பிச்சைக்காரன் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 1,199 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பதினாறு வருஷங்கள், மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு விளை யாட்டல்ல. எவ்வளவோ மாறுதல்கள் நடந்துவிட்டன. எவ்வளவோ மேடு பள்ளங்களைத் தாண்டிக்கொண்டு காலசக்கரம், தன் பயங்கரச் சுழலை ஒரு தடவை முடித்துவிட்டது. அடுத்த பதினாறு வருஷங்களில் அதே சுழல் மறுபடியும் முடியும்போது, அவன் உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கே இல்லை.

அவனுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் – அவனுடைய ஏழ்மை யின் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கண்டமாக இருந்தது. வயிற்றின் கொடுமை. நாட்டின் செல்வம். சிதறித் சீர்கெட்டுக் கிடந்ததன் பலன்! எனவே எழுபத்தி ஆறு வயது வரைக்கும் அவன் உயிரோடு இருப்பான், என்ற நம்பிக்கை அவனுக்கு எப்படிவரும்?

அது மாத்திரமில்லை. ஆகாரத்தினால் மட்டுமா ஒருவன் உயிர் வாழ்கிறான்? அல்லது உணவு குறைந்து போனதினால் மட்டும் உயிர் போய் விடுகிறதா? இரண்டும் இல்லை. எல்லாவற்றோடு, கவலை களும் சேர்த்துகொண்டு அவள் காலத்தைக் குறைத்துவிடலாம்! அவன் குழந்தையைப் பிரிந்து வாழ்வதைவிட அவனுக்கு இன்னும் என்ன சோகம் வேண்டும்?

ஆச்சு! நாட்கள் குறுகிவிட்டன. இன்னும் ஒரு வாரமோ இரண்டோ… அவனுடைய செல்வக் குழந்தை அவனைவிட்டு விட்டுப் போய்விடப் போகிறாள். அந்த அறுபதாவது வயதில்கூட, ‘இந்தப் பிச்சைக்கார வாழ்வு வாழலாம்’ என்ற தைரியம் அவனுடைய மனதில் விளங்கு வதற்கு யார் காரணமோ, அவள் அவனைவிட்டுப் பிரிந்து போய்விடப் போகிறாள். அதற்குப் பிறகு…?

அவள் அவனிடம் வந்துசேர்ந்த போது. அவனுக்கு மகா கஷ்டம். அதுதான் அவனுடைய வாழ்நாட்களில் மிக்க மோசமான பாகம் என்று கூடச் சொல்லிவிடலாம். அவன் தொழிலுக்கும்கூட பலத்த போட்டி ஏற்பட்டு நிலைமை மிக்க மோசமாகப் போய்விட்டது. அவனுக்குப் பிச்சை எடுப்பது தொழில்.

அவள் வந்து சேர்ந்தாள். அவனைப் பிடித்திருந்த தரித்திரமும், கஷ்டமும் கூட ஓரளவுக்கு மாறிவிட்டன. ‘நாளைக்கு என்ன செய்யப் போகிறோம்’ என்ற கவலை இல்லாமல், அவர்களால் இருக்க முடிந்தது. இவ்வனவிற்கும். அவன் முன்போல் பிச்சை எடுக்க ஊரெல்லாம் கூடத் திரிவதில்லை. போன இடங்களில், மகாலட்சுமிகளைப் போல் பலபேர், அவனைக் கூப்பிட்டுச் சாதம் போட்டார்கள். அவனுடைய பொக்கிஷத்தின் பக்கம்கூட பணத்தின் காற்று அப்போதைக்கப்போது வீசிற்று: அரையணா… ஒரு அணா, இப்படியாக!

எல்லாம். வந்து சேர்ந்தவளின் பாக்கியம் என்று அவன் நினைத்தான். அவள், அவனுக்குப் பாக்கிய லட்சுமியாகவே இருந்தாள்.

அவள் வந்துசேர்ந்த புதிதில் எல்லோரும் அவன்மேல் சந்தேகப் பட்டார்கள். ‘நாற்பத்தைந்து வயதுடைய பிச்சைக்காரப் பிரம்மச்சாரி யிடம் குழந்தை எங்கிருந்து வந்தது’ என்ற பரபரப்பு அவனைப் போன்ற சகோதரத் தொழிலாளிகளிடையே ஏற்பட்டது. ஆனால் அவன், அவர்களுக்குப் பதில் சொல்ல முன் வரவில்லை. சிரித்துக்கொண்டு ‘என்னுடைய குழந்தை’ என்றான். சினேகிதர்களும் சிரித்தார்கன். அதோடு விஷயம் நின்றுவிட்டது.

அவனுடைய சிரிப்பில், மனப்பூர்வமான சந்தோஷத்தின் ஆர்வத்தைக் காண முடியவில்லை. அது, சமூக சிருஷ்டியில் ஆரம்ப காலத்திலேயே தோன்றிய மனிதனின் ஊழலிலும், ஹிருதய பூர்வமான உணர்ச்சிகளற்ற மிருகத்தனத்திலும் போய் எதிரொலித்தது.

ஏனெனில், அதனுடைய விளைவுதானே அவன்? கருப்பாயி என்று அவளுக்குப் பெயர் வைத்தான் அந்தப் பிச்சைக்காரன்.

இருட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணுக்கு அதைவிட நல்ல பெயர் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவளுடைய திறத்திற்கு அது பொருத்தமாக இல்லாமலிருக்கலாம்; ஆனால், எவ்லோரும் நிறத்திற்கும் தன்மைக்கும் ஏற்றவாறா பெயர்களை வைத்துக்கொள்ளுகிறார்கள் ? இல்லையே! இது அவனுடைய கட்சி.

அன்று கூட அவனுக்கு நல்ல பசி. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. வழக்கமாகப் போடும் இரண்டொருவரும், அன்று ‘ஒன்று மில்லை’ என்று கையை விரித்துவிட்டனர். பசியை மறப்பதற்காக ஆற்றங்கரையைப் பார்க்கப் போனான்.

ஆம்! பசியை மறக்கும் சம்பவம் தான் அங்கும் நடந்தது.

தூரத்தில் ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்டது. இரவில் அந்த நேரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு யார். என்ன செய்கிறார்கள் என்ற சந்தேகம் அவனுக்கு. இருந்தாலும் ‘நமக்கென்ன’ வென்று கனவில் ஆழ்ந்துவிட்டான்.

அவனை அழுகைக்குரல் விடவில்லை.

ஒரு தாய், இப்படி அலரும் ஒரு குழந்தையைப் பார்த்துக்கொண்டு, சும்மா உட்கார்ந்திருப்பாளா? அந்த எண்ணமே அவனுக்கு விசித்திரமாக இருந்தது. குழந்தையின் குரல், சற்றுக் கம்மிக்கூட போயிருந்தது.

அந்த சப்தம் வந்த திக்கில் போய் பார்த்தபொழுது ஒரு குழந்தை, கவனிப்பாரற்றுக் கிடந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தான். ‘யாருடைய குழந்தை யம்மா இது’ என்று உரக்கக் குரல் கொடுத்தான். ஆற்றங்கரைக்கு அப்பாலுள்ள பாறை களில் மோதி அவனுடைய குரலேதான் பிரதிபலித்தது. அவனுடைய சந்தேகம் நிவர்த்தியாயிற்று. அது, சமூகத்தை எதிர்த்து நின்று போராடச் சக்தியற்ற எந்தப் பேதையின் குழந்தையோ? யார் கண்டது?

அன்று முதல் அது அவனுடைய குழந்தையாகிவிட்டது.

உயிர் கொடுத்தவனுக்கு, உயிர் கொடுத்துக் காப்பாற்றி வந்தாள் கருப்பாவி, அவனுடைய தள்ளாத வயதில் அவனுக்கு எவ்வளவோ உபகாரமாக அவள் இருந்தான். அவன் ஒன்றிரண்டு வீடுகளில் வேலை செய்து பணம் சம்பாதிப்பதையும் அவனுக்காகவே செலவு செய்தாள். அப்படிப்பட்டவள் அவனைப் பிரிந்து போவதை அவனால் பொறுக்க முடியவில்லை.

வாழ்க்கையின் அழைப்பை அவளால் மறுக்க முடியாது. அவன் எதை தைரியமாய் எதிர்த்துப்போராடி வெற்றி பெற்றானோ, அதை அவளிடமும் எதிர்பார்க்க முடியுமா? அவனும் அவளும் ஒன்றா?

எனவே, அதற்கு அவள் கொடுத்த பதில் அவனைக் கலக்கிவிட்டது. அவனைத் தனியாக விட்டுவிட்டு அவள் போய்விடுவாள். முத்து அவளைக் கூட்டிக்கொண்டு போகும்போது அவனும் அவர்களோடு போக முடியாது. முத்து ஊர் ஊராகப் போய் கூலிவேலை செய்து பிழைப்பான். அவனோடுகூட அந்தத் தள்ளாத கிழவனும் போக முடியுமா

கடைசிநாள் என்றைய தினத்தையும் விட, அன்று அவள் அதிகக் கவனத்தோடே எல்லாக் காரியங்களையும் செய்து முடித்தாள். மேற் கொண்டு சில சிறிய வேலைகள் இருந்தன. அவனுக்கு இன்னொரு வேஷ்டியொன்று அழுக்குப்படிந்து கிடந்தது. அவனால் அதைத் துவைக்க முடியாது என்று சவுக்காரம் போட்டு அதைத்துவைத்து காயப்போட்டாள். வீட்டிலேயும் இரண்டொரு நாளைக்குக் காணும் படி ஏதாவது செய்து வைத்துவிட்டுப் போகவேண்டுமென்று ஆசை அவளுக்கு. ஆனால் வீட்டில் சாமான்கள் ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு நாளும் தேடி வயிறு வளர்ப்பவர்கள் வீட்டில் சாமான்கள் எப்படி இருக்கும்?

அவள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்திருந்தது. முத்து கொடுத்தது-ஆக எல்லாமாகச் சேர்த்துப் போட்டு பாத்திரம் நிறையப் பாலை வாங்கிக் காய்ச்சி, அவனுக்குக் கொடுத்தாள் – அவளுடைய கவியாணத்தின் ஞாபகச் சின்னமாய்! அதைவிட அவளுக்குச் சக்தி இல்லை.

முத்துவும் அங்கே வந்திருந்தான். பொங்கி வரும் துக்கத்தையும், தைரியமாய் அடக்கிக்கொண்டு கிழவன் நிமிர்ந்து, ‘எனது விலையில்லா முத்தை இப்பொழுது உன் கைகளில் கொடுக்கிறேன். அவள் உனக்கு மனைவி மாத்திரமில்லை. வீட்டுக்கு விளக்கு’ என்றான் நடுங்கும் குரலில்.

– பாரததேவி 06.08.1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *