விருந்தோம்பல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,359 
 
 

பகற் பொழுதே இருளாகி கனமழை பொழிந்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் மழைக்கு ஒதுங்கி அமர்ந்தார் அந்தப் பெரியவர். குளிர் அவரை வாட்டியது. வீட்டின் கதவைத் திறந்து கொண்டு ஒரு நடுத்தர வயது மங்கை வெளிப்பட்டார். போர்வை ஒன்றை அவரிடம் அளித்தார். பெரியவர் புன்னகை பூத்து வாங்கிக் கொண்டார்.

‘மயிலுக்குப் போர்வை தந்த மன்னன் பேகனின் ஆட்சியில் தாங்கள் இந்த வழிப்போக்கனுக்குப் போர்வை தந்துள்ளீர்கள். நன்றி’ என்றார் போர்த்திக் கொண்டார். ‘உள்ளே வாருங்கள் ஐயா’ அழைத்தார் அந்தப் பெண்மணி. அவர் வீட்டின் உள்ளே வந்தார். பெண்மணி தந்த ஆசனத்தில் அமர்ந்தார். பெண்மணி, சமையலறைக்குச் சென்று, சூடான பாலும் பழமும் கொண்டு வந்து கொடுத்தார். பெரியவரிடம் தாங்கள் ஏற்க வேண்டும் என்று வேண்டினார்.

‘தங்கள் உபசரிப்புக்கு நன்றி. பால் பருகியதும் தெம்பு வந்தது தாங்கள்..’

அந்த மங்கை பதில் அளித்தார் :

‘அடியாளின் பெயர் ஆதிரை. திருமண வீடு போன்று வீடு கொள்ளாமல் ஆட்கள் நிறைந்த வீடாக இருந்தது இந்த வீடு. பெரியவர்கள் அவ்வுலகம் சென்றார்கள். பெற்ற பிள்ளைகள் தங்கள் வாழ்வுப் பாதையில் சென்றார்கள். ஒற்றையாள் ஆன அடியாள், இந்தத் தெருவில் உள்ள பதின்பருவ சிறுமிகளுக்கு ஆடல் கலையைக் கற்றுத் தந்து வருகிறேன் பொன்னான பொழுதுகளை ஆக்கம் உள்ளதாய் ஆக்குவோம் என்ற நோக்கத்தில்.. புலவர் பெருமான் அடியாளுடைய குடிலுக்கு வந்தது அடியாளுக்கு மகிழ்ச்சி தருகிறது… ‘

‘புலவரா…. ‘ என்றார் பெரியவர்.

‘தாங்கள் தானே மனைவியை விட்டுப் பிரிந்து வேறு மகளிர் உடன் இருந்த நமது மன்னன் பேகனிடம் துணிச்சலுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்.. அதுவே நான் கேட்கும் பரிசில்’ என்று கூறி மன்னனை அரசி கண்ணகியார் உடன் சேர்த்து வைத்த புலவர் பரணர். தங்களைப் பார்த்துள்ளேன். உரையாடும் வாய்ப்பு இன்று என் குடிலில் கிடைத்துள்ளது. இறைக்கு நான் நன்றி சொல்லி நிற்கிறேன்.’

‘அம்மா நான் பரணர் அல்ல. அவர் போலவே தோற்றம் உள்ளதா? என் பெயர் சாத்தன். இந்தத் தெருவில் உள்ள பொன்னப்பன் என்ற இளைஞனுக்கு என் தங்கையை மணம் முடிக்க பேச்சு நடத்த வந்தேன் . வயதானவனுக்கு தங்கை எப்படி என்று நினைக்க வேண்டாம். எங்கள் பெற்றோருக்கு கடைக்குட்டி அவள். மாப்பிள்ளை வீட்டார் வீடு பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தினர், அவர்கள் வழிபாடு செய்ய வெளியூர் சென்று இருப்பதாகக் சொன்னதால் என் வீடு நோக்கி திரும்பினேன். அடை மழையால் தங்கள் வீட்டு திண்ணையில் அடைக்கலம் ஆனேன். தங்கள் அன்பையும் உபசரிப்பையும் பெற்றேன் ‘

‘தாங்கள் பரணர் போலவே இருக்கிறீர்கள். தங்களைப் போன்றவர்களின் ஆசி வேண்டும் அடியாளுக்கு. பொன்னப்பன், அமுதனாரின் பெயரன் நல்ல பிள்ளைதான். மீண்டும் வந்து பேசி முடித்து விடுங்கள். வரும் போது என் வீட்டிற்கும் வாருங்கள். மழை விடவில்லை. உடனே செல்ல வேண்டாம் ‘

பெரியவர், நன்றி உடன் அந்த மங்கையைப் பார்த்தார்.’ இன்று ஆடல் வகுப்பு இல்லையோ? ‘

‘இந்தப் பெருமழையில் பெற்றோர் வளர் இளம் பெண்களை அனுப்ப மாட்டார்கள் ‘

‘தங்கள் கணவர்… ‘

‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்பதால் எனக்கு பிள்ளைகளைக் கொடுத்து விட்டு திரவியம் தேட திரைகடலோடினார். எந்த நாட்டுச் சீமையில் இருக்கிறாரோ தகவல் இல்லை. நானே தகப்பன் இடத்தில் இருந்தும் பிள்ளைகளை வளர்த்தேன். பிள்ளைகள் வளர்ந்து பெரிய

மனிதர்கள் ஆகித் தங்கள் பாதையில் சென்று விட்டார்கள். அடியாள் கண்ணவனான கணவனின் வருகைக்காகக் காத்திருக்கிறேன். ‘

‘கண்டிப்பாக வருவார் ‘ என்றார் பெரியவர்.

தோட்டத்துக் கதவு, காற்றால் திறந்து கொண்டது. கதவு திறந்து கொண்டதும் மயில் ஒன்று உள்ளே வந்தது.

‘மன்னனைப் போல் தாங்கள் இந்த மயிலுக்குப் போர்வை தாருங்கள்’ என்றார் பெரியவர். அந்தப் பெண்மணியின் முகத்தில் புன்னகை.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *