கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 12,983 
 

லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே செங்கோடன், சேதி சொல்லி அனுப்பியிருந்தான். பிறந்தது பெண்ணாகப் போனதால் மூன்று மாதங்கள் வரை யாருமே வந்து குழந்தையையும் லட்சுமியையும் பார்க்கவேயில்லை. செங்கோடனும் நடையாய் நடந்தான். சென்றமாதம்தான், மகனை மட்டும் அனுப்பி வைத்தாள், மாமியார்காரி. குழந்தையைச் செங்காடன் புகுந்த வீட்டுக் கொண்டு வந்து விடும் போது, தங்கச்சங்கிலி, வளையல், இடுப்புக்கு அரைஞாண், கொலுசு அத்தனையும் போட்டு அழைத்து வர வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். லட்சுமியின் புருஷன் நல்லவன்தான். ஆனால் வாயில்லாப் பூச்சி. அம்மா சொல்லுக்கு எதிர்ப்பேச்சு பேசத் தெரியாமல் அவள் சொல்வதை அப்படியே வந்து ஒப்பித்துவிட்டுப் போனான்.

செங்கோடனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இத்தனையும் செய்து அனுப்பி வைக்க அவனுக்கு ஏது பணம்? ஏற்கெனவே கல்யாணத்துக்கு வாங்கிய கடனே, நிலுவையில் உள்ள நிலையில் இது எப்படிச் சாத்தியம்? ஒவ்வொரு முறையும் லட்சுமி பிறந்த வீட்டுக்குக் கண்ணைக் கசக்கிக் கொண்டு வரும்போதெல்லாம் செங்கோடனின் வீட்டில் ஒவ்வொரு பொருளாக மார்வாடிக் கடைக்குப் போகும்.
இவ்வளவுப் பெரிய தொகைக்கு எங்கே போவான்? யோசித்தே மேலும் ஒரு மாதம் ஓடிவிட்டது. அவனது மனைவி அஞ்சலையிடமும் ஒரு பொட்டு நகைகூட கிடையாது. இந்த நிலையில்தான் செங்கோடனுக்கு இப்படியொரு எண்ணம் வந்தது. அவனிடம் இருந்த செவலைப் பசுவையும் கன்றுக்குட்டியையும் விற்றுவிட முடிவு செய்தான்.

செவலைப் பசு அவர்கள் வீட்டுக்கு வந்த நாள் முதல், லட்சுமியே வந்ததுபோலத்தான் நினைத்தார்கள் செங்கோடனும் அஞ்சலையும். ஆனால், இப்போது இருக்கும் நிலையில் அந்த லட்சுமியை வீட்டை விட்டு அனுப்பினால்தான், அவர்களது பெண் லட்சுமி புருஷன் வீட்டுக்கு வாழப் போக முடியும்.

புதிதாகக் கன்று போட்ட பசுவை விற்பதற்கு முடிவு செய்து, மாட்டுத் தரகர் காளியிடம் சொல்லியிருந்தான். அவனும் மறுநாள் காலையிலேயே வந்து மாட்டையும் கன்றுக்குட்டியையும் பார்த்துவிட்டு உடனேயே ஓட்டிப் போக முயன்றான். ஆனால், செங்கோடனுக்கு வெள்ளிக்கிழமையும் அதுவுமாக செவலைப் பசுவை வீட்டை விட்டு அனுப்ப மனசு இல்லாததால் காளியை மறுநாள் வரச் சொல்லி அனுப்பிவிட்டான்.

காளியின் வீட்டில் வந்து ஒரு வியாபாரி செவலைப் பசுவையும் கன்றையும் பார்த்துப் பேக போவதாகச் சொல்லியிருந்தான். நல்ல விலைக்குப் போவதாகச் சொல்லியிருந்தான். நல்ல விலைக்குப் போனால் கொடுப்பதாகவும், அல்லது மாட்டுச் சந்தையில் கொண்டு போய் விற்று விடப் போவதாகவும் காளி, செங்கோடனிடம் சொன்னான். வரும் பணத்தில் காளிக்கென்று தனியாக கமிஷன் பணம் வேறு கொடுத்தாக வேண்டும். மீதியில் குழந்தைக்கு நகையும் சட்டையும், லட்சுமிக்கு ஒரு பாலியெஸ்டர் புடவையும் ரவிக்கையும் வாங்கிக் கொடுத்து அவள் புருஷன் வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டியதுதான்.
இன்று ஒரு நாள் மட்டம் தான் செவலைப் பசுவும் கன்றும் அவன் வீட்டில் இருக்கும். பார்த்து பார்த்து ஆசையாய் வளர்த்த பசு, கொஞ்சமும் வயிறு வாடாமல் தீனி வைப்பாள் அஞ்சலை.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்கூட கேட்பார்கள். “இன்னும் ஒரு அரை லிட்டர் பால் கறக்கலாமே! அதற்குள் ஏன் கன்றுக்குட்டியை அவிழ்த்து விடுகிறாய்?’ என்று. செங்கோடனுக்கு காசு முக்கியமில்லை. அவனுக்கு செவலைப் பசுவும் கன்றும் பிள்ளை மாதிரி. அப்படியெல்லாம் செல்லமாய் வளர்த்த பசுவை இப்படி விற்கும் நிலை வந்துவிட்டதை எண்ணி கண் கலங்கினான்.

செவலைக்குத் தீனியைக் கலக்கி வைத்துவிட்டு முதுகைத் தடவிக் கொடுத்தபோது, தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு இவனை நக்கியது. செங்கோடனுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, வீட்டிலிருக்கப் பிடிக்காமல் வயல் வரப்பில் சுற்றி விட்டு பொழுது சாயத்தான் வீட்டுக்கு வந்தான். வீட்டில் விளக்குகூட ஏற்றாமல் அஞ்சலை உட்கார்ந்திருந்தாள். கொல்லையில் மகள் லட்சுமி குழந்தையை வைத்துக் கொண்டிருந்தாள். சமையல் செய்ததற்கான அறிகுறியே இல்லாமல் அடுப்பு அணைந்து கிடந்தது.

கொட்டிலில் செவலைப் பசுவுக்கு கலக்கி வைத்த தீனி அப்படியே இருந்தது. செங்கோடனுக்கு கவலையாகப் போயிற்று. பிரித்துப் போட்ட வைக்கோலையும் தொடவேயில்லை செவலைப்பசு. செங்கோடனுக்கு தானம் தரகனும் பேசியது ஒருவேளை இந்தப் பசுவுக்குப் புரிந்து போயிருக்குமோ என்றுகூட தோன்றியது.

மறுநாள் காலை காளி வந்து அட்வான்ஸ் பணமாக ஆயிரத்து ஐநூற்று ஒன்றைக் கொடுத்தான்.

செவலைப் பசுவை வாங்கவிருக்கும் வியாபாரியைச் செங்கோடனுக்குத் தெரியும் என்றும், எதிர்பார்த்த விலையைவிட நல்ல விலைக்குக் கேட்பதாகவும் சந்தோஷமாகச் சொன்னான். செவலைப் பசுவை தன் வீட்டில் கொண்டு போய் வைத்துக் கொள்ளப் போவதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அந்த வியாபாரி முழு பணத்தையும் கொடுத்துவிட்டு பசுவையும் கன்றையும் ஓட்டிச் செல்ல இருப்பதாகவும் சொன்னான்.

செங்கோடனுக்கு நெஞ்சடைக்க செவலையைத் தடவித் தடவிக் கொடுத்தான். கயிற்றை அவிழ்த்து காளியிடம் கொடுத்தான். கன்றுக்குட்டியை தூக்கிக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்தான். அஞ்சலை அழுதுகொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

செவலைப் பசு வீட்டு வாசலை விட்டு நகர மறுத்து அடம் பிடித்தது. காளி, செங்கோடனுக்குப் பயந்து எதிரே அடிக்காமல் குச்சியால் தட்டித் தட்டி தள்ளிக் கொண்டு போனான்.

வீடு வெறிச்சோடி போய் கிடந்தது. அன்றும் யாருமே சாப்பிடவில்லை. ஏதேச்சையாய் கொட்டில் பக்கம் போன செங்கோடனுக்கு, கொட்டில் வெறிச்சோடி கிடப்பதைப் பார்த்ததும் பகீரென்றது.
கழுத்து மணி குலுங்க ஓடிவரும் கன்றுகுட்டி கட்டயிருந்த இடத்தில், அப்படியே உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழுதான். இரவெல்லாம் கொட்டிலில் ம்மா… ம்மா… ம்மா என்று சத்தம் கேட்பது போலவே இருந்தது. தூக்கம் வர மறுத்தது.

செவலையை வாங்கப் போகும் வியாபாரியிடம் செவலையும் கன்றும் படப்போகும் அவஸ்தையை நினைத்தபோது சட்டென்று நெஞ்சை அடைப்பதை போல இருந்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

தன் பெண்ணையும் குழந்தையையும் வாழ வைப்பதற்கு, செவலையையும், கன்றையும் பலி கொடுப்பதுபோல தோன்றியது. இடுப்பில் முடிந்து வைத்திருந்த ஆயிரத்து ஐநூற்று ஒரு ரூபாய் பணம் பாவமூட்டையாகக் கனத்தது.

லட்சுமி இதுவரை பலமுறை மாமியார்காரியால் விரட்டப்பட்டு வீட்டுக்கு வந்திருக்கிறாள். தலை தீபாவளி, தலைப் பொங்கல், ஆடிச்சீர் என்று வீட்டையே துடைத்து செய்தாயிற்று. இப்போது செவலையையும் கன்றையும் விற்று, அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நாளை குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தல் என்று அடுத்த செலவுக்கு அவள் அழுது கொண்டு வரும்போது செங்கோடன் வீட்டில் விற்பதற்கு ஒன்றும் இல்லை.

செங்கோடன் முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான். காசு பணம் எதிர் பார்க்காமல் கட்டிய பெண்சாதியும், குழந்தையும் தான் வேண்டும் என்று மருமகன் வருகிறானோ அதுவரை மகள் லட்சுமியை தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்வதாக முடிவு செய்து கொண்டான்.

நாளை விடிந்ததும் முதல் காரியமாக காளியிடம் போய் அட்வான்ஸ் பணம் ஆயிரத்து ஐநூற்று ஒன்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, செவலையையும் கன்றையும் ஓட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று தீர்மானித்ததும்தான் மன உளைச்சல் அடங்கியது.

இருட்டு, நீங்கி வானத்தில் வெளிச்சம் வந்தபோது செங்கோடன் மனதிலும் ஒரு தெளிவு.

மறுநாள், இலேசாக விடிய ஆரம்பித்ததும் செங்கோடன் எழுந்து போய் வாசல் கதவைத் திறந்தான்.

வாசலில் செவலைப்பசு நின்று கொண்டிருந்தது கன்றுக்குட்டியுடன்!

– மார்ச் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *