எழும் பசும் பொற்சுடர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 14,848 
 
 

எங்கிருந்தோ பாரதியாரின் பாடல் வரிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. “எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி……”

சுடர்; அந்த பாடலைப் பெரிதும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். அமெரிக்காவிலிருந்து தன் பெற்றோருடன் தன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்த அவளுக்கு, இந்தியா ஒரு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாளைக்கு பக்கத்து ஊரில் இருக்கும் சின்ன தாத்தா வீட்டிற்குப் போகப் போகிறார்கள். அங்கு அவள் சந்திக்கப் போகும் தன் உயிர்த் தோழி, புனிதாவை நினத்தாலே அவளுக்கு இறக்கை கட்டிப் பறக்க வேண்டும் போலவே மகிழ்ச்சி தோன்றியது. அங்கு மாமா, மாமி, அவர்களுடைய இரு மகன்கள், இவர்கள் எல்லோரும் இருந்தும், அவள், அவர்களைப் பெரிதும் நேசித்தாலும், அங்கு பக்கத்து தெருவில் இருக்கும் புனிதாவின் நட்புதான் அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுடரின் அம்மாவின் அப்பாவான சின்னதாத்தாவும் பாட்டியும் ஒருவர்பின் ஒருவராக இறந்து ஒருவருடமே ஆகி இருந்தாது.

புனிதாவைப் பார்த்த போது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்று மாலை எப்பொழுதும் போல் அவ்வூர் எல்லையில் இருந்த மணல் மேட்டின் ஒரு பக்கத்தில் நிழல் தந்து கொண்டிருந்த புன்னை மரத்தடியில் தொழிகள் இருவரும் வந்து அமர்ந்து கொண்டனர். அந்த இடம்தான் அவர்களுக்குப் பிடித்தமான இடம். இடையிடையே கொரிப்பதற்காக என்று புனிதா, வறுத்த கடலை கொஞ்சம் எடுத்துவந்திருந்தாள். பேச்சு ஆரம்பமாயிற்று.

மாமி வீட்டில் விருந்து பலமா சுடர்?

ஆமாம். எப்போதும் போலதான்.

“பல வருடங்களுக்கு முன் நாம் இருவரும் அருகருகே அமர்ந்து மாமி வீட்டில் விருந்து சாப்பிட்டது ஞாபகம் வருகிறது சுடர்.” என சொல்லிவிட்டு புனிதா கலகல என சிரிக்க ஆரம்பித்தாள்.

சுடருக்கு வெட்கமாகிப் போக “போதும் புனிதா அது நாம் சிறுமிகளாக இருந்தப்போ நடந்தது.” என சமாளித்தாள்.

புனிதா, அப்போதும் விடாமல் சொன்னாள், “சாப்பிட என்று இலை போடப்பட்டது. நீ “இது எதற்கு?” என்று அருகில் உட்கார்ந்திருந்த என்னிடம் கேட்டாய். “சாப்பிட” என்று சொன்னேன். உடனேயே இலையை எடுத்துக் கடித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாய் .ஹா ஹா ஹா ஹா

இருவருமே சேர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். “அப்போதிலிருந்துதான் எனக்குத் தமிழ்க் கலாச்சாரத்தின் மீது ஆசை ஆரம்பமாயிற்று என சொல்ல வேண்டும் புனிதா. ஆமாம்? எங்களுக்கு விருந்து அளிக்கும் போதெல்லாம், மாமி உங்களையும்தானே அழைப்பார்கள். இன்று ஏன் உங்களை விருந்துக்குக் கூப்பிடவில்லை?

புனிதாவின் அழகிய முகம் வெட்கத்தால் சிவந்தது. “கோபியுடன் எனக்குத் திருமணப் பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. மாமா கூப்பிட்டபோது அப்பா இதைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார்கள்.”

அடிசக்கை. அது அப்படிப் போகிறதா கதை? ஆமாம். கோபி பெரியவனா? அந்த சிவா பெரியவனா?

ம்ம்.. அந்த பரப்ரம்மம்தான் பெரியவன்.

நான் கேட்டதற்கு பதில் சொல்லேன்.

“சிவாதான் பெரியவன் .

பெரியவன் இருக்க சின்னவனுக்கு அப்படி என்ன அவசரமாம்?

அவனுக்குதான் முன்னமே பெண் பார்த்தாச்சே.

பெண் யாராம்?

“சினேகா என்று பேசிக்கொள்கிறார்கள். நீங்கள் வந்ததும் நிச்சயம் செய்து தாம்பூலம் மாற்றிக்கொண்டு பிறகு கல்யாணம். ஆமாம்? அமெரிக்க வாழ்க்கையில் ஏதேனும் உனக்கு காதல்…

சே சே.அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவுதானா நீ என்னைப் புரிந்து வைத்திருப்பது? நான்.. நான்…… ஒரு சில குறிக்கோள்களுடன் வாழ்கிறேன் புனிதா. எனக்குக் கணவராக வரப்போகிறவருக்கு ஒரு சிறந்த பரிசு கொடுக்க எண்ணியிருக்கிறேன். அது.. எல்லாப் பெண்களுக்கும் ,உனக்கும் தெரியும் என்றாலும் நான் வளரும் சூழ்நிலையில் அதனைப் பெரும் அளவில் காப்பாற்றி வருகிறேன். நம் அம்மாவின் மேல் நாம் செலுத்தும் அன்பு அம்மாவுக்கு மட்டுமே என ஒதுக்கிவைத்த அன்பாகக் கொள்ளலாம். அதே மாதிரிதான் அப்பாவின்மேல், அண்ணன்கள், அக்காக்கள், மற்றும் எல்லா உறவுகளிடத்திலும், சிதறாத அன்பைக் குவித்து சேர்த்து ஆழமான அன்பை செலுத்துகிறோம். அதே மாதிரியான சிதறிப் போகாத அன்பை என் கணவருக்காக காப்பாற்றி வருகிறேன் புனிதா. நம் பருவம் கல்யாணக் கனவுகளுக்கு இட்டுச் செல்லும்தான். என்வரையில் என் கற்பனையில் கணவனின் முகம் புலப்படுவதில்லை. யாரோ அவர் யாரோ என்பதுதான் என் எண்ணமாக இருக்கும். மேலும் நான் கற்பனைகளில் ஆழ்ந்து போவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். கண்டவனைக் கணவனாக மனதாலும் நினைக்காமல் என் அன்பை எல்லாம் திரட்டி புனிதமானதாக வைத்திருக்கிறேன். அதற்குப் பெரும் சோதனைகள் அவ்வப்போது வரவே செய்தன. ஆண்டவனின் அருளால் எல்லாவற்றையும் சமாளித்தேன். கடவுளுக்கு நிவேதனம் செய்வதற்கு பக்குவமாக, ருசி பார்க்காமல், எச்சில் படாமல், சுத்தமாக மரியாதையுடன் நிவேதனப் பொருளை தயார் செய்வது போல என்று வைத்துக்கொள்ளேன்.

மணல் மேட்டின் அடுத்த பக்கத்தில் மூன்று நபர்கள் இருந்ததைக் கவனிக்காமல் இந்த பெண்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பரிமாரிக்கொண்டிருந்தனர்.. பகலில் பக்கம் பார்த்து பேச வேண்டும் என்பது அறியாமல் அரட்டை..

“என்னுடைய இந்த கருத்து எல்லோருக்கும் உடன்பாடாக வேண்டும். என்பதுதான் எனது அவா”.என்றாள் சுடர். யாருக்கும் நம்மைப் பார்த்தால் நல்ல மதிப்பு வரவேண்டுமே தவிர அவர்களுடைய கெடுமதியுடன் கூடிய ரசனைக்கு இரை போடுவது போல இருக்கக் கூடாது. நாம் அணியும் ஆடைகளைச் சொல்கிறேன். நம் கருவில் தாங்கப்போகும் பிள்ளைகளுக்காக அவ்வளவு ஆரோக்கியமான மனமும் உடலும் கொண்டவர்களாக இருக்க இத்தகைய மனத்தூய்மையும், உடல் தூய்மையும் அவசியம் இல்லையா புனிதா?

நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரியே.

நேரமாகிவிட்டதனால், நாளை சந்திப்போம். எனக் கூறி தோழிகள் விடை பெற்றனர்.

சிவா, கோபி, சத்யா இவர்களின் அடுத்த அரட்டை ஆரம்பமாகியது.

“நாம் இங்கிருப்பது தெரிந்தால் ,அவர்களுக்கு இடைஞ்சலாகிவிடுமே, மிரண்டு ஒடிவிடுவார்களோ என நினைத்து அமைதியுடன் இருந்தோம்”. இப்படி சிவா சொல்ல,

ம்ம்.. இருக்கும். இருக்கும். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அறிந்துகொள்ளத்தான். என்று உண்மையைச் சொல்லேன், என சத்யா பதிலுக்கு சொன்னான். சத்யா: இந்த இரு சகோதரர்களுக்கும் நண்பன்.

சுடர் அன்பானவள் சத்யா. மரியாதையுடன்தான் எல்லோரிடமும் பழகுவாள். சிவா அவளைப் புகழ்ந்து பேசினான்.

மிகவும் இரக்க குணமும் அவளுக்கு உண்டு. இது கோபி.

“அவளுக்கு எப்போ கல்யாணமாம்?

ஓரு வருடம் கழித்துதானாம்.

அதுவரை நான் காத்திருக்கப் போகிறேன். கிடைப்பாளா?

சத்யா! உன் மனக்கோட்டை மண்ணாகிப் போகும். இவ்வளவு தீர்மானங்களைத் தீட்டுபவள் தான் தேர்ந்தெடுக்கப் போகும் நபரை எப்படி எல்லாம் எடை போட்டுப் பார்ப்பாள்?

இவர்கள், எத்தனை நாட்கள் இங்கே தங்கப் போகிறார்கள்?

நிச்சயதாம்பூலம் முடிந்துதான் போவார்கள். மே பி. ஒரு மாதம்.

அந்த ஒரு மாத காலமும் நான் இங்கு தங்கலாமா?

“வெல்கம் ப்ரதர்” இது கோபி

சாயப்பன் புனிதாவின் அப்பாவிடம் கணக்கு வழக்குகளை ஒப்புவித்துக் கொண்டிருந்தான். வாழைத்தார்கள் இரண்டாயிரத்து ஐனூருக்கும் பொன்னுசாமி பணம் கொடுத்துவிட்டார் யஜமான். போன வாரத்து மல்லிகைப் பணமும் வந்துவிட்டது. தேங்காய்க்கு மட்டும் அடுத்தவாரம் தருவதாகச் சொல்கிறார். புனிதாவின் அப்பா கண்ணபிரான்: கணக்கு பார்த்து சாயப்பனிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டார்.

ஏண்டா சாயப்பா!.நான் உனக்கு கொடுக்கிற சம்பளம் போதாதா? உன் தங்கச்சி மங்களாவை வீட்டு வேலைக்கு ஏன் அனுப்பணும்? அவளும் படித்துவிட்டு ஒரு பட்டமும் வாங்கியாச்சு..அவளுக்கு கல்யாணத்தை முடித்துவிட்டு நிம்மதியா இரேன். வயசு பசங்க இருக்கிற இடம்.. சிவாவும் கோபியும் தங்கமான பையனுங்கதான். நான் எதுக்கு சொல்றேன்னா. காலம் கெட்டு கிடக்கு பார்.

அவுங்க ரெண்டு பேரும் வெளியூரில வேலை பார்ப்பதால் எப்பவாவதுதான் வருவாங்க எஜமான். அந்த அம்மா, “பேச்சுத் துணைக்காக மங்களாவை அனுப்பிவைன்னு” சொன்னதால தட்ட முடியல. நம்ம பாப்பா புனிதாவுக்கும் கோபிக்கும் கல்யாணமாகிவிட்டால் புனிதாவுக்கு, மங்களா ஒத்தாசையா இருக்கும் எஜமான்.

அந்த சிவாவுக்கு பார்த்திருகிற சினேகாப் பொண்ணு குடும்பம் நம்ப தகுதிக்கு ஒத்துவருமா சாயப்பா?

அப்பொழுது அங்கு வந்த கண்ணபிரானின் மனைவி லலிதா, “சினேகாப் பொண்ணு குடும்பம் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம சம்பந்தம் போடுற இடத்தில் அவங்களும் பொண்ண கொடுக்கறாங்க.. அவ்வளவுதான். புனிதா வாழப்போறது கோபி வீடுதானே?”

அன்று மாலை எப்பொழுதும் போல சாயப்பன், வீடு திரும்பியவுடன், தான் வாங்கி வந்திருந்த இனிப்புவகைகளை தன் தங்கை சாப்பிடுவதற்காக அடுக்களை மேடையில் எடுத்து வைத்தான். மங்களா, தன் அண்ணன் வந்திருக்கும் சப்தம் கேட்டு, புழக்கடையிலிருந்து ஓடிவந்தாள்,

காபி எல்லாம் லலிதா அம்மா கொடுத்துட்டாங்க மங்களா. பாட்டிக்கு குடுத்திட்டியா. இந்த இனிப்பு வகையறாக்களையும் பாட்டிக்கு கொடு

தாய் தந்தையற்ற இந்த பிள்ளைகளுக்குத் துணை என்ற பெயருக்கு, வயதான பாட்டி இவர்களுடன் இருந்தார்கள். அவர்கள் தன் அன்றாட கடமைகளைத் தானே செய்துகொள்வார்கள். மற்றபடி மங்களாவுக்கு எந்த உதவியும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள். எப்பொழுதும் சிவ நாமத்தை ஜபித்த வண்ணம் இருப்பார்கள். யாராவது எதாவது கேட்டால் மட்டும் பதில் சொல்வார்கள். இவர்களுடைய இந்த பரம்பரைவீடு, ஓட்டு வீடானாலும், பெரியதாக இருந்தது. வீட்டின் எதிரிலேயே ஒரு ஏக்கர் நிலமும் அவர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. மூவரும் எந்த குறையுமின்றி வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். மேலும் சாயப்பன், புனிதா வீட்டில் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தான். நம்பிக்கையான, விசுவாசமான ஆளாக வேண்டும் என்று கண்ணபிரான் அவனை வளைத்துப்போட்டுக்கொண்டார்.

“இன்னைக்கு கண்ணபிரான் எஜமான் என்ன சொன்னார் தெரியுமா மங்களா? உனக்கு கல்யாணத்தை முடித்துவிட்டு நிம்மதியாக இரேன் சாயப்பா என்றார்கள். மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கட்டா தங்கச்சி.”

“வேறு என்னவெல்லாம் சொன்னாங்க அண்ணா?’

அது வந்து…. வந்து.. வயசுப் பசங்க இருக்கிற எடத்துக்கு உன் தங்கச்சிய வேலைக்கு அனுப்பனுமா? அப்படீன்னு. அப்புறமா, அந்த சினேகாப் பொண்ணு குடும்பத் தகுதிக்கும் நம்ப குடும்பத் தகுதிக்கும் ஒத்துவருமான்னு முட்டாள்த்தனமா கேட்கிறாரு மங்களா. அந்த குடும்பத்தில் அவர் சம்பந்தமா போடப் போறாரு?

“கண்ணபிரான் ஐயா லேசுபட்டவர் இல்லை அண்ணா. அவரைப்போய் முட்டாள்தனமா கேட்கிறாருன்னு சொல்லாத. தன் மருமகனா வரப்போவது சிவா என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தாரோ என்னவோ. முதலில் தன்னிடம் பெண் கேட்காமல், இரண்டாவதாகத்தான் பெண் கேட்டிருக்கிறார்களே!. அப்படி சினேகா குடும்பம் எந்த விதத்தில் தன் குடும்பத்தைவிட உசத்தி? என்று அவர் கணக்கு போடுகிறார். நீ அப்பாவி அண்ணா..

“வயசுபசங்க இருகிற இடத்தில்…என்றெல்லாம்… அவர் சொன்னது ஏனாம்?”

மங்களா தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“அந்த சத்யா தம்பியும் இந்த பசங்களும் என்ன பேசிகிட்டாங்க தெரியுமா? அந்த அமெரிக்கா பொண்ணு தனக்கு வரப்போற கணவனுக்கு தன் உடலையும், மனதையும் புனிதமா வைத்திருந்து பரிசளிக்கப் போகிறதாம்.”

“அண்ணா! அந்த அமெரிக்கா பொண்ணு மட்டும்தானா? எல்லாப் பொண்ணுங்களும் அப்படிதான் நினைப்பாங்க. சிலருக்கு நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு அப்படீன்னு ஆயிடலாம்தான். ஆனாலும்” ஏதோ சொல்ல வந்தவள் அத்துடன் நிறுத்திக்கொண்டாள். பாட்டி இருந்த திசையில் தலையைத் திருப்பிக்கொண்டாள். பாட்டி எதுவும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். எதுவும் பேசவும் மாட்டார்கள். ஆனால் பாட்டி அந்த சமையத்தில் கண்ணைத் திறந்து மங்களாவின் கண்ணீரைப் பார்த்துவிட்டார்கள். மறுபடியும் கண்களை மூடி சிவ நாமத்தை உச்சரிக்கத் துவங்கிவிட்டார்கள். எல்லாப் பாட்டிமார்களும் இப்படி இருந்துவிட்டால்! நல்லாதான் இருக்கும்.

பாட்டி மட்டுமா மங்களாவின் கண்ணீரைக் கண்டது? சாயப்பனும்தான். எதிர்த்த சுவரில் மாட்டி இருந்த கையகல முகம் பார்க்கும் கண்ணாடி நிஜக்கதைகள் சொன்னதே!

ஏதாச்சும் விபரீதமா நடந்துவிட்டதா தங்கச்சி?

அண்ணா! நீ என்னை அடித்துக் கொன்றாலும் கொல்லு. உன்னைவிட்டு, இந்த வீட்டை விட்டு மட்டும் துரத்திவிடாதே அண்ணா.

சொல் தங்கச்சி யார் அவன்? அவனைக் கொன்று போட்டு விடுகிறேன்.

இப்பதானே சொன்னேன். கணவன் என வரித்துவிட்டால் அவரைக் கொல்ல உன்னை அனுமதிப்பேனா? கோபிக்கு நான் அரைப் பெண்டாட்டியா வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஒரே நாள் முழுதாக வாழ்ந்து விட்டால் போதும். என் அபிலாசையே அது மட்டும்தான். பணக்கார சம்பந்தம் எல்லாம் நடக்கிற காரியமில்லை என்று எனக்குத் தெரியும்.

சாயப்பன், அழுகையை அடக்க துண்டை வாயில் அடைத்துக் கொண்டு வாசலுக்கு வெளியில் வேகமாக வந்தான். வீட்டின் எதிரே அவர்களுடைய நிலத்தில் நெற்பயிர் கொஞ்சமாக வளர்ந்திருந்தது. பயிர்களுக்கிடையில் அசைவு தெரியவே, அவன் பார்வை அங்கே சென்றது . இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு ஒரு ஆள் உயரத்திற்கு எழுந்து நின்று கொண்டிருந்தன. சாதாரணமாக இந்த காட்சியை அவன் அடிக்கடி பார்க்க நேரிடும். அப்போதெல்லாம் கையெடுத்துக் கும்பிடும் அவன், இப்பொழுது, கல் எடுத்து அவற்றின் மேல் எறிந்துவிட எண்ணி அருகே கிடந்த கல் ஒன்றினை கையில் எடுத்தான். அவனிடம் வேலை செய்யும் வேலன் அப்பொழுது அங்கு வந்துவிடவே, “ஐயா! என்ன காரியம் செய்கிறீர்கள்? பின்னிக்கொண்ட பாம்புகளைப் பார்த்தால் நல்ல சகுணம் என்று கும்பிடும் நீங்கள் ஏன் இப்படி செய்யத் துணிந்தீர்கள்?” சாயப்பன் கல்லைக் கீழே போட்டுவிட்டான். “நல்லது நடக்கும் என்றா சொல்கிறாய் வேலா? அப்படி நடந்தால் உனக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.”

சுடரின் மாமா வீட்டில், மாமாவும் அவள் அப்பாவும் வாசல் வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சுடர், தன் அம்மாவுடனும், மாமியுடனும், அடுப்படியில் நின்று அவர்கள் செய்யும் சமயலைப் பார்துக்கொண்டும் சிறு சிறு உதவிகள் செய்து கொண்டும் இருந்தாள். மொட்டை மாடியில் இளைஞர் பட்டாளம் சிரித்துப் பேசிக்கொண்டு, சீட்டு விளையாடிக்கொண்டிருந்தது. சிவாவுக்கும், கோபிக்கும் விடுமுறை கிடைக்கவில்லை. நாளை ஊருக்குப் புறப்பட்டுப் போஈவிடுவார்கள். மாப்பிள்ளைகளாகப் போகிற இருவருக்குமாக அவர்கள் பெற்றோர்கள் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் அன்றைக்கு முதல் நாள்தான் அவர்கள் ஊருக்கே வர முடியும். சத்யாவோ தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அங்கு தங்கியிருக்கப் போகிறான். பெரியவர்களிடம் அவன் ஏதோ செடி கொடிகளை ஆராய்ந்து டாக்டரேட் வாங்கப் போவதால் அங்கு தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையிலும் அவனுக்கு மூலிகைகளில் ஆர்வம் உண்டுதான். ஒழிந்த நேரங்களில் மூலிகை பற்றி தெரிந்து கொள்ளவும் அவன் எண்ணி இருந்தான். பெரியவர்களை ஏமாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. சத்யா எப்படியாவது சுடரின் மனதில் இடம் பிடிக்கவேண்டும் என்பதே அவர்கள் அனைவரின் எண்ணமாக இருந்தது.

கோபியும் சிவாவும் வேலை நிமித்தமாக புறப்பட்டுப் போய்விட, சத்யா அந்த வீட்டில் தங்க நேர்ந்தது. சுடருக்கு கொஞ்சம் இருமலாக இருந்ததை கவனித்த சத்யா ஊருக்குள் சென்று தூதுவிளை என்ற மூலிகையைப் பறித்து வந்தான். அந்த கொடி, முள் நிறைந்த ஒன்று. கைகளில் கீறிக்கொண்டு அதனைப் பறித்துவந்து சுடரின் அம்மாவிடம் கொடுத்த போது அவனது நெஞ்சம் நிறைந்திருந்தது.

சுடரின் அம்மா கோமளா, அவனிடமிருந்து மூலிகைகளைப் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் .மூக்கடைப்பிற்கு ஆடாதொடை இலை, துளசி, தூதுவிளை, வெற்றிலை, ஓமவல்லி இலை, அத்துடன் சிறிது மிளகும் மஞ்சள்தூளும் சேர்த்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தண்ணீர் கால்பங்காக சுண்டும் போது இறக்கி, ஆறவைத்து, வேண்டுமானால் சிறிது இனிப்பு சேர்த்து மூன்று வேளைகள் குடித்தால் சளி, இருமல், மூக்கடைப்பு காணாமல் போய்விடும்.

உடல் வலிக்கு முடக்கத்தான். எலும்பு தேய்ந்து போனதாக டாக்டர் சொன்னால் ஆளி விதைகளை தினமும் இரண்டு ஸ்பூன் அளவு வாயில் போட்டு மென்று சாப்பிட வெண்டும். பிரண்டைத் துவயல் செய்து சாப்பிட வேண்டும். இன்னும் தோல் பள பளக்கவும் முடி வளரவும் பற்றி ,கோமளா சத்யாவிடம், கேட்டு விலாவாரியாகத் தெரிந்துகொண்டார்கள் .தமிழர்களின் மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்த அக்காலத்தில் நோய்களும் குறைவாகவே இருந்துள்ளது.

ஒரு நாள் சுடர் கொல்லையில், மரத்தில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு மெல்ல ஆடிக்கொண்டிருந்தாள். மாம்பிஞ்சு, மாவிலைகளின் வாசனை அவளுக்கு மன நிறைவைத் தந்துகொண்டிருந்தது. மெல்லியப் பூங்காற்றின் தாலாட்டு அவளுக்கு இதமாக இருந்தது. பின்னால் வந்து நின்ற சத்யா,, “சுடர்!” என அன்பு நிறைந்த குரலில் அழைத்தான். சுடர் திரும்பிப்பார்த்தாள். அவள் கண்கள் சத்யாவின் கண்களைச் சந்தித்தன. சத்யாவின் மனக்கதவம் திறந்து கண்களின் வழியாக காதலின் ஒட்டுமொத்த கற்றைகளும் ஒளிக்கீற்றுகளாகப் புறப்பட்டு சுடரின் கண்களைத்தாக்கின. ஓராயிரம் கதைகள் சொன்ன அந்த பார்வை சுடருக்கு உண்மைக்காதலை எடுத்தியம்பிவிட்டது..சுடர் தன் கண்களை மூடித் திறந்தாள். .இருவரும் ஜன்ம ஜன்மமாக பிரிந்திருந்தவர்களைப் போல கண்ணீர் பெருக பார்த்துக்கொண்டனர். சத்யா நெருங்கி வந்தான். அவள் எழுந்து நின்றாள். அவள் கைகளைப் பற்றிய சத்யா நான் உனக்காக காத்திருப்பேன் .என்றான். ம்ம்ம் என சுடர் சொன்னபோது சத்யா, வெற்றி வாகை சூடிக்கொண்டது போலவே உணர்ந்தான்.

சத்யா, இந்த விஷயத்தைத் தொலைபேசியில் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தான். சிவாவும், கோபியும் பெரிதும் மகிழ்ந்து வாழ்த்துக்களைச் சொன்னார்கள்.

தினமும் மாலையில், சுடர், புனிதாவை சந்திக்க புனிதாவின் வீட்டிற்கே செல்ல வேண்டி இருந்தது. இன்னும் ஒரே வாரத்தில் புனிதாவுக்கு நிச்சயம் பண்ணப் போகிறார்களே. அதனால், அவளுக்கு வெளியில் எங்கும் போக அனுமதி இல்லை.

சுடர், புனிதாவின் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தாள். சத்யா தன்னிடம் பேசியதை உயிர்த் தோழியிடம் சொல்ல எண்ணினாள். அப்படி நினைத்தபோது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வெட்கம் அவளுக்கு புதிது. ஜில் என்ற காற்று அவளை வருடிச் சென்றது. வானத்தில் மேக மூட்டங்கள் வேறு. மழை வரும் போல இருக்கிறதே. வந்தால்? அருகே சாலையின் இடப்பக்கத்தில் இருந்த பாழடைந்த பங்களாவைப் பார்த்தாள். போனதடவை இந்தியா வந்த போது புனிதாவும் அவளும் அந்த பங்களாவிற்குள் சென்று ஒவ்வொரு இடமாக பார்த்து இங்குதான் சமயல் பண்ணியிருப்பார்கள். இந்த இடத்தில்தான் விருந்தினர் வந்தால் தங்க வைக்கப் பட்டிருப்பார்கள். அந்தமாதிரி பேசிக் கொண்டிருந்தது ஞாபகத்தில் வரவே பங்களாவுக்குள் செல்ல அவளுக்கு விருப்பம் ஏற்பட்டது.

உள்ளே சென்றவளுக்கு அந்த பங்களா புதிய கதைகளைச் சொன்னது. கதையில் அங்கே அவளும், சத்யாவும் குடித்தனம் நடத்துகிறார்கள். அன்று மாமி செய்த கொழுக்கட்டையைப் போல சுடர், சத்யாவுக்காக செய்து, “போனால் போகட்டும்” என்று பிள்ளையாருக்கும் படைக்கிறாள். குளியல் அறையில் இருவருமாக புகுந்து ஒருவர் மேல் ஒருவர் தண்ணீரை வாரி.வாரி இறைத்துக் கொள்கிறார்கள். அப்பொழுது சத்யாவின் குரல் கேட்கிறது.

“மழை என்றால் ரொம்ப பிடிக்குமா சுடர்?.

“சுடர்!!” மறுபடியும் குரல் சத்தமாக கேட்கவே அவள், இந்த உலகத்திற்கு மீண்டாள். எதிரில் சத்யா நின்றிருந்தான். அவன் மழையில் நனைந்து மழை நீர் சொட்ட சொட்ட நின்றிருந்தான். கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து மழை நீர் இடிந்திருந்த சுவற்றின் மேல் குபுகுபுவென விழுந்து அங்கிருந்து சுடரின் மேல் தண்ணீரை வாரி வாரி இறைத்துக்கொண்டிருந்தது.. கற்பனையில் சத்யாதான் வாரி இறைப்பதாக கனாக் கண்டுகொண்டிருந்தாளே. மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

இருவருமாக மழையில் நனைந்தபடி பங்களாவை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தனர். அகலமான பெரிய பெரிய அறைகள், சில அறைகளில் சிமென்டினால் கட்டில் போல திண்டு வைத்துக் கட்டப்பட்டிருந்தது. அலமாரிகளும் அலங்கார வளைவுகளுடன் இருந்தன. ஒரே ஒரு அறை மட்டும் கும்மிருட்டாக இருந்தது.

“இந்த அறையை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை”.என்றாள் சுடர்

“அதே உணர்வுதான் எனக்கும் ஏற்படுகிறது சுடர்” என்றான் சத்யா..

“மற்றபடி இந்த பங்களாவை எனக்கு ரொம்பவே பிடிக்கிறது சத்யா”.

சுடர்! நீ விருப்பப் பட்டால் இதை எப்பாடுபட்டவது நமக்காக வாங்கி உனக்குப் பரிசாக அளிக்கப் போகிறேன்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வாங்க. மழை விட்டு விட்டது போகலாம்.

அடுத்த தினம் நடந்த சம்பவங்களினால் சுடர் மிகவும் பாதிக்கப் பட்டாள். வழக்கம் போல புனிதாவின் வீட்டிற்கு சுடர் நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த பாழடைந்த பங்களாவைத் தாண்டி வந்துவிட்டாள். அப்பொழுது திடீரென்று பின்னால் வந்த இருவர் அவள் திரும்பிப் பார்ப்பதற்கும் முன்னதாக அவளுடைய கண்களைப் பொத்தி மூக்கில் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை வைத்து அழுத்த அவள் மயக்கமடைந்தாள். மயக்கதிலேயே அந்த பாழடைந்த பங்களாவுக்குள் தூக்கிச் செல்லப் படுவதை உணர்ந்தாள். அதே நிலையில் எவ்வளவு நேரம் இருந்தாளோ தெரியவில்லை.

அவள் இயல்புக்குத் திரும்பியபோது. படுத்திருந்த நிலையிலிருந்து கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.. ஆனால் குழப்பத்திலிருந்து அவள் விடுபடவில்லை, யார் அவர்கள்? ஏன் என்னைக் கடத்தி இங்கு கொண்டுவந்து போட்டார்கள்?

சுடர்! சுடர்! என்று சத்யா அழைக்கும் குரல் கேட்டதும் அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். கையில் டார்ச்சுடன் அந்த அறைக்குள் நுழைந்த சத்யா அவள் இருந்த கோலத்தைக் கண்டு பதறிப் போனான்..அவள் கைகளைப் பிடித்து தூக்கி நிறுத்தினான்.

“என்ன ஆச்சு? சுடர்?” டார்ச் வெளிச்சத்தில் அவள் சொல்வதைக் கேட்கலானான். சுடர் நடந்தனவற்றை விவரித்தாள். மயக்கத்தில் எனக்கு அசைய முடியவில்லையே தவிர கவனம் இருந்தது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இருட்டு அறைக்குள் என்னைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இருட்டில் தடுமாறியபடி சிமிண்ட் கட்டிலில் படுக்கவைத்தார்கள். பின்பு போய்விட்டார்கள். அடுத்து வந்த இருவர் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இருக்கவேண்டும். ஒருவர் என் கால்களையும் மற்றொருவர் என் கைகளையும் பிடித்துத் தூக்கி இந்த ஓரமாகப் போட்டு விட்டார்கள். அப்படி அவர்கள் என்னைத் தூக்கிக் கொண்டிருக்கையில்: “மெதுவாத் தூக்கு” என்றும் “அடிபட்டுவிடாமல் மெதுவாக” என்றும் மெல்லிய குரல்களில் பேசிக்கொண்டார்கள்.

சிறிது நேரம் நிசப்தமாக இருந்தது. பிறகு ஒரு ஆள் தடுமாறியபடி இருட்டை சபித்துக் கொண்டேவந்து அந்த கட்டில் மேல் படுத்துக்கொண்டான்.. அந்த ஆள் ஏதேதோ உளறியபடி இருந்தான். குடிதிருந்தான் போலும் அவனுடைய குரல் கட்டைக்குரலாக இருந்தது. அதற்கு பதில் சொல்லும் விதமாகவோ என்னவோ ஒரு பெண்ணின் ம்ம் என்ற சப்தமும் கேட்டது/

எனக்கு ஏதோ தப்பாகப்பட்டது. எழுந்து ஓடிவிடலாமா என எண்ணினேன். ஆனால் செயலற்று இருந்ததால் இங்கேயே கிடக்கும் படியாகிவிட்டது. சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் துளித்தது.

இபொழுது சத்யா அறையின் எல்லா பக்கமும் டார்ச் அடித்துப் பார்த்தான். கட்டிலின் பக்கத்தில் நொறுங்கிக்கிடந்த கண்ணாடி வளையல்களைத் திரட்டி கைகளில் எடுத்துக்கொண்டான். அங்கே கிடந்த வாடிப்போகாத மல்லிகைப் பூச்சரத்தையும் எடுத்துக்கொண்டான். தன் சட்டைப்பையில் அவற்றைப் பத்திரப் படுத்தினான்.

சுடர்!, உன்னை ஒரு ஆண் தெய்வமும் ஒரு பெண் தெய்வமும் காப்பாற்றி இருக்கின்றன. மனதிற்குள்ளாக அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள். இங்கே நடந்ததை வீட்டில் போய் சொல்லி எல்லோரையும் கலவரப் படுத்திவிடாதே. சரியா?

யார் எனக்குத் தீங்கு நினைத்தது? சொல்லுங்கள் சத்யா? யார் என்னைக் காப்பாற்ற நினைத்தது? உங்களுக்கு எப்படித் தெரியும்?

என் அனுமானம் தவறாகப் போகாது. பிறகு சொல்கிறேன். இதுபற்றி முன்னதாக சாயப்பனுக்கு எப்படி தெரிந்தது? அதற்கான ஏற்பாடுகளை அவனால் எப்படி மிகச் சரியாக செய்ய முடிந்தது? என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

.அம்மாவிடம் நான் இங்கு நடந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.சத்யா. குழந்தைப் பருவத்திலிருந்தே அன்றன்றைக்கு நடந்தனவற்றை அம்மாவிடம் சொல்வது எனக்குப் பழக்கம். அதுதான் குழந்தைகளுக்கு நல்லது என அம்மா எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதனால் என்ன பலன்கள் தெரியுமா சத்யா?

அப்பொழுதுதான் நாம் எந்த சூழ்நிலைகளில் இருக்கிறோம் என்று அவர்களுக்குப் புரியும். அதற்கேற்ற வழிமுறைகளை அவர்களால் சொல்ல முடியும் அவர்கள் அனுபவம் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். நாம் செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்பதை நாம் தயக்கமோ சந்தேகமோ இன்றி செயல்படுத்த முடியும். அதற்காக எனக்கு முழு சுதந்திரம் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள்.

சுடர் சொல்வதை எல்லாம் சத்யா ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

“ஓ அப்படீங்களா? அப்போ நேற்று நாம் பேசிக்கொண்டதை அம்மாவிடம் சொல்லிவிட்டீர்களா?

சுடரை வெட்கம் பிடுங்கித்தின்றது. சமாளித்துக்கொண்டாள் .

ஏன்? சொல்லாமல்? நேற்றைக்கே சொல்லிவிட்டேன். அப்பாகூட உங்கள் பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசிவிட்டார்களே!

சத்யா மலைத்துதான் போனான். இந்தப் பெண் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாள்! பெரியவர்களையும் மதிக்கிறாள். நேர்த்தியாக தனக்கு வேண்டியவைகளைச் செய்துகொள்கிறாள்.

அவர்கள் அந்த அறையை விட்டு வெளியில் ஹால் போன்ற இடத்துக்கு வந்தார்கள். வெளிச்சம் மாலைப் பொழுதெனக் காட்டியது.

ரொம்ப நேரமாகி விட்டதோ என நினைத்தேன்.

நீ வீட்டை விட்டு வந்து சரியாக முக்கால் மணி நேரமே ஆகிறது சுடர். சரி போகலாம் வா.

அவர்கள் வீட்டை அடைந்த போது கோபி வந்திருந்தான். அலுவலகத்தில் என்ன பொய் சொல்லி விடுமுறை வங்கினானோ என சத்யா நினைத்தான்.

சுடரின் அம்மா கோமளாவின் கனிவான பார்வையை சந்தித்த போது சத்யா வெட்கப்பட்டான்.. இவர்கள் தன் பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள். அது பற்றி இவர்களும் சரி; அவனுடைய அப்பா, அம்மாவும் சரி; தன்னிடம் இதுவரைக்கும் எதுவுமே கூறாமல் இருப்பது அவனுக்கு சங்கடமாக இருந்தது.

சுடரின் அப்பாவோ “வாங்க சத்யா. சுடரோடு வாக் போயிட்டு வரீங்களா?” என வினவ, இதென்ன புதுசா “நீங்க, வாங்க” என்று அவன் குழம்பிப் போனான். மாப்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கம் பற்றி சிந்தித்ததும்தான் “ஓ. இவர்களுக்கு தன்னை மருமகனாக ஏற்றுக்கொள்ள சம்மதம்” என்பது அவனுக்குப் புரிந்துபோனது.

மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் மங்களா, துளசிமாடத்தின் எதிரே கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் காதின் இருபுறமும் கொஞ்சம் முடி எடுத்து சிறிய பின்னல் போட்டு, அத்துடன் மற்ற முடிகளைச் சேர்த்து பெரிய பின்னலைத் தளர போட்டிருந்தாள். பின்னல் சாட்டையைப் போன்று முழங்கால் வரை நீண்டிருந்தது. மிகவும் அழகாக இருந்தாள்.

சுடர் அவள் அருகில் நின்று அவள் போடும் கோலத்தைப் பார்த்தவாறு இருந்தாள். அப்பொழுது அங்கே சத்யா வந்தான். அவன் திடீரென்று மங்களாவின் கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்துவிட்டு எழுந்தான். அடடா என்ன இது என மங்களா பதறிப்போனாள். சத்யா; தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த நொறுங்கிய வளையல் துண்டுகளையும், மல்லிகைப் பூச்சரத்தையும் எடுத்து அவளிடம் காண்பித்தான். மங்களா தலையைக் குனிந்துகொண்டாள். அவளுடைய ஒரு கையில் வளையல்கள் இல்லாததையும்: மறு கையில் இருந்த வளையல்கள் “அந்த உடைந்த வளையல் துண்டுகள்” மாதிரியே இருந்ததையும் கவனித்த சுடருக்குப் புரிந்துவிட்டது. அவளும் மங்களாவின் கால்களில் விழுந்து நமஸ்க்கரித்தாள்.. அத்துடன் மங்களா உள்ளே ஓடிச்சென்று அடுப்பங்கரையில் போய் நின்றுகொண்டாள். சத்யா.. என்று கட்டைக்குரலில் கூப்பிட்டுக்கொண்டே வந்தான் கோபி. “இந்த கட்டைக் குரலோன் யார் என்று தெரிந்தும் நேற்று நீ என்னிடம் சொல்லாமல் பெருந்தன்மையுடன் இருந்துவிட்டாய்.சுடர்”.

அந்த ஆண் தெய்வம் யார் சத்யா?

சாயப்பந்தான்

எப்படிச் சொல்கிறீர்கள்?

அரசமரத்தடி பிள்ளையார்கோவில் உனக்குத் தெரியுமில்லையா? அதன் பக்கத்தில் நாயுருவி செடிகள் மண்டிக்கிடந்தன. அவற்றை வேருடன் பிடுங்குவதற்காக கீழே உட்கார்ந்து சேகரித்துக் கொண்டிருந்தேன். நாயுருவி செடிகள் உயரமாக வளர்ந்திருந்ததால், நான் அங்கு இருப்பது தெரியாமல், சாயப்பன் தன் தங்கைக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை பிள்ளையாரிடத்தில் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தான். வீட்டில் ஒருவரும் இல்லாதபோது கோபி; மங்களாவிடம் சில்மிஷம் செய்து அவள் மனதைக் கலைத்துவிட்டதை சொல்லி அழுதான். இந்த பணக்கார சம்பந்தம் பற்றி எண்ணிப்பார்க்ககூட அருகதை இல்லாதவனாக இருப்பதற்கு வருத்தப்பட்டான். ஒரே ஒரு நாள் அவனுடன் முழுதாக வாழ்ந்துவிட்டால் அதுவே தனக்குப் போதும். என்ற மங்களாவின் விருப்பத்தையும் சொல்லி இது நியாயமா? என பிள்ளையாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பொழுது கோவில் சுவற்றில் இருந்த பல்லி சத்தம் இட்டது, { கெலித்தது }.. அதை நல்ல சகுனம் என நினைத்து கையில் வைத்திருந்த தேங்காயைப் பிள்ளயாருக்கு சிதற்தேங்காய் உடைத்து,” உனக்கு சரி என்றால் எனக்கும் சரி”. இப்படி சொல்லிவிட்டு சென்றான்.

புன்னை மரத்தடியில் நீ அன்று புனிதாவிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபின்பு, கோபி ”சுடரைக் கட்டிக்கப் போறவன் கொடுத்து வைத்தவன்.” என அடிக்கடி சொல்வான். பெரியவர்களை எதிர்த்துக்கொண்டு தனக்கு புனிதாவுடன் திருமண நிச்சயம் ஆகப்போவதைத் தடுக்க அவனால் முடியாது. இப்படிச் செய்தால் நீயே “பெரியவர்களிடம் சொல்லும்” அந்த வேலையைச் செய்து அவனை மணந்து கொள்வாய் என்று அவன் தப்புக் கணக்கு போட்டுவிட்டான்.

இதனையெல்லாம் கேட்டு கடவுளே! என்று மட்டுமே சுடரால் சொல்ல முடிந்தது.

இன்னும் இரண்டு தினங்களில் விழா நடக்க இருந்தது. அது முடிந்த சில தினங்களில் சுடர் தன் பெற்றோர்களுடன் அமெரிக்கா சென்றுவிடுவாள். சத்யாவின் உறவினர்கள், அவன் அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா, தாத்தா என்று ஐந்தாறு நபர்கள் சுடரைப் பார்க்க என்று அந்த வீட்டிற்கே வந்துவிட்டார்கள். எங்கள் பையன் தனக்கு வரப்போகிறவளைத் தானே தேர்ந்தெடுத்து விட்டான். அவன் விருப்பம்தான் எங்கள் விருப்பம். எங்கள் வீட்டு மஹாலஷ்மியைப் பார்க்க என்றுதான் வந்தோம் என சொல்லி சுடரைச் சுற்றி சுற்றி வந்தார்கள். அவர்கள் சுடருக்கென வாங்கிவந்திருந்த விலை உயர்ந்த பொருட்களை அவளுக்கு பரிசாக அளித்து மகிழ்ந்தனர். அவர்கள் எல்லோரையும் நடக்கப் போகும் விழாவுக்குத் தங்கிச்செல்லும்படி வேண்டியும் விழா அன்றைக்கு வருவதாகச்சொல்லிப் புறப்பட்டுப் போய்விட்டர்கள்.

கோபி நொந்து போனான். இன்னும் இரண்டுதினங்களில் ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஒன்றுமே நடக்காதது போல இந்த அழுத்தக்காரி. எதைப் பறிகொடுத்திருக்கிறொம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறாளா? இந்நேரம் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கவேண்டுமே!

அன்றைக்கு சுமங்கலி ப்ரார்த்தனை செய்வதற்கான ஏற்படுகள் நடந்து கொண்டு இருந்தது. வீட்டில் விசேஷங்கள் நடப்பதற்கு முன்னதாக ஏதாவது ஒரு நாளில் முன்னோர்களுக்குப் படைக்கும் விதமாக இந்த ப்ரார்தனை நடக்கும். சாமிக்கு முன்பாக இலைகளைப் போடுவதும், பூக்கள் அலங்காரம் .செய்வதுமாக அப்பொழுது அந்த சாமி அறையில் மங்களா, சுடர், கோபி மூவர் மட்டுமே இருந்தனர். சர்கரைப் பொங்கலை கோமளாவும், மாமியும் அடுப்படியில் தயார் பண்ணிக் கொண்டிருந்தனர். நைவேத்ய பொருளாக, சர்க்கரைப் பொங்கல், வெற்றிலைபாக்கு, பழங்கள், தேங்காய், பூக்கள் ஆகியவற்றுடன் பச்சைக்கற்பூரம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்த பால் நைவேத்தியமாக வைக்கப்படும். அந்த பாலை; சுடர்; கொண்டுவந்து வைக்க, அங்கு நின்று கொண்டிருந்த கோபி, எச்சில் பாலை சாமிக்கு நைவேத்யமாக வைக்கலாமா? என சத்தமாக கேட்கவே, பூக்களைக் கொண்டு சாமி அலங்காரம் செய்து கொண்டிருந்த மங்களா; பூனை சொன்னால் ஆச்சா? எச்சில் ஆன பால் சொல்ல வேண்டும். என் கண்ணாடி வளையலை உடைத்தவருக்கு அதை வாங்கித்தரக்கூட துப்பில்லை. என்று வெடுக்கென சொன்னாள். கோபியின் மூளை அப்பொழுதுதான் வேலை செய்யவே ஆரம்பித்தது. சுடர் கண்ணாடி வளையல் அணிந்து அவன் பார்த்ததே இல்லையே என யோசித்தான். அவனுக்கு, மங்களாவின் மேல் கோபமாக வந்தது. அன்றைக்கு நடந்ததில் கொஞ்சம் சந்தோஷமும் ஏற்படவே, இரண்டும் கலந்த உணர்வில் குழப்பமுடன் அவ்விடம் விட்டு சென்றுவிட்டான்.

லலிதா, புனிதாவின் அம்மா; முக்கிய வேலையாக சாயப்பனைத்தேடி அவன் வீட்டை அடைந்தபொழுது, சாயப்பன் எங்கோ வெளியில் சென்றிருந்தான். பாட்டி மட்டுமே அங்கிருந்தார்கள். சந்தற்ப்பத்தைப் பாட்டி; பயன்படுத்திக்கொண்டார்கள். நடந்தனவற்றை விலாவாரியாக லலிதாவுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

“அண்ணனும் தங்கையும் நான் ஒருத்தி இருப்பதையே மறந்து பேசிக்கொண்டனவற்றைக் கேட்டுதான் இத்தனையும் சொல்கிறேன். சந்தேகம் இருந்தால், தேங்காய் வியாபாரியிடம் வேலை செய்யும் கோதண்டத்தைக் கேட்டுப் பார். அவனும் அவன் தம்பியும்தான் பணத்திற்கு ஆசைப் பட்டு சுடரைத் தூக்கிக் கொண்டு போய் அந்த பாழடைந்த பங்களாவுக்குள் போட்டது. சாயப்பனிடம் இந்த விஷயத்தை சொன்னதும் அவனேதான். என் பேரனும் பேத்தியும் சுடரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். நான் உனக்கு இதனைத் தெரியப்படுத்துவதால், புனிதாவின் எதிர்காலத்தை காப்பாற்றுவதுடன் என் பேத்திக்கு ஏதேனும் கடவுள் வழி காட்ட மாட்டரா என்ற நப்பாசையில்தான் சொல்கிறேன்.” எப்பொழுதுமே பேசாமல் இருந்த பாட்டி தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியில் மீண்டும் மௌனமானார்கள்.

பிறகென்ன?. சிவாவுக்கு மட்டும்தான் நிச்சயதாம்பூலம் நடந்தது. புனிதாவின் நிச்சயத்தை நிறுத்த கண்ணபிரான் சொல்லிய காரணம், என்னவெனில் “இரு கல்யாணங்களை ஒரே சமயத்தில் நடத்தினால்; ஒரு ஜோடி நன்றாக இருக்கும். மற்றது வாழ்க்கையில் சிரமத்தை அனுபவிக்கும். இரண்டிற்கு திருமணங்களுக்குமேல் வேண்டுமானால் நடத்தலாம்”.என்பதுதான். இது வழக்கத்தில் பெரியோர்கள் பின் பற்றிவரும் நடைமுறைதான் என்றாலும், இந்த ஞானம் ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டபோது எங்கேபோனது? சுடருக்கு புனிதாவை எண்ணி ஒரு பக்கம் வருத்தமும், மறுபக்கம் மகிழ்ச்சியும் ஏற்படவேசெய்தது. கயவனிடமிருந்து புனிதா காப்பாற்றப்பட்டுவிட்டாள் , அவள் கோபியின் மீது அன்பு வைத்திருந்தாள் என்பது அவளுக்குத் தெரியும்.

சுடரின் குடும்பம் கல்யாணத்திற்கு வரமுடியாது என்பதால்,சிவா சினேகா நிச்சயதார்த்த விழாவை அவர்களுக்காக சிறப்பாக செய்து முடித்தார்கள்.. சுடர், சத்யா மணவிழாவும் அடுத்துவரும் ஆண்டில் என்று முடிவு செய்தார்கள்.

சுடர், சத்யாவைப் பிரிந்து வெளிநாடு சென்றாள். உயிர்கள் ஒன்றாகிவிட்ட பிறகு அவர்களுக்கு பிரிவின் துன்பம் ஏதுமில்லை. அன்று சுடர், கொல்லையில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்த பொழுதில் சத்யாவின் காதல் நெஞ்சம் ஒரே பார்வையில் கண்கள் வழியாக ஓராயிரம் கதைகள் சொன்னதை நினைத்து நிறைவுடன் இருந்தாள். சத்யாவோ, சுடரை வெற்றிகொண்டதை நினைத்து நினைத்து திருப்தியுடன் இருந்தான். அவர்கள், தங்களின் உயர்வான காதலை நினைத்துக் கொண்டே கல்யாணத்திற்காக காத்திருந்தார்கள்.

இவர்கள் ஃபோனில்கூட பேசிக்கொள்ளாததை நினைத்துப் பெரியவர்கள் பெருமை கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும் இவர்கள் காதல் உறுதியானது என்று. அந்த ஒருவருடமும் கடந்துபோனது.

சுடர், மணமாலை சூடிக்கொள்ள இந்தியா வந்திறங்கினாள். சென்னையில் அப்பாவின் அப்பாவான, பெரியதாத்தா வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவ்வப்போது மெரினா கடற்கரை சென்று நீலக்கடலின் ஆர்ப்பரிப்பை ரசிப்பது சுடருக்கு ஆனந்தத்தை கொடுத்தது. அன்றும் அவ்வாறே பாட்டியுடன் உலகின் புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் அமர்ந்து ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றான நீரின் ப்ரம்மாண்டத்தை ஆச்சரியத்தோடு கண்டு களித்துக்கொண்டிருந்தாள். சமுத்திர ராஜன், கோடானுகோடி அலைக்கரங்களால் தன் சக பூதமான மண் மகளை ஆரத்தழுவிக்கொள்ள முயற்சித்தான் .மற்றொரு பூதமான காற்று இதமான குளிர் காற்றைப் பதமாக சுடரின் மேனியில் படரச் செய்ததால் அவள் கண்கள் மூடி இறைவனைத் துதித்தாள். எத்தனை கோடி இன்பம் இறைவா! கிரகங்களின் தலைவன் சூரியன், சமுத்திரத்தில் முக்கி குளிக்க தயாரான அவ்வேளையில் அவள் எழுந்துபோக எத்தனித்தாள். அப்பொழுது, “களுக்” என்ற சிரிப்பொலியினால் திரும்பிப் பார்த்தாள். பள்ளி சீருடை அணிந்த பெண் ஒருத்தி, யாரோ ஒருவனின் அணைப்பில் அகமகிழ்ந்து சிரித்தவண்ணம் இருந்ததைப் பார்த்த அவள், திகைத்துப் போனாள். அதுவரை பேசாமல் சுடரின் அருகில் அமர்ந்திருந்த பாட்டி, “காலம் கெட்டுக்கிடக்கு. கலிகாலம் இல்லையா?” என இவள் திகைப்பதைப் பார்த்து சொன்னார்கள். சுடர் அப்பொழுதுதான், சுற்றுப் புறத்தை கவனிக்க ஆரம்பித்தாள். இயற்கையின் எழிலில் ஆழ்ந்து மகிழ்ந்துபோயிருந்த அவள், மனிதர்களின் அவலமான நடவடிக்கைகளைப் பார்க்க நேர்ந்த போது நொந்து போய்விட்டள். தமிழ் மக்களின் கலாச்சாரத்தின் மேல் மோகமுற்றிருந்த அவளுக்கு இது மாதிரியான காட்சிகள் வருத்தத்தைக் கொடுத்தது. சாலையில் கண்ணகி சிலை கையில் சிலம்புடன் மன்னனை நோக்கி கையை நீட்டி குற்றம் சாட்டிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தமாதிரியான அவலத்திற்கு யார் காரணம்? நிச்சயமாக சமுதாயம்தான். பெற்றோர்கள், பள்ளிகள், அரசாங்கம், பிள்ளைகளின் சொந்தபந்தங்கள் எல்லோரும்தான். யார் இவர்களுக்கு நம் கலாச்சாரத்தின் பெருமையை எடுத்தியம்புவது? இங்கு நடக்கும் அவலங்கள், உன்னை சாட்சியாக வைத்து நடப்பதால், சமுத்திரமே நீ அன்று பொங்கிஎழுந்த காரணம் இதுதானோ? கடவுளே! என்னால் ஏதேனும் செய்ய இயலுமா? தன் கையறு நிலையை நினைத்து அவள் கண்களில் கண்ணீர் துளித்தது. பாட்டி அவளைப் புரிந்துகொண்டிருந்தார்கள். ஆதலால் அவளை சமாதானப் படுத்தி வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். அவளால் அமைதி அடைய முடியவில்லை.

இத்தனையும் கேள்விப்பட்ட அவலுடைய தாத்தா, சிறு பெண்ணான அவள் ஓரளவு வளர்ந்த பிறகு இச்சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யத்தான் போகிறாள் என்று கணித்து மகிழ்சி அடைந்தார். அவள் கவலைகளைத் திசை திருப்ப தாத்தா சொன்ன செய்திகள் அவளுக்கு புதியனவாக இருந்தது. சத்யா அந்த பாழடைந்த பங்களாவை விலைக்கு வாங்கி மராமத்து செய்ததுடன், கணபதி ஹோமம் செய்துவிட்டதைச் சொன்னபோது அவள் சத்யாவை நினைத்து பெருமிதம் அடைந்தாள்.

அந்த இருட்டு அறையை அவன் என்ன செய்திருப்பான் என அவள் நினைத்துப்பார்த்தாள். புனிதாவும் மங்களாவும் வெளி ஊரில், ஒரே வாடகை வீட்டில் வசிப்பதைக் கேள்வி பட்டபோது ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் அவளுக்கு ஏற்படவே செய்தது. கோபிக்கு, ஏதோ விபத்தில் இரு கைகளும் வராமல் போய்விட்டதை அறிந்து அவள் துடிதுடித்துப்போனாள். தாய் மாமாவின் மகன் அல்லவா? அவள் அம்மா, கோதை இதுவரைக்கும் அந்த செய்தியை அவளுக்கு ஏன் சொல்லாமல் விட்டார்கள் என்பது அவளுக்குப் புரியவில்லை.

அந்த இனிய நாள் வந்தது. கெட்டி மேளம் முழங்க, சுடர், சத்யா கையால் தாலி கட்டிக்கொண்டாள். புதுத் தாலி கழுத்தில் தொங்கத்தொங்க அவள் வலம் வருவதைக் காண சத்யாவுக்குப் பெருமையாக இருந்தது. சுடர், தன் பெற்றொர்களைப் பிரியும் தருவாயில்,அவள் அழுததைப் பார்த்த சத்யாவும் கண்கலங்கினான்.

புதுமைப் பொலிவுடன் விளங்கிய அந்த பங்களாவுக்குள் சுடர், முதலில் தன் வலது காலை எடுத்து வைத்து குடி புகுந்தாள். அவளை சத்யா பூஜை அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த அறை இருட்டு அறையாக முன்பிருந்த இடம் என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்பொழுது அந்த அறை வெளிச்சம் நிரம்பியதாக அமைக்கப்பட்டிருந்தது. சத்யா, அவள் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான். எதிர்ச் சுவற்றில் ஒரு அம்மன் படம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. அந்த அம்மனின் உருவம் அப்படியே மங்களாவை ஒத்திருந்தது. இரண்டு குத்துவிளக்குகள் இரு பக்கமும் இருந்தது. அவற்றை சுடர் ஏற்றிவைத்தாள். இருவரும் அந்த அம்மனுக்கு நமஸ்க்காரம் பண்ணி எழுந்தார்கள். பெரியோர்கள் அனைவரும் ஆசிகள் கூற சத்யா, சுடரின் இனிய இல்லறம் துவங்கியது.

தேன் நிலவுக்கு போவதற்கு முன்னதாக புனிதாவையும், மங்களாவையும் பார்த்துவிட்டு வர எண்ணினார்கள். அதன்படி அவர்கள் அங்கு சென்ற போது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. குழந்தையின் அழுகுரல் அவர்களை வரவேற்றது. மங்களா இரண்டு மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவர்களை நோக்கி வந்தாள். முகம் மலர வரவேற்றாள். புனிதாவும் உள்ளிருந்து வந்தாள். இருவரையும் ஒருங்கே பார்த்த சுடருக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் ஏற்பட்டது. புனிதாவும் மங்களாவும் அக்குழந்தையை பாசமுடன் பார்த்துப் பார்த்து கவனித்தார்கள். கோபி மேல் கொண்ட அவர்கள் இருவரது காதலும் அசைக்கமுடியாததாக இருந்ததை சுடர் உணர்ந்து கொண்டாள். அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இருந்ததையும் கண்டுகொண்டாள். கோபியின் நிலைமையினால் மனவருத்தமடைந்தாள்.

பெரியவர்கள், புனிதாவிடமும், மங்களாவிடமும் சமாதானங்கள் பேசி, கோபிக்கு கோவிலில் இருவரையும் சேர்த்தே மணமுடித்தார்கள். மங்களாவும், புனிதாவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனதை நினைத்த கோபி மனம் இளகிப்போனான். கல்யாணத்தின் போது கைகள் வராத கோபி, சுடரைத் தன் தங்கையாக ஏற்றுக்கொண்டு, தன் மனைவிகளுக்குத் தாலி கட்டச்சொன்னான். திருமணம் முடிந்த கையோடு சுடர், அவனை நெருங்கி “நன்றி அண்ணா!” எனக் கூறி அருகில் நின்றபோது அவன் கைகள் அவளை ஆசீர்வாதம் செய்யும் பொருட்டு மெல்ல மேலெழுந்ததைக் கவனித்த சுற்றம், கைதட்டிக் கொண்டாடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *