கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 13,978 
 

அதிகாலை இருட்டு மெதுவாக விலகிக் கொண்டிருக்க, ஊர் அப்போதுதான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருந்தது. வெளியே சஞ்சாரங்களின் கலவையான சத்தங்கள். இன்னும் கூட முழுமையாக இருட்டு விலக வில்லை. ரொம்ப நேரமாக காகம் ஒன்று ஒத்தையாய் முருவன் வூட்டு கூரைமேல வந்து உட்கார்ந்துக்கிட்டு உயிர் போற மாதிரி நாராசமாக கத்திக்கிட்டே இருக்கு. முருவன் பொண்டாட்டி கஸ்தூரி கைவேலையை அப்படியே போட்டு விட்டு ஓடிப்போயி ச்சூ..ச்சூன்னு விரட்டி விட்டாள். ஊஹும்! திரும்பவும் வந்து அதே இடத்தில் உட்கார்ந்து அதே கத்தல்.

“ஏம்மே தே! இன்னா இந்த காக்கா செனியன் வூட்டுக்கு வடவாண்ட மூலையில ஒக்காந்து இப்பிடி கத்தித் தொலைக்குது?. எதனா எழவு சேதி வரப்போவுதா?.”—கஸ்தூரியின் வாய்க்கு சர்க்கரைதான் போடணும். அன்றைக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் முருவன் வீட்டுக்கு சாவு செய்தி ஒன்று வந்து விட்டது. அடச்சே! காக்கா ஒரு செய்தி சேனல்னு இப்பத்தான தெரியுது. ஆனால் செய்தி வந்து ஒரு மணிநேரமாகியும் இன்னும் அந்தவீட்டு ஜீவன்கள் கிளம்புவதற்கான எந்தஅறிகுறியும் தெரியவில்லை.

“ஏய்! இன்னாடீ என் அத்தை மண்டையப் போட்டுடுச்சின்னு சொல்றேன், பெரிய சாவு, நீ இன்னாடான்னா நான் வரலேன்னு சொன்னதையே சொல்லிக்கிணு கீற.”

“ஆமா நீ இன்னா சொன்னாலும் சரி, நானு வர்லே.”

“அடீங்! அதான் ஏன்?. அங்க உன் அண்ணங்காரன் மொவத்தில முழிக்கணும் அதான?.”

“தெரியுதில்ல?, பின்ன இன்னாத்துக்கு ஏடிச்சி ஏடிச்சி கேக்கற?.

“ போடீ முண்ட இப்படியே ஒரேமுட்டா உன் வூட்டு ஜனத்த அறுத்து வுட்ருவியா இன்னா?, சொல்லு.”

“ இன்னா இப்ப என் வாயைப் புடுங்கறீயா?. இனிமே இன்னா கெடக்குது சொல்லு. பொறந்த வூட்டு வழி அன்னியோட எனுக்கு அத்துப் போச்சிம்மே தெரிஞ்சிக்கோ. ஐயோ! எப்பா…! எப்பாடீ!.. என்ன இப்படி அநாதையா வுட்டுப்புட்டு பூட்டியே. ” —சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

“ அடச்சீ! வாயை மூட்றீ. ஏன்டீ இப்பிடி சண்டித்தனம் பண்ணிக்கிட்டு நிக்கிற?. சொன்னா கேள்றீ, பெரிய சாவுடீ. கெளம்பு ஜல்தி”

“ஏன் என் உசுர இப்பிடி வாங்கற? சரி, போனமா வந்தமான்னு இருக்கோணும்.”

“ஏய்! இன்னாடீ ரேங்கற?. இது சம்பந்தி வூட்டு சாவுடீ, நாம சம்பந்தம் கட்டணும். இன்னைக்கி சவம் எடுத்தவுட்டு போட்ற சோறு நம்மளை மாதிரி கொண்டான் குடுத்தான்களுடைய செலவுதான்டீ தெர்தா?. அப்பல்லாம் அரிசி பருப்பு வாங்கிக் கொடுத்து முட்டுத்தளி மூட்டி சோறு ஆக்கிப் போட்டுத்தான் கிளம்பணும்.. இப்பல்லாம் யாரும் ஆக்கறான்.. இத்தனை சாப்பாடுன்னு ஓட்டல்ல சொல்லிப்புட்றான். ஆனா பந்தி பரிமாற்றது மட்டும் சம்பந்தி வூட்டு ஜனங்களே இருந்து பரிமாறிட்டுப் போவணும். அதான் மொறை. நாமளும் எல்லாத்தையும் முடிச்சிட்டுத்தான்டீ திரும்பணும். தெர்தா?.”

“சரி அங்க போனா எங்க வூட்டுப் பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டேன். அங்க வந்து ஊரு ஒலகத்துக்கோசரம் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்திடலாம்னு என் உசுர வாங்கக் கூடாது.” —-அவள் கறாராய் சொல்லிவிட்டாள்.

“ஆங்! நாந்தான் போயி மெலாந்துக்கப் போறன். உனுக்கே இல்லன்னா எனுக்கு இன்னாடீ சொட்டுதா?. அன்னிக்கி உங்க சண்டையில் அவனுக்கு எம்மாம் தாந்தலு இருந்தா அந்த நோஞ்சான் பாடூஸ் பையன் என் மேலயே கைய வெப்பான்?.. பதிலுக்கு நானும் கைய வெச்சிருந்தா ரெண்டு அடி தாங்கியிருப்பானாடீ?. ஒறவா பூட்டானேன்னு வெச்சிப் பார்த்தேன். இல்லாட்டி அன்னிக்கே அவன் எலும்பை பொட்டலம் கட்டிட்டிருப்பேன் ஆமா.” –முருவன் அதற்கேற்றாற் போல கட்டுமஸ்தான உடம்புக்காரன்தான்.

ஒருவழியாக சள்ளையான அவங்க பேச்சு முடிஞ்சி அவனுடைய டிவிஎஸ்50 கிளம்பறப்போ காலை ஒன்பது மணி ஆயிப்போச்சி. ஊர்—பிரம்மதேசம். ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவையின் புருஷன் வானவர்குல வல்லவராயன் வந்தியத் தேவன் சிற்றரசனாக ஆட்சி செய்த, சித்தூர் வரைக்கும் பரவியிருந்த குறுநிலப் பகுதிக்கு தலைநகரமாக இருந்தது பிரம்மதேசம் என்ற ஊர்தான். அந்த ஊர் ஆற்காட்டுக்கு பக்கத்திலதான் இருக்குது.. சரித்திரப் பெருமை வாய்ந்த அந்த பிரம்மதேசத்தில்தான் முருவனுடைய அத்தையை குடுத்தது. அதேஊருலதான் இவனுக்கும் பொண்ணெடுத்திருக்கு.. இங்கிருந்து பதினாறு கிலோமீட்டர் தூரம்.

கஸ்தூரி இந்தளவுக்கு பிறந்த வீட்டு மேல குரோதம் காட்றதுக்குக் காரணம் சொத்துத் தகறாரு. கஸ்தூரியும் அவள் அண்ணங்காரன் குமாரும்தான் அவங்க குடும்பத்துக்கு வாரிசுகள். அவங்கப்பன் உயிர் விட்டபோது கஸ்தூரி கையப் பிடிச்சி குமாரு கையில கொடுத்து பாத்துக்கோன்னு சொல்லி விட்டு கண்ணீர் விட்டாரு. அப்ப ரெண்டுபேரும் அப்பிடி அழுதாங்க. அப்புறம் பலவீனமான குரல்ல.

“டேய் குமாரு! ஏரிக்குக் கீழ மொத மடையில பச்சம்மா கோவிலாண்ட இருக்கிற எழுபது செண்ட்டு தளைய கஸ்தூரிக்கு வுட்ரு. அப்புறமா எழுதி குடுத்துடு.” —-என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிட்டாரு. ஆனா அவன் இன்றைக்கு வரைக்கும் அதை செய்யவில்லை. அதற்கப்புறம் குமாரு போக்குல வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. இதோ அதோன்னு ஒரு வருசமா தாத்து மாத்து சொல்லிக்கிட்டே இருந்தான். ஒரு நாள் கஸ்தூரியும், முருவனும் அவனை நிற்க வெச்சி கேட்கிறப்போ குடுக்க முடியாதுன்னு தெளிவாய் சொல்லிட்டான்.

“ என்னமோ நஞ்சையில அம்பது ஏக்கரா, புஞ்சையில அம்பது ஏக்கரான்னு சம்பாரிச்சி வெச்சமாரி போற போக்குல அந்தக் கெயவன் சொல்லிப்புட்டா?, அப்புறம் நானு தலையில துண்டை போட்டுக்குணு போறதா?.. அப்புறம் எனுக்கு மிச்சம் இன்னா பொச்சி கீது சொல்லு?. இந்த ஒழுகலு வூடும், மூணு ஏக்கரா மோட்டாங்காலு நஞ்சையும்தான?. வருசத்தில நல்லா மழை பேஞ்சி ஊரெல்லாம் வருசத்தில மூணு போகம் அறக்கற அன்னைக்கி கூட எனுக்கு மட்டும் ஒரு போகம்தான் கிட்டும். ரெண்டாம் போகத்துக்கே தண்ணி எட்டாது. அம்மாம் மோடு. அத்த வெச்சிக்கிணு நாக்கைதான் வழிக்கணும். ஆமா இந்த சொத்துக்களை வாங்கினதுல எனுக்கு பங்கு இல்லியா இன்னா?. மொத்தத்தையும் அந்தாளே சம்பாரிச்சிட்டானா?. பத்து வருசமா நானுந்தான் கழனிக்காட்ல ஒழைச்சேன்?.”

அதைக் கேட்டு முருவனுக்கே கோவம் வந்திடுச்சி. மாமனார் சொன்னப்ப தலையை ஆட்டிப்புட்டு இன்னைக்கு மாட்டேன்னா இன்னா அர்த்தம்?.. சரி அவனே மவராசனா வாழட்டும், நமக்கு சொத்து வேண்டாம்னு பெருந்தன்மையா சொல்லிட்றதுக்கு இவனும் ஒண்ணும் புளியேப்பக்காரன் இல்லை. கை உழைச்சாத்தான் கஞ்சி என்ற நிலைமை. போறப்போ அந்த கிழவனே எழுதி வெச்சிட்டுப் போவாம இப்படி வில்லங்கம் பண்ணிப்புட்டானே.. வாய் சொல்லாக சொல்லிட்டா அது அம்பலம் ஏறுமா?. ஆனா அதுக்காக மச்சான் கிட்ட போயி பிச்சை கேட்கிற மாதிரி கெஞ்சிக்கிட்டு கிடக்க அவனுக்கு சுய கவுரவம் இடம் கொடுக்கல, மானஸ்தன். பார்த்து பார்த்து ஒரு நாள் பொண்டாட்டி கிட்ட அறுத்து சொல்லிட்டான்.

“ஏய்! அந்தக் கர்மத்த வுட்டுத் தொலைடீ. அந்த சொத்தை பார்த்தா எங்கப்பன் ஆத்தா என்னை பெத்துப் போட்டாங்க?. வுடுமே. தோ பார்றீ! அவன் இன்னமோ நெனைச்சிங்கீறான். அசடா இருந்து கெட்டவனும் இல்ல, சமத்தா இருந்து வாழ்ந்தவனும் இல்லடீ, தெர்தா?.”—- ஆனா கஸ்தூரி இதை விடுவதாக இல்லை.

“ஆங் இவனை மட்டும்தான் எங்காத்தா பெத்தாளா?. என்னை காக்கா தூக்கியாந்து போட்டுச்சா? சொல்லு. எங்கப்பன் சொல்லிட்டு போனதுக்காவ கம்னு போறேன், இல்லாங்காட்டி கோர்ட்டுக்குப் போயி எல்லாத்திலியும் சரி பாதிய பொளந்து வாங்கியாற தெரியும் எனுக்கு.”— என்று சட்ட பாயிண்ட்டை பேச ஆரம்பிச்சாள். இவளுக்கு எடுத்துக் குடுத்து ஊதி ஊதி பெருசாக்கி அதுல குளிர்காய அக்கம் பக்கத்தில நாட்டு வக்கீல்களுக்கா பஞ்சம். அதுக்கப்புறம் ஒரு நாள் கஸ்தூரி கடைசியாக அண்ணங்காரன் கிட்ட நேர்முகமா கேட்டுட்றதுன்னு புருசனை இழுத்துக்கிட்டு, பஞ்சாயத்து பண்றதுக்கு ஊரிலிருந்து முக்கியஸ்தர்கள் ரெண்டு பேரை கூட்டிக்கிட்டு நேரா போயிட்டா. அன்னைக்குத்தான் விவகாரம் சிக்கலாயிப் போயி மச்சானுங்க ரெண்டுபெரும் அடிச்சிக்கிட்டாங்க. குமாருக்கு சப்போர்ட்டா பத்து வூட்டு பங்காளிகளும் திமுதிமுன்னு வந்துட்டானுங்க. இவளுக்கும் ரெண்டு அடி விழுந்துச்சி.

அத்தோட பிரிஞ்சவங்கதான் அஞ்சி வருசமாச்சி. போக்குவரத்து அற்றுப் போச்சி. இடையில கஸ்தூரியின் பொண்ணு ஜோதி பெரிய மனுஷியாகி தடபுடலா சடங்கு செஞ்சாங்க. தாய் மாமன் இருந்து செய்யணும். முருவனுக்கும் மச்சானை கூப்பிடணும்னுதான். ஆயிரம் இருந்தாலும் உறவை விட்றக் கூடாது.ஆனா கஸ்தூரி எடங் குடுக்கல.

“தோபாருடீ! ஒருத்தருக்கொருத்தர் கோபத்தில முட்டிக்கிணு நீயா நானா?ன்னு நிக்கிறப்போ, சடுக்குனு நாமதான் விட்டுக் கொடுப்பமேன்னு மொதல்ல யாராவது ஒருத்தரு ஒரு படிய எறங்கிப்புட்டா போதும்.எதிரி ரெண்டுபடி எறங்கி வந்துடுவான்டீ தெர்தா?. இதான் சிடுக்கா வேலை. குத்தம் பாத்தா ஒறவு இல்லன்னு பெரியவங்க இன்னாத்துக்கு சொல்லி வெச்சிக் கீறாங்க? .” —– அவ எதுக்கும் அசைஞ்சி கொடுக்கல. அதேசமயம் அந்த சம்பவத்துக்கு அப்புறம் குமாரும் தன் பெண்ணை அந்தியூரு மாப்பிள்ளைக்கு நிச்சயம் பண்ணியிருக்கிறான். பையனுக்கு அரசாங்க வேலையாம். நிச்சயதார்த்தத்தை தடபுடலா நடத்தினான்னு கேள்வி. ரெண்டு ஸ்வீட்டு, மூணு பழதினுசு, நாலைஞ்சி பதார்த்தங்க, ஐஸ்க்ரீம், பீடான்னு அமர்க்களப் படுத்திட்டானாம். சாப்பாட்டு எல ஒவ்வொண்ணும் நூத்தம்பது ரூபா தாளுமாம். கூடப் பொறந்தவள ஒரு வார்த்த கூப்பிடல. கேக்கறவங்களுக்கு பதில் சொல்லி முடியல. கஸ்தூரி ரெண்டு நாளும் அழுத கண்ணும், சிந்திய மூக்குமா கிடந்தா.

“வுட்றீ மொதல்ல நாமதானே வழி காட்டிப்புட்டோம்?..”

இவர்கள் போயி பிரம்மதேசத்தில் மேலத்தெருவுல நுழையறப்போ மணி மதியம் பதினோறு மணி ஆயிப்போச்சி. கஸ்தூரி வழியேற அண்ணங்காரன் குடும்பத்தில யாரு முகத்திலேயும் முழிக்கக் கூடாதுடா சாமீன்னு வேண்டாத தெய்வமில்ல. இனி இந்த ஜென்மத்தில அவன பார்க்கக் கூடாது. ஆனால அவளுக்கு வாய்ச்ச பாவி நேரா அவள் அண்ணன் வீட்டுக்கு எதிர் வாடையில் நேரெதிராகவா வண்டிய கொண்டுபோயி நிறுத்துவான்?. அடப்பாவி! அவனை கிள்ளிப்பார்த்தாள், ரகசியமா முறைச்சிப் பார்த்தாள். அவன் வண்டிய ஸ்டேண்டு போட்டு நிறுத்திட்டு ரகசியமாக “ ஏய்! இப்ப போனா சவத்த எடுத்துட்டு கெளம்ப இருட்டிப்புடும். கும்பல்ல எவன்னா நம்ம வண்டிய லவட்டினாக் கூட தெரியாதுடீ. இங்க வுட்டாதான் பாதுகாப்பு தெர்தா?. நான் இன்னா உங்கண்ணன் அத்துலயா வண்டிய வுட்றேன்?. இதுல இன்னொரு விசயம் இருக்குதுடீ. அவன் வூட்டு எதிர்லியே வண்டிய நிறுத்திப்புட்டு திரும்பறப்போ அவன் வூட்டு வாசப்படியில கால் வெக்காம போவப் போறமே இதான்டீ அந்தக் கம்மனாட்டிக்கு நாம தர்ற கொடைச்சலு. ஊரு காரித் துப்பாது?..”—-சொல்லிவிட்டு நிமிர்ந்து வாசல்ல யாராவது இருக்காங்களான்னு பார்த்தான். யாருமில்ல. ஆனா வர்றப்பவே நோட் பண்ணிட்டான். உள் வராண்டாவில நின்னுக்கிட்டிருந்த அவன் மச்சான் குமாரு இவங்க வர்றத பார்த்துப்புட்டு சடுக்குனு தலையை உள்ளே இழுத்துக்கிட்டான். ஹும் இவங்க குடும்பத்துக்கே சுட்டுப் போட்டாலும் அந்தளவு பெருந்தன்மை வராது. என்னடா அப்பிடி சண்டை போட்டவங்க நம்ம வாசல்ல வந்து நிக்கிறாங்களேன்னு டக்குனு வெளியே வந்து வாங்கன்னு கூப்பிட்டிருந்தா அது மனுசத்தனம். த்தூ!. அவன் பூமாலையை எடுத்துக்கிட்டு முன்ன நடக்க, பின்னாலயே மொணமொணன்னு அவனை திட்டிக்கிட்டே கஸ்தூரி நடந்தாள்.

அத்தையின் பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்ல வசதி. ஒருத்தன் வருவாய் துறையில அதிகாரி, இன்னொருத்தன் ஆளுங்கட்சியில கவுன்சிலரு. கும்பலுக்குக் கேக்கணுமா?. தெருவை அடைச்சி பெருசா ஷாமியானா பந்தல் போட்டு, வெளியே வாசல்ல வரிசையாக சேர்களில் ஜனங்க அரசியல் பேசிக்கிட்டிருக்குதுங்க. பறை சத்தம் கணகணவென்று பொரிகிறது. பறையடிப்பவர்கள் ஒவ்வொரு வசதியான பார்ட்டியாகப் பார்த்து கிட்ட போயி ஒப்பாரி பாடி அவங்க பேருக்கு சுபோஜெயம் சொல்லி, டாஸ்மாக் கடைக்கு துட்டு தேத்திக் கிட்டிருந்தாங்க. பக்கத்து வூட்டு வெளி திண்ணையில முக்கியஸ்தர்கள் உக்காந்து ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. எதிரே தெருவுல பாடை தயாராயிக்கிட்டிருந்துச்சி. சவத்தருகே உட்கார்ந்திருக்கிற பொண்டுகளுக்கு குண்டானில் காபி போய்க்கிட்டிருந்துச்சி. அத்தை சாவறப்ப 65 வயசு. ஷுகர், ரத்தக் கொதிப்பு, இரண்டின் தாக்கத்தில் வலது பக்கம் பாரிசவாயு தாக்கி கைகாலு விழுந்து போக, மூணு நாலு வருஷமா படுக்கையிலேயே எல்லாமும்னு கெடு தாண்டியும் போவாம கிடந்து, எல்லாருக்கும் எப்படா? ன்னு சலிப்பு வந்து, அப்புறமா வந்த சாவுன்றதால புதுசா வர்றவங்க ரெண்டு வரி பாடி அழுவுறதைத் தவிர மத்தபடி எல்லா பொண்டுகளும் அமைதியாத்தான் உட்கார்ந்து கிசுகிசுன்னு சொந்தக் கதைய பேசிக்கிட்டு இருந்திச்சிங்க. இவங்க ரெண்டு பேரும் போயி சவத்துக்கு மாலையப் போட்டுட்டு நின்னாங்க. முருவன் பிணத்தருகில் நின்னு கண்ணைக் கசக்க, அவள் தப் தப்னு மார்ல அறைஞ்சபடியே பொண்டுக நடுவுல உக்காந்து அழ ஆரம்பிச்சா. தன் பொறந்த வூட்டு ஒறவு அத்துப் போனதை நெனைச்சாள், அவ்வளவுதான் மாலை மாலையாய் கண்ணீர் வடிய ஒப்பாரிப் பாட்டு பீறிட்டுக் கிளம்புச்சி.

“மஞ்சள் கழுத்தோட, மடி நிறைய பூவோட மன்னவர்க்கு முன்னால வைகுந்தம் போனீயம்மா, தாலிக் கழுத்தோட, தலை நிறைஞ்ச பூவோட, தன்ஞ்சயர்க்கு முன்னால தனிப்பட்டுப் போனீயம்மா.”

கஸ்தூரியின் ஒப்பாரி அழுகைதான் அங்கே கணீர்னு எடுப்பாக இருந்துச்சி. முருவன் போயி சோகமாய் உட்கார்ந்திருந்த மாமாவையும், அவருடைய பிள்ளைகளையும் பார்த்து ரெண்டுவார்த்தை பேசிவிட்டு, சம்பந்த சாப்பாடு பற்றி மற்ற சம்பந்திகளிடம் கலந்து பேசி தன் பங்கு ஐந்நூறு ரூபாயை கொடுத்துவிட்டு, ஜவுளிக் கடைக்கு கிளம்பினான். பிறந்த வூட்டு கோடி போடணும்.

ஆச்சு நொந்த உடம்பு என்பதால் சாயரட்சை மூணு மணிக்கெல்லாம் சவத்தை குளிப்பாட்டி பாடைய கிளப்பியாச்சி. பாடையின் பூ ஜோடிப்பு அலங்காரத்திலும், வான வேடிக்கைகளிலும்,சங்கு முழங்க, சேகண்டி சத்தத்திலும், பொரிந்துத் தள்ளும் இரண்டு செட்டு சாவு மேளம், கூடவே சுடலை வரைக்கும் வந்த ஜனக் கூட்டம். இவைகளால் அத்தை புள்ளைகளின் வசதிகளும், ஊரில் அவர்களுக்கு இருக்கும் சாய்க்காலும் தெரிந்தது. சவத்தை சுடலைக்கு கொண்டு போயாச்சி. சுடுகாட்டில அரிச்சந்திரன் அகவல் முதல் கொண்டு எல்லா சடங்குகளையும் முடிச்சி சவத்த எரியூட்டும் போது பிள்ளைகள் ரெண்டு பேரும் அப்படி அழுதாங்க. அம்மாவுடனான அவங்களுடைய பால்யகாலம் நினைப்புக்கு வந்து விட்டிருக்கும். பிற்பாடு முருவன் ஊரோடு ஒக்க நாட்டோடு நடுவன்னு இவனும் மத்தவங்களோடு சேர்ந்து அங்கியே ஆத்தில குளிச்சிட்டு வந்தான். கஸ்தூரியும் அத்தை வீட்டிலியே குளிச்சிட்டு தலைய விரிச்சிப் போட்டுக்கிட்டு காத்திருந்தா. ஆச்சு, சுடலைக்கு போனவங்க வந்து சேர்ந்தாச்சி. மளமளன்னு இலை போட்டு பந்தி பரிமாற ஆரம்பிச்சாச்சி. முருவனும், கஸ்தூரியும் ஓடி ஓடி பரிமாறினாங்க.

எல்லாரும் சாப்பிட்டு முடிக்க, பந்தி பரிமாறினதில முருவனுக்கும்,கஸ்துரிக்கும் சாப்பிட பிடிக்கல. கொஞ்சமாக ரசம் சாதம் மட்டும் சாப்பிட்டு விட்டு கிளம்பிட்டாங்க. உடன் பாலும் வெச்சிட்டதால இத்துடன் காருமாதி அன்னைக்கு வந்தா போதும். கிளம்பற போது கஸ்தூரிக்கு கவலை வந்து ஒட்டிக் கொண்டது. ஐயோ! எனுக்குன்னு வாய்ச்ச இந்த பாவியால நாம எங்க போகக் கூடாதுன்னு வைராக்கியமா இருக்கிறமோ அந்த இடத்துக்கே போறாப்பல ஆகிப்போச்சே. அங்க போயி வண்டிய கிளப்பணும். ஹும்! மானங்கெட்ட ஜென்மம். பாவி மனுசன் அங்க போயா வண்டிய நிறுத்துவான்?. காங்கியாத்தா! எம்மாடீ! எல்லையத் தாண்டுற மட்டும் கூடப் பொறந்தவன் மொவத்திலியே நானு முழிக்கக் கூடாதுடீ தாயீ. வண்டியை எடுக்கும்போது அவள் அடித் தொண்டையில் சீக்கிரம் சீக்கிரம்னு அவனை தாத்து கோல் போட்டுக்கிட்டே இருக்க, அவனும் மாய்ஞ்சி மாய்ஞ்சி உதைக்க, ஊஹும் இப்ப பார்த்து சோதனையா வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. பளீர்னு தெருவிளக்கு வெளிச்சம் அவங்க இருப்பை காட்டிக் கொடுத்துக்கிட்டு இருந்திச்சி. அவள் நெருப்பு மேல நிற்கிறாற் போல நெளிகிறாள். நல்ல வேளையாக அவங்க யாரும் வெளியில தென்படல.அவனும் ச்சே…ச்சே!.. ன்னு வண்டிய திட்டிக்கிட்டே உதைக்கிறான். வியர்வை கொட்டுது. எல்லாம் வியர்த்தம். கஸ்தூரி அங்க நிக்கமாட்டாமல் நகர ஆரம்பித்தாள்.

“தே! என்னால இங்க நிக்க முடியாது. நானு நடந்து போய் தெருக் கோடியில நிக்கிறேன். நீ வண்டிய கெளப்பிக்கிணு வா.”—— யாரோ அவள் கையை அழுத்தமா பிடிச்சாங்க. திரும்பினாள். குமாரு அண்ணன், கூடவே அண்ணிகாரியும் நிற்கிறாள். அண்ணன் கண்ணில் கண்ணீர்.

“கணே! கஸ்தூரி! உள்ள வாம்மா.” —கஸ்தூரி அவன் பார்வையைத் தவிர்த்து விட்டு எங்கியோ தூரமாய் பார்த்தபடி “இ..இ..இல்.ல..நாங்க கெளம்பறோம்.இருட்டிப் போச்சி.”—அண்ணியும் வந்து இன்னொரு கைய பிடிச்சிக்கிட்டாள். “வாம்மா கஸ்தூரி! ” —குமாரு கண்களை துடைத்துக் கொண்டான். அப்புறம் திரும்பி மச்சான் கையைப் பிடித்தான். “மச்சான்! புத்தி கெட்டுப்போயி அன்னைக்கு அப்பிடி நடந்துட்டேன். தப்புதான், மன்னிச்சிடு. நடந்ததை மறந்துட்டு உள்ள வா மச்சான்.” — ரெண்டு பேருக்கும் நடக்கிறது ஒண்ணும் புரியல. விசேஷத்தில எல்லாம் தள்ளிப்புட்டு இது என்ன புதுத் திருப்பம்?. முருவன் வீராப்பா முறைச்சிக்கிட்டு நின்னான்

“ இருக்கட்டும்பா, எப்பவும் கொஞ்சம் எட்டக்க இருந்தாத்தான் மரியாதை. இன்னா?, கிட்டக்க வந்து அசிங்கப்பட வாணாம் பாரு. நாங்க கெளம்பறோம். இருட்டிப் போச்சில்ல?. வூட்ல கொழந்தைங்க தனியா இருக்கும். இந்நேரம் பார்த்து இந்த வண்டி மக்கர் பண்ணுது. ஸ்டார்ட் ஆயித் தொலைக்கல. சீக்கிரமே இத்த வித்துத் தொலைச்சிடணும். சனியன்.”

“நான் மெக்கானிக்கை கூப்பிட்றேன் மச்சான். நீங்க ரெண்டு பேரும் உள்ள வாங்க.” —அவன் அவசரமாக “இல்ல..இல்ல… மெக்கானிக்லாம் வாணாம்பா. கொஞ்ச நேரம் வுட்டு ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆயிரும்.”

“சரி ரெண்டு பேரும் உள்ள வாங்க. கணே! கஸ்தூரி டேய்! உள்ள வாடா!”——- கஸ்தூரி அசைய வில்லை புருசனைப் பார்க்கிறாள். தவிர்க்க முடியாதபடி முருவனை குமாரு வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றான். கஸ்துரியை அண்ணிக்காரி பிடித்துக் கொண்டாள். உள்ளேயிருந்து சிரிப்புடன் ஓடிவந்த பெரிய பொண்ணு கௌசல்யா வாங்க அத்தை, வாங்க மாமா! ன்னு பாசமா கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் தட்டில சுடச் சுட உளுந்து வடைய கொண்டு வந்து வைத்தாள்.. தொட்டுக்க கார சட்னி. இவளுக்குத்தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்குது.

“ கௌசல்யா! என்ன இந்நேரத்துக்கு சுடச் சுட உளுந்து வடை, எதுவும் விசேஷமா?.”—என்ற முருவனின் கேள்விக்கு கஸ்தூரியின் அண்ணிதான் பதில் சொன்னாள். “ஒரு விசேஷமும் இல்லேண்ணா நீங்க ரெண்டு பெரும் வந்திருக்கிறத பார்த்துப்புட்டுத்தான், கஸ்தூரி உளுந்து வடையும், கார சட்னியும்னா உசுர வுட்ருவா, சீக்கிரமா செய்யின்னு சொன்னாங்க. அதான்.” —–முருவன் ஓரக்கண்ணால் பொண்டாட்டிய பார்க்க, குபுக்கென்று அவளுக்கு கண்ணீர் பொத்துக்கிட்டது. ஏற்கனவே அவள் உடைந்து உதிரும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். அண்ணங்காரன் கணே! டேய்! கஸ்தூரி! வாடான்னு அதே பழைய வாஞ்சையுடன் கூப்பிட்டபோதே உள்ளே கொதிச்சிக்கிட்டிருந்தது இளகிக் கொட்டி விடும் விளிம்பில் வந்து நின்றிருந்தது.

ஆனாலும் முருவனுக்கு குமாரு நடத்தைய நம்ப முடியவில்லை. ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ?. அதே சமயம் இருக்கட்டுமே இப்ப நடக்கிறது பொய்யான நாடகமாத்தான் இருக்கட்டுமே, அந்த பொய்யே எவ்வளவு சந்தோசமா இருக்கு?. ரெண்டு பேரும் வடைய உள்ளே தள்ளி, டீத்தண்ணிய குடித்துவிட்டு, சொல்லிக்கொண்டு கெளம்பி வெளியே வந்தார்கள். முருவன் வண்டிகிட்ட போய் கீழ எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு உட்கார்ந்து உதைக்க.., அட! ஒரே கிக்கில் வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சே. அந்நேரத்துக்கு விடை கொடுக்க வந்த குமாரு, தங்கச்சி கையைப் பிடித்துக் கொண்டு

“கஸ்தூரி! ஒண்ணும் மனசுல வெச்சிக்காதடா. அப்பா சொன்ன எழுவது செண்ட்டை அடுத்த வாரம் உன் பேருக்கு எழுதி வெச்சிட்றேன். சொத்து பெருசுன்னு தப்பா நெனைச்சிப்புட்டேன்..”—அவள் கையை அழுந்தப் பிடிச்சான். கஸ்தூரி விசும்பினாள். அவனுந்தான் மேல்துண்டால முகத்தை மூடிக் கொண்டான்.. . கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் உணர்ச்சியில் பேசமுடியாம அமைதியா நின்னாங்க. முருவனும் புரிந்துக் கொண்டு காத்திருந்தான். அதுக்குள்ளார அண்ணிக்காரி வீட்டில் கொழந்தைங்களுக்குன்னு சொல்லி ஒரு பெரிய உளுந்து வடை பொட்டலத்தை பிளாஸ்டிக் கவர்ல சுத்தி கொண்டுவந்து கஸ்தூரி மறுக்க மறுக்க பையில வலுக்கட்டாயமா வைத்தாள். கூடவே வேர்க்கடலை பயறு சிப்பம் ஒன்று ரெடியாக வண்டியில வந்து உட்கார்ந்துக் கொண்டது.

“அண்ணா! எனுக்கு எந்த சொத்தும் வாணா, நானும் வெதரணையில்லாமதான் வீம்புக்கு சண்டை போட்டேன். பழையபடி நாளு கெழமையில ஒருத்தருக்கொருத்தரு வர, போவ, பேச, கொள்ள, இருந்தா போதும். அதான் எனுக்கு வோணும். வருஷத்துக்கு ஒருக்கா பொங்கலப்போ அப்பா எங்களை கூப்டு சாப்பாடு போட்டு, துணிமணிய குடுப்பாங்களே, அதுமாதிரி குடு போறும். அதுக்குத்தான் ஆசைப் பட்றேன். உன்னை வுட்டா எனக்கு யாருன்னா?. ” —–சொல்லும்போதே அழுதாள்.. “இல்லடா! அந்த சொத்து உனுக்குத்தான்டா. நாங்க மனசாரத்தான் சொல்றோம். செய்யற சீரும் என்னைக்கும் குறையாதுடா. மச்சான்! வர்ற மாசியில காங்கியாத்தா கோவிலு திருநா வருது. குடும்பத்தோட கண்டிப்பா வாங்க.. நெருக்கத்தில வந்து கூப்பிட்றேன். நாங்களும் அப்பப்ப வர்றோம்மா.”— அண்ணிக்காரியும் ஆமோதித்தாள்.

உறவுகளைப் பற்றி தான் சொன்ன அந்த வார்த்தைகளை முருவன் ஒரு தடவை நினைத்துப் பார்த்தான். கஸ்தூரி இப்ப ரெண்டு படி இறங்கி விட்டாள். அதேசமயம் முருவனுக்கு மச்சானின் மனமாற்றம் நிஜமான்னு இன்னமும் குழப்பமாய் இருந்துச்சி. திடீர்னு எது அவனை இப்படி புரட்டிப் போட்டுச்சின்னு தெரியல.

கிளம்புகிற போது கஸ்தூரி தான் குளிச்சிட்டு உடை மாற்றிய அழுக்குத் துணி பையை சாவு வீட்டில் மறந்து விட்டுட்டு வந்துட்டேன் என்று அதை எடுத்துக் கொண்டு வர ஓடினாள். மச்சான்கள் ரெண்டு பேரும் தனிச்சி நிற்க, குமாரு திடீரென்று கிட்ட வந்து முருவனின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டான். கண்களில் நீர் ததும்புகிறது. “அட!.என்ன குமாரு?.” “என்னை மன்னிச்சிடு மச்சான். உனக்கிருக்கிற பெரும்புத்தி எனக்கில்லை. இத்தனைக்கும் என் பங்காளிங்க இருக்கிற திமிர்ல அன்னிக்கு உன்னை அடிச்சிப்புட்டேன்.”—பேசும்போது குரல் பிசிரடிக்கிறது, உணர்ச்சியில் முகத்தை திருப்பிக் கொண்டான்.. “ அட வுடுப்பா! நேரங்கெட்டுப் போயிதான் அப்பிடி நடந்துப் போச்சின்னு நெனைச்சிக்குறேன். ஆனா நீ சொல்றதே எனக்கு புரியலையே. இன்னா எனுக்கு பெரும்புத்தி, உனுக்கு இல்லை?.” “எனுக்கு எல்லாம் தெரியும்.” “இன்னாது?.”

“ ஸ்பார்க் ப்ளக்கை நீயே புடுங்கி வுட்டுப்புட்டு, சும்மாவே உதைச்சி உதைச்சி ஸ்டார்ட் ஆவலன்னு என் தங்கச்சிய நம்ப வெச்சி லேட் பண்ணியே அதை பார்த்துப்புட்டேன் மச்சான். அப்பத்தான் உனுக்குள்ள இன்னா இருக்குதுன்னு எனக்குப் புரிஞ்சிது மச்சான். .”— உணர்ச்சியில் முருவனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“இந்தக் கையை என்னிக்கும் வுடமாட்டேன், நீயும் என்னை வுட்றாத மச்சான்.” — உணர்ச்சிக் கொந்தளிப்பில் மறுபடியும் முகத்தை பொத்திக் கொண்டான். .முருவன் தட்டிக் கொடுக்க, அந்நேரத்துக்கு கஸ்தூரி பையுடன் வந்துக் கொண்டிருப்பதை பார்த்துட்டு குமாரை உஷ்! என்று எச்சரித்தான்..

நன்றி – 19-03-2017 தேதி தினமணி கதிர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *