கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 19,929 
 

மைதிலி ஸ்கூட்டியை மர நிழலில் நிறுத்தினாள். கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். நேரமிருக்கிறது! அமைதியாக நின்றாள். அவளைச் சுற்றிலும் எல்லா திசைகளிலும் கறுப்பு கோட் அணிந்த, கைகளில் கட்டுகள் சுமந்த வக்கீல்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். செல் சிணுங்கியது.

ஈகோ“ஆமாம்மா… கோர்ட்லதான் இருக்கேன். அரை நாள் லீவு போட்ருக்கேன். இன்னியோட முடிஞ்சுட்டா பரவாயில்ல.”

அம்மா, மிகவும் தயங்கிப் பேசினார்…

“அப்பா, ஜோசியரை பாத்துட்டு வந்தாரு. விவாகரத்துக்கெல்லாம் வாய்ப்பே இல்லனு அவர் அடிச்சு சொல்றாராம்.”

அலட்சியமாகச் சிரித்தாள் மைதிலி. “அவர் ஜோசியம் பொய்யாயிடக் கூடாதேங்கறதுக்காக நான் அவஸ்தைப்பட முடியுமா? நிறைய பேசியாச்சு. எல்லாம் முடிஞ்சிடுச்சு. என் மாமனார், மாமியார் ரெண்டு பேரும் Ôசஞ்சய்க்கு பொறுப்பெடுத்துக்கறேன்Õனு சொல்லியாச்சு. ஸ்வாதிக்கு பொறுப்பேத்துக்கறது உனக்கு பிரச்னையா இருந்தா… சொல்லிடும்மா. நான் வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்.”

“என்னடி பேசறே? எங்க பேத்திய வளக்கறதுக்கு சங்கடப்பட்டுக்கிட்டா நாங்க சொல்றோம்? உன் எதிர்காலத்தை நெனச்சுதான்…”

“என் எதிர்காலத்துக்காகத்தான் எனக்கு நல்ல படிப்பைக் கொடுத்துட்டீங்க. கைல வேலை இருக்கு. நான் பாத்துக்கறேன்மா.”

தொடர்பை துண்டித்தவள், செல்போனின் வால்பேப்பரில் இருந்த ஸ்வாதி, சஞ்சய் முகங்களை சில விநாடிகள் பார்த்தாள். இமைகள் நனைந்துவிடும் போல் இருக்க, சட்டென்று குடும்பநல நீதிமன்றத்தை நோக்கி நடந்தாள்.

அதே வளாகத்தில், காருக்குள் அமர்ந்து லாப்-டாப்பில் தட்டிக் கொண்டிருந்த பாண்டியனிடம் அவன் டிரைவர் தயங்கி இழுத்தான்…

“சார்! இன்னியோட முடிஞ்சுடுமா?”

“அந்த ஜட்ஜம்மா மனசு வெச்சா, கிடைச்சிடும். யாராச்சும் ஒருத்தர் மறுத்தா கேஸை இழுக்கறதுல அர்த்தம் இருக்கு. அதான் பரஸ்பரம் விருப்பமில்லனு சொல்லியாச்சு. அப்புறமும் ஏன் அந்தம்மா இழுக்குதுனு தெரியல.”

“உண்மைய சொல்லுங்க சார்… இந்த டைவர்ஸ் கிடைச்சா நிஜமாவே சந்தோஷப்படுவீங்களா?”

“மொதமொதல்ல டைவர்ஸ்தான் தீர்வுனு நினைக்கிறப்ப திடுக்குனு இருந்துச்சு. யோசிச்சுப் பாக்கறப்ப, அதான் ரெண்டு பேருக்கும் நிம்மதினு தெளிவு கிடைச்சது. மனசு தயாராயிடுச்சு.”

“உங்க குழந்தைங்களோட நிலமை? இன்னிக்கு அவங்களுக்கு நாலு வயசு, ரெண்டு வயசு. நாளைக்கு விவரம் தெரியறப்ப, ஏங்கிப் போயிடமாட்டாங்களா?”

“அதை பாத்தா… எங்க நிம்மதி போயிடுமே..?”

லாப்-டாப்பை மூடி வைத்துவிட்டு, கோர்ட் கட்டடத்தை நோக்கி நடந்தான் பாண்டியன்.

தன் இருக்கைக்கு வந்தமர்ந்த நீதிபதி வான்மதி, “மிஸ்டர் பாண்டியன்… மிஸஸ் மைதிலி… இந்த மூணு மாச இடைவெளில உங்க முடிவுல ஏதாவது மாற்றம் இருக்கா? தனித்தனியா சொல்லுங்க…”

“இல்லை” என்றனர் இருவரும், தனித்தனியாக!

“விவாகரத்து கொடுக்கறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. இந்த நீதிமன்றத்துக்குப் பேரு குடும்பப் பிரிவு நீதிமன்றம் இல்ல. குடும்பநல நீதிமன்றம். நீங்க ரெண்டு பேருமே அவங்கவங்க ஈகோவை கழட்டி வெச்சுட்டு யோசிக்கத் தயாரா இல்லனு புரியுது. வெல்! உங்க குழந்தைங்கள யார் வளர்க்கப் போறீங்க?”

“மேடம்! விவாகரத்துக்குப் பிறகு, மேற்படிப்புக்காக லண்டன் போறதா திட்டம் வெச்சிருக்கேன். அநேகமா அங்கேயே ஒரு வேலை தேடி செட்டில் ஆயிடுவேன். அதுவரைக்கும் ஸ்வாதியை எங்கப்பா, அம்மா அவங்க பொறுப்புல வளர்க்க சம்மதிச்சிருக்காங்க. அவரோட அப்பா, அம்மா பொறுப்புல சஞ்சய்யை வெச்சுக்கறதா சொல்லியிருக்காங்க” என்றாள் மைதிலி.

“மனு கொடுத்த இந்த ஒன்பது மாசத்துல, நீங்க ரெண்டு பேரும் நேர்லயோ, போன்லயோ ஒரு தடவையாவது பேசிக்கிட்டதுண்டா?”

“இல்லை!” என்றார்கள் இருவரும், தனித் தனியாக!

“இந்தக் கோர்ட்டுலயே ஒரு தனியறையில ஜஸ்ட் ஒரு மணி நேரம் நீங்க ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசிக்கணும்னு நான் விரும்பறேன். எதுவும் பேசிக்கலைனாலும், ஒரு மணி நேரம் ஒரே அறையில எதிரெதிரா அமர்ந்து அமைதியா இருங்க. நான் சொல்றதுக்காக உங்க கடந்த கால குடும்ப வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் நினைச்சுப் பாருங்க. ஜஸ்ட், ஒரு மணி நேரம்! அதுக்கப்புறம் உங்களை நான் சந்திக்கறேன்…”

– சொல்லிவிட்டு எழுந்தார் நீதிபதி.

சாத்தப்பட்ட அந்த அறையில், அவஸ்தையாக கழிந்த ஆரம்ப நிமிடங்களில், ஒரு முறை மைதிலியின் முகத்தைப் பார்த்த பாண்டியன், அவள் பார்வையும் இடறியபோது அவசரமாக பார்வையைத் திருப்பி சுவரில் கைகட்டி சாய்ந்திருந்த விவேகானந்தரைப் பார்த்தான். அவளும் பார்த்தாள்.

“எல்லாரும் ஊட்டி, கொடைக்கானல் போவாங்க. நீங்க ஏன் ஹனிமூனுக்கு கன்னியாகுமரியை ச்சூஸ் பண்ணீங்க?”

“ஃப்ரெண்ட்ஸோட டூர் வந்திருந்தேன். விவேகானந்தர் சிலைக்கு முன்னாடி நின்னுட்டிருந்தப்ப… ஏன்னு தெரியல, அதுவரை திருமணத்தை தள்ளிப்போட்டுட்டிருந்த எனக்கு, அந்த நிமிஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணிச்சு. அப்பவே தீர்மானிச்சுட்டேன், ஹனிமூன் இங்கதான்னு.”

“கல்யாணமே பண்ணிக்காத விவேகானந்தர் சிலையப் பாக்கறப்போ உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சா…?!”

“ம்ம்ம்… தோணுச்சு! சரி, இப்ப இந்த நிமிஷம் என் மனசுல என்ன தோணுதுனு சொல்லட்டுமா? எல்லாரும் பாத்தாலும் பரவாயில்ல.. உன்னைக் கட்டிப்புடிச்சி கிஸ் பண்ணணும்னு தோணுது.”

“ஏய்… நோ… ஐயோ!”

“ஏன் ரெஸ்ட்லெஸ்ஸாவே இருக்க? படம் பிடிக்கலயா?”

“பின்னாடி… ஒருத்தன்..”

“யூ ப்ளடி பொறுக்கி ராஸ்கல்! எந்திர்றா…”

“ஐயோ, விடுங்க… எல்லாரும் பாக்கறாங்க.”

“நீ சும்மா இரு. என் பொண்டாட்டிய தொட்ட இந்தக் கம்னாட்டிகிட்ட என்னை பொறுமையா போகச் சொல்றியா? டேய், சாவடிச்சிடுவேன்.”

“ச்சே! பந்தயத்துல நீங்கதான் ஜெயிச்சிங்க!”

“நான்தான் கன்ஃபர்ம் ஆனதுலருந்தே சொல்லிட்டிருந்தனே, பையன்தான் பொறப்பான்னு… நீதான் பொண்ணுன்னே! இப்போ பாத்தியா?! மைதிலி… நீ எப்படி இருக்கே? ஆர் யூ ஓ.கே.?”

“ம்ம்…”

“சரி, பந்தயத்துல தோத்துட்டனேன்னு வருத்தப்படாதே. நெக்ஸ்ட் இயரே உன்னை ஜெயிக்க வெச்சுடறேன்.”

“ஏய்… படவா!”

சஞ்சய் பொறந்தப்போ ஆறு மாசம் லீவு போட்டுட்டு மறுபடி வேலைக்குப் போகலையா? இப்போ ஸ்வாதி பொறந்து ஆறு மாசம் ஆச்சு. மறுபடி வேலைக்குப் போறேன்னு சொன்னா ஏன் வேணாங்கறீங்க?”

“இல்லம்மா. ரெண்டு குழந்தை ஆச்சு. என்னதான் வேலைக்காரங்க இருந்தாலும் நீ வீட்ல இருந்து பாத்துக்கற மாதிரி ஆகுமா?”

“வாட் டூ யூ மீன்? நம்ம கல்யாணத்தப்பவே எந்தச் சூழ்நிலையிலயும் நான் வேலைய விடமாட்டேன்னு உறுதியா சொன்னேனே? உன்னை ஒரு கிச்சன் லேடியாக்கறதுல எனக்கும் சம்மதமில்லனு ஒப்புக்கிட்டீங்களே.”

“நான்தான் பிசினஸ்ல நிறைய சம்பாதிக்கிறேனே. நீ வேலைக்குப் போய் சம்பாதிக்கலைனா என்ன?”

“நான் சம்பாதிக்கறதுக்காக மட்டும் வேலைக்குப் போகலை. அது எனக்கான ஒரு அடையாளம். என் படிப்பு, திறமை இதெல்லாம் துருப்பிடிச்சுடக் கூடாது.”

“இந்த ‘கோட்’டை அயர்னுக்கு கொடுத்து வாங்கச் சொல்லிருந்தேனே… செய்யலையா?”

“மறந்துட்டேன்.”

“மறந்துட்டியா… அலட்சியமா?”

“எதையோ மனசுல வெச்சுக்கிட்டு தொட்டதுக்கெல்லாம் கடுப்படிச்சுட்டிருக்கீங்க… எதா இருந்தாலும் நேராச் சொல்லுங்க.”

“சொல்றேன். நீ இனிமே வேலைக்குப் போறது எனக்குப் பிடிக்கலை.”

“இதுவரைக்கும் நீங்க சம்பாதிச்சதை வெச்சே மூணு தலைமுறைக்கு வாழ முடியும். பிசினஸை விட்டுட்டு வீட்ல உக்காந்து பேப்பர் படிங்கனு சொன்னா கேப்பீங்களா?”

“முட்டாள்தனமா பேசற!”

“நீங்கதான் முட்டாள்!”

“ஏய், அறைஞ்சு பல்லத் தட்டிடுவேன்…”

“அது ஒண்ணுதான் பாக்கி…”

“என் கேள்விக்கு நேரடியா பதில் வேணும். சஞ்சய் கிட்ட என்னை ‘ராட்சஸி’னு சொன்னிங்களா?”

“மைதிலி! நான் ஆபீஸ்ல ஒரு மீட்டிங்ல இருக்கேன்…”

“இவ்வளவுதான் என்னைப் பத்தி உங்க மனசுல இருக்கற ஒபீனியனா?”

“ஏதோ எரிச்சல்ல சொல்லிருக்கலாம். விடேன்…”

“அப்புறம் எதுக்கு இந்த ராட்சஸியோட குடித்தனம் நடத்திட்டிருக்கிங்க? நான் வேணும்னா போய்டறேன்”

“சும்மா பூச்சாண்டி காட்டாத. போறதுனா போயேன். யாரும் இங்க ஏங்கிட்டு இல்ல…”

நீதிபதி வான்மதி அந்த அறைக்குள் வர, இருவரும் எழுந்து நின்றார்கள்.

“உக்காருங்க. உங்களுக்குள்ள எதுவும் பேசிட்டிருக்க மாட்டீங்கனு தெரியும். இது ஒரு கடைசி முயற்சி” என்று தன் கையிலுள்ள டி.வி.டி-யைக் காட்டினார்.

இருவரும் புரியாமல் பார்க்க, “இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில ஒரு பகுதி. விவாகரத்தாகி பிரிஞ்சு போன அம்மா, அப்பாவுக்கு பிறந்த, எங்கயோ, எப்படியோ வளர்ந்த 14 வயசுப் பொண்ணு மனசு விட்டு தன் உணர்வுகளை இதுல கொட்டியிருக்கா. பாருங்க..”

லாப்-டாப்பில் அந்த டி.வி.டி-யை ஓடவிட்டு அமர்ந்தார் வான்மதி.

அந்தப் பெண் விழிநீர் வழிய, வார்த்தைகளில் ஆத்திரம் கொப்பளிக்கப் பேசினாள். “எனக்கு ரெண்டு வயசா இருக்கறப்போ எங்கம்மா, அப்பா பிரிஞ்சுட்டாங்க. ரெண்டு பேருமே ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அநாதையா நின்ன என்னை என் பாட்டியும், தாத்தாவும் வளத்தாங்க. என்னோட அண்ணனை எங்கப்பாவோட அப்பாவும் அம்மாவும் எடுத்து வளர்த்தாங்க.

இப்போ எங்க தாத்தா இறந்துட்டாரு. பாட்டிக்கும் வயசாயிடுச்சி. களை எடுக்கறது, நாத்து நடுறதுனு வயல் வேலையெல்லாம் செஞ்சு அதுல கிடைக்கற கூலியிலதான் படிச்சுட்டிருக்கேன். வீட்ல சமைக்கிறதுல இருந்து எல்லா வேலையும் நான்தான் செய்யணும். நானே சமைச்சாத்தான் நான் சாப்பிட முடியும். அதிகாலையில எழுந்து வயல் வேலை பாத்துட்டு அப்புறம் ஸ்கூலுக்குப் போயி, திரும்பி வர்றப்ப அவ்வளவு களைப்பா இருக்கும். சமைக்கறதுக்குகூட சக்தி இல்லாம, பசியோட அப்படியே படுத்துத் தூங்கிடுவேன்.

என் அண்ணன் பத்தி ஒரு தகவல் கிடைச்சது. அவனப் பாக்க ஆசைப்பட்டேன். ‘எனக்கு தங்கச்சியெல்லாம் இல்ல’னு சொல்லி மறுத்துட்டான். அவன்கிட்ட அப்படிச் சொல்லி வெச்சிருக்காங்க. என்னைப் பெத்த அம்மா, அப்பா, எங்கூடப் பொறந்த அண்ணன் எல்லாரும் இப்போ உயிரோட இருந்தும் நான் எந்த உறவும் இல்லாம அநாதையா அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருக்கேன்.

எதுக்கு எனக்கு இந்த தண்டனை… நான் என்ன தப்பு செஞ்சேன்… என்னைப் பெத்தவங்க எனக்கு ஏன் இந்த தண்டனையக் கொடுத்தாங்க… இந்தப் பாட்டியும் செத்துட்டா, அதுக்கப்புறம் எனக்கு யார் துணை… என் எதிர்காலம் என்ன… நான் எங்க போவேன்? எனக்கு எதுவுமே புரியல.. வாழ்க்கையே பிடிக்கல… என் எதிர்காலத்தை நினைச்சா பயமாயிருக்கு… அழுகையா வருது.”

அந்தப் பெண் பேசப் பேச… மைதிலியின் கண்களிலிருந்து நீர் அருவியாகக் கொட்டியது. பாண்டியனின் கண்களும் கலங்கின. வீடியோவை நிறுத்தினார் நீதிபதி.

“இப்படி ஒரு நிலைமைய உங்களோட குழந்தைங்களுக்கும் ஏற்படுத்தப் போறீங்களா? இதுல உங்களுக்கு சம்மதம்னா இப்பவே விவாகரத்து தீர்ப்புல கையெழுத்துப் போடறேன்.”

“வேணாம்!” என்றார்கள் ஒரே குரலில்!

கதை பிறந்த கதை…

கதையில் வரும் அந்த வீடியோ பதிவு, ஓர் உண்மைச் சம்பவம். விசுவின் ‘மக்கள் அரங்கம்’ நிகழ்ச்சியில் நான் பார்த்தது. அந்தப் பெண்ணை ‘சாரதா ஆஸ்ரமத்’தில் சேர்த்து அவள் எதிர்காலத்துக்கு வழியமைத்துக் கொடுத்து விட்டார்கள். வழியமைத்துக் கொடுக்கப்படாமல் இன்னும் எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் இருப்பார்கள். அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, இந்தக் கதை உதவலாம் என்கிற நம்பிக்கையில் இந்த உண்மைச் சம்பவத்தைக் கதையாக எழுத நினைத்தேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர்

– அக்டோபர் 2009

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஈகோ…

  1. ஈகோ என்ற ஒரு ஒற்றை வார்த்தை
    எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறது!
    இதில் சிந்திக்க வேண்டியவர்கள்
    கணவன், மனைவி என்ற இருவருமே….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *