அதுவே… போதிமரம்….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 6,221 
 

பகவானே….என்ன சோதனை…. இது? ….என் தலையெழுத்தே… இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே……அவரைக் காப்பாத்தும்மா… தாயே… உன் கோயில் வாசல்ல…..வந்து மண்சோறு சாப்பிடறேன்…அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு… தாயே…லோகமாதா…அவரை எனக்கு திருப்பித் தா…இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு வேற எந்த கதியும் இல்லையே..என் குடும்பத்தைக் காப்பாத்திக் கொடும்மா…அகிலாண்டேஸ்வரி…
இதயத்தைப் பிழிந்து வேண்டிக் கொண்டதால் வேதனையில்… கண்களில் இருந்து போல பொலவென்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இந்தக் கலங்கிய கண்களுக்கு காரணமான மீனாட்சியின் கணவர் சுரேஷ் இப்போது விபத்தில் படுகாயமடைந்து பஞ்சகுட்டாவில் இருக்கும் நிம்ஸ் ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவுகள் தப்பிய நிலையில் ஈ.சி.ஜி., சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுத்து பிளாஸ்டிக் குழாய் மூலமாக சிரமத்தோடு மூச்சு இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். அவரை….அந்த நிலையில் பார்த்துவிட்டு வந்ததில் இருந்தே.. மீனாட்சிக்குத் தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது போல் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அனிச்சையாக தொழுத கரங்கள் கழுத்திலிருந்து மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு விம்மிய படியே பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் மீனாட்சி.கைகளும் கால்களும்….வெட..வெட வென….நடுங்க…வயிறுக்குள் மாவரைப்பது போல வினோத உணர்வு.

மருத்துவர் கொடுத்த கெடுவுக்கு இன்னும் முழுதாக ஒரு நாள் இருக்கிறது. இதயம் சதா சர்வ காலமும் அம்பாளையே…. எண்ணி பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் ஆட்டோவில் வந்து போய்க் கொண்டிருந்தாள் மீனாட்சி. வேறு என்ன செய்வது..? உறவே இல்லாத சொந்தத்தில் மணம் முடித்த பாவம் இது….தனியாய் அனுபவிக்க வேண்டியிருக்கு.

வீடு முழுதும் சூனியமாக…..அவர் குரல் கேட்காமல் மனம் வெறித்துப் போயிருந்தது.இப்படியாகும்னு யார் கண்டா…நேத்து ராத்திரி பூரா வேண்டாத பிரச்சனை…அதே கோபம் தொடர்ந்ததால்….காலையில் முகம் கொடுத்துக் கூட பேசப் பிடிக்காமல் சுவற்றிற்கும்….மோட்டுவளைக்கும்…பதில் சொல்லி….கார் கிளம்பி கேட்டைத் தாண்டியதும்…..நிம்மதியாய் மூச்சு விட்டு….அடிக்கடி நடக்கும் நாடகம் தான் இது…இன்று மட்டும் ஏனோ மாறிப் போனது…அவர் ஆபீஸ் போயிருக்க வேண்டிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறார்.. இரண்டு போலீஸ் காரர்கள் வீட்டைத் தேடி கண்டுபிடித்து வந்து…விஷயம் சொன்னதும்….நிஜத்தின் பயங்கரம் விஸ்வரூபமெடுத்துப் பூதாகாரமாக நெஞ்சில் ஆடிக் கொண்டிருந்தது.

மீனா…ஏய்….செவிட்டுப் பொணமே….எத்தனை தரம் சொல்றது உனக்கு..? ஒரு தடவை சொன்னால் உன் மர மண்டையில் ஏறாதா? உனக்குப் பார்க்கணும்னா…. வேற எங்கேயாவது மாட்டித் தொலைச்சுக்கோ…என் கண்ணில் படாம வைன்னு ஒரு வாட்டி சொன்னாத் தெரிய வேண்டாம்……கத்திய படியே…சுவரில் தொங்கிய ..பிள்ளையார் படக் காலண்டரை அப்படியே உருவி நான்காகக் கிழித்து அப்படியே மூலையில் இருந்த குப்பைக் கூடையில் எறிந்தார். காலங் கார்த்தால எழுந்ததும் என் மூடைக் கலைகலைன்னா… . உனக்குப் பொழுதே விடியாதே…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்காத இந்த ஜென்மத்தை எதுல சேர்ப்பது..எல்லாம் என் தலையெழுத்து…இப்படி ஒரு செவிட்டுப் பொணத்தக் என் தலைல கட்டிட்டு
போய்ட்டா அந்த அத்தைக்காரி…என்னமோ உலகத்தில் இவளை விட்டால் எனக்கு வேற ஒருத்தி கிடைக்கவே மாட்டான்னு…இந்த அழகு ரம்பையை எனனோட கோர்த்து விட்டுட்டு….

அச்சச்சோ….என்ன இது…சுவாமி படத்தை இப்படி கிழிச்சுப் போடறேள்…?.உங்களுக்கென்ன பைத்தியமா..? பகவான் சும்மா இருக்க மாட்டார்…நன்னாக் கேட்பார். ஆமா… சொல்லிட்டேன்..நீங்கள் என்னை என்ன வேணா சொல்லிக்கோங்கோ..உங்களைப் பொறுத்தவரை…ஏன்…என்னைப் பொறுத்தவரை…நான் ..செவுட்டுப் பொணமாவே இருந்துட்டுப் போய்கிறேன். எங்கம்மாவப் பத்தி ஏதானும் சொன்னேளோ….நான் சும்மா இருக்க மாட்டேன்…

என்னடி பண்ணுவே…..? எகிறிக் கொண்டு வந்து அப்படியே கழுத்தை ஒரு பிடி….இருக்க…மீனாட்சிக்கு அடக்கமுடியாமல் இருமல் வந்ததும்….தான் கையெடுத்தான்….சுரேஷ்.

இருமலின் திணறலோடு….கொன்னு போடுங்கோ…..அப்படியே கொன்னு போடுங்கோ……நானும் போய் சேர்றேன்…உங்களுக்கு வாக்கப்பட்டு நான் மட்டும் என்னத்தக் கண்டேன். உலகமே நேக்கு இந்த நாலு சுவர் சிறை தானே..!

எதித்துப் பேசாதே…அடங்கு….சொல்லிட்டேன்…உறுமலோடு திரும்ப..கணவரின் கண்களைப் பார்க்க பயந்தவளாக….அடங்குவது போல் தலை தாழ்த்த…மீனாட்சிக்கு கண்ணில் இருந்த குழாய் தானே திறந்து கொண்டது. அம்..மா…..என்ன இப்படி இவன் கிட்ட பிடிச்சுத் தள்ளிட்டு போயிட்டியே…..தலை மேல இரண்டு கைய வைத்து அழுத படியே சுவரில் சாய்ந்து உட்கார..துணைக்கு இருமல் வந்து ஒட்டிக் கொண்டது.

எழுந்திருடி…என்ன ஒப்பாரி…யார் உன்னை இப்போ அடிச்சுக் கொல்றா…? போ…போயி சமையல் வேலையைப் பாரு….சத்தம் வந்தது….கொன்னுப்புடுவேன்…கொன்னு..! எப்பப் பாரு ஒப்பாரி….எப்பப்பாரு இருமல்..! எரிச்சலானார் சுரேஷ்.

ஆ…ஓ..ன்னா….ஒப்பாரி வைப்பியோ…நான் ஆபீஸ் போகணும்….உன் ஒப்பாரிய தினம் கேட்க…உனக்கு நான் தாலியக் கட்டலை…..அங்கேர்ந்து எழுந்திரு…இப்போ…. பறந்து வந்து தாக்கியது ஒரு பிளாஸ்டிக் டம்பளர்..குறி…..தவறிப் போய் அவளை உரசி விட்டு உருண்டது.

என்னப்…பிடிக்கலைன்னா…என் அம்மாட்ட அனுப்பிடுங்கோ…..என்னை ரொம்ப நீங்க சித்ரவதை பண்றேள்..தாங்கலை…..நான் தான் தினமும் செத்துப் போயிண்டிருக்கேன். நீங்கள் மட்டும் இப்படின்னு தெரிந்திருந்தால்…நானும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன் விக்கி விக்கி அழுது கொண்டே இரும ஆரம்பித்தாள். சமயத்தில் அவளது வாய் தான் அவளுக்கு தோழிபோல் கை கொடுக்கும்.

ஏய்…மீனா…இன்னொரு தரம் வம்புக்கு வந்தியானா….நடக்கிறதே வேறடி…நான் குளிச்சுட்டு வரதுக்குள்ளே…டிபன் ரெடி பண்ணி வை…போ..! எப்பப்பாரு கைகேயி வேஷம்…! எப்பப்பாரு இருமல்..!

கொஞ்சம் கூடக் காதலோ..புரிதலோ இல்லாத கல்யாணம்….அவர்களுடையது. உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்னும் ஒரே எண்ணத்தில் நடந்த பொம்மைக் கல்யாணம். சில நாட்களிலையே…வேஷம் கலைந்து வெளுத்துப் போச்சு மனசு.
தன் அண்ணாவின் மேல இருக்கும் ஒரே பாசத்தில் இந்த பிரம்ம ராக்ஷசனிடம் தன் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுத்த தன் அம்மாவை மனதாரத் திட்டித் தீர்த்தாள்.. மீனாட்சி. வெறுப்பில், வேதனையில், ஆற்றாமையில், அடிமைத் தனத்தின் ஆவேசத்தில் தினம் சமைத்து சமைத்து சமையல் கூட மிகவும் காரமாகவும்…ருசி இல்லாமலும்…சமயத்தில் சப்பென்றும் இருந்து…மேலும் மேலும் சுரேஷின் அடிமன ஆக்ரோஷத்தை கிளப்பி விடும். அதன் தொடராக மீண்டும் மீண்டும் வாய்ப்போர்….மீளும் கோரமாய்த் தொடரும். பாத்திரங்கள் மோதும் தலையில், இரத்தம் சிந்தும் ! அவள் கதை ஒரு சிறு கதையல்ல அது ஒரு தொடர் கதை ! முடிவில்லை அதற்கு ! ஒவ்வொரு நாளும் இருவர் வாய்க்கும் ஏதோ ஒரு ஆயுதம் கிடைத்து விடும். ….ஒருத்தருக்கொருத்தர் ரணம் செய்து கொள்ள. அவள் வாழ்வே ஒரு குடத்துள் நிகழும் குருச்சேத்திரம் !

மாஜி….ஹாஸ்பிடல் ஆகயா….உத்தாரோ….! ஆட்டோக்காரரின் குரல் கேட்டு சிலிர்த்தவளாக…..பணத்தைக் கொடுத்துவிட்டு….கையில் கூடையை எடுத்துக் கொண்டு ஐ.சி.யு.பிரிவை நோக்கி விறு விறுவென நடந்தாள்…பகவானே..இப்போ அவருக்கு நினைவு திரும்பியிருக்க வேண்டும்….நான் இனிமேல் அவரண்ட சண்டையே போட மாட்டேன்..அவர் என்ன சொன்னாலும் வாயே…திறக்க மாட்டேன்….என் ஆத்துக்காரர் பிழைச்சுக்கணும்….அவர் பாவம்..ரொம்ப நல்லவர்…அவரை மன்னிச்சுடு….பிள்ளையாரப்பா….!

உனக்கு நூத்தியெட்டு கொழக்கட்டை செய்து தரேன்….நூத்தியெட்டுத் சிதறுகாய் உடைக்கறேன்…..அவரை தண்டிக்கறேன்னு நினைத்து என்னை தண்டித்து விடாதேப்பா…..மனசுக்குள் பிள்ளையார் வந்து போனார்….” இரு…இரு…என் காலண்டரைக் கிழித்தான் இல்லையா…..அவனுக்குப் புத்தி புகட்டணும்…” என்று சொல்வது போல் இருந்தது…மீனாட்சிக்கு. அரண்டவள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்….அதுபோல்….மீனாட்சி கலங்கித் தான் போயிருந்தாள்.

நீண்ட வராண்டாவைக் கடந்து அங்கிருந்து லிப்ட் ஏறி முதல் மாடிக்குப் போய் அவசரப் சிகிச்சைப் பிரிவுக்கு முன்னால் சென்று நின்றதும் தான் கொஞ்சம் நிம்மதியாயிற்று.

பார்வையாளர்கள் நேரம் தான் என்பதால் உள்ளே சிரமமில்லாமல் நுழைந்தாள்.. குளிரூட்டப் பட்ட அறையில் மெல்லிய டெட்டால் கலந்த மருந்து வாசனை மீனாட்சியின் காலி வயிற்றை ஒரு புரட்டு புரட்டியது. கூடவே ஏதோ பயஉணர்வு. தயக்கத்தோடு கணவரின் படுக்கை அருகே செல்கிறாள்….பிரஜ்ஜையே இல்லாமல் அவர் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகத்திற்கும் தனக்கும் உறவே இல்லை என்று உறங்கிக் கொண்டிருக்கிறார்…கூடையை பக்கத்தில் வைத்து விட்டு…அங்கிருக்கும் டியூட்டி நர்ஸிடம்… சிஸ்டர்…அவர் கண் விழித்துப் பார்த்தாரா? இப்போ எப்படி இருக்கிறார்? என்று கேட்க….

கவலைப் படாதீங்க…அப்சர்வேஷன் இல் தான் இருக்கார்….சரியாகிவிடுவார்…என்று நம்பிக்கை சொன்னாள்.

சரியாகுமா…சிஸ்டர்…டாக்டர் வந்து பார்த்தாரா? என்ன சொன்னார்…? கவலை தோய்ந்த குரலில் மெல்ல கேட்க..

சரியாகும்…இதைவிட பயங்கரக் கேஸ் எல்லாம் சரியாயிருக்கு….இவருக்கு அதிர்ச்சி அவ்ளோதான்…என்று சொல்லிவிட்டு சிஸ்டர் ஏதோ…எழுதிக் கொண்டிருந்தாள்.

சுரேஷின் முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அந்த அறையில் அவரையும் சேர்த்து ஆறு படுக்கைகள்…மெல்லக் கண்களை அந்த அறையை சுற்றி ஓட விட்டாள்…மீனாட்சி…ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நோயாளிகள்…சிஸ்டர் அமர்ந்த இடத்துக்கு மேலே..பார்த்தால் ஓர் அதிர்ச்சி. சுவரில் கண்ணாடிச் சட்டத்தில் பிள்ளையார் படம் என் கணவரைப் பார்த்து சிரித்தபடியே……. மீனாட்சிக்கு ஒரு நிமிடம் திக் என்றது..முதல் நாள் காலை நடந்தது மீண்டும் நினைவுக் கதவைத் திறந்து வைத்தது. இவர் கண்களில் இந்தப் பிள்ளையார் பட்டுவிட்டால் கண்ணாடிப் படத்தின் கதி என்னவாகும் ???

எப்படி இருந்தவர்..சுரேஷுக்குக் கணீர் என்ற குரல்….அந்தக் குரலில் எப்பவும் என்னைத் திட்டித்தீர்ப்பதே அவரது ஒரே பொழுது போக்கு…இன்னும் அவருக்கு நான் அவருக்குப் பிடிக்காத அத்தை மகள் சொத்தை தான்.

குழந்தை பெற்றதும் அந்தப் பிரசவத்தில் இறந்து போனாள் சுரேஷின் தாய். தாயில்லாத குழந்தையை சுரேஷின் அப்பா சுப்ரமணியன் தன் தங்கை…அலமேலுவின் உதவியோடு வளர்த்தார். அலமேலு தன் கணவர் விசுவுடன் தங்களது ஒரே மகள் மீனாட்சியுடன்.. மாயவரத்தில் சமையல் வேலைகள் செய்து வாழ்ந்தனர்.

தாயின் முகத்தைக் கூட காணாத சிறுவன் சுரேஷுக்கு இறைவன் மீது சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பு.இறைவனே இல்லை என்று எகத்தாளமாகப் பேசிக் கொண்டிருப்பான். அவனது அப்பாவும் விரக்தியின் மேலீட்டால் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விட்டார்.

சுரேஷும் இன்ஜினியரிங் படித்து முடித்து ஹைதராபாதில் வேலையும் கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும்போது..தான் சொந்தம் விட்டுப் போகக் கூடாது…என் தங்கைக்கு என்னை விட்டால் யாருமில்லை…அவளது பெண்ணுக்கு உன்னால் தான் வாழ்க்கை தர முடியும்..அவாளுக்கு நம்மை விட்டால் யாரு இருக்கா? என்று சொல்லி மீனாட்சியை சுரேஷுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.

ஆசை அறுபது நாள் கூட நிற்கவில்லை திருமணம்…மீனாட்சியின் தெய்வ பக்தி, விரதம், ஆச்சாரம் எதுவும் சுரேஷுக்குப் பிடிக்க வில்லை…இது போதுமே…பொழுது விடியும் போதே…..பிரச்சனையும் புதிதாக வெடிக்கும்…இவர்களுக்கு.
அன்றும் அப்படித்தான் ஆபீஸ் போகும் முன்பு…எதற்கோ கோபித்துக் கொண்டு போனவர்…நேரா….இங்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேருவார் என்று யார் நினைத்தார்..? விஷயம் தெரிந்ததும் நான் பக்கத்தாத்துக்கு அழுதுண்டே ஓடிச் சென்று
சொன்னதும் அந்த மாமியும் மாமாவும் தான் எனக்கு தைரியம் சொல்லி என்னோடு ஆஸ்பத்திரிக்கும் கூட வந்தார்கள்.

பக்கத்தாத்து மாமாவும் மாமியும்….வயதில் எழுபதைத் தாண்டியவர்கள் தான். மாமிக்கு சுத்தமா ரெண்டு காதும் கேட்காதாம்…ஹியரிங் எய்டு சாதனம் வெச்சுண்டு தான் சமாளிப்பாளாம்.. இருந்தாலும் அவா ரெண்டு பேருக்கும் இருக்கும் அன்பும், புரிதலும்,..அதிசயிக்க வைக்கும். ஐம்பதாம் ஆண்டு திருமண நினைவைக் கொண்டாடப் போறாராம். அந்த அளவுக்கு ஒற்றுமையான தம்பதிகள். ஒருத்தருக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போய்டுவா…குடும்பம்னா இப்படி இருக்கணும்.இதுக்கெல்லாம் வரம் வாங்கீண்டு வந்து பிறக்கணும்….நானும் இருக்கேனே…அதிர்ஷடகட்டை….!

குளுகோஸ் முழுதும் இறங்கிவிட்ட நிலையில் பாட்டில் காலியானதை உணர்ந்து…”சிஸ்டர்….இங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க…பாட்டில் மாத்திட்டுப் போங்களேன்…மீனாட்சியின் .குரலில் அவசரம் இருந்தது.

“இதோ வரேன்மா” கையில் பாட்டிலோடு வந்த சிஸ்டர்…சுரேஷுக்கு இன்னொரு பாட்டில் மாட்டி விட்டுட்டு…நாடியைப் பிடித்து பல்ஸ் பார்த்தபடியே…”இப்போ இன்னொரு ஆக்சிடென்ட் கேசு…தலைக்காயம்…..நேரா…அறுவை சிகிச்சைன்னு தியேட்டர் போயாச்சு….ரொம்ப சீரியஸ் கண்டிஷன்”..உங்கள் அதிர்ஷ்டம்…..இவர் பிழைத்தார்” என்று வாக்கு சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

“மீனா…மீனா…..என்ற மெல்லிய குரல்…என்னாச்சு…எனக்கு மீனாக்ஷி…? சுரேஷிடம் இருந்து வர….
ஆச்சரியத்தில் “நினைவு வந்துடுத்து” பரவசம் மனமெங்கும் பரவ…இதொன்னா…இங்க தான் இருக்கேன்..உங்க பக்கத்தில்….இதோ…உங்களுக்கு ஒண்ணும் இல்லை..ஒண்ணும் ஆகாது….வெறும் அடிதான் பட்டிருக்கு….சீக்கிரம் சரியாயிடும்…..தாயே…அகிலாண்டேஸ்வரி…..நெஞ்சில் பாலை வார்த்தாயம்மா…ஆனந்தக் கண்ணீர் ஆறாய் பெருக…சிஸ்டர் இங்கே வாங்க சீக்கிரம்….இவருக்கு நினைவு திரும்பிவிட்டது….என சொல்லும்போதே..அக்கம்பக்கத்து படுக்கைக் காரர்கள் அனைவருமே..தங்களது துன்பங்களையும் மறந்து மகிழ்ந்தார்கள்.இதற்காகவே காத்திருந்தது போல போலீஸ் காரர்கள் ஏதேதோ பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் சொன்ன கெடுவுக்கு முன்னதாகவே நினைவு திரும்பி…மெல்ல மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சுரேஷ். காயங்கள் ஆறியதும்…இன்னும் இரண்டு நாட்கள் இருந்துட்டு நீங்கள் கிளம்பலாம்….வீட்டில் சென்று ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதும்…பிறகு பழையபடி….ஓடுங்கள் வேலைக்கு…. என்று உற்சாகமாக சொல்லிவிட்டு அடுத்த நோயாளியைக் காணச் சென்றார் டாக்டர். மீனாட்சியின் நிறைந்த மனசு அவளது முகத்தில் பிரதிபலித்தது.

சுரேஷ் படுத்தபடியே அங்கிருக்கும் மற்றைய நோயாளிகளை கவனித்து வந்தார்.உடல் முழுதும் தீக்காயங்களோடு…..ஒரு பெண் வேதனையில் முனகிக் கொண்டிருக்க அருகில் அவளது தாய் கதறியபடி “இப்படி பண்ணிட்டாளே……இவள் கணவன் குடித்து விட்டு வந்து தெனம் தெனம் அடிக்கிறார் னு வந்து புலம்பும்…அந்தக் கொடுமையை தாங்காமல் இப்படி செய்யும்னு நினைக்கலியே…..நான் என்ன செய்வேன்…” புலம்பினாள்.

ஆஸ்துமாவால் மூச்சு விட முடியாமல் ஒரு முதியவர் செயற்கைக் குழல் மூலமாக சிரமப்பட்டு இழுத்து சுவாசித்துக் கொண்டு வேதனையோடு கிடந்தார். அவரருகில் அவரது மகன் கவலையோடு அமர்ந்து கொண்டு அவரது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு ஏதோ மென்மையாக பேசிக் கொண்டிருந்தார்.

இதுபோல் எந்தப் பக்கம் திரும்பினாலும் உயிருக்குப் போராடும் ஒருவரைச் சுற்றி நம்பிக்கையோடும், கருணையோடும் உறவுகள்..மனிதாபிமானத்துடன் தனக்குப் பாடம் சொல்வது போலவே உணர்ந்தான் சுரேஷ். உலக இன்பத்தின் மறுபக்கம்….இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது புரிய ஆரம்பித்தது அவனுக்கு.உயிரின் மதிப்பும், மனித நேயமும் நெஞ்சில் மின்னலாய்ப் பாய்ந்தது.

மேலும்…..காலை எழுந்ததும்…அனைவரின் பார்வையும்…வேண்டுதலும் அங்குள்ள பிள்ளையார் படத்தை நோக்கி சென்று தொழுது….நிம்மதியடையும் அவர்களின் மனநிலையும் புரிந்தது. இத்தனை நாட்கள் தான் கேலி செய்து அன்று கிழித்த பிள்ளையார் படம் இப்போது அவனைப் பார்த்துச் சிரித்தது. நல்ல வேளை, விபத்தில் பிள்ளையார் அவன் வயிற்றைக் கிழித்துப் பழிவாங்க வில்லை ! சிந்திக்கலானான்.

பிள்ளையார் தன்னையே உற்றுப் பார்த்து….உன்னை என்னால் ஒன்றும் செய்ய முடியாது…ஆனால் என்னால் உன்னை….!!! என்று பயமுறுத்துவது போலிருந்தது.

அவனது உள்ளத்தில் அஞ்ஞானம் வெடித்துச் சிதறுவது போலிருந்தது…ஆழ்மனத்தில் புதைந்திருந்த மனிதன் தட தட வென்று மேலேறி வந்து கொண்டிருந்தான். கண்மூடிக் கிடந்தார் சுரேஷ்..மனதின் மனிதாபிமான அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்க ஆரம்பித்ததை ….உணர முடிந்தது.

“ஐய்யயோ என்னை விட்டுட்டுப் போய்டீங்களே…..நான் என்ன செய்வேன் ” என்ற அலறல் அந்த வார்டையே உலுக்கி எழுப்பியது. அன்று விபத்தில் தலைக்காயத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது….தெரியவந்தது. அனைவரின் நெஞ்சும் திக் திக் கென வேகமாக அடித்துக் கொண்டது. ஒரே ஒருமுறை மரணத்தின் பிடியில் அகப்பட்டு தப்பி விட்டால் போதும்……மரண பயம் ஒவ்வொருவரையும் நல்லவராக்கும். நாத்திகனும் இறைவன் முன் தலை குனிவான். மனிதனுக்கு மரண பயம் ஒரு நல்ல ஆசான் !

அந்த சிஸ்டர் கூட சொன்னாள்….கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை…..இல்லாவிட்டால்…நான் என்ன செய்திருப்பேன்….என்று மீனாட்சி சிலிர்த்துக் கொண்டு சொல்ல..

விரக்தியோடு சிரிக்க முயன்றான் சுரேஷ்…அவரது கண்களிலிருந்து முதல் முறையாக கண்ணீர்…அவரது மன அழுக்கை கழுவிக் கொட்டியது. பாசம் மனமெங்கும் வாசமாய் வீசியது. “என்னை மன்னிச்சுடு மீனாட்சி….” அவளது கையைப் பற்றினான்.

என்னன்னா…. இது சின்னக் குழந்தையாட்டமா அழுதுண்டு…விடுங்கோ….அழாதேங்கோ…பகவான் ஒன்றை உரித்து இன்னொன்றைப் புரிய வைப்பார்…அவரோட ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இப்போ தான் அது எனக்கும் புரிந்தது….சொல்லியபடியே சுரேஷின் கரங்களை ஆதரவாகப் பற்றி ஈரக் கண்களில் ஒற்றிக் கொள்ள அதில் ஒரு அன்பின் உறுதியும் சேர்ந்து அழுந்தியதை உணர்ந்து…அவளது மனபாரம் முழுதும் அவளைவிட்டு சட்டென இறங்கியது போலிருந்தது.

டிஸ்சார்ஜ் செய்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும்போது ஒரு குரல்…நல்லா… இருங்க….முடியும்போது வந்து பார்த்துவிட்டுப் போங்க நான் இன்னும் பத்து நாட்கள் இங்கே தான் இருப்பேன்..என்றதும்…..

“கண்டிப்பா வரோம்.” விடைபெற்றுக் கிளம்பியதும் …மெல்ல மெல்ல டெட்டால் வாசனையைத் தாண்டி உலக வாசனையோடு
வெளிக் காற்று வீசத் துவங்கியது.

பத்து நாட்களாக வெளியுலகத்திலிருந்து தொடர்பறுந்த நிலையில் சுரேஷ்…வானத்தைப் பார்த்ததும்….பூமியின் நிர்மலமான மனது வானம் தான் என்று உணர்ந்தான்.

சுரேஷுக்கு தனது வீடே…புதிதாகத் தெரிந்தது.. வீட்டுக்குள் நுழையும் போது தானும் புதியவனாக நுழைந்தார். .அவரது பொருட்கள் அனைத்தும் அவரது வருகைக்காகக் காத்திருந்தது போலிருந்தது.விபத்துக்கான தனது புதிய கார் உருக்குலைந்து கிடந்து எதுவும் நிரந்தரம் இல்லை என்று சொல்லியது. அதனருகில் சென்று தொட்டுப் பார்த்ததும்…. தான் அதிசயமாக உயிர் பிழைத்தது புரிந்து மனசுக்குள் இறைவனுக்கு நன்றி சொன்னார்.

மெல்ல மெல்ல வீட்டின் சகஜ நிலைக்கு வந்து இரண்டு நாட்களாயிற்று.

மீனாக்ஷி அவசர அவசரமாக பரபரத்துக் கொண்டிருந்தாள்…..சமயலறையில்….என்ன மீனா…என்ன செய்கிறாய்?

கொழக்கட்டை…..உங்களுக்கு நலமானதும் பிள்ளாயாருக்கு படையலுக்கு வேண்டிண்டேன்…தேங்காய் உடைகிறேன்னும் வேண்டீண்டுருக்கேன்.அப்புறம் அம்மன் கோயில் வாசல்ல மண் சோறு சாப்பிடரதாகவும் …வேண்டின்றுக்கேன் ..நீங்க தான் எனக்கு துணை நிற்கணும்.அவளது ஆச்சரியத்தை அதிகம் பண்ணும் வண்ணம்…சரிம்மா..இன்னைக்கே முடிச்சுடு..அப்பறம் அப்படியே ஹாஸ்பிடல் போய் நான் இருந்த அந்த வார்டையும் ஒரு பார்வை…ஏதாவது வாங்கிண்டு போய் கொடுத்து பார்த்துட்டு வந்துடலாம் சரியா…..என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

வேண்டுதல்கள் யாவும் ஒரே நாளில் அதுவும் அவர் அருகில் இருக்க நிறைவேற்றிய நிம்மதியில் இருந்தாள் மீனாக்ஷி. மருத்துவமனையில் சுரேஷ் இருந்த படுக்கையில் வேறொருவர் கட்டுக்களோடு படுத்திருந்தார். எல்லோருக்கும் பழங்களும் கோயில் பிரசாதமும் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மீனாட்சிக்கு மட்டும் ஏனோ இருமல் இருந்து கொண்டே இருந்தது.

இரவில் ஒரே இருமல் தாங்காமல் எழுந்து உட்கார்ந்தாள்…தொண்டையை எதுவோ அழுத்துவது போல் உணர…இருமல் அதிகமாக…அதிகமாக..பயந்து போனாள்.

அருகில் இருந்த சுரேஷ் எழுந்து…என்னாச்சும்மா..மீனா? ஏன்…இவ்வளவு இருமல் உனக்கு…பிள்ளையாரப்பா..இவள் இருமலை சரி செய்யேன்… அவனை அறியாமல் வேண்டிக்கொண்டான்.

ஒண்ணும் இல்லை…அலைச்சல்…அசதி….கண்ட தண்ணி குடிச்சதால இப்படியிருக்கும்…சரியாகும்…சொல்லிவிட்டுப் படுத்தாள்.. கணவனின் செயல்கள் அனைத்தும் அவளுக்கு மிகவும் நிம்மதியாக நிறைவாக இருந்தது…..மருத்துவமனையை நன்றியோடு நினைத்துக் கொண்டாள்….ஆமாம்..அவருக்கு அதுவே…போதிமரம்….என்று எண்ணிக்கொண்டாள்.

ஆனாலும் இருமல் விடாமல் துரத்தியது மீனாட்சியை.மாலையில் மருத்துவமனையில் பிடித்த இருமல் இன்னும் விட்ட பாடில்லை. சுரேஷ் டாக்டர்ட்ட போகலாம் வா மீனு என்று அழைக்க வேண்டாம்..வேண்டாம்…ஒரு மிளகு கஷாயம் வெச்சு சாப்டா சரியாயிடும் என்று தட்டிக் கழித்தாள். அடுத்த சிலநாளில் உடல் நிலை மிகவும் மோசமாகி….எதையும் தாங்கும் திராணியற்று இரவில் படுத்தவள் காலையில் எழுந்திருக்கவே இல்லை….அவளது மரண செய்தியை அவள் விரைத்த உடல் சொல்லியது.

அச்சசோ…என்னாச்சு…மீனு…மீனு…மீனும்மா…என்னை விட்டுட்டு போயிட்டியா..? எனக்கு உலகத்தைக் காட்டிவிட்டு நீ பறந்துட்டியே…உண்மை சுட்டுப் பொசுக்க….அவளைத் தூக்கி மார்போடு சேர்த்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தார் சுரேஷ்.
“நான் ..செவுட்டுப் பொணமாவே இருந்துட்டுப் போய்கிறேன்..” அவளது வார்த்தைகள் செவிப்பறையைத் தாக்கியது கண்முன்னே சுவரில் அன்று அவன் துண்டாகக் கிழித்து வீசிய பிள்ளையார் படம் ஒட்டிச்சேர்த்து…மாட்டியிருந்தாள் மீனாட்சி..

கிழிந்த படத்தை ஒட்டி விடலாம். ஆனால் உயிர் கிழிந்த உடல் ? சில தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது….என்று சொல்வது போலிருந்தது…..அந்தப் படம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *