கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 2,307 
 
 

அரண்மனை நந்தவனத்தில் மாலை நேரத்தில் பணிப்பெண்களுடன் பூக்களை ரசித்தபடி, வண்டுகளின் ரீங்காரத்தைக்கேட்ட படி, நறுமணத்தை நுகர்ந்தபடி உலா வந்த போது ஒரு பெரிய நாக பாம்பு இளவரசி நவ்யாவின் கால்களைச் சுற்றிக்கொண்டது. உடன் வந்த பணிப்பெண்கள் “பாம்பு, பாம்பு” எனக்கத்தியவாறு அலறியடித்து ஓடினரே தவிர ஒருவர் கூட இளவரசியைக்காப்பாற்ற முன்வரவில்லை.

பூச்செடிகளுக்கு பாத்தி கட்டி நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ஓர் இளைஞன் ஓடி வந்து லாவகமாக பாம்பை கையில் பிடித்து அங்கே வைத்திருந்த ஒரு மண் பானையில் போட்டு மூடினான். மயங்கிக்கிடந்த இளவரசியைத்தொட்டுத்தூக்கி அருகே இருந்த மேடை மீது படுக்க வைத்து காலில் பாம்பு கடித்த இடத்தை தன்னிடமிருந்த கத்தியில் கீரி விட்டு, ரத்தத்தை பிதுக்கி விசத்தை எடுத்தவன், ஒரு மூலிகை தளையைக்கசக்கி கடிபட்ட இடத்தில் விட்ட போது மயக்கமடைந்திருந்த இளவரசி கண் விழித்து அவனைப்பார்த்தாள். அவனுடைய மேலாடையற்ற கம்பீரமான, வீரனுக்குரிய கட்டுடலைக்கண்டு வியந்ததோடு தன்னைக்காப்பாற்றிய தெய்வமாக எண்ணி கைகூப்பி வணங்கினாள்.

அப்போது அரண்மனையிலிருந்து பலபேர் வந்து கூடி விட்டனர். இளவரசிக்கு எதுவுமாகவில்லை. தோட்டக்காரன் காப்பாற்றி விட்டான் எனத்தெரிந்ததும் மன்னரும், மகாராணியும் நிம்மதியடைந்தனர். நாக பாம்பை தைரியமாக கையில் பிடித்ததோடு, பாம்பு கடிக்கு வைத்தியம் செய்ததை எண்ணி வியந்து பலரும் பாராட்டினாலும் மொழி புரியாமல் விழித்து நின்றான்.

“இப்படியொரு திடகாத்திரமான, இளவரசனைப்போன்ற தோற்றமுள்ள ஒருவன் எதற்காக தோட்ட வேலை செய்ய வேண்டும்? என் உயிரைக்காப்பாற்றிய இவனை அரண்மனையில் எனது பாதுகாவலனாக உடனே நியமித்து விடுங்கள்” என தனது அன்பு மகள் கூறிய போது மறுப்பேதும் கூறாமல் சம்மதித்து கட்டளையிட்டார் மன்னர் ஆதித்தர்.

ஆதித்தருக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லையெனும் நிலையில் வடக்கில் பெரிய மலை, கிழக்கிலும்,தெற்கிலும், மேற்கிலும் கடல் என ஒரு பெரிய தேசத்தையே தன் வீரத்தால் ஒன்றிணைத்து சக்கரவர்த்தியாக ஆட்சி புரிபவர்.

மன்னர்களுக்களெல்லாம் மாமன்னரான தன் தந்தை அடுத்து மேக தேசத்தின் அரியணையில் தனக்குப்பின் மன்னராக அமரவைக்க ஒரு மருமகனை, மகளையும், மக்களையும் காக்கும் ஒரு வருங்கால மாவீரனைத்தேடிக்கொண்டிருந்தபோது அரண்மனை தோட்டக்காரன் மீது தான் காதல் கொண்டதையறிந்தால் என்னாகுமோ? அவனைக்கொன்று விடுவாரோ? என நினைத்து அஞ்சி நடுங்கினாள் இளவரசி நவ்யா.

என்ன பேசினாலும் புரியாமல் சாடையில் சொல்வதை வைத்து வேலைகளை செய்து வரும் பாது காவலனிடம் தன் மனதை முழுமையாக பறிகொடுத்து விட்டாள் இளவரசி. அவனிடம் பெயர் கேட்டாலே பதில் சொல்லத்தெரியவில்லை என்பதையறிந்த போது அவன் தம் தேசத்தில் வேறு மொழி பேசும் இனத்தைச்சேர்ந்தவன் என்பதைப்புரிந்து கொண்டவள், அரண்மனையில் வேலை பார்ப்பவர்களில் வேறு மொழி தெரிந்தவர்களை அழைத்து வந்து அவனுடன் பேச வைத்தும் பலனில்லை.

நாக பாம்பை கையில் பிடித்தவனென்பதால் அவனை “நாகா ” என அழைத்த போது திரும்பிப்பார்த்தான். அப்போது முதல் அவனை நாகா என்றே நவ்யா அழைத்தாள். அப்பெயர் அவனுக்கும் பிடித்திருந்தது. இளவரசி கண்ணசைவிலும், கை சாடையிலும் சொல்லும் வேலைகளை உடனே செய்ததோடு, அவள் மீது ஒரு தூசியும் விழாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டதையறிந்த மன்னர் அவனையும் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்க வைத்து மகிழ்ச்சிப்படுத்திய போது அவனை விட அதிகம் மகிழ்ந்தது இளவரசி நவ்யா தான்.

“இவனை யாரென விசாரிக்க நாம் பேசும் மொழி புரியவில்லை. நாம் மலை தேசத்தை போரிட்டுப்பிடித்த போது உயிருக்கு பயந்து நம் வீரர்களுடன் கலந்து மாறு வேடத்தில் இங்கே வந்திருக்க வேண்டும். நம் வீர்கள் சிலருக்கு இவனை யாரெனத்தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் விசாரித்தால் உயிர் பயத்தில் உண்மையைக்கூற மாட்டார்கள். மலை தேசத்து பாசை தெரிந்த ஒருவரை அழைத்து வரச்சொல்லி நம் தளபதியிடம் கூறியுள்ளேன். வரட்டும் அப்போது விசாரித்து விடலாம். பார்க்க வெகுளியாக, பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் நல்லவனைப்போல் நடந்து கொள்கிறான். எதற்கும் இவன் மீது ஒரு கண் இருக்கட்டும்” என விருந்தில் கலந்து கொண்ட மந்திரியாரின் பேச்சை ஆமோதித்த தந்தையின் செயலால் கவலை கொண்டாள் இளவரசி.

மலை தேசத்திலிருந்து ஒருவரை அழைத்து வந்திருப்பதாக செய்தி வந்தவுடன் அவனைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தாலும், ‘அவனுக்கு தண்டனை ஏதும் கிடைத்து விடுமோ?’ எனும் கவலையில் அவனை விசாரிக்கும் சபைக்கு தானும் சென்றாள் இளவரசி.

நாகாவை நேருக்கு நேர் பார்த்த மலை தேசத்து நபர் திடீரென மயங்கி கீழே சரிந்து விழ, அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் இறந்து விட்டதாக கூறிய போது மன்னருக்கு ‘மந்திரி சொன்னது உண்மையாக இருக்குமோ?’ என சந்தேகம் அதிகரித்தது. இன்னும் பலரை வரவழைத்து காட்டியபோது வந்தவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. யாரும் பேசவில்லை. மன்னருக்கு நாகாவின் மீது சந்தேகமும், பயமும் அதிகரிக்க அவனை அரண்மனை சிறையில் அனைத்து சௌகர்யமும் கொண்ட தனியறையில் அடைக்க உத்தரவிட்டார் சக்ரவர்த்தி ஆதித்தர்.

நவ்யாவுக்கு அன்று முதல் உணவும், உறக்கமும் பிடிக்காமல் வாடிய முகத்துடன் தனது அறையிலேயே முடங்கி சோர்ந்து கிடப்பதைக்கண்டு மன்னர் வருத்தமடைந்ததோடு, அவளை மகிழ வைக்க திருமணம் ஒன்று தான் வழி என நினைத்து பல சிறிய தேசத்து இளவரசர்களை வரவழைத்து சுயம்வரம் நடத்தினார். சுயம் வரத்தில் தன் மகள் நவ்யாவுக்கு ஒருவரைக்கூட பிடிக்கவில்லை என்பதையறிந்து அதிர்ச்சியடைந்தார் மன்னர். அவள் காவல்காரன் நாகாவை காதலிப்பதால் தான் இவ்வாறு மனமுடைந்து வாடிக்கிடக்கிறாள் என்பதை மன்னர் அறிந்திருக்கவில்லை. அவனைக்காதலிப்பதாக சொன்னால் அவனைக்கொன்று விடுவார்கள் என்று மனதோடு மூடி மறைத்தாள் இளவரசி.

வைத்தியர்கள் பலர் வரவழைக்கப்பட்டனர். அதில் மன நோய் மருத்துவர்களும் இருந்தனர்.

மன நோய் மருத்துவர் இளவரசியின் முகத்தைப்பார்த்ததும் “காதல் நோய் வந்து வாட்டுகிறது. காதலனை பிரித்து வைத்தால் தான் முகம் இது போல இருக்கும்” என கூறியதும் திடுக்கிட்ட மன்னர், இப்படியொரு நிலை தன் மகளுக்கு வரக்கூடாது என கருதித்தான் அரண்மனையிலிருந்து இளவரசியை வெளியே செல்லாமல் பார்த்துக்கொண்டார். அப்படியிருந்தும் இப்படியொரு நிலை‌ வந்ததற்கு காரணமானவர் யார்? என்பதையறிந்து தெரிவிக்குமாறு ஒற்றர்களுக்கு உத்தரவிட்டார்.

ஒற்றர்கள் மூலம் தனது காதல் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள் நவ்யா. அதே சமயம் நாகாவுக்கு சிறையில் நல்ல உணவு கிடைக்கிறதா? என்பதை அரண்மனை சேவகர் ஒருவர் மூலம் அறிந்து நிம்மதியடைந்தாள்.

மேகதேசம் எனும் பெயர்கொண்ட தற்போதைய தேசம் முன்பு நாகதேசம் எனும் பெயரில் பெரிய வல்லரசாக பலநூறு ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைக்கொடுத்து, கடல் கடந்த தேசங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. போரிட்டு யாராலும் வெல்ல முடியாத தேசத்தை சூழ்ச்சியால் மந்திரியாக இருந்த ஆதித்தரின் தந்தை மாதித்தர் மன்னரையும், அவரது வாரிசுகளையும் வனத்துக்கு விலங்குகளை வேட்டையாட அழைத்துச்சென்று மிருகங்களோடு அவர்களை ஒரு குகையில் அடைத்து கொன்று விட்டு ஆட்சியைக்கைப்பற்றி விட்டார். தந்தையின் இந்த செயலால் தான் தனக்கு ஆண் வாரிசு இல்லையென நம்பினார் ஆதித்தர்.

உறங்கிக்கொண்டிருந்த இளவரசி திடீரென “நாகா” என கத்தியதைக்கண்டு அரண்மனையே விழித்துக்கொண்டது. இதைக்கேட்ட மன்னர் அதிர்ச்சியடைந்தார். நாகாவை சிறையில் அடைத்த பின்னர் தான் தன் மகளின் நிலைமை இவ்வாறு மோசமானது. அவளது உடலும் உறக்கமின்றி நேரத்துக்கு உண்ணாமல் மெலிந்தும் போனது. ஒற்றர்களால் கண்டு பிடிக்க முடியாததை ஒரு சத்தத்தில் மன்னர் கண்டு பிடித்து விட்டார்.கோபத்துடன் மகளின் முகத்தை ஏறிட்டார்.

“கனவு. என் கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்து விட்டான். அதனால் தான் காவலன் நாகாவை அழைத்தேன்” என்றதும் மன்னருக்கு நிம்மதி வந்தது. ‘நாம் நினைப்பது போல் எதுவுமில்லை’ என புரிந்தவர் மீண்டும் உறங்கச்சென்றார்.

‘நாகா’ என நவ்யா கத்தியது கனவில் தன் கழுத்தில் கத்தி வைத்ததற்காக அல்ல. நாகாவின் கழுத்தில் ஒருவன் கத்தி வைத்ததற்கு. இதை தந்தையிடம் கூறியிருந்தால் நிஜமாகவே அவன் கழுத்தில் கத்தியை வைத்திருப்பார்கள் என்பதையறிந்து மாற்றிச்சொன்னதில் தன் மனதைத்தேற்றிக்கொண்டாள். தற்போது நாகாவின் மீது முன்பை விட நவ்யாவுக்கு காதல் அதிகரித்தது. அவனில்லாமல் தன்னால் வாழவே இயலாது என்பதை உணர்ந்தபோது மகிழ்ச்சியோடு பயமாகவும் இருந்தது.

இளவரசி நவ்யாவுக்கு நாகாவின் மீது காதல் வந்தது போல் நாகாவுக்கு நவ்யா மீது காதல் வந்திருக்குமா? என்பது தெரியாதவளாகவே இருந்தாள் நவ்யா. அவன் மனதில் தான் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? நமக்கு உணவு பிடிக்காமல், உறக்கம் பிடிக்காமல் இருப்பது போல் அவனுக்கு இருப்பதாக சேவகர் கூறவில்லை. கொடுக்கும் உணவை மீதம் வைக்காமல் சாப்பிடுவதாகவும், எந்த நேரமும் உறங்கி கோவில் காளை போல் கொழுத்து இருப்பதாக சேவகன் கூறியபோது ‘தான் நாகாவின் மீது கொண்ட காதல் ஒரு தலைக்காதலாக மாறி விடுமோ?’ என வருந்தினாள்.

நவ்யாவைப்போலவே மன்னருக்கு ஒரு சந்தேகம். ‘தன் மகள் நாகாவை காதலித்திருந்தால் அவளைப்போல அவனும் உணவும், உறக்கமுமின்றி வருந்தி வாடிப்போயிருக்க வேண்டுமல்லவா?’ எனும் தனது சந்தேகத்தை பரிசோதிக்க மாறு வேடத்தில் சென்று நாகாவை கவனித்தார் மன்னர். அவனிடம் சிறையிலடைத்தபோதிருந்த நிலையில் எந்த மாற்றமுமில்லை என்பதையறிந்து ‘தன் மகள் வேறு யார் மீது காதல் கொண்டிருப்பாள்?’ என ஆராயத்தொடங்கினார். அழகான பல இளம் வீரர்களை அரண்மனையை விட்டு வெளியேற்றி முக அழகு குறைந்த வயதான வீரர்களை அரண்மனைக்குள் நியமித்தார்.

ஒரு நாள் இரவில் பணிப்பெண்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த மன்னர் என்னவென்று விசாரித்தார்.

நாகாவை அடைத்திருக்கும் சிறைப்பகுதியில் விசப்பாம்புகளை யாரோ கொண்டு வந்து விட்டதாகவும், அவை அவனைத்தீண்டாமல் அங்கிருந்த பல வீரர்களை கடித்ததில் அவர்கள் இறந்து விட்டதாகவும் அறிந்த போது மன்னருக்கு பொறி தட்டியது. ‘பாம்புகளே தீண்டாத மனிதர்களாக நாகவம்சத்தினர் மட்டுமே இருந்தனர். அவர்களை விலங்குகளுக்கு பலியாக்கி விட்டார் தன் தந்தை. அதில் யாராவது தப்பித்து, அவருக்கு பிறந்த ராஜ வம்ச குழந்தையாக நாகா இருக்கக்கூடுமோ?’ என சந்தேகித்தார்.

அரண்மனையில் அவனைப்பார்த்ததும் மயங்கி உயிரிழந்த நபரைப்பற்றி விசாரிக்க உத்தரவிட்டார் மன்னர். பலர் அழைத்து வரப்பட்டு விசாரித்ததில் காட்டில் சிறுத்தையால் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஒரு குழந்தை அவள் இறந்த பின் பிறந்ததாகவும், அந்த சிசுவை சிறுத்தை கொல்லாமல் சென்றதாகவும், அந்தக்குழந்தையை ஒரு காட்டுவாசி எடுத்து வளர்த்ததாகவும் அந்தக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி திருமணம் செய்ததில் அவருக்கு பிறந்த ஓர் ஆண் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதாகவும், அந்தக்குழந்தைக்கு முதுகில் பாம்பு மச்சம் இருப்பதாகவும் கூறியதைக்கேட்டவுடன் நாகாவின் முதுகைப்பார்த்த போது அப்படியெந்த மச்சமும் இல்லாமல், பதிலாக தீக்காயத்தால் முதுகு முழுவதும் ஏற்பட்ட தழும்பே இருக்க, நாக மச்சம் உள்ளவர்களைத்தேடி அழைத்து வர மன்னர் வீரர்களுக்கு உத்தரவிட்டார். தவிர மயங்கி விழுந்து இறந்தவர் பற்றி எந்த செய்தியும் அறிய முடியவில்லை.

இரவு முழுவதும் உறங்கவில்லை மன்னர். ‘நாக மச்சம் இருந்தால் நாகாவை கொன்று விடுவார்களோ?’ என

பயந்த நவ்யா, மச்சம் அவன் முதுகில் இல்லையென தெரிந்ததால் நிம்மதியானாள். நாக மச்சத்துடன் சிலரை வீரர்கள் அழைத்து வந்தாலும் அவர்களது முகத்தில் ராஜகலை இல்லாததால் அனுப்பி விட்டார் மன்னர். பிரச்சினை முடியட்டும் என்று சிலருக்கு முதுகில் நாகர் படம் பச்சைகுத்தி அழைத்து வந்தும் பலனின்றி வீரர்கள் சோர்ந்து போயினர்.

இந்த சோதனை இத்தோடு போதும். நாகா மிகவும் நல்லவனாக தம் மகளுக்கு மிகச்சிறந்த பாது காவலனாக உள்ளான் எனக்கருதிய மன்னர் அவனை நவ்யாவுக்கு காவலனாக மீண்டும் நியமித்த போது மகிழ்ந்த நவ்யா அன்று முதல் இயல்பு நிலைக்கு மாறியதையறிந்த மன்னர் நிம்மதியடைந்தார்.

ஒரு நாள் மன்னர் வேட்டைக்கு தன் பரிவாரங்களுடன் கிளம்ப, தானும் வருவதாக அடம்பிடித்தாள் இளவரசி. அவளுடன் நாகாவையும் காவலுக்கு அழைத்து வரும்படி மன்னர் சொல்ல மிகவும் மகிழ்ந்தாள்.

தனது தந்தை மாதித்தர் நாக வம்சத்தினரை மிருகங்களுக்கு பலியிட்ட குகையை தன் மகளுக்கு காட்ட ஆதித்தர் அழைத்துச்சென்ற போது உடன் வந்த நாகாவுக்கு உடல் நடுங்கியது. திடீரென வெறி கொண்டவன் போல குகைக்கு வெளிப்பக்கமாக ஓடினான். குகையின் வழியை வெளிப்பக்கத்திலிருந்து உட்பக்கம் திறக்க இயலாதவாறு அடைத்தான். மன்னரும், இளவரசி நவ்யாவும் உடன் வந்த வீரர்களும் பதற்றமடைந்தனர். குகையின் சிறிய சந்து வழியே நின்று அவர்களைப்பார்த்து முதலாகப்பேசினான் நாகா.

“நான் தான் இந்த மேகதேசத்தின்… இல்லை.‌. நாகதேசத்தின் வாரிசு. என் பெயர் நாகா. கற்பிணிப்பெண் என்றும் பாராமல் வயிற்றிலிருந்த நாக வம்ச சிசுவைக்கூட அழிக்க நினைத்தார் உனது தந்தை. ஆனால் சிறுத்தை சிசுவை கொல்லாமல் விட்டுச்சென்றது. ஒரு விலங்குக்கு இருந்த மன இரக்கம் கூட உன் தந்தை மாதித்தருக்கு இருக்கவில்லை. அப்படிப்பட்ட அரக்கனால் சூழ்ச்சி செய்து அபகரித்த நாட்டை ஆண்ட வாரிசுகளான உங்களுக்கு சிறைதண்டனை கொடுக்கப்போகிறது இந்த குகை. உனது தந்தையின் கொடூரச்செயலால் எனது பாட்டி சிறுத்தையால் இறந்த பின் எனது தந்தை பிறந்த இந்தக்குகையில் நீங்கள் ஆயுள் தண்டனையைப்பெறுவது தான் சரியான தீர்ப்பு. அரண்மனையில் என்னைப்பார்த்ததும் உயிரை விட்டவர் வேறு யாருமில்லை. எனது தந்தை தான் அவர். அன்று துக்கத்தை நான் வெளிப்படுத்தியிருந்தால் இன்று நாக தேசத்துக்கு விடுதலை கிடைத்திருக்காது. எனது வம்சத்து முன்னோர்களின் ஆத்மா இப்போது சாந்தியடையும். ஒரு காலத்தில் விலங்குகளும், பாம்புகளும் நிறைந்திருந்த இந்தக்குகையில் எதிரிகளை அவற்றிற்கு உணவாக்கினார்கள். எனது தந்தை இங்கே பிறந்த பின் விலங்குகளும், பாம்புகளும் வேறு இடத்திற்கு சென்று விட்டன. தற்போது மனித மிருகங்களாகிய நீங்கள் இதில் வசிக்கப்போகின்றீர்கள். நாக தேசம் வாழ்க, நாக தேசம் வாழ்க, நாக தேசம் வாழ்க” என மூன்று முறை கூறியவன், தனது உடம்பின் மீது இருந்த தோல் ஆடையை நீக்கி தன் முதுகை வெளியில் நின்றபடி ஆதித்தருக்கு காட்டினான். அதில் நாகர் மச்சம் இருந்தது.

அரண்மனைக்குச்சென்ற நாகாவை மக்களும் வீரர்களும் வாழ்த்தி வணங்கினர். மேக தேசம் எனும் பெயரை மீண்டும் நாக தேசம் என மாற்றியமைத்தனர். பல வருடங்களாக மழையின்றி வறட்ச்சியின் பிடியில் இருந்த நாட்டில் இடைவிடாது மழை பெய்ததில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அரண்மனையில் உள்ள சிறையிலிருந்த ஆதித்தரின் மனைவி மகாராணியை காட்டுக்குகைக்குள் தனது கணவருடன் அடைக்க மாமன்னர் நாகா உத்தரவிட்டபோது நாகாவைப்பார்த்த மகாராணி தனது முதுகைக்காட்டியபோது அதில் நாகர் மச்சம் இருந்தது கண்டு ஆச்சர்யமடைந்தார் நாகா. 

” சிறுத்தையால் இறந்த நாக தேசத்து மகாராணி எனது தாய் நாகம்மா கற்பத்தில் இரண்டு சிசுக்கள் பிறந்தன. அதில் ஒன்று உனது தந்தை. இன்னொன்று நான். என்னை வேட்டைக்கு வந்த மலை தேசத்து மன்னர் மார்த்தாண்டன் தனக்கு பெண் குழந்தை இல்லாத குறையைப்போக்க என்னை மட்டும் எடுத்துச்சென்று வளர்த்தார். ஆதித்தர் மலை தேசத்தை போரிட்டு தனது கட்டுக்குள் கொண்டு வந்து அரண்மனைக்கு வந்த போது எனதழகில் மயங்கி, என்னை கட்டாயமாக பெண் கேட்டு மனைவியாக்கி மலை தேசத்தை வரி செலுத்தாத சிற்றரசாக அறிவித்தார். முதலிரவு அறையில் கூட எனது முதுகில் இருந்த நாகர் மச்சத்தை அவர் பார்க்காதவாறு கவனமாக நடந்து கொண்டேன். எனது வயிற்றில் பிறந்த இளவரசி நவ்யாவுக்கும் அவளது முதுகில் நாகர் மச்சம் இருக்காது. நாகர் வம்சத்தின் பெண்களின் வயிற்றில் பிறப்பவர்களுக்கு இருக்காது. ஆண்களின் வாரிசுகளுக்கு மட்டுமே இருக்கும். நவ்யா உனக்கென பிறந்தவள். உன் நினைவாகவே வாழ்பவள். நீ அரண்மனை சிறையிலிருந்த போது உணவும், உறக்கமுமின்றி வருந்தியவள். அவளை தற்போது பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது. அவளை கட்டாயப்படுத்தி யாரோ திருமணம் செய்வது போல் நேற்று இரவு எனக்கு கனவு வந்தது. உடனே அவளைக்காப்பாற்ற வேண்டும்” என தனக்கு அத்தை முறையாகும் ஆதித்தர் மனைவி கூறியதும் தனது படைகளுடன் குகையை நோக்கி விரைந்தார் மன்னர் நாகா.

குகையின் முன் ஆதித்தரின் நண்பரும் காந்த தேசத்து சிற்றரசருமான கார்கன் தன் படைகளுடன் குகையைத்திறந்து நவ்யாவை தனது மகன் சிகனுக்கு மணம் முடிக்க ஆயத்தமாகியிந்ததும், நவ்யா கண்ணீருடன் சோகமாக அமர்ந்திருந்ததும் கண்டு தன் படைகளால் எதிரிகளுடன் சண்டையிட்டு முறியடித்து தனது முறைப்பெண்ணான அத்தை மகள் நவ்யாவை மீட்டு, அரண்மனைக்கு கூட்டிச்சென்று மணந்து அவளை மகாராணியாக்கிக்கொண்டார் சக்ரவர்த்தி நாகா. 

கதையாசிரியர்:

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *