதனை ஒட்டி சிறு ஓடை பசுமை போர்த்திய கோவைக்கொடி செடி மரம் புள் விலங்கினம் என அனைத்தையும் ஒன்றாய் பெற்று கவின்மிகு இயற்கைக்கு அழகைக் கூட்டி இருக்கும் இந்த கோவை மலையைக் காணும் நேரம் கண் இமைக்கும் நொடிப்பொழுதும் இயற்கை அழகை இரசிப்பதற்கு இடையூறாகத் தோன்றும்.

மனிதன் இப்பூமியில் கால் பதித்த எந்தவொரு இடமும் முன்புபோல் இருந்த இயற்கை அழகையும் சூழலையும் இன்று வரை அவை பெற்றிருப்பதில்லை. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மனித குலத்தை வளர்ச்சிப் பாதையில் இழுத்துச் செல்கிறோம் என்ற பெயரில் அவற்றை அழித்தொழித்ததே மிச்சம். இயற்கை வளங்கள் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அழிந்து கொண்டு வந்தாலும் அதன் இழப்பீட்டு வேகம் அசுர வேகத்தை தொட ஆரம்பித்தது 1854 ஆம் ஆண்டில் மேலை நாடுகளில் ஏற்பட்ட ‘தொழிற்புரட்சி’க்கு பின்னரே என்ப்பது நிதர்சன உண்மை. இக்கதை நடந்த காலமானது தொழிற்புரட்சி நடைபெற்ற காலத்திற்கு முன்னரும் ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னரும் நடைபெற்றதாகையால் அந்நேரத்தில் கோவை மலையானது தன் அரிய செல்வமான இயற்கை வளங்களை கோழிச் சிறகடியில் தஞ்சமடைந்த குஞ்சுகளைப் போல தன்னகத்தே கொண்டிருந்தது.

இத்தகைய மலையிலுள்ள கோவைக் கொடியில் பழுத்திருந்த பழங்களை ஊர்சுற்றி பார்த்துவிட்டும் தத்தம் தோழர்களுடன் வழக்கமான விளையாட்டுச் சண்டைகளைப் போட்டுவிட்டும் பசியாற வேண்டி சில கிளிகள் இது தங்களுடைய மலைதான் என்ற உரிமையுடன் தின்று கொண்டிருந்தன. அந்த கிளிக் கூட்டத்தின் நடுவே ஒரு கிளியை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு “நான் தான் உனக்கு ஊட்டிவிடுவேன்”, என்று மனித உரு கொண்ட பேடைக் குயிலோ ? அல்லது குயிலின் குரல் பெற்ற மனிதப் பெண்ணோ ? என்று வியக்கும் வகையில் ஒரு குரல் பேசிக்கொண்டிருந்தது.

“பாரி, உனக்கு ஒரே ஒரு பழத்தை மட்டும் நான் ஊட்டிவிடுகிறேன், வா”, என்றது அக்குரல்.

அதைக் கேட்ட அந்த கிளியும் அருகில் வந்து பழத்தை உற்றுப் பார்த்துவிட்டு அதைக் கொத்தாமல் காம்பை மட்டும் இருமுறை கொத்திவிட்டு “நான் இதை உண்ண மாட்டேன்”, என்கிற தொனியில் பின் நகர்ந்தது.

“என்னடா பாரி, ஆசையாய் பழத்தை நீட்டினால் உண்ன மாட்டேன் என்கிறாயே. தினமும் உனக்கு நான் தானே பழம் ஊட்டுவேன். என் மேல் ஏதும் கோபமா ?”, என்று கூறிவிட்டு கிளியைப் பார்க்காது எதிர் திசையில் திரும்பிக் கொண்டாள் குயில் போல குரலையுடைய அப்பெண்.

கிளியும் அமைதியாக இருக்கவே, “இதோ இப்போது நீ உண்ணாவிட்டால் பழத்தைப் பிய்த்து நான் தின்றுவிடுவேன், செய்யட்டுமா?”, என்று கூறிய சில நொடிகளில் பழத்தைப் பிய்க்கத் தொடங்கினாள்.

“அடேய் பாரி, பலே ஆளடா நீ. பழம் அழுகியிருப்பதை தெரிந்துகொண்டு தான் உண்ணமாட்டேன் என்று அடம்பிடித்தாயா. என் சமத்துச் செல்லம் நீ”, என்று கூறிக் கொண்டே அக்கிளிக்கு ஒரு முத்தமிட்டாள்.

கிளியும் பசி தாள முடியாமல் அவள் கையிலிருந்து திமிறிக் கொண்டு “கீ….கீ…குயிலி…..குயிலி….கீ….கீ”, என்று கத்திக்கொண்டே நல்ல கோவைப் பழமொன்றைத் தேடி சுவைக்கத் தொடங்கியது.

குயிலைப் போல இனிமை பொருந்திய குரலை உடைய அப்பெண்ணுக்கு ‘செங்குயிலி’ என்ற பெயரும் பொருத்தமாகவே இருந்தது. கோவை மலை முருகன் கோவிலுக்கு சற்று தொலைவில் கீழே உள்ள ஒரு வீட்டில் தன் தந்தை மருதப்பருடன் வசித்துவந்தாள். செங்குயிலி திருமண வயதை எட்டிய சுட்டித்தனம் மிக்க பேதைப் பெண். தன் பெண்ணுக்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இரண்டு வருடமாக திட்டம் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் மாப்பிள்ளைக்கு சீதனம் செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணி வருத்தப்படுவார் மருதப்பர். சொந்த ஊரில் மட்டுமில்லாது பக்கத்து ஊருக்கெல்லாம் சென்று வரன் தேடிவிட்டார். மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையை மருதப்பரால் கொடுக்க இயலவில்லை.

செங்குயிலியும் தன் வாழ்நாட்களை வீட்டிற்குள்ளேயும் பசியாற வரும் கிளிகளிடமும் மலைமீதுள்ள முருகன் கோவிலிலும் கோவிலை ஒட்டியுள்ள சிறுவோடைக்கு அருகிலும் மட்டுமே கழித்து வந்ததால் வெளியுலகம் பற்றி அதிகம் அறியாதிருந்தாள். இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் ஊருக்கு கிழக்கேயுள்ள ஒரு கோவிலில் திருவிழா. அவ்விழாவிற்கு செங்குயிலி தன் தோழியருடன் சென்றுவர வேண்டுமென்று மருதப்பர் விரும்பினார். அவ்வாறு செல்வதால் விழாவிற்கு வரும் எந்த குடும்பத்தினராவது தங்கள் மகனுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ மணமுடிக்க வேண்டி செங்குயிலியை மணம்பேச வருவார்கள் என்று நம்பினார். நாமாக சென்று வரன் கேட்பதால் தான் வரதட்சணை அதிகம் கேட்கிறார்கள். அவர்களாக வந்து பெண் கேட்டால் தன் பேச்சே அந்நேரத்தில் எடுபடும் என்று திட்டம் தீட்டியிருந்தார். சென்ற வருடமே இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார், ஆயினும் அது தோல்வியில் முடிந்தது. இந்த வருடமாவது நல்ல முடிவு வரும் என்கிற நம்பிக்கையில் தன் மகளிடம் பேச்சைத் தொடங்கினார் மருதப்பர்.

“ஏனம்மா குயிலி. அடுத்த மாதம் நமது ஊர்க் கோவிலில் திருவிழாவாயிற்றே நீ உன் தோழியருடன் திருவிழாவை கண்டு களிக்க விரும்புவாய். அதற்காக உன் தோழியருடன் ஒருமுறை பேசிவிட்டு வந்துவிடேன்”, என்றார்.

செங்குயிலியும் கோபம் கலந்த சலிப்புடன், “இல்லை அப்பா. எனக்கு திருவிழாவிற்கு செல்ல துளியும் விருப்பமில்லை. நான் போகமாட்டேன்”, என்றாள்.

“ஏன் அம்மா அப்படிச் சொல்லிவிட்டாய் ? திருவிழாவிற்குச் சென்றால் பலதரப்பட்ட மக்களைப் பார்க்கலாம், கோவிலுக்குச் சென்று கடவுளை தரிசிக்கலாம், வான வேடிக்கைகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பாட்டு, நடனம், கூத்து என அனைத்தையும் கண்டு களிக்கலாமே. சென்ற வருடம் கூட உன் தோழியருடன் நீ சென்று வந்தாயே, உனக்கு தெரியாதா என்ன?”, என்றார்.

“உங்களுக்குத் தெரியாதா என்ன, சென்ற வருடம் நடந்ததைப் பற்றி ? சாமிக்கு வேண்டிய நேர்த்திக்கடன் என்கிற பெயரில் சில மனிதர்கள் தங்களுடைய தலையில் தேங்காயை உடைத்துக் கொண்டதும் அதனால் ஏற்பட்டக் குருதித் துளிகள் அருகில் நின்றிருந்த என் மீது தெளித்ததும், பாவம்.. ஒன்றுமறியா வாயில்லா சிற்றுயிர்களை கடவுள் பெயரில் துடிக்கத் துடிக்க பலி கொடுத்து கொல்வதும், அதைக் காண சகிக்காமல் வீட்டிற்கு வந்து நான் அழுது புரண்டதும், எல்லாம் உங்களுக்கு மறந்துவிட்டதா ? சொல்லுங்கள் அப்பா, அதை மீண்டும் நினைவு படுத்தத்தான் இந்த வருடமும் என்னைப் போகச் சொல்கிறீர்களா ?”, என்று படபடவென வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளது கண்களில் பெருகின நீர்த்துளிகள்.

“ஆம் அம்மா. நான் மறந்துதான் விட்டேன் பார். எனக்கும் வேறு வயதாகிவிட்டது. ஞாபக சக்தியும் வெகுவாக குறைந்து வருகிறது. இன்னும் எத்தனை நாட்கள் நான் உனக்கு பாதுகாப்பாய் இருக்க முடியும். நீ திருவிழாவிற்கு சென்றால் உன்னை பார்த்துவிட்டு யாரேனும் பெண் கேட்டு வரலாமம்மா. உனக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால் பின் உன் கணவரே உனக்கு அரணாக அமைந்துவிடுவார். எனவே தான் உன்னைப் போகச் சொன்னேன்”, என்று வெளிப்படையாகவே தன் மகளிடம் சொல்லிவிட்டார் அவள் கண்களில் நீர்க் கசிவதைக் காண சகிக்காமல்.

“ஒஹோ, இது தானா உங்கள் திட்டம். இதற்காகத் தான் என்னை போகச் சொல்கிறீர்களா ? என் பாதுகாப்பைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாமப்பா. உங்களைத் தவிர பாதுகாப்பைத் தரக்கூடிய மற்றுமொன்று உள்ளது. அது நீங்கள் கற்றுத்தந்த சிலம்பக்கலை. என் கற்பையும் மானத்தையும் காத்துக்கொள்ள அதுவே எனக்குப் போதும். யாராக இருந்தாலும் அவரை வீழ்த்தும் சக்தியும் நம்பிக்கையும் எனக்கு உள்ளது. ஆகையால் திருமணம் பற்றிய பேச்சை என்னிடம் எடுக்காதீர்கள்”, என்று துணிவுடன் கூறினாள்.

“எல்லாம் சரிதான் குழந்தாய். உன் சிலம்பக் கலையின் மீதுள்ள திறமையை நானறிவேன். ஆனால், சந்தற்பமும் சூழ்நிலையும் உன் திறமைக்கு ஏதுவாக எந்நேரமும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேபோல தான் காலமும் இடமும்கூட….”, என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மருதப்பரின் பேச்சை கேட்க விருப்பமில்லாமல் வெளியே சென்றுகொண்டிருந்தாள் செங்குயிலி.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வெளியே வந்த செங்குயிலி நேரே மலைக்கோவிலுக்கு அருகே உள்ள சிற்றோடைக் கரையின் அருகில் சென்று அமர்ந்தாள். இன்பமோ சோகமோ கோபமோ தனக்கு அதிகம் ஏற்படும்போதெல்லாம் அவ்வோடைக்கரைக்கு செல்வதையே வாடிக்கையாக வைத்திருந்தாள். ஓடையில் சலசலவென்று ததும்பும் நீரின் சத்தமும் சுற்றியுள்ள மரங்களின் இலைகள் உராய்வதால் உண்டாகும் ஒலியும் அம்மரத்திடை அமர்ந்து பொழுதைக் கழிக்கும் பறவைகளின் இனிய குரலகளும் செங்குயிலிக்கு மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவர்களின் இன்பத்தை இரட்டிக்கும் துன்பத்தை துண்டாக்கும் கோபத்தைக் குறைக்கும்.

வீட்டில் நடைபெற்ற வாக்குவாதத்தில் தனக்கு திருமணம் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்ததை எண்ணி குழப்பத்தில் இருந்தாள் செங்குயிலி. யாரிடமாவது இதைப்பற்றி பேசியாக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவளது தோழன் பாரி வந்தான்.

“ஓஹோ, சண்டை போட்டுக்கொண்டு வந்ததை தெரிந்துகொண்டுதான் சமாதானம் செய்ய வந்திருக்கிறாயா. என்னால் என் முடிவை மாற்றிக் கொள்ள இயலாது. போய்ச் சொல்லிவிடு என் தந்தையிடம், செங்குயிலி முன்வைத்த காலை பின் வைப்பதில்லையென்று. திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண்ணால் இவ்வுலகில் வாழ முடியாதா என்ன? பாவம் என் தந்தை. நானும் திருமணம் செய்து போய்விட்டால் பின் அவரை யார் பார்த்துக்கொள்வது? யார் அவருக்கு பணிவிடை செய்வது? அவ்வையாரும் காரைக்கால் அம்மையாரும் இருந்தார்களே ! அவர்கள் போல நானும் இருந்துவிடுகிறேன். அவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்ததைப்போல் நான் என் தந்தைக்கு பணிவிடை செய்யப்போகிறேன். என்ன பாரி, நான் சொல்வது சரிதானே?”, என்று இடைவிடாது பேசினாள்.

மனித பாஷை புரியாமல் அனைத்தையும் பொறுமைய்டன் கேட்டுக்கொண்டிருந்த பாரி, செங்குயிலி வழக்கமான இயல்பு நிலையில் இல்லை என்பதை மட்டும் அவளது முகக்குறிப்பில் புரிந்துகொன்டு, தன் தலையை ஒருபக்கமாச் சாய்த்து பரிதாபத்துடன் அவளைப் பார்த்தது. பின்னர் “என்னடா பாரி, மீண்டும் குழப்பமாக உள்ளது. என் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவருக்கு பணிவிடை செய்வேன். அதற்குப் பின்னர்? ஐயோ அந்த நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே. இல்லற வாழ்க்கை சிறந்ததா ? இல்லை முற்றும் துறந்த முனிவர்கள் வாழ்க்கை சிறந்ததா? ஒன்றுமே புரியவில்லையே. நீயாவது சொல்லடா பாரி. மணவாழ்க்கை இல்லாமல் ஒரு பெண்ணால் இருக்க முடியாதா? இல்லறம் பெரிதா துறவறம் பெரிதா ? சொல் பாரி சொல்”, என்று பித்துப்பிடித்தவள் போல கத்தத் தொடங்கினாள் செங்குயிலி.

“இல்லறமா, துறவறமா ?”, என்று ஆறறிவுள்ள பெண் நான்கறிவுள்ள கிளியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். பாரியும் பொறுமை தாளாமல் தன் அழகிய அலகினைக் கொண்டு ஏதோ சொல்ல முயற்சிப்பது போல வாயைத் திறந்து திறந்து மூடியது. அதற்கு ஏதுவாக ஒரு வாலிப ஆண் குரலும், “இல்லறமே நல்லறம். இல்லறத்தை பின்பற்றி இன்பத்தைப் பின்பற்று”, என்று கூறியது.

இதைக் கேட்டதும் திடீரென்று பிரமை பிடித்தவள் போல அதிர்ச்சியிலும் அச்சம் கலந்த ஆச்சரியத்திலும், “பாரி உண்மையில் நீ தான் பேசினாயா, உனக்கு பேசவும் தெரியுமா…உண்மையில் இது நீதானா ? பிறப்பால் நீ கிளி தானா ? இல்லை புராண காலத்தில் ஏதேனும் முனிவர்களாலோ தவசிகளாலோ சாபம் பெற்ற இராஜகுமாரனா? என்னால் உனக்கு ஏதும் சாபவிமோசனம் ஏற்பட்டுள்ளதா ? சொல் பாரி, சொல்…”, என்று செங்குயிலி கேட்டாள்.

செங்குயிலிக்கு அருகிலிருந்த பெரிய பாறையின் பின்னிருந்து “ஹாஹா..ஹாஹா…ஹாஹா..ஹா” என்று சிரிப்புச் சத்தத்துடன் ஒரு இளம் வாலிபன் வெளியே வந்தான். சிறிது நேரம் சிரித்துவிட்டு அவளை நோக்கி, “பேசியது கிளி இல்லை. நான் இராஜகுமாரனும் இல்லை. எந்த முனிவரும் எனக்கு சாபம் கொடுக்கவும் இல்லை. உன்னைப் போல நானும் ஒரு சாதாரண மனிதன் தானம்மா”, என்று சிறு புன்னகையுடன் கூறினான் அவ்வாலிபன்.

செங்குயிலி மீண்டும் அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் என்ன செய்வதென்று தெரியாமல் சற்று கடுத்த முகத்துடன் அவ்வாலிபனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பார்த்துக்கொண்டிருந்தாள் என்று சொல்வதைவிட அவனது அங்க அடையாளங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நோக்கிக்கொண்டிருந்தாள் என்றே கூறவேண்டும். “எண்ணெய் வைத்து வாரிய பரட்டைத் தலை, அதிகம் கருத்திடாத வசீகர முகம், மூக்கிற்குக் கீழே மூன்றாம் நாள் பிறை போன்று முறுக்கிவிட்டுள்ள மீசையின் நுனி, சற்று முன்னர் நெற்றியில் இட்ட விபூதிச் சாம்பல், கழுத்தில் உருட்திராட்ச மாலை, அரையில் கட்டிய ஓர் வண்ணத் துண்டும் வேட்டியும் கை மணிக்கட்டில் ஒரு காப்பு, மறுகையில் சிலம்பக் கம்பு”, என்று ஆண் மகனுக்கு உரிய தோற்றங்கள் அத்தனையும் உடைய அவ்வாலிபனின் உருவத்தை பார்த்த சில நொடிகளில் தன் மனதில் பதிய வைத்துவிட்டாள் செங்குயிலி.

செங்குயிலி தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த அந்த வாலிபன், “ஏன் பெண்ணே என்னை அப்படி பார்க்கிறாய் ? ஒருவேளை என்னை பூதமோ பிசாசோ என்று நினைத்துக் கொண்டாயா. நானும் உன்னைப் போல ஒரு மனிதன் தான் என்று சொன்னேனே”, என்று கூறினான்.

“ஓஹோ….மனிதன் தானா. அப்படியானால் மனித நாகரீகம் தெரிந்திருக்க வேண்டுமே உங்களுக்கு. தனியாக இருக்கும் அபலைப் பெண்ணை இப்படித்தான் மறைந்திருந்து பார்த்து அவள் பேசுவதைக் கேட்டு கேலி செய்வீர்களா ? யார் நீங்கள். இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”, என்று கோபத்துடன் கேட்டாள்.

“என்ன இப்படி சொல்லிவிட்டாய். நீ உன் நண்பன் பாரி என்றவனுடன் தானே உன் கதையை புலம்பிக்கொண்டிருந்தாய். தனியாக இருப்பதாக ஒன்றும் எனக்குத் தோன்றவில்லையே”, எனப் பரிகாசத்துடன் கூறினான்.

“என்ன ஐயா விளையாடுகிறீரா ? பாரி என்பது நான் ஆசையாய் வளர்க்கும் செல்லக்கிளியின் பெயர். அதுசரி, நீர் இங்கு ஏன் வந்தீர் எப்படி வந்தீர் எதற்காக வந்தீர் என்று இன்னமும் சொல்லவில்லையே”, என்றாள்.

“அது ஒரு பெரிய கதையம்மா. இருந்தாலும் உன்னிடம் சொல்கிறேன். நான் இந்த ஊர்க்காரன் தான். எனக்கென்று சிறு நிலம் உள்ளது. அதில்தான் நானும் என் தந்தையும் தினை வரகு முதலிய தானியங்களைப் பயிர்செய்து வருகிறோம். என் தாய் தந்தையருக்கு வயதாகி வருவதால், விரைவில் எனக்குத் திருமணம் முடித்து வைக்கவேண்டும் என்று பிரியப்பட்டார்கள். அதற்காக பல இடங்களில் பெண் தேடியும் பார்த்தார்கள். என்ன காரணமோ தெரியவில்லை இதுவரை எந்த பெண்ணும் பிடிபடவில்லை. அதனால் என் தந்தை இந்த மலை மீதுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு வரச்சொன்னார். முருகனுக்குத் தான் வள்ளி தெய்வயானை என இருவர் உள்ளனரே. அவரது அருள் கிடைத்தால் அவரைப் போல இருவர் இல்லாவிட்டாலும் ஒரு பெண்ணையாவது மணம் செய்துகொள்வேன் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது தான் உன் புலம்பல்கள் இந்த ஓடை நீரில் பட்டு எதிரொலித்து என் காதில் விழுந்தது. மேலும் என் தாயும் ‘மற்றவர்களுடன் நீ என்றும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். யார் மனதும் புண்படாதபடி பேச வேண்டும். முடிந்தால் உன்னால் இயன்றபடி நல்ல உபதேசங்களை எடுத்துக் கூற வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே உனக்கு அசரீரி போல ஒளிந்திருந்து ‘இல்லறமே நல்லறம்’ என்று உபதேசம் செய்தேன்”, என்றான் அவ்வாலிபன்.

“மிக்க நன்றி ஐயா. மண் பொழியும் மாரி போல கேட்காமலேயே உபதேச மழை பொழிந்தீர்கள். மிக்க நன்றி. பிறகென்ன, உங்கள் வேலையை நீங்கள் பார்க்கலாமே”, என்றாள் செங்குயிலி. பிறகு அந்த வாலிபனும் இவளுடன் தொடர்ந்து பேச முடியாது என்பதால் கோவிலுக்குச் சென்றுவிட்டான். தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதமும் அதனால் ஏற்பட்ட குழப்பத்திலும் கவலை அடைந்திருந்த செங்குயிலிக்கு அவ்வாலிபனின் மறுமொழி சற்று ஆறுதலாக இருந்தது.

மறுநாளும் மருதப்பர் தன் மகளுடன் அதே திருமணப்பேச்சை எடுக்க செங்குயிலியும் வழக்கம்போல் ஓடைக்கரைக்கு சென்று பாரியுடன் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். அந்த வாலிபனும் மீண்டும் அதே பாறைக்குப் பின்னால் இருந்து அசரீரி போல பேச்சுக் கொடுப்பான். இதேபோல தினமும் நடந்து வந்தது. ஆரம்பத்தில் அவ்வாலிபனின் பேச்சை அவ்வளவாக கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அவ்வளவாக அதைப்பற்றிய சிந்தனை அவளுக்கு ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால், இது தொடர்ந்து நடக்கவே, “அவனது பேச்சுகள் அவளை பற்றி இழுக்க ஆரம்பித்தது. சில நாட்கள் அவ்வாலிபன் வரமாட்டானா. ஆறுதலான அவன் பேச்சு என் காதில் விழாதா?”, என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.

தன்னையும் அறியாமல் தன் மனம் அவன்மீது சென்றதை அவளது மூளை ஒப்புக்கொள்ள மறுத்தது. காதல் தான் என்று ஆழ்மனது சொன்னாலும் இது காதல் இல்லை வெறும் பிரமை என்று மூளை சொன்னது. இப்படியாக ஒருநாள் செங்குயிலி ஓடைக்கரையில் அமர்ந்திருப்பதைக் கண்ட அவ்வாலிபன் அவளருகில் சென்று, “செங்குயிலி…..” என்று அழைத்தான்.

தன்னுடைய பெயர் எப்படி இவனுக்குத் தெரிந்தது என்ற ஆச்சரியத்தில், “ஒருவேளை நம்மை நன்கு அறிந்தவனோ இவன்”, என்று குழம்பிக்கொண்டிருந்தாள். அவ்வாலிபன் தனக்கு அருகில் வருவதைப் பார்த்ததும், அவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று தெரிந்துகொண்டாள்.

“செங்குயிலி இன்னமும் சிறுகுழந்தை போல உள்ளாய். இல்லற வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. ஓர் உண்மையைச் சொல்லவா. உன் குழந்தைப் பேச்சும் செயல்களும், இக்கிளிக்கூட்டத்தின் மீது நீ காட்டும் அன்பும் உன் வசீகர முகமும் இனிமையான குரலும் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. ஒருவேளை நீ இல்லறம் சிறந்தது என்று நினைத்தால் என்னை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வாயா ? ஆம், நான் உன்னை மனதாற நேசிக்கிறேன். இருநாட்கள் கழித்து மீண்டும் வருகிறேன். அப்போது உன் பதிலை கட்டாயம் கூற வேண்டும்”, என்று கூறினான் அவ்வாலிபன்.

ஆச்சரியம், கோபம், சாந்தம், குழப்பம் ஆகிய உணர்ச்சிகள் செங்குயிலியின் முகத்தில் ஒரே நேரத்தில் தவழ்ந்து விளையாடின. “நில்லுங்கள். நீர் யார் என்று நான் அறியேன். ஆனால் என் பெயரைக் கூட நீங்கள் தெரிந்துவைத்துள்ளீர்கள். இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற குழப்பம் மட்டுமில்லை. நீங்கள் பேசிய பின்பு உங்கள் மீதும் எனக்கு அன்பு உள்ளதா இல்லையா என்ற குழப்பமும் உள்ளது. உங்கள் பெயரை மட்டுமாவது சொல்லிவிட்டுச் செல்லுங்கள்”, என்றாள்.

“ஓஹோ, குழப்பத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் என் பெயரைக் கேட்கிறாயா ? ஒருவேளை உன் மனதில் நான் இல்லையென்று நீ அறிந்தால், பிறகு என் பெயர் உனக்கு அவசியமிருக்காதே. சரி உன் குழப்பம் தீர ஒரு வழி சொல்கிறேன். ஒரு பாட்டில் விடுகதைக் கூறுகிறேன். அதற்கு பதில் தான் என் பெயர். என் பெயரை நீ கண்டுபிடித்துவிட்டால் உன் மனதில் நான் இருக்கிறேன் என்று அர்த்தம். இல்லாவிட்டால்…………….. இதோ இதுதான் அப்பாடல். நன்றாக கேட்டுக்கொள்”, எனக் கூறி பின்வரும் பாடலைச் சொன்னான்.

“நிறைதாங்கி நிற்குமிப் பூமிப்ப ரப்புடைய

ஒளிப்போரைத் தொடுக்குமப் பகலவ னுடைய

நீர்கோர்த்து நிற்குமத் திரைகட லுடைய

முதலை வாயில் போட்டுக் கோர்த்தால்

முடிவில் வருவதென் பெயர் தானே”

அந்த வாலிபன் தன்னை விரும்புகிறான் என்று சொன்னதையும் அவன் சொல்லிச்சென்ற பாட்டும் அவளுக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தது. “உண்மையில் நான் அவரை நேசிக்கிறேனா ? ஒன்றும் புரியவில்லையே. போதாக்குறைக்கு விடுகதை வேறு. பூமி, சூரியன், கடல், முதலை என்று. சரி அவன் வழியிலேயே செல்வோம். முடிந்த வரை யோசிப்போம். முடியாவிட்டால் துறவறம் ஒன்றே சிறந்தது”, என்று செங்குயிலியின் மூளை சபதம் போட்டாலும் அவளது இதயம் அந்தரங்கமாக அவன் மீது அன்பு செலுத்தியது. எப்படியாவது பதிலைக் கண்டுபிடிக்கவேண்டும் என ஏங்கியது.

செங்குயிலி இவ்வாறாக அப்பாட்டிற்கான விடையை யோசித்துக் கொண்டிருந்தாள். தன் மகளின் மனப்போக்கை புரிந்துகொள்ள முடியாமல் மருதப்பர் இன்றுடன் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றெண்ணி தான் சந்தைக்குச் சென்று வருவதாக தன் மகளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். மருதப்பர் சென்று நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு வயதான மனிதர் செங்குயிலியின் வீட்டிற்கு வந்தார்.

“மருதப்பா…. மருதப்பா….”, என்று அழைத்தார்.

வீட்டினுள் இருந்த செங்குயிலியும், “யார், ஐயா நீங்கள். அப்பா வீட்டில் இல்லை. சந்தைக்குச் சென்றுள்ளார். எப்பொழுது வருவார் எனத் தெரியாது. அவர் வரும் வரை வேண்டுமானால் காத்திருக்கிறீர்களா ?”, எனப் பணிவுடன் கேட்டாள்.

“இல்லை செங்குயிலி. பக்கத்தில் ஒரு வேலையாக வந்தேன். அப்படியே உன்னையும் மருதப்பனையும் பார்த்துச் செல்லாமென்று வந்தேன். சரி, நான் கிளம்புகிறேன்”, என்று வயதாகிச் சுருங்கிய கன்னங்களைக் கொண்டு புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.

“அட….இந்த மனிதருக்கும் நமது பெயர் தெரிந்துள்ளதே. அப்பாவிற்கு தெரிந்தவராயிருக்கும். அவர் சொல்லியிருக்கக்கூடும்”, என்று நினைத்துக்கொண்டே, “சரி ஐயா. அப்பா வந்து கேட்டால் யார் வந்து சென்றதாகக் கூற வேண்டும்”, எனக் கேட்டாள்.

“அவனுடைய மருமகப்பிள்ளை வந்ததாகச் சொல் செங்குயிலி”, என்று அவள் கன்னங்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் புன்னகைத்துக் கொண்டே சென்றுவிட்டார்.

செங்குயிலி அவர் மருமகன் என்று சொன்னவுடன் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டாள். “மருமகனா ? அப்படியானால் அப்பா சந்தைக்குச் சென்றுவருவதாகக் கூறிவிட்டு இவரைப் பார்த்து மணம் பேசிமுடிக்கத்தான் சென்றாரா. போயும் போயும் என்னை ஒரு கிழவனுக்கா கட்டிவைக்கப் போகிறார். ஐயோ, இல்லறமா துறவறமா என்று அவ்வாலிபனுடன் சண்டையிட்டேனே. கடைசியில், துறவறம் செல்ல வேன்டிய வயதான கிழவனுடன் தான் என் இல்லறமா ?”, என்று வருந்திக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து மருதப்பர் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் வந்து கொண்டிருந்தார். வாசலில் செங்குயிலி நிற்பதைப் பார்த்ததும். “என்னம்மா. மாப்பிள்ளை வந்தாரா. அவர் உன்னிடம் ஏதும் பேசினாரா. என் மனப்பாரம் குறைந்ததம்மா. உனக்கு வரன் பார்க்கும் வேலை இனி இல்லை. நாளை மாப்பிள்ளை வீட்டார் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். உன்னை விரைவில் அவருக்கு மணம் முடித்துவிட்டால் என் கடமை முடிந்ததென்று கண்ணை மூடிவிடுவேனம்மா”, என்று கூறிவிட்டுப் படுத்தார்.

மறுநாள் காலை மாப்பிள்ளை வீட்டார் செங்குயிலியை பெண் பார்க்க வந்தார்கள். செங்குயிலிக்கு அவரது தூரத்து தோழியர்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். செங்குயிலியோ, “எல்லாம் கைமீறிப் போய்விட்டது. இனி விதிவிட்ட வழி. அவ்வாலிபன் தன்னை விரும்புவதாய்ச் சொன்னபோதே சரி என்று தலையசைத்திருக்க வேண்டும். மேலும் விடுகதை வேறு போட்டுவிட்டு சென்றுவிட்டான். ஐயோ இன்று தானே மீண்டும் வருவதாகச் சொன்னான் என் முடிவைத் தெரிந்துகொள்ள. இந்த நேரத்திலா என்னைப் பெண் பார்க்க வர வேண்டும். காலமே, நீ சற்று ஓய்வெடுத்திருக்கக் கூடாதா ?”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது கண்களும் தன் பங்கு நீரை விட்டு அவளை குளிர முற்படுத்தியது.

அவளது தோழியரும் அவள் அழுவதை பார்த்துவிட்டு, “அட, என்னடி குயிலி எதற்காக இப்பொழுது அழுகிறாய் ?”, எனக் கேட்டனர்.

“வேறு எதற்காக. தந்தையைப் பிரிந்து செல்ல நேரம் வந்துவிட்டதல்லவா. அதை நினைத்து அழுதிருப்பாள்”, என ஒருத்தி கூறினாள்.

“நானும் என்னை பெண் பார்க்க வந்தபொழுது இப்படித்தான் அழுதேன்”, என்றாள் மற்றொருத்தி.

“சரி, சரி. முதலில் கண்ணீரைத் துடைத்துக்கொள்”, என்று தோழியர் கூறிக்கொண்டுருக்கும் பொழுது வெளியிலிருந்து உள்ளே நுழைந்த மற்றொரு தோழி அவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்டுக்கொண்டே, “என்ன, முதலைக் கண்ணீரா ? யார் வடிப்பது ?”, என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள். மற்ற தோழியர் அவள் முதலைக் கண்ணீரா எனக் கேட்டதும் நகைக்க ஆரம்பித்துவிட்டனர். செங்குயிலியும் தனக்கு வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தாள். பின்னர் சற்று ஆழ்ந்து சிந்தித்துவிட்டு எதையோ கண்டுபிடித்ததைப் போல உண்மையிலேயே சிரித்து மகிழ்ந்தாள். பிறகு தனக்கு இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என முடிவெடுத்தாள். மாப்பிள்ளை வீட்டார் முன்பு, “நான் இக்கிழவனை மணஞ்செய்து கொள்ளப் போவதில்லை. நான் வேறு ஒரு வாலிபனை விரும்புகிறேன்”, என்று கூறவேண்டும் என எண்ணிக் கொண்டு கூட்டதில் அனைவரது முன்பும் வந்து நின்றாள். அக்கணம் தான் என்ன கூற வேண்டும் எப்படிக் கூற வேண்டும் என்று நினைவு கூர்ந்தாள்.

அப்போது, “மாப்பிள்ளை எப்படி ? அழகாக இருக்கிறானா செங்குயிலி”, என்று ஒரு கிழவனின் குரல் கேட்டது. அது வேறு யாருமில்லை. முன்பு மருதப்பரை காண வந்த அதே கிழவன்தான் எனக் கண்டு கொண்டாள். “அப்படியானால் இந்தக் கிழவன் மாப்பிள்ளை இல்லையா ? யாராயிருந்தால் என்ன, நம் முடிவைக் கூறிவிடுவோம்”, என்றெண்ணிக் கொண்டே, “அவன் தான் மாப்பிள்ளை”, என்று அந்தக் கிழவன் காட்டிய திசையை நோக்கினாள். உணமையான மாப்பிள்ளையைப் பார்த்த மறுநொடி தான் எண்ணி வைத்திருந்த முடிவை மறந்தாள். தன்னை அறியாமலேயே “மாப்பிள்ளை மிகவும் அழகுதான். நான் அவரையே மணந்துகொள்கிறேன்”, என்று கூறிவிட்டாள். உண்மையான மாப்பிள்ளை தன்னை ஓடைக்கரையில் தினமும் காண வரும் அதே வாலிபன் தான் என்று தெரிந்த பின்னும் செங்குயிலியால் மனதை மாற்றிக் கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன ? நாம் பார்த்து வைத்த மாங்கனி தானே நம்மைத் தேடி வரும்பொழுது வேண்டாமென்றா சொல்வோம் ?

பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை அடுத்த மாதம் வைத்துக் கொள்வதென்றும் திருமணத்திற்கு ஆகவேண்டிய காரியங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். செங்குயிலியும் நடந்தது கனவா ? அல்லது நிஜமா ? என்று புரியாமல் தான் வழக்கமாக செல்லும் ஓடைக் கரைக்குச் சென்றாள். அவள் எதிர்பார்த்தது போலவே அவ்வாலிபனும் சிறிது நேரம் சென்ற பின் அங்கு வந்தான். பின் செங்குயிலி அவன்முன் சென்று, “நான் காலதாமதம் செய்திருக்கக்கூடாது. நீங்கள் கேட்ட அன்றே என் முடிவைச் சொல்லியிருக்க வேண்டும். சரி, இப்பொழுது சொல்கிறேன். துறவறமே பெரிது. ஆம், உங்களோடு இல்லாத இல்லற வாழ்வை விட துறவறமே பெரிது. நானும் உங்களை விரூம்புகிறேன்”, என்று கூறினாள்.

அந்த வாலிபனும், “இல்லறமா துறவறமா ? என்ற குழப்பம் நீங்கியதா ? சரி சரி. உன் மனதில் நான் உள்ளேனா என்ற குழப்பம் என்னவாயிற்று. விடுகதைக்கு விடை அறிந்து கொண்டாயா ? என் பெயரைத் தெரிந்து கொண்டாயா ?”, என்று கேட்டான்.

செங்குயிலி அவ்வாலிபன் முன் நின்று அவனைக் கட்டிக்கொண்டு அவன் காதருகில் சென்று மூன்றெழுத்துடைய அவனது பெயரைச் சொன்னாள். அவள் சொன்ன அதே நேரம் சுற்றியள்ள மரங்களைக் காற்று தழுவிச் செல்ல இலைகளின் சலசலவென்ற சத்தமும் ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடி கற்களிலும் பாறைகளிலும் மோதியதால் ஏற்பட்ட சத்தமும் கோவைப் புதரில் குடி புகுந்த கிளிக் கூட்டத்தின் கீச்சல்களும் ஒன்று சேர ஏற்பட்டமையால் நம்மால் அவ்வாலிபனின் பெயரைக் கேட்க இயலாமல் போய்விட்டது (நீங்களாவது எனக்கு அப்பெயரைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்). பாரியும் இனி செங்குயிலி நம்மை கவனிக்கமாட்டாள் என்று தெரிந்துகொண்டு தானும் சும்மாயிராமல் இல்லற வாழ்வைத் தொடங்க வேண்டி ஒரு துணையைத் தேடிப் பறந்தது.

3 thoughts on “கோவை மலைக்குயில்

  1. அருமையான வரிகள். சிந்திக்க வைத்த கேள்வி. மேலும் தொடர்க .. வாழ்த்துக்கள். தமிழ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *