இன்பம் கொள்ளை போகுதே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 15,987 
 
 

ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புநோக்கி வடக்காகச்செல்லும் பாதையில் பத்து கி.மீட்டர் போனால் அது ஒரு சிறிய கணவாயில் கீழிறங்கும். அதன் அதியாழத்தில் பேராறு எனப்படும் சிற்றாறு மெல்லத் தவழ்கிறது. கீழிறங்க இறங்க அடர்வனத்தினூடு வந்து பேராற்றோடு விளையாடிய பவனத்தில் அது ஏற்றியனுப்பும் சீதளம் சுகமாக முகத்தில் முத்தும். பேராற்றின் வாராவதியில் தன் மிதியுந்தைச் சாத்திவிட்டு அதன்கீழ் சலசலக்கும் ஆற்றைச் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்தான். ஆனாலும் எதையும் வேடிக்கை பார்க்கவோ மனதைக்குவிக்கவோ முடியாமல் திரும்பத்திரும்ப மனைவி ராகினியின் சமீபகாலச் சாங்கியங்கள் மனதில் வந்து முட்டிச் அவனைச் சஞ்சலப்படுத்துகின்றன. தன் அந்தரங்கத்தை மனஅவசங்களை எவரிடமும் மனம்விட்டுப்பேசவும் அவனுக்கு முடியாது, ராகினியைப்பற்றி இன்னொருவரிடம் பேசுவதாவது…….. அதைவிட அபத்தம் வேறிருக்காது. ஆறு தவழும் சிறுகணவாயின் வடதீரத்தில் ஏறும் ஏற்றமான பாதையில் இனி மிதியுந்தை மேலே தள்ளவேண்டும். இவனுக்கு ராகினியின் போக்குகள் தரும் மனச்சுமையானது கூடவே மிதியுந்தில் ஒரு ஆட்டுக்கல்லையும் சேர்த்து வைத்துக் கட்டிக்கொண்டு உன்னி ஏறுவதைப் போலொரு பிரமையைத் தந்தது

‘கடவுள் அவளை வெள்ளந்தியாய் அழகாகவும் படைத்திட்டாரா, அவள் என்ன செய்வாள்………… ஆனால் இவளாவது சுற்றிக்கொண்டுவாற கானான் கோனானுகளோட, ‘இ’ ‘ஈ’யென்று இளிக்காமலாவது இருக்கலாமில்லை, இவள் இளிக்கறது பயல்களுக்கு இதை லேசாய் வசைச்சிடலாமென்று தோணுதுபோல…… சிந்தனைகள் அழுத்த மேலேறினான். இருமருங்கிலும் தேக்கும். முதிரை, பாலை, பூவரசு மரங்களும், பசும் இலைதழைகளும் வெய்யிலை வீதியில் விழவிடாது நிலையாக நிழலைத் தந்துகொண்டிருக்கின்றன.

இந்நிழற்காட்டுக்குள் முள்ளியவளை, தண்ணீரூற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணிப் பகுதிகளில் சேவையிலிருக்கும் அரச நிலஅளவையாளர்களுக்கு உதவியாளர்களாகப் பணிபுரியும் சிங்களத் தொழிலாளர்களுக்காக தளப்பத்தோலைகளால் (Corypha Tallpot palm tree) அமைக்கப்பட்ட வாடிவீடுகளில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

இன்னும் அங்கே (LDD) காணி அபிவிருத்தித் திணக்களத்தின் ஊழியர்களுக்கும் அலுமினியத்தகரத்தாலும், மரங்களாலும் சீமெந்தினாலும் அமைக்கப்பட்ட வாடிவீடுகள் இருந்தன.

*

அது இலங்கைக் காவல்துறையின் கெடுபிடிகள் இல்லாத காலம். இவ்வாடிகளில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கசிப்புச்சாராயம் காய்ச்சுவது பகுதிநேரத்தொழிலாகும். கிழக்கு வன்னிப் பிரதேசத்தின் சாரயத்தேவையைப் பூர்த்திசெய்யவேண்டி அவர்கள் பெருமரங்களினால் இயற்கையான கூடாரங்களாக அமைந்திருந்த வன்னிக்காடுகளில் அங்கங்கே அடுப்புகள் செப்புக்கலன்கள், அவற்றோடிணைத்த மதுசாரத்தை ஒடுக்கும் செப்புக்குழாய்கள் (Condensers) வைத்து அரும்பாடுபட்டு உழைத்தனர். எந்த வாடிக்குப் போனாலும் போத்தல் 4 ரூபாய்க்கு ‘கசிப்பு’ வாங்கலாம். சில வாடிகளில் கூடவே பீடி, சிகரெட், வெத்தலை, பாக்கு, புகையிலைகூட விற்பனை செய்யப்பட்டன.

கடைசி வாடியைத் தாண்டிச் செல்கையில் இவனுக்கும் ஒரு ‘அரை’ எடுத்துக்கொண்டுபோனாலென்ன……. ஒரு சோட்டையடித்தது. வாடியொன்றில்போய் போய் அரையை வாங்கவும், இவனுக்குப் பரிச்சயமான பிரேமதாஸ அதை ஒரு யானைச்சோடாப் போத்தலில்விட்டுக் கிடைச்சி மூடியை இறுக்குக்கையில் அவனுக்கு பீடி ஞாபகம் வரவும், அரைக்கட்டு சிங்கம்பீடியும் வாங்கிக்கொண்டான்.

மேட்டுநிலம் மறையவும் வரும் சமதரைக் குறிச்சி கெரிடமடு. இதில் ஒருகாலம் தென்மராட்சி, மற்றும் குடிநீர் வளங்கள் குறைவான தீவகப்பகுதி மக்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் காணிகள் வழங்கிக் குடியேற்றப்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன, யாருடைய முன்யோசனையோ எல்லாக் குடியிருப்புகளினதும் வீதிப்பக்க வேலிகளில் வேம்பு, தேக்கங்கன்றுகளை நட்டதால் அவை நிரையில் வளர்ந்து அக்குறிச்சியையே ஒரு பூங்காவைப்போல் பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் ஆக்கியுள்ளன. அதில் ஒன்றுதான் அவர்களது குடியிருப்பு. அப்பூமி தண்ணீர் தேங்காத செம்மண் கலந்த வண்டல் நிலம், அதில் பதியன் முறையில் உருவானதும், வரட்சியைத் தாங்கக்கூடியதுமான முருங்கைகளை நட்டிருக்கிறார்கள். அவை ஆண்டுமுழுவதும் நன்கு முகஞ்செய்கின்றன. அவர்கள் தோட்டசெய்கைக்காக ஒரு கிணறும், வீட்டுப்பாவனைக்காக வீட்டுக்கு வடக்காகக் கோடியிலும் ஒரு ஆறடிவிட்டமுள்ள சிறிய கிணறும் வெட்டிக் கட்டியிருக்கிறார்கள். மழைவீழ்ச்சி குறைவான கோடைகளில் பெரியகிணறு லேசாக வற்றப் பார்க்கவும் உள்ளே இரண்டு குழாய்க்கிணறுகளையும் அமைத்திருக்கிறார்கள், இப்போ ஊற்றுப்பொய்ப்பதில்லை. மிளகாயும் வெங்காயமும் அவரை, தக்காளி கத்தரி, சிறுபோகத்தின்போது எள்ளு, உளுந்து, நிலக்கடலையும், பயறு பயிரிடுவார்கள், தைபிறந்து மிளகாய் கத்தரி நாற்று மேடை போடும்போது நாலைந்து மேடைகள் அதிகமாகவே போட்டு மேலதிக நாற்றுக்களை அயலவர்க்கு விற்பார்கள். சின்னதாக ஒரு கோழிப்பண்ணை, கொஞ்சம் ஆடு மாடுகள் வைத்துக்கொண்டு சீவியத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறது அந்த இளங்குடும்பம்.

முள்ளியவளையிலிருந்து புதுக்குடியிருப்புவரை சுற்றுவட்டத்தில் கம்பிக்கட்டை தாழ்ப்பது, தோட்டம் சாறுவது, வயல்மூலை கொத்துவது, தகரை/அலம்பல் தாழ்ப்பது போன்ற பணிகள் ஏதாவது இருந்தால் போய்வருவதற்கு இந்த மிதியுந்து அவனுக்குக் கைகொடுக்கிறது. அவன் மனைவி ராகினி, அவளது புதினமான பெயரைப்போலவே அவளும் அந்தப் பிரதேசத்துக்கு அந்நியமாக, துருத்தித் தெரியுமொருஅழகி. நீளமான முகவாகு, கொடியைப்போலொரு உடல்வாகு, அவள் செல்லமாகத் தளம்பித் துவண்டுகொண்டு நடக்கிற சாங்கத்தில் கவிதைகள் கனியும். கபடில்லாதமனம், அந்நேகமாக சோட்டி உடுத்திருப்பாள், சிலவேளையில் முழுக்கவுணும். என்ன தோட்டத்தில் வேலையாயிருக்கும்போதோ, சமைக்கும்போதோ யாரும் படலையில வந்து கூப்பிட்டால் கழற்றி வீசிய மாராப்பையோ துப்பட்டாத்துகிலையோ அவ்விடத்திலேயே விட்டுவிட்டு நின்றமேனிக்குப் போய்விடும் பேதமை எவருக்கும் அவளை ஒரு பள்ளிச்சிறுமி என்றுதான் கணிக்கவைக்கும். உலகம் மாறும் வேகத்துக்கு இதெல்லாம் ஒரு விஷயமில்லைத்தான். ஆனால் பீடிக்கு நெருப்புக்குவாற விடலைகளின் கண்ணிலகூட ராகினி எத்துப்பட்டால்கூட அவர்கள் நின்று வழிவதும் குழைவதும் அத்தையித்தைக் கதைச்சுக்கொண்டு நேரத்தையோட்டி பீடியை முழுசாய் வலிச்செறிஞ்ச பின்னால் முற்றத்தைக் காலிபண்றதுமே வாடிக்கை.

வழியிறபயலுகளோட இவள் ஏன் இழிக்கப்போவான், என்பது இவன் மனதின் தீராத சம்வாதம். ஆனாலும் அவனுக்கு ராகினியுடம் கடிந்தோ கடுமையாகவோ எதுவும் சொல்லமுடிவதில்லை. ‘ஏன்டி அவங்க முன்னால வாறே’ என்று இவன்கேட்கப்போக அதுவே அவள் மனதை சுருங்கவைத்தாலோ நோகடித்தாலோ இவனுக்குத்தான் தாங்குமா?

*

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் தன் ஊழியத்தின் நிமித்தம் மிதியுந்தில் கெரிடமடுவூடாக சென்றுவரும் இந்த விவசாய உத்தியோகத்தரின் (Cultivation Officer), சங்காத்தம் அவர்களுக்கு ஏற்பட்டதே தற்செயலாகத்தான். ஊரில் எல்லோரும் அவரை ஓவசியர் ஐயா என்றார்கள். இவன் தற்செயலாக வீதியில் பூவரசம் கெட்டொன்றை ஒடித்துப் பல்லை விளக்கிக்கொண்டு நிற்கையில் தற்செயலாக இவனைக்கடந்து மிதியுந்தில் போனவரைத் தற்செயலாக இவன் விளித்து “ ஐயா மிளகாய்மேடைக்கு என்ன உரம் ஐயா போடலாம்? ” எனவும் அவர் தடுப்பானைப்பிரயோகித்து மிதியுந்தை நிறுத்திவிட்டு உருளியில் இருந்தபடியே தரையில் காலையூன்றிக்கொண்டு “ என்ன அடியுரம் போட்டீர் ” என்றார்.

” வீட்டுக்குப்பையும் எருவுந்தான்………”

“ அப்ப இப்போதைக்கு ஒன்றும் வேண்டாம், இரண்டிலை விட்டாப்போல இலை பழுப்பாய் மஞ்சளாயிருந்தால் மட்டும் எல்லுப்போல யூறியா தண்ணீரோட கலந்து பனுக்கும், வேற ஒன்டும் வேண்டாம்…………….” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் வளவுக்குள் மேயக்கட்டிவிட்ட மாட்டையும் கன்றுகளையும் அவிழ்த்துத் தொழுவத்துக்குள் கட்டப்போன ராகினி ‘மனுஷன் யாரோடயோ கதைக்கிறான் யாராயிருக்கு’மென்று என்று விண்ணானம் பார்க்கப் படலைக்கு ஓடி வந்தாள். மணிப்புறாமாதிரி குளுகுளு-குறுகுறுவென்றிருந்த அவள் அழகு மிதியுந்தை மேலே நகரவிடாமற்பண்ணி அவளைக் கொஞ்சம் உமியவைத்தது. ஒரு விவசாயி சந்தேகம் கேட்டால் அதை முழுமையாகத் தெளிவுறுத்த வேண்டியது ஒரு விவசாயப் போதானாசிரியர் கடமையாகும். சிரத்தையாக மிதியுந்தைவிட்டுக் கீழே இறங்கினார்.

’‘இவளைப்பார்த்தவன் எவனும் எதுக்குடா ‘திகைப்பூண்டை’ மிதிச்சவன்மாதிரித் தியங்கறாங்கள், என்றது இவனுக்குப் பிடிபடவேயில்லை.

அடுத்த வாரம் “ நாற்றுத்துளிர் விட்டுட்டுதோ பார்ப்பம்………….” என்று தோட்டத்துக்கே வந்த ஓவசியரது கடமையுணர்வும் கொஞ்சம் மிகைதான்.

அதற்கடுத்த வாரம் வரும்போது ‘சித்திரைமழையோட வையுங்கோ’ என்றுசொல்லி மூன்றே ஆண்டுகளில் குலைகுலையாய்க் காய்த்துகுலுங்கக்கூடிய இனமென்று மூங்கில் கொட்டுகளில் மூன்று சிறிய மாங்கன்றுகள் கொண்டுவந்தார். அவரே ‘கிணத்துக்கு அண்மையாக வளவின் பின்னுக்கு நட்டியளென்றால் தண்ணீர் ஊற்ற வசதியாயிருக்கும், கட்டாக்காலி மாடுகளும் வாய் வைக்காது.’ என்று மதியுமுரைத்தார்.

‘தங்கமானதொரு மனுஷனாய்க்கிடக்கு’ என்று இருவரும் ஆச்சரியப்பட்டனர். பின்னைய நாட்களில் மேலும் அவர் சில பலாக்கன்றுகளையும், ஜம்புநாவல்கன்றுகளையும் கொண்டுவரவும் அவரது ஆலோசனைப்படி அங்கங்கே அவை நடப்பட்டன.

‘ஒரு கௌரவமான உத்தியோகத்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கக்கூடிய, வெளிநாடொன்றுக்கோ பறந்துவிட்டிருக்கூடிய இந்த மைனா வன்னிக்குள் சிக்குண்டதன் விருத்தாந்தம் என்னவாயிருக்கும்’ ராகினியைக் காணுந்தோறும் ஓவசியரின் முன்மண்டைக்குள் குறுகுறுக்கும்

“ அப்ப நீங்கள் எங்க படிச்சனீங்கள் ”

“ உடுவில் கேள்ஸ் கொலிஜில”

” ஐசி…….. எங்கட தங்கச்சி சுகுணசொரூபியும் அங்கதான் படிச்சவ…….. என்ன உங்களுக்கு இரண்டொரு வருஷம் சீனியரா இருந்திருப்பா “

“எனக்குத்தெரியேல்ல…… நாங்கள் 72 ஆம் ஆண்டு அட்வான்ஸ் லெவெல் செய்த பாட்ச், “

“ அப்ப உங்களுக்கு மிஸிஸ். பரந்தாமனைத்தெரியுமோ……… ’………….’ ஐக் குலுக்கிக்கொண்டு நடப்பா……….. ”

ராகினி விழுந்துவிழுந்து சிரித்தாள். நிஜமாகவே ஓவசியரின் தங்கை அங்கே படித்தாளோ இல்லை ஓவசியர் கதைப் பொழிப்புக்கு சும்மாதான் தும்புவிடுகிறாரோ. வெளியே போயிருந்த அவன் அப்போதுதான் வந்து சேர்ந்தான். அவனுக்கு ‘மிஸிஸ். பரந்தாமன்’ என்றது காதில் விழுந்த துலக்கத்துக்கு ‘அவ எதைக்குலுக்கி நடப்பா’ என்றது விழவே இல்லை.

‘அவ எதைக்குலுக்கி நடந்தால் ஓவசியருக்கு என்ன, அவர் அதை ஏன் ராகினிக்குச் சொல்லவேண்டும்’ இவனுக்கு அந்தச் சம்பாஷணையே லயிக்கவில்லை. ‘இப்பதான் வந்தியளோ’ என்று சம்பிரதாயமாக ஓவசியரை விசாரித்துவிட்டு வீட்டைச் சுற்றிக்கொண்டு சின்னக்கிணற்றடிக்குப் போனவன் கால்மேலைக் கழுவிக்கொண்டு தலைவாசலுக்கு வந்தான். அப்போது அவர்கள் ‘பேசுபொருள்’ மாறிவிட்டிருந்தது.

குலுக்கி நடக்கிற டீச்சரைப்பற்றிய கதையென்றால் நான் வந்தபின்னாலும் தொடர்ந்து கதைத்திருக்கலாந்தானே? என்னத்துக்குப் மாட்டரை மாத்துகினம்? இவன் வந்திட்டான் என்றால் பிறகு ஓவசியரும் கனநேரம் வினைக்கெடார் அவனுக்கு வைக்கிற சாக்கில் ராகினி இரண்டாவது தேநீரையும் ராகினி அவருக்குக் கொடுப்பாள், குடித்ததும் மாறிவிடுவார்.

வளவில்வைத்த மாங்கன்றுகள் தழைத்து நிமிரத்தொடங்கிய பின்னால் அத்தோடு அவர்கள் வளவின் இதர பயிர்பத்தாடல்களுடலிலும் ஓவசியரின் கரிசனம் அதிகரித்தது. அவர் கொடுத்த மாங்கன்றுகள் தளிர்த்துதோ, செழித்துதோ பரவாயில்லை. அவளின் தரிசனம் கிடைக்காத வருகைகளில் ஓவசியருக்கும் பொச்சம் அடங்குவதில்லை. அவன் இல்லாத வேளைகளில் ஓவசியர் அந்தரங்கத்தில் அவிழ்க்கும் சிருங்காரம், சல்லாபம், நிறைந்த வம்புப்பகிடிகளும் வேடிக்கைக்கதைகளும் ராகினிக்கும் மெல்லப்பிடிக்க ஆரம்பித்திருந்தன. அவர் வருகையை மெய்யாகவே விரும்பினாள்.

அவர்கள் வீட்டில் ஒரு பக்கேஸ் பெட்டிக்குள் அட்டைகள் கிழிந்துபோயிருந்த இரண்டொரு ராணிமுத்துக்களையும், சித்திராலயாவையும், வண்ணத்திரையையும் குமுதங்களையும், கதம்பமன்ன உள்ளூர் மாதாந்திகளையும் கண்டவர், ஓ இவள் கொஞ்சம் வாசிப்பாள் என்பதை உய்த்துக்கொண்டு ‘நான் உங்களுக்கு அடுத்தமுறை நல்ல கதைப்புத்தகங்கள் கொண்ணந்தாறேன்…………… சுற்றிக்கொண்டு பார்த்தால் நீங்கள் என்ர வைஃபின்ர வழியில எனக்குச் சொந்தமாய் வாறீங்கள்” என்று போகிறபோக்கில் ஒரு குண்டையும் ஓவசியர் வீசினார்.

முன்பெல்லாம் படலையடியில் நின்றே ‘வீட்டில யார்’ என்று சம்பிரதாயமாகக் கேட்டுக்கொண்டுவரும் ஓவசியர் இப்போ நட்பும் பரிச்சயமும் அதிகமாக அவர்களின் முன்னேற்றத்தில் தனக்கும் கரிசனையுண்டு போன்றதொரு பாவனையுடன் மெல்லமெல்ல முற்றம் வரைக்கும் ஈருருளியில்வந்து இறங்கத்தொடங்கவும் இவனுக்குள் கேந்தியும் கிலேசமும் மிகைத்தன.

இவ்வளவு உதவிகள் செய்யிற ஓவசியரின் மூஞ்சையைப்பார்த்து ‘இப்பிடியெல்லாம் செய்யாதையுங்கோ…….. எனக்குப்பிடிக்காது’என்று எப்படிச் சொல்றது, தனக்குள் மறுகினான். ராகினிடம் அவர் நடத்தையைத் தப்பாகச் சொன்னால் என்னை என்ன நினைப்பாள்.

வெளியில் எங்கேயாவது வேலைக்குப்போனால்த்தான் அவனுக்குக் கையில் காசுபுரளும். அப்படியே பொத்திக்கொண்டுவந்து அவளிடம் கொடுப்பான், இப்போதெல்லாம் கிடைக்கும் காசுக்கு காலோ அரையோ வழியில் கீறிக்கொண்டு மீதியைத்தான் அவளிடம் தருகிறான். ராகினிக்கும் தேவைகள் மிகக்குறைவு. அவள் காசுக்குப் பறக்கிற ரகமுமல்ல. இன்றைக்கு வழியில் புதுச்சரக்கென்றார்கள், 2 அவித்தமுட்டையும் கால்ப்போத்தல் பெருக்கனுமாய் அவனாகவே கீறிக்கொண்டுவிட்டான்.

அவனுள் அச்சிறு லாகிரியிலும் மனவெளியெங்கும் புதியசிந்தனைகள் அலையத்தொடங்கின. ‘ இச்சிறுக்கிக்கு நான் அலுத்துப்போனேனோ, இல்லை நான் இல்லாவிட்டாலும் ஒரு குழந்தை பெத்துக்கவேணும்னு நினைக்கிறாளோ……..’

கசிப்பு தூக்க காற்றில் மிதந்துகொண்டு மிதியுந்தில் வருகையில் வீட்டை அண்மியதும் வீதியில் யாரோ குரலைத்தணித்துக்கொண்டு இவனிடம் “அண்ணே இங்கே பெருக்கன் எங்கேயும் எடுக்கலாமோ” என்று விசாரித்தார்கள். அவர்களுக்குக் கையைக்காட்டிவிட்ட பின்னர்தான் அத்திவ்ய யோசனை அவனுக்கு உதித்தது.

‘எவனைப்பார்த்தாலும் பெருக்கன் விசாரித்தபடி அலையுறான்…….. ஏன் நானும் நாலு போத்தலை வாங்கிவைத்துக்கொண்டு சில்லறையாய் விற்றால் நாலுகாசு பார்க்கலாமோ………. பின் தானாகவே ‘சாய்க் வேண்டாம். அவனவன் ஏமஞ்சாமத்தில வந்து கூக்காட்டிக்கொண்டிருப்பாங்கள், இன்னும் பீடிநெருப்புக்குவாற பயலுகளே வந்தால்க் கிளம்பிறாங்களில்ல, அதுக்குள்ள சாராயமும் விற்றால் சோக்காய்த்தான் இருக்கும்.’ அன்றிரவு கசிப்பு விற்பனையைப்பற்றி உள்மன சம்வாதங்களுடனும் உரத்தசிந்தனைகளுடனும் தூங்கினான்.

தோற்றத்தில் மன்சூர் அலிகான் மாதிரி இரணுவச்சீருடையணிந்த இருவரும், கசிப்பு விசாரித்தவனைப் போலிருந்த ஒருவனும், பீடிக்கு நெருக்கேட்கவந்தவொரு இளவலும், ஓவசியருமாகச் சேர்ந்து ராகினியை ஓட்டிக்கொண்டு போவதைப்போலவும், இவளும் எதிர்ப்பின்றி அவர்கள்கூட எடுபட்டு அள்ளுப்படுவதைப்போலவும் ஒரு ‘கொடுங்கனவு’ வந்தது. ‘ஓ’வென்று கத்தியபடி பதைத்தெழுந்து நடுச்சாமத்தில் வியர்த்தான். முதுகாலும் கழுத்தாலும் வழிந்த வியர்வையை ஒரு துவாயினால் துடைத்துவிட்டுச் சுக்குக்கோப்பியும் போட்டுக்கொடுத்துவிட்டு ராகினியும் இது உள்ளிறங்கும் திரவங்களின் சாங்கியமாக்குமென்று இருந்துவிட்டாள். அவனும் அதன்பின் அக்கசிப்பு வியாபார யோசனையை முற்றாகத் துடைத்துவிட்டிருந்தான்.

*

ஒருநாள் இவன் புதுக்குடியிருப்பில் கட்டிடநிர்மாணத்தளமொன்றில் சிற்றாள் வேலை பார்த்துவிட்டு வழியில் வேட்டைக்காரர் ஒருவர் வீட்டில்போய் மரைவத்தலும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். மிதியுந்தின் நிறுத்தியை அவன் மடித்து விடமுதலே கைப்பிடியில் கொழுவியிருந்த நெகிழிப்பின்னல்பையுக்கும் மேலாக நீட்டிக்கொண்டுநின்ற வத்தலைக்கண்டுகொண்ட ராகினி சொன்னாள். “ பாரன் இன்றைக்கு உமது அதிஷ்டத்தை…… உதுக்கு உவப்பான ஐட்டமுமல்லே ஒன்றுமக்கு ஓவசியர் மாமாவும் கொண்ணந்திருக்கார்”.

இதுக்குவப்பான சாமான் எதுவாயிருக்குமென்று ஊகிக்கமுடிந்தாலும் ‘ஓவசியருக்கு ஏனிந்தவேண்டாதவேலை’ என்று நினைத்தவன் தலைவாசலில் நுழைந்து அங்கிருந்த ஒற்றைக் கதிரையில் அமரவும் ராகினி “மாமாவுக்கு யாரோ வாடியில வாங்கியந்து கொடுத்ததென்று கொண்ணாந்திருக்கிறார் பெருக்கன்” என்றபடி வெள்ளைச் சாராயப்போத்தலை எடுத்துவந்து காட்டினாள். புதுசாய் அவள் ஓவசியரை ‘மாமா’வென்று அழைப்பதும், அவ்வுறவின் நெருக்கமும் திகைப்பூட்டினாலும், தன் மனச்சிராய்ப்புகளை வெளிக்காட்டாமல் அவளைப் பார்த்துச் சிரித்துவைத்தான்.

(பெருக்கன், வெட்டிரும்பு, என்பதெல்லாம் கசிப்பு வடிசாராயத்துக்கு / பட்டை வன்னிப் பிரதேசத்தில் வழங்கப்படும் செல்லப்பெயர்கள்.)

ராகினி தோட்டத்தில் வெங்காயப்பாத்திக்குள் தாமாக முளைத்திருந்த பசளியையும், முளைக்கீரையையும், பிடுங்கப்போனாள்.

இவன் பீடிக்கு நெருப்பெடுக்க அடுப்புக்குக் கிட்டப்போனான், அடுப்பில் தணல் கனன்றுகொண்டிருந்தது. ‘அப்ப ஓவசியருக்குச் சும்மா தேநீருக்கு மூட்டிய அடுப்புமாதிரித் தெரியவில்லை. மேற்படியானுக்கு பெரும் உண்டாட்டும் நடந்திருக்குதோ……. இவள் இடங்காட்டாமலே அவன் வந்திருந்து வழியிறான், எதுக்கும் ஒரு எல்லை வேணும்.’ திரும்பவும் கதிரையில் அமர்ந்து பீடியை வலித்தான்.

பெருக்கனின் தரிசனம் அவன் மனத்தைத் தாறுமாறாகக் குழப்பிப்போட்டது. சீமெந்து அரைச்சுவர்மேலே தெளிவாயிருந்த வெள்ளைப்பெருக்கனைப் பார்க்கப் பார்க்கப் பார்க்க அது அவனைப் பார்த்துக் கண்சிமிட்டுவதைப் போலிருந்தது. ‘அதைக் குடிப்பதா விடுவதா…..’ என்று மனம் அல்லாடியதில் வைராக்கியத்தின் கடுமை தளர்ந்தது. நெகிழிப்பையிலிருந்த மரைவத்தலை எடுத்து முகர்ந்து பார்த்தான். அருமையான சேர்மானம். பெருக்கனுக்காகவும் அல்ல, மரவத்தலிருந்து காலிய சுகந்தத்துக்காகவும் அல்ல, அவை இரண்டும் சேர்வதால் அரிதாய் இசையும் சேர்மானத்துக்குத் தன் வைராக்கியத்தால் துரோகம் செய்தல் அறமாகாது.

எப்போதாவது உதவலாமென்று முன்னெப்போதோ கட்டிடவேலைத் தலத்திலிருந்து எடுத்துவந்து கோடித்தாழ்வாரத்தில் சாய்த்துவைத்திருந்த இரண்டு இஞ்சிச் சதுர இரும்புவலையின் ஞாபகம் அவனுக்குள் பொறித்தது. மெல்லப்போய் அதை எடுத்துவந்து அடுப்பில் வைத்துவிட்டு மரைவத்தலில் இரண்டு கீலத்தை எடுத்து அவ்வலைமேல் போட்டான். மீதிவத்தலை மில்க்வைற் சணல்பையுள் போட்டு குசினியுள் தொங்கிய உறியில் வைத்தான். மரைவத்தல் வாடவும் துவாயை எடுத்துக்கொண்டு கோடிக்குப்போய் கிணற்றின் கமலையால் நீரை முகந்து நிதானமாகக் குளித்தான். அதற்குள் அயலிலிருந்து யாரோ நட்டதுக்கு நூறு நாற்றுக்குறையுதென்று கேட்டுவந்ததில் அதை அவர்களுக்குப் பிடுங்கிக் கொடுக்க திரும்பவும் தோட்டத்தில் நாற்றுமேடைப்பாகம் போனாள் ராகினி.

இவன் ஈரம் உலர்த்திய துவாயைக் கொடியில்போட்டுவிட்டு அதில் தொங்கி உலர்ந்துகொண்டிருந்த சாரத்தை எடுத்து உடுத்திக்கொண்டான். அடுப்பில் வாடிய மரைவத்தலிலிருந்து ஒரு விருப்புக்குரிய வாசம் கிளம்பவும் அதை எடுத்தொரு கடிகடித்தான். நல்ல முறுகல் பத்திலிருக்கவும் அதையெடுத்து தகரவட்டிலொன்றில் வைத்துக்கொண்டு மடித்துவைத்த படங்கில் அமர்ந்து கசிப்புப்போத்தலைத் திறந்து முகர்ந்துபார்த்தான். நல்ல மூச்சான புதுக்கசிப்பு, பாலைப்பழ வத்தலைப்போலொரு சுகந்தம் அதிலிருந்து கமழ்ந்தது. கிளாஸை நிறைத்துக் கச்சேரியை மெல்லத் தொடங்கினான் சிங்கன். அரைக்கிளாஸ் உள்ளே போனதும் வஸ்த்து அவனை மிதக்கச்செய்தது. சாதாரண கசிப்புகள் என்றால் உடனேயே நடுமண்டையில் ஒரு மாதிரியாகக் கிறுகிறுக்க மட்டும் செய்யும். இது ஏதோ சோளகக்காற்று மாட்டுக்குடிலைத் தூக்கிச்சுற்றுற மாதிரிச்சுழற்றிற்று, ஹெலிமாதிரி மேலேயும் கீழேயுமா உயர்த்தியும்……… பதித்தும் வித்தியாசமாய்ப் பண்ணிக்கொண்டிருந்தது. அபினையோ ஹஷிஸ்கட்டையையோ ஓவசியர் போட்டு என்னோட விளையாடியிருப்பாரோ…………… ஓன்லி நானாட்டான் பெருமாள் அறியும்.

இன்றைக்கு பெருக்கன் அவனை மேலேமேலே மிதத்திச் செல்கையில் அவனுக்கு வேறு விபரீத எண்ணங்கள் ஜனித்தன என்ன மசித்துக்கு ஓவசியர் இவளுக்குக் குமுதம் விகடன் கதைப்புத்தகங்கள் கொண்டுவருவான்? இன்றைக்குப் புத்தகங்கள் கொண்டாறவன் நாளைக்கு ‘உனக்குப் பொருத்தமாயிருக்குமென்று வாங்கின்னான்’ ஒரு புடவையையும் கொண்டுவருவான். அவரைக் கண்டவுடன இவளுக்கு வாற இளிப்பு கெலிப்பு கேரல் எல்லாத்துக்கும் முதல்ல ஒரு முடிவுகட்டவேணும். தொழுக்கை டீச்சரின் கதை வந்ததும் இருவரும் விழுந்துவிழுந்து சிரிக்கிறதும் லூட்டியடிக்கிறதும் எல்லாம் ஒரு எல்லை மீறிபோச்சு. ஓவசியரென்ன மாமாவாமோ, புதிசாய் ஒருமுறையும் சொந்தமும் கண்டுபிடித்திருக்கினம்…… இன்றைக்கே கூத்தியைக் கேட்டுவிடுறன்: “என்னடி நீ அவனையும் சைற்ஃபிட்டிங்காய் வைச்சுக்கிறியோ………….?”

*

மிளகாய் நாற்றைக்கொடுத்து சில்லறையை வாங்கிக்கொண்டு படலையைச் சங்கிலியால் பூட்டிவிட்டு வந்து கைகால் அலம்பிக்கொண்டு ராகினி வீட்டுக்குள் நுழையவும் அவன் மரைவத்தலைக் கடித்தபடி முழுக்கிளாஸையும் காலிபண்ணிவிட்டு கண்கள் சொக்க, காதுகள் சிவந்திருந்தான். போதை அதிகமானால் சாப்பிடாமலே படுத்துவிடுவான். கோர்க்காலியில் கழுவிக்காயவைத்திருந்த பீங்கான் கோப்பையில் சோற்றைப்போட்டு அதன்மேல் மங்குச்சூடைக்குழம்பை ஊற்றிக்கொண்டுவந்து அவன் முன்னால் வைத்துவிட்டு கசிப்புப்போத்தலை நைஸாக நகர்த்திப்போய் தைலாப்பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு அதன் மேல் உட்கார்ந்துகொண்டாள்.

“கவ்வாட்டுக்குலம்புக்கு பெருக்கன் சொம்மா…… கணிதம் பேசுதடா………, இன்னும் ஒரு சொட்டுத்தாம்மா என்ட ராவுணி.” என்றபடி கிளாஸைத்தூக்கி அதில் இரண்டுவிரற்கடை அளவுகாட்டிக் கெஞ்சினான். திரும்பத்திரும்ப அவன் அதையே சொல்லிக் கெஞ்சிக்கொண்டிருக்கவும் அரைமனதோடு மேலும் அரைக்கிளாஸ் அவளே வார்த்துவிட்டாள்.

ஒருவாறு கோப்பை முழுவதும் விரல்களால் துழாவிச் சாப்பிட்டுமுடித்து எழும்ப முயன்றவனின் காலடியில் தரை தளம்பித் துடித்தது. உலாஞ்சிக்கொண்டு நின்றவனிடம் கோப்பையை வாங்கிக் கழுவிச் சாத்திவிட்டு, அவனுக்குப் பாயை விரித்துவிட்டாள். கருவாட்டுக்குழம்பும், பாலைப்பழவத்தல் வாசக்கசிப்பும் சேர்த்து அவனின் கதம்பமாக வீசிய வாசம் அவளுக்குப் பிடிக்கவில்லை, வெளியே கையலம்பிவிட்டு வந்தவன் அதேவேகத்தில் கன்வேஸு மடக்குக்கட்டிலை விரித்துவிட்டுப் படுத்துவிட்டான். சற்றே தள்ளிப்படங்கை விரித்து அதன்மேல் புற்பாயைவிரித்துக்கொண்டு அவளும் படுத்தாள்.

*

தூக்கமும் கடுகிவந்தது. படுக்கையிலிருந்தபடியே அவன் கன்வேசுக்கட்டில் எழும்பியது. எழும்பிப் பனிமூட்டத்தினூடு பறந்தது. தொலைவில் அந்தரத்தில் சில சினிமா படங்களில் வருவதுப்போல சீமெந்தில் செய்த சுவாமி சொரூபங்கள் முகில்களுக்கிடையில் தோன்றின, அவர்களுக்கிடையில் நிரஞ்சனியும் அடசீய்க்….. ராகினியும் நிற்கிறாள். ஹவர்கிறாஃப்ட் மாதிரி அந்தரத்தில் கட்டிலில் இருந்த இவனைக் கீழே இறங்கச்சொல்லிக் கண்ணால் அவள் ஜாடை காட்டிறாள். இவன் பதிந்து இறங்கினால் வற்றாப்பளை அம்மன்கோவில் ஐயர் நிற்பதைக்கொண்டு அது வற்றாப்பளை அம்மன்கோவில்என்று அவனுக்குப்புரிகிறது. பஞ்சுப்பட்டியாய் தலைநரைச்ச ஐயர் அன்று கருகருவென வளர்ந்த சடாமுடியும் தாடியுமாய் இளமைபெயர நிற்கிறார். குழந்தைப்பேற்றுக்காக நேர்ச்சை ஏதோ வைத்தவளாம், அதுசெய்விக்கவந்தது என்றாள் ராகினி. ராகினியின் தலையில் சடாரியைவைத்த ஐயர் ஆசீர்வதித்த பின்னால் அனாவசியமாக ராகினியின் கையில்பிடிப்பதுவும் கன்னத்தில் தடவுவதுமாயிருக்கிறார். ஐயரின் சாங்கியங்கள் இவனுக்கு துண்டறப்பிடிக்கவில்லை. அவரை எரித்துவிடுவதைப் போலப்பார்க்கிறான். ஐயர் இவர்களது பிரசாதத்தட்டை எடுத்துச்செல்லுமாறு கைகளால் ஆக்ஞை காட்டுகிறார். வழமையான சம்பாவனை பெறுவதற்கான குழைதலுடன்கூடிய புன்னகைகூட ஐயரின் முகத்திலில்லை. கோவிலைவிட்டு இருவரும் வெளியேறுகிறர்கள். காற்றில் பஞ்சைப்போல 32 திசைகளிலும் எடுத்துச்செல்லப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தான். யாருக்கோ சலம் நிறைந்து முடுக்குவதைப்போல உணர்ந்தான். இல்லை எனக்குத்தான் சலம் முடுக்கி அணியம் விண்ணென்கிறது. திரும்பிப்பார்த்தான் அருகில் ‘ராவுணி’ இல்லை, வேறொரு பாயில் படுத்திருந்தவளை எழுப்பிவிடலாகாதென்ற சூதானத்தோடு ஓசையெழுப்பாது வெளியில் வந்தான், நிறைபனிமூட்டமாக இருந்தது. சலத்தைப் பாவட்டைவேலியருகில் ஓடவிட்டபடி படலைப் பக்கமாகப் பார்த்தான். அங்கே படலையருகில் சிறிய வைக்கோற்போர் கணக்கில் முகிலைப்போல் ஒரு உருவம் இறங்கி அசைவதைப்போல் தெரிந்தது.

“ டாய்………யாற்றா அவன் தாயோழி என்டவீட்டை மேயப்பாக்கிறது” என்றபடி சாரத்தைத்தூக்கியபடி அதை விரட்டிக்கொண்டு ஓடினான். இவன் படலையை அண்மிக்கவும் அங்கே எவரையும் காணவில்லை. யாராவது இருட்டில் புகுந்து மிளகாய்நாற்றைப் பிடுங்கிவிடுவர்களோவென்ற பயத்தில் ராகினி சங்கிலிபோட்டுப் பூட்டிய பூட்டு படலையில் தொங்கிக்கொண்டிருந்தது. ‘நாற்றைக் களவெடுத்து நட்டால் பயிர் ஓங்கி வளர்ந்து முகம்செய்யும்’ என்பது அவ்வூரிலிருக்கும் நம்பிக்கை.

‘ பாவம் ராவுணி ஒத்தைப்பெண்ணாய் குடும்பத்துக்காக எவ்வளவு பாடுபடுகிறாள், இன்று களைப்பில மாட்டைப்பிடித்துக்கட்ட மறந்திட்டாள் போலயிருக்கு. தொழுவத்தில் நின்ற மாடுகளை அவிழ்த்துவந்து வீட்டுவிறாந்தையில் ஏற்றிக் கப்புகளில் கட்டினான், விறாந்தையில் நின்றிருந்த மிதியுந்தை உருட்டிப்போய் தொழுவத்தில் சங்கிலியால் பூட்டினான்.

திரும்ப அறைக்குள்வந்து அரிக்கன் லாம்பின் வெளிச்சத்தைச் சற்றே தூண்டி ராகினியைப் பார்த்தான். அவள் ஒரு குழந்தையைப்போலக் கைகளைக் கூப்பித் தொடைக்குள் புதைத்தபடி ‘ல’ வடிவில் சுருண்டு படுத்திருந்தாள்.

‘ராவுணி…….. நீ மேட்டுக்கிணத்துத் தண்ணிடி, வாறவெள்ளத்தோட அடிபடமாட்டாய். கிளியை நான் சந்தேகிக்கலைடா…… குறையும் சொல்லேல்லை, ஊரெல்லே வீண்கதை பறையும். அதுக்குத்தான்டா எனக்குப்பயம். ’

போதை ஏறினால் இப்படித்தான் அகவுவான்,

‘ஓவசியரிட்டைப் புத்தகங்கள் எதுவும் வாங்கிப்படிக்காதை’ என்று எப்படிச் சொல்வது? என் எண்ணம்போல் எதுவுமில்லையென்றால் அவளின் மதிப்பிலிருந்து சரிந்துவிடுவேனே. சாமத்தில் ஓவசியர் வந்ததையும் தான் அவரைப்படலைக்கு வெளியே விரட்டியதையும் இவளுக்குச்சொல்லப்படாது.

ஓவசியர் பின்னேரமும் வந்திருப்பானோ? சரியாய் நான் நிற்காத நேரங்கள்பார்த்து வாறானே……..? பயல் எத்தனை மணிக்கு வந்திருப்பான்? நினைவு கலங்கலாக………. இவர் என்ன மசித்துக்கு எனக்குக் கசிப்புக்கொண்டுவரோணும்…… எனக்குச் சரக்கைத்தந்து மடக்கப்பார்க்கிறானோ கம்மனாட்டி, சோழியன் குடுமி சும்மா ஆடுமா………?

முகத்தில் விகசிப்புடன் குழந்தைமாதிரிப் படுத்திருந்த ராகினியைப் பர்த்தான். அவள் வாய் புலம்புவது மாதிரி இருந்தது.

“ இதென்னப்பா…… உன்ர லூஸுக்கேள்வி, நான் என்ன ஓவசியர் மாமா மாதிரி வாட்சுக் கட்டியிருந்தனானே நேரம்பார்க்கவும் உனக்கு எத்தனைக்கு வந்தார், எத்தனைக்குப் போனார் என்று பார்த்துச்சொல்லவும். ”

என் மனதிலுள்ளதையெல்லாம் எப்படி இச்சிறுக்கி படித்தாள்.

“ மனுஷன் பதியன்போட்ட ஒரு பலாக்கன்றையோ மாங்கன்றையோ கொண்டுவந்தால் அது ஞாயம், உனக்குப் பெருக்கனும் கொண்டுவந்துதர………. அவர் உனக்கென்ன அங்காளி பங்காளியோ, சகலையோ சம்பந்தியோ……….. ஏனிப்பிடி லூஸன் மாதிரிக்கதைக்கிறாய்?

‘அப்ப ஓவசியர் கசிப்புப்போத்தல் கொண்டுவரேல்லையோ….’

“ இஞ்ச ஒருத்தரும் ஒருத்தற்றை சொத்தையும் அள்ளவுமில்லை கிள்ளவுமில்லை,………… ஒன்டும் கொள்ளை போகவுமில்லை, எல்லாம் அததது அந்தந்த இடத்தில பத்திரமாய் அப்பினாப்போலகிடக்குது. சும்மா வேண்டாததை நெனைச்சு வெம்பாமல் வெதும்பாமல் படு கண்ணா. ”

இப்போது அகவல்கள் அடங்க கொரட்டை கிளம்பிற்று, இனி அவனுக்குத் தூக்கம் வரும்.

– அம்ருதா 154, மே 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *