கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 2,422 
 

அவரை நொண்டிச் சாமியார் என்பார்கள்.   சிலர் சாமியார் என்பார்கள்.  நான் அவரை  பாபா என்பேன்.

பாபாவை ஒரு யாசகன்  என்று  சொல்லவே முடியாது.  போஜனத்திற்காக எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். குறிப்பிட்ட சில வீடுகளுக்கு காலையில் ஒரு வீடு, மதியம் ஒரு வீடு என போய்  உணவு உண்பார். பத்து பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை எங்கள் ஊருக்கு வருவார். இரண்டு வீடுகளோடு சரி. ஒரே வீட்டிற்கு உடனே அடுத்த முறை வர மாட்டார். திருவோடு  அவரிடம் இருக்காது. ஒரு எவர்சில்வர் தட்டும் உயரமான ஒர் அலுமினிய குவளையும் நீலநிற ஜோல்னா  பையில் வைத்திருப்பார்.   எண்ணி வைத்தார் போல  எங்கள் ஊரில் ஏழெட்டு வீடுகள்தான். அதில் எங்கள் வீட்டிற்கு அதிகமாக வருவார். அவர் செல்லும் வீட்டில் யாரும் அவரை கண்டு முகம்  சுழிப்பதோ வித்தியாசமாக பார்ப்பதோ இல்லை. அப்படிப்பட்ட வீட்டைத்தான் அவர் தேர்வு செய்து வைத்திருந்தார். அன்பான பேச்சு. வரும்போது எல்லோரையும் விசாரிக்கும் விதம்  நெருங்கிய, உண்மையான உறவினர்கள் விசாரிப்பதுபோல ஒரு கரிசனம்  இருக்கும். தொடர்ந்து வருவதால் அனைவரைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருப்பார்.   பாபா காவி வேட்டி கட்டியிருப்பார். மேலே பெரிய காவித் துண்டால் உடலை போர்த்தி இருப்பார். சுத்தமான உடையுடன் பளிச்சென்று இருப்பார்.  நெற்றியில் விபூதியை நான் பார்த்ததே இல்லை.   இடது காலை சற்று தாங்கித் தாங்கி மெல்ல நடப்பார். அவர் மீது எனக்கு ஒரு தனி பிரியம்.

ஒரு நாள் காலை எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடித்திருக்க  நான் மட்டும் காலை உணவாக பழைய சாதம் கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்த போது பாபா வந்துவிட்டார்.

‘நீ சாப்புடுடா அவருக்கு உப்மா பண்ணி கொடுக்கிறேன்’ என்றார்  அம்மா. அவரை வைத்து எப்படி சாப்பிடுவது.   வேண்டாமென்று நானும் பாபாவும் அந்த பழைய உணவையே பகிர்ந்து உண்டோம். அவருக்கும் அரை வயிறுதான் நிரம்பி இருக்கும். பழைய சாதத்தை உண்ட சிறிது நேரத்தில் கிளம்பினார்.  மதிய உணவு சாப்பிட்டுச் செல்லலாமென வற்புறுத்தி அவரை இருக்க வைத்தேன். இடைப்பட்ட நேரத்தில் எதிரே விழுந்து கிடந்த வேப்ப மர நிழலுக்குச் சென்று பொழுதை கழித்தார்.

 
சிறிது நேரத்தில் நானும்  அம்மர நிழலுக்குப் போனேன். புழுக்கத்தை விரட்ட அப்போது அதுதான் வழி.

பாபாதான் ஆரம்பித்தார்.

“மருதூரில் உங்க மாமாவ பாத்தேன் தம்பி” என்றார்.  மாமாவை இவருக்கு எப்படித் தெரியும்.

நான் ஆச்சர்யப்பட்டதை முகபானையில் தெரிந்து கொண்டவர்  “நான் அடிக்கடி அவங்க வீட்டுக்கு போவேன்.  போன வாரம் போனேன்” என்றார். தொடர்ந்து; “இந்த வருடம் விளைச்சல் சரியில்லையாம்.  வருத்தப்பட்டாங்க”

“ம்”

“உங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கலையா?” வருத்தமும் ஆவலும் கலந்த கேள்வி அது. இதை மாமா சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.

“கெடச்சிடும்.  பிரிலிமினரியில பாஸாயிட்டேன்.  மெயின்ல பாஸ் பண்ணினா  கிடைச்சிடும்.”

“அப்டின்னா”

“ரென்டு எக்ஸாம். பஸ்ட்ல பாஸ் பண்ணிட்டேன்.  சகேன்ட் நல்லா எழுதி இருக்கேன். பாஸாயிடுவேன். வேலை கிடைச்சிடும்ன்னு நம்பிக்கையில இருக்கேன்”

“நல்லது.  கெடக்கணும். ஆனா பாருங்களேன் கட்டாயம் கிடைச்சிடும்” மகிழ்ந்த மனத்தோடு எதையோ உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தைகளை பிரவேசித்தார்.  அது என்னை ஆசிர்வதிப்பதுபோல பட்டது.

பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நான் மட்டுமே வீட்டில் இருந்தபோது காலையில் பாபா வந்தார். வீட்டில் யாரும் இல்லையென்று சொல்ல வில்லை. சொன்னால் உடன் போய்விடுவார். அடுப்படிக்குப் போய் மிளகு போங்கல் தயாரித்துக் கொண்டிருந்தேன்.   முற்றத்தில் அமர்ந்திருந்த பாபா ” தம்பி தம்பி” என்றார். வெளியில் வந்ததும் “அம்மா இல்லையா நான் வேற வீட்டிற்கு போறேன்” என்றார்.

“அம்மா இல்ல.  ஆனா உங்களுக்கும் சேத்து பொங்கல் வச்சிட்டேனே.  சாப்பிடலாம் தானே?”

நான் மட்டும் வீட்டில் இருப்பதால் என்னை சிரமப்படுத்தக் கூடாதென்று  சற்று தயங்கிய பின் “ஏதுன்னான்ன சாப்டா போச்சி” என்றார்.

முதலில் பாபாவுக்குத்தான் கொடுத்தேன். பிறகு நான் உண்ட போதுதான் தெரிந்தது. பொங்கலில் உப்பே போடவில்லை என்று. மனுஷன் வாய் திறக்க வில்லையே. 

பின்னர், அன்று ஏனோ கொஞ்சம் அதிகமாக வாயை திறந்தார்.

“மருதூர் மாமா உங்களுக்கு பொண்ணு பாத்துருக்காங்களாம்”

“சொன்னாரா?”

“சனிக்கிழமை போயிருந்தேன். சொன்னாங்க”

“நான் இப்ப கல்யாணம் பண்ணலயே.  அவரு பாத்து என்ன பண்ணுறது”

“வயதாவுதுள்ள தம்பி.  காலத்துல கல்யாணத்த பண்ணிடுங்க.   அம்மாவுக்கும் ஒத்தாசையா இருக்கும்” இது என் மீதான ஈடுபாடு. கரிசனம்.

“அம்மாவுக்கு உதவிங்குறத்துக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்ரீங்களா பாபா”.

பாபா என்றதும் பாபாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபா திகைத்தார்.

“ஆமாம் பாபா. உங்களுக்கு பாபான்னு பேரு வச்சிருக்கேன். அப்படித்தான் நான் உங்கள எல்லார் கிட்டேயும் சொல்வேன்”

“எப்படின்னாலும் நீங்க வச்சிக்கிடுங்க தம்பி”

“ஆமா . . . உங்க பேரு என்ன பாபா ?”

“பாபா . . “

“அது நான் வச்ச பேரு பாபா”

“எனக்கு பேரு இல்லயே. அனாமிகா”

“அனாமிகான்னு பெயரில்லாத பெண்களைத்தான் சொல்லுவாங்க”

“பேரே இல்ல.  ஆணு பெண்ணு.  பேரு இல்லாத எல்லாமே அனாமிகாதான் தம்பி.   நாம பாக்குற எல்லாரோட பேருமா நமக்குத் தெரியுது.  தெரியாத எல்லாம் அனாமிகா.”

“சரி பாபா”

அதற்கு மேல் நான் அதை பற்றி விவாதிக்க விரும்பவில்லை.  பாபா என்றால்  பாபாதானே!

தட்டை கழுவி ஜோல்னாப் பைக்குள் வைக்கும்போது எதேச்சையாக பையை பார்த்து விட்டேன். அதில் அலுமினிய குவளையைத் தவிர சில அழகிய கூழாங்கற்கள் கிடந்தன.   இல்லை. இருந்தன என்று சொல்ல வேண்டும்.

கூழாங்கற்களின் வாழ்க்கையை பற்றி அறிவியலில் ஒரு சாரார் கூறுவது சரிதானா என எனக்குத் தெரியவில்லை. ஆறுகளால் மலையிலிருந்து, இடையில் சந்திக்கும் பாறைகளில் இருந்து அடித்து வரப்படும் கரடு முரடான கற்கள் நதியின் ஓட்டத்தில் உருண்டு, புரண்டு, மழுங்கி  இறுதியில் அழகிய வடிவத்திற்கு வந்தடைகின்றனவாம்.   ஆறு இல்லாத பொட்டல் பகுதியில் கூட காண முடிகிறதே! ஒருவேளை, ஒரு காலத்தில் அந்த இடத்தில் ஆறு ஓடியிருக்குமோ.  ஏன் நடந்தும் இருக்கலாம். ஒரு காலமென்றால் நான்கு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்குமோ? இருக்கலாம்.  அப்படியானால் கூழாங்கற்களின் வயது என்னவாக இருக்கும்?   நேற்று பிறந்து இன்று மறைந்து போகிற மனிதர்களின் கருத்து  உண்மையாகவும் இருக்கலாம்.  மனிதனை ரசிக்க வைக்க திவ்யமான இந்த உருவம் பெற எவ்வளவு வலிகளை அதன் ஆன்மா  தாங்கி இருக்கும். எத்தனை கோடை, எவ்வளவு மழை, எவ்வகையான குளிரை சந்தித்திருக்கும். அதன் வாழ்க்கை ஒரு சமுத்திரம் போன்றது என்றால் நான் நதியில் பயணிக்கும் பரிசல்காரன். பாபா ஒரு கூழாங்கல்லா? இருக்கலாம். ஆனால் அது எவருக்காகவோ தன் ஆன்மாவை சிதைத்துக் கொண்டதாக இருக்க கூடாது என்பது என் விருப்பம்.

எங்கள் கிராமத்திற்கு அப்போது பேருந்து வசதி கிடையாது.  பத்து கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ளது ஒரு சிறு நகரம்.   அது தாலுக்கா தலைமையிடம். அங்கும் குறிப்பிடும் படியான வசதிகள் எதுவும் இல்லை.  ஒரு கல்லூரி கூட அப்போது இல்லை. ஆனால் பெரும்பாலும் எல்லா அலுவல் நடவடிக்கைகளுக்கும் அங்கேதான் போக வேண்டும்.  ஆலையில்ல ஊருக்கு அது இலுப்பைப்பூ.  அங்கிருந்து என் வீட்டிற்கு வர வேண்டுமானால் எட்டு கிலோ மீட்டர் பேருந்தில் பயணித்து அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும். என்னிடம் சைக்கிள் இல்லாத காலம் அது.  வீடு திரும்ப இரவு நேரமாகுமென்றால் எனக்காக திண்ணையில் எடுத்து வைக்கப்பட்ட இரவு உணவை உண்ட பிறகு அங்கிருந்து  சற்று தூரம் தள்ளி நான் எனக்காக கட்டி வைக்கப் பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் படுத்து உறங்க வந்து விடுவேன். அதுதான் என் சாகை. படிப்பறை. படுக்கையறை. நண்பர்களோடு இலக்கிய விவாதம் நடத்துதல், அரசியல் சண்டை போடுதல் எல்லாமே. அது என் தனி உலகம்.

ஒரு  நாள்  அந்த மினி நகரத்திற்கு சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்ப பேருந்தில் ஏறும் போதே மழை பெய்யத் தொடங்கி விட்டது.  அது நீண்ட நாட்களுக்கு பிறகு அதிசயமாக பெய்த கோடை மழை. இறங்கும் இடத்திலும் மழை பொழிந்த வண்ணம் இருந்தது. நான் மட்டுமே இறங்கினேன் ஓடிப்போய் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் ஒதுங்கினேன்.

பக்கத்தில் உள்ள பயணிகள் நிழலக கட்டடத்தில் இரு வழிப்போக்கர்களின் சப்பாஷணைகள் மழை சத்தத்தோடு அரை குறையாகக்  கேட்டது.  பயணிகள் நிழலகத்திற்கு பக்கமாக வந்து காதுகளை கூராக்கி கேட்டேன். அதில் ஒன்று பாபாவின் குரல்.

“உடல் சூட்டுல காஞ்சி பூடும்பா”

“துண்ட கட்டிகிட்டு வேஷ்டிய புழுஞ்சாவது கட்டிக்கயேன்”

“வேண்டாப்பா”

“நீ சொன்னா கேக்கவா போறே. அப்புறம் சளி புடிச்சி தெணறிகிட்டு இருப்பே”

“ஜலதோஷம் வந்தா ரெண்டு நாள்ல போப்போவுது.  விடுறியா”

“க்கும்”

“பூமி வறண்டு போச்சி. மாடு தண்ணி  குடிக்கக்கூட கொளம் குட்டையெல்லாம் வத்திப்போச்சி.  இந்த மழை ஒரு பத்து நாளைக்கு தாங்குமா?” என்றார் பாபா.

“என்ன இதுவரை பேஞ்சதே பத்து சேய் இருக்குமா?”  எங்கள் பகுதியில் பன்னிரெண்டு மில்லி மீட்டர் மழையை ஒரு சேய் என்பார்கள்.

“இருக்கும்  இன்னமும் விடுறதா இல்லையே”.

“பேயட்டும். ரொம்ப நாளக்கி பொறவு இன்னக்கிதான் நின்னு பேயுது”

“ஜூலை மாதமும் பொறந்துட்டுது.  காவெரியில இன்னம் தண்ணி விடல”

“கன்னடகாரன் நல்ல நாள்லயே தண்ணி விட மாட்டான்.  அங்கேயும் தண்ணி இல்ல.  எப்படி விடுவான்.”

“கிருஷ்ணசாகர் அணை வேகமா ரொம்புதாம்.  அது புல்லாச்சிதுன்னா கொஞ்சம் தண்ணி விடுவான்”

“ஹச்” பாபா ஒரு தும்மல் போட்டார்.

“ஏம்பா சொன்னா கெக்கமாட்டா.  வேட்டிய புழுஞ்சி கட்டு.  மொதல்ல.”

அதற்கு மேல் நான் அவர்களின் பேச்சை ஒட்டு கேட்கவில்லை. பாபா நனைந்த நிலை  இருப்பது என்னை வருத்தத்தில் நனைய வைத்தது. நான் மழையில் நனைந்து கொண்டே ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

இது என்ன வாழ்க்கை.   மாற்றாய் மற்றொரு உடை வைத்துக் கொண்டால் என்ன?   ஏதாவது ஒரு கொள்கையை இழுத்து பிடித்துக்கொண்டு தொங்குவதா? அவருக்கென்று ஒரு பெயர் இருக்கிறதா? ஒரு தங்கும் இடம் இருக்கிறதா?  தினம் இரண்டு வேளை உணவு கிடைக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லையே. யாராவது ஒருவர் ஓர் அழைப்பிதழில் இவரது பேயரை எழுதி விசேஷத்திற்கு அழைத்திருப்பார்களா?  விருந்தென்று பந்தியில் மற்றவர்களைப்போல அமர்ந்து உண்டிருப்பாரா?  எல்லாம் வேண்டாம் என்று  வேண்டு மென்றே  ஒதுங்கி விட்டார்.   சரி.    ஒரு மாற்று உடை கூடவா வைத்துக் கொள்ளக் கூடாது.  இல்லறத்தை வெறுத்து வந்தாரா?. இளமையிலேயே விரும்பி வந்தாரா?  அவர் பிரமச்சசாரியா? துறவியா? இவரை இப்படி ஆளாக்கியது வறுமையா? ஞானமா?. பதப்படுத்தப்பட்ட வாழ்வின் முறையைத்  தாண்டி எப்போது வந்தார்?  அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா? இவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.   ஆனால் அவர் ஒரு சாந்த சொருபி.  அதற்கு மட்டும் என்னால் சான்று வழங்கமுடியும். அவர் எல்லாவற்றையும் உதரி விட்டார்.  அவரது பாதை  மற்றவர் காலடிபடாத நெருஞ்சி வெளி.  பூக்களோடு பெரிதாய் கால்களை காயப்படுத்தாத முட்களும் காய்த்துக் கிடக்கின்றன. 

உணவிற்காக வீட்டிற்கு செல்லாது நேரே எனது கொட்டகைக்குப்போய்  ஈர உடையை கூட மாற்றாமல் கயிற்றுக் கட்டிலில் விழுந்தேன். விழித்தபோது விடிந்திருந்தது.

நீண்ட காலமாக பாபாவை காணமுடிய வில்லை. அவரை பார்த்து கிட்டத்தட்ட  ஒரு வருடம் இருக்கலாம்.  தூக்கமும் விழிப்புமற்ற வேளைகளில் எப்போதேனும் வருவார். தம்பி என்பதற்குள் நான் பாபா என அழைத்து முந்திக்கொள்வேன். விழிப்பு வந்துவிடும்.

ஒர் அரை தூக்கதில் பாபா வந்து அதிசயமாக “ஒரு கத்தரிக்கோல் வாங்கி தாரிங்களா?” என்றார். 

“மீண்டும் எப்ப பாபா வருவீங்க?  வாங்கியாந்து வச்சிருக்கேன்.  இல்லன்னா பணம் தாறேன் வாங்க கிடுறீங்களா?” என்றேன்.

“பணமெல்லாம் வேண்டாம் வரும்போது வாங்கிக்கிடுறேன்.  பத்து நாள்ல வாரேன்” என்றார்.

எனக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது.  பூனை ஒன்று கூரையிலிருந்து என் மீது குதித்து தலை தெறிக்க ஓடியதில் விழித்துக் கொண்டேன். அதிசயமாய் பாபா ஏன் கனவில் வந்து கத்தரிக்கோல் கேட்டார்.  வாங்கி கொடுத்தால் அது எனக்கு கிடைத்த பேரு தானே.  நீண்ட நாள் பார்க்காததும் இன்று கனவில் வந்ததும் ஒரு கொதிப்பை ஏற்படுத்தியது.   கருக்கல் நேரம்.  எங்கிருந்தோ காற்றில் கலந்து வந்த பாலமுரளியின் ‘மானஸ சஞ்சரரே ப்ரஹ்மணி மானஸ சஞ்சரரே’ என்னை சாந்தப்படுத்தியது.

பிறகு நான் ஒரு சைக்கிள் வாங்கி விட்டேன். புதியது அல்ல. சகேன்ட் ஹேன்ட்.  நகருக்கு செல்வதென்றால் பேருந்து நிறுத்தம் வரை சைக்கிளில் செல்வேன்.   ஒரு நாள் மாலை சைக்கிளில் போகும்போது வழியில் உள்ள ஒரு கோவில் திடலில் நாடோடி குழு ஒன்று வெட்ட வெளியில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தது.  ஐம்பது அறுபது பேர் இருக்கும். கசமுச வென்று சத்தம். தெம்புள்ள குழந்தைகள் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடின.  பசியெடுத்த குழந்தைகள் மணலில், பாயில், கிழிந்த துணியில், போர்வையில் சோர்ந்து கிடந்தன.  சில உறங்கின.  வாழ்வென்பது துயரம் என்பதை நிருபிக்கும் வகையில் எங்கிருந்தோ காற்றால் தள்ளப்பட்ட மேகங்கள் ஒன்றுகூடி சோவென மழையடிக்கத் தொடங்கியது.  நான்  சைக்கிளை வேகமாக மிதித்தும் லேசாக நனைந்து விட்டேன். அந்த நாடோடிக் குழு என்னவாயிருக்கும்.   அங்கலாய்த்த மனதோடு பேருந்து நிலையத்தில் நுழைந்தேன். அங்கே ஒரு  காவி சாமியார் உட்கார்ந்திருந்தார்.  கேட்கலாமா? வேண்டாமா? 

பலத்த யோசனைக்குப் பின் கேட்டேன்   “ஏன் சாமி இங்க ஒரு சாமியார் எப்போதும் வருவார்.  ஒரு வருடமா காணும். உங்களுக்கு தெரியுமா?”

“யாரு. . .   தெரியாதே”

“இடது கால விந்தி விந்தி நடப்பார்.”

“ஓ. . . அவரா.  ஒரு பத்து  மாதம் இருக்கும் அவர பாத்து”

“என்ன ஆனார்?”

“காணாமல் போய்ட்டார். ஒரு நாள் இன்னக்கி ராத்திரி தகட்டூர் பஸ்டான்ல தங்குவோம்ன்னார். நான் நைட் போனேன். அவரு வரல. ஏன்னு தெரியல. அதுதான் நான் கடைசியா பாத்தது.”

“அவரு யாரு அவர பத்தி எதாவது தெரியுமா? “

“அது யாருக்கும் தெரியாது.   யார் கிட்டேயும் அவர் காசு வாங்க மாட்டார். வேஷ்டி துண்டு கிழியுற நிலமை வந்துதுன்னா தெரிஞ்சவங்க கிட்டே கேட்டு ஒன்று வாங்குவார்.  ஒண்ணுக்கு மேல வாங்கிக்கமாட்டார். அத வாங்கக்கூட  காசா வாங்க மாட்டார். வேஷ்டிய ஒரு நாள் துண்ட ஒரு நாள்னு மாத்தி மாத்தி தொவச்சி கட்டுவார். என்ன ஆனாலும் குளிக்கும இருக்கவே மாட்டார். யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டார். 

“என் கிட்ட பேசுவாரே”

“உங்களப் பத்தி  பேசிருப்பார்.  தன்னப்பத்தி எதுவும் சொல்லிருக்க மாட்டார்.  ரொம்ப வருஷமா எனக்கு அவர தெரியும். ஆரம்பத்துல பேர கேட்டதுக்கு ஞானசூன்யம் என்றார். தானே வச்சிகிட்டதுன்னார். பிறகு ஒருநாள் ‘நான் பாபா’ன்னு சொன்னார்.  ஆமா அவரப் பத்தி கேக்குறிங்க.   நீங்க யாரு?”

பாபா எங்கே?  அவர் ஏன் என்னிடம் வேஷ்டி வாங்கி கேட்டதே இல்லை.  அதற்கான தகுதியை நான் இன்னும் பெறவில்லையா? அப்படி சொல்ல முடியாது.  கத்தரிக்கோல் வாங்கிக் கேட்டது,  தானே முடிவெட்டிக் கொள்வதற்காக இருக்கலாம்.

சூன்யத்திலிருந்து ஞானம் தோன்றுகிறது.  அவர் ஞானசூன்யம். அவர் அருவா? அருவுருவா? அதெல்லாம் ஆழமாக எனக்குத் தெரியாது.

ஆனால், எப்போதேனும் உருவில் வருவார்.

நாளையோ;  மறுநாளோ;

பத்து ஆண்டுகள், நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகளானாலும் . . .

ஏனெனில்; அவர் ஒரு கூழாங்கல்.

வெளியான விபரம் : படைப்பு பதிப்பதில் வெளியிடப்பட்ட ‘பாதியும் மீதியும்’ என்ற  சிறுகதை  தொகுப்பில்  வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *