கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 8,844 
 

செல்லப்பா இறந்துவிட்டார் என்று இன்று வாட்ஸாப் செய்தி கிடைத்து நாங்கள் அரசு மருத்துவமணைக்கு வந்து வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறோம். செல்லப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் இருக்கும். எங்களுக்கு அவர் செல்லப்பா. உங்களுக்கு அவரைச் ”சாரங்கன் பாகவதராக”த் தெரிந்து இருக்கலாம். செல்லப்பாவை எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும்.என் அத்தையின் மைத்துனர் அவர். திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பக்கக் கரையில் இருந்தது அவர்வீடு. அவர்வீடு என்றால் அவரது வீடுஅல்ல அவர் அண்ணன் அதாவது எங்கள் அத்தையின் குடும்பம் இருந்த வீடு. அதில் தான் செல்லப்பாவும் வசித்தார். வசித்தார் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஏனெனில் பஜனை,நாம சங்கீர்த்தனம், பாகவத மேளா,இல்லாத நாட்களில் அந்த வீட்டுக்கு செல்லப்பா வந்து போவார். அண்ணனுக்கும் அது சொந்த வீடு இல்லை. வாடகை வீடுதான். வீட்டின் உள் இருந்து வாசல் கதவைத்திறந்தால் கமலாலயக் குளம் தெரியும். அது ஒரு அழகிய வீடு.வீடு மட்டுமா அழகு தெருவே அழகுதான், திருவாரூரே அழகுதான். அழகுக் கெல்லாம் குறைச்சல் இல்லை. அங்கு குறைச்சல் பணத்துக்குத் தான். செல்லப்பாவின் அண்ணாவுக்கு நிரந்தர உத்யோகம் இல்லை. ஒரு அரிசிகடையில் வேலை பார்த்தார்.கஷ்ட்ட ஜீவனம். பின்னர் நிறைய லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் வந்தது. நிறைய வாங்கும் பழக்கத்தின் காரணமாக ஒரு குட்டி லாட்டரி சீட்டுக் கடையே நடத்தினார். கடை யென்றால் ஒரு சின்ன டேபிள். அதன் முன்பக்கம் சணல் கட்டப்பட்டு அதில் கிளிப் போடப்பட்டிருக்கும். அதில் அனைத்து மாநிலங்களும் கலர் கலராகத் தொங்கிக் கொண்டு இருக்கும். டேபிளின் பின்பக்கம் ஒரு ஸ்டூலில் நெடிய ஒல்லியான தேகமாக வெற்றிலை சீவல் புகையிலை பையுடன் அவர் அமர்ந்திருக்க நான் பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் கொஞ்சம் பெரிய தொகை கூட அவருக்கு லாட்டரியில் விழுந்தது என்று சொல்லிக்கொண்டார்கள். சிக்கிமோ… பூடானோ… ஏதோ ஒன்று.

மூன்று வேளையும் அடுப்பெரிய உத்தரவாதம் இல்லாத லெளகிகம்.இதில் வயதான அம்மா. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் கடைக்குட்டி ,அவ்வப்போது வந்து போகும் பிரும்மச்சாரி தம்பி செல்லப்பா, இவர்களுடன் சம்சார சாகரத்தில் பயணம்.எறும்புக்கு சொம்புத் தண்ணீரே சாகரம்தானே.

செல்லப்பாவுக்கு ஆஜானுபாகுவான உடம்பு இல்லை என்றாலும் நெட்டை உடம்பு.நாலு முழம் வேட்டி கனுக்காலுக்கு மேல் தேர்ச்சீலை போல தொங்கும். கயிற்றுக்கட்டிலில் படுத்தால் காலின் ஒருபகுதி வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும். வீட்டில் இருக்கும் போது பெரும்பாலும் சட்டை போடுவதில்லை செல்லப்பா.வெளியில் கிளம்பினால் கீழைத்தஞ்சை வெள்ளை ஜிப்பா வேட்டி சகிதமாக கையில் ஒரு மஞ்சள் பையுடன் வாய் நிறைய வெற்றிலை சீவல் குழைய, நெற்றி நிறைய வீபூதி குங்குமம் மிளிர பளீர் என்று செல்லப்பாவை சாலையில் பார்க்கலாம். எப்போதும் ஒரு ஜவ்வாது மணம்.

செல்லப்பாவுக்கு சங்கீதம் உயிர்.குருகுல வாசம் எட்டு வருடம் .ராமச்சந்திர பாகவதரிடம் இருந்து கற்றுக் கொண்டார். அற்புதமான சாரீரம். பெரிய அளவில் மணி அய்யர், மகாராஜபுரம், போல வந்திருக்க வேண்டியவர். அவர்களுக்கு இருக்கும் அதிர்ஷ்ட்டமெல்லாம் செல்லப்பாவுக்கு இல்லை.ஆனால் வித்தையில் யாருக்கும் சளைத்தவர் இல்லை செல்லப்பா. திருவாரூரில் தியாகராஜர் வாழ்ந்தவீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் தான் செல்லப்பா பிறந்தது. எங்கு பிறந்தால் என்ன தலையில் எழுதியதை பொறுத்துத் தானே வாழ்வும் தாழ்வும்.

பால்யத்தில் பல ஊர்களில் கோவில் திருவிழாக்களில் செல்லப்பாவின் சங்கீத நிகழ்ச்சிகள் நடந்து உள்ளது. வாத்திய கோஷ்ட்டியுடன் எங்கள் ஊர் திருமுதுகுன்றம் பெரிய கோவிலில் கூட செல்லப்பா வந்து பாடி இருக்கிறார். சேஷ்டைகளோ, காக்காய் பிடிப்பதோ, சபா கிச்சன் கேபினெட் அரசியலோ சுத்தமாகத் தெரியாத அப்பாவி செல்லப்பா. ஆல் இண்டியா ரேடியோவில் அவ்வப்போது பாடுவார். இப்போது ”திருவாரூர் சாரங்கன்” பாடுவார் என சொல்லி ஒலிபரப்புவார்கள். அதற்கு ஒரு வாரம் முன்னதாக எங்கள் வீட்டுக்கும் கார்டு வரும். நான் இன்ன தேதியில் இத்தனை மணிக்கு ரேடியோவில் பாடுகிறேன் என்று.

எத்தனை நாட்கள் இப்படி ஒரு ஜீவனம் நடத்துவது.? பல இடங்களில் தேங்காய் மூடி கச்சேரி தான். அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்த சன்மானத்தைகொண்டு வந்து அண்ணன் வீட்டுக்கு ஏதாவது வாங்கிப்போடுவார். ஒரு வாரம் தடங்கல் இன்றி அடுப்பெரியும். அவர்கள் வீட்டில் அன்புக்கு பஞ்சம் இல்லை. அண்ணன் குழ்ந்தைகள் அனைவரும் செல்லப்பாவை சித்தப்பா என்று கூப்பிட்டு நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. செல்லப்பா என்றுதான் கடைக்குட்டி பையன் கூட கூப்பிடுவான். வறுமைக்கும் பாசத்துக்கும் அப்படி என்ன தொடர்போ?

சங்கீதம் பெரிய அளவில் கைகொடுக்க வில்லை எனினும் செல்லப்பா வேறு எந்த வேலைக்கும் செல்லவில்லை. வேலைக்குப் போகும் அளவுக்கு படிப்பும் இல்லை. நாலாவதோ அய்ந்தாவதோ தான் .செல்லப்பாவின் அண்ணா என் அத்திம்பேர் ”தியாகராஜஅய்யர்” சில சின்ன சின்ன வேலைகள் வாங்கிக்கொடுத்தும் செல்லப்பா அதில் நிலைக்கவில்லை. தான் சங்கீதத்துக்காகவே பிறந்தவன் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை செல்லப்பாவுக்கு. பெண்களுக்கு கலியாணம் ஆவதே குதிரைக்கொம்பு என்று இருந்த காலத்திலேயே செல்லப்பாவுக்கு பெண் கிடைக்க வில்லை. அவருக்கு யாரும் பெண்பார்த்ததாகவும் தெரியவில்லை. அண்ணன் மட்டும் தான் ஆதரவு.இன்னொரு அண்ணனும் இருந்தார் செல்லப்பாவுக்கு மூத்தவர் அவர் சற்று வசதிக் காரர் தனிக்குடித்தனத்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. அம்மா, தம்பி எல்லோரும் மூத்தவருடன் .

சங்கீதம் சபாக்கள் மூலமாகவும், கச்சேரிகள் மூலமாகவும் செல்லப்பாவுக்கு கைகொடுக்க வில்லை என்றாலும், குழந்தைகளுக்கு சங்கீத கிளாஸ் மூலமாக ஏதோ வருமானம் வந்துகொண்டு தான் இருந்தது. அவ்வப்போது வரும் இது போன்ற சன்மானங்கள் அண்ணன் குடும்பத்துக்கு திடீர் சந்தோஷத்தைக் கொடுக்கும்.ஒரு வாரத்தில் இரண்டு சனி இரண்டு ஞாயிறு என இருந்திருந்தால் வருமானம் கூடியிருக்கும் ஒன்றுதானே வருகிறது . கொஞ்சம் வசதியான பார்ட்டி எனில் தட்டு நிறைய பழங்கள் கனிசமான தொகை எல்லாம் வைத்து கெளரவிப்பார்கள். அந்தக் காலத்தில் வீட்டுக்குப் போய் பாட்டு சொல்லித் தரும் ஒரு சிலரில் செல்லப்பாவும் ஒருவர். திருவாரூரில் சங்கீதத்துக்கா பஞ்சம். தடுக்கி விழுந்தால் வித்வான் இருக்கும் இடம்.சென்னைக்குப் போனால் பாட்டு சொல்லி தருபவர்களுக்கு நல்ல கிராக்கி உண்டு என்று பல பேர் செல்லப்பாவை உசுப்பேத்துவார்கள். செல்லப்பா அசைந்து கொடுக்கவில்லை. “ கெட்டும் பட்டணம் போ என்று சொல்வார்கள் நான் என்ன கெட்டா போய்விட்டேன் ?” என்று அவர்களுக்கு பதில் சொல்லுவார் வாய்முழுதும் சிரிப்புடன். செல்லப்பா வின் சிரிப்பில் ஒரு பிரகாசம் இருக்கும். காவிப் பல் தெரிய செல்லப்பா அனுபவித்துச் சிரிப்பார்.எதிரே உள்ளவர்களையும் சிரிக்க வைப்பார். பாட்டு சொல்லித்தருவதில் இருக்கும் பல சிக்கல்களை செல்லப்பா சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார்.

“ ஆத்துக்கெல்லாம் போய் சங்கீதம் கத்துக் கொடுக்க போயிட்டோம்னு வை….. வெக்கம் மானத்தையெல்லாம் வுட்டுபுடனும்… சங்கீதமே தெரியாத பெத்தவாளா இருந்தா ரொம்ப கொடுமை” . மழலையே மாறாததை யெல்லாம் உக்காத்தி வெச்சு ஆயா வேலை பாக்கற மாதிரி இருக்கும். என்கிட்ட அதுகளை விட்டுட்டு பெத்தவா பாட்டுக்கு வெளிள போயிடுவா…..ஒரு சில சமயம் கக்கா கூட அலம்பி விட்டுருக்கேன். மாசம் ஆச்சுன்னா இன்னிக்கு தருவாளா? இன்னிக்குத் தருவாளான்னு? காக்கா மாதிரி காத்துண்டு இருக்கனும் தட்சணைக்கு.வாயை விட்டு கேட்பதற்கு எனக்கும் சங்கோஜம்…..அப்படியே வெக்கத்தை விட்டு “ சார் வாள் இந்தமாச பீஸு தந்தா பரவாயில்லைன்னு” கேட்டும் இருக்கேன்…. கல்லுப் பிள்ளையாரை ஏதோ பண்ணா பல்லுதான் போகும்னு சொல்வா அந்தக் கதைதான். “பார்ப்போம்” ந்னு சொல்லிட்டு போயிண்டே இருப்பான் அந்த ஞான சூன்யம்.அவனா கொடுத்தா தான் உண்டு. என்று சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரிப்பார் செல்லப்பா. அந்த சிரிப்புக்கு இடையே ஒரு கலைஞன் வெந்து சாவதை நாம் உணரமுடியும்.

ஒருமுறை நான் திருவாரூர் போயிருந்தபோது அத்தையுடன் கோவிலுக்குப் போயிருந்தேன். செல்லப்பா வீட்டில் இல்லை. கோவிலில் சாயரட்ஷை நடந்துகொண்டிருந்தது. கமலாம்பிகை சன்னதியில் உட்கார்ந்து செல்லப்பா கண்ணைமூடி லயித்து. “கருணைதெய்வமே கற்பகமே காண வேண்டும் உன் பொற்பதமே” பாடல் பாடிக்கொண்டு இருந்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது. அப்போது செல்லப்பா இந்த உலகிலேயே இல்லாத மாதிரி இருந்தார்.வவ்வால் நெடியும் குங்குமமும் கலந்து ஒருவித வாசம் வீசியது அந்தமண்டபத்தில். அத்தை என் கையை இழுத்துக் கொண்டு சன்னதிக்குள் போனார். நாங்கள் சன்னதியிலிருந்து திரும்பி வந்தபோதும் செல்லப்பா பாடிக்கொண்டுதான் இருந்தார்.கண்கள் மட்டும் மூடியபடியே இருந்தது. ஆங்காங்கே ஒரு சிலர் நின்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.அத்தையும் கண்ணை துடைத்துக் கொண்டார். வீட்டுக்கு வரும் வழியில் அத்தை சொன்னார் “ அவனுக்கு வெறி.சங்கீத வெறி….அவன்கிட்ட இருக்கற வித்தையை யாரும் கேட்கலையேன்ற வெறி… இப்படித்தான் அப்பப்ப வந்து கமலாம்பிகைக்கு எதிரே பாடித் தீர்ப்பான் என்றார்.

அன்றிரவு செல்லப்பாவுடன் தான் வீட்டில் சாப்பிட்டோம். சாப்பிட்டபின்பு செல்லப்பா திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போடுவதற்கு கைப் பையை திறந்தபோது நான் எதிர் திண்ணையில் வந்து உட்கார்ந்தேன். “ வெத்தலை போடுடா… என்று நீட்டினார் செல்லப்பா. கொடுங்க என பையை வாங்கிக் கொண்டேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை செல்லப்பா , வாடா குளத்தங்கரைக்கு போவோம் என துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.பின்னாலேயே போனேன். அன்று பெளர்ணமி.கமலாலயக் குளத்தில் நிலவொளி விழுந்து நீளமாக நெளிந்து கொண்டு இருந்தது. மின்சார விளக்கொளி படித்துறை முழுதும் பரவியிருந்தது.சற்று அகலமான படியில் மேல் துண்டால் தட்டிவிட்டு சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டார் செல்லப்பா.எனக்கும் படியை தட்டி விட்டு உக்காரு என்றார்.கக்கத்தில் இருந்த வெற்றிலை பையை ஸ்ருதி பெட்டி மாதிரி முன்னால் வைத்துக் கொண்டார். அது ஒரு பிளாஸ்டிக் பை. மடித்து மடித்து நிறமே போயிருந்தது. வெற்றிலையை காம்பைப் பிடித்து முயல் குட்டியை தூக்குவது போல தூக்கி, மடியில் இருந்த காவித் துண்டில் முன்னும் பின்னும் துடைத்து சுண்ணாம்பை தடவ ஆரம்பித்தார்.

நான் மெதுவாக ஆரம்பித்தேன்.” செல்லப்பா இன்னிக்கு அம்மன் சன்னதியில சாய்ங்காலம் உன்னை பார்த்தேன்” என்றேன். வெற்றிலையை நீட்டு வாக்கில் இரண்டாக மடித்து நடு நரம்பை பிரித்து எடுத்தபடியே என்னை நிமிர்ந்து பார்த்தார். “ அப்படியா…எத்தனை மணிக்கு வந்த?..வந்திருக்கேன்னு சொல்ல வேண்டியது தானே?” – நெய்வேத்ய தேங்குழல் வாங்கி தந்திருப்பனே- என்றார்.

”நானும் அத்தையும் தான் வந்தோம் நீ கருணை தெய்வமே பாடிண்டு இருந்த”

“…”

செல்லப்பா பதில் ஏதும் சொல்லாமல் வெற்றிலையை மடித்துவாயில் திணித்துக் கொண்டிருந்தார்.

ஏன் செல்லப்பா அழுத?

இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது என கேட்ட உடனேயே எனக்குத் தோன்றிவிட்டது.அப்போதே செல்லப்பாவுக்கு நாற்பது வயதுக்கு மேலே ஆகியிருந்தது..இத்தனை வயது அனுபவத்தில் என்னென்ன கவலைகளோ இருந்திருக்கலாம். சிலது சொல்ல முடியும் பலது சொல்ல முடியாமல் இருக்கும்.இதுவரை கலியாணம் ஆகவில்லை. ஏதாவது காதல் தோல்வியாகக் கூட இருக்கலாம்.அப்படி இருந்து அதை செல்லப்பா தன் வாயால் தன் பாணியில் சொன்னால் ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

ஒன்னுமில்லடா…. எத்தனை நாளுக்குத் தான் பாலபாடத்தையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிண்டு இருக்கறது? கத்துண்ட சங்கீதம் மறந்து போயிடும்டா…. தினமும் சாதகம் செய்யனும். இதோ இந்த கமலாலயத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று என் குரு நாதர் முன்னாடி எவ்ளோ நாள் சாதகம் செஞ்சிருக்கேன் தெரியுமா. என்னை சாதகம் பண்ண சொல்லிட்டு குருநாதர் குளத்துல பாஞ்சுடுவார்.நடுவனார் கோவில் படியை தொட்டுபுட்டு பின்னாடி மல்லாக்கப் படுத்தே நீச்சலடித்து வருவார். சங்கீதம் கூட நீந்தர மாதிரிதாண்டா நேர் நீச்சல், உள் நீச்சல், மல்லாக்க நீச்சல் எல்லம் செய்யலாம் என்பார்.குளிர் நடுக்கும் எனக்கு. கொஞ்சமா? நஞ்சமா? எவ்ளோ சாதகம் பண்ணிருக்கேன் இந்தக் குளத்துல. கத்துண்டத என்கேயாவது கொட்டித் தீர்க்கனும்டா….அதான் கமலாம்மா ட்ட உட்கார்ந்து வாய்விட்டுப் பாடுவேன். அவோ அடுத்து நான் என்ன பாட்டு பாடனும்னு கேட்பா…. அடுத்தடுத்து கேட்டுண்டே இருப்பா….என் காதுகிட்ட வந்து ரகசியமா கேட்பா… நானும் பாடிண்டே இருப்பேன் அவளுக்குப் போதும்னே தோனாது. நான் அழறதெல்லாம் அவளுக்கு சிரிப்பா இருக்கும்… கல கலன்னு வாய் விட்டுச் சிரிப்பா… அவோ சிரிக்க சிரிக்க எனக்கு அழுகை முட்டிண்டு வரும்… இன்னும் காட்டு ….இன்னும் காட்டு ந்னு உசுப்பேத்திண்டே யிருப்பா. நானும் விடறதில்ல நீயா நானான்னு பார்த்துடுவோம்னு சளைக்காம பாடுவேன். அப்புறம் தியாகேசன் வந்து போதும் விடு… அர்த்தஜாமமே வந்துவிட்டதுன்னு சொன்னதுக்கு அப்புறம் அவோ கையை தட்டுவா பாரு தொங்குற வவ்வாலும் தூங்குற புறாக்களும் படபடக்கப் பறந்து கோவில் முழுக்கத் திரியும். என்று சொல்லி புகையிலையை நடுவிரலிலும் மோதிர விரலிலும் பிடித்து சின்ன உதறு உதறி வாயில் போட்டுக் கொண்டார்.

செல்லப்பா உண்மையை சொல்கிறாரா? அல்லது எதோ கற்பனையாக சொல்கிறாரா? தெரிந்தே கதை விடுகிறாரா? என்னை குழந்தை என்று நினைத்து ஏதோ அபிராமிபட்டர் கதை சொல்கிறமாதிரி சொல்கிறாரே இருபது வயது பயன் இந்தக் கதையை யெல்லாம் நம்புவானா ? என்று செல்லப்பாவுக்குத் தெரியவேண்டாமா? ஒரு வேளை செல்லப்பா மனம் அவ்வப்போது இப்படி பேதலிக்குமோ? எனக்கு அப்போதைக்கு ஒன்றும் புரியவில்லை.

”ஏன் செல்லப்பா நீ இன்னும் கலியாணம் பண்ணிக்கலை?”

இதுவும் கேட்க்கக் கூடாத கேள்விதான்.இப்போதும் உடனே தோன்றி விட்டது கேட்டிருக்கக் கூடாது .

யார்டா பொன்னு தரேன்னு வந்து வரிசைல நிக்கறான்? வந்தால் வேணாம்னா சொல்லப் போறேன். ஒன்னும் அமையலை. என் குருநாதர் என் ஜாதகத்தை ஒருநா பார்த்துப்புட்டு முப்பத்தி எட்டு வயசுக்கு மேல கலியாணம் அமையும்டா…உனக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கு…. ராகுக்கும் கேதுக்கும் இடையில எல்லா கிரகமும் அடைஞ்சு கிடக்கு…. ஒரு பக்கம் பூரா கட்டங்கள் வாஷவுட்… காலியா கிடக்கு…என்றார். முப்பத்தெட்டு போய் அஞ்சு வருஷம் ஆச்சு…. … ஒன்னும் நடக்கலை…குருநாதர் தான் போய் சேந்துட்டார். கால சர்ப்ப தோஷமா இல்ல கால காலமான சர்ப்ப தோஷமான்னு தெரில என்று வாய்விட்டு எச்சில் வழியாமல் அண்ணாந்து சிரித்தார் செல்லப்பா.

அந்த பிரபல புல்லாங்குழல் வித்வானிடம் உதவியாளராக கொஞ்ச நாள் இருந்தார் செல்லப்பா. அவருடன் கேரளா சென்ற அனுபவத்தை அப்போது தான் கமலாலயப் படித்துறையில் நிலவு மிதக்கும் இருளில் சொன்னார். மகா வித்தைகாரண்டா அவன். ஒருநா கச்சேரிக்கு அவரோட கார்ல திருவனந்தபுரம் போனோம் கும்மிருட்டு. மலைப்பாதை. ஒரு இடத்துல காரை நிறுத்தச் சொல்லிபுட்டு அது இறங்கிடுத்து. உச்சா தான் போகப்போறதுன்னு நினைச்சோம். நானும் மிருதங்கம் மோகன்ராமும் தான் பின் சீட்டுல இருந்தோம். மத்த பக்கவாத்யமெல்லாம் டிரைன்ல முன்னாடியே போயிட்டா. நாங்களும் டிரெயின்லயே போறோம்னு சொன்னோம் இவர்தான் கேட்கல. காரை விட்டு இறங்கி சரசரன்னு பக்கத்துல இருந்த பள்ளத்தில் இறங்கிடுத்து. வருவார் வருவார்னு காத்துண்டு இருக்கோம் ஒரு மணிநேரமாச்சு ஆள் வரவேயில்லை.ரொம்ப நேரத்துக்கு அப்புறம் புல்லாங்குழல் சத்தம் அந்தக் காட்டையே கலைச்சுண்டு கேக்கறது பள்ளத்த்லேர்ந்து. அய்யய்யோ…. வாசிக்க ஆரம்பிச்சுடுத்தே இந்த முனி… எப்போ முடிக்கும்னே தெரியலையே ந்னு மோகன்ராம் தலைல கையை வெச்சுண்டு ரோட்டுலயே உட்கார்ந்துட்டான். ரொம்ப நேரத்துக்கப்புறம் மெள்ள மேலே ஏறி வந்தார். என்னண்ணா? யாருக்கு வாசிச்சேள் என்றேன். அவா எல்லாம் அங்க வந்துட்டாடா…

யாரெல்லாம்?

அதான் மோகினிகள்…. எல்லாம் சேர்ந்துடுத்து.

என்னா ரசணை…… என்னா ரசணை… என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறிக்கொண்டார்.எனக்கும் மோகன்ராமுக்கும் கைகாலெல்லாம் வெட வெடக்க ஆரம்பித்து விட்டது. மேடை போட்டு காத்துண்டு இருக்கறவாளுக்கு பாடுவதில் முரண்டு பிடிக்கும் இந்த முனி காட்டுல பேய் பிசாசுகளுக்கு போய் வாசிக்கறதே என்று நொந்துகொண்டோம்.

இப்படியான பல கதைகளை அன்று நள்ளிரவுவரையில் செல்லப்பா சொல்லிகொண்டு இருந்தார். எல்லாமே நம்பக் கூடிய கதைகளாகவே இல்லை.ஏதோ மாயாஜாலக்கதை போல சொல்லிக்கொண்டு இருந்தார்.அந்த முறை நான் திருவாரூர் போனதோடு சரி அடுத்து பலவருடங்கள் அங்கு போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை, எனக்கும் திருமணம், உத்யோகம் என வாழ்க்கைப்பாடு பிசியாகிப் போனது. அத்திம்பேர் இறந்த போது தான் போயிருந்தேன்.இப்போது குளத்தங்கரை வீடு இல்லை. மேட்டுத்தெருவில் ஒரு ஸ்டோர் வீடு. அத்தைக்கு அழுவதற்குக் கூட உடம்பில் தெம்பில்லை. அத்தை என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். திருமணமான அத்தைமகள் இருவரும் அவர்கள் கணவர்மார்களுடன் வந்திருந்தனர். அப்போது தான் பின்பக்கமாக வந்து என் கையை பற்றிக்கொண்டார் செல்லப்பா. அழுது அழுது கண்கள் சிவந்து இருந்தன.இந்த இருபது வருட இடைவெளியில் செல்லப்பா முகம் கிழடு தட்டிப்போயிருந்தது.முன் பற்களில் ஒன்றிரண்டு விழுந்திருந்தது. ஏற்கனவே அம்மைத் தழும்புகள் உள்ள முகம். இதில் அழுது அழுது முகம் விகாரமாக இருந்தது. “ அண்ணா போயிட்டாடா….எனக்கு இனி யாருடா இருக்கா? என விசும்பினார்.எனக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அறுபது வயது குழந்தை தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தது. அத்திம்பேர் காரியத்துக்குள்ளாகவே உறவுகள் செல்லப்பா இனி அத்தையுடன் இருக்கலாமா? என அரசபுரசலாகப் பேசினார்கள். ஏற்கனவே செல்லப்பா அத்தைக்குடும்பத்துக்கு கூடுதல் பளு என்கிற எண்ணம் எங்கள் குடும்ப பெரியவர்களுக்கு எப்போதும் உண்டு. அந்த சமயத்தில் செல்லப்பாவுடன் நிறைய பேசமுடியவில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில்

திருச்சில தானே ஜாகை உனக்கு? என்றார்.

ஆமாம்.

அடுத்தமாசம் பாகவதமேளா “கோவிந்தராஜுகலியாண மண்டபத்தில்” அங்க பார்ப்போம் என்றார். என் நம்பரை வாங்கிக் கொண்டார். ஆத்துக்கு வா செல்லப்பா என்றேன். வேண்டாம்டா… கோஷ்ட்டியோட இருக்கும் போது சரிபடாது …நீ… வா… நாம பேசி எவ்ளோ நாளாச்சு? என்றார்

இந்த இடைப்பட்ட வருடங்களில் செல்லப்பாவைப் பற்றி நான் அறிந்துகொண்டது, சங்கீதம் , பாட்டுக் கிளாஸ், எல்லாம் கைவிட்டபோது நாம சங்கீர்த்தனம் செல்லப்பாவுக்கு கைகொடுத்தது. செல்லப்பாவின் சங்கீதத்துக்கு பஜனை கோஷ்ட்டியில் நல்ல மதிப்பு இருந்தது. பாகவதர்கள் மத்தியில் சங்கீதம் தெரிந்த ஒருவர் இருப்பது அந்த கோஷ்ட்டிக்கு வசதி . ஓரளவுக்கு சன்மானமும் கிடைத்தது. அதுவும் பத்து நாள் புரொக்ராம் என்றால் சொல்லவே வேண்டாம். வேளைக்கு வகையான உணவு, தங்குவதற்கு இடம், கனிசமான சன்மானம் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தது. செல்லப்பா புரொக்ராம் முடிந்து வீட்டுக்கு வரும்போது வீடும் காத்துக்கொண்டு இருக்கத் துவங்கியது. செல்லப்பாவும் சும்மா வரமாட்டார். போகும் ஊரில் இருந்தெல்லாம் என்னென்ன கிடைக்குமோ அவைகளை ஜோல்னா பையில் நிரப்பிக் கொண்டுவந்து அண்ணன் குழந்தைகளுக்கு கொடுப்பார்.தாய்க்குருவிக்கு வாய்பிளந்திருக்கும் குஞ்சுகள் போல அண்ணன் குழந்தைகள் செல்லப்பாவின் ஜோல்னா பைதிறப்புக்கு காத்திருப்பார்கள்.

அடுத்த மாதம் வந்தது செல்லப்பா போன் செய்தார். நாளைக்கு ஞாயித்துக்கிழமைதானே வரியா…. இடம் தெரியுமோன்னோ…. மகாத்மா காந்தி ஸ்கூலுக்கு பக்கத்துல.. என்றார். தெரியும் செல்லப்பா வரேன். எப்போ வரட்டும்? நீ பிரீயா இருப்பியா? என்றேன். மத்யானமா வாடா சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிண்டு இருப்போம் என்றார்.

மாயவரம் ”கந்தகுரு” பாகவதர் தலைமையில் இருந்த கோஷ்ட்டியில் தான் செல்லப்பா இருந்தார். செல்லப்பாவை பார்ப்பதற்கு கல்யாண மண்டபத்தின் உள்ளே நுழைந்த போது செல்லப்பாதான் உச்ச ஸ்தாயியில் பாடிக்கொண்டு இருந்தார்.

“நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன்
ஆனந்தம் தான் அடைந்தேன் ”

கண்கள் மூடியபடியே பாடினார் செல்லப்பா. அன்று திருவாரூர் கமலாம்பிகை அம்மன் சன்னதியில் பாடியது போல இப்போது கண்களில் கண்ணீர் வழியவில்லை. மாறாக முகம் முழுதும் நிம்மதி தெரிந்தது.சபையே உணர்ச்சிப்பெருக்கில் இருந்தது.இரண்டாம் வரிசையில் உட்கார்ந்திருந்தார் சாரங்கன் கோஷ்ட்டியில் ஒருவராக. மைக் முன்னால் கம்பீரமாக பக்கவாத்தியங்கள் சூழ பட்டாடைகள் உடுத்தி பாடவேண்டியவர். சட்டை அணியாத உடம்பில் துளசி மாலையும், ஸ்படிகமாலையும் தொங்க கையில் ஜால்ரா கட்டையுடன் இருந்தார் செல்லப்பா. கந்தகுரு பாகவதர் காலில் சலங்கை கட்டி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு இருந்தார். அவருக்கும் நாற்பதுக்கு மேல வயது ஆயிற்று. சாரங்கன்வைப் போல பஞ்சகச்சம் கட்டாத பிரம்மச்சாரிதான் கந்தகுரு பாகவதரும்.இன்னும் திருமணம் ஆகவில்லை.பெண் கொடுப்போர் யாரும் இல்லை.இத்தனை பெரிய சபையில் பக்தியில் லயிக்கும் இவர்களில் யாராவது பெண் கொடுத்தால் என்ன? கொடுக்க மாட்டார்கள்? எல்லாம் லாப நஷ்டக் கணக்கு போடும் பக்தர்கள் தான்.

பக்தகோடிகள் மெய்மறந்து லயித்திருந்தனர். நடுவில் கண்ணை திறந்த போது தூரத்திலிருந்து என்னை பார்த்துவிட்டு செல்லப்பா தலையை ஆட்டினார்.யாரோ ஒருவர் பாகவதர்களுக்கு சம்மங்கி மாலை அணிவித்து ஜவ்வாது பூசிவிட்டுப் போனார். செல்லப்பா அருகே அமர்ந்திருப்பது “பிர்க்கா ராஜு” வியர்வை வழிய பெரிய மாமா மாதிரி இருந்தார். எனக்கு சீனியர் காலேஜில். கேண்டினில் உட்கார்ந்து என்னுடன் பிளைன் கோல்டுபிளாக் குடிப்பார்.அப்போது அவர் நெய்வேலியிலிருந்து எங்கள் ஊருக்கு வந்து கல்லூரியில் படித்துக்கொண்ட்ருந்த டேஸ்காலர். புரட்சிகர மாணவர் இயக்கத்தில் தீவிரமான பங்கேற்பாளர். அப்போதும் ஜோல்னா தான் இருந்தது இப்போது போல அவர் தோளில். இப்போது பெரிய பாகவதர். உள்ளே நுழைந்தவர்கள் நெடுஞ்சான் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்கள். நானும் அப்படித் தான் செய்யவேண்டும். இந்த இடத்துக்கு நான் பேண்ட் போட்டு வந்திருக்கக் கூடாது.இவர்களுக்கு மத்தியில் அண்ணியமாக இருந்தது எனது உடை. கிராப் வைத்தவர், குடுமி வைத்தவர், மீசை வைத்தவர், டை அடித்தவர், டை அடிக்காதவர், என விதவிதமான பாகவதர்களாக இருந்தார்கள். இது ஒரு தனி உலகம். பக்தியை தனதாக்கிக்கொண்ட உலகம். பாடுவதற்கு நடுவே “ இரு வரேன்” என்பதாக செல்லப்பா தலையை ஆட்டினார்.

மதிய உணவுக்கு அரங்கம் கலைந்த போது செல்லப்பா ஓடி வந்து கட்டிக்கொண்டார். மனைவி குழந்தைகளை எல்லாம் நலம் விசாரித்தார். பந்தி மேல நடக்கறது போய் சாப்டுட்டு வந்துடு. ரொம்ப பிரமாதமா இருக்கும். சும்மா பணத்தை கொண்டு வந்து கொட்றா… நேத்தி போட்ட போளில்லாம் நெய்யிலயே செஞ்சிருப்பா போல அமிர்தம் மாதிரி இருந்தது. என்றார். ”நீயும் வாயேன் செல்லப்பா” என்றேன்.தப்பா நினைச்சுக்காத பாகவதாளுக்கெல்லாம் தனி பந்தி. நானும் போய் சாப்டுட்டு ஓடி வந்துடறேன். அதற்குள் தூரத்திலிருந்து ஒரு பாகவதர்…. ஸ்வாமி வாங்கோ….என கூவினார் செல்லப்பாவை பார்த்து..நீ போடா…நான் வரேன்…என்று கையை வீசினார் செல்லப்பா.என்னடா பாகவதாளை அடா புடா ந்னு பேசறேன்னு நினைக்காதே… அவன் என் தோஸ்த்… நம்மூரு பக்கம் கொரடாச்சேரிதான்… என கண்ணைச் சிமிட்டி குனிந்து சிரித்தார். அதே கள்ளம் கபடம் இல்லாத வெள்ளந்திச் சிரிப்பு. அப்போது ஜோல்னா மாட்டியிருந்த ஒரு பெரியவர் எங்களை தாண்டிப் போனார். ஓய் மாருதி இங்க வாரும்… இது எங்காத்து பையன்… பந்திக்கு அழைச்சிண்டு போங்கோ என்றார். அவரும் ரொம்ப மரியாதையாக சரி ஸ்வாமி என்று சொல்லி என்னை அழைத்துக் கொண்டுபோனார் மாடியில் நடந்த பந்திக்கு.

நான் சாப்பிட்டு முடித்து மாடியிலிருந்து இறங்கி வருவதற்குள் செல்லப்பா சாப்பிட்டு முடித்து பஜனை நடந்த ஹாலில் சுவரோரம் சாய்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டு இருந்தார் . பாகவதர்களுக்கு பந்திக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அருகில் வந்து அமர்ந்த எனக்கு வெற்றிலைப் பையை கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார். அதே பிளாஸ்ட்டிக் பை.இப்போது தேயிலைத் தூள் பை. அமீர் பாட்ச்சா இருக்கு பாரு போட்டுக்கோ என்றார். பன்னீர் புகையிலை சாதா புகையிலையுடன் கலந்து ஒரு சில்வர் டப்பாவில் போட்டு வைத்திருந்தார்.”பாக்கு மட்டையில் தானே வரும் ?” என்றேன். ஆமாம்…ஆமாம்… இப்பவும் அப்படித்தான் வருது.ரொம்ப காட்டமா இருக்கும். பல்லெல்லாம் போயிடுத்து அதான் கொஞ்சம் சாதா புகையிலையை கலந்துபோடுறது.

இன்னிக்கு ப்லாப்பழ பிரதமன் சாப்பிட்டியா? என்றார். பலாப்பழத்தை செல்லப்பா அப்படித்தான் கீழத்தஞ்சை ஸ்டெயிலில் சொல்லுவார். சாப்ட்டேன்…சாப்டேன் …. மாருதிதான் நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க்கோ என்று சொல்லி ரெக்கமண்ட் பன்னார்…என்றேன்.. செல்லப்பா வாய் விட்டுச் சிரித்தார். ….அடேய் அவர் பேரு மாருதி இல்லடா…. பஞ்சோபகேசன்… நாம சங்கீர்த்தனத்தில் அஞ்சனேயராக நின்று ஆடுவார். அதனால அந்தப் பெயர் … அரசாங்கத்துல பெரிய உத்யோகத்துல இருக்கார் தெரியுமோன்னோ?…ரொம்ப அடக்கம்…பாகவதாள்ட்ட அவ்ளோ பவ்யம்….. தினம்தோறும் இங்க எவ்ளோ பெரியவாள்ளாம் வறா தெரியுமோ?.என்றார்.

எல்லாம் சரிதான்…. வருகிறவர்கள் யாராவது கந்தகுரு வுக்கு பெண் கொடுக்கலாமோல்யோ. அவரும்தான் பகவான் காலையே பிடிச்சுண்டு கிடக்கார்.எல்லாம் சுயநலம் செல்லப்பா என்றேன்.

அப்படில்லாம் சொல்லாதே…மனுஷா என்னடா கொடுக்கறது?. பகவான் தனக்கு யார் வேணும்னு முடிவு பண்ணி அவாள தனக்காகவே ஆக்கிக்கறான். திருவாரூர் கோவில்ல இப்படி ஒரு நாள் நான் பாடிண்டு இருக்கும் போது இதோ இந்த கந்தகுரு பாகவதரோட அப்பா சாமிநாத பாகவதர் தான் என்னோட வான்னு கூப்புடுண்டு வந்தார் நாம சங்கீர்த்தனத்திற்கு. எனக்கும் ஆரம்பத்துல கோஷ்ட்டியா பாடறத்துக்கு என்னமோ போல தான் இருந்தது. எனக்கு சங்கீதம் மட்டும் தான் தெரியும். பஜனை பத்ததில்லாம் தெரியாது. எல்லாம் புதுசு. அவர்தான் கத்துக் கொடுத்தார். ஒவ்வொரு பஜனை சம்பிரதாயமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இப்போ விளக்குபார்த்தியொன்னோ அதுலதான் பகவானை ஆவாகனம் செய்யறது. சொர்ணக்காடு பத்ததில அது கிடையாது. கூட… பாட..பாட…. நான் வேறயாயிட்டேன். நாம கோஷத்தில எல்லாம் கரைஞ்சு போயிடுறது. சங்கீதம் தெரியும் என்கிற கர்வமும் அதுல கரைஞ்சு போயிடுத்து. அம்பாள் தான் என்னை சுவாமிநாத பாகவதர் கிட்ட சொல்லி கூட்டுண்டு போ என அனுப்பி வெச்சாள்.கோவில்ல காளையை நேர்ந்து விடறாபாரு அது மாதிரி தனக்கான மனுஷாள பகவான் நேர்ந்து விட்டுக்கறான். அவாளுக்கெல்லாம் எல்லாமே பகவான் தான். அவனே பொறக்க வைப்பான், அவனே வளர்த்தெடுப்பான், அவனே அவன் நாமத்தை சொல்லச் செய்வான், அவனே அப்பா அவனே அம்மா அவனே சம்சாரம் அவனே கொழந்தேள். இவ்ளோ ஏன் ? அவனே எடுத்துப்போட்டுடுவன் எங்களையெல்லாம் என சன்னதம் வந்தவர் போல சத்தமாகச் சொன்னார்.

அன்று சொன்னது இன்று நடக்கிறது. உடல் முழுக்க சுற்றப்பட்டு முகம் கூட தெரியாமல் பல்லக்கில் வைத்து செல்லப்பாவை தேவகணங்கள் தள்ளிக்கொண்டு வந்தார்கள். . அவர்களுக்கும் முகம் தெரியவில்லை. தடுப்பு கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த எங்களிடம் ”முகமெல்லாம் காட்டமுடியாது. காட்டுக்கு நீங்க யாரும் வரக்கூடாது தொடாமல் தூர நின்று பார்த்துக்குங்க” என்று ஒரு தேவகணம் மூடிய முகத்துக்குள்ளிருந்து சொன்னது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே செல்லப்பாவின் உடல் புஷ்பக விமானத்தில் ஏற்றப்பட்டது. சாரதி ஏறி அமர புஷ்பக விமானம் மெல்ல நகர்ந்தது.

செல்லப்பா பாடியது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

”நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன்
ஆனந்தம் தான் அடைந்தேன்”

– ஆரண்யணிவாஸ் மின்னிதழ், ஆனி மாதம் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *