அம்மாவின் அடுக்குப்பெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,707 
 
 

“டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு சந்தோசம். அம்மா இன்றைக்கும் அண்ணாவை வேலை வாங்கப்போகிறா.

“ஏனம்மா, உவன் சொத்தி வாயனுக்கு என்னவாம், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலைதானே சந்தை. பின்னேரம் வீட்டை விழுங்க வரக்கை சொன்ன சாமானை வாங்கிக்கொண்டு வாறதுதானே?” அண்ணா இதைச் சொன்ன கையோடு தேடி வந்து அம்மாவுக்குத் தெரியாமல் தனது மண்டையில் ஒரு குட்டு குட்டுவான் என்ற அனுபவ ஞானத்தால் அப்பு ஓடிப்போய் அடுப்படிக்குள்ளிருந்த அம்மாவின் கண்ணில் தெரியும்படியாக நின்றுகொண்டான்.

“அவன் சின்னப்பெடியன், பாத்து வாங்கமாட்டான். உனக்குத்தான் தேங்காய், மரக்கறி வாங்கத் தெரியும்.” அம்மா இப்படிச் சொன்னது அண்ணாவுக்கு மேடையில் கூப்பிட்டுக் கொடுத்த பரிசு போன்றது என்பது அப்புவுக்கு நன்றாய்த் தெரியும்.

“இரவு இட்டலிக்கு சாம்பார் செய்யப்போறன், அதுதான் நல்லதாய்த் தேங்காயும் மரக்கறியும் தெரிஞ்சு எடுக்கவேணும்.” என்று அம்மா மேலும் சொன்னா. அண்ணாவுக்கு இப்போதே கடைவாயெல்லாம் எச்சில் ஒழுகியிருக்கும். வீட்டில் எப்போதாவதுதான் அம்மா இட்டலி அவிப்பா. அப்படி அவிக்கிறபோதெல்லாம் எனக்கும் அக்காமாருக்கும் வைக்காமல் அதில் முக்கால்வாசியைச் சாப்பிட்டுவிடுவான் அண்ணா. அப்ப நிச்சயம் கடைக்குப்போக ‘ஓம்’ போடுவான். அப்பு மகிழ்ச்சியால் பூரித்துப்போகும் அண்ணாவின் முகத்தைத் தன் மனதிலிருத்திச் சிரித்துக்கொண்டான்.

“ஓமம்மா, வரக்கை வாங்கிக்கொண்டுவரப் பாக்கிறன். எனக்கும் பின்னேரம் வகுப்பு இருக்குமோ தெரியாது, எண்டாலும் பாக்கிறன். நான் வரப் பிந்தினால் உவன் அப்புவைத்தான் கடைக்குப் போகச் சொல்லவேணும்.” எனக்குத் தெரியும் அண்ணா நிச்சயம் கடைக்கு நேரத்தோடை போய் அம்மா கேட்டதை வாங்கிக்கொண்டு வருவான். என்னை ஒருக்கால் வறுத்தெடுக்காட்டிலில் அண்ணாவுக்குப் பத்தியப்படாதென்று அம்மா சும்மாவே சொல்கிறவ? அப்பு தனக்குள் சொல்லிக்கொண்டான்.

இனித்தான் அதிசயம் நடக்கவிருக்கிறது. அம்மா தன் அடுக்குப்பெட்டிக்குள்ளிருந்து காசு எடுத்து அண்ணாவிடம் கொடுக்கப்போறா. அப்பு மனத் தவிப்போடு அறை வாசலில் நின்றுகொண்டு அடுப்படிக்குள் எட்டிப்பார்த்தான்.

அம்மா தன் அடுக்குப்பெட்டிக்குள் எப்போ கையை வைத்தாலும் கையோடு காசை எடுக்கிறாவே. இதுவென்ன அதிசயம்! அம்மா கையை வைக்கிற நேரமாய்ப் பார்த்து எப்படி ஒவ்வொரு முறையும் அந்தப் பெட்டிக்குள் காசு விளைகிறது? ஒரு நாளைக்கு நான் அம்மாவுக்குத் தெரியாமல் ஒவ்வொரு பெட்டியையும் துழாவிப் பார்க்கவேண்டும். அவ கண்டால் குறை சொல்ல மாட்டாதானே. என்றாலும் அது சரியில்லை. அம்மாவுக்குத் தெரியாமல் இந்தமாதிரிக் காரியம் எதையும் செய்யக்கூடாது. அவவிடமே ரகசியத்தைக் கேட்டுப்பார்க்கலாமோ? சிச்சீ, அதுவும் வேண்டாம். அம்மாவிடம் கேட்டு உண்மையை அறிந்துகொண்டால் இப்போது இருக்கிற ஆர்வமும் சந்தோசமும் அடியோடு போய்விடும். அப்போ அம்மாவின் அடுக்குப்பெட்டிக்குள் காசு எப்படி வருகிறது என்பதை அறிந்துகொள்வது? அவ முன்கூட்டியே அதற்குள் காசு வைப்பதை நான் ஒரு நாளும் காணவில்லையே, எடுக்கிறதைத்தானே கண்டிருக்கிறேன். அக்காமாரைக் கேட்போமா? வேண்டாம், அது மிச்சம் பொல்லாத காரியம். அவகள் அடுக்குப்பெட்டியின் ரகசியத்தை அறிந்துகொண்டாலோ பிறகு அதுக்கும் உரிமை கொண்டாட வந்திடுவாகள். பெண் பிள்ளைகள் எல்லாரும் அப்பிடித்தானென்று ஊர்ப் பெண்களே கதைக்கிறவையள். அப்பா அம்மாவிடம் அப்ப அப்ப கொடுக்கிற காசை அவ அடுக்குப்பெட்டிக்குள் வைத்துப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தருகிறாவோ? இல்லை, அப்பிடியும் இருக்காது. அப்பா எப்பவும் எங்களுக்கு முன்னால்தானே மடிக்குள்ளிருந்து காசை எடுத்துச் செலவழிக்கிறவர். இந்தமாதிரிச் சில்லறைச் செலவுகளுக்கு அம்மாதான் அடுக்குப்பெட்டிக்குள்ளிருந்து நினைத்த நேரமெல்லாம் காசு எடுக்கிறா. அந்த நேரமாய்ப்பார்த்து பெட்டிக்குள்ளும் எங்கேயோவிருந்து காசு வந்துவிடும். அதுதான் பெரிய அதிசயம்.

அம்மா போன வருசம் நாகர்கோயில் கப்பல் திருவிழாவில் வாங்கின அடுக்குப்பெட்டியாம் அது. பனம் குருத்தோலையில் நெருக்கமாய் இழைத்து உள்ளேயும் வெளியேயும் கையைக் கீறாதமாதிரி மென்மையாய் பொத்தப்பட்டிருக்கும். அந்த அடுக்கில் எல்லாமாய் ஆறு பெட்டிகள். அடியில் இருக்கிற பெட்டிதான் எல்லாவற்றிலும் பெரியது. அதற்கு மேலேயுள்ளது அதிலும் கொஞ்சம் சிறிசு. இப்பிடி மேலேயிருக்கிற ஒவ்வொரு பெட்டியும் கீழை இருக்கிறதிலும் பார்க்கச் சிறுத்துச் சிறுத்து இருக்கிறதாலை ஒன்றுக்குமேல் ஒன்று சொருகி அடுக்கிவைக்கச் சுலபமாகிவிடும். இதனால் கீழேயிருக்கிற ஒவ்வொரு பெட்டியும் ஒவ்வொரு தனி அறை போல மூடப்பட்டிருக்கும். ஆகமேலே திறந்தபடியிருக்கிற ஆகச்சின்னப் பெட்டிக்குள்ளேதான் அம்மாவின் தலைக்குக் குத்தும் கொய்யாப்பின், சட்டைக்குக் குத்தும் சேற்றிப்பின் என்று அவவின் பத்துச் சதத்துக்கும் இருபது சதத்துக்கும் வாங்கும் குட்டி அழகு சாதனங்கள் ஒண்டடி மண்டடியாக் கிடக்கும். இதனால் அம்மாவின் இரண்டு மூன்று தலை மயிர்களும் அங்கே தஞ்சமடைந்திருக்கும். அதற்குக் கீழேயிருக்கிற ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் என்னென்ன திரவியம் இருக்கிறதென்றதுதான் பெரிய மர்மம். அம்மா அதை வாங்கியபோது இருந்ததிலும் பார்க்க இப்போது அதன் ஓலை மங்கிப்போய்க்கிடந்தாலும் பெட்டி முழுவதும் கொஞ்சமும் பிய்ந்துபோகாமல் நறுவீசாக இருக்கும். அம்மா அதை எடுக்கிற ஒவ்வொரு முறையும் நானும் பக்கத்திலை நின்று பார்ப்பேன். ஆனால் அதை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க மனம் வருவதில்லை. எங்கள் வீட்டிலிருக்கிற அத்தனை சாமானிலும் அந்தப் அடுக்குப்பெட்டி மட்டும்தான் அப்படியொரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெறுமதியான சாமான். இந்தப் பெட்டி என்னுடன் இருந்தால் நான் ஒருபோதும் காசுக்குக் கஷ்டப்படப்போவதில்லை.

2

சந்தைக்குப் போகும் பிரதான வீதியில் அப்பா சொந்தமாக ஒரு சின்னக் கடையை வைத்திருக்கிறார். புகையிலை, கயிறு வகைகள், வாளிகள், அலுமினிய பாத்திரங்கள், சாமிப்படங்கள் என்று ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத சாமான்கள் அவரின் கடை முட்டப் பரவப்பட்டிருக்கும். எல்லாம் சீமெந்து நிலத்தில்தான். அவற்றை வைக்க அலுமாரியோ பெட்டியோ என்று எதுவும் கிடையாது. இடியப்பத் தட்டுகளை மட்டும் கம்பியில் குத்தி சுவரிலுள்ள ஆணியில் தொங்கவிட்டிருப்பார். ஆனால் அப்பா தெருவைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் மேசை மட்டும் பளிச்சென்று அழகாயிருக்கும். மேசையின்மேல் எப்போதும் அன்றைய தினசரிப் பத்திரிகைகள் விரித்தபடியும் ஒருசில அழகாக அடுக்கிவைத்தபடியும் இருக்கும்.

அப்பாவுடைய வயதையொத்த கூட்டாளிமார் வேளையோடு சந்தைக்கு வந்துவிடுவார்கள். அடுத்த றோட்டில் நகரசபை வாசிகசாலை இருக்கிறது. ஆனால் அங்கே போய்ப் பேப்பர் வாசிக்க இவர்களுக்கு ஏனோ ஒத்துவருவதில்லை. அப்பாவோடு அரசியலும் ஊர்ச் செய்திகளும் கதைக்கவும் கடையிலிருக்கிற பேப்பரைப் பார்க்கவும்தான் அங்கே வருகிறார்களோ?

“என்ன முத்தர் அண்ணை, தெரியுமோ சங்கதி? நேற்றுப் பெரியவர் செல்வநாயகம் பார்ளிமென்டிலை ஒரு சொல் மட்டும்தான் பேசினார், சிங்கள மெம்பர்மார் அத்தினைபேரும் வாயடைச்சுப்போட்டினமாம்.” மாசிலாமணி குஞ்சியன் சொன்னது என்னவென்று விளங்காவிட்டாலும் அவர் அப்பாவைச் சந்தோசப்படுத்தத்தான் அப்படிச் சொன்னாரென்று பக்கத்தில் நின்ற அப்புவுக்கு நன்றாய்த் தெரியும். அவர் மட்டுமல்ல ‘மாடு விடுகிற’ கனகசபை, விதானையார் மணியம், நொத்தாரிசு வேலும்மயிலும், பொன்னுத்துரைப் பத்தர், புறோக்கர் தங்கராசா என்று இப்படிப் பலர் அப்பாவின் கடையில் வாங்கிலிலும் துலாக் கயிற்றுச் சுற்றுகள்மீதும் இருந்துகொண்டு திறந்த பத்திரிகைக்குள் தலையை நுழைப்பதும் எடுப்பதுமாய் உலகத்து விஷயமெல்லாம் அளப்பார்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் கவனித்து அதேவேளை தனது கூட்டாளிமாருக்கும் அப்பா மறுமொழி சொல்லிக்கொண்டிருப்பார். அன்று வியாபாரம் வழக்கத்திலும் பார்க்கத் தடல்புடலாய் நடந்தால் எல்லாருக்கும் பீம விலாசிலிருந்து தேத்தண்ணி வாங்கிக்கொடுப்பார். அப்புவுக்கு வடை, பகோடா போன்ற கள்ளப் பணியாரங்களும் கிடைக்கும். இதனால் அப்பு பள்ளிக்கூட இடைவேளையின்போது அப்பாவின் கடைக்கு ஒருமுறை ஓடிப்போட்டு ஓடிவருவான். அப்பா அவனின் விருப்பத்துக்கு எதேனும் நட்டு நொடுக்கு வாங்கவும் சில்லறைகள் கொடுப்பதுண்டு.

அப்பா சில்லறை எடுப்பதற்கு மேசை லாச்சியைத் திறக்கிறபோதெல்லாம் அப்பு பக்கத்தில்போய் அவரின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றுகொள்வான். மூடி இல்லாதவொரு சுருட்டுப் பெட்டிக்குள் எப்போதும் சில்லறைக் காசுகள் குவிந்திருக்கும். தாள் காசுகளைக் கட்டாக அந்தப் பெட்டியின் கீழ் அடுக்கி வைத்திருப்பார். அப்பாவுக்கும் இந்தக் கடைக்கும் நல்ல ராசி போலிருக்கிறது. அதுதான் எப்போதும் மடி நிறையக் காசு வைத்துக்கொண்டு எங்கள் படிப்புக்கும் குடும்பத்துக்கும் தாராளமாகச் செலவழிக்கிறாரென்று அப்பு நினைத்துக்கொள்வான். அதோடை இவ்வளவு வசதியுள்ள அப்பா அம்மாவின் அடுக்குப்பெட்டியை திரும்பிப்பார்க்காமலிருந்ததில் ஆச்சரியம் இல்லை. இனி அக்காமார் என்ன நோக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டியதுதான்.

3

மூத்தக்கா மலர் பெரியபிள்ளையாகிக் கல்யாணத்துக்கும் தயாராகிவிட்டாள். அதுதான் காலமை எழும்பினதிலிருந்து இந்த அலங்காரமெல்லாம் செய்கிறாளோவென்று அப்புவுக்குப் பெரும் ஆச்சரியமாயிருக்கும். அவளை அடிக்கடி நோட்டம் விடும்போதெல்லாம் அப்புவுக்கு அவளைப்பற்றிப் பெரும் சந்தேகமெல்லாம் எழும். இவள் கல்யாணத்துக்கு அவசரப்படுவதைப் பார்த்தால் சீதனமாக எதையெல்லாம் அப்பா, அம்மாவிடம் கேட்பாளோவென்று அப்புவுக்கு மனம் கலங்கும். வீட்டிலுள்ள எதையும் அக்கா எடுத்துக்கொண்டு போய்க் கட்டியவனுடன் சந்தோசமாக வாழட்டும். ஆனால் பிள்ளையாரே, அம்மாவின் அடுக்குப்பெட்டியையும் தாவென்று அவள் கேட்காமலிருந்தால் போதும்.

மூத்தக்கா அழகானவளும்கூட. அழகான பெண் கிடைத்தால் மாப்பிளை வீட்டார் வழக்கத்தில் அதிகம் சீதனம் எதிர்பார்க்கமாட்டார்கள் என்று வயது வந்த பெண்கள் கூடிக் கதைப்பதை அப்பு சில தடவை கேட்டிருக்கிறான். அப்படிப்பார்த்தால் அவளைக் கட்டப்போகிறவருக்கு அக்காவே பெரும் சீதனம்தானே. அக்காவுடன் இதைப்பற்றி ஒருமுறை கதைத்து அவளின் மனதின் உள்ளடக்கத்தை மெல்லமாய் வாயிலிருந்து பிடுங்கவேண்டும். அதற்கான நல்லதொரு சந்தர்ப்பத்தைக் காத்திருந்தான் அப்பு.

“என்னடா பாக்கிறை?” கண்ணுக்கு மை பூசிக்கொண்டிருந்த மலர் சாத்திக்கிடந்த கதவுக்கூடாக எட்டிப் பார்க்கும் அப்புவைக் கண்ணாடியில் விழுந்த பிம்பத்திலிருந்து கண்டுவிட்டாள்.

“நீ இப்ப முந்தியிலும் பார்க்க நல்ல வடிவு, அக்கா.” அப்புவின் கண்கள் விரிந்த அழகைப் பார்த்ததும் மலருக்குச் சிரிப்பு முட்டியது.

“இப்பதான் உனக்குத் தெரியுமோ?” இதற்கு என்ன சொல்வான் என்ற ஆர்வத்தில் மலர் அவனைப் பார்த்தாள்.

“எனக்கு எப்பவோ தெரியும். ஊரிலையும் எல்லாரும் அப்பிடித்தான் கதைக்கிறவை.”

“அவையள் என்ன மாதிரியெண்டாலும் கதைச்சுப்போட்டுப் போகட்டும். நீ என்ன நினைக்கிறை எண்டதுதான் எனக்கு முக்கியம்”. மலர் தன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு இதனைச் சொன்னதே அப்புவுக்குப் பேரானந்தமாக இருந்தது. ஓடிப்போய் அவளின் கையைப் பிடித்துக்கொண்டான்.

“போடா அங்காலை. கேட்டுக் கேள்வியில்லாமல் அறைக்குள்ளை வரக்கூடாதென்று எத்தனை தரம் சொல்லுறது?”

“சரி, இனி வரயில்லை. ஆனால் நீ வடிவெண்டு ஒருதருக்கும் சொல்லமாட்டன், போ!”

மலர் அவனை இழுத்துக் கட்டிக்கொண்டாள். நான் வடிவெண்டு ஒருதருக்கும் சொல்லமாட்டானாமே! எல்லாரும் கண்ணைக் கட்டிக்கொண்டா இருக்கிறார்கள்? அவளுக்கு மனமெல்லாம் குறுகுறுத்தது, இன்னும் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. அப்புவின்மீது அவளுக்கிருந்த வாஞ்சையும் பாசமும் அவன் என்ன சொன்னாலும் செய்தாலும் ஒரே அளவில்தான் இருக்கும். தலைக்கு க்ளிப் குத்திவிடும்போது தனது தலையிலும் குத்திவிடுவென்று வந்து ஓயாமல் இரப்பான். நகத்துக்கு மை பூசும்போதும் அப்படியே. ஒருமுறை கைகளுக்கு மருதாணி இடும்போது பக்கத்தில் ஒட்டி இருந்துகொண்டு தனக்கும் அப்படியே செய்யென்று ஒரேயடியாக அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டான். “கொண்டுவா கையை, உனக்கும் பெம்பிளைக் கைதானே!” என்று சொல்லிக்கொண்டு மலர் கண்களில் வியப்பு விரிய அப்புவின் கைகளுக்கு மருதாணி போட்டுக்கொண்டிருந்தபோது அவளின் முகத்தையே மனமாகக் கற்பிதம் செய்துகொண்டு யோசனையில் இறங்கிவிட்டான் அப்பு. அக்காவிடம் அழகுக்கு என்ன குறை? புத்திக்குத்தான் என்ன குறை? இவள் கல்யாணம் செய்துகொண்டு கணவனோடு எங்களை விட்டுப் பிரிந்துபோகும்போது வீட்டிலிருக்கிற எதையெல்லாம் கேட்டாலும் நிச்சயமாக அம்மாவின் அடுக்குப்பெட்டியைக் கேட்கமாட்டாள். இவளிடம் எல்லாச் செல்வமும் சேர்ந்திருக்கும்போது சின்ன வள்ளல்போல் சில்லறைகளை மட்டும் கொடுக்கும் அடுக்குப்பெட்டிக்கு ஆசைப்படுவாளா? என்னிலை அன்பாகத்தானே இருக்கிறாள். எனக்காக விட்டுக்கொடுப்பாளோவென்று ஒருமுறை இவளிடமே கேட்டு இதை உறுதிசெய்து கொள்வோமா? வேண்டாம், பெண் பிள்ளைகளின் மனம் சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி மாறும் என்றுதானே சொல்வார்கள். அம்மாவின் அடுக்குப்பெட்டி இப்போது இவளின் மனதின் மூலையில்கூட இல்லாமலிருக்கலாம். சும்மா அவசியமில்லாமல் ஏன் இந்த அதிசயப் பாத்திரத்தில் அவளுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும்? எதுவும் பேசாமலிருப்பதே மிகச் சிறந்தது. என்றாலும் அவள் கிட்டத்தட்ட என்ன நினைத்திருக்கிறாள் என்பதை அறிந்தாலே இப்போதைக்குப் போதும்.

“உன்னைக் கட்டப்போறவர் வீட்டுக்கு அப்பா அடுத்தமுறை போறபோது நானும் கூடப் போய், ‘அக்கா நல்ல வடிவு, தெரியுமோ?’ என்று அவருக்கு நேரை சொல்லவேணுமெண்டு நினைச்சிருக்கிறன்.”

“போடா, விசரன். அவர் என்ர போட்டைவைப் பாத்தவுடனை கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாரென்று நீ கேள்விப்படல்லையோ?”

“அப்ப அவர் எக்கச்சக்கமாய் சீதனம் கேக்கமாட்டார்தானே?”

“அதைப் பற்றியெல்லாம் நீ ஏன் கவலைப்படுறை?”

“உனக்கு அப்படிச் சீதனம் வேணுமென்றால் என்னவெல்லாம் தேவையெண்டு சொல்லு, பாப்பம்.”

மலருக்குச் சிரிப்புப் அடக்கமுடியாமல் வந்தது. “நீ உன்ரை மேசை லாச்சிக்கை வைச்சிருக்கிற காணான் கோணானெல்லாத்தையும் கேக்கமாட்டன். இப்ப சந்தோசம்தானே?”

அடுத்த சில மாதங்களுக்குள் ஏற்கனவே பேசியிருந்த வெளியூர் ஆளோடு அக்காவுக்குக் கல்யாணம் நடந்தேறிவிட்டது. புது மாப்பிளை வீட்டுக்கு வந்ததும் வீட்டில் அவளுக்கு அடுத்தது அப்புவுக்குத்தான் பெரும் புளுகமாயிருந்தது. மாப்பிளை ஒரு நாளாவது அடுப்படிக்குள் நுழைந்தது கிடையாது. சாப்பாடெல்லாம் முன் விறாந்தையிலுள்ள மேசையில்தான் நடந்தது. தற்போது அவர்கள் இருக்கும் வீட்டையும் காணியையும் அக்காவுக்குச் சீதனமாக அப்பா எழுதிக் கொடுத்துவிட்டாரென்று அப்போதுதான் அறிந்ததும் அப்புவுக்கு எங்கிருந்தோவொரு பயம் திடீரென்று வந்து தொற்றிக்கொண்டது. வீடென்றால் இந்த அடுப்படியும் அந்த ஒட்டின் ஓரமாக இருக்கும் அம்மாவின் அடுக்குப்பெட்டியும் அதற்குள் அடங்கும்தானே.

கல்யாணம் முடிந்து சில நாட்களில் மாப்பிளை அக்காவைத் தன்னுடைய ஊருக்குக் கூட்டிக்கொண்டு போக ஆயத்தமாகிவிட்டார். அவர்கள் இருவரும் ஓடியோடிப் பயணத்துக்கு ஆயத்தங்கள் செய்ததைக் கண்டதும் ஒன்றிலும் சேராமல் அடுப்படிக்குக் காவலாக வாசலில் நின்றுகொண்டான் அப்பு. அக்கா கடைசியில் புறப்படுமுன் அவனைத் தேடி வந்து கன்னத்தைத் தட்டி எதையும் பேசமுடியாது கண்கள் கலங்க விடைபெற்றபோது அக்கா எவ்வளவு நல்லவள், அம்மாவின் அடுக்குப்பெட்டிக்குத் தான் போட்டிக்கு வரப்போவதில்லை என்றதை அடுப்படிக்குள் எட்டிப்பார்க்காமலே என்னமாதிரிச் செய்து காட்டினாள். தான் எவ்வளவு பெரும் அதிர்ஷ்டசாலி என்று அந்தக் கணத்தில் அப்புவுக்குத் தோன்றியது. இப்போது மூத்தக்காவையும் போட்டியிலிருந்து தட்டி விட்டாயிற்று.

4

அண்ணா ஊரில் சீனியர் படிப்பை முடித்து யூனிவர்சிடிக்குப் போய்விட்டான். அப்பாவும் அம்மாவும் அன்றாடம் அவனின் படிப்பைப்பற்றியே பேசிக்கொண்டிருந்ததை நேரில் நின்று கேட்காமலே அவர்களின் கனவை நனவாக்குவதில் அவன் ஆர்வம் காட்டியதை வீட்டில் எல்லாரும் அவதானித்துத்தான் வந்தார்கள். அவனை நிமிர்ந்து நோக்கும் போதெல்லாம் அப்புவுக்குப் பெருமை சொல்லி மாளாது. தானும் விரைவில் அண்ணாவைப்போல் வந்துவிடுவானென்று அம்மாவிடம் மட்டும் அடிக்கடி சொல்லிக்கொள்வான்.

அன்று காலையாகிவிட்டது. வீட்டில் ஒருவர் முகத்தையொருவர் பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்பா ஆறு மணிக்கே எழும்பி ஷேவ் செய்து குளித்து வெளிக்கிட்டுக்கொண்டு காட்சியளிப்பார். அவர் எட்டு மணிக்குக் காலைச் சாப்பாடு முடித்துக்கொண்டு கடைக்குக் கிளம்பவேண்டும். அதற்கிடையில் முன் திண்ணையில் போட்டிருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்துகொண்டு வீட்டில் நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருப்பார். ஏதேனும் கேள்வி கேட்டாலேயொழிய அவர் தானாக எதிலும் தலையிடுவதில்லை. வளர்ந்த பிளைகளை வீட்டில் வைத்துக்கொண்டு கண்டபடி வாய் திறக்கக்கூடாதென்று அம்மா அவருக்கு ஒரு சமயம் சொல்லியிருக்கிறா. அதை அவர் மந்திரமாகக்கருதி மனப்பாடம் செய்துகொண்டார் போலிருக்கிறது.

“உவன் தடியனை எங்கையம்மா, காணயில்லை?” அன்று காலை பயணத்தால் வீட்டுக்கு வந்த கையோடு அண்ணாதான் கேட்டான்.

அண்ணா கேட்டது அப்புவின் காதில் விழுந்ததுதான். ஆனால் “அண்ணா” என்று பதிலுக்குக் குரல் கொடுக்கத் தைரியமில்லாதவனாய் பின் விறாந்தையிலிருந்த தனது கட்டிலில் சுருண்டு படுத்திருந்தான். நேற்றுப் பின்னேரம் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது வழியெல்லாம் மழையில் குளித்து முழுகி வீட்டு வாசலில் ஏறமுன்னமே காய்ச்சலோடு வந்துவிட்டான் என்று அம்மா காலை எழும்பியதிலிருந்து அவனைத் தவிர்த்து வேறு யாரையோவெல்லாம் குறை சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஏனப்பா, அப்பு இண்டைக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகலாம்தானே, அவனுக்குக் கடைசிச் சோதனையும் வரப்போகுது.” என்று அப்பா அம்மாவிடம் கேட்டார்.

“போய் அவனைத் தொட்டுப் பார்க்காமல் கதைக்கிறியள்.”

“எனக்கு இப்பதானே சொல்லுறாய்.”

“பாவம், அப்பு அங்கை எழும்ப ஏலாமல் படுத்திருக்கிறான்.”

இந்த விபரம் எதுவும் தெரியாத மூத்தவன் அப்புவை விசாரித்து எழுப்பிய கேள்வி அவள் மனதை என்னவோ செய்தது. என்றாலும் மூத்தவன் இப்போதானே வீட்டுக்கு வந்திருக்கிறான்.

“மூத்தவன், அப்பு அங்கை காய்ச்சலாய்ப் படுத்திருக்கிறான்.”

“ஏன் எங்கையிருந்து வாங்கிக்கொண்டு வந்தவன்?”

“போய்த் தொட்டுப் பார்!” அப்பாவுக்குச் சொன்ன மறுமொழிதான் அவனுக்கும்.

மூத்தவன் பின் விறாந்தையை நோக்கி நடந்தான். தான் லீவில் வீட்டுக்கு வருகிறேனென்று அறிந்தால் நடுச் சாமமானாலும் நித்திரை விழித்துக் காத்திருக்கும் அப்புவை அன்று காலை காணாதது அவனுக்கு ஏமாற்றமும் மன வருத்தமாகவுமிருந்தது.

“டேய் அப்பு, என்னடா?” மூத்தவனின் மனதிலிருந்த கவலையை அவனின் குரலிலிருந்தே

அனுமானித்த அப்பு அவனுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவனாய்ப் படுத்திருந்தான்.

அப்பு படுத்திருந்த கட்டிலில் அவனுக்குப் பக்கத்தில் வந்தமர்ந்த மூத்தவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். “ஓமம்மா, அப்புக்கு நெருப்புப்போலை காயுது. டொக்டரட்டைக் கூட்டிக்கொண்டு போகவோ?”

“இல்லை, மோனை. சும்மா காய்ச்சல்தான். இப்போதைக்கு மருந்துச் சரக்கு அவிச்சுக் குடுக்கிறன். பிறகு பாத்து டொக்டரட்டைக் கூட்டிக்கொண்டுபோறதேவெண்டு யோசிப்பம்.” மூத்தவனின் கை பட்ட இடத்தில் அவனின் இளமைக் கரங்களின் மென்மையையும் குளிர்மையையும் ஒருங்கே உணர்ந்த அப்பு மெல்லக் கண்விழித்து அவனைப் பாசமும் மதிப்பும் ததும்பப் பார்த்தான்.

அண்ணா இப்போ பெரிய ஆளெல்லோ? கண்டி யூனிவர்சிடியில் பெரும் படிப்புப் படித்து முடிக்கிற தறவாயிலிருக்கிறான். வீட்டில் நிற்கிறபோதுதான் கிள்ளவும் குட்டவும் வருவான். கண்டிக்குப் போய்விட்டால் அப்புவை விசாரித்து அம்மாவுக்கு நூறுதரம் தபால் போடுவான். படிப்பு அண்ணாவை முற்றிலும் மாற்றிவிட்டது போலிருக்கிறதே என்று அப்பு தனக்குள் வியந்துகொண்டான்.

“அப்பு, இண்டைக்கு நீ பள்ளிக்கூடம் போகவேண்டாம். உன்ரை டீச்சரைக் கண்டு நான் சொல்லுறன். எழும்ப ஏலாமல் கிடந்தால் சொல்லு, டொக்டரட்டைக் கூட்டிக்கொண்டு போறன். இப்போதைக்கு அம்மா தந்ததைக் குடிச்சிட்டுப் போத்துக்கொண்டு படு. பின்னேரம் எல்லாம் சுகமாப் போடும்.”

மூத்தவன் சொன்னபடியே அப்பு அன்று பின்னேரம் எழும்பி முன் விறாந்தைக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அம்மா கொடுத்த கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்தான். அண்ணாவுக்கு அப்போது இருந்த எத்தனையோ சோலிகளால் வீட்டில் நிற்பதே அபூர்வமாகிவிட்டது. இவன் அம்மாவின் அடுக்குப்பெட்டியை அடையும் நோக்கம் உள்ளவனென்றால் இத்தனைக்குள் ஒருமுறையாவது அம்மாவுடன் அதைப்பற்றிக் கதைத்திருப்பான். அம்மா இட்டலி அவிக்கிற நேரம் மட்டும் அடுப்படிக்குள் எட்டிப்பார்ப்பான் போல் இருக்கிறதே. அண்ணா என்னோடு பழகும் முறையைப் பார்த்தால் அம்மாவின் அடுக்குப்பெட்டிக்கு என்னோடு போட்டிக்கு வரமாட்டான். இந்த எண்ணமே அப்புவுக்குத் திடீரென உடம்பெல்லாம் வியர்க்கவைத்துவிட்டது. எனக்கு நல்லாய்த் தெரியும், இனிச் சின்னக்கா மட்டும்தான் போட்டிக்கு வரப்போகிறாள்.

5

மலருக்கு அடுத்தவளான சின்னக்கா ஒரு நாளும் அடுப்படிக்குள் வந்து அம்மாவுக்கு எந்த உதவியும் செய்தது கிடையாது. ஆனால் அவள் அம்மாவோடு மல்லுக் கட்டுறதும் இல்லை. தனது கைச்செலவுக்கு அப்பாவை நைஸ்பண்ணி வாங்கிக்கொள்வாள். மத்தியானம் ஒரு சிறங்கை சோறுதான் சாப்பிடுவாள். பலகாரங்களில் இடியப்பம் மட்டுமே அவளுக்கு விருப்பம். அதிலும் இரண்டுக்குமேல் சாப்பிடமாட்டாள். அவள் சாமோஸ் துணியில் பல நிறங்களில் தைத்து வைத்திருக்கும் மேற்சட்டையைத்தான் நெடுகப் போட்டுக்கொள்வாள். பாவாடை நிலத்தைக் கூட்டுவதையும் கவனிக்காதவள் போல் நடப்பாள். அடர்த்தியான தலைமயிரை இழுத்து இறுக்கித் தடிப்பாய்ப் பின்னிக்கொள்வாள். இப்படியான அட்டகாசமான வடிவோடு அவள் தெருவில் போகும்போது படலைகளும் யன்னல்களும் தாமாகவே திறந்துகொள்ளும். அவள் அடுப்படிக்குள் வந்தால் சுவர் ஒட்டில் நல்ல பிள்ளை கணக்கில் இருந்துகொள்வாள். ஆனால் அம்மாவின் அடுக்குப்பெட்டியை ஒருமுறையாவது பார்ப்பாளோவென்றால் அதுமட்டும் கிடையாது.

அப்பு பள்ளிக்கூடமும் டியூசனுமாக அலைந்துகொண்டிருந்தபோது சின்னக்கா தன்னோடு கூடப்படித்த எவனையோ லவ் பண்ணுகிறாளென்றும் கடை கண்ணியில் அவனோடு சுற்றுகிறாளென்றும் ஊரில் கதை சாடை மாடையாக அடிபட்டதை விருப்பமில்லாமல்தான் காதில் வாங்கிக்கொண்டான். லவ் பண்ணி மாட்டுப்படும் ஊர்க்கதைகளை அறிந்தவகையில் அப்புவுக்கு அதில் வயதுக்கேற்ற துணிச்சலான நாட்டமும் அதேவேளை வயிற்றைக் கலக்கும் பயமும் இருந்ததால் சின்னக்காவின் ரகசியக் காதல் அம்மா, அப்பாவுக்குப் பொல்லாத தலையிடியைக் கொடுக்கும் என்றுதான் எதிர்பார்த்தான். அவள் விரும்பியமாதிரியே அவனைக் கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டால் இனி அவள் அடுக்குப்பெட்டிக்குப் போட்டிக்கு வர வாய்ப்பே இல்லையென்றுகூட ஒருமுறை எண்ணிக்கொண்டான். சீ, கூடாது, அவளும் கூடப்பிறந்த அக்காதானே, அவளைப் பிறத்தியார்போல் அப்படி நினைக்கக்கூடாதென்று தன்னையே திருத்திக்கொண்டான். காதலிப்பது பிழை, அதிலும் காதலித்துக் கல்யாணம் கட்டுவது இன்னும் பெரிய பிழையென்றுதான் அவன் அறிந்திருந்தான். ஆனால் நல்ல வேளையாக அக்காவின் பிரச்சனை அந்த மட்டுக்குப் போகவில்லை. நாளைக்கு வேண்டாத வில்லங்கமும் பவிசுகேடும் வந்துவிடக்கூடும் என்ற பயத்தில் அப்பா தனக்கு வேண்டிய ஆட்களை இரவொடு இரவாகப் பிடித்து சின்னக்காவின் சினேகிதனுக்கு அவளைப் பேசி அவனின் குடும்பத்திடம் சம்மதமும் வாங்கிவிட்டார்.

அப்பு அப்போதுதான் மேல் படிப்புக்கு ஆயத்தமாகியிருந்தான். மூத்தக்காவின் கல்யாணச் செலவுகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து அப்பா இன்னும் விடுபடவில்லை. அடுத்து அப்புவின் படிப்புச் செலவு காத்திருக்கிறது. அதேவேளை சின்னக்காவின் கல்யாணப் பேச்சும் வந்து சேந்துகொண்டது. இனிச் சீதனம், காணி, பூமியென்று அவள் அப்பாவைக் கையில் போட்டுக்கொண்டு வாங்கிக்கொள்வாளே! கல்யாணத்தோடு வீட்டிலுள்ள அத்தனையையும் சுருட்டிக்கொண்டு போய்விட்டால் அப்பாவும் கடைக்குப் போய்விட்டால் நானும் படிக்கப்போய்விட்டால் அம்மாவுக்கு அவவுடைய அடுக்குப்பெட்டிதானே துணை? இதென்ன, இப்படி விசித்திரமாகவெல்லாம் யோசிக்கிறேனேயென்று அப்பு தன்னையே வியந்துகொண்டான்.

சின்னக்காவுக்கு ரோட்டுக் காணியும் காசாக இருபதினாயிரமும் சொல்லப்பட்ட நகைகளும் கொடுப்பதென்று இரண்டு பகுதியும் பேசி ஒப்புக்கொண்டுவிட்டார்கள். வீட்டிலிருந்த பழைய தட்டுமுட்டுச் சாமான்களிலோ அடுப்படிக்குள் உள்ள பித்தளைப் பாத்திரங்களிலோ ஒன்றையும் அவள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அம்மாவுக்குத் துணையாக நான் இருக்கிறேன் என்ற தைரியம் போலிருக்கிறது அதுதான் பேசியதை மட்டும் வாங்கிக்கொண்டு போய்விட்டாள். அப்பு அப்போதுதான் முழு நிம்மதியாக மூச்சுவிட்டான்.

காலப்போக்கில் வீட்டிலுள்ள எல்லாருக்கும் அம்மாவின் அடுக்குப்பெட்டியென்றொரு அபூர்வமான பொருள் அங்கே அடுப்படிக்குள் இருக்கிறதென்ற சுரணேயே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. மற்றவர்களைப்பற்றிப் பேசுவானேன் அப்புவுக்கே இப்போது அடுக்குப்பெட்டியைப் காணும்போதெல்லாம் அதன்மீது முன்புபோல் அக்கறை வருவது குறைந்துவிட்டது. ஆனால் அம்மா இப்போதும் அதை மடியில் வைத்துத் சீராட்டுகிறாள் போன்ற படம்தான் அவன் மனதில் பதிய ஆரம்பித்தது.

6

அப்பு கொழும்பில் படிப்பை முடித்தபின் மாதக்கணக்கில் வேலைக்கு எழுதிப் போட்டுக்கொண்டிருந்தபோதே அண்ணாவும் கல்யாணம் கட்டிப் பிரிந்து போய்விட்டான். இப்படி மூத்த மூன்றுபேரும் திக்குத் திக்காய்ப் போனபிறகு வீட்டில் வழக்கம்போல் செலவுகள் அடிக்கடி ஏற்படாததால் அம்மாவும் அடுக்குப்பெட்டியைத் திறப்பதைக் குறைத்துக்கொண்டாள். அதனால் அதன் ஆயுளும் கொஞ்சம் நீண்டுபோனது போலிருந்தது. அப்பு ஒருவாறு கொழும்பில் வேலையொன்றில் சேர்ந்தபிறகு மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வரத்தொடங்கினான். கூடவே அவனுடன் வேலைசெய்யும் சாந்தியும் அவன் வீட்டில் நிற்கிறபோது இடைக்கிடை வந்து எல்லாருடனும் நன்றாய்ப் பழகத் துவங்கினாள். காலப்போக்கில் இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்ற செய்தியும் வீட்டில் கசிய ஆரம்பித்துவிட்டது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும்கூட அவளை நன்றாய்ப் பிடித்துக்கொண்டது. அப்புவுக்கு அவளோடு பேசிப் பொழுதைப் போக்கும்போதெல்லாம் சின்னவயதில் தன்னை அதிசயிக்க வைத்த அம்மாவின் அடுக்குப்பெட்டியை ஒரு நாள் அவளுக்கு அறிமுகப்படுத்தவேண்டுமென்ற எண்ணத்துடன் அதற்கான சந்தர்ப்பத்தைக் காத்திருந்தான். அதற்கிடையில் அப்பாவின் சினேகிதர் புறோக்கர் தங்கராசா ஒரு நாள் தன் தொழில் நிமித்தம் வந்து அப்புக்கும் சாந்திக்கும் சம்பந்தம் பேச இதுதான் உவப்பான நேரமென்று அப்பாவின் காதுக்குள் ஓதிவிட்டு அம்மாவுடனும் குசுகுசுத்துக்கொண்டிருந்தார். அப்பு வீட்டில் இந்தக் கல்யாணப் பேச்சை அறிந்த சாந்தியும் வெட்கத்தினாலோ வேறு வழி இல்லாமலோ அந்தப் பக்கம் வருவதைக் குறைத்துக்கொண்டாள். அப்பு எதிர்பார்த்த அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவேயில்லை.

7

அப்பு சாந்தியைக் கல்யாணம் செய்த சில கிழமைகளின்பின் அடுப்படி வாசலில் புது மனைவியோடு வந்து நின்ற அப்புவை அப்போதுதான் அவன் பிறந்தான்போன்று ஆசையோடு பார்த்தாள் அம்மா. அவன் தன்னைப்போலவே இருப்பதில் அவளுக்கு அசாத்திய பெருமை. இதனால் அவள் அப்புமீது வைத்திருக்கும் பாசமும் எல்லை கடந்தது. அவனை நேசிப்பது தன்னையே நேசிப்பதுபோன்றிருக்கும் என்பதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். ஆனால் அதை மற்ற எல்லார் முன்னிலையிலும் சொல்லப்போய் அவர்களிடம் குறை கேட்கவந்துவிடலாம் என்ற பயத்தால் பேசாதிருப்பாள். அதுவே தான் அவனின் அன்னை என்ற பெருமையை அவளுக்குள் எல்லையற்று வளர்த்துக்கொண்டிருக்கும்.

“என்ன அப்பு, ஏதேனும் வேணுமோ, மோனை?” அம்மா இதைக் கேட்டபடி அடுப்புக் கட்டிலிருந்து மெல்லத் திரும்பி அப்புவை நோக்கி வந்தாள். அம்மாவுக்கு வயது ஏறியதனால் கண்கள் சோர்ந்துபோயிருந்தன. உடம்பு மெலிந்ததால் நடையும் தளர்ந்துபோயிருந்தது. சேலைத் தொங்கலை எடுத்து இடுப்பில் சொருவியபடி தன்னை நோக்கி மெல்ல நடந்து வந்த அம்மாவை அப்பு முன்னொருபோதும் காட்டாத கவலையுடன் நோக்கினான். இவ்வளவுக்கு இயலாத வயதில் அம்மாவைத் தனிய விட்டுப் போகவேண்டிவந்ததேயென்ற எண்ணம் அவன் நெஞ்சை அரித்தது.

“இல்லையம்மா, நாங்கள் வெளிக்கிடுறம்.” இதைத் தயங்கித் தயங்கிச் சொல்லமுன்னமே அப்புவின் கண்களில் முகிழ்த்த கண்ணீரை அவள் கண்டுகொள்வாளே என்ற அச்சத்தில் அதை இமைகளால் வழித்து ஊற்றிவிட முனைந்தான். அருகே அவனோடு ஒட்டியபடியும் ஒட்டாமலும் நின்ற சாந்தியின் மீதிருந்த வந்த மணமோ அவள் தன்னை நெருங்கி அவதானிக்கிறாள் என்ற எண்ணமோ சிறிதுமில்லாமல் அப்பு இதோ வாய் திறந்து அரற்றிவிடுவான்போல் நின்றான்.

அப்புவுடைய தேவைக்கென்று வீட்டில் எல்லா வகையான பொருட்களும் இருந்தபோதிலும் அம்மாவுடைய சீப்பால் தலை வாருவதற்கும் அவளின் முந்தானையில் முகம் துடைப்பதற்கும் அவள் சாப்பிடும்போது அவள் கையால் உருட்டிக்கொடுக்கும் சோற்றை வாங்கி உண்ண ஆசைகொண்டு கையை நீட்டியபடி ஓடிவந்து பக்கத்தில் நெருக்கியபடி குந்திவிடுவதற்கும் அப்புவுடன் அவள் செய்திருந்த உடன்பாட்டை இப்போது இடையில் வந்த இன்னொரு பெண் பறித்துக்கொண்டாளே என்பதை அம்மா எண்ணிக் கவலைப்படப்போகிறாள் என்று அப்பு முதலில் துடித்துப்போனான்.

“அம்மா, நாங்கள் போட்டு வாறமம்மா!” அவன் இதைச் சொன்னபோது சொற்களுக்குப் பதிலாக அழுகைதான் அவனை மீறி எழுந்தது. அம்மா கையிலிருந்த ஈரத்தைச் சேலை நுனியில் துடைத்தபடி அவனை நோக்கி வந்தபோது சாந்தி மெல்லமாய்ச் சில அடிகள் முன்னே எடுத்துவந்து அவனுடன் சேர்ந்து நின்றுகொண்டாள்.

அம்மாவை இனி எப்படிச் சமாதானப்படுத்தலாம் அல்லது சந்தோசப்படுத்தலாமென்று யோசித்துக்கொண்டிருந்த அப்பு தாயை நிமிர்ந்து பார்த்தான். அதேவேளை அம்மாவின் அடுக்குப்பெட்டி நைந்துபோன ஓலைகளை நீட்டியபடி அவளுக்குப் பின்னால் இப்போதும் அதே ஒட்டில் துவண்டுபோய் இருந்ததைக் கண்டான். அம்மாதான் அந்தப் பரிதாபமான கோலத்தில் நிற்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. அப்பு உடனே குனிந்து தாயின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவள் எதுவும் பேசவில்லை. திரும்பி உள்ளே சென்று ஒட்டிலிருந்த அடுக்குப்பெட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *