கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 11,732 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“காக்கை குருவி எங்கள் சாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்று பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன். கல்லூரியிலிருந்து மாலையில் வீடு திரும்பும் எனக்குச் சாதாரணமாக அலுப்பும் சலிப்பும் நிறைந்திருக்கும். அன்று மட்டும் என் மனத்தில் குதூகலம் பொங்கி வழிந்து கொண் டிருந்தது. என் அறைக்குள் சென்று புத்தகங்களையும் பையையும் மேஜைமேல் சாய்த்தேன். இரண்டு கைகளையும் ஒரு தடவை மேலே உயர்த்தியபடியே உதறிக்கொண்டேன். ‘அப்பப்பா, என்ன புழுக்கம்!’ என்று சொல்லிக்கொண்டே முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்துவிட்டேன். பிறகு பையை எடுத்துக்கொண்டு அப்பாவைப் பார்க்க மாடிக்குச் சென்றேன்.

“உள்ளே வரலாமா?” என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே கதவைத் தட்டினேன்.

“ஜானகி, வாயேன். இப்பொழுது தான் உன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உனக்கு நூறு வயசு” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தார் அப்பா.

“எதற்காக இவ்வளவு அவசரமாக என்னைப் பார்க்க வந்தாய்?” என்று என்னை விசாரித்தபடியே தம் மேஜைமேல் இருந்த ஏதோ மஞ்சள் தடவிய கடிதத்தை மறைத்துவிட்டு அப்பா தம் இடத்தில் உட்கார்ந்தார். எதையும் என்னிடம் மறைத்து வைக்காத அவருடைய அந்தச் செயல் எனக்கு வியப்பைத் தந்தது.

“அப்பா, இன்று நடந்த கல்லூரிக் கலைவிழாவில் எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பார்க்கிறீர்களா?” என்றேன்.

“என்ன பரிசு? குங்குமச்சிமிழா, குத்து விளக்கா?” என்று கேட்டார் அப்பா. அவர் கேள்வியில் அலட்சியமும் முகத்தில் கேலியும் கலந்திருந்தன. அப்பாவிடம் தனியாக எட்டு வருஷம் பழகியிருக்கிறேன். ஒரு சமயங்கூட அவர் என்னிடம் இவ்வளவு அலட்சியமாகப் பதில் அளித்ததே இல்லை. அவருடன் நான் எவ்வளவோ தடவை வேடிக்கையாகப் பேசியிருக்கிறேன். ஆனால் இந்தத் தடவை மட்டும் அவருடைய வார்த்தைகள் என்னை மிகவும் துன்புறுத்திவிட்டன. என் கண்களில் நீர் துளும்பாதபடி என் உணர்ச்சியை அடக்கிக்கொண்டேன்.

“அம்மாவைப் போலவே உன் நிறம் பொன்னாக இருக்கிறது. உன் எடுப்பான மூக்கும் விழியும் அவளையே நினைவூட்டுகின்றன. நீ நடந்து வரும்போதும் கைகளை வீசிக்கொண்டு பேசும்போதும் காரியங்களைச் செய்துகொண்டே பாடும்போதும் உன் உருவம் என் கண்களில் தோன்றுவதே இல்லை. உன் அம்மாதான் இன்னும் உயிருடன் வீட்டில் நடமாடுவது போல உணருகிறேன்” என்று அடிக்கடி என்னிடம் சொல்லும் அப்பாவா என் மனம் நோகும்படி இப்படிப் பேசினார்?

“ஜானகி, வேடிக்கையாகத்தான் கேட்டேன். இதைப் போலத் தான் அவளும் என்னிடம் ஏதாவது மிகவும் ஆசையாகச் சொல்ல வருவாள். நான் கொஞ்சம் அலட்சியமாகப் பேசிவிட்டாலோ உன் முகம் இப்பொழுது வாடியிருக்கிறதே, இதைப்போல வாடிவிடும். உடனே நான் என் வேடிக்கைப் பேச்சுக்கு உன் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன்” என்று அவர் பேச்சை முடிப்பதற்குள்ளாகவே, “அம்மாவிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்பது கூட உண்டா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்பு அப்பாவின் மேல் இருந்த என் கோபம் பறந்தோடிவிட்டது.

“ஆமாம், ஜானகி. கல்யாணமான புதிதில் நான் எவ்வளவோ தடவை அவளிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். ‘தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது நான் பிழைகள் செய்திருந்தால் மன்னித்துவிடு’ என்று சாகும் பொழுதும் அவளைக் கேட்டேன். ‘உங்களை மன்னிக்க நான் யார்? அப்படி ஒரு பிழையும் நீங்கள் எனக்குச் செய்யவில்லையே!’ என்று மலர்ந்த முகத்துடன் பதில் தந்த உன் அம்மாவின் இனிய சுபாவத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் அவளுக்குத் தந்த ஒரு வாக்குறுதியை மட்டும் கொஞ்ச காலம் வேண்டுமென்றே மறந்தே விட்டேன்” என்று தழுதழுத்த குரலில் பேசி முடித்தார்.

அம்மாவைப் பற்றிய பேச்சோ நினைவோ வந்துவிட்டால் அப்பா பிரமை பிடித்தவர் போல் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிடுவார். அப்போதெல்லாம் என் மனமும் வேதனையில் ஆழ்ந்துவிடும். நல்ல வேளையாக அப்பாவே என் பரிசைப்பற்றி மீண்டும் விசாரித்தார்.

கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவைப் பற்றியும், ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்ற தலைப்பில் நான் பிரசங்கம் செய்து இரண்டு பரிசு பெற்ற விவரத்தையும் அவருக்குக் குதூகலத்துடன் எடுத்து உரைத்தேன். அவர் என்னைப் பாராட்டுவார் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

“ஜானகி, உன் பிரசங்கம் மிகவும் நன்றாக இருந்திருக்கலாம். அதைப் பாராட்டிப் பலர் பரிசுகளையும் அளித்திருக்கலாம். நானும் என் கல்லூரி நாட்களில் லட்சிய வாழ்வை வற்புறுத்திப் பேசியிருக்கிறேன். ராஜரிஷி ஜனகனைப்போல வாழ்க்கை நடத்தவேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் உனக்கு ஜானகி என்று பெயர் வைக்க முடிந்தது. ஆனால் ஜனகர் பெற்ற ஞானத்தை என்னால் அடைய முடியவில்லையே!”

அப்பா நல்ல வேளையாக அத்துடன் நிறுத்திக்கொண்டார். அதற்கு மேலும் கொஞ்ச நேரம் பேசியிருந்தால் நான் அங்கேயே அழுதிருப்பேன். ஈரத் துணியைப் பிழிந்த்து போல என் உள்ளம் வேதனையால் நைந்து கசங்கியிருந்தது. கண்களில் நீர் மல்காமல் எப்படியோ பொறுத்துக்கொண்டேன். இரண்டாவது பரிசு பெற்ற கமலாவின் வீட்டில் அவள் அம்மாவும் அண்ணனும் எவ்வளவு பாராட்டினார்கள்! என்னைக் கல்லூரி முழுவதும் கொண்டாடி என்ன பயன்? நான் பெற்ற பரிசைப்பற்றி ஒரு வார்த்தை அப்பாவுக்குச் சொல்ல விருப்பம் இல்லை. ஜனகராம் ஜனகர்! பெற்ற பெண் அடைந்த பரிசைப் பாராட்டத் தெரியவில்லை. இப்படியா அந்த ஜனகர் அருமைச் சீதையை வளர்த்திருப்பார்? பெண்ணின் பெருமையை அறிந்து போற்றத் தாய் என்று ஒருத்தி அவசியம் வேண்டித்தான் இருக்கிறது. “பாவம், ஜானகி தாயில்லாப் பெண். அம்மா இருந்திருந்தால் அவளுக்கு எப்பொழுதோ கல்யாணம் நடந்திருக்கும். அவருக்கோ பெண்ணிடத்தில் அலட்சியம்” என்று பக்கத்து வீட்டு மாமி பேசுவது உண்மைதான் என்று பல எண்ணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றிக்கொண்டே வந்தன.

“ஜானகி, ஏன் பேசாமல் இருக்கிறாய்? நான் சொன்னது உண்மை தான். நீ பேசிவரும் லட்சியங்களை வாழ்க்கையில் நடத்திக் காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றார் என் அப்பா சிரித்துக் கொண்டே. எரிமலை உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் போது அருகில் உள்ள நிலங்களில் வெடிப்புத் தோன்றுமே, அதைப்போல இருந்தது அப்பாவின் சிரிப்பு.

“ஏன்? ஹானர்ஸ் படிப்பு முடிந்ததும் காக்கையையும் குருவியையும் பிடித்து வீட்டில் வளர்த்து வரவேண்டும் என்பது உங்கள் ஆசையா? நீங்கள் விரும்பினால் அப்படியே செய்கிறேன்” என்று அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டி விட்டுப் படபட என்று மாடிப் படிகளில் இறங்கிக் கீழே சென்றுவிட்டேன். என் அறைக்குச் சென்று மேஜைமேல் தலை கவிழ்ந்தபடியே உட்கார்ந்தேன்.

‘பெண் உள்ளத்தை அறிய முடியாத வேதாந்தி. இவருடன் வாழ்ந்தது போதும்’ என்றுதானே அம்மா எட்டு வருஷங்களுக்கு முன்பே மறைந்துவிட்டாள்? அந்த மாதிரி நானும் போய்விட்டால்தான் என்ன? இல்லை, அம்மாவாவது இப்பொழுது இருந்திருந்தால் அவள் மடியில் தலை வைத்து வேதனை தீர அழுது தீர்த்துவிடலாமே! அவள் இப்பொழுது இருந்திருந்தால் நிச்சயமாக என்னை ஹானர்ஸ் வரை படிக்க வைக்க அநுமதித்திருக்க மாட்டாள். அவளுக்குப் பெண்கள் அதிகமாகப் படிப்பது பிடிக்காது. எனக்குச் சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்திருப்பாள். பரவாயில்லை. அன்பும் பிரியமும் இல்லாத இந்த அப்பாவிடம் இருந்து மனம் புழுங்குவதைவிட அவரிடமே…

என்னை அறியாமலே வெட்கம் என் சிந்தனைப் போக்கைத் துண்டித்து விட்டது. மனம் கட்டுக்கு அடங்காமல் எங்கேயோ செல்வதைப் பார்த்து எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். அம்மாவைப்பற்றி நினைத்ததில் என் உள்ளம் சிறிது ஆறுதல் பெற்றிருப்பதாக எண்ணினேன். அறையில் பெரியதாக மாட்டியிருந்த அவளுடைய உருவப் படத்தின் முன்னால் ஒரு குத்துவிளக்கு இருந்தது. அதை ஏற்றினேன். ‘அம்மா! இந்த வீட்டில் இருந்து நான் சலித்துவிட்டேன். இதோ இந்த வருஷம் படிப்பும் முடிந்துவிட்டது. எப்படியாவது சீக்கிரம்..’ அதற்கு மேல் வார்த்தை எழவில்லை. தூண்டிய விளக்கொளியில் அம்மாவின் முகம் புன்னகை பூத்து விளங்கியது. இனி என் வாழ்வில் புதிய மலர்ச்சி தோன்றும் என்ற நம்பிக்கை பிறந்தது.

அரை மணி நேரம் கழிந்திருக்கும். அப்பா எங்கேயோ வெளியே புறப்பட்டுச் சென்றார். அவர் மேஜைமேல் நான் வைத்துவிட்டு வந்த என் தங்கக் கோப்பையை எடுத்துவர மாடிக்குச் சென்றேன். அப்பாவின் டைரி மேஜைமேல் திறந்து கிடந்தது. என்னைப்பற்றி அவர் ஏதோ எழுதியிருப்பதும் தெரிந்தது. படபடத்த நெஞ்சுடன் டைரியை எடுத்தேன். சடசட என்று சிறகடித்துக்கொண்டு ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஒரு குருவி பறந்தோடியது. நடுங்கிய கைகளில் டைரியைப் பிடித்தபடியே சில வார்த்தைகளை மட்டும் படிக்க முடிந்தது.

‘ஜானகி தாயில்லாப் பெண்ணாகிவிட்டாள். அவளை நெடு நாள் கல்யாணம் செய்யாமல் வைத்திருந்தால் பலர் பலவிதமாகச் சொல்வார்கள். பேச்சுக்கு இடம் வைக்காதீர்கள்’ என்று அவள் சொல்லிவிட்டுப் போய் எட்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. அவள் என்னை விட்டுப் பிரிந்ததனால் ஏற்பட்ட தனிமையை என்னால் சகிக்க முடியவில்லை. என் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் ஒன்றியிருந்த அவளுடைய பிரிவு என்னைப் புழுப்போலத் துளைத்து வருகிறது. ஜானகியின் நடையிலும் பேச்சிலும் சிரிப்பிலும் நான் தினந்தோறும் அவள் சாயலையே காண்கிறேன். மனைவியின் பிரிவினால் என் மனத்தில் பதிந்திருந்த வடுவை ஜானகியினால் தான் ஆற்ற முடியும் என்று நினைத்தேன். எனவே உடனே அவளைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் கல்லூரியில் சேர்த்தேன். என் மனைவி என்னை விட்டு நீங்கவில்லை என்ற பிரமையை அவள் தோற்றமும் பேச்சும் தந்து வந்தன. என் வேதனையை ஆற்றும் அருமருந்தாக அவள் எவ்வளவு நாள் இங்கே இருப்பாள்? அவளும் அன்பை நாடி ஏங்கும் வயதை எட்டிவிட்டாள். இந்தச் சித்திரையில் அவள் புக்ககம் எப்படியும் போகத்தான் போகிறாள். “செடி கொடி விலங்குகளுடன் பழகும் என்னாலேயே வளர்த்த பெண்ணான சகுந்தலையை விட்டுப் பிரிய முடியவில்லையே. அன்றாட வாழ்க்கையில் உள்ள சாதாரண மனிதர்கள் தங்கள் சொந்தப் பெண்ணை எப்படித்தான் புக்ககத்துக்கு அனுப்புகிறார்களோ?” என்று கண்வர் சாகுந்தல நாடகத்தில் வருத்தமடைந்தாராம். அது எனக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது…

அதற்குமேல் என்னால் படிக்க முடியவில்லை. இனி ஒரு நாளும் அப்பாவின் மனம் நோகும்படி நடந்து கொள்வதில்லை என்று உறுதி கொண்டேன். ஆனால் அடுத்த நாளே –

2

அடுத்த நாள் கல்லூரி விடுமுறை. நான் பரிசு பெற்றதற்காக என் தோழிகளுக்குச் சிற்றுண்டி விருந்து நடத்த எனக்கு விருப்பம். மத்தியானம் சாப்பிட்ட பிறகு என் விருப்பத்தை அப்பாவிடம் சொன்னேன். “சரி, அதற்கு என்ன?” என்றார்.

“உங்கள் மாடி அறைதான் பெரிதாக இருக்கிறது. அங்கே பார்ட்டி நடத்த இடம் தருகிறீர்களா?” என்றேன்.

அவருடைய சம்மதி கிடைத்துவிட்டது. இனிமேல் தோழிகளுக்குச் சமாசாரத்தைச் சொல்லி அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற வேகம் என்னை உந்தித் தள்ளியது. “ஒவ்வொருவராகச் சொல்லி அழைத்து வருவதற்குள் மூன்று ஆகிவிடும். அதற்குள் இங்கே எல்லாம் தயாராகிவிடும் அல்லவா? ஆபீஸ் அறையை மட்டும் விருந்தாளிகள் வந்து தங்கிச் செல்வதற்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்து விடுகிறீர்களா?” என்று நிதானமாகக் கேட்டேன்.

“நீ வருவதற்குள் எல்லாம் தயாராகிவிடும். நானும் சாப்பிட்டு விட்டு மயிலாப்பூர் போய்விடுவேன். இல்லாதபோனால் உங்கள் விருந்துக்கு என்னைத் தலைமை வகித்துப் பேசச் சொல்லிவிடுவீர்களே!” என்று அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

அப்பாவைப்பற்றி எவ்வளவு தவறாக எண்ணிவிட்டேன்! அவருக்குப் பெண்ணாகப் பிறந்ததற்கு நான் பெருமைப்பட வேண்டும். அறிவும் குணமும் நிறைந்த இவரையா நான் உணர்ச்சியற்றவர், வெறும் புரொபசர், வறட்டு வேதாந்தி என்று இழிவாக நினைத்தேன்! இனி அவ்விதம் கனவிலும் நினைக்கமாட்டேன் என்று எண்ணிக்கொண்டே தோழிகள் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

நான் வீடு திரும்பிய போது மணி நாலாகிவிட்டது. என் நெருங்கிய தோழிகள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டேன். எல்லாரையும் மாடிக்குப் போகச் சொல்லிவிட்டுச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு எதுவரையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சமையல் அறைக்குச் சென்றேன். சமையல்கார மாமி தயாராக இருந்தாள். அப்பாவே ஒவ்வொன்றையும் கவனித்து விட்டு இப்பொழுது தான் சென்றாராம். நான் எதிர் பார்த்ததற்கு மேலாகவே எல்லாம் அமைந்திருந்தன. என் தோழிகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்று எண்ணிப் பூரித்துப் போனேன். அடுத்த கணமே எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மாடியிலிருந்து என் தோழிகள் எல்லோரும் கொல்லென்று சிரிப்பது காதில் விழுந்தது. என் மனத்தில் நிறைந்து வழிந்த மகிழ்ச்சி ஒரே நிமிஷத்தில் காட்டாறு போல வடிந்து மறைந்துவிட்டது. “என்ன அது?” என்று கேட்டுக் கொண்டே மாடிக்கு விரைந்து ஓடினேன்.

மாடி அறையில் அவர்கள் நின்றிருந்தார்கள். அங்கே ஒரே குப்பை கூளம்; பஞ்சும் வறட்டியும் சிதறிக் கிடந்தன. அறையின் மத்தியில் குருவிக் கூடு ஒன்று கிடந்தது. நொண்டிக்கொண்டே ஒரு குருவி அதைச் சுற்றி வந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

“கல்லூரியில் பேசியதைப் போல வீட்டிலும் குருவி வளர்க்க ஆரம்பித்துவிட்டாள் ஜானகி” என்றாள் ஒருத்தி, குறும்புத்தனமாகச் சிரித்துக்கொண்டே.

“ஜானகி சீக்கிரம் காக்காய் பிடித்து வளர்க்கவும் போகிறாள்!” என்றாள் இன்னொருத்தி. என் முகம் சுண்டிவிட்டது.

“போதும் வேடிக்கை. ஆசையாக அழைத்திருக்கிறாள். அவள் மனம் நோகும்படி நடந்து கொள்வது நியாயமா? எங்கிருந்தோ வந்த குருவி கூட்டைத் துவம்சம் செய்திருந்தால் அதற்கு அவள் என்ன செய்வாள்? ஜானகி, நீ போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய். நான் ஒரு நிமிஷத்தில் அறையைச் சுத்தம் செய்துவிடுகிறேன்” என்று கமலா மட்டும் அவர்களை அடக்கிச் சமாளித்திருக்கா விட்டால் நான் அப்பொழுது இருந்த களேபரத்தில் அழுதே இருப்பேன்.

“கூண்டையும் குருவியையும் என்ன செய்வது?” என்றாள் கமலா. “தூக்கி எறி. விரட்டு சனியனை!” என்றேன் எரிச்சலுடன்.

“பாவம், அது என்ன செய்தது ஜானகி? தாயைப் பிரிந்து தனியாக இங்கே வந்துவிட்டது. அதைத் துரத்துவானேன்? அது இங்கேயே ஒரு மூலையில் கிடக்கட்டுமே” என்று என்னைக் கமலா சமாதானம் செய்தாள்.

அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லவில்லை. எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்குவதில் கவனம் செலுத்தினேன். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் எல்லாம் இந்தக் குருவி செய்த கூத்தில் குன்றிவிட்டது. மற்றவர்களின் ஏளனத்துக்கு ஆளானோமே என்ற வருத்தம் மனத்தில் எழ எழக் குருவியின் மேல் கோபமும் அதிகரித்தது.

சிற்றுண்டி முடிந்து சிநேகிதிகள் ஒவ்வொருவராகத் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். மயிலாப்பூருக்குக் கமலா புறப்பட்டாள். “இரு. வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கீழே சென்றேன். ஒரு பழைய கூடையைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்தேன்.

“எல்லா விருந்தாளிகளையும் அனுப்பிவிட்டேன். இந்த வேண்டாத விருந்தாளியைக் காதைப் பிடித்துத் திருகி அனுப்ப வேண்டாமா?” என்று உதட்டைக் கடித்துக்கொண்டே கமலாவிடம் சொன்னேன்.

“பாவம்! அதை ஒன்றும் செய்யாதே. இங்கேயே இருக்கட்டுமே!” என்று அவள் பரிந்து பேசினாள். பிடிவாதமாகக் குருவிக் கூட்டையும் குருவியையும் கூடையில் போட்டு எடுத்துக்கொண்டேன். கடைசியில் அந்தக் கூடையை லஸ் சர்ச் ரோட்டுக்கு அருகில் ஓர் ஓரமாக வைத்து விட்டு நிம்மதியாக வீடு திரும்பினேன்.

நான் வீட்டுக்குத் திரும்பியபோது அப்பா வாசலில் நின்று கொண்டிருந்தார். “மாலைப்பொழுது வேடிக்கையாகக் கழிந்ததா?” என்று என்னை விசாரித்தார். அவர் உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவதாக எனக்குத் தோன்றியது.

“ஆமாம்” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். தோழிகளின் நடுவே அடைந்த அவமானம் இன்னும் என் நெஞ்சை விட்டுப் போகவில்லை. அப்பா மாடிக்குச் சென்றார். சில நிமிஷங்களுக்குப் பிறகு அவர் கீழே இறங்கி வந்தார். “ஜானகி, மேலே ஒரு குருவி இருந்ததே, அது எங்கே?” என்று கேட்டார். அவர் குரலில் தான் என்ன அக்கறை! என்ன அன்பு!

“வந்த விருந்தாளிகளோடு வேண்டாத விருந்தாளியையும் அனுப்பிவிட்டேன்” என்று அலட்சியமாகப் பதில் அளித்தேன்.

“என்ன?” என்றார் அப்பா. ஆச்சரியமும் கவலையும் அவர் குரலில் தோய்ந்திருந்தன.

“எனக்குப் பிடிக்கவில்லை, துரத்திவிட்டேன்” என்றேன்.

“ஜானகி, நீ செய்தது ரொம்பப் பிசகு. பாவம், அது உனக்கு என்ன தப்புச் செய்துவிட்டது?”

“என்ன செய்ததா? அவர்கள் வந்திருந்த சமயத்தில் கூட்டைத் துவம்சம் பண்ணி அறை முழுவதும் பஞ்சும் குச்சியுமாக ஒரே கந்தர கோளமாக்கி இருந்தது. அதனால் நான் எவ்வளவு அவமானப்பட்டேன் தெரியுமா?” என்று சற்றுக் கடுமையாகவே பேசினேன்.

“தாயைப் பிரிந்து வந்த குருவியோ என்னவோ? இடம் புதிது; பயம் வேறு. வீட்டுக்குப் புதிதாகத் தனியே குழந்தை வந்தால் அழுது பிடிவாதம் பிடிப்பதில்லையா? அதனால் அதை நாம் உடனே அடித்துத் துரத்திவிடுகிறோமா?”

“குழந்தையும் குருவியும் ஒன்றாகிவிடுமா?”

“ஜானகி, நீ நேற்றுக் கல்லூரியில் பேசியதை இவ்வளவு விரைவில் மறந்துவிடுவாய் என்று நான் நினைக்கவில்லை. பரிசும் பாராட்டும் விருந்தும் கேளிக்கையுமே உன் நினைவில் இருக்கின்றனவே ஒழிய உண்மையான அன்பு உன்னிடம் சிறிதும் இல்லை. வெறும் பாசாங்கும் போலி நடிப்புமே நீ கல்லூரியில் கற்றுக் கொண்டாயா? நொண்டிக் குருவிக்கு இரக்கப்படாத நீயா நேற்றுப் புத்தரின் கருணையைப் பற்றியும் பாரதியின் ‘காக்கை குருவி’யைப் பற்றியும் பேசினாய்?”.

அப்பா ஏன் ஒரு சாதாரணக் குருவியைப் பிரமாதப்படுத்துகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கும் கோபம் வந்துவிட்டது.

“அப்பா, நீங்கள் ஆத்திரத்தில் பேசுகிறீர்கள். பொல்லாத குருவியிடம் என்ன அன்பு வேண்டியிருக்கிறது? இங்கே அது வளர்ந்துவர நான் நிச்சயம் இடம் தர மாட்டேன். வீடு முழுவதும் மலத்தைக் கழித்து அசுத்தம் செய்து சதா தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் இந்தக் குருவியிடம் இவ்வளவு அன்பாக இருக்கிறீர்களே! இதன்கால் காயம் குணமானதும் தானே இது எங்கேயாவது ஓடிவிடப் போகிறது. பிறகு இங்கே வரவே வராது. சில நாளைக்கு மட்டும் இங்கே இருந்து வேண்டிய வசதிகளை அனுபவித்துவிட்டு இறகு முளைத்ததும் பறந்து போய்விடக் கூடிய இந்தக் குருவியிடம் இவ்வளவு அன்பு வைக்கிறீர்களே. நீங்கள் ஜனகர் அல்ல, அப்பா; ஜடபரதர்! அவர் மானைக் கண்டு மனம் தடுமாறினார். நீங்கள் குருவியைக் கண்டு ….”

“அதிகமாகப் பேசாதே. நீ எனக்குப் புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும் எல்லாம். இறகு முளைத்தால் பறந்து விடுமாம். உண்மைதான். நீயும் ஒரு நொண்டிக் குருவிதானே! கொஞ்ச நாள் இங்கே இருந்து உண்டு உடுத்துக் களித்துப் பேசி விளையாடுகிறாய். இப்பொழுதே உனக்குச் சிறகு முளைத்துவிட்டது: நீ வேறு எங்கேயோ ஒரு புது வீட்டுக்குப் பறந்து போகப் போகிறாய் என்பதும் நிச்சயம். நீ என்னை விட்டுப் பிரிந்து செல்லக் கூடியவள் என்பதற்காக உன்னை நான் உதாசீனமாக நடத்துகிறேனா?” அப்பாவின் குரல் தழுதழுத்தது. மேலும் ஏதோ பேச ஆரம்பித்தார். இதுவரை அவர் பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் என்னை முன் போலக் குத்திக்கொண்டிருந்தது. என் பொறுமை எல்லை மீறியது. மேலும் அவர் பேச்சைக் கேட்க எனக்கு விருப்பமில்லை.

“எனக்குப் பிடிக்கவில்லை. துரத்திவிட்டேன். இந்த நொண்டிக் குருவியையும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் துரத்திவிடுங்கள்! எங்கேயாவது போய்ச் சாகட்டும்” என்று ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு மேலே அங்கே நிற்க முடியாமல் என் அறைக்குச் சென்று படுத்தேன்.

அப்பாவுடன் சேர்ந்தாற்போல இருபத்து நான்கு மணி நேரம் நிம்மதியாகவே இருக்க முடியாது. நேற்று மாலை எவ்வளவு ஆசையாக வந்தேன்! ஏதோ அலட்சியமாகப் பேசி என் மனத்தை நோகச் செய்தார். காலையிலே சர்க்கரைப் பாகிலே தோய்ந்த திராட்சை போல இனிக்க இனிக்கப் பேசினார். இப்பொழுதோ வேப்பங்காய், எட்டிக்காய், சுண்டைக்காய், பாகற்காய் இவை எல்லாம் சேர்ந்தாற்போலக் கசப்பாகப் பேசுகிறார். எப்படித்தான் இவருடன் அம்மா பல வருஷம் வாழ்க்கை நடத்தினாளோ?

‘எல்லாவற்றிலும் அம்மாவையே உரித்து வைத்தாற்போலப் பிறந்திருக்கிறாயே. இந்தப் படபடப்பும் ஆத்திரமும் எங்கிருந்து வந்தனர்’ என்று அப்பா என்னைப் பல தடவை கேட்டிருக்கிறார். எங்கிருந்து வந்தன? அப்பாவிடம் உள்ள குணம் மகளுக்கு அமைந்ததில் என்ன பிசகு? அப்பா திட்டும் வசவுகளையும் செய்யும் கண்டிப்புகளையும் அம்மாவைப் போலப் பொறுமையாக என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியாது. இந்தத் தொல்லை போதும் என்றுதான் அம்மா என்னைத் தவிக்க விட்டுச் சென்றாள். தாயில்லாப் பெண் என்று ஊரார் கண்டும் காணாமலும் பேசுகிறார்கள். அப்பா நேரிலேயே, “நொண்டிக் குருவி, சீக்கிரம் தொலைந்தால் நல்லது” என்கிறார்.

பல விதமான எண்ணங்கள் தோன்றித் தோன்றி மூளையைக் குழப்பின. கண்களில் நீர் மல்கிக்கொண்டே இருந்தது. எனக்குத் தெரிந்து இந்த மாதிரி அம்மா செத்தபோதுதான் அழுதிருக்கிறேன். நானும் அம்மாவைப்போல நிம்மதியாகச் செத்துவிட்டால்? சீசீ! நான் ஏன் சாக வேண்டும்? அதற்குமேல் என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. என் அறையில் சூழ்ந்திருந்த இருள் என் மனத்தையும் கவ்விக்கொண்டது.

காலையில் எழுந்திருக்கும் போது மணி எட்டு இருக்கும். தலையணை முழுவதும் கண்ணீரால் நனைந்திருந்தது.

“ஜானகி” என்ற அப்பாவின் குரல் கேட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து கதவைத் திறந்தேன்.

“ஏன் அம்மா, உடம்பு சரியில்லையா?” என்றார் கனிந்த குரலில்.

“ஆமாம்” என்றேன். உடனே அதைத் தொடர்ந்து, “இல்லை” என்றேன்.

“ஏன், ஒரு மாதிரியாக இருக்கிறாயே!” என்று நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.

“உடம்பு சுடுகிறதே” என்றார். அவருக்கு இருந்த கவலை வார்த்தை களில் பிரதிபலித்திருந்ததைக் கவனித்தேன், ‘உள்ளத்தில் எழுந்த கொதிப்பின் வேகம்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

“ஜானகி, நேற்று இரவே உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன். இன்று உன்னைப் பார்க்க யாரோ வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை வேறு ஒரு நாளைக்கு வரச் சொல்லிவிடுகிறேன்.”

“என்ன அப்பா, ஏதோ புதிர் போடுகிறீர்களே” என்று ஆச்சரியத் துடன் கேட்டேன்.

“ஜானகி, உனக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்வதாக உன் அம்மாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறேன். உன் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை அறிய இயலாதவன் அல்ல நான்.”

அவர் சற்று நிறுத்திக்கொண்டார். தம் மனத்தை அழுத்திவந்த பாரத்தில் சிறிது குறைந்ததுபோல ஒரு பெருமூச்சு விட்டார். அவரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. நேற்று இரவு கடுமையாகப் பேசியதற்காக அவர் எவ்வளவு வருத்தப்பட்டுப் பேசுகிறார்! அவருடைய இளகிய உள்ளம் தெரியாமல் நானும் படபடப்பில் பேசிவிட்டேன்.

மயிலாப்பூரில் அவர் எனக்காக ஒரு வரன் பார்த்திருக்கிறாராம். உத்தியோகம், அந்தஸ்து, குணம் எல்லாம் விசாரிக்காமலா இருப்பார்? எல்லா வகையிலும் எனக்கு ஏற்ற வரனாம். அவர்கள் வீட்டில் என்னை நன்றாகவே தெரியுமாம். அவர் என் யோசனையைக் கேட்டார். வேளைக்கு ஒரு தரம் இயல்பு மாறும் அப்பாவுடன் இருந்து சலித்த நான், வரனைப் பார்க்காமலே கல்யாணம் செய்து கொள்ளத் தயார் என்று துணிந்து சொல்லி விட்டேன்.

அதிகம் வளர்ப்பானேன்? என் கல்யாணம் வைகாசி மாதத்தில் விமரிசையாக நடைபெற்றது. என் கைபிடித்தவர் எல்லா வகையிலும் உயர்ந்தவர் தாம். அப்பா எனக்கு எப்பொழுதுமே நல்லதைத்தான் செய்துவருகிறார். முது நெல்லிக்காய் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பார்களே, அது உண்மைதான். அப்பாவின் வார்த்தைகள் எப்போதும் இனிமையாகத்தான் இருக்கின்றன. நான் அவரை எடுத்துக்கொள்ளும் முறையில்தான் மாறுதல்கள் இருக்கின்றன.

கல்யாணம் முடிந்ததும் கையோடு அவர் என்னை அழைத்துப்போக விரும்பினார். துணைக்கு அப்பாவை வரச் சொன்னேன். அவர் வர மறுத்துவிட்டார்.

“ஜானகி, உலகத்தவர் கண்களில் உன் அம்மா என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள்; ஆனால் உண்மையில் நான் அவளை விட்டுப் பிரியவே இல்லை. அன்றும் இன்றும் அவள் என் மனத்தில் நிலையாக இருந்து வருகிறாள். இன்று நீயும் என்னிடமிருந்து புக்ககம் செல்கிறாய். நான் உன்னை ஆத்திரத்தில் நொண்டிக் குருவி என்றேன். நான் தான் இன்று நொண்டிக் குருவி என்று உணர்ந்து கொண்டேன். இந்தக் குருவியை அம்மா கொஞ்ச காலம் பராமரித்து வந்தாள். நீ சிறிது காலம் கவனித்து வந்தாய். இனி இது தன் சொந்த இறகால்தான் பறந்து திரிந்து உணவு தேடிக்கொள்ள வேண்டும். நான் இனிமேல் தனி ஆள். பிறர் அன்பை யாசித்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னை விட்டுப் பிரிந்து செல்கிறாய், சௌக்கியமாக இரு” என்று ஆசீர்வதித்து வழி அனுப்பினார்.

அப்பாவின் வார்த்தைகள் என் மனத்தை உலுக்கிவிட்டன. அவர் என் பிரிவைத் தாங்க மிகவும் கஷ்டப்படுகிறார் என்பதை உணர்ந்து காரில் என் கணவருடன் மயிலாப்பூருக்குச் சென்றபோது அப்பாவின் வாடிய முகமே என் கண் முன் ஓவியம் போல நின்றிருந்தது. மிதிலை நகர் எரியும் போது வேதப் பொருளை விசாரணை செய்து கொண்டிருந்த ஜனகனைப் போன்றவர் அல்ல என் தந்தை; மானைக் கண்டு மனம் நெகிழ்ந்த ஜடபரதரும் அல்ல; தாயற்ற சகுந்தலையை ஆசிரமத்தில் வளர்த்த இளகிய உள்ளம் பெற்ற கண்வர் என்றே அவரைச் சொல்லவேண்டும்.

“வீடு வந்ததும் பேசலாம் என்று மௌனமாக இருந்தாயா? இதோ லஸ் சர்ச் ரோட் வந்துவிட்டது. வீடும் வந்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டே பெரிய பங்களாவுக்குள் காரைக் கொண்டு போய் நிறுத்தினார் என் கணவர்.

வந்ததும் வராததுமாக அவர் பங்களா முழுவதையும் எனக்குச் சுற்றிக் காண்பிக்கிறேன் என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். எனக்கு வெட்கமாக இருந்தது; அவர் பின்னால் செல்வதற்கு ஆசையாகவும் இருந்தது.

“மாடியில் சிறிய குடித்தனம் ஒன்று இருக்கிறது. வா, அங்கேயும் போய்ப் பார்க்கலாம்” என்று அவர் அழைத்தார். என் கையைப் பிடித்துத் தடதடவென்று இழுத்துக்கொண்டே மாடிக்குச் சென்றார். புதிதாகக் குடித்தனக்காரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்போகிறாரே என்ற சங்கோசத்தினால் என் முகம் சிவந்தது.

மேலே மாடியில் பெரிய ஹால் ஒன்று இருந்தது. புத்தக அலமாரிகள் நிறைந்திருந்தன. ஹாலின் நடுவே கச்சிதமாக நாலைந்து ஸோபாக்கள் போட்டிருந்தார்கள். சுவரில் ரவிவர்மாவின் சகுந்தலை ஓவியம் மாட்டியிருந்தது. அவள் துஷ்யந்தனுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறாள். நானும் நாளைக்கே அப்பாவுக்கு என் நன்றியை யெல்லாம் தெரிவித்து ஒரு நீண்ட கடிதம் எழுதத்தான் போகிறேன்.

“ஜானகி” என்று அவர் அழைத்த திக்கிலே சென்றேன்.

“இதோ பார். இதுதான் இங்கே உள்ள ஒண்டுக் குடித்தனம். மூன்று மாதத்துக்கு முன் என் மோட்டார் அடியில் சிக்கிச் சாக இருந்தது, இந்தக் குருவிகளில் ஒன்று. அதன் நொண்டிக் காலுக்கு யாரோ அக்கறையாக மருந்து வேறு கட்டியிருந்தார்கள். வளர்த்தவர்களின் அன்பைத் தெரிந்து கொள்ளாத இந்தப் பொல்லாத நொண்டிக் குருவி இங்கே ஓடி வந்துவிட்டதே! காக்கை பருந்து கண்களில் பட்டிருந்தால் இதன் கதி என்ன ஆகியிருக்கும்! ஏதோ என்னிடம் வந்தது, பிழைத்தது!” என்று சொல்லிக்கொண்டே போனார்.

என் தலை கவிழ்ந்தது. கண்களிலிருந்து இரண்டு சொட்டு நீர்த் திவலைகள் விழுந்து என் கணவரின் பாதத்தை நனைத்தன.

அவர் திடீரென்று பேச்சை நிறுத்தி, என் முகத்தை நிமிர்த்தினார்.

“ஏன், உனக்குக் குருவிகளைக் கண்டால் பிடிக்காதா? உனக்குப் பிடிக்கவில்லை என்றால் துரத்திவிடுகிறேன்” என்றார் அவர். அவருடைய சாந்தம் ததும்பும் வார்த்தைகள் என் மனத்தின் இருளைப் போக்கடித்தன. உண்மையான அன்பை உணர்ந்தேன். குழந்தையாகட்டும், குருவியாகட்டும், வளர்ப்பவர்களுக்கு வாஞ்சை ஒன்றாகத் தான் இருக்கும் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

“வேண்டாம், நொண்டிக் குருவி இங்கேயே இருக்கட்டும். எனக்குக் குருவிகளிடம் மிகவும் பிரியம் உண்டு” என்று மனப்பூர்வமாகப் பதில் அளித்தேன்.

– ஜனவரி, 1954

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *