கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 12,960 
 

அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும் மணமாகாகவில்லை. வேலை கிடைக்காததினாலும் போக விருப்பமில்லாததாலும் அப்பாவுடன் சேர்ந்து சுயதொழில் முயற்சியில் கடல் தொழிலில் இறங்கி விட்டான். தற்போது அப்பாவிற்குச் சொந்தமான ஒரு மோட்டார் கட்டுமரமும் அவனது முயற்சியால் வங்கியில் கடன்பெற்று வாங்கிய சிறு இயந்திரப்படகின் உதவியால் தொழில். சமயத்தில் இவன் அடுத்தவர் படகில் கூலிக்கும் கடலுக்குச் செல்வதுண்டு.

அமாவாசை அன்று பெரும்பாலான இந்துக்கள் வீட்டில் அசைவம் இல்லை. வியாபாரம் குறைவு என்பதினால் அமாவாசைக்கு அமாவாசை விடுப்பு. இது மீனவர் குப்பத்தில் இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.

கடலுக்கு ஆண்கள் தொழிலுக்குச் செல்வதில்லை. பெண்கள் மீன் விற்கப் போவதில்லை. ஆண்கள் கடலுக்குச் சென்றால்தானே இவர்கள் மீன் விற்க முடியும். எனவே அமாவாசை என்றால் ஆண் பெண் அனைவருக்கும் விடுப்பு.

இந்த விடுப்பில்தான் ஆண்கள் எல்லாரும் காலை 10.00 மணி அளவில் அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாயக் கூடத்தில் கூடுவார்கள். ஊர் பஞ்சாயத்தார்கள் அன்றைக்குக் கண்டிப்பாக வருகை புரிந்து இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவு@ மனஸ்தாபங்கள் விசாரிக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு அபராதமோ, தண்டனையோ விதிக்கப்படும். சமையத்தில் கூட்டத்தில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.

அன்றைக்கு….தலைக்கு இவ்வளவு என்று சந்தாப்பணம் வசூலிக்கப்படும். இந்த சந்தாப்பணம், அபராதத்தொகையெல்லாம் தேவைப்பட்டவர்களுக்கு குறைந்த வட்டிக்குக் கொடுக்கப்படும். அந்தத் தொகை தின, வார, மாத என்று வாங்கப்பட்டவரின் வசதிக்கு ஏற்றவாறு பஞ்சாயத்து காசளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஊர் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவுதல் என்று அமாவாசை என்பது குப்பத்து மனிதர்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்பதுமட்டுமல்லாமல் ஒரு நாள் ஓய்வு. இந்த நாளில்தான் ஆண்கள் அருகிலிருக்கும் நகரத்து கடைகண்ணி, அரசு அலுவலக வேலைகளுக்கெல்லாம் சென்று இதர முக்கிய வேலைகளையும் முடித்து வருவார்கள்.

கண்ணன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

கடலை ஒட்டிய மேடுதான் இவனது மீனவர் கிராமம். சுமார் 200 வீடுகள். பத்துப் பதினைந்து சிறு ஒட்டுவீடுகளைத் தவிர மற்றவைகளெல்லாம் சிறிதும் பெரிதுமான கூரை வீடுகள். வீட்டைவிட்டு இறங்கினாலே மணல்தான். வீட்டைச் சுற்றி காட்டுப்பூவரசு, நாட்டுப்பூவரசு உள்ள பனமட்டைத் தடுப்பு வேலிகள். மேட்டை ஒட்டி தரைதள தென் பகுதியில் படகுகள், கட்டுமரங்கள் நிறுத்தம். அங்கு வலை பழுது பார்க்க…இதர வேலைகளுக்கென்று சின்னச் சின்ன பந்தல்கள் என்று எல்லாம் மீனவக் குப்பத்திற்கான அப்பட்டமான அடையாளங்கள்.
வாசலில் நின்றபடியே கடலை நோக்கினான். அது வழக்கம்போல் கரையில் அலைளை மோதி பேரிச்சைசலுடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சூரியன் சரியான உச்சி கோடைக்காலம் என்பதைக் காட்ட தகதகவென்று மேலெழுந்து வந்து கொண்டிருந்தது.

மேட்டைவிட்டு மேற்குப் பக்கமாக இறங்கி… காலை மாலை இரண்டு வேளை பேருந்து செல்லும் தார் சாலைக்கு வந்தான். சாலை ஓரம் உள்ள நகராட்சி இரு குடிநீர்க் குழாய்கள் முன் வரிசையாய் சறிதும் பெரிதுமான குப்பத்துக்கு காலி குடங்கள். அப்படியே பக்கத்தில் ஒரு சின்ன பாழடைந்த கிணற்றில் ஒரு சில பெண்கள் கைவாளியை கயிற்றில் கட்டி கொஞ்சமாய் ஊறும் தண்ணீரை சேந்திக் கொண்டிருந்தார்கள். குழாயின் முன் குடங்களை வைத்த ஒன்றிரண்டு பெண்கள்…குழாயில் நீர் வருகிறாதா என்று பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
” இன்னுமாத்தே தண்ணி வரலை ? ” எதிரில் வந்த ராசாத்தியைக் கேட்டான்.

” ஆமாம்ப்பா. இந்த கோடைன்னாலே தட்டுப்பாடுதான். ஏழு ஏழரைக்குத்தான் வரும்.” சொல்லிப் போனாள்.

ரோட்டோரம் மளிகை என்கிற பெயரில் உள்ள பல சரக்குக் கடையில் சில பெண்கள் இருபது லிட்டர் தண்ணீர்க் குடுவையை தலையில் மீன் கூடையைச் சுமப்பது போல் எவ்வித பிடித்தமும் இல்லாமல் கொண்டு சென்றார்கள்.

இந்த சுத்திகரீக்கப்பட்டத் தண்ணீர்க் குடுவைகள் சிற்சில வீடுகளுக்கு மட்டுமே தாகம் தீர்க்கும் பஞ்சம் தாங்கிகள். மற்றப்படி….. கடலுக்கு எடுத்துச் செல்ல இவர்களுக்கு ரொம்ப உபயோகம். படகில் ஆட்கள் கொள்ளளவு, தேவைக்கேற்ப ஒரு குடுவையோ இரு குடுவையோ எடுத்துச் சென்றால்…இரண்டு நாட்கள் இருந்து தொழில் முடித்துவிட்டு வரும்வரை தாங்கும்.
குடுவைத் தண்ணீர்;கள் வராத நாட்களில் கஷ்டம். இந்த குடி நீர்கள் சுத்தகரீக்கப்பட்டவைகளோ படாதவைகளோ. எங்கு, எப்படி பிடித்து அடைத்து வருகிறார்கள் எப்பது தயாரிப்பாளர்களுக்கே தெரிந்த விசயம். தண்ணீர் தட்டுப்பாடு என்பதினால்… மக்கள் தேவைக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.

குப்பத்திற்கு இந்த தண்ணீர் தட்டுப்பாடு கோடைக்காலங்களில்தான் என்பது மட்டுமல்ல. மழைக்காலங்களிலும் ஏற்படும். அதிக மழை, காற்றினால்…. அடிக்கடி மின்சாரம் தடை படும். அப்படிப்பட்ட நேரங்களில் நகராட்சிக் குழாய்களில் தண்ணீர் வராது. குடிசைவாசிகள் மழை நீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப்படுத்துவதும் இயலாத காரியம். அப்படிப்பட்ட நேரங்களில்….ஒரே வழி. இந்த பாழடைந்த கிணறு. அது மழை நீரைச் சேமித்து வைத்திருக்கும். தூசோ தும்ப்போ நிறைந்து கிடந்தாலும் சேந்தி எடுத்துக் கொண்டு தேவையைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். கோடைகாலத்தில் இந்தக் கிணறும் தன் ஊற்றுக்கண் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு மக்களை அல்லாட வைத்துவிடும்.
ஊர் கடலுக்கு அருகிலிருந்தாலும் அடைமழை, ஆடை கோடையில் இந்த தண்ணீர் தட்டுப்பாடு, பஞ்சம் என்பது தீராத தலைவலி. மீனவ மக்களின் மனவலி.

‘ தெருவிற்குக் குடி நீர் வந்து ஊற்றும் இந்த நாகரீக காலத்திலேயே தண்ணீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு, கஷ்டமென்றால்……மக்கள் இந்த குழாய் வருவதற்கு முன்பு குடி நீருக்கு என்ன பாடு பட்டிருப்பார்கள், எது செய்திருப்பார்கள், எப்படி சமாளித்திருப்பார்கள். இந்த கிணறு மட்டுமே இந்த மக்களின் தேவையைப் பூர்த்தி செய்திருக்குமா ? இல்லை…. மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கிராமங்களில் போய் மீன் விற்று வருவதோடு தண்ணீரையும் தலைச் சுமையாய்த் தூக்கி வந்திருப்பார்களா ? ‘ கண்ணனுக்குள் தோன்ற…. அதுவே வியப்பு வந்து திகைப்பாய் மாற… ‘ இந்த கேள்வியை யாரைக் கேட்டால் சரியாய் பதில் சொல்வார்கள். குறைந்தது நாற்பது ஐந்து வயதைத் தொட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் அரைகுறை. முழுதாகத் தெரிய வேண்டுமென்றால்…. அவர்கள் இந்த வயதுகளைத் தாண்டி இருக்க வேண்டும். அதுவும் இந்த குப்பத்திலேயே வாழ்ந்திருக்க வேண்டும். எவர் அப்படிப் பட்டவர் ?! ‘ என்று மூளையில் வண்டு குடைய….கருப்பன் நினைவிற்கு வந்தார்.

அவர் எழுபது வயதைத் தொட்டவர். முதிர்ச்சி காரணமாக கடலுக்கு செல்ல முடியாதவரேத் தவிர….மற்றப்படி வலை கொய்வது பழுது, பார்ப்பது, படகு கட்டு மரம் கரைக்கு வந்தால் பிடிபட்டு வந்திருக்கும் மீன், நண்டு, இரால்…இதரவகைகளைப் பிரித்து சுத்தம் செய்வது என்று தன் வீட்டு படகிற்கு என்று மட்டுமல்லாமல் பிறர் படகிற்கும் உதவுவார். காலை மாலையானால்…. கடலுக்கு எதிரிலிருக்கும் அவரின் சிறு பந்தல்தான் உறைவிடம். அங்கு வலைகளை ஏதாவது செய்து கொண்டிருப்பார். அவர்தான் இந்த கேள்விக்குச் சரியான பதிலைத் தர முடியும் ! தோன்ற…. கண்ணன் கரையை நோக்கித் திரும்பினான்.

குப்பத்து ஆண்கள் விடுப்பு என்பதால் ரொம்ப சவகாசமாக படகு நிறுத்தம் தாண்டி உள்ள சவுக்குக் காட்டில் இயற்கை உபாதையை முடித்து அப்படியே கடலில் சுத்தம் செய்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் இந்த வேலையை விடிவதற்குள் முடித்துவிடுவார்கள். இவன் வயது சின்னானும் அப்படித்தான் போய் வந்தான்.
” டேய் ! நீ முடிச்சாச்சா ? ” என்று அவன் எதிர் வந்தவனைக் கேள்வி கேட்டு வந்தான்.

கண்ணன் தலையைக் கண்டதும், ” மாப்ளே…! ” மரியாதை நிமித்தம் விளித்துவிட்டு நகர்ந்தான்.

கணிப்பு வீண் போகவில்லை. கருப்பன்… அவர் வீட்டு சிறு பந்தலில் வழக்கம் போல் அமர்ந்திருந்தார். ஓட்டையாகி பழுது பட்ட வலையொன்றை மடியில் விரித்து பழுது பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிறிய பாட்டிலில் குடி நீர். அதனருகில் மூடி போட்ட எவர்சில்வர் வாளி.

” தாத்தா! ” இவன் அருகில் சென்று அமர்ந்தான்.

” வா கண்ணா ! ” தன் வேலையை நிறுத்தாமலே அவனை வரவேற்றார்.

” காலைக் கஞ்சி குடிச்சாச்சா ? ” விசாரிப்பை நேரடியாகத் துவக்காமல்.. உபசரிப்பில் விசாரணையைத் தொடங்கினான்.

காலைக் கஞ்சி என்பது இவர்;களுக்கு காபியோ டீயோ அல்ல. சுத்த நீராகாரம். அல்லது கேழ்வரகு கூழ். அதுதான் உப்புக்காற்றில் இருக்கும் இவர்கள் உடல்களுக்கு உகந்தது. மேலும் ஒதுங்க நிழலின்றி கடலில் மிதப்போருக்கும் அது குளுமை.

” அது ஆச்சு. பேரன் வந்து குடுத்துட்டுப் போனான். ” அருகிலிருக்கும் அது வந்த வாளியைக் காட்டினார்.

” அப்புறம்… ஒரு சேதி, சந்தேகம் தாத்தா ! ? ” விசயத்தைத் தொடங்கினான்.

” சொல்லு ? ”

” தாத்தா ! ஊருக்குக் குடிநீர்க் குழாய் வந்த இந்தக் காலத்திலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு, தேவை ரொம்ப அதிக இருக்கே. இந்த குழாய் வராத நாட்களில் குடி நீருக்கு என்ன செய்தீங்க ? ஊர் கேணி உபச்சாரம் பண்ணிச்சா ? ” கேட்டான்.

” அது எங்க பண்ணிச்சு. இப்போ போலத்தான் அப்பவும். ”

” அப்புறம்… எப்படி சமாளிச்சீங்க ? ”

” ஊருக்கு மேற்கால ஒரு குளம் இருக்கு பாரு. அதுதான் என்னைக்கும் ஊருணி. உசுர் நீர். ” கை காட்டினார்.

” தாத்தா !! ” அதிர்ந்தான்.

காரணம்….குப்பத்திற்கு நூறடிக்கு மேற்கால் தார் சாலையைத் தாண்டி இருக்கும் அந்த குளம் இப்போது குளமில்லை குட்டை.! மணல்வெளி குளமென்பதால்..பராமரிக்கப்படாமல் தூர்ந்து போய்…. அந்த குளத்துப் பக்கம் ஒருத்தர்கூட எட்டிப் பார்த்து புழங்கியதாய் இவன் நினைவில் இல்லை. மழைக்காலம், விவசாயக் காலங்களில் மட்டுமே அதில் தண்ணீர் தேங்கி இருக்கும். மற்றப்படி குளம் இருக்கும் அடையாளமாய் நான்கு கரைகளிலும் அடர்த்தியாய் சிறிதும் பெரிதுமான பனை மரங்கள் வரிகைக்கட்டி நிற்கும். அப்புறம்….இரண்டு பெரிய வேப்ப மரங்கள் கரைகளில் நிற்கும். மழை, தண்ணீர் உள்ள காலங்களில்…. பகல், இரவில் ஒதுங்கும் பெண்டுகள் பனை மரத்து மறைப்புகளில் ஒதுங்கி விட்டு அங்கு கால் கழுவிவிட்டு வருவார்கள்.
கோடையில் சிறுவர் சிறுமியர் அங்கு சென்று வேப்பங்கொட்டைகள் பொறுக்கி வந்து ஊருக்கு வரும் சைக்கிள் வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கி சப்புவார்கள். பனங்காய்க் காலங்களில்…. இளவட்டங்கள் நொங்கு வெட்டி சாப்பிட்டு கழிவுகளைக் குட்டையில் போட்டு வருவார்கள். பனம் பழம் விரும்பிகள்… வீட்டிற்கு எடுத்து வந்து சுட்டு சாப்பிடுவார்கள். அல்லது…கொட்டைகளை மேடுகட்டி புதைத்து… கிழங்கு உற்பத்தி செய்து விற்பார்கள், தின்பார்கள். மற்றப்படி அந்த குளத்திற்கும் இந்த குப்பத்து மக்களுக்கும் புழக்கம் சம்பந்தமாய் எள்ளளவு எந்தவித சம்பந்தமுமில்லை.

” என்ன தாத்தா ! சொல்றீங்க…? ” கண்ணன் அந்த அதிர்வு நீங்காமல் மீண்டும் கேட்டான்.

” ஆமா கண்ணா! அதுதான் எங்க உசுர் நாடி.. உசுர் தண்ணி ! ” என்றார் கருப்பன் அழுத்தம் திருத்தமாய்.

” நிசமாத்தான் சொல்றீங்களா ? ” இவனால் நம்பவே முடியவில்லை.

” சத்தியமா ? ” அதை ஊர்ஜிதம் செய்தார்.

” எப்படி ? ”

” சொல்றேன். அந்த குளத்துக்குப் பேரே காத்தான் குளம்.! ”

” உயிர் காத்தான் குளமா ? ”

” அப்படியும் வைச்சுக்கலாம். காவல் குளம்ன்னு சொல்லலாம். இந்த பேரெல்லாம் அந்தக் குளத்துக்குப் பொருத்தமா இருந்தாலும்….இதை வைச்சு அந்த பேர் இல்லே.! ” நிறுத்தினார்

” அப்புறம்…? ” இவனுக்குள் ஆவல் அதிகமாகியது. அவரிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தான்.

கருப்பன் கைவேலையை விட்டார். கால்களைக் குத்துக்காலிட்டு இரு கைகளால் கட்டிக் கொண்டு, ” உன்னை மாதிரி நான் சின்ன வயசா இருக்கும்போது என் வயசுல காத்தான் காத்தான்னு ஒரு பெரியவர் இந்த குப்பத்துல இருந்தார். அவர் முயற்சியாலத்தான் இந்த குளமே உருவாச்சி. அதான் காத்தான் குளம். ” தொடர்ந்தார்.

” நல்லா…விலாவரியாச் சொல்லுங்க தாத்தா. ” இவனும் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான்.

இன்னையப் போல அன்னைக்கும் இப்படி குடிக்க, சமைக்க….தண்ணீர் பஞ்சம். பொண்டுக மீனை வித்துட்டு திரும்பி வரும்போது ஊர் பொது கிணத்து தண்ணீர் சேந்தி வெத்துக் கூடைக்குள்ளே பானையை வைச்சு மூணு கிலோ மீட்டர் சுமந்து வருவாங்க. மறுநாள் காலை மீன் விக்கப் போகும்போது தலையில பாரம் சுமந்து இடுப்புல வெத்துக்குடத்தோட போவாங்க. இப்படித்தான் பொண்டுக சமாளிச்சாங்க. இவுங்க கஷ்டங்களைப் பார்த்து மனசு கஷ்டப்பட்ட காத்தான்… தன் கொஞ்சம் படிப்பறிவால்…. எங்களுக்கு குடிக்க குளிக்க தண்ணிக்கு குளம் வேணும் கிணறு வேணும்ன்னு அதிகாரிங்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதினார். நேரடியாவும் போய்ப் பார்த்தார். யாரும் இவரைக் கண்டுக்கலை. பொருட்டாவும் நெனைக்கலை. எதுவும் நடக்கலை. வெறுத்துப் போன அவர் ஒரு நாள்…இன்னைய மாதிரி அந்த நாள் அமாவாசை கூட்டத்துல…நமக்குத் தண்ணீர் பஞ்சம் பொண்டுக கஷ்டம் தீர வழி இருக்கு! சொன்னார்.

” எப்படி ? ” எல்லாரும் ஆவலாய் அவர் முகத்தைப் பார்த்தாங்க.

” மழை நீரை சேமிக்கனும்…! ” சொன்னார்.

” புரியலை…?! ” ஆவலாய்க் கேட்ட முகங்களில் குழப்பம்.

” மழைக்காலத்துல நம்ப கிணறு ரொம்புறாப்போல….ஆழ, அகலமா குளம் வெட்டினா தண்ணீர் தேங்கும் சொன்னார். அது மட்டுமில்லாம…பக்கத்துல விவசாயத்துக்குப் போக மீதி நீரையும் அதில் சேமிச்சா நம்ம தண்ணீர் பஞ்சம் தீரும்.! ” சொன்னார்.

எல்லாருக்கும் ஓரளவுக்குப் புரிஞ்சிச்சு.

” எங்க வெட்ட ? ” நான் கேட்டேன்.

” ஊருக்கு மேற்கால.. ”

” வெட்ட இடம் ? ”

” புறம்போக்குல வெட்டுவோம். அதிகாரிங்க வருவாங்க. நாங்க கேட்டோம். கொடுக்கலை. அதான் வெட்றோம்ன்னு சொல்லி வெட்டுவோம். ”

” வேணாம் வம்பு. அரசாங்க நெலம் சும்மா கிடந்தாலும் கிடக்கும். மக்கள் உபயோகத்துக்குன்னு நாம போய் அங்கு காலடி எடுத்து வைச்சா…முழிச்சுக்கிட்டு வந்து தடுப்பாங்க. கைது பண்ணுவாங்க. இது களி திங்கிறதுக்கு வழி! ” சொன்னான் ஒருத்தன்.

” அப்படியா ? அப்போ என் நிலத்துல வெட்டலாம்! ” கருப்பன் படக்குன்னு அவனுக்கு பதில் சொன்னார்

” வெட்;டலாம். ஆனா…அது உங்களுக்குச் சொந்த குளம் ஆகுமே !! ன்னான் சடையன்னு ஒருத்தன்.

” நான் ஊருக்கே அதைத் தானமாய்த் தர்றேன். ” இதுக்கும் அவர் பதில் தயாராய் வைச்சிருந்தார். தயக்கமில்லாமல் சொன்னார்.

” அப்படின்னா சரி. ” எல்லாரும் ஒட்டு மொத்தமாய்த் தலையாட்டி சம்மதிச்சாங்க.

” இது குடி நீருக்கு மட்டுமா எல்லாத்துக்குமா ? ” என்றான் சித்திரவேல்.

” ஆடு மாடு, நம்ம பயன்பாடு மொத்தத்துக்கும். ”

” இது மழை, தண்ணி காலத்துக்கு சரி. கோடைக்காலத்துக்கு எப்படி சரி வரும். ஆடுமாடு குளிச்சா குழம்பும். நாம வெளியே போய் காலலம்பினா அசிங்கம். ” சொல்லி ஒருத்தன் முகம் சுழிச்சான்.

” எல்லாத்துக்கும் வழி இருக்கு.! ”

” எப்படி ? ”

” கோடைக்காலத்துல… குடி நீருக்கு மட்டும் மக்கள் இறங்க அனுமதி. மத்தப்படி ஆடு மாடு, வேற எதுக்காகவும் யாரும் இறங்கக் கூடாது. ”

” புரியலை..?! ”

” கட்டுப்பாடுதான்.! தினம் வீட்டுக்கு ஒருத்தர் குளத்துக்குக் காவல் இருப்போம். முடியாது… சிரமம்ன்னா…தொழிலுக்குப் போகாத வயசான கிழவன், கிழவியை சம்பளம் கொடுத்து காவலுக்குக் கரையில் குந்த வைப்போம். அந்த சம்பளத்தை நம்ம ஊர் பொது நிதி சங்க பணத்திலிருந்து கொடுப்போம். அது வேலை வெட்டி இல்லாம உட்கார்ந்திருக்கிற பெரியவங்களுக்கும் வருமானம். ”

கேட்ட எல்லார் முகத்திலும் திருப்தி.

” காவல் சரி. மீறி இறங்குறவங்களை என்ன செய்ய ? ” ஒருத்தர் கேள்வி.

” அபராதம், தண்டனை விதிச்சு கட்டுப்படுத்தலாம். அந்த பொறுப்பை ஊர் தலைவர், பஞ்சாயத்திடம் ஒப்படைக்கலாம்.! ”

நிசப்தம் !

” சரி. ஆடுமாடு உபயோகம், மக்கள் குளிக்க… பிற உபயோகத்துக்கு வழி…? ” கூட்டத்துக்குள்ளிருந்து ஒரு திடீர்ன்னு குரல் கொடுத்தார்.

” மக்கள் தண்ணீரை மொண்டு கரையில வைச்சு எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துக்கனும். கரைக்கு மொண்டு வந்துதான் மக்கள் குளிக்கனும், ஆடுமாடுகளைக் குளிப்பாட்டனும். நமக்குக் குடிக்க வேணும்ன்னா….நாமதான் குளத்தை நல்லதாய்ப் பாதுகாக்கனும். அப்புறம் குளத்தில் வளரும் மீன்களை நாம வருசத்துக்கு ஒருதரம் பிடிச்சு பங்கு பிரிச்சுப்போம். மனசு வைச்சா நமக்கு மார்க்கமுண்டு.” கருப்பன் சொல்லி நிறுத்தினார்.

‘ ஆ…! நல்லா இருக்கே….! ‘ எல்லார் முகத்திலும் பரவசம், மகிழ்ச்சி, சம்மதம்.

கருப்பன் சொன்னதோட நிறுத்தாமல்….. மறுநாளே ஊர் தலைவர், பஞ்சாயத்தையெல்லாம் அழைச்சுப் போய் ஊர் பேரில் குளத்துக்கான மூணு ஏக்கர் நிலத்தைத் தானம் எழுதி கிரையம் முடிச்சு அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்து முடித்தார். அப்படியே வேலையை முடிக்கவும் உறுதுணையாய் இருந்தார்.

இன்னையக் காலம் போல்… எந்த வேலையையும் நெனைச்சா முடிக்கிறாப்போல் செய்ய எந்த எந்திர முகாந்தரங்களும் இல்லே. அதனால மறுநாள் ஊர் மக்கள் மொத்தமும் வேலையில் இறங்கினாங்க.

அப்போ இந்த ஊர்ல மொத்த சனத்தொகையே நூறுதான். எல்லார் கையிலும் தட்டுக்கூடை, மண்வெட்டி. பத்து நாட்கள்… வேலை வெட்டி, சோறுதண்ணி மறந்து கடுமையாய் வெட்டினோம். அப்புறம்…. வேலை இல்லாத சமயத்துல எல்லார் மட்டுமில்லாம நெனைச்சவங்களெல்லாம் போய் வெட்டினாங்க. ஒரு மாசத்துல குளம் அரை தென்னை மரம் ஆழமாச்சு. மணல்சாரி என்கிறதுனால வேலை சுலுவாச்சு. மூணு ஏக்கர் மொத்தமும் குளம். வண்டி போற அளவுக்கு நாற்புறமும் கரை. அப்புறம் அது கரையாமலிருக்க கரை வெளிப்புறத்தில்…..பனம் கொட்டைகளை வெளியிலிருந்து பொறுக்கி எடுத்து வந்து நட்டோம். அப்புறம்…. பறவைகள் எச்சமிட்டு வளரும் மரக்கன்றுகளை உட்பக்க கரையோரங்களில் நட்டோம்.

மழை பேய்ஞ்சு நீர் நிறைஞ்சு… இந்தக் குளம் புழக்கத்துக்கு வந்தபிறகு… மக்களுக்கு வந்த மகிழ்ச்சி இருக்கே..! சொல்லி முடியாது. அடடே! இன்னைக்கு நெனைச்சாலும் புல்லரிக்குது. வானத்தைப் பார்த்து சிலாகித்தார் கருப்பன்.

அப்படியே கொஞ்ச நேரம் இருந்து மீண்டும் தொடர்ந்தார்.

நம்ம மீனவ ஆண் பெண் புள்ளைங்களுக்கு இதுதான் நீச்சல் கத்துக்கிற குளம். நீந்தியும் மரத்திலேர்ந்து குதிச்சும், கரையிலேர்ந்து குதிச்சும் குதியாலம் போடுலாங்க. மழை, தண்ணீர் வரத்து நாட்களில் குடிக்க, கொப்பளிக்கன்னு குப்பத்து மக்களே இங்கு வந்து கொட்டமடிக்கும். இன்னைக்குத் தண்ணீர் குடுவையை கடலுக்கு எடுத்துப் போறமாதிரி…அன்னைக்கு இந்தக் குளத்துத் தண்ணியைத்தான் குடத்துல புடிச்சி படகுல எடுத்துப் போவாங்க.

தண்ணீர் என்ன ருசி, தெளிவாய் இருக்கும் தெரியுமா ! கண்ணாடி மாதிரி இருக்கும் தண்ணீர். குளத்தோரம்…குனிஞ்;சு பார்த்தால் தரை அடி தெரியும். மீன்கள் மேயும். தாமரையும், அல்லியும் பூத்துக் குலுங்கும். எந்த ஒரு கோடையிலும் தண்ணி வத்தவே வத்தாது. ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை குளத்தைச் சுத்தப்படுத்துவோம். கோடைக் கடைசியில்….மேட்டூரில் தண்ணீர் பாசனத்துக்குத் திறந்து விட்டதும்…இங்கே குளத்துல இருக்கிற தண்ணியை பக்கத்துல இருக்கிற குட்டையில் இறைச்சு விட்டு…கரையில் அனாவசியமாய் வளர்ந்திருக்கிற புல் பூண்டையெல்லாம் அழிச்சு… வண்டலை வழிச்சு சுத்தமா வைச்சு தண்ணி வந்ததும் விடுவோம்.

கோடையில்…. காவலுக்குப் பயந்தது மட்டுமில்லாம மக்கள் கட்டுப்பாட்டோடும் இருந்தாங்க. அன்னைக்கு இந்த குளத்துக்கு இருந்த மதிப்பு மரியாதை….! இன்னைக்கு நெனைச்சாலும் சிலிர்க்கும்.

கருப்பன் இப்படி சிலாகித்துச் சொன்னதைக் கேட்கவே பிரமிப்பாய் இருந்தது கண்ணனுக்கு.

”அப்புறம்…இந்த குளத்தை எப்போ தாத்தா இப்படி புழக்கமில்லாமல் விட்டீங்க? ” கேட்டான்.

” இதுல ஒரு துக்க சமாச்சாரம் நடந்து போச்சு. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லேன்னாலும் சொல்றேன். ” நிறுத்தி உடன் முகம் சிறுத்தார்.

” சொ…சொல்லுங்க…? ”

” இந்த குப்பதிலேர்ந்து ஒரு சின்ன பொண்ணு பக்கத்துல இருக்கிற நகரத்துல போய் கல்லூரி படிப்பு படிச்சா. அப்போ… போக்குவரத்து வசதி கம்மி. அஞ்சு கிலோமீட்டர் சைக்கிள்லதான் போவாள், வருவாள். அப்படி ஒரு நாள் போனவள்….வழக்கம்போல சாயந்தரம் திரும்பலை. இருட்டி ராத்திரி ஏழு மணி ஆகியும் காணோம். பெத்த அப்பன் சைக்கிளை எடுத்துக்கிட்டு கல்லூரிக்கேப் போனான். அது பூட்டி இருந்துது. வாசல்ல உட்கார்ந்திருக்கிற காவலாளியிடம்…, என் பொண்ணு எங்கே ? விசாரிச்சிருக்கான். அதுக்கு அவர், உன் பொண்ணு வகுப்புப் புள்ளைங்களுக்கு கல்லூரி விட்டு ஆறு மணி வரை சிறப்பு வகுப்பு வைச்சி விட்டாங்க. காயத்ரி..அவள் தோழி அடுத்துத் தெரு அனிதாவோட கல்லூரியை விட்டு வெளியேப் போனாள். அங்கே போய் விசாரின்னு ஒரு விலாசத்தைச் சொல்லி அனுப்பிச்சிருக்கார். அவனும் அங்கே போய் விசாரிக்க…இங்கே வீட்டுக்கு வந்து என்னோட கொஞ்ச நேரம் இருந்துட்டு கொஞ்சம் இருட்டினதும் கிளம்பிட்டளேன்னு அவள் பதில் சொல்ல…. வீட்டுக்கு வந்த பொண்ணு எங்கே போயிருப்பாள்ன்னு இவன் யோசனை, குழப்பத்தோட வீட்டுக்கு வந்தான். மணி எட்டாகியும் பொண்ணைக் காணோம்…. கலக்கம்.! போலீஸ்ல புகார் கொடுக்கலாமா வேணாமா என்கிற யோசனையிலே வீட்டை விட்டுக் கிளம்ப…பொண்ணு வாசலுக்கு வந்துட்டாள்.
ஏம்மா இவ்வளவு நேரம்ன்னு பெத்தவன் கேட்டதுக்கு…. ஒரே அழுகை.

என்னம்மான்னு தாயும் வந்து விசாரிச்சா…..

” வரும்போது இருட்டுல ரெண்டு பேர் வழி மறைச்சி…..தூக்கிப் போய்….. யாருன்னே தெரியலை..! ” ன்னு ஒரே அழுகை.

பெத்தவங்க அப்படியே விதிர்விதிர்;ச்சு சமைஞ்சு போனாங்க. ஒரு விழியாய் மீண்டு…

சரிம்மா… போனது போகட்டும் விடுன்னு சமாதானப்படுத்தியும் பொண்ணு கேட்கலை.

காலையில் விடிஞ்சு படுக்கையில் பார்த்தால் பொண்ணைக் காணோம். பெத்தவங்க. கடற்கரை ஓரம் ஓடி காணலை. மரம் மட்டைகளில் தேடி கிடைக்கலை. மதியம் பன்னிரண்டு மணிக்கு இந்த குளத்தோரம் காயத்ரி மிதந்தாள். பார்த்த எங்களுக்கெல்லாம் வயிறு பிச்சுக்கிச்சுப் போச்சு. நிறுத்தினார்.

முகத்தில் அதிக வாட்டம்.

கேட்ட கண்ணனுக்கும் கஷ்டமாக இருந்தது.

” அந்த பொண்ணு மிதந்தால குளம் புழக்க வழக்கத்தைக் கை விட்டீங்களா ? ” மெல்ல கேட்டான்.

” இல்லே. கொஞ்சநாள் பயந்து அரசல் புரசலாய் போக்குவரத்தை கம்மி செய்த மக்கள் சில நாட்களில் பயம் தெளிஞ்சு பழையபடி புழங்க ஆரம்பிச்சாங்க. ஊருக்கு இந்த குடிநீர் குழாய் வந்தூன் அந்த குளம் அழிஞ்சுது. ” வெறுப்பாய்ச் சொன்னார்.

” விளங்கலை..? ” கண்ணன் குழம்பினான்.

அப்போ காத்தான் எடுத்த முயற்சியோ… இல்லே, அரசாங்க நடவடிக்கையோ….தெரியலை. நகராட்சி கொண்டு வந்து குடி நீர் குழாய் போட்டு தண்ணீரை வாசலுக்கே கொண்டு வந்ததினால….மக்கள் எல்லாரும் இதையே எல்லாம் சுலபமா புடிச்சு…. புழங்க ஆரம்பிச்சு குளத்தை மறந்தாங்க. குளம், கோவில், வீடு எதுவாய் இருந்தாலும் சரி… மக்கள் கொண்டாடினால்தான் அதுக்கு மதிப்பு, மரியாதை, சிறப்பாய் இருக்கும். தவிர்த்தால்….. எல்லாம் குட்டிச்சுவர் பாழ்.

ஆரம்பத்தில் குளம்… ஆடுமாடுகள் புழங்கி…..பின்னால பெண்டுகள் ஒதுங்குமிடமாகவும் ஆகி ‘ பீ ‘ குளம் ஆச்சு. அப்புறம் அதுவும் இல்லாமல் போய்….மக்கள் திரும்பவும் இல்லை. பராமரிக்கவும் இல்லே. கால வெள்ளத்தில் கரையெல்லாம் கரைஞ்சு இப்போ பனங்கரையும் குட்டையுமாய் பக்கத்துல இருந்த குட்டையும் அழிஞ்சு போய் இப்போ நிர்க்கதியாய் நிக்குது. ” சொல்லி முடித்து பெரு மூச்சு விட்டார் கருப்பன்.

கேட்கவே கஷ்டமாக இருந்து மனதைப் பிசைந்தது கண்ணனுக்கு. அதே சமயம் அவனுக்குள் திடீரென்று ஒரு ஞனோதயம். மனதில் பளிச்சென்று ஒரு எண்ணம் உதயமானது.
கொஞ்சம் யோசித்து திடமானதும், ” தாத்தா! என்ன வாய்ப்பு வசதி வந்தும் அன்னைக்குப் போலவே இன்னைக்கும் இங்கே தண்ணிப் பஞ்சம். போதாதுக்குச் சுத்தம், சுகாதாரம்ன்னு நெனைச்சு….சத்து இல்லாத இந்த சுத்திகரீக்கப்பட்ட குடி நீர்க் குடுவை நீரை இங்கே குடிக்கிறதோடு மட்டுமில்லாம கடலுக்கும் கொண்டு போய் குடிச்சு சத்து குறைவாய் இருக்கோம். அந்த காலம் போல் இந்த குளத்தை வெட்டி, தூர்வாரி….. மறுபடியும் புழக்கத்துக்குக் கொண்டு வந்து நம்ம தண்ணிப் பஞ்சம் தட்டுப்பாட்டைத் தீர்த்தாலென்ன…? ” சொன்னான்.
சிறிது நேரம் மௌனமாய் இருந்து யோசித்த கருப்பன்……

” செய்யலாம். நல்ல யோசனை ? ஆனா….முந்தி மாதிரி இதையெல்லாம் செய்ய யார் முன்னுக்கு வருவா ? ” கேட்டார்.

” அரசாங்கத்துல சொல்லி….நூறு நாள் வேலை ஆட்களை மடக்கி இறக்கி புதுப்பிக்கலாம்.” சொன்னான்.

” செய்யலாம். ஆனா சரிவராது! ” என்றார் கருப்பன்.

” நூறு நாள் வேலையில் எந்த ஆட்களும் சரியாய் வேலை செய்யிறதில்லே. ஏதோ அரசாங்கம் இனாமாய்க் கொடுக்கிறதாய் நினைச்சி… எல்லாரும் புல்லைப் புடுங்கிப் பொழுதைக் கழிச்சுப் போறாங்க. அப்படியே அவர்கள் வெட்டினாலும்…. பத்து வருசமானாலும் இந்தக் குளத்தை புதுப்பிக்க முடியாது. உடன் புழக்கத்துக்கும் கொண்டு வரவும் முடியாது. இதையும் மீறி….அந்த திட்டத்தின் கீழ் சீக்கிரம் வேலை முடிச்சு புழக்கத்திற்குக் கொண்டு வந்தாலும்….மக்கள் கட்டுப்பாடாய் இருக்கிறது சந்தேகம்.”

” என்ன தாத்தா சொல்றீங்க ?! ” அதிர்வாய்ப் பார்த்தான்.

” அரசாங்க சுத்தம் செய்து கொடுத்த குளம்தானே…மக்கள் மனசுல அலட்சியம் வரும். அசுத்தமானால் அடுத்த வருசம் செய்யச் சொல்லிக்கலாம்ன்னு மக்கள் கட்டுப்பாடோடு இருக்க மாட்டாங்க. நம்ப செலவுல நாமே வெட்டி தூர்வாரி புரணமைப்பு செய்தால்….உடலுழைப்பு, கைகாசு நஷ்டத்தினால்…எல்லாரும் பொறுப்பா இருப்பாங்க. பழைய காலம் போல் காவல் அது இதுன்னு கொண்டு வந்தாலும் கட்டுப்பாடாய் இருப்பாங்க. ”

” இதுக்கு ஊர் ஓத்துழைக்குமா தாத்தா ? ” என்றான் கண்ணன்.

” மொத்தல்ல நாலு பேர்கிட்ட இந்த யோசனையைச் சொல்லி சம்மதிக்க வைச்சு இன்னையக் கூட்டத்திலேயே இந்த திட்டத்தை எடுத்து வைச்சா தண்ணிக் கஷ்டம் காரணமாய் மக்கள் கண்டிப்பாய் சம்மதிக்க வாய்ப்பிருக்கு, ” சொன்னார்.

‘ காரியம் சாதிக்க என்ன ஒரு அனுபவ அறிவு ! ‘ வியந்த கண்ணன்….

” நன்றி தாத்தா ! ” சொல்லி எழுந்தான்.

உடன்……கன்னியப்பன், மாரி, சிலம்பன், சிங்காரம்…. என்று தன் வயது நண்பர்களைச் சந்தித்து விபரம் சொன்னான்.

‘ நல்ல யோசனை !’ – என்று ஏற்றுக் கொண்ட அவர்கள் அன்றையக் கூட்டத்தில் ஒன்றாக அமர்ந்து இதைச் சொன்னார்கள்.

சாதக பாதகமாக நிறைய வாக்குவாதங்கள் இருந்தாலும்…..மக்கள் ஏகோபித்த சம்மதை அளித்து….ஊர் பணத்திலேயே மண் அள்ளும் இயந்திரத்தை வாடகைக்கு அமர்த்தி….குளத்தைத் தூர்வாரி புணரளிக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

இந்த முடிவில் கண்ணனைவிட வயதான கருப்பனுக்கு ரொம்ப சந்தோசம்.

” வென்று விட்டாய் பேரா…! ” கண்ணனைப் பார்த்து மலர்ச்சியுடன் சொல்லி கட்டிப் பிடித்துக் கொண்டார்.

மறுநாள்……..?

” கண்ணா! நமக்கு ஒரு இனிப்பான சேதி ! ” என்று சொன்னவாறே பக்கத்தில் வந்தான் கன்னியப்பன்.

யோசனையிலிருந்து மீண்டு, ” என்ன ? ” ஏறிட்டான்.

” மூனு மாசமா அடைஞ்சு கிடந்ததுக்கு விடுதலை. ”

” புரியலை….?! ”

” நம்ம அரசு வற்புருத்த…. மத்திய அரசு கேட்டுக்கிட்டதால….மூனு மாசத்துக்கு முன்னாடி நம்மோடு சிறை பிடிச்ச முப்பது பேரும் நாளைக்கு விடுதலை. நாளைக் காலை இலங்கை துறைமுகத்தில் கப்பலேத்தி… மதியம் காரைக்கால் துறைமுகத்தில் இறக்கம் செய்யுறாங்க. அப்புறம்…. அங்கிருந்து நாம எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்குப் போக அரசாங்கம் பேருந்து வசதி செய்திருக்கு. அனேகமா நாளைன்னைக்கு சாயந்தரம் நாலு நாலரை மணிக்கெல்லாம் நாம ரெண்டு பேரும் வீடு போய் சேர்ந்திடலாம் தெரியுது. ” மகிழ்ச்சியாய்ச் சொன்னான்.
கண்ணனுக்குக் கேட்க சந்தோசமாக இருந்தாலும்….

முழுசாய் மூன்று மாதங்கள் சிறை வாசம்.! நினைத்துப் பார்க்க பிரமிப்பாய் இருந்தது.

அமாவாசைக்கு மறுநாள் கன்னியப்பனும் கண்ணனும் அடுத்தக் குப்பத்து படகுக்காரனோடு கூலிக்குக் கடலுக்குள் செல்ல….இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு….

ஊரில் தண்ணீருக்கு மட்டும் அல்லல் படுதல் என்றில்லாமல்…. பிழைப்பிற்கும்….நித்தியக் கண்டம் பூரண ஆயுசு. கரணம் தப்பினால் மரணம் கதையாய்…. கடலுக்குள் அடி எடுத்து வைத்தாலே… இலங்கை கடற்படையால் பிடிக்கப்படுவோம் என்கிற நிலை, பீதி. – கண்ணன் நொந்து போனான்.

இந்த மீனவர்கள் நிலை எப்போது மாறும். இதற்குத் தீர்வு என்ன ? யார் இந்த பூனைக்கு மணி கட்டுவார்கள். செத்து செத்துப் பிழைக்கும் இந்த பிழைப்பிற்கு எப்போது விடுதலை. இவனை இலங்கைப் படையால் பீடிக்கப்படுவது இதோடு இரண்டாவது தடவை. அடுத்தத் தடவை மூன்றாவது முறையாக பிடிக்கப்பட்டு அடையாளம் கண்டு கொண்டால்…..கண்டிப்பாய் சுடுவார்கள். கேள்வி முறை இல்லாமலேயே சுட்டு சாகடித்து படகில் போட்டுத் திருப்புவார்கள். கண்டிப்பாய் இது நடக்கும் ! அவர்கள் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.

” சரிடா! ” பெரு மூச்சு விட்டு எழுந்தான்.

கன்னியப்பன் சொன்னது போலவே எல்லாம் நடந்தது. காரைக்கால் துறை முகத்தில் எல்லோரும் இறங்கும் போது மணி நான்கு. ஏழு மணிக்கு அங்கு அமைச்சர்கள் வந்து வழியனுப்பி வைக்க…இவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல மாரி வந்திருந்தான். இவர்களைப் பார்த்ததில் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேருந்தில் மூவர் இருக்கையில் அவன் இவர்களுக்கு நடுவில்தான் அமர்ந்திருந்தான்.

” ஊர்ல என்ன விசேசம் மாரி ? ” கண்ணன் அவனை விசாரித்தான்.

” கருப்பன் செத்துட்டார். ” சொன்னான்.

” ஏன்…? ”

” வயசாயிடுச்சு. போய் சேர்ந்திட்டார். ”

” அப்புறம்…? ”

” உங்க ரெண்டு பேர் அப்பா அம்மா ரொம்ப உடைஞ்சி கிடந்தாங்க. நாலு நாளைக்கு முன் உங்க விடுதலை சேதி கேட்டுதான் எழுந்து நின்னாங்க. போய் அழைச்சு வா. எங்களுக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலைன்னு என்னை அனுப்பிச்சாங்க. ”

” அப்புறம் விசேசம் ? ”

” ஒன்னும் கிடையாது. ”

” கருப்பன் குளம்….? ” கண்ணனுக்கு அதைத் தெரிந்து கொள்ள மனதில் ஆவல்.

” அதுக்கு என்ன ? ”

” வேலை நடந்துதா ? ”

” நீ வந்து பாரு. ”

” விசயத்தைச் சொல்லு…? ”

” மாட்டேன். நீ போய் பார்த்து தெரிஞ்சுக்கோ. ”

‘ விசயம் வில்லங்கம் ! வேலை நடக்கவில்லை. சொன்னால் மனசு கஷ்டப்படுவேன் என்று சொல்ல மறுக்கிறான்.! ‘ – கண்ணனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

தன் உழைப்பு வீண் ! கண்களை மூடிக்கொண்டான்.

பேருந்தை விட்டு இறங்கி இவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல…குப்பத்து மக்களே தார் சாலையில் வந்து குழுமி இருந்தார்.

இவர்களைப் பார்த்ததில் அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர்.

கண்ணன், கன்னியப்பன் அம்மா, அப்பாக்கள் இவர்களைக் வும் கட்டிப்பிடித்துக் கொண்டு ரொம்ப மோசமாக அழுதார்கள்.

கண்ணனுக்கு அவர்கள் அழுதது, உபசரித்ததெல்லாம் மனதில் நிற்கவில்லை. மனமெல்லாம்…. ‘ குளத்திற்கு புரணமைப்பு வேலை நடந்ததா, புழக்கத்திற்கு வந்ததா இல்லையா ? ‘ என்பதிலேயே யோசனையாக இருந்தது.

தூக்கம் வராமல்….. புரண்டு புரண்டு படுத்தான்.

காலை முதல் வேலையாக எழுந்து காத்தான் குளம் நோக்கிதான் நடந்தான்.

அங்கு சென்ற அடுத்த விநாடி….

அப்படியே ஆனந்த பரவசத்தில் திக்கு முக்காடி நின்றான்.

புரணமைப்பு வேலைகள் முழுமையாக முடிந்து…..வண்டி போகும் வரப்பின் நடுவில்…குளம் எப்போதோ பெய்த மழையில்…நிரம்பி வழிந்து தளதளவென்று மின்னியது.

அப்படியே கரை நடுவில் நின்று உற்றுப் பார்த்தான்.

குளம் பெண்ணுருவாய் மாறி, ” கண்ணா ! உன் தயவால நான் மறுபிறவி எடுத்துவிட்டேன். நன்றி..! ” சொல்லி இவனைக் கைகூப்பி வணங்குவதாக இவன் மனக்கண்ணில் பட்டது.

பட்டென்று பதறி சுதாரித்த கண்ணன்….மெய் சிலிர்த்து… தன்னை மறந்து, சூழ்நிலை துறந்து….

” தப்பு! தண்ணித்தாயே…தப்பு ! நீ நெனைக்கிறது தப்பு. எங்க தாகத்துக்கும் பொழைப்புக்கும் நீதான் எங்க உயிர், துணை.!! ” என்று வாய்விட்டுச் சொல்லி…..படக்கென்று….. கரையில் குப்புறப்படுத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

குளம்…. காற்றின் விளைவால் அலைகள் எழுப்பி கரையில் மோதி கலகலவென்று சிரித்தது.

தண்ணீர்த்தாய் அழகாய் சிரித்து இவனை ஆசீர்வதித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *