ராஜேந்திரன் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 5,890 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை. சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்து அரண் மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கிநாட்டு அரசி, குத்தவை, உட்கார்ந்து கொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ராஜேந்திர சோழனுக்கு அப்பொழுது வயது சுமார் ஐம்பத்தைந் திருக்கும். குந்தவைக்கு நாற்பதிருக்கலாம். மன்னன், ராஜ்ய விவகாரங் களை இளவரசன் ராஜாதி ராஜன் கையில் ஒப்படைத்து விட்டார். அவர் எண்ணிய காரியங்களை அநேகமாகச் செய்து முடித்துவிட்டதால் ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டார்.

அரண்மனைக்குப் பக்கத்திலிருந்த சோழகங்கம் கொள்ளிடத்தின் பிரவாகத்தைப் பெற்று நிறைந்து தத்தளித்துக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் கருமேகங்கள் குவிந்து அஸ்தனமத்திற்கு முன்பே இருளைத் தோற்றுவித்தன. திடீரென்று ஒரு பெரும் காற்று, எங்கிருந்தோ கிளம்பி வந்ததுபோல வந்து, புழுதியைக் கிளப்பிற்று. மரங்கள் அலங்கோல மாக அங்குமிங்குமாகச் சாய்ந்து ஆடின. அவைகளின் நடுவே கங்கை கொண்ட சோழீசுவரத்தின் கோபுரம் உயர்ந்து கர்வத்துடன் தலை யெடுத்து நின்றது.

அரசன் அதன் கொடுமுடியை அகமகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ‘ராஜேந்திரா! என்ன அந்த சிகரத்தை அப்படிப் பார்க்கிறாய்?’ என்று குந்தவை கேட்டாள்.

‘அதுவா! என் கனவு, வெறும் கனவாக, என் மனத்திலேயே இல்லாமல், உண்மையாக நடை முதலில் வந்து விட்டதற்கு இந்தக் கோபுரம் பிரத்தியக்ஷமான அடையாளம் அல்லவா?’

‘ஆமாம்’

‘என் உயிரின் உன்னத ஆசைகளெல்லாம் ஒன்றாய்ச் சமைந்து, அதன் கொடுமுடியில், பொற்சிகரமாகக் கிளம்பி விளங்குகிறது. எனது களவு கடைசியாக உருக்கொண்டு விட்டது!”

‘எனக்குத் தெரியாதா என்ன? அண்ணா, உன் கனவுக்குக் காரணம் யார்? நினைவிருக்கிறதா?’ என்று குந்தவை சிரித்துக்கொண்டு கேட்டாள்.

‘இருக்கிறது அம்மா, நன்றாக இருக்கிறது. நீதான் அந்தக் கனவை என் மனத்தில் கற்பித்தவள். ஆஹா, அந்த நாட்களில்,-நான் வேங்கி நாட்டு வெற்றியிலிருந்து திரும்பியபொழுது – நீதானே, என்னை, அல்லும் பகலுமாக, தூண்டித்தூண்டி வெற்றிமேல் வெற்றிகொள்ளச் செய்தாய்! ஆம்… நீதாள்! எல்லாம் உன் உற்சாகம்தான். பொன்னி நாட்டின் புலிக்கொடியில் நாம் கொண்ட பெருமைதான் என்ன! நமது விஜயாலய வம்சத்தில்-1 அன்று புகாரில் பறந்த கொடி இன்று நாடெங்கும் பறக்கிறது! என் கனவின் – உன் கனவின் பலனாக! கங்கைக் கரையி லிருந்து குமரி முனை வரையில், கடாரத்திலும், ஈழநாட்டிலும் – இன்று அலைக்காற்றை எதிர்த்து நிற்கிறது நமது கொடி!’

‘ஆமாம்! நீ கங்கைகொண்ட சோழன்; உன் தலைநகர் தங்கை கொண்ட சோழபுரம்: தம் எதிரில் வானத்தை நோக்கி எழுந்து தம்முடைய ஆர்வம்போல நிற்கும் இந்த அற்புதக்கோவில், கங்கைகொண்ட சோழீசுவரம்! இதோ, பக்கத்தில், கடல்போலப் பரவி நிற்கும் இந்தப் பொன்னேரி – நீ உண்டாக்கியது!… அண்ணா, சோழ சாம்ராஜ்யம் சாசுவதமாகி விட்டது! அதன் அடையாளங்களான இந்த நகர், இந்தக் கோவில், இந்த ஏரி, – எல்லாம் சாசுவதம். நீயே – கங்கைகொண்ட சோழனாகிய நீயே -காலாந்தரத்திற்கும் சாசுவதமாகி விட்டாய்?’

குந்தவை உணர்ச்சிப்பெருக்கில் மெய்மறந்து பேசினாள். ராஜேந்திரனும் ஒருவிதமான பரவசம்பொங்க ஆழ்ந்த யோசனையிலாழ்ந்தார்.

‘என்ன யோசிக்கிறாய்?’ என்று குந்தவை கேட்டாள்

‘இன்று நான் கிருதார்த்தன்! நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டேன்! அபஜயம் என்பது என்னவென்று எனக்குத் தெரியாது. பணியாத சத்துருவே எனக்குக் கிடையாது!’

‘ஆமாம்!’

‘சோழ சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகி விட்டது. இனிமேல் அதற்குச் சிதைவு கிடையாது – அப்படி அஸ்திவாரம் போட்டு அதை எழுப்பி விட்டேன்.. ஆனால்…’

‘ஆனால்-என்ன? உனக்கென்ன குறைவு இன்று?’

‘ஆ’ குறைவும் இருக்கிறது! உதாரணமாக, என் நாட்டில், என் சமஸ்தானத்தில், சிறந்த கவி ஒருவன் இல்லையே!’

‘கவியா! நீயேதான் தலைசிறந்த கவியாக இருக்கிறாயே!’

‘நானா’

‘ஆமாம், நீ தான் உள் நாட்டின் உத்தம கவி. இந்த நிகரற்ற கோவிலும் குளமும் அடங்கிய இந்த நகரம் நீ இயற்றிய மகா காவியமல்லவா…? யோசித்துப்பார்! இதிகாச புராணகாலத்திற்குப் பிறகு கற்பனையிலும் காரியசித்தியிலும் உனக்கு நிகரான மேதாவி எவன் இருந்திருக்கிறான்?’

‘நீ அப்படிச் சொல்லாதே! தீ என்னிடம் கொண்டிருக்கும் அன்பு உன் திருஷ்டியை மறைக்கிறது. எவ்வளவோ சரித்திர புருஷர்கள் எனக்கு முன், காலத்திற்கேற்ப சமூக தர்மத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அவர்களைப்போல பெருங்காரியம் ஒன்றும் நான் செய்துவிடவில்லை. ஆசாரிய புருஷர்கள், தீர்க்கதரிசிகள், சக்கரவர்த்திகள் எத்தனை பேர்!- புத்தன், சங்கரன், அசோகன்-‘

‘அசோக சக்கரவர்த்திக்கு இணையாகச் சொல்லக் கூடிய சரித்திரம் கொண்டவன் தான் நீ!’

‘இல்லையம்மா,இல்லை! அந்த ராஜரிஷியின் உலகளாவிய காருண்ய சேவை – அதற்கு ஈடேது?’

‘நான் சரித்திர திருஷ்டியுடனேயே யோசித்துத் தான் பார்த்திருக் கிறேன். உன்னிடமிருக்கும் சிவ அம்சங்கள் அவரிடம் இல்லையே. அதற்கென்ன சொல்லுகிறாய்? அசோகனுக்கு அடுத்தபடி நீதான் பார்த பூமியில் மாபெரும் மன்னன்!’

‘எனக்கு யுத்தங்களில் ஏற்பட்ட வெற்றிகளைக் கொண்டா சொல்லுகிறாய்?”

‘இல்லை. உன் நிர்மாண வேலையிலிருந்து. சோழ நாட்டுத் தலை நகரையே புதிதாக சிருஷ்டித்தாய்!’

‘தஞ்சை பொன்னிதாட்டின் பொக்கிஷம்தான். ஆனால், இன்று சோழ சாம்ராஜ்யம் பொன்னிநாட்டின் எல்லைக்குமேல் போய் அகண்ட பாரத பூமியாக ஆகிவிட்டபடியால், தஞ்சையை மட்டும் கொண்டு நாட்டை நடத்த முடியாது. ராஜ்யம் நிலைகொள்ள வேண்டுமானால், பல செழிப்பான நகரங்கள் பல இடங்களில் உண்டாகி,கூடார முளைகள் போல, அதன் விரிப்பைத் தாங்கி நிற்க வேண்டும். இன்று கங்கை கொண்ட சோழபுரம்-நாளை இன்னும் வடக்கே இன்னொரு நகரம் – அதற்குமேல்-‘ என்று ராஜராஜன் சொல்வதற்குள் குந்தவை தலையிட்டு ‘கங்கை ஜலத்தைக் கொண்டுவந்து இந்த ஏரியில் கொட்டி, இதை ஜலமயமான ஒரு ஜய ஸ்தம்பமாக்கினாய்!’ என்றாள்.

‘இது கங்கைபோல எந்நாளும் பெருகி, நாடு அமோகமாகச் செழிக்க வேண்டும்!’

‘தஞ்சைக் கோவிலைக் காட்டிலும் அதிகமாக சிற்பவேலைப்பாடு கொண்ட இந்தக் கோவிலை, மயன் சிருஷ்டிபோல் எழுப்பினாய்!’

‘தென் நாட்டினுடைய கலைஞானத்தின் ஓர் உருவமாக இது திரந்தர மாக நிற்கட்டும்!’

‘பொட்டலைப் பட்டணமாக்கி விட்டாய்!’

‘புனிதமான இந்தக் காவிரி நீர் மலட்டு பூமியில் ஈர மேற்றிவிட்டது. இதைப்போல இன்னும் ஐந்து ஜீவநதிகள் இந்த நாட்டில் புனல் நிறைந்து வழிகின்றன. அந்த நதிகளின் ஜலத்தையும் இந்த மாதிரி, பல முடிகொண்டான் வாய்க்கால்கள்மூலம்-தரிசுகளின் மேல் திருப்பி தங்கம் விளையச் செய்யவேண்டும். எங்கும் வயல்கள் வண்டல் கட்ட வேண்டும். பொன் விளையவேண்டும். மக்கன் மகிழ்ச்சிச் சமூகமாக வேண்டும். ஆகையால், குந்தவையே!’

‘ஆகையால் என்ன?’ என்று குந்தவை ஆச்சரியமடைந்து கேட்டான்.

‘என் கனவு-‘ என்று ராஜேந்திரன் பேச முடியாதவர் போல் தடுமாறினார்.

‘ஏன், உன் கனவிற்கென்ன?’

‘இப்பொழுதுதான் உருக்கொள்ள ஆரம்பிக்கிறது! நான் செய்ததெல்லாம் – இனிமேல் செய்யப்போவதற்கு – உரைபோடக் காணாது!’ வயதுசென்ற மன்னன் திடீரென்று ஆசனத்தை விட்டுக் குதித் தெழுந்தார்.

‘அண்ணா! உனக்கென்ன பேராசை? மனிதன் முயற்சியில் இதற்கு மேல் என்ன செய்யமுடியும்?’

‘என்ன செய்துவிட்டேன்! என் கீர்த்திக்காக சாம்ராஜ்யத்தை சிருஷ்டி செய்திருக்கிறேன். மக்களுக்காக என்ன செய்திருக்கிறேன் சொல்லு?’

‘உன் செயல்களின் பயனையெல்லாம் அவர்கள்தானே அனுபவிக் கிறார்கள்? கடாரம் கொண்டதால் வியாபாரமும் கைத்தொழில்களும் எவ்வளவு விருத்தி அடைந்து விட்டன – இவ்வளவு சீக்கிரமாக, நம் கண்முன்னேயே ? சிங்களமும் பாண்டிய நாடும் சாம்ராஜ்யத்திற்கு எப்பேர்ப்பட்ட செல்வங்கள்?’

‘அறிவு வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறேன்?’

‘எவ்வளவோ செய்திருக்கிறாய்!’

‘இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறேனே-இதை உண்மையாக அறிவிற்கு இடமாக்க வேண்டும். உரமேறிய நாட்டில் உயிர்ததும்ப வேண்டும். உயிரின் சிகரமாக, இந்தக் கோபுரம்போல், உண்மை ஓங்கவேண்டும்!’

மன்னன் மௌனமாகி விட்டார். அவருடைய எண்ணங்கள் போன போக்கு வார்த்தைகளுக்குக் கிட்டவில்லை. குந்தவையும் அப்படியே சிலைபோல சமைந்துபோய் உட்கார்ந்திருந்தாள்.

திடீரென்று கண்ணைப்பறிக்கும் ஓர் ஒளி உருகின தங்கத்தின் வர்ணத்துடன் பூமிமேல் விழுந்து மறைந்தது. மறுநிமிஷம் வான மளாவிய விமானங்கள் இடிவதுபோன்ற சத்தம் கேட்டது. இடி விழுந்தது.

அரசன் எண்ணங்கள் சடக்கென்று நின்றன. அவரது உள்ளம் மலர்ந்து உயர்ந்தபோது திடீரென்று அதைத் தாக்கிய ஒரு அபசகுனம் என்று அத்த இடியைக் கருதினார்.

சிறிது நேரம் கழித்து செய்திகள் வந்தன.

இடி, கோவில் விக்கிரகத்தின் மேல் விழுந்து லிங்கம் பிளந்து போய்விட்டது.

சோழகங்கம் கரையுடைந்து, பாசன நிலங்கள் முழுவதும் நீரின்கீழ் மூழ்கிவிட்டன!

ராஜேந்திரன் அவ்விரண்டையும் சூசனைகளாகக் கொண்டார்.

சிவை அன்று சிதைவடைத்தாலும் கோவில் இன்றும் நிற்கிறது. சோழ சாம்ராஜ்யம் முன்னூறு ஆண்டுகள் கழித்து சிதைவு பெற்றாலும், சரித்திரத்தில் அழியாமல் இருக்கிறது.

‘அண்ணா! கங்கைகொண்ட சோழபுரம் இவ்வளவு தான்?’ என்று குந்தவை சோர்வுடன் கேட்டாள்.

‘யார் கண்டார்கள்? நான் கண்டது இன்னும் கனவு தான் போலிருக்கிறது! சரித்திரமே கனவும் அதன் சிதைவும்தான் போலிருக்கிறது! பிறப்பும் இறப்பும் போலவோ?’ என்று ராஜேந்திரன் பணிவுடன் பேசினார்.

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *