கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 6,493 
 
 

ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘ஸ்டேஷனு’க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று. சபேசனுக்கு.

கும்பகோணம் வந்துவிட்டது.

இன்னும் அரை மணி நேரத்தில் சாரங்கபாணி சன்னதித் தெருவுக்குச் சென்று….

மூன்று தலைமுறையாக அவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டை அடைந்து விடலாம்.

இந்தத் தலைமுறையில், அவருக்கு வீட்டின் மீது வாரிசு உரிமையிருந்ததே தவிர, அநுபவ உரிமை இல்லை.

ஐம்பத்தெட்டு வயதில் மத்திய அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கரய்யரும் அவர் மனைவி நீலாம்பிகை மாமியும் அந்த வீட்டில் முப்பது வருஷங்களாகக் குடித்தனம் இருந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் துணை. பிறந்த மூன்று குழந்தைகளில் ஒன்று கூடத் தங்கவில்லை . அவருக்கும் பெரிய வேலை ஒன்றுமில்லை. அரசாங்கத்தில் சின்ன வேலையில் இருந் தவர்களுக்கு ஓய்வு பெற்றதும் எத்தனைப் பணம் கிடைத்திருக்கப் போகிறது?

‘பென்ஷனு’ம் இருநூறோ, இருநூற்றைம்பதோ என்னவோ தான். இதில் ஐம்பது ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார். முப்பது வருஷங்களாக – பத்து வருஷங்களுக்கு முன்னால், அப்பா போகும் போது, சொன்ன கடைசி வார்த்தைகள், சபேசனின் நினைவுக்கு வந்தன.

“என்ன ஆனாலும் சரி, கும்மோணத்து ஆத்துக் கிழவரையோ, அவர் ஆம்படையாளையோ ஆத்தை காலி பண்ணச் சொல்லாதே. அவா இருக்கிற வரைக்கும் இருந்துட்டு போகட்டும். மநுஷன் சர்க்கார் உத்தியோகத்திலேருந்தான். பணம் பண்ணத் தெரியலே. அவன் மாதிரி இருந்தவன்லாம் வீடு கட்டிண்டுட்டாங்க. இவனுக்குத் தெரியலே. கலியுகத்திலே தெய்வந்தான் நல்லவாளுக்கு ஒத்தாசை பண்ணாட்டாலும் நாமாவது பண்ணுவோமே… என்ன, நான் அவனுக்கு கொடுத்திருக்கிற வாக்கைக் காப்பாத்துவியா?”

அப்பா கொடுத்த வாக்கை காப்பாற்றுவதாக அன்று வாக்களித்தவர், இப்பொழுது கும்பகோணம் வந்திருக்கிறார், கிழவரை காலி பண்ணும்படி சொல்ல!

இது நியாயந்தானா?

ஒரு சின்ன ‘சூட்கேஸையும், கைப்பையையும் கொண்டு வந்திருப்பவர், தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்ததும், ஒரு போர்ட்டர் அவரிடம் நெருங்கி, “என்ன சாமி, கூலி வேணுங்களா?” என்று கேட்டான்.

அவன் குரலில் ஆச்சர்யம் லேசாக நிழலிட்டது. ஐம்பத்தைந்து வயதிருக்கலாம். உடம்பிலும் தளர்ச்சியில்லை . இவரால் இந்தச் சாமான்களை தூக்க முடியவில்லையா என்று அவன் நினைத்திருக்கலாம்.

“இல்லேப்பா, வேணாம்…..”

அவர் ‘டிக்கெட்டை’க் கொடுத்து விட்டு ‘ஸ்டேஷனை’ விட்டு வெளியே வந்தார்.

அவர் கும்பகோணம் வந்து பத்து வருஷங்களுக்கு மேலாகிறது. சரியாகச் சொல்லப் போனால், பத்தரை வருஷங்கள்.

அப்பொழுது அம்மா காரியத்துக்காக வந்திருந்தார். அப்பா அவருடன் தில்லிக்கு வர முதலில் மறுத்து விட்டார். ‘எனக்கு எதுக்குடா இந்த வயசிலே டெல்லியும், கல்கத்தாவும்?… சங்கரய்யர் இருக்கார் பாத்துப்பார்…’ என்றவர் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு இசைந்தார். ஆனால் தில்லிக்கு வந்து ஆறு மாதம் கூட இருக்கவில்லை. அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லையே தவிர, அறுபது வருஷங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த அம்மாவின் பிரிவு அவரை உள்ளுக்குள் கசக்கிப் பிழிந்திருக்க வேண்டு மென்று தான் தோன்றிற்று.

அவர் அப்பாவுக்குக் கொடுத்த வாக்குறுதி முதல் சோதனை மூன்று வருஷங்களுக்கு முன்னர் வந்தது –

அவர் பெண் கௌரியின் கல்யாணத்தின் போது அவருக்கு நாற்பதினாயிரம் ரூபாய் தோவையாயிருந்ததும் அவர் மனைவி பார்வதி நச்சரித்தாள். ”அதான் கும்பகோணத்து வீட்டை நாப்பதினாயிரத்துக்குக் கேக்கறாளே, கொடுத்துடுங்களேன். ”

“அதெப்படி முடியும்? கிழவர் என்ன செய்வார்?”

“அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? இருபத்தேழு வருஷமா அதே வாடகையே கொடுத்திண்டிருக்காரே, இந்த வாடகைக்கு அவருக்கு இந்த மாதிரி வீடு கிடைக்குமா? நாம வாடகையை ஒசத்தினோமா? அப்படியிருக்கச்சே, நமக்கு இப்போ அவர் சமயத்திலே ஒத்தாசை செய்யாட்டா எப்படி?”

“அவர் எங்கே போவார் சொல்லு?”

“அவர் எங்கே போவாரோ, அதைப் பத்தி நமக்கென்ன கவலை? நமக்கு இப்போ பணம் வேணும். அது நம்ம வீடு…”

“இருபத்தேழு வருஷமா மாசம் அம்பது ரூபா கொடுத்திண்டிருக்கார். கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் ரூபாயாச்சு. வீடு தமதுன்னு சொல்ல அவருக்கு சட்டப்படி உரிமையுண்டு, தெரியுமா?”

“சாஸனம் பண்ணிட்டு வாங்க போங்க, எனக்கென்ன?”

அப்பொழுது ‘ப்ராவிடன்ட் ஃபன்ட்டி’லிருந்து பணம் வாங்கி சமாளித்து விட்டார். பார்வதிக்குத்தான் அசாத்திய கோபம்.

இப்பொழுது மறுபடியும் ஒரு சோதனை.

அவர் ஓய்வு பெற ஆறு மாதங்கள்தாமிருந்தன. அவருக்கு கும்பகோணத்து வீட்டைத் தவிர வேறு சொந்த வீடு கிடையாது. ஓய்வு பெற்ற பிறகு அரசாங்கம் தந்திருந்த வீட்டை சில மாதங்களில் காலி செய்தாக வேண்டும்.

பார்வதிக்கு கும்பகோணம் போவதில் விருப்பமேயில்லை.

“நீங்க போய், தினந்தோறும் காலை வேளைல காவேரி ஸ்நானம் பண்ணிண்டு, சாரங்கபாணி கோயிலை சுத்திண்டிருங்கோ, நான் வரமாட்டேன்.”

“அது எவ்வளவு நிம்மதியா இருக்கும், தெரியுமா?”

“அந்த நிம்மதி எனக்கு வேணாம்… நீங்க அந்தக் கிழவரையும் போகச் சொல்ல மாட்டேள். எனக்கு ஒண்டுக் குடித்தனம் பிடிக்காது!”

“அந்தக் கிழவரும், அவர் ஆம்படையாளும் இன்னும் இருக்கப் போறது கொஞ்ச நாள். அவருக்கு எண்பத்தெட்டு வயசாறது. மாமிக்கு எண்பத்தி ரெண்டு. கடைசிக் காலத்திலே அவாளைத் தொந்தரவு படுத்தறது நன்னாருக்குமா, நீயே சொல்லு.”

“அந்தக் கிழவரும், மாமியும் நன்னாத்தான் ‘கிண்’ணுனு இருக்கா. நாமதான் அவாளுக்கு முன்னாலே போயிருவோம் போலிருக்கு”

“அப்போ பிரச்னையேயில்லை. இருக்கிற கொஞ்ச நாளைக்கு வாடகை வீட்டிலே இருந்துட்டு…?”

பார்வதி கோபமாக இடைமறித்தாள். உங்களுக்கு சாமர்த்தியம் கிடையாது. அவாளைக் கெஞ்சி, இவாளைக் கெஞ்சி, நெலம் ‘அலாட்’ ஆயிருக்கிற ஒரு கோவாப்ரேடிவ் சொஸைட்டியிலே மெம்பர்ஷிப்புக்கு ஏற்பாடு பண்ணினேன். நீங்க ஒரு துரும்பு அசைச்சேளா, சொல்லுங்கோ. இப்போ அறுபதினாயிரம் கட்டணும்னா, நம்ம வீட்டை விக்கிறதைத் தவிர வேற என்ன வழி?”

மூணு வருஷத்துக்கு முன்னலே நாப்பதனாயிரத்துக்குக் கேட்ட ஆளு இப்போ எழுபதினாயிரம் தரேங்கறான். அறுபதினாயிரத்தைக் கட்டறது, மீதி பத்தாயிரத்தை ‘பாங்’ லே போடறது. வீடு இன்னும் ரெண்டு வருஷத்திலே நிச்சயமாகக் கிடைச்சிடும். உங்களுக்கு வரப் போற ‘ப்ராவிடண்ட் ஃபன்ட்’ பாக்கிப் பணம், ‘கிராச்சுவிட்டி; கம்முயுடேஷன்’ பணம், எல்லாத்தியும் வச்சுண்டு மொத்தமாகவே கொடுத்திடலாம். நாம ரெண்டு பேருதானே, சாப்பிடறத்துக்கு ‘பென்ஷன் பணம் போறும்…”

“ஒரு நாட்டுக்கு நிதி மந்திரியா இருக்க வேண்டியவ நீ. இந்த மாதிரி ஒரு ‘ஹிம்பில்’ ‘ஹவுஸ் – வொய்ஃபா’ இருக்கிறது, நம்ம நாட்டில் திறமையெல்லாம் எப்படி விரயமாகறதுங்கறதுக்கு ஓர் உதாரணம்.”

“இந்த மாதிரி கேலிப் பேச்சு பேசற சாமர்த்தியத்தை காரியத்துலே காட்டுங்கோ. மொதல்லே கும்பகோணம் போய் வீட்டை விக்கிற வழியைப் பாருங்கோ …”

“என்ன ஸார் நின்னுகிட்டிருக்கீங்க, வண்டி வேணுமா ஸார், எங்கே போகணும்?”

சபேசனின் சிந்தனையை கலைத்தான் வண்டிக்காரன்.

வண்டியிலோ பஸ்ஸிலோ அவசரமாகப் போக வேண்டியது என்ன அவசியம்? மெதுவாகவே நடந்து போய் விடலாமென்று அவருக்குத் தோன்றிற்று. சங்கரய்யர் இன்னும் கொஞ்சம் அதிக நேரப் சந்தோஷமாக இருந்து விட்டு போகட்டுமே!

“எங்கே ஸார் போவணும்?” “வண்டி வேணாம்… பக்கந்தான்… நடந்து போயிடுவேன்.” தாம் செய்வது நியாயந்தானா

ஒரு விதமான சௌகர்யத்துடன் முப்பது வருஷங்களாக ஒரே வீட்டில் ஐம்பது ரூபாய் குடக்கூலி கொடுத்துக் கொண்டு நிம்மதியாக இருந்து வரும் எண்பத்தெட்டு வயதுக்கிழவரை திடீரென்று ‘வேறு வீடு பார்த்துக் கொண்டு போங்கள்’ என்று எப்படிச் சொல்வது? ஐம்பது ரூபாய்க்குக் கிடைக்கும் வீட்டுக்கேற்ப, இந்த வயதில், அவரால் அனுசரித்துப் போவதென்பது சாத்தியந்தானா?

பார்வதி அவருடைய சிநேகிதிகளிடம், சபேசனின் தயக்கத்தை பற்றிச் சொன்ன போது, அவர்கள் சொன்னதும் இதுதான். ‘வாட் நான்ஸென்ஸ்? அது உங்க வீடு. முப்பது வருஷமா குடி இருந்தா என்ன? அம்பது வருஷமா குடியிருந்தா என்ன? இப்போ உங்களுக்குப் பணம் தேவையாயிருக்கு. அம்பது ரூபாய்க்கு எந்த வீடு கிடைக்கிறதோ, அங்கே அவர் போய்த்தான் ஆகணும்… உங்க தயக்கம் புரியவேயில்லை … இது இராமாயண காலமில்லே . அப்பா சொன்னதையெல்லாம் அப்படியே கேட்டுத்தான் ஆகணும்ணு…. ப்ளீஸ் பி பிராக்டிகல், சபேசன்….’

“அப்பா சொன்னபடி கேக்கணுங்கறதுக்காக மட்டுமில்லே. வயசான இந்தக் கிழத் தம்பதிகிட்டே ‘நான் வீட்டை விக்கப் போறேன். காலி பண்ணுங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்?’ மனுஷத்தன்மைக்கு அர்த்தமே கிடையாதா?”

‘இது மனுஷத்தன்மை இல்லே. பைத்தியக்காரத்தனம். டெல்லியிலே ஹவுஸிங் கோவாப்ரேடிவ் ஸொஸைட்டி பாதிக்கு மேலே ‘ஃப்ராட்’. இது நல்ல ஸொஸைட்டி. மெம்பர்ஷிப் கிடைச்சிருக்கு. இப்போ பணம் கட்டலேன்னா அப்புறம்… அதுக்குமேலே என்ன சொல்றதுக்கிருக்கு? வலிய வந்த ஸ்ரீதேவியை விரட்டின கதைதான்.’

இப்படி எல்லாருமாகச் சேர்ந்து பேசி அவரை கும்பகோணத் துக்கு விரட்டிவிட்டார்கள்.

புறப்படும்போது பார்வதி சொன்னாள்: “நீங்க அவாத்திலே போய் தங்க வேணாம். ஒரு ஹோட்டல்லே தங்கிண்டு, அவாத்துக்குப் போங்கோ. விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கோ, இத்தனை வருஷமா இருந்தவா, நம்ம நிலைமையையும் புரிஞ்சிக்காமலா இருப்பா? அம்பது ரூபாய்க்கு கும்பகோணத்திலே வீடு கிடைக்கிறது ஒண்ணும் கஷ்டமில்லே, ஆனா இவ்வளவு செளகரியமிருக்காது. வாஸ்தவந்தான். அதுக்காக நாம என்ன பண்ணமுடியும்?”

முதலில் அவர் ஒரு ஹோட்டலில் தங்குவதென்றுதான் தீர்மானித்தார். அப்பா, அம்மா இருந்தபோது, வருடந்தோறும் கும்பகோணம் வந்து, அவர்களுடன் சுபாவமாகப் பழகிவிட்டு, இப்பொழுது ஹோட்டலில் தங்கினால் நன்றாக இருக்காதென்று அவருக்குத் தோன்றிற்று. சகஜமாக அவருடன் தங்கிவிட்டு தம் பிரச்சனையை அவரிடம் சொல்லி, என்னசெய்வதென்று அவரையே யோசனை கேட்கலாம். அவருக்கு ஐம்பது ரூபாய்க்கு இவ்வளவு சௌகரியமாக வீடு கிடைக்காது, உண்மைதான். அனால் அவரால் ஐம்பது ரூபாய்க்குமேல் கொடுக்கவும் முடியாது.

இதற்காகத் தாமே அவருக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்து, வாடகை எண்பதாயிருந்தால் கூடுதலான அந்த முப்பது ரூபாயை தாமே கொடுத்துவிட்டால் என்ன? என்றும் நினைத்தார். ஆனால் அது சங்கரய்யருக்குத் தெரியக்கூடாது. இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ள அவர்சுய மரியாதை குறுக்கே நிற்கும். மானஸ்தர். நிச்சயமாக ஒப்புக் கொள்ளமாட்டார். அந்த வீட்டுக்காரருடன் தனி ஏற்பாடாகத் தாம் செய்து கொள்ள வேண்டும்; ஆனால் தில்லியிலிருக்கிற ஒருவர் மாதம் முப்பது ரூபாய் அனுப்புவாரென்று வீட்டுக்காரர் நம்புவாரா எனப் பலவாறாக எண்ணிக் குழம்பினார், சபேசன்.

தவிர, போதாக்குறைக்கு அவர் மாதம் முப்பது ரூபாய் அனுப்புகிறாரென்று பார்வதிக்குத் தெரிந்துவிட்டால் போதும், அவளும் சும்மா விடமாட்டாள். அந்த ஏற்பாட்டுக்கு சங்கரய்யரும் உடன்பாடு என்று அவள் தவறாக நினைத்துக் கொண்டால், இது சங்கரய்யருக்கு நாம் இழைக்கும் கொடுமையாகிவிடும்.

சபேசன் சன்னதித் தெரு சென்று வீட்டை அடைந்த போது, வாசல் ஹாலில் சாய்வு நாற்காலியில் சங்கரய்யர் படுத்திருந்தார்.

கண்கள் மூடியிருந்தன.

தியானமா, தூக்கமாவென்று தெரியவில்லை. சங்கரய்யர் உடம்பைப் பார்த்த போதுதான், பார்வதி சொன்னது எவ்வளவு குரூரமானதென்று சபேசனால் உணர முடிந்தது.

உடம்பு நாராய்க் கிடந்தது. கண்கள் குழிவடைந்திருக்கின்றன. உயிர் ஏதோ பழக்க வாசனையினால், அந்தச் சரீரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது போல் சபேசனுக்குத் தோன்றிற்று.

இவரையா போய் ‘வேறு வீடு பார்த்துக் கொண்டு போங்கள்’ என்ற சொல்வது? அப்படியே திரும்பிப் போய் விடலாமா என்று சபேசனுக்குத் தோன்றிற்று.

‘யாரு?’ என்று உள்ளிருந்து குரல் கேட்டது. சங்கரய்யர் கண்களைத் திறந்தார். கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார்.

“யாரு, என்ன வேணும்?” அவரால் நம்மை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பார்வை அவ்வளவு மோசமாக இருக்க வேண்டும்!

“மன்னிச்சுக்கோங்க, தவறுதலா நுழைஞ்சுட்டேன். பக்கத்தாத்துக்குப் போணும்” என்று கூறிக்கொண்டே சபேசன் வெளியே போக முற்படுவதற்குள் பெண் குரல் கேட்டது. ‘தப்பு இல்லே, ‘ரைட்’தான். யாரு, சபேசன்தானே! உங்காதே உனக்கு மறந்து போச்சா நன்னாயிருக்கு போ! டில்லியிலேந்து சபேசன்..”

உருவத்தைக்கூட காணாமல், தன் குரலை மட்டுமே கேட்டுத் தம்மை அடையாளங் கண்டு கொண்ட மாமியின் திறமையை வியந்தபடியே சபேசன் திரும்பினார். அங்கே…

நீலாம்பிகை மாமி! அதே புன்னகை, குரலில் கனிவு! உடம்பின் தளர்ச்சி மனத்தை எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை .

“சபேசனா, வாப்பா. சங்கரய்யர் மெதுவாகக் குரல் கொடுத்தார். சபேசன் உள்ளே நுழைந்து பெஞ்சில் உட்கார்ந்தார்.

“கொஞ்சம் காது கேக்கலே, இரைஞ்சு பேசு” என்றார் சங்கரய்யர்.

“பேசவேயில்லை, இரைஞ்சு பேசுன்னா?” என்று கேட்டு விட்டு மாமி குழந்தை போல் சிரித்தாள்.

“ரொம்பத் தளர்ந்து போயிட்டேளே, மாமா” என்றார் சபேசன்.

“ஆமாம். வயது ஆகலியா. சித்ரகுப்தன் ஃபைலைத் தொலைச்சுட்டான் போலிருக்கு. எனக்கு போனஸ்” என்று கூறிவிட்டு சிரித்தார் சங்கரய்யர்.

“இங்கேயிருந்து சுவாமிமலைக்கு புறப்பட்டுப் போற மாதிரிதான் வந்திருக்கான். ஒரு சின்ன சூட்கேஸ் பையோட” என்று சொல்லி விட்டு சிரித்தாள் மாமி.

“வெந்நீர் வேணுமா, சபேசா?” என்றார் சங்கரய்யர். “இப்போ, கிணத்துத் தண்ணி போறும்.”

சபேசன் குளித்துவிட்டு மாற்றுடை தரித்துக் கொண்டு வரும் போது, சமையலறையிலிருந்து வற்றல் குழும்பு மணம் வந்தது.

மாமி தமக்காக குழம்பு பண்ணிக்கொண்டிருக்க வேண்டு மென்று அவருக்குத் தோன்றிற்று.

அவர் சமையலறையை நோக்கிச் சென்றார்.

“எனக்காக ஏதாவது ஸ்பெஷலாப் பண்றேளா மாமி?”

“ஸ்பெஷலா ஒண்ணுமில்லே. உனக்கு வத்தக் குழம்புனா ரொம்பப் பிடிக்குமேன்னு பண்ணினேன். எங்களுக்கு வயசாயிடுச்சு, மாமாவுக்கு எதுவும் ஒத்துக்கலே… குழும்பு பண்ணறதே கிடையாது. ரஸந்தான்.”

“உங்க வத்தக் குழம்புன்னா, ஸ்பெஷலாச்சே மாமி. எங்கம்மாவே சொல்லுவாளே, உங்க மாதிரி வத்தக் குழம்பு பண்ண முடியாதுன்னு .”

“பார்வதி எப்படி இருக்கா?”

“உங்களை ரொம்ப விசாரிச்சா.”

“ஷூம். குழந்தை எங்கே இருக்கா?”

“பம்பாய்…”

“குளிச்சிண்டு இருக்காளா?”

“அப்படித்தான் தெரியறது, இந்தக் காலத்திலே கல்யாண மானாலும், வீடு கட்டிண்டப்புறந்தானே, குழந்தையைப் பெத்துக்கறா…”

“புத்திசாலிகள், நம்ம மாதிரி இல்லே … சரி, மாமாவைக் கூப்பிடு, சாப்பிடலாம்…”

சபேசன் வெளியில் வந்தார். “குளிச்சிட்டியா?” “குளிச்சாச்சு… சாப்பிடலாம். வாங்கோ ”

“கொஞ்சம் கையைக் கொடு… ஆறுமாசமா இப்படித் தூக்கித்தான் விட வேண்டியிருக்கு, அவளுக்கும் வயசாயிடுத்து, யார் முன்னாலியோ தெரியலே… அப்பாதூக்கத்திலேயே போயிட்டார்னு எழுதியிருந்தே…. கொடுத்து வச்சவர். நல்லவாளுக்குத்தான் அப்படிப்பட்ட சாவு வரும்… நான் நல்லவனோ கெட்டவனோ, பகவானுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரிஞ்சு நான் யாருக்கும் தீங்கு பண்ண லே …”

சமையலறைக்குப் போய் இரண்டுபேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

முன்னால் இது தம் வீட்டுச் சமையலறையாக இருந்ததென்பது சபேசன் நினைவுக்கு வந்தது. அப்பொழுது இந்த அறையை ஒட்டியிருந்த அளவுதான் சங்கரய்யர் வீட்டுச் சமையலறையாக இருந்தது. அதுவும் பெரிய அறைகள்.

மாடியில் இரண்டு அறைகள், கீழே நான்கு அறைகள், பின்னால் கிணற்றங்கரை, தோட்டம், அப்பாவும் அம்மாவுமிருந்தபோது சங்கரய்யர் கீழே இரண்டு அறைகளை வைத்திருந்தார். இதைத் தவிர சமையலறை. மாடியில் ஓர் அறை. அங்குதான் அவரும் அவர் மனைவியும் படுத்துக் கொள்வது வழக்கம்.

அப்பா டில்லிக்கு வந்தபோது வீடு முழுவதையுமே அவரிடம் ஒப்படைத்து விட்டு சொன்னார்: ”அதே வாடகை கொடுத்தால் போறும்; வீடு சுத்தமா இருக்கணும், நான் எப்போ வேணுமானாலும் திரும்பி வருவேன்.”

“உங்க போர்ஷனை பூட்டிண்டு போங்களேன் மாமா.”

“ஏன், நான் திரும்பி வரச்சே, வீடு தூசும்தும்புமா இருக்கணுமா? ஏதோ நாம இருக்க வரைக்கும் சுத்தமான வீட்டிலே இருக்கணும். நான் போறபோது இந்த வீடு என்ன என்னோட வரப்போறதா? ஏன் இந்த உடம்பே வராதே! அதுவும் வாடகை வீடுதானே!”

பார்வதிக்கு இதுவும் வருத்தத்தை தந்த விஷயம். ‘வீடு முழுவதும் வச்சிண்டிருக்கிறார்; இப்பவும் அம்பது ரூபாதானா?”

“இது அப்பா ஏற்பாடு”

“ஒரு பைத்தியக்கார அப்பாவுக்கேத்த பைத்தியக்கார பிள்ளை நீங்க !”

வற்றல் குழம்பு வாயில் மணத்தது.

“ரொம்ப நாளாச்சு இவ்வளவு அருமையான வற்றக் குழம்பு சாப்பிட்டு” என்றார் சபேசன்.

“நீ ரிடையராக இன்னும் எத்தனை வருஷமிருக்கு” என்றார் மாமி.

“அம்பத்தெட்டாயிடுத்தா? இப்போ பார்த்த மாதிரி இருக்கு. நீயும் பார்வதியும் புது வேஷ்டி புடவையிலே, கல்யாணப் பந்தல்லே உட்கார்ந்திருந்தது… நீ இப்பொ ரிடையராகப் போறே… முப்பது வருஷம் ஒரு நிமிஷமா ஓடிப்போச்சு… ரிடையராகி இங்கே வந்திடு…. எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு ‘ரூம்’ போறும். நீயும் பார்வதியை அழைச்சிட்டு வந்துட்டியானா எங்களுக்கு நிம்மதியாயிருக்கும்.”

“என்ன நிம்மதி?”

“எங்க காரியத்தை யார் பண்ணுவா? எங்களுக்கு யாரும் கிடையாதே…”

“நீங்க பாட்டிலே பேசிண்டே போறேளே, டில்லிலேருந்த வாளுக்கு இங்கே வந்து இருக்கப் பிடிக்குமா?” என்றாள் மாமி.

“அதெப்படி கும்கோணம் அவனுக்குப் பிடிக்காமெப் போயிடும்? பொறந்து, வளர்ந்த ஊரு, படிச்ச ஊர்… காந்தி பார்க்லே மரம், மரமா சுத்தி வெளையாடியிருப்பான். காவேரியிலே நீந்தியிருப்பான். ஏன், சபேசா, உனக்கு நீஞ்சத் தெரியுமா?”

“தெரியாது.”

“கும் கோணத்திலே பொறந்து வளர்ந்தும் உனக்கு நீஞ்சத் தெரியாதா?”

“காந்தி பார்க்லே மரம், மரமா சுத்தி வெளையாடினது மில்லே …..”

சாமர்த்தியமாக கும்பகோணத்தினின்றும் தம்மை அந்நியப் படுத்திக் கொண்டுவிட்டதாக அவருக்குப் பட்டது.

“உன்னை நான் இருபத்தெட்டு வயசிலே பார்த்ததுதான். உன் சின்ன வயசு அநுபவங்களப்பத்தி எனக்குத் தெரியாது. ஆனா நான் கும்பகோணம் வந்து ‘செட்டில்’ ஆனதுக்குக் காரணம், இங்கே பொறந்து வளர்ந்தேங்கிறதினாலேதான். உங்கப்பாவுக்கு இல்லாத அதிர்ஷ்டம் எனக்கிருக்கு. அவருக்கு காவேரிக்கரைநேரலே, எனக்கு நேரப்போறது…”

“காவேரிக் கரை இருக்கலாம், இந்த வீட்டிலே இல்லே” என்றாள் மாமி.

சபேசன் மாமியை ஏறிட்டு நோக்கினார். மாமி வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி சொல்றே?” என்றார் சங்கரய்யர்.

“சரி சாப்பிட்டு எழுந்திருங்கோ , நான் சாப்பிடணும், பசிக்கிறது.

நீலாமாமி ஆழமானவள்தான்! முதலில் தமக்குரிடையராக ஆறு மாதம்தானிருக்கிறது என்று சொன்னாள். இப்பொழுது ‘இந்த வீட்டிலே இல்லே’ என்கிறாள்.

அப்படியானால்… எஸ்… அப்படியானால்… அதுதான்… பார்வதி நேரே மாமிக்குக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். மாமாவுக்கு இது தெரியாது.

சங்கரய்யர் கைகளை அலம்பிக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டார். சபேசன் ‘பெஞ்சில்’ உட்கார்ந்தார்.

சங்கரய்யர், ‘என்னடி சொல்றே?’ என்று கேட்டுவிட்டு அதைத் தொடராமலிருந்தது, மாமி சொன்னதின் முழு அர்த்தமும் அவர் மனத்தில் உறைக்கவில்லை என்று தோன்றியது. சற்று நேர அமைதியிலிருந்து சங்கரய்யர் தூங்கிவிட்டார் என்பது தெரிந்தது சபேசனுக்கு.

மாமிக்கு கடிதம் எழுதப் போவதாக பார்வதி சொன்னாள். ஆனால் அவள் உண்மையிலேயே எழுதுவாளென்று அவர் எதிர்பார்க்கவில்லை.

ஒருவேளை, கும்பகோணம் போனதும் சபேசனின் மனம் மாறி அவர் திரும்பிவிட்டால் என்ன செய்வதென்ற காரணத்துக்காக அவள் நீலா மாமிக்கு கடிதம் எழுதியிருக்கக்கூடும்.

மாமி சாப்பிட்டு விட்டு ‘பெஞ்சில்’ அவரருகில் வந்து உட்கார்ந்தாள்.

“பார்வதிகிட்டேயிருந்து ‘லெட்டர்’ ஏதாச்சும் வந்ததா, மாமி” என்று கேட்டார் சபேசன்.

“ஆமாம், அவள் பேரிலே நான் தப்பு சொல்லமாட்டேன். இந்த வீட்டை எழுபதினாயிரத்துக்கு கேட்டான்னா கொடுத்துடு… உனக்கு வீடு வேணாமா, டெல்லியிலே?”

“நீங்க எங்கே போவேள்?”

“அதைப்பத்தி கவலைப்படாதே. நாங்க பார்த்துக்கறோம். ரொம்ப நாள் தங்கின விருந்தாள் மாதிரி நாங்க இருக்கோம், இது அவனுக்குத் தெரியாமலா போயிடும்?”

“எவனுக்கு?”

“அவனுக்கு” என்று சொல்லிக்கொண்டே கோயில் பக்கம் சுட்டிக்காட்டினாள் மாமி.

“நான் சொல்றதைக் கேளுங்கோ- நீங்க இருக்கறவரைக்கும் இருங்கோ. நான் பணத்துக்கு வேறே ஏற்பாடு பண்ணிக்கிறேன்….”

“இந்த அசட்டுத்தனமெல்லாம் வேணாம். பார்வதி சொல்றது எனக்குப் புரியறது. வீட்டை விற்கிறபடி வித்துக்கோ …”

“மாமா ‘காவேரிக் கரை, இந்த வீடு ‘ன்னார், அப்படியே அவர் விருப்பப்படியே நேரணும்… அதுக்குத் தடையா நான் நிற்க மாட்டேன்.”

“என்ன சொல்லப்போறே, வீடு வாங்க வரப்போறவன் கிட்டே ?”

“இப்போ விற்கலே’ன்னு சொல்லப் போறேன்…”

“இந்த வீட்டை வாங்கப் போறோனே, அவனுக்கு இந்தத் தெருவிலே எத்தனை வீடு சொந்தம் தெரியுமா, உனக்கு?”

“தெரியாது.”

“ஒரு லட்சம். வீட்டுக்கு மதிப்பில்லே. இடத்துக்கு! கும்ப கோணத்துக்கு நடு மத்திலேயிருக்கு இந்த இடம்.”

“அப்போ ஒரு இலட்ச ரூபாய் கேக்கச் சொல்றேளா?”

“நீ கேக்கவேணாம். அவன் நேத்திக்கு இங்கே வந்தான். மாமா இப்போ மாதிரி தூங்கிண்டிருந்தார். அவருக்கு இப்போல்லாம் பாதி விழிப்பு. பாதி தூக்கம். அந்த மாதிரி ஒரு சொப்பனாஸ்தை….! வெயிட்டிங் ரூம்லே உட்கார்ந்திருக்கார்… இன்னும் வண்டி வரல்லே. நாலு நாள் முன்னாலே பார்வதிகிட்டேயிருந்து ‘லெட்டர்’ வந்தது; யோசிச்சேன். அவன் நேற்றைக்கு வந்தவுடனே, ‘சபேசன் இங்கே வந்ததும் எங்களைப் பாத்தா வீட்டை விக்காமே போயிடுவான்… அவன் வீட்டை விக்கணும்னா ஒரே வழியிருக்கு ‘ ன்னேன். ‘என்ன வழி?’ என்றான். ‘இந்த வீட்டோட மதிப்பு இன்னி தேதிக்கு ஒரு இலட்ச ரூபா; முப்பதினாயிரத்தை என்கிட்டே கொடு, காலி பண்றேன்னேன். ‘சரி’ன்னுட்டான். இப்போ சொல்றே நீ, உன் லட்சியமும் புண்ணாக்கும்?”

“நெஜமாவா சொல்றேள்!”

“நீயே போய் அந்த வீட்டுக்காரனைக் கேட்டுக்கோ…”

“மாமி, இதை என்னாலே நம்பவே முடியலே. நீங்க சொல்றது வாஸ்தவம்தான். லட்சியங்கிறது வெறும் புண்ணாக்குத்தான். நான் இப்போவே போய் வீட்டுக்காரனைப் பாத்திட்டு வர்றேன்.”

“சபேசா! வீட்டை வாங்கறவன் யாருன்னு இன்னும் கேக்கலியே நீ! ஒனக்கு நன்னாத் தெரிஞ்சவன், ஒன்னோட படிச்சவன் ஹமீத் சுல்தான்தான். ஞாபகம் இருக்க?”

சபேசன் ஹமீத் சுல்தான் வீட்டுக்குச் சென்றார்.

“வாங்க, வாங்க… எப்போ வந்தீங்க” என்று வரவேற்றார் ஹமீத்.

“இன்னிக் காலையிலே… ஆமா, நான் உங்களை ஒண்ணு கேக்கணும்…”

“கேளுங்க…”

“நீங்க சங்கரய்யர் வீட்டு அம்மாவுக்கு முப்பதினாயிரம் தர்றதா சொன்னீங்களா?”

ஹமீத் பதில் பேசவில்லை .

“சொல்லுங்க…”

“ஆ… மா… ம்…”

“லஞ்சமா?”

ஹமீத் பேசாமலிருந்தார்.

“சரி வீட்டை எப்போ சாஸனம் செய்யலாம்?”

“எப்போ வேணுமானாலும் செய்யலாம்… நாளைக்கு…?”

“இன்னிக்கேகூட செய்யலாம்…”

“என்னங்க, அவ்வளவு அவசரம்?”

“நான் இந்த உலகத்துக்கு லாயக்கேயில்லாத பைத்தியக்காரன்னு தெரியுது.”

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“எங்கப்பாகாலத்திலிருந்து இருக்கிறவங்களை வீட்டை விட்டு போகச் சொல்லக்கூடாதுன்னு வீட்டை விக்காம இருந்தேன்! மக கலியாணத்துக்கு ‘பிராவிடன்ட்… பண்ட்’ பணத்தை எடுத்தேன். இப்போ அந்த அம்மா உங்ககிட்டேயிருந்து முப்பதினாயிரம் வாங்கிட்டு… சேசே! யாரை நம்பறது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியலே. இப்போ என் மனைவி என் சிநேகிதர்கள் எல்லாருடைய பார்வையிலும் நான் ஒரு முட்டாள்….”

ஹமீத் சுல்தான் எழுந்து அவர் தோளைத் தொட்டார்.

“நீங்க முட்டாளில்லே…. அந்த அம்மாவையும் தவறா நினைக்காதீங்க. அந்த அம்மா ஒரு தெய்வம்…”

“என்ன சொல்றீங்க…?”

“உங்க மனைவிகிட்டேயிருந்து ‘லெட்டர்’ வந்தது. அவங்க வீட்டை வித்திடணும்கிற முடிவோட இருக்காங்க. ஆனா நீங்க ஒருவேளை இங்கே வந்து பார்த்து அவங்க மேலே அனுதாபப்பட்டு வீட்டை விக்காம டெல்லிக்குத் திரும்படலாம்னு அவங்க பயந்திருக்காங்க போலிருக்குது… அதை அந்த அம்மா என்கிட்டே வந்து சொல்லி, அவங்கதான் முப்பதினாயிர ரூபா என்கிட்டே வாங்கிட்டதா உங்கிட்டே சொல்லச் சொன்னாங்க… இதைக் கேட்டா நீங்க இப்படித்தான் நடந்துப்பீங்கன்னு அவங்க நெனைச்சாங்க… அப்படியே நடந்துகிட்டீங்க…”

“அப்படின்னா அவங்க பணம் வாங்கலியா?”

“ஒரு சல்லிக்காசு வாங்கலே. அல்லா மேலே ஆணையா சொல்றேன். இந்த மாதிரி நல்லவங்களை ‘வீட்டை விட்டு போங்க’ன்னு நான் சொல்லுவேன்னு நீங்க எதிர் பார்க்கறீங்களா? அந்தப் பயமே உங்களுக்கு வேண்டாம், நிம்மதியாக இருங்க. அவங்களுக்கு இன்னும் தெரியாது. அவங்க இருக்கிறவரைக்கும் இருக்கட்டும். உங்களுக்கு இப்போ பணம் வேணும், அதான் முக்கியம்… அதையும் நான் தடுக்கலே. உங்க விருப்பப்படி நாளைக்கு முடிச்சிடுவோம்… இன்ஷா அல்லா .”

– நவ 89 (1989 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது)

Print Friendly, PDF & Email
இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *