தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,679 
 
 

“”ஏப்பு, இந்த பஸ் களரி போகுமா?”

“”களரியா, அது எங்கிட்டுருக்குப் பாட்டி?”

“”திருஉத்தரகோசமங்கைக்குப் போற வழியில இருக்குய்யா, ராமநாடு ராஜா பாஸ்கர சேதுபதி சம்பந்தம் பண்ணுன ஊருப்பா!”

“”அப்படியா, நீங்க அந்த ஊரு தானா பாட்டி?”

களரிக் கிழவி“”ஆமாப்பூ, கருகப்பிலை பல்பொடி வாங்கலாம்னு ராம்நாடு வந்தேன். அதுல விலக்கினாத்தான் பல்லு விலக்கினாப்புல இருக்குது. நானும், ரெண்டு, மூணு கடையில கேட்டுப் பார்த்தேன், கிடைக்கலை. எந்தக் கடையில விக்குதுன்னும் லெக்குத் தெரியலையேப்பா, களரிக்குப் பஸ் வந்தா, சொல்லுப்பு.”

“”நீங்க போற பஸ் இங்குன தான் வந்து நிக்கும், இங்கே தானா நில்லுங்க பாட்டி, நான் பஸ் வந்தவுடனே சொல்றேன். அது சரி, அந்தப் பஸ்ல எப்பவும் கூட்டமா இருக்குமே, வயசான காலத்துல அதுல எப்படி ஏறி, இறங்கி நீங்க எப்படி ஊருக்குப் போய் சேரப் போறீகளோ? தெரியலை”

பாட்டியிடம் புலம்பினார் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர். எப்படியும் வயது 70-ஐ எட்டியிருக்கும். உடல் முழுவதும் மூதாட்டி என்பதை அடையாளம் காட்டும் வரிக் கோடுகள். குழி விழுந்த கன்னங்கள், காதுகளில் தங்கத் தண்டட்டி ஆடிக் கொண்டிருந்தது.

வைக்கோல் பிரி மாடலில் கழுத்தில் தங்கச் செயினும், இடுப்பில் சுருக்குப் பையும், இடது கை இடுக்கில் சுருட்டிய மஞ்சள் நிறப் பையும் இருந்தன. வெற்றிலை போட்டு துப்பிய சிகப்புக்கறைப் பற்கள். கிளிப்பச்சை நிறத்தில் சட்டையும், மங்கிப் போன சிவப்பு நிறத்தில் சேலையும் அணிந்து அந்தக் காலத்துக் கிழவி போலவே இருந்தார் அந்த களரி கிராமத்துக் கிழவி.

“”பாட்டி, இந்தா வர்ற டவுன் பஸ் உங்க ஊரு போறது தான், எப்படியாவது முண்டியடிச்சு ஏறிப்புடு. கூட்டமா வேற இருக்கு. காலேஜூக்குப் போற பயலுக கூட்டம் வேற நெறையா நிக்குது. அம்புட்டும் இள ரத்தம், இடிச்சு, கிடிச்சு தள்ளிப்புடாம கவனமா ஏறிப்புடு பாட்டி”

“திருஉத்தரகோசமங்கை’ என எழுதப்பட்டிருந்த டவுன் பஸ் ஒன்று பஸ் நிலையத்துக்குள் நுழையும் போதே கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறத் துவங்கியது.

“”யோவ், பஸ்ல இருக்குறவுக இறங்கினப்புட்டு, அப்புறமா ஏறுங்கய்யா. அப்படி என்ன அவசரம் பொத்துக்கிட்டு ஓடுது?” இறங்கியவர்களில் ஒருவர் பிறரின் இடி தாங்க முடியாமல் பேசிக் கொண்டே இறங்கினார்.

பஸ் ஜன்னல்களின் வழியாக சிலர் புத்தகங்களையும், கர்சிப்புகளையும் வீசி இடம்பிடித்து விட்டு, பின்னர் ஏறிப் போய் வசதியாக அந்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

வந்து நின்ற பத்தே நிமிடத்தில் அந்த பஸ் புறப்பட்டது. கிழவியும் கூட்ட நெரிசலில் ஏறி உட்கார இடமில்லாமல் நின்று கொண்டார். அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் எனப் பலரும் இருக்கைகளில் உட்கார்ந்திருந்தார்களே தவிர, கிழவிக்கு இடம் தர யாரும் முன்வரவில்லை.

கூட்ட நெரிசலில் உட்கார இடமில்லாமல் உள்ளக் குமுறலை வெளிப்படுத்த தொடங்கியது அந்தக் கிழவி.

“”என்னய்யா செய்யிறது பாசக்காரப் பேரன், வெளியூர்ல வேலை பார்க்குறான். டவுனுக்கு வந்து அவனுக்கு ஒரு போன் போட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். என்னமோ தெரியலை,போனும் எடுக்கலையாம். எங்க ஊருலதான் போனு எடுக்கலைன்னா, டவுனுலயும்ல எடுக்க மாட்டேங்குது. போனும் பேசிப்புட்டு கருகப்பிலை பல்பொடியும் வாங்கிக்கிட்டுப் போகலாம்னு போனா, அந்தக் கடை இருக்கிற இடமும் தெரியலை. சரி, ஊருக்குப் போயிருவோம்னு பஸ் ஏறிட்டேன்”

கிழவி தானாகப் புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த முதியோருக்கான இருக்கையில் இருந்த இளைஞர் ஒருவர், “”பாட்டி, கொஞ்ச நேரம் தொண, தொணன்னு பேசாம வர்றியா, வயசாயிருச்சுன்னா, பேசாம வீட்டுல கிடக்க வேண்டியது தானே?” என்றார்.

“”வயசு 73 ஆயிருச்சுப்பா, சாவுன்னு ஒன்னு வந்தா அது பட்டுன்னு போற சாவாத்தான் இருக்கணும். படுக்கையில கிடந்து பேரன், பேத்திகளுக்குத் தொந்தரவு கொடுக்காம போயிரணும்பா. ராமநாடு ராஜா பாஸ்கர சேதுபதி முத்தையா பாகவதரைப் பாடச் சொல்லி, அவர் பாடிக்கிட்டு இருக்கும்போது அவர் போட்டிருந்த நவகண்டி மாலையை கழட்டி பரிசாக் கொடுத்தாராம். அப்படிக் கொடுத்துக்கிட்டு இருக்கும் போதே ராஜா உயிரு போயிருச்சாம். தமிழுக்காக உயிரைக் கொடுத்த ராஜாவோட பெருமைகளைப் பத்தி கேள்விப்பட்ட வெள்ளைக்காரன் அப்பத்தான் அவன் முதல் முதல்ல போட்டுக்கிட்டுருந்த ரயில் பாலத்துல அவரு உடம்பைத்தான் ரயில் பெட்டியில வைச்சு ராம்நாடுக்கு அனுப்பி வைச்சான்னு சொல்லுவாங்க. அவரு நினைச்ச மாதிரியே அந்த வள்ளல் உயிரும் பட்டுன்னு போயிருச்சாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாரு, யாரு சாவு எப்படி இருக்கும்னு யாருக்குத் தெரியும். அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”

“”ஏய், கிழவி, என்ன தொண, தொணன்னு பேசிக்கிட்டே வர்றே. சும்மா வர முடியாதா? எந்த ஊரு கிழவி, டிக்கட் வாங்கிட்டியா?” நடத்துநர் கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.

“”களரி”

கிழவிக்கு டிக்கட்டை கொடுத்த நடத்துநர், “”களரியில உன்னையும் சேர்த்து ரெண்டு பேர் தான் இறங்குவாக, ரொம்ப நேரம்லா களரியில நிப்பாட்ட மாட்டேன், சீக்கிரம் இறங்கிடணும்”

“”என்னது, நிப்பாட்ட மாட்டியா, கையில காசு இல்லாம இருக்கும்போது கூட வட்டிக்கு வாங்கி கொடை கொடுத்த வள்ளல் சம்பந்தம் பண்ணுன ஊருப்பா. பாஸ்கர மன்னரைப் பற்றி இந்தக் காலத்துப் புள்ளைகளுக்கு எங்கப்பா தெரியப்போகுது!”

“”இந்தா, கிழவி, இப்பத்தானே சொன்னேன். தொண, தொணன்னு பேசாதேன்னு, வாயை மூடிக்கிட்டு வரமாட்டியா, வயசாயிட்டாலே இப்படித்தான் போலிருக்கு, உன்னோட ஊரு வந்துருச்சு, இறங்கும்மா, ரெண்டு பேருக்காக பஸ்ûஸ நிப்பாட்ட வேண்டியிருக்கு, ஏற்கெனவே பஸ் ரொம்ப லேட்டு” என்றார் நடத்துநர்.

முதியோருக்கான இருக்கையில் இருந்த இளைஞரும், கிழவியுமாக இறங்கினார்கள்.

இறங்கியதுமே கிழவி ஒத்தையடிப் பாதை வழியாக நடக்கத் துவங்கியது. இளைஞருக்கோ கிராமம் புதிதாக இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள், தூரத்தில் இருந்த வயல் ஒன்றில் டிராக்டர் உழுது கொண்டிருந்தது. தன்னுடன் இறங்கிய கிழவியும் ஊருக்குள் போய்க் கொண்டிருந்தார். பக்கத்தில் யாரும் இல்லை. சிறிது தொலைவில் இருந்த டீக்கடைக்கு இளைஞர் நடந்து சென்றார்.

நகர்த்தவே முடியாத சிமிண்ட் சிலாப் போட்ட இருக்கை. பாக்கு, சீயக்காய் மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகள் கடையில் தோரணமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு வட்ட வடிவ அலுமினியத் தட்டில் இனிப்பு போண்டாவையும், உப்பிப் பெருத்த கேக்கையும் ஈக்கள் மொத்தமாக ருசி பார்த்துக் கொண்டிருந்தன. கடைக்குள்ளே காலைத் தூக்கி ஆடிய நிலையில் நடராஜர் சுவாமி படக் காலண்டர் ஒன்றும் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

“”எந்த ஊருல இருந்து வர்றீக, டீப் போடவா தம்பி வெளியூரு மாதிரி தெரியுது, யாரைப் பார்க்கணும்?” என்றார் டீக்கடைக்காரர்.

“”இந்த ஊரு தானே களரி?”

“”ஆமாங்க, அதுல என்ன சந்தேகம்?”

“”இந்த ஊருல சிவகாமி நாச்சியார்னு யாரும்…?”

“”ஆம்மா, இருக்காக, அது பேரன் கூட மிலிட்டரியில வேலை பார்க்குறான்”

“”அந்தப் பேரன்தான் இந்தம்மாவுக்கு ஒரு சில சாமான்களைக் கொடுத்து அனுப்பியிருக்காரு. அதை அந்தம்மாவைப் பார்த்து கொடுத்துட்டு போகத்தான் வந்தேங்க”

“”ஓகோ, அப்படியா, சூப்பரா ஒரு டீ போட்டுத் தாரேன். குடிச்சுப்புட்டு நேரா பொடி நடையா நடந்தீங்கன்னா ஒரு கி.மீ. தூரத்துல களரி வந்துரும். முளைக்கொட்டுத் திண்ணைய ஒட்டுனாப்புல தான் அந்த சிவகாமி நாச்சியாருங்குற கிழவி வீடு இருக்கு. அடையாளம் கேட்டுப் போங்க” என்று டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

“”அதென்னதுங்க, காலண்டர்ல அற்புதமா ஒரு நடராஜர் சாமி படம் இருக்கு.இந்த ஊரு சாமியா இது?”

“”அந்தச் சாமி கதையை கேட்டா, இன்னைக்கு பொழுதுக்கு நீ ஊரு போய்ச் சேர முடியாது தம்பி. அதுல அவ்வளவு சிறப்பு இருக்குப்பா”

“”என்னய்யா,சொல்றீங்க?”

“”இங்கேயிருந்து 5 கி.மீ. தூரத்துல திருஉத்தரகோசமங்கைன்னு ஒரு ஊரு இருக்கு, அங்கே இருக்குற கோயில்ல பச்சை மரகதக் கல்லால் செய்யப்பட்ட ஓர் ஆள் உயர மரகத நடராஜர் சிலை இருக்கு, அதோட கால் பெருவிரல் மட்டுமே ஒரு கோடி பெறும்னு சொல்லுவாங்க. பெருவிரலே ஒரு கோடின்னா அந்தச் சிலை எவ்வளவு மதிப்பு பெறும்னு நீங்களே கணக்கு போட்டுக்கங்க, தம்பி சேதுபதி ராஜாக்களால் கட்டப்பட்ட கோயில், நேரமிருந்தா அந்தக் கோயிலுக்கு போயிட்டு ஊருக்கு போங்களேன் தம்பி!”

கொடுத்த டீக்கு காசும், சொன்ன தகவல்களுக்கு நன்றியும் சொல்லிவிட்டு இளைஞர் களரி கிராமத்துக் கிழவியை காண நடந்தார். அவர் சொன்னது போலவே முளைக்கொட்டுத் திண்ணையிலேயே அந்த சிவகாமி நாச்சியார் உட்கார்ந்திருந்தார். அருகில் சென்று பார்த்தவருக்கோ “பகீர்’ என்றது. தன்னோடு பஸ்ஸில் வந்த அதே கிழவி, தொண,தொணவென்று பேசிக் கொண்டே வந்த அதே கிழவி, வயதான பாட்டிக்கு உட்காரக் கூட இடம் தராமல் “”வயசான காலத்துல பஸ்ல வரணுமா?” எனக் கேட்டோமே, அதே கிழவி.

வேறு வழியில்லை, “”வணக்கம், பாட்டி”

“”பஸ்ல பார்த்தோமே அந்தப் புள்ளையா? அந்தத் தம்பியா?”

“”ஆமா, பாட்டி, உங்க பேரன் முத்துராமலிங்கத்தோட மிலிட்டிரியிலே வேலை பார்க்குறேன். உங்களுக்கு முழங்கால் வலிக்கு சத்து மாத்திரையும், பல்லு விளக்க கருகப்பிலை பல்பொடியும், செலவுக்கு ரூ.5000-மும் கொடுத்து அனுப்பியிருக்கான். அதைக் கொடுத்துட்டு போகத்தான் வந்தேன் பாட்டி”

“” யாரு, என் பேரன் முத்துப் பயலா, அவன் பாசக்காரன்யா, ரொம்பக் கேட்டேன்னு சொல்லுங்க” கொண்டு வந்ததைக் கையில் வாங்கிக் கொண்ட கிழவி வீட்டுக்குள் சென்று ஒரு பழைய புத்தகத்தை எடுத்து வந்து, “”இந்தாய்யா ,இதை வச்சுக்கோ. ”என்றது.. கூடவே குடிக்க மோரும் கொடுத்தது கிழவி.

“” என்ன புத்தகம் பாட்டி இது?”

“”இது, சாதாரணப் புத்தகம் இல்லையா, ராமநாதபுரத்து சீமையை ஆண்ட ராஜாக்கள்ல முக்கியமான ஒருத்தர் தான் முத்துராமலிங்க சேதுபதி. வெள்ளையனை விரட்டிட்டு சுதந்திரம் வாங்கிறதுக்காக ஜெயிலில் 24 வருஷம் இருந்து, அதே ஜெயிலிலேயே செத்து சுண்ணாம்பா போன மாமன்னனின் கதை. நம்ம தாய்நாட்டைக் காத்தவரோட கதை. இவரு பெயரைத்தான் என் பேரனுக்கு வச்சிருக்கோம்” என்றது கிழவி.

“”அப்படியா, பாட்டி!”

“”இந்தப் புத்தகத்தை எதுக்கு உனக்கு கொடுத்தேன்னு கேட்கலியே, ஒரு வயசான கிழவிக்குப் பஸ்ல உட்காரக் கூட இடம் கொடுக்காத நீயெல்லாம் எப்படி ராணுவத்துல சேர்ந்து நம்ம நாட்டைக் காப்பாத்தப் போறேன்னு தெரியலை. இந்தப் புத்தகத்தை படிச்ச பிறகாவது நம்ம தாய்நாட்டை நல்ல படியா பார்த்துக்கிறணும்னுதான் கொடுத்தேன். இளசுகள் எப்பவும் வயசானவுக கிட்ட பாசமா இருக்கணும், ஏன்னா, நீயும் ஒரு நாள் வயசான ஆளாத்தான் ஆவே தெரியுதா?”

சவுக்கால் அடித்தது போன்ற வார்த்தைகளால் வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டு விடை பெற்றான் அந்த இளைஞன்.

– சி.வ.சு.ஜெகஜோதி (அக்டோபர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *