சேரன் எக்ஸ்பிரஸ்

 

தேனீர் கோப்பையின் கடைசி சொட்டுகளை ருசி பார்த்தபடியே, அலெக்ஸ் தனது Farewell கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பினான். ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள் அந்த நிறுவனம் அவனை பாதுகாப்புடனும் நல்ல சம்பளத்துடனும் அவனை பார்த்துக்கொண்டது. எனவே அவனுக்குள் தவிர்க்க முடியாத ஒரு வெறுமை தொற்றி கொண்டது.

அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அலெக்ஸ் தனது அலைபேசியை எடுத்து தனது கார் ஓட்டநருக்கு அழைப்பு விடுத்து, “பாலா நைட் கார் வேனும் ஊருக்கு போறேன்” என்று அலெக்ஸ் சொல்லி முடிப்பதற்குள் “என்ன அண்ணே புதன்கிழமையே ஊருக்கு”என்று வினவினான் பாலா, அதைக் கேட்ட அலெக்ஸ் தான் வேலை விட்டதை சொல்ல முடியாமல் வெட்டப்பட்ட பல்லி வால் போல் துடித்தான். “இல்ல பாலா லீவ் கொஞ்சம் நிறைய இருக்கு அதான்” என்றான் அலெக்ஸ். அதற்கு பாலா “சேரன் எக்ஸ்பிரஸ் தானே” என்று கேட்க சுரமேயில்லாமல் “ம்ம்ம்ம்ம்” என்றான் அலெக்ஸ். பாலாவின் அழைப்பை துண்டித்து விட்டு தான் இன்னும் சில மணி நேரங்களில் துண்டிக்க போகும் சென்னை உடனான தனது நினைவுகள் என்னும் தெளிந்த நீரோடை ஒன்று அவன் மனதில் ஓட தொடங்கியது.

தனுஷ் சொல்ற மாதிரி இந்த ஊர பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். இந்த ஊரை நான் மிகவும் நேசிக்க முதல் காரணம் முக்கிய காரணம் எங்க அம்மா கோவை-போத்தனூர் ரயில்வே பள்ளி கணித ஆசிரியை. நான் ஒரு நான்கு வயதிருந்த போது பள்ளிகளின் ஆண்டு விழாவிற்காக என்னை பெரம்பூர் அழைத்து வந்தார்கள். அப்போது தான் சென்னைக்கும் எனக்கும் பந்தம் உண்டாக காரணமான ஒரு சத்தம் கேட்டது, நாளடைவில் அந்த அறிவிப்பு என் வாழ்வின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. “வண்டி எண் 12674 கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ்” இந்த அறிவிப்பு என் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. இந்த ரயிலின் நிற மாற்றம், அவ்வப்போது பொலிவடையும் பெட்டிகள் என இந்த ரயிலை பொறுத்தமட்டில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. ரயில் மீது அதிக ஆர்வம் காட்டும் சராசரி மழலையாக முதன்முதலில் பயனம் செய்த ரயில் என்பதால் இந்த ரயிலின் மீது ஒரு இனம் புரியாத இரட்டை வழி காதல். A double side love. சென்னையிலிருந்து செல்லும் போது ஒரு வழி காதல் கோவையில் இருந்து வரும் போது மறு வழி காதல்.

எனது பாட்டி சென்னை குரோம்பேட்டையில் இருந்ததால் கோடை விடுமுறையில் பத்து நாட்கள் சென்னையில் தான் கூடாரம். தமிழகத்தின் தலைநகரத்திற்கு வருவது என்பதே மகிழ்ச்சி அதுவும் சேரன் எக்ஸ்பிரஸில் பயணம் என்பது மகிழ்ச்சிக்கு எல்லாம் தலையானது. காலங்கள் நகர்ந்தது என் பாட்டியும் தவறினார்கள். அந்த இழப்பு என்னை மிகவும் பாதித்தது என்பதை தாண்டி, மனதின் அடியில் ஒரு சிறிய ஓரத்தில் இனி நம் வாழ்வில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் இருக்காதோ என்று இரண்டு துளி கண்ணீர் செலவானது நிதர்சனமான உண்மை. இவை அனைத்தும் என் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் அரங்கேறியது ஆனால் ஒரு சில மாதங்களிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைத்தது, பணியிடம் மீண்டும் சிங்கார சென்னை.

அப்போது தான் சென்னையும், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலும் என்னை சொல்லாமல் காதலிக்கும் விஷயம் எனக்கு புலப்பட்டது. இது விட்ட குறையா தொட்ட குறையா என்று தெரியாமலே 2011ஆம் ஆண்டிலிருந்து இந்த நொடி வரை இந்த ரயிலும் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது. வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையில் இருந்து விட்டு சனி ஞாயிறுகளை கோவையில் குதூகலிக்கலாம் என்று முடிவெடுத்தால் வெள்ளி மற்றும் ஞாயிறு இரவுகளில் இந்த ரயில் தான் என்னை போன்ற வாடிக்கையாளர்களின் வாடகை வீடு. சென்னை தான் பெரியது இல்லை கோவை தான் பெரியது என்று சண்டையிட்டு கொள்பவர்களை பார்த்து நகைத்து கேலி செய்த நானே கோவை தான் பெரியது என்று முடிவு எடுத்து அங்கே பணிபுரிய கிளம்பிவிட்டேன் என்று அலெக்ஸ் தன் கண்களை திறக்கவும் பாலா காரில் ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது. அலெக்ஸ் தான் எடுத்து செல்ல வேண்டிய ஒரு பெட்டியை மாத்திரம் எடுத்து கொண்டு காரில் ஏறினான். பாலா பல்வேறு கதைகளை பேசி கொண்டு வந்தாலும் அலெக்ஸ் ஒரு பதிலையும் சொல்லாமல் கார் சென்ட்ரலில் வந்து நின்றது. “அண்ணே திங்கள் கிழமை காலை உங்களை பிக் அப் பன்னிக்கவா” என்ற பாலாவின் இந்த கேள்வி, கதவில் சிக்கிய விரல்களை போல அலெக்ஸின் மனதை நொறுக்கியது. இந்த பாலாவை இனி என்று சந்திப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு “நான் சொல்றேன் பாலா” என்று சொல்லி விட்டு அலெக்ஸ் நடைமேடை நோக்கி நடக்க தொடங்கினான். அந்த நடைமேடை எப்போதும் போல் இல்லாமல் உலகம் ஒரு நாடக மேடை என்ற அசரீரியாக அலெக்ஸிற்கு ஒலித்தது. ஒரு வழியாக B4, 26 என்ற இருக்கையில் அலெக்ஸ் அமர வண்டி இன்னும் சில நிமிடங்களில் புறப்படும் என்ற அறிவிப்பு காலம் போகும் போக்கில் செல்ல தொடங்கு என்று சொல்லாமல் சொன்னது.

அலெக்ஸின் அலைபேசி அலறியது, அதை எடுத்து தன் அம்மாவின் அழைப்பு என்றுதும் “சொல்லுங்க மா” என்று வினவினான். அவன் தாய் “வண்டி கிளம்பியாச்சா” என்று கேட்க “கிளம்ப போகுது” என்று பதிலளித்தான். அவன் அம்மா “கஷ்டமா இருக்கா” என்று கேட்டு “உன் கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும் பேசலாமா” என்று வினவினார். அலெக்ஸ் “என்ன விஷயம்” என கேட்க, அவன் தாய் “சந்தோஷ் அங்கிள் ஒரு பொண்னோட ஃபோட்டோ அனுப்பினாரே உனக்கு கூட பிடிச்சிருந்ததே அந்த பெண் வீட்டார் சனிக்கிழமை மீட் பண்ணலாமானு கேட்கிறாங்க” துன்பத்தில் ஒரு இன்பம் என்று நினைத்து கொண்டு அலெக்ஸ் “அம்மா ஃபோட்டோ பார்த்தேன் பிடிச்சிருந்தது ஆனால் பொன்னு என்ன வேலை, என்ன ஏது என்று எதுவுமே தெரியாது” என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் தாய் “பொன்னு நீ ஆசைப்பட்ட மாதிரியே திருச்சியில் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆனால் பூர்வீகம், அம்மா அப்பா இருப்பதெல்லாம் சென்னை குரோம்பேட்டையில் உனக்கு ஓகேனா அடுத்த வெள்ளிக்கிழமை சேரனில் டிக்கெட் போடட்டா?” என்று கேட்க ஒலி எழுப்பி, பச்சை கொடி காட்டி விட்டு சேரன் எக்ஸ்பிரஸ் என்னும் அலெக்ஸின் பல ஆண்ட கால நண்பன் மெல்ல நகர்ந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)