கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 11,842 
 
 

மூலக்குறிப்பேட்டிலிருந்து……….

அப்ப காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறின நேரம். மதுரையில எம்.எஸ்.ஓன்னு மாணவர் சங்கம் ஆரம்பித்திருப்பதாகவும், உதவிக்கு தோழர்கள் தேவைப்படுவதாகவும் ஜில்லா கமிட்டித் தோழர் சொல்லியிருந்தாராம். நான் போனால் நல்லது என்று உள்ளுர் கமிட்டித் தோழர் சொன்னார்.

‘நானோ நாலாங் கிளாஸ் தாண்டாதவன். படிப்பை ஏறக்கட்டி விட்டு ஏரைப் பிடிச்சவன்.நம்மைப் போய் மாணவர் சங்கத்தில வேலை பார்க்கச் சொல்கிறாரே. என்ன கேணத்தனமான மனுஷன்’ என்று அவர் மேல் கோபம் வந்தது எனக்கு. பின்னாட்களில்தான் தெரிந்தது அந்த வாய்ப்பு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று.

கிராமத்திலிருந்து பதினெட்டு கல் நடந்து போய் ரயிலைப் பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்தார்கள். நானும் குடும்பம் விவசாயம் வயல் வரப்பு கேணி எல்லாவற்றையும் விட்டுவிட்டு மதுரைக்கு ரயிலேறினேன்.

ஏற்கெனவே மெட்ராஸில் எம்.எஸ்.ஓவும் சிதம்பரத்தில் சி.எஸ்.ஓவும் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரையிலும் ‘மதுரை மாணவர் சங்கம்’ ஸ்தாபிக்கப்பட்டது. அந்த எம்.எஸ்.ஓவில் போய் உதவிக்கான ஆளாகச் சேர்ந்து கொண்டேன். அந்தச் சங்கத்திலிருந்த தோழர்கள் எல்லோரும் படித்துக் கொண்டிருந்தவர்கள் என்னைத்தவிர.

கிட்டத்தட்ட ஒரு வருஷகாலம் அவர்களோடு அலைந்து திரிந்து கட்சி வேலை செய்தேன். அவ்வப்போது அவர்களின் ஹாஸ்டல் ரூம்களில் தங்கியிருந்தபோது அவர்கள் சம்பாஷணைகளைக் கேட்டு வாத-விவாதங்களைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போவேன். ‘அடேயப்பா என்னமாய்ச் சிந்திக்கிறார்கள். எப்படித்தான் இவர்களுக்கு மட்டும் புதிய புதிய சிந்தனைகள் எல்லாம் வருகிறதோ? தெரியவில்லையே’ என்று அதிசயப்பட்ட போதுதான் தோழர்கள் எனக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள்.

ஆரம்பத்தில் அவர்கள் சத்தம் போட்டு வாசித்துக் காண்பிப்பார்கள். பிறகு சிறிது சிறிதாக எழுத்துக் கூட்டி வாசிக்க வைத்தார்கள். கொஞ்ச நாட்களில் எழுதவும் கற்றுக் கொண்டேன். சின்னச் சின்னப் புஸ்தகங்களாக நிறையக் கொடுப்பார்கள். சில சஞ்சிகைகளைக் கொடுத்து உரக்கப் படிக்கச் சொல்வார்கள். “படிச்சது மனசில நிக்கணுமுன்னா படிச்சதை குறிப்பு எடுத்துக்கிடணும்” என்று அவர்களிடமிருந்துதான் இந்தக் குறிப்பெடுக்கிற பழக்கத்தைக் கற்றுக் கொண்டேன்.

ரொம்பச் சுறுசுறுப்பாக வேலை செய்த காலம் அது. தகரத்தினால் செய்யப்பட்ட கூம்பு வடிவ மெகாபோனை* ஒரு கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் சிவப்புக் கொடியைப் பிடித்துக் கொண்டு தமுக்கு அடிப்பவரை ஏற்பாடு செய்து கொண்டு தமுக்கடித்து மதுரை ரஸ்தாக்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கோஷம் போட்டு முஷ்டி உயர்த்திப் பிரச்சார ஊர்வலம் போவோம். கோயிலடி, ரயிலடி, பஜாரில், சந்தையில் உண்டியல் குலுக்கி வசூல் செய்வோம். விடிகாலை வரை மதுரை முழுவதும் நடந்தே சென்று சுவர் விளம்பரத்துக்கு வெள்ளையடித்துக் கொடுப்போம். தட்டி போர்டுகளுக்கு பசைகாய்ச்சி பேப்பர் ஒட்டிக் கொடுப்போம். வெள்ளையடிக்கப் போகும்போதும் பசை காய்ச்சும் போதும் ஒரே பேச்சுத்தான். தர்க்கம்தான். நிறைய படிச்சுக்கிட்டேன் அந்தக்காலத்தில்.

இப்படித்தான் ஒரு நாள் மறக்க முடியாத சம்பவம். அப்போது இரண்டாம் உலக மகாயுத்தம் துவங்கிய நேரம். எம்.எஸ்.ஓ. மாணவர்கள் எல்லாம் சேர்ந்து யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரம்மாண்டமாய் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். கையால் எழுதப்பட்ட போஸ்டர்களை மதுரை முழுக்க ஒட்டினோம். மற்ற ஊர்களுக்கும் விஷயம் போய்ச்சேர வேண்டும் என்று தோழர்கள் முடிவு செய்தார்கள். அன்றிரவு குரூப் குரூப்பாக பிரிந்து கொண்டு பசை வாளியோடு புறப்பட்டு விட்டோம். எனக்கும் இன்னொரு தோழருக்கும் திருப்பரங்குன்றம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவு தாண்டியதும் நடக்க ஆரம்பித்து விடிய விடிய நடக்கிறோம். அப்போது நான் பீடி பிடிக்கக் கற்றுக் கொண்ட நேரம். மூலக்கரை திருப்பத்துக்கு வந்துவிட்டோம். ஒரே கும்மிருட்டு. நடந்து நடந்து கால்களில் எல்லாம் ஒரே வலி. “சீக்கிரம் சைக்கிள் விடக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூடத் தோழரிடம் சென்னேன். “கொஞ்சம் காலாற உட்கார்ந்து போவோம்” என்று சொல்லி பசைவாளியை ரோட்டில் வைத்து விட்டு ரோட்டோரத்தில் உட்கார்ந்து கொண்டோம். தோழரிடம் தீப்பெட்டி வாங்கி ஒரு பீடியைப் பற்ற வைத்து ஆழமாக உள்ளிழுத்தேன்.

கொஞ்சம் தளர்வாக இருக்கட்டும் என்று காலை அகட்டி விரித்து கையை விரித்து சாலையில் பரப்பினேன். கையில் ஏதோ நசநசவென்று அப்பியது. உள்ளங்கை ஈரமான உணர்ச்சி தட்டியது. சட்டென்று கையை எடுத்துப் பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தோழரிடம் சொல்லி ஒரு தீக்குச்சியைக் கிழித்துப் பார்த்தோம். அந்தச் சின்னத் தீக்குச்சி வெளிச்சத்தில் உள்ளங்கை மினுமினுத்தது. கையில் ஒருவித வடவடப்பு. ஒரு மாதிரி கெட்ட வாடை வீசியது. ஒன்றும் புரிபடவில்லை. மீண்டும் அழுத்தித் துடைத்துக் கொண்டு கிளம்பினோம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதல் கால பூஜைக்கு மணியடிக்கத் துவங்கியது. ‘ரோந்துப் போலீஸின் கண்களில் பட்டுவிடாமல் படபடவென்று விடிவதற்குள் ஒட்டிவிட வேண்டும்’ என்று அவதி அவதியாக ஒட்டி முடிக்க விடிந்து போனது.

தெருக்கிணற்றில் தண்ணிர் இறைத்து பசைவாளியைக் கழுவிவிட்டு கைகால்களையும் கழுவிக் கொண்டோம். அப்போதும் அந்தக் கெட்ட வாடை போகவில்லை.

மறுபடி மதுரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். மூலக்கரையை நெருங்கிய போது ரஸ்தா ஓரத்தில் ஒரு சில பாதசாரிகள் கூட்டமாய் நின்றிருந்தது தெரிந்தது. என்னவென்று தெரிந்து கொள்ள விரைவாய் நடையை எட்டிப்போட்டோம்.

“யாரோ ஒருத்தன மோட்டார்காரன் மோதிட்டுப் போயிட்டான் போல. அடிச்ச அடியில ஆளு மூளை சிதறி இங்க கெடக்கு. பொணம் ரோட்டுக்குக் கீழ வாய்க்கா ஓரமா கெடக்குது பாரு” என்று ஒருவர் கைகாட்டினார்.

‘அய்யய்யோ’ என்று உடம்பு பதறியது எனக்கு. அது இரவில் நாங்கள் உட்கார்ந்திருந்த இடம். ‘அப்படியானால் கையில் ஒட்டியிருந்தது என்ன? சிதறிக்கிடந்த மூளையா?

தூக்கி வாரிப் போட்டது எனக்கு. பயத்தில் சற்று நேரத்தில் ஜூரமே வந்து விட்டது. மதுரைக்குப் போயும் ஜூரம் விடவில்லை. கடுமையான ஜூரம். கடைசியில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.

தொப்’பென்று போட்டதில் தூசிப்புகை ஒரு பந்து போல் குப்பென்று மேலெழுந்தது. தூசிப்புகை எனக்கு ஒவ்வாமை. உள்ளிருக்கும் ஈஸ்னோபில்ஸ் சட்டென்று விழித்துக் கொள்ளும். சிலிர்த்துக் கொண்டு மேலெழுந்து வந்து தண்ணீர் தண்ணீராய்க் கொட்டும். பிறகு இரண்டு நாட்களுக்குத் திண்டாட்டம்தான்.

சட்டென்று கைக்குட்டையை எடுத்து மூக்கில் கட்டிக் கொண்டேன். ஒரு தற்காலிக கவசமாய் கைக்குட்டை. தூசிப்புகை ஒருவாறு அடங்கும் வரை மௌனத்தோடு காத்திருந்தேன். அடங்கியதும் அந்தத் துணி மூட்டையை மெதுவாகப் பிரிக்கத் துவங்கினேன்.

“உங்க பேர் என்ன சொன்னீங்க? மன்னிக்கணும் எனக்கு சட்டுன்னு நினைவில் ஏறிக்கிடாது”

“ராமநாதன். இது அம்மா வச்ச பேரு. அப்பா வச்ச பேரு வேற”

“அப்பா என்ன பேரு வச்சாங்க”

“ம்…. பாவெல்”

“ஓ. அருமையான பெயர். கார்க்கியோட தாயின் மகன்”

“எனக்கு அதெல்லம் பிடிக்கல்ல சார். அம்மாவுக்கு ரொம்ப தெய்வபக்தி. ராமேசுவரம் கோயில்ல போயி நேர்ந்துக்கிட்ட பின்னாடி பிறந்தேனாம். அதுனால அம்மாவுக்கு ராமநாதன்னு பேர் வைக்க ஆசை. அப்பாவுக்கு சாமி கீமியெல்லாம் பிடிக்காது. அவரு கொள்கை கட்சின்னு அலையுறவரு. எனக்கு அம்மா மேலதான் பிடிப்பு ஜாஸ்தி. அதுனால அம்மா ஆசைப்பட்ட பேரெயே வச்சுக்கிட்டேன். ஊர்க்காரங்க கூப்புடுற மாதிரியா இருக்குது அவர் வச்ச பேரு?”

உள் விவகாரங்களில் எல்லை மீறித் தலையிட்டு விஷயங்களைக் கிளறி எடுப்பது முற்றிலும் புதியவனான அன்னியனான எனக்கு அழகில்லை என்றாலும் தகவல் திரட்டுவதற்காகவே வந்த ஒரு பத்திரிகை நடத்துபவன் இந்த வரன்முறைகளை எல்லாம் தாண்டித்தானே ஆக வேண்டும். மேலும் கிளறிவிட்டுப் பேச்சுக் கொடுத்தேன்.

“ஒங்களுக்குச் சின்ன வயசாத் தெரியுது. ரொம்ப நாள் கழிச்சுப் பிறந்தீங்களோ?”

“இல்ல சார். ரொம்ப வயசுக்கப்பறம்தான் எங்கப்பா கல்யாணமே செஞ்சுக்கிட்டாரு. சுதந்திரப் போராட்டம் கம்யூனிஸ்ட்டுக் கட்சின்னு எங்கெங்கோ சுத்திக்கிட்டிருந்தவரு ரொம்ப வயசு கழிச்சுதான் இங்க ஊருக்கு வந்திருக்காரு. எங்கம்மா மொறை வேணும். சொந்தக்காரங்க கட்டாயத்துல கட்டிக்கிட்டாராம். ரெண்டு மூணு பிள்ளைங்களைப் பெத்துட்டு மறுபடியும் தேசாந்திரம் போயிட்டாரு”

“இப்ப அவர் இருக்கிறாரா?”

“யாருக்குத் தெரியும்?” சட்டென்று வந்த பதிலின் உக்கிரம் என்னைத் துளைத்தது.

“இதுதான் சார். அவரு தேடி வச்ச தெரவியம். சொத்து” குரலில் கேலி தொனிக்க துணி மூட்டையைக் காட்டினார் ராமநாதன்.

மிக நீண்ட காலங்களாக பரணில் வாசம் செய்திருந்ததால் ஒரு வித பழைமை வாசம் அதிலிருந்து கிளம்பியது. நெடி அடித்தது மூக்கில். சுற்றிக் கட்டப்பட்டிருந்த துணியை பூச்சிகள் கடித்துச் சுவைத்து ஆயிரமாயிரம் கண்களாக்கியிருந்தன. நெடுநாள் அவிழ்க்கப்படாத ரகசியம்போல இறுக்கமாய் இருந்தது முடிச்சு. முடிச்சை அவிழ்க்க எத்தனித்தேன். முடியவில்லை. நெடிய தூசிகள் பூசிய அந்த முடிச்சு வலுவாய் இருந்தது. பிரிக்கத் திணறினேன். இயலவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்ததில் நகக்கண்களில் எல்லாம் வலி.

இதில் தனக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை என சம்பந்தப்படாமல் உதவிக்குக் கூட முன்வராமல் முகத்தில் எந்தவித சலனமுமற்று ராமநாதன் என்னை ஒரு விசித்திர வஸ்து போலப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் ஒரு வழியாய் கஷ்டப்பட்டு பிரித்து விட்டேன். உள்ளே சில புத்தகங்கள், சில பத்திரிகைகள், சில நாளிதழ் நறுக்குகள், இரண்டு நோட்டுகள் என பழைமைத் தூசி படிந்து கிடந்தன. மீண்டும் என் தற்காலிக கவசமான கைக்குட்டையை மூக்கில் சரியாகப் பொருத்திக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். அரும் பெரும் புதையல் கிடங்கிற்குள் தேடும் ஆர்வத்தோடு.

மாப்பசான் கதைகள், வி.ஸ.காண்டேகரின் மொழி பெயர்ப்புகள், தொ.மு.சியின் ‘புயல்’ நாவல், தமிழ்ஒளியின் புதுமை இலக்கியம், சில மார்க்சிய தத்துவ சிறு பிரசுரங்கள், லோகோபகாரி, ஊழியன், தேசபந்து பத்திரிகைகள், ஒரு சில துண்டுப் பிரசுரங்கள், பழுப்பேறி பழுப்பேறி சிதிலமடைந்து போன புகைப்படத்துடன் கூடிய ஒரு சில நாளிதழ் நறுக்குகள் என தேடுவதற்கு நிறையவே இருந்தன. ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டு வந்தபோது பழைய சோவியத்நாடு பத்திரிகையின் வழ வழ அட்டை போட்ட இரண்டு நோட்டுகள் தென்பட்டது. கையில் எடுத்தேன். வழ வழ காகிதங்கள் காலச் செரிமானத்தில் தனது வழவழத் தன்மையை இழந்து மெலிதான சொர சொரப்பை ஏற்றிக் கொண்டிருந்தன. பிரித்தேன். இரண்டு வெள்ளிப் பூச்சிகள் மீசையைத் தூக்கிக் கொண்டு ஓடின. தரையில் தட்டி பூச்சிகளை விரட்டலாம் என்றால் தட்டுகிற மெல்லிய அதிர்வில் தாள்கள் ஒடிந்து சுக்கு நூறாகிவிடும் போலிருந்தது.

ஒரு கண்ணாடிப் பேழையைக் கையாளும் கவனத்தில் பக்கங்களைத் திருப்பினேன். முகப்பில் அரிவாள் சுத்தியல் சிவப்பு மையினால் வரையப்பட்டிருந்தது. தோழர் பழனிக்குமார் என்று சிவப்பு மையினால் பெயரிடப்பட்டிருந்தது. கால கதியில் அந்தச் சிவப்பு வெளிறிப் போயிருந்தது.

உள்ளே சிறு சிறு குறிப்புகளும், நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்ட மேற்கோள்களும், ஒரு சில கவிதை வரிகளும்… சில அனுபவக் குறிப்புகளுமாய் விரவிக் கிடந்தது.

மெதுவாக கவனத்தோடு புரட்டிக் கொண்டு வந்த போது ‘நெருப்பாற்றின் மீது மயிர்ப் பாலம்’ என்ற தலைப்பு கவனத்தை ஈர்த்தது.

மூலக்குறிப்பேட்டிலிருந்து……

‘நெருப்பாற்றின் மீது மயிர்ப்பாலம்’

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல சஞ்சிகைகள் துவங்கப்பட்டன. 1876 இல் தாய்மொழி பத்திரிகைச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாம் தணிக்கை செய்யப் பெற வேண்டும் என்ற ரூல் கொண்டு வந்தார்கள். அதன்படி சஞ்சிகைகள், தினசரிகள் எல்லாம் தணிக்கைக்கு உட்படுத்தப் பெற்ற பின்னரே பிரசுரிக்க வேண்டியிருந்தது. தணிக்கையையும் ரூல்ஸையும் பகிஷ்கரித்த சஞ்சிகைகள் மீது தண்டம் விதிக்கப்பட்டது. பின்னர் ‘ஈடுகாணம்’1 செலுத்தி மீண்டும் பத்திரிகை நடத்த வேண்டும். ‘தாருல் இஸ்லாம்’ எனும் பத்திரிகை ஆசிரியர் தாவூத் ஷா, இந்த ரூல்ஸையும் தணிக்கையையும் பற்றி எழுதும் போது அடியிற் கண்டபடி எழுதினார்.

நெருப்பாற்றின் மீது மயிர்ப் பாலத்தில் நடப்பதை ஒத்திருக்கிறது.

டடா, என்னவொரு கவித்துவமான சொல்லாடல். அருமையான உவமை. அற்புதமான படிமச் சேர்க்கை. நவீன கவிதை உத்தியின் வார்த்தைகளைப் போட்டு நிறையவே சிலாகிக்கலாம் இதை”.

நல்லதொரு குறிப்பைப் படித்த மனத் திருப்தியில் நிமிர்ந்தேன்.

ராமநாதனைக் காணோம். எப்போது என்னை விட்டு அகன்றார் என்ற சுய விழிப்பே இன்றி அந்தக் குறிப்புகளுக்குள் மூழ்கி இருந்திருக்கிறேன். மெல்ல எழுந்து வாசலை நோக்கி நடந்தேன்.

வாசலில் தன் பிள்ளைகளை அதட்டி சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தார் ராமநாதன். அவரின் கோபத்தையும் ஏச்சு வேகத்தையும் ரசித்தபடியே திண்ணையில் அமர்ந்தேன்.

“சரி விடுங்க பாவெல். ஸாரி ராமநாதன். சின்னப் பிள்ளைங்கதானே! விட்டுட்டு வாங்க. கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோம்”.

“என்னத்த சார் பேசுறது? ஒங்களுக்கு எழுதுறது பொழப்பு. எனக்கு அப்பிடியா? தொலி அடிக்கப் போகணும். ஏகப்பட்ட சோலி கெடக்கு.

“சீக்கிரமாப் போய்யான்னு” சொல்லாமல் சொன்னார் ராமநாதன்.

“உங்களுக்கு எவ்வளவு நெலம் இருக்குது ராமநாதன்?”

“எங்க நெலம் இருக்குது. நொம்பலம்தான் இருக்குது. இருக்குற கொஞ்சூண்டு கோமணத் துணி நெலத்தைக் கூட கட்சிக்கு தானம் பண்ணிட்டாரு மகராசன்” குரலில் கடுப்பேறியிருந்தது.

நீண்ட நேரம் இங்கிருப்பது அவ்வளவு உசிதமல்ல. புறப்பட்டுவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தபோது,

“தோழர் வூட்டுக்கு வந்தவரு இவருதானா?” என்றொரு குரல் கேட்க திரும்பினேன்.

“ஆமா! வேலையத்துப் போய்…….” எனது திரும்பலைக் கவனித்த ராமநாதன் சட்டென்று பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.

ராமநாதனுக்கு அவர் அப்பா மீதுள்ள வெறுப்பும் கோபமும் அவரைப் பற்றி அக்கறைப்படும் மனிதர்கள் மீதெல்லாம் திரும்புகிறது என்ற உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்டு புறப்பட ஆயத்தமானேன்.

“ரொம்ப நன்றிங்க ராமநாதன். அப்ப நான் கௌம்புறேன். கடைசியா ஒரு கேள்வி, ஒரு வேண்டுகோள். இப்ப தோழர் வீட்டுக்கான்னு கேட்டாரே? யார் அந்தத் தோழர்?”

“அதுவொண்ணுமில்ல. எங்கப்பா பேரு பழனிக்குமாரு. ஆனா இங்க யாரும் அவரை பேரைச் சொல்லிக் கூப்புடமாட்டங்க. தோழருன்னுதான் சொல்லுவாங்க. அப்படிப் பழக்கிட்டாரு. தோழர் வீடுன்னு கேட்டாத்தான் நம்ம வீட்டைக் காமிப்பாங்க. எல்லாந் தோழர் தோழர்ன்னு ஆகிப் போச்சு”.

“ரொம்ப மகிழ்ச்சி ராமநாதன். தோழர் பழனிக்குமார், ஸாரி, உங்கப்பா எழுதின இந்த நோட்டை மட்டும் நான் எடுத்துக்கிடலாமா?”

தயக்கத்தோடு அனுமதி கேட்டேன்.

“நோட்டு மட்டுமில்ல. எல்லாத்தையும் எடுத்துக்கங்க. இங்க இருந்து என்ன ஆவப்போவுது? சனியன் எடத்தத்தான அடைக்குது. தாராளமா எல்லாத்தையும் எடுத்துக்கோங்க. ஆனா? சும்மா எடுத்துக்கப் படாது”.

ராமநாதன் பணம் எதிர் பார்க்கிறார் என்று தெரிந்தது. எவ்வளவு கொடுத்தாலும் கிடைத்தற்கரிய பெரிய பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு, அதன் அருமை பெருமை தெரியாதவராய் இருக்கிறாரே. பாவம். அவர் வறுமை அவருக்கு.

பஸ்ஸிற்கும் உத்தேச செலவிற்கும் போக மீதி எவ்வளவு இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். ஒரு கொள்கை சார்ந்த கஷ்ட ஜீவன பத்திரிகை நடத்துபவனிடம் இத்தகைய அரிய பெரிய பொக்கிஷத்திற்கு அள்ளிக் கொடுக்க மனம் இருந்தாலும் பர்ஸில் நூற்றி ஐம்பது ரூபாய்தான் தேறியது. எடுத்துக் கொடுத்தேன்.

பெற்றுக் கொண்டபோது ராமநாதன் கண்களில் தெறித்த சந்தோஷ மின்னல் பொறி கண்டு எனக்குள் வலித்தது.

1. அன்றைய கை ஒலிபெருக்கி.
2. அபராதம்.
3. பிணைத்தொகை (ஜாமீன்)

(தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் விருதுநகர் மாவட்டக் கிளையின் ‘சுவடுகள்’ சிறுகதைத் தொகுப்பு நூலிருந்து…….) .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *