கடவுளும் மனிதனும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 25, 2012
பார்வையிட்டோர்: 17,172 
 
 

தெருவெங்கும் மழை பெய்து சேறும் சகதிமாய் இருந்தது. நேற்று இரவு பெய்த கன மழை இன்றும் தொடர்ந்தது, அதை மழை என்று கூட சொல்லமுடியவில்லை, ஒரு சமயம் தூறலாகவும்.. மறு சமயம் சாரல் மழையாய்… பன்னீர் தூவுவதைப் போல தூறிக்கொண்டு… தெருவின் தரையை மண்ணோடு மழை நீர் கலந்து நசநசப்பை உண்டுபண்ணி அனைவருக்கும் புழுகத்தை உண்டாக்கியதே தவிர.. அந்த மழையால் கிஞ்சித்தும் பயனும் இல்லை.

தி.நகரில் உள்ள அந்த பரபரப்பான கடைவீதி…. சாலையில் மழைநீர் மண்ணோடு கலந்து சிறு ஒடையாய் செல்ல… மக்கள் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை உயர்த்திப் பிடித்தும்…. லாவகமாக தங்கள் கால்களை அடியெடுத்து வைத்து ஆடையில் சேறு படாதவாறு தாண்டிக் குதித்தபடி அவரவர் அவசரத்திற்கு தகுந்தவாறு நடை போட்டு சென்று கொண்டு இருக்க… சிறு குழந்தைகளோ தங்கள் கால்களை தண்ணீரில் நனைத்து குதியாட்டம் போட்டபடி அவர்கள் பின்னால் நடக்க.. ஒரு சிலர் குழந்தைகளை தங்கள் கண்களால் உருட்டியும் அவர்களை குரலால் அதட்டியும் மிரட்டியும் ஒழங்காக நடந்து வர கட்டளையிட்டு கொண்டு இருந்தனர்… வேறு சிலரோ குழந்தைகளை தோளிலும் இடுப்பிலும் சுமந்தபடி கைகளில் வாங்கிய பொருட்களின் பைகளை தூக்க முடியாமல் முணுமுணுத்தபடியே சென்று கொண்டிருக்க….

அந்த மழை நாளிலும் தி.நகரில் கூட்டம் அலைமோதியது… இந்த விலைவாசி ஏற்றத்திலும் எப்படித்தான் மக்கள் பெருமளவில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்களோ… பார்த்துக்கொண்டு இருந்த முருகனின் மனமோ எதிலும் லயிக்காமல் தன் ஆட்டோவில் அமர்ந்தபடி தெருவில் நடப்பதைக் கண்களால் பார்த்து… மனதால் அடுத்த சவாரியின் வருக்கைக்காக காத்துக் கொணடிருந்தான்.

அவனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது… உழைத்து உழைத்து உடல் தளர்ந்து கண்களில் கருமையும் கன்னத்தில் சுருக்கமுமாக அவன் வயதை அனைவருக்கும் பறைசாற்றியது. சிறு வயதில் படிப்பு ஏறாததால் ஏதோதோ வேலை செய்து… கடைசியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி கடந்து ஏழெட்டு ஆண்டுகளாக ஓட்டிக் கொண்டுவருகிறான்.

குடும்பம் என்று சொல்வதற்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் மகளுக்கு தன் வசதிக்கு ஏற்ற ஒரு கார் மெக்கானிக்கை திருமணம் செய்து வைத்தான். இதுநாள்வரைக்கும் வாழ்க்கை நிமமதியாயாக் கழிய… தற்பொழுது மகள் தலை பிரசவத்திற்காக வந்திருப்பதும்… பிரசவத்திற்கான நாளும் அடுத்த இரண்டு தினங்களுக்குள் இருப்பதும்… அவளுக்கு நல்லபடியாக பிரவசம் நடக்க வேண்டும் என அவன் மனம் விரும்பதும்… ஒரு தந்தையாய் அவனை கவலை கொளளச் செய்தது..

‘ஆட்டோ… திருவான்மியூர் வருமா….’

குரல் கேட்டு நினைவு திரும்பியவன்… அங்கு ஒரு கனமான பெண் நிற்க…. அந்தப் பெண்ணின் அருகில் மேலும் இருவர் நின்று கொண்டு இருந்தனர்.

‘வரும்மா…. ஏறிக்கோங்க… எததனை பேரு….’

அவளுடன் மற்றோரு இளம்பெண்… அடுத்து ஒரு வாலிப வயதை அடைந்த பையன்.. அனேகமாய் அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் பிள்ளைகளாய் இருக்க வேண்டும்… அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு கைகளில் நகைக்கடைப் பையையும்.. துணிக்கடைப் பையுமாக இருக்க…. அந்தப் பெண்ணோ தன் கையில் அந்த மழையிலும் ஐஸ்கிரீம்மை சுவைத்துக் கொண்டு இருந்தாள்.

‘மூணு பேரு… எவ்வளவு ஆகும்…’

அவர்களை ஏற இறங்கப் பார்த்தான்… பூசிய உடம்பும்… கழுத்தில் மின்னிய நகைகளையும் அணிந்திருந்த உயர்ந்த ரக ஆடைகளை அளவுகோளாக வைத்து அவர்களின் வசதியை கண்களால் ஆராய்ந்தவன்…

‘முன்னூறு ரூபா ஆவும்மா…’

‘என்னது… முன்னூறு ரூபாவா… ஆட்டோவில போறத்துக்கு கால் டாக்ஸில போயிடலாம் போல இருக்கே… அநியாமாய் இருக்கே.. நீ கேக்கறது…’

‘என்னம்மா பண்றது… பெட்ரோல் வெல ஏறிடுச்சு… நாங்க என்ன பண்ணமுடியும்… வாங்கறது பாதி பணம் பெட்ரோலுக்கே சரியாவுது…’

‘இருநூறுற்று அமபது தரேன்… அதுவே அதிகம்… வரமுடியும்மா…’

‘என்னம்மா… இப்படி கத்திரிக்காய் வாங்கற மாதிரி அம்பது ரூபாய அப்படியே கொறச்சா… என்ன பண்றது… ஒரு இருபத்தஞ்சு சேர்த்துக் கொடுங்க… ‘

மனதில் முனகியவாரே அந்தப் பெண்மணியும் மற்ற இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள… ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான், பல சந்து பொந்துகளில் நுழைந்து வெங்கட் நாராயண சாலையை அடைந்தான்… அப்படியே தேவர் சிலை வழியே நுழைந்து… கோட்டூபுரம் வழியாய்… அடையார் செல்வதாய் மனதில் நினைத்து சிக்னலுக்காக காத்து இருக்க…

‘ஏய்யா… போண்ணோட மாமியார் வீட்ல சொன்னது ஞபகமிருக்கா…’

முருகன் அப்பொழுதான் தூங்கி எழுந்தான்…. தன் முகத்தை கழுவ வாசலுக்கு வர.. அந்த அதிகாலை வேளையிலே அவன் மனைவி மல்லிகா அந்தப் பேச்சை ஆரம்பிக்க…

‘ம்ம்ம்… இருக்கு’ ஒற்றை வார்த்தையை பதிலாய் சொன்னான்

‘அதுக்கு என்ன முடிவு எடுக்கப் போற’

‘துட்டு பொறட்டனும்…. யாரைப் போய் கேக்கறதுன்னு தெரியல… அவ கல்யாணக் கடனே இன்னும் இருக்கு…. இதுல… பிரசவ செலவு எவ்வளவு ஆகுமுன்னு வேற தெரியல… அதுக்குள்ளே பொறக்கப் போற கொழந்தைக்கு அரை சவரன்ல செயின் போடனும்னா சொன்னா நான் என்ன தான் பண்றது… அதான் யோசிக்கறேன்’

‘இப்படி யொசிச்சுக்கிட்டே இருந்தா.. தானா வந்திடுமா.. எதையாவது அடமான்ம் கிடமானம் வச்சாவது சீர் செய்யனும்… அதுதானே நமக்கு மரியாதை’

‘என்னத்த வைக்கறது… சொத்துன்னு ஒன்னு இருந்தா தானே அடமானம் வைக்க…’

அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது… கடைசியாக அவள் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலியும் மகள் திருமணத்திற்கு அடமானம் வைத்து மீட்க முடியாமல் போய்விட்டது.

அவள் கழுத்தில் வெறும் மஞ்சள் துண்டைத்தான் கட்டிக் கொண்டு இருக்கிறாள்.

‘எதையாவது செஞ்சிதான் சீர் பண்ணனும்… ஒத்த புள்ள.. அதுவும் பொண்ணா இருக்கு.. அது கூட செய்யலனா.. அவ நல்லா வாழனும் இல்லையா..’

‘கேக்க நல்லதான் இருக்கு.. தெனமும் அலைந்சிட்டு தானே இருக்கேன்.. வர்ற வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு… எல்லா எடத்திலேயும் கடன வாங்கியாச்சு.. பாக்கலாம் கடவுள் நல்ல வழிய தராமவா போகப் போறாரு..’

முருகனுக்கு கெட்ட பழக்கம் என்று எதுவும் இல்லை.. எப்போவாவது குடிப்பதோடு சரி.. அதையும் டாக்டரின் அறிவுறையால் கடந்த சில நாட்களாக விட்டு விட்டான்.

இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச… பேச்சு இழுத்துக் கோண்டே சென்றதே தவிர… ஒரு முடிவும் கிட்டியபாடுதான் இல்லை.

பேசிக்கொண்டு இருப்பதில் எந்தப் பிரயோஜனும் இல்லை.. நினைத்தவன்… சவாரிக்கு சென்றாவது நாலு காசு சம்பாதிக்கலாம் என்று வீட்டை விட்டு அப்பொழுதே கிளம்பியவன் தான்…

காலையிலிருந்து தனக்கு தெரிந்தவரிடம் எல்லாம் பணத்தைக் கேட்க… பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை…ஒவ்வொருவரும் அவரவர் பஞ்சப்பாட்டை பாட… விதியை னொந்தபடி.. ஆட்டோவில் அமர்ந்திருந்த போதுதான் இந்த சவாரி கிடைத்தது…

‘அம்மா நாம பார்த்தோமே அந்த மூணு அடுக்க வச்ச செயின் ரொம்ப நல்லா இருந்துச்சி.. அத வாங்கி இருக்கலாம்… நீதான் அவசரப்பட்டு இத வாங்கிட்டே’ ஆட்டோவில் இருந்த மகள் சொல்ல.

‘அது எதுக்கடி இப்ப.. பொண்ணு பாக்கத்தானே வராங்க.. நிச்சியதார்த்ததுக்கு அந்த மாதிரி வாங்கிட்டாப் போகுது.. உனக்கு இல்லாம யாருக்கு வாங்கித் தரப் போரேன்’

‘அக்காவுக்கே கேட்டது எல்லாம் வாங்கித்தர… எனக்கு அக்கா கல்யாணத்துக்கு பத்து செட் ட்ரெஸ் வேணும்மா…’

‘சரிடா செல்லம்… வாங்கித் தரேன்…’

அவர்கள் பேச்சு முருகனின் காதில் விழத்தான் செய்தது… ஒருபக்கம் பணம் குவிந்து கிடப்பதும்… மறுபக்கம் அதே பணத்துக்கு மனிதர்கள் ஆளாய் பறப்பதும்.. ஆண்டவனின் லீலைகளில் ஒன்றா… அல்லது விதியின் விளயாட்டா.. தன் கவனத்தை ரோட்டின் மீது வைத்து ஆட்டோவை ஓட்ட..

ஆட்டோ அடையாறை நெருங்கியது… மழை வேகம் பிடிக்க… அது மேலும் வலுத்து பெரு மழையாய் வெளுத்து வாங்கியது… ஒருவழியாக திருவான்மியூரில் அவர்கள் அபார்ட்மென்ட்டின் வாயிலில் இறக்கியவன்… சவாரிக்கான பணத்தைப் பெற்று…

திரும்பவும் எதாவது சவாரி கிடைக்காத என்று ரொட்டோரம் மெதுவாக வண்டியை செலுத்திய போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது..

பக்கத்தில் அவனுக்கு தெரிந்த சேட்டிடம் தன் ஆட்டோவை அடமானம் வைத்து… பணத்தை வாங்கலாமென்றும்… அந்தப் பணத்தை தன் மகளின் பிரவச செலவுக்கும் அரை சவரன் தங்கச் செயினுக்கும் வைத்து கொள்ளலாமென்றும்…

எற்கனவே பலமுறை அந்த சேட்டிடம் அடமானம் வைத்து, அவரிடமே வாடகைக்கு ஆட்டோவை ஒட்டியிருக்கிறான்.. யோசித்தபடியே ஆட்டோவை சேட்டு கடையை நோக்கித் திருப்ப…

அவன் பாக்கெட்டில் இருந்து செல்போன் அலறியது…

‘அப்படியா… இதோ வீட்டுக்கு வறேன்…’

தன் மகளுக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக மனைவி கூற.. ஆட்டோவை தன் வீட்டிற்க்குத் திருப்பினான்.

மகளையும் மனைவியையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்… மகளோ வலியால் துடிக்க…பெற்றவர்களின் மனம் கலங்கியது.

அவளை பரிசோதித்த டாக்டர்….

‘குழந்த தலை மாறி இருக்கு… தொப்புள் கொடி வேற சுத்திக்கிட்டு இருக்கு… ஆபரேஷன் தான் செய்யனும்.. என்ன சொல்றீங்க..’

ஆபரெஷன் என்றதும்… மல்லிகா அழத் தொடங்கிவிட்டாள்…

‘வேற வழியே இல்லையா…டாகடர் ‘

அப்பாவியாக முருகன் கேட்க…

‘ரெண்டு உசிரையும் காப்பாத்தனும்னா.. ஆபரெஷன் செய்யறத தவிர வேற வழி இல்ல..’

முருகனும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கோள்ள..

‘சரி டாக்டர்… சீக்கிரம் அதற்கான ஏற்பாடு பண்ணுங்க’

‘ஆபரேஷன் செய்யறதுக்கு இன்னும் 14 பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…. அவங்களுக்கு முடிஞ்சப்புறம் தான் உங்க முறை வரும்…’

அந்த அரசு டாக்டர் அலட்சியமாய் சொலலியபடி அடுத்த பேஷன்ட்டை பார்க்க சென்று விட…

‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா… தனியார் ஹாஸ்பிடல் போகலாம்ன்னு கொழந்த வேற வலியால துடிச்சுகிட்டு இருக்கா…இப்ப போய் காச பாத்திட்டு இருக்கியே..

‘கொழந்த நல்லபடியா பொறந்தா மாரியாத்த கோவிலுக்கு பொங்க வைச்சு… படையல் வச்சு.. மஞ்ச சேலைய சாத்தறேன் தாயே.’ தன் புடவைத் தலைப்பால் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அவள்.

மனைவி சொல்வதுதான் அவனுக்கும் சரியென்று பட்டது… அவசர அவசரமாக இருவரையும் ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்.. ‘மொதல்ல அட்வான்ஸ் பணம் கட்டுங்க.. அப்புறம் தான் பெட்டில் சேர்கக முடியும்’ என்று கூற…

மனைவியையும் மகளையும் ஹாஸ்பிடல் வரான்டாவில் விட்டு… பணத்திற்காக…. அந்த சேட்டிடம் செல்ல வெளியே வந்தான்…

மழை நின்று.. வானம் தெளிவானது கண்டு… ஆட்டோவின் இருபுறமும் உள்ள மறைப்பை மேலே தூக்கி கட்ட நினைத்து அதைக் தூக்கி கட்டும்போது தான் அதை கவனித்தான்.. பின் சீட்டின் அடியில் ஏதோ பளபளப்பாக மின்ன… குனிந்து எடுத்தவன்… அது தங்கச் செயினாய் இருக்க..

கிட்ட தட்ட முன்று சவரன் இருக்கும்… யார் விட்டு சென்றது என்று பலவாறு யோசித்தவன்… கடைசியாக ஆட்டோவில் சென்றவர்களை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தான்… தி.நகரில் ஏறிய அந்த குடும்பமாக இருக்குமோ… அவர்களை தான் சிறிது நேரத்திற்கு முன் வீட்டில் இறக்கி விட்டேன்… எதற்கும் அங்கே தானே செல்கிறோம்… ஒரு எட்டு சென்று கேட்டு விடலாம்.. அப்படி அவர்களது இல்லை என்றால் பின்னர் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம்…

அவனுக்கு இருக்கும் நெருக்கடிக்கு அந்த நகை போதுமானதுதான் என்றாலும்…. அவன் அடுத்தவர் பொருள் மேல் ஆசைப்படுவனும் அல்ல… முதலில் அவர்களிடம் கொடுத்து விட்டு பின்னர் சேட்டிடம் செல்லலாம் என்று ஆட்டோவை அந்த அபார்மென்ட் நோக்கி ஓட்டினான்…

அபார்ட்மென்ட்டை நெருங்கிய உடன் தான் கவனித்தான்… வீட்டின் வாசலில் ஒரு போலிஸ் வண்டி நிற்பதை… அதற்குள்ளாகவா போலிஸில் புகார் செய்து விட்டார்கள்… அல்லது அந்த அபார்ட்மென்டில் வேறு எதாவது வீட்டில் பிரச்சனையோ… மனதில் பலவாறு நினைத்தபடியே…

வாசலில் ஆட்டோவை நிறுத்தி…. அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்த… கிராப் வெட்டிய…ஒரு வாட்ட சாட்டமான ஆள்… தடி மீசையுடன் கதவை திறந்தார்.

‘சார்… நான் ஆட்டோ டிரைவர்… இந்த வீட்ல இருக்கிறவங்க என்னோட ஆட்டோவில தான் தி.நகர் இருந்து சவாரி வந்தாங்க… அந்த அம்மாவை கொஞ்சம் கூப்பிட முடியுமா’

‘எதுக்கு’ அவர் குரலில் இருந்த ஏற்றம் அவனை கிலி அடையச் செய்தது… அதற்குள்ளாகவே… ‘யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க’ உள்ளேயிருந்து அந்த அம்மாவே வர…

‘வாங்கம்மா… இப்பத்தான் பார்த்தேன்… ஆட்டோவ துடைக்கும் போது… இந்த தங்கச் செயின. இது உங்களோடதா… பார்த்துச் சொல்லுங்க..’

‘பளார்’ என்ற அறை அவன் கன்னத்தில் விழ… அவன் காது கன்னம் எல்லாம் பொறி கலங்கியது… கன்னத்தில் கைவைத்தபடி வலி தாங்காமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

‘என்னடா… எத்தினி பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க.. ஆட்டோவில வர்ரவங்க நகையை அபேஸ் பண்ணறது… கொடுக்கிற சாக்கில… வீட்டுக்கு வந்து… நல்ல பேரு வாங்கி… கொடுக்கிற எதையாவது வாங்கிட்டு போறது…. அப்புறம் வீட்டையும் நோட்டம் விட்டு… கும்பலா வந்து.. கொள்ளை அடிச்சிட்டு போறது… ஒரு போலிஸ்காரன் வீட்டிலே உன் கைவரிசையை காட்றியா…. என்ன துணிச்சல்..’

மீண்டும் அவனை அடிக்க கையை ஓங்க..

‘சார்… அப்படியெல்லாம் இல்ல சார்… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… சார்…சார்..‘

அவன் சொல்லச் சொல்ல… அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து.. போலிஸ் வண்டியில் ஏற்றி… ஸ்டார்ட் செய்து போலிஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்தார்…

வண்டி செல்ல.. அவனுக்கோ வாங்கிய அடி உடம்பெல்லாம் வலிக்கச் செய்தது… சற்று தூரம் வண்டி சென்று இருக்கும்…. முருகனின் செல் போன் ஒலிக்க… பாக்கெட்டில் இருந்து காதில் வைக்க கூட முடியாமல் கை நடுங்கியது… மல்லிகா தான்…

‘பொண்ணுக்கு வலி வந்து… இப்பத்தான் பிரசவம் ஆச்சு… சுகப் பிரவசம்தான்….. வாய்யா சீக்கிரம் கொழந்தைய பார்க்க… அந்த மாரியாத்தாவே பொண்ணா பொறந்திருக்கா.. நான் கும்பிடற அந்த அம்மன் என்னை கைவிடல..’

எங்கோ அசரீரியாய் மனைவி குரல் ஒலிக்க… அப்படியே… உட்கார்ந்த சீட்டினிலே மயங்கிச் சரிந்தான் முருகன்.

Print Friendly, PDF & Email

1 thought on “கடவுளும் மனிதனும்

  1. மனிதனால் வலியைத்தான் கொடுக்க முடியும். கடவுளால்தான் வலியையும் கொடுத்து அதன் பின் வழியையும் கொடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *