கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 2,484 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-24

17.பீடத்தை நோக்கி 

பப்பகுமாரன் மறுநாள் காலையில் நீராடி, புத்துடை புனைந்து நிருபவர்மரை அவரது கூடத்தில் சந்தித்தபோது, நீதிபதி அரச உடை ஏதும் தரிக்காமல் சாதாரண வேட்டியணிந்து, தோளில் ஒரு துண்டுடனும் நெற்றியில் இடப்பட்ட சந்தனத்திலகத்துடனும் மிக வைதீகமாகக் காட்சியளித்தன்றி, கூடத்து நடுவே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து காலைத் தரையில் உதைத்து லேசாக அதை ஆட்டிக் கொண்டும் மிகுந்த உற்சாகத்துடனும் காட்சியளித்தார். 

அவர் உற்சாகத்தின் காரணத்தை அறியாத குமாரன் அவருக்குத் தலைவணங்கியதும், அவனை அருகில் அழைத்து அவன் காதில் மிக ரகசியமாக, ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னதும் குமாரன் பேரதிர்ச்சியடைந்தாலும் அதை வெளிக்கு காட்டிக்கொள்ள வில்லை. ஆனால் அவன் ‘எங்கு?’ என்று ஒரு கேள்வியை எழுப்ப அதற்கு நீதபதி ‘பல்லவ பீடத்தைத் தரிசிக்க’ என்று விடையிறுத்ததும் அவன் அதிர்ச்சி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று. அதன் விளைவாக நீண்ட நேரம் மௌனமாக நின்று விட்டதைக் கண்ட நீதிபதி லேசாகப் புன்முறுவல் செய்து, “பெரிய மறவன் உன்னிடம் சொன்னது எனக்கு எப்படித் தெரியும் என்று உனக்குப் பிரமிப்பாயிருக்கிறதா?” என்று வினாவொன்றையும் கிளப்பினார். 

“ஆம் நீதிபதி. என்னை வேவு பார்க்க நீங்கள் யாரையாவது நியமித்திருக்கிறீர்களா?” என்று வினவினான் குரலில் சிறிது கோபத்தைக் காட்டி. 

“ஆம்” -இதை நீதிபதி சகஜமாகச் சொன்னார். 

“அது யாரென்பதை நான் அறியலாமா?” என்று மீண்டும் கேட்டான் குமாரன். 

”ஆகா! தாராளமாய் அறியலாம்” – நீதிபதி இதையும் சகஜமாகவே சொன்னார். 

“யார்?” 

“வேறு யார்? நான்தான்!” 

“தாங்களா?” 

“ஆம்.” 

“தாங்கள் என்னைத் தொடர்ந்து வந்ததாகத் தெரியவில்லையே?” 

“தொடர்ந்ததாக யார் சொன்னது?” 

“தொடராமல் எப்படி வேவு பார்க்க முடியும்?” 

“அதற்கு வேறு ஒரு கருவி இருக்கிறது. சிந்தனைக் கருவி” என்று தமது தலையைத் தமது ஆள்காட்டி விரலால் தட்டிக்காட்டினார் நீதிபதி. 

மேலும் பிரமை பிடித்து நின்றான் குமாரன். “பெரிய மறவன் குடிசையில் நடந்தது அனைத்தையும் ஊகித்து விட்டீர்களா?” என்று வினவினான், பிரமை குரலிலும் ஒலிக்க. 

“இதில் கஷ்டமேதும் இல்லை” என்ற நீதிபதி, “என்னை உன் நிலையில் இருத்திக் கொள்கிறேன், குமாரன் நான்தான் என்றால் என்ன செய்திருப்பேன்? காஞ்சியை விழுங்க முயலும் காவலர் தலைவனை எதிர்த்த பிறகு, நீதிமண்டபத்தில் அவனைக் கண்டு ஊரார் நகைத்த பிறகு, அவன் என்ன செய்வான்? தனது விரோதிகளையும் சாட்சிகளையும் அழிக்க முயல்வான். ஒரு சாட்சியைக் கொன்று விட்டான். இன்னொரு சாட்சியான பெரிய மறவனைக் கொல்லாவிட்டாலும் சித்திரவதை செய்து பல்லவ பீடத்தின் ரகசியத்தை அறிய முயற்சி செய்வான். பெரியமறவன் குடிகாரனே தவிர நல்ல சூஷ்மமான புத்தியை உடையவன். ஆகவே தனக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்துக்களை உத்தேசித்து ரகசியத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ள முயலுவான். அவன் நம்பக்கூடியவன் நீ ஒருவன்தான். அவன் மகள் காதலிக்கும் ஒரு வீரனை விட்டு முறைப்பிள்ளையைக் கட்டிக்கொண்டு திண்டாட அவன் இஷ்டப்பட மாட்டான். ஆகையால் பல்லவ பீடத்தின் ரகசியத்தை உனக்குச் சொல்ல விரும்புவான் என்பதை ஊகித்தேன். நீ நேற்றிரவு உனது விடுதியில் இல்லை. எங்கு போயிருப்பாய்? பெரிய மறவன் குடிசைக்கு. அப்பொழுது பெரிய மறவன் எப்படியும் பல்லவ பீடத்தை உனக்குக் காட்ட முயலுவான்.” என்று பேச்சை சற்று நிறுத்தினார் நீதிபதி. 

“நேரில் பார்த்தது போல் சொல்கிறீர்களே?” என்று கேட்டான் குமாரன். 

“அத்தனையும் சொல்லவில்லை” என்று நீதிபதி புன்முறுவல் செய்தார்! 

“இன்னும் இருக்கிறதா சொல்ல?” என்று கேட்டான் குமாரன். 

“நீயும் செல்வியும் சந்தித்தது, திருட்டுத்தனமாகக் கையைப் பிடித்துக் கொண்டது, மற்றும்… சொல்வது உசிதமில்லை” என்ற நீதிபதி, நகைத்தார். 

இப்படிப் பேசிக் கொண்டிருந்த நீதிபதி, சட்டென்று முகத்தில் கவலையைப் படரவிட்டுக் கொண்டார். 

“குமாரா! நீ வந்தபிறகுதான் எனக்கு காஞ்சியைப் பற்றிச் சிறிது தைரியம் வந்தது. பகிரங்கமாக காஞ்சிக் காவலர் தலைவனை எதிர்க்கக்கூடியவன் வந்தானென்று கேள்விப்பட்ட உடனேயே உன்னை என் காவலர் தலைவனாக நியமித்ததற்குக் காரணமுண்டு. உன்னைப் போன்ற, ஒரு வீரனால்தான் அடிக்கடி எல்லைகளில் நிகழும் களப்பிரர் பூசல்களை ஒழிக்க முடியும் என்று தீர்மானித்தேன். அவர்களிடமிருந்து எந்த நிமிடமும் சரியான எதிர்ப்பு வரலாம். அவர்கட்கு உதவ காஞ்சிக்காவலர் தலைவன் சித்தமாயிருக்கிறான். ஆகையால் நாம் செய்யவேண்டிய அலுவல்கள் இரண்டு, ஒன்று களப்பிரர்களை எதிர்ப்பது. இன்னொன்று காவலர் தலைவன் துரோகத்தைத் தடுப்பது” என்றார். 

“யாரிந்த களப்பிரர்? மாடுகளைத் திருடுபவர்களா?” 

“இல்லை. திருடி நமக்குத் தருபவர்கள்.” 

“எதற்காக அதைச் செய்கிறார்கள்?'” 

”அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காஞ்சியைத் தாக்குவார்கள்.” 

“பெரிய வீரர்களா?” 

”ஆம். இவர்கள் திருத்தணிகை பக்கக் காடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் கள்வர், களவர் என்றும் அழைப்பார்கள். களவர்* என்பது கன்னடத்தில் களபரு என்று ஆயிற்று. வடமொழியில் களப்ரா என்று திரிந்தது. அதைத் தமிழில் களர்ப்பிரர் என்று கொண்டு வந்திருக்கிறோம்” என்று விளக்கினார் நீதிபதி. 

பெரும் சிந்தனையில் இறங்கினான் குமாரன். பிறகு கேட்டான், “களப்பிரர் நம்மீது படையெடுத்தால் அதைச் சமாளிக்க காஞ்சியில் படை இருக்கிறதா?” என்று. 

“இருக்கிறது, சரியான தலைவன் கீழ் இயங்கினால். ஆனால், இப்பொழுதுள்ள தலைவனை நம்பமுடியாது” என்றார் நீதிபதி. 

குமாரன் தலையை ஆட்டிவிட்டு, “இன்றிரவு சந்திப்போம்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டான். தனது தலைமையிலிருக்கும் காவலரில் நாலைந்து பேர்களை அழைத்துக்கொண்டு காவலர் தலைவன் இல்லத்துக்குச் சென்றான். அவன் வந்திருப்பதை அறிந்தவுடன் அலறிப் புடைத்துக்கொண்டு வாயிலுக்கு வந்து அவனை வரவேற்ற காவலர் தலைவன், “நீதிபதியின் காவலர் தலைவர் இங்கு வந்தது வியப்பாயிருக்கிறது” என்று முகமன் கூறி வரவேற்றான். 

அவன் வரவேற்பைத் தலையை லேசாகத் தாழ்த்தி ஏற்றுக்கொண்ட குமாரன், “இதில் வியப்பு ஏதுமில்லை. தங்கள் உதவி சிறிது வேண்டியிருக்கிறது” என்றான். 

“என்ன உதவி?” -சந்தேகத்துடன் கேட்டான் காவலர் தலைவன். 

“நாம் தனியாகப் பேசவேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான் குமாரன். 

அதற்குப் பிறகு அவனை உள்ளே அழைத்துச் சென்று தனது அந்தரங்க அறையில் உட்கார வைத்துக் கொண்ட காவலர் தலைவன், “இப்பொழுது நீங்கள் தைரியமாகப் பேசலாம்” என்றான். 

“சில நாட்களில் களப்பிரர் காஞ்சியைத் தாக்கலாமென்று எதிர்பார்க்கிறேன்” என்றான் குமாரன். 

இதைக் கேட்டதும் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை விநாடி நேரத்தில் மறைத்துக்கொண்ட காவலர் தலைவன், “உங்களுக்கு எப்படி அது தெரியும்? வதந்தியை நம்பி நாம் எதுவும் செய்யமுடியாது” என்றான். 

“வதந்தியல்ல, உண்மை” – திட்டமாகச் சொன்னான் குமாரன். 

“உண்மை என்பதற்கு சாட்சி உண்டா?” என்று வினவினான் காவலர் தலைவன். 

உடனடியாகப் பதில் சொல்லவில்லை குமாரன். 

எழுந்து சென்று அறைக்கதவைச் சாத்திவிட்டு வந்த குமாரன் தனது கச்சையிலிருந்து செப்புக்காசை எடுத்துத் தலைவனிடம் கொடுத்தான். 

அதைக் கண்டதும் பெட்டியில் அடைக்கப்பட்ட பாம்பு போல் ஆனான் காவலர் தலைவன். “இதை ஏன் முன்னமே காட்டவில்லை நீங்கள்?” என்று வினவவும் செய்தான் பணிவு நிரம்பிய குரலில். 

“சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாம் முதலில் சந்தித்த போதே விரோதிகளாகச் சந்தித்தோம். பின்னால் தொடர்ந்த நிகழ்ச்சிகள் என்னை உங்கள் விரோதியாகக் காட்டின. இப்பொழுது களப்பிரர் தாக்குதல் நிச்சயமாகி விட்டதால் நான் யாரென்பதை மறைத்துப் பயனில்லை என்று தீர்மானித்துத் தங்களிடம் வந்தேன். சரி, களப்பிரரை எதிர்ப்பதானால், எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்வதானால், தங்களிடம் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்?” 

“இப்பொழுது இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் இல்லை. வேண்டுமானால் மேலும் இரண்டாயிரம் பேர் திரட்டலாம்.” 

“வேண்டாம். இந்த வீரர்களே போதும். அவர்கள் நான் சொல்கிறபடி இயங்க வேண்டும்.” 

“அது கஷ்டமில்லை.” 

அப்படியானால் இரண்டு நாட்களுக்குள் சகல வீரர்களும் நமது திட்டப்படி நடக்க உத்திரவிடுங்கள்.” 

“இரண்டு நாட்கள் எதற்கு?” 

“நான் இரண்டு நாட்கள் இங்கு இருக்கமாட்டேன்.” -இதைச் சொல்லிப் புன்முறுவல் செய்தான் பப்பகுமாரன். 

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் காவலர் தலைவன். அங்கிருந்து புறப்பட்ட குமாரன் நேராக நீதிபதி யின் இல்லம் வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொன்னான்: “இன்னும் இரண்டு நாட்கள் தாங்களும் ஊரிலிருக்க வேண்டாம். யார் வந்தாலும் உங்கள் உடல்நிலை சரியில்லையென்று சொல்லிவிட ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினான். 

அன்றிரவு புறப்பட்டான் குமாரன் தாமரைச்செல்வியின் இல்லத்திற்கு. அங்கு தாமரைச்செல்வியும் பெரிய மறவனும் சித்தமாயிருந்தார்கள் பயணத்திற்கு. மூவரும் புரவிகளில் ஏறிக்கொண்டதும் பெரிய மறவன் சொன்னான்: “மிகவும் அபாயமான பயணத்தைத் துவங்குகிறோம். இதில் மூவரும் திரும்பி வருவோமா என்பது சந்தேகம்? இறப்பதானால் நான்தான் இறப்பேன். நீங்களிருவரும் தப்பிவிட வழி செல்விக்குத் தெரியும்” என்று. 

அப்புறம் யாரும் பேசவில்லை. பயணம் மூன்று நாழிகை கடந்தும் நீதிபதயைக் காணவில்லை. காஞ்சியைத் தாண்டி, காடுகளைத் தாண்டி, கடல்மல்லையை அடைந்ததும் பெரிய மறவன் அங்கிருந்த பாறைகளின் மீது ஏறி இருமலைகளுக்கிடையே இருந்த சரிவில் இறங்கினான். அடுத்த அடர்த்தியான மரங்கள் அடர்ந்த தோப்பு இருந்தது. அதற்கு முன்பு புரவியிலிருந்து இறங்கிய பெரிய மறவன், அங்கிருந்த ஒரு பெரிய பாறையின் மறைவுக்குள் சென்றான். அடுத்து அந்தப் பாறை நகர்ந்தது. “வாருங்கள்” என்று பெரிய மறவன் குரல் கொடுக்க, அவனிருந்த இடம் சென்ற குமாரனும் தாமரைச்செல்வியும் கீழே பாறைக்கு அடியில் படிகள் ஓடுவதைக் கண்டனர் பெரிய மறவன் முதலில் படிகளில் இறங்கினான். மற்ற இருவரையும் தொடரும்படி சைகை காட்டினான். இருவரும் தொடர்ந்தனர். எங்கிருந்தோ ஒரு ஜோதி கிளம்பியது. பாதாளத்திலிருந்து புறப்பட்ட அந்த ஜோதி படிகளில் ஊர்ந்து அவர்களை நோக்கி வந்தது. 

18.தரிசனம் 

ஏதோ பாதாளத்திலிருந்து வருவது போல் படிகளில் ஊர்ந்து வந்த அந்த ஜோதி திடீரெனக் கம்பி அளவுக்குச் சிறுத்து ஒரு நிலையில் நின்றுவிட்டாலும் ஐந்தாவது படிக்குமேல் ஏறாமல் அதைத் தொட்டுத் தடைப்பட்டு விட்டதாகப் பார்வைக்குத் தோன்றினாலும், அது அடியோடு மறையாமல் அந்த இடத்திலேயே தேங்கி நின்றது. அதில் காலை வைக்கவும் அஞ்சி மேற்படியிலேயே நின்று விட்ட குமாரனை, “அதற்காக அஞ்சாதீர்கள். வாருங்கள் இறங்கி” என்ற பெரியமறவனின் குரல் அடிப் படியிலிருந்து ஒலிக்கவே, குமாரன் செல்வியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கிச் சென்றான். 

இப்படி சுமார் இருபது படிகள் இறங்கிச் சென்றதும் அந்த ஒளி திடீரென மறைந்து விடவே. அரைகுறையான வெளிச்சமே அந்தக் குகையில் தெரிந்ததன் விளைவாக, ஒருவரையொருவர் திட்டமாகப் பார்க்க முடியாவிட்டாலும் அக்கம் பக்கம் பாறைகளைத் தொடமுடிந்தது. அந்தப் பாறைகளைத் தடவிப் பார்த்த குமாரன் அது மிகவும் வழ வழப்பாக இருந்ததைப் பார்த்து அந்த இடத்தில் சற்று மனிதப் புழக்கம் அடிக்கடி இருப்பதைப் புரிந்து கொண்டான். அந்தச் சுவர்களின் இன்னொரு பகுதியின் அடியில் உட்கார்ந்த பெரிய மறவன், இரண்டு கருங்கல்களைத் தட்டி ஏதோ ஒரு தேங்காய் நாரில் சிறு தீப்பொறிகளைச் சேர்த்து பக்கத்திலிருந்த காட்டுச் சுள்ளி யொன்றைக் கொளுத்தினான். 

அப்பொழுது சுற்றுமுற்றும் அந்தக் குகையைப் பார்த்த குமாரன் வியப்பின் எல்லையை எய்தினான். அதில் பலவித சிற்பங்கள் தீட்டப்பட்டிருந்தன. தேர்களில் செல்லும் சில வீரர்களும், கடலில் குளிக்கும் காரிகைகளும் பெரும் பசுக்கூட்டங்களும் கோடு கோடாக வரையப்பட்டிருந்தன. அந்தக் கோடுகளிலேயே உயிர் இருப்பதைக் கண்ட குமாரன் அவற்றைத் தீட்டியவன் யாராயிருந்தாலும் அவன் கைதேர்ந்த சிற்பியாயிருக்க வேண்டு மென்று தீர்மானித்துக் கொண்டான். அந்தக் கோட்டுச் சிற்பங்களின் அடியில் ஏதோ சில வரிகள் எழுதப்பட்டிருந்தன. மொழி என்ன என்பது மட்டும் புரியவில்லை. 

இது என்ன மொழி?” என்று பெரியமறவனைக் கேட்டான் குமாரன். 

“பிராகிருதம் என்று சொல்கிறார்கள்?” என்றான் பெரிய மறவன். 

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த குமாரன், “இதில் என்ன எழுதியிருக்கிறது?” என்று வினவினான். 

“இங்கு வருகிறவர்களில் ஒருவன் ஒரு காலத்தில் காஞ்சியை ஆள்வான்” என்று எழுதியிருக்கிறது. 

“அதன்மேல் குதிரையொன்று வரையப்பட்டு அதன் மீது ஒரு வேலை பக்கவாட்டில் நீட்டிப் பிடித்து ஒருவன் உட்கார்ந்திருக் கிறானே?” என்று வினவினான் குமாரன். 

“அந்த வீரனுடைய வேல் சுட்டிக்காட்டும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும்” என்று கூறிய பெரிய மறவன், அது குறிப்பிட்ட திசையில் நடக்கலானான். 

“எதிரில் பாறைச் சுவர்தானே இருக்கிறது” என்று வினவினான் குமாரன். 

பெரிய மறவன் பதிலேதும் சொல்லவில்லை. புரவி வீரன் வேலின் நுனியிலிருந்து ‘மாக்கல்’ சில் ஒன்றால் நேராகக் கோடு இழுத்துக்கொண்டு சென்றான். அது முடிந்த இடத்தில் சக்கரமாக ஒரு வளையம் இழுத்தான். அதன் நடுவைப் பிடித்து மூச்சுத் திணற அழுத்தினான். பாறைச் சுவரின் ஒரு பகுதி நகர்ந்து வழிவிட தன்னைத் தொடரும்படி மற்றவர்களுக்கு சைகை செய்து முன்னேறினான். மற்றவர்கள் தொடர்ந்ததும் அந்தப் பாறையை இழுத்து மூடும்படி பெரிய மறவன் சைகை காட்ட அதைச் சிரமப்பட்டுத் தள்ளினான் குமாரன். தாமரைச் செல்வியைத் தனது இடது கையால் இடையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். 

“இனிமேல் அடுத்த குகைக்குப் போகிறோம். எச்சரிக்கையுடன் வாருங்கள். என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் வைக்கும் அடியிலிருந்து ஒரு அடி அப்புறம் இப்புறம் மாறி நடந்தாலும் உங்கள் உயிர் அரைக்காசு பெறாது” என்று எச்சரித்துக் கொண்டே நடந்து சென்றான் பெரிய மறவன். அவன் சொன்னபடி தாமரைச்செல்வி அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, குமாரன் கடைசியில் நடக்க அந்தப் பயணம் சில நிமிடங்களே நடந்தாலும் தரைகரடு முரடாக இருந்தது. அக்கம் பக்கத்துச் சுவர்களின் வெடிப்புகளில் சில செடிகளும் முளைத்து அவர்களைத் தடவின. அப்பொழுது கேட்டான் குமாரன்: “சூரிய வெளிச்சம் இல்லாத இடத்தில் எப்படிச் செடி முளைக்கிறது?” என்று 

“சீக்கிரம் தெரியும்” என்ற பெரிய மறவன் சில அடி தூரம் சென்றதும் மெல்ல மேலிருந்து துவாரத்தின் வழியாகப் பக்கவாட்டில் ஒரு சிறு கீறலாக இருந்த வெளிச்சத்தில் நின்று சுற்று முற்றும் நோக்கினான். மேலே இருந்த பாறை கை எட்டும்படியாக இருக்கவே, அதைக் கையால் பொத்தி அவன் மறைக்க, மீண்டும் இருள் சூழ்ந்தது. 

அந்த இருளில் வெகுதூரத்தே ஒரு சிவப்புக்கல் மினுக்மினுக் கென்று ஒளி வீசியது. அதை நோக்கிச் சென்ற பெரியமறவன் அதன் முன்பு மண்டியிட்டு உட்கார்ந்து எதையோ முணு முணுத்தான். பிறகு தன்னையொட்டி நின்ற மற்ற இருவரையும் நோக்கி, “கடவுளை நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அவன் குரலில் பெரும் உணர்ச்சி இருந்தது. 

அவன் அப்படி உணர்ச்சி வசப்பட்டுவிட்டதைக் கண்ட தாமரைச் செல்வி, “அப்பா! ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுகிறீர்கள்? உங்களை என்றுமே நான் இப்படிப் பார்த்ததில்லையே?” என்றாள். 

இதனால் உணர்ச்சி அதிகமாகியதால் நா தழுதழுக்க முழுக் குடியில் பேசுவது போல் பேசினான் பெரியமறவன். 

“மகளே! குருவியின் தலையில் பனங்காயை வைப்பது போல் என்மீது பெரிய பாரம் சுமத்தப்பட்டிருக்கிறது. அதை நான் நிறைவேற்றும் வரையில் என் மனச்சிதறல் மாறாது” என்று கூறிய பெரிய மறவன்: ‘குமாரா! நீ குற்றம் செய்யாதவன், நீதிமான் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் உன் கையால் எதிரிலிருக்கும் பாறையை அழுத்து. அது திறந்ததும் கண்களை மூடிக்கொள். பத்து நிமிடங்கள் கழித்துக் கண்ணைத்திற” என்றான். 

பெரிய மறவன் இப்படி திடீரென மர்ம மனிதனாகி விட்டதைப் பார்த்த குமாரன் வியப்பின் எல்லையை எய்தினாலும் அவன் சொன்னபடியே அந்த எதிர்பாறைக்குச் சென்று கையால் பலமாக அதை அழுத்தினான். உடனே கண்களையும் மூடிக் கொண்டான். 

”மகளே! நீயும் கண்களை மூடிக்கொள்” என்று பெரிய மறவன் பெரிதாக அலறினான். அடுத்த விநாடி ஏதோ கரகரவென்ற சத்தமும் சின்னஞ்சிறு கற்கள் மேலிருந்து விழுவதுபோன்ற பிரமையும் ஏற்படவே, மூடிய கண்களை மெதுவாகத் திறந்தான் குமாரன். 

திறந்தவன் விழித்த கண் விழித்தபடியே நின்றான். எதிரிலோ ஒரு பெரிய மரகதக்கல் அந்தக் குகையையே பசுமையாக அடித்தது. அதை அடுத்து பளிச்சென்று நக்ஷத்திரங்கள் மின்னின. அவை நக்ஷத்திரங்களல்ல, நான்கைந்து வைரங்கள் என்று உணர்ந்து கொண்ட குமாரன் அந்தக் காட்சியைக் கண்டு பிரமித்தான், இத்தனை கற்களும் பதிக்கப்பெற்ற சிம்மாசனம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளித்தது. 

“பல்லவ பீடத்தைத் தரிசிக்கிறீர்கள். இளந்திரையன் அமர்ந்து அரசு செலுத்திய ராஜபீடம் இது. இதில் உட்காரக் கூடியவன் பெரிய ராஜ்யத்தை சமைக்கக் கூடியவனாகவும், வீரனாகவும், தர்மம் தவறாதவனாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் இந்த பல்லவ பீடமே அவனை அழித்துவிடும்” என்று பெரியமறவன் மெதுவாகவும் அச்சத்துடனும் சொற்களை உதிர்த்தான். 

பல்லவபீடத்தில் நிலைக்கவிட்ட கண்களை அகற்றவே இல்லை குமாரன். இப்படியொரு அற்புதக் கலை சிருஷ்டி உலகில் இருக்குமென்பதை அவன் அடியோடு எதிர்பார்க்கவில்லை. பல்லவ பீடம் இளந்திரையனுக்குப் பிறகு மறைந்துவிட்டது என்று கேட்டிருக்கிறான். அது வெறும் கதையென்றே நினைத்தான். அது இப்படி தனது கண் முன்னால் தோன்றுமென்று அவன் நினைக்கவில்லை. அந்த பீடத்தின் அமைப்பு தங்கமும், வைர வைடூரியங்களும் பதித்ததாயிருந்ததைக் கண்ட குமாரன், இந்த வைர வைடூரியங்கள் இளந்திரையன் ஆட்சியில் மணிபல்லவத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். இது இருக்கு மிடத்தைப் பெரிய மறவன் எப்படி அறிந்தான் என்பதை எண்ணி அதைப் பற்றிக் கேட்கவும் செய்தான்: “பெரியவரே! இதன் இருப்பிடம் உமக்கு எப்படித் தெரியும்?” என்று. 

“அது ஒரு விநோதக் கதை, அதையும் கேள்” என்று அந்தக் கதையை விவரிக்கத் துவங்கினான் பெரிய மறவன். அதைக் கேட்கக் கேட்கப் பிரமித்தான் குமாரன். தாமரைச்செல்விக்கு பிரமிப்பை விட அச்சம் அதிகமாகியது. 

19.இருண்டுவிட்ட குகை 

“அது ஒரு விசித்திரக் கனவு. இன்று அதை நினைத்துப் பார்த்தால் கூட அது உண்மையாயிருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது” என்ற பெரிய மறவன், “குமாரா! நீ எப்படியும் எனது மகளை மணக்கப் போகிறாய், ஆகையால் எனக்கு மருமகன். உன்னிடம் எனது ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை” என்று அந்த ரகசியத்தைச் சொல்வதற்கு ஒரு காரணத்தையும் சிருஷ்டித்துக் கொண்டான். அவன் கண்களில் கனவுச் சாயை பரவியது. அவன் கண்களிலிருந்தும் அவற்றின் மங்கிய பார்வையிலிருந்தும் பெரிய மறவன் நீண்ட காலத்திற்கு முன்பு சென்றுவிட்டான் என்பது குமாரனுக்கு சந்தேகமறத் தெரிந்து விட்டதால் அவன் வாயைத் திறக்கவில்லை. 

பெரியமறவன் சிறிது நேரம் கனவு காண்பதுபோல் தோன்றினான். பிறகு ஆயாசப் பெருமூச்சுவிட்டு, ‘உம், எனது பாரம் என் மனத்தை விட்டு இறங்கும் காலம் வந்துவிட்டது” என்று வாய்விட்டு மெதுவாகப் பேசினான். “குமாரா! கேள். அந்த நிகழ்ச்சி ஏற்பட்டபோது உன் வயதுதானிருக்கும் எனக்கும். யாருக்கும் அடங்காமல் தறிகெட்ட காளை மாதிரித் திரிந்து கொண்டிருந்தேன். அடிக்கடி கடல்மல்லைக்கு வருவதில் எனக்கு மிகவும் ஆசை. எனது நண்பர்களுடன் அடிக்கடி இங்கு வந்து கடலாடுவேன். இந்தப் பாறைகளில் படுத்துக் கிடப்பேன். சில நாட்கள் இங்கேயே தங்கிவிடுவேன், அதற்குச் சில நண்பர்கள் இணங்காததாலும் சிலரை அவர்கள் பெற்றோர்கள் கண்டித்து நிறுத்தி விட்டதாலும் நான் மட்டும் தன்னந்தனியே வர முற்பட்டேன். இந்தக் கடலும் இதன் சூழ்நிலையும் என்னை முற்றும் கவர்ந்து விட்டன. முடிந்தால் இங்கேயே வாழ்ந்திருப்பேன். என் பெற்றோர்களுக்கு வயதாகி இருந்ததாலும் அவர்கள் நலிவுற்றிருந்த தாலும் அவர்களை இங்கு அழைத்து வர முடியவில்லை. நானும் அடியோடு அவர்களைப் பிரிந்தும் இருக்க முடியவில்லை. 

“ஆனால் நான் தொடர்ச்சியாகக் கடலோரத்திலுள்ள பாறையில் தூங்க முற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கனவு கண்டேன். ‘அதோ கூப்பிடு தூரத்தில் பெரிய அரச பீடம் இருக்கிறது. அந்தப் பெரிய மலைப் பாறையில் படு’ என்று யாரோ சொன்னது போல் கனவில் தெரிந்தது. அதனால் சட்டென்று கண்விழித்துப் பார்த்தேன். பிறகு எனது மடமையை நினைத்து நானே சிரித்துக் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் முதற்கொண்டு சற்று தூரத்திலிருந்த இந்த மலைப்பாறை மீது படுக்கத் துவங்கினேன். இங்கும் சொப்பனங்கள் வந்த வண்ணமிருந்தன. அப்புறம் நான் பெரியவனானதும் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டேன். இதற்கிடையில் எனது தாய் தந்தையர் காலமானார்கள். காஞ்சியின் பெரிய கள்ளுக் கடை எங்கள் குடும்பச் சொத்து. அதை என் அண்ணன்மார்கள் எடுத்துக் கொண்டு இப்பொழுது எனது குடிசை இருக்கும் மேட்டைக் கொடுத்தார்கள். 

“எனக்கு வயதான பிறகு திருமணம் நடந்து தாமரைச்செல்வியும் பிறந்தாள். அதற்குப் பிறகும் நான் இந்த மலையின் மீது படுக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் நள்ளிரவில் ஏதோ மனித அரவம் மலைப்பாறைக்கு அடியில் கேட்டது. முதலில் அதைப் பிரமை என்று நினைத்தேன். அன்று அமாவாசை இரவு. சற்று நேரத்திற்கெல்லாம் தலையிலிருந்து கால்வரை மூடிய ஒரு உருவம் கீழிருந்து மேலே வந்து மலைப்பாறைகளைத் தாண்டித் தாண்டிச் சென்றது. அதன் கால்கள் கீழே படவில்லை. எனக்குத் திகில் பிடித்துக் கொண்டது. ஏதோ பிசாசு என்று முதலில் நினைத்தேன். ஆனால் அந்த உருவத்தை மறுநாளும் பார்த்தேன். அது வந்து வந்து இந்தப் பாறைகளில் மறைந்து விடும். நீண்ட நேரம் கழித்து வெளியே வரும். 

“இது இப்படி நடந்து கொண்டிருக்கும் ஒரு அமாவாசையில் நான் விழித்துப் படுத்திருந்தேன். அந்த உருவம் பாறைக்கடியில் மறைந்ததும் நான் மெல்ல எழுந்து அதைத் தொடர்ந்தேன்.அது முதல் பாறையை நகர்த்தியதையும் அடுத்து பல்லவ பீடத்தை நோக்கிச் சென்றதையும் கவனித்தேன். அந்த உருவம் அப்பொழு தும் தனது போர்வையை நீக்கவில்லை. முழு உடம்பையும் மறைத்தவண்ணம் பல்லவபீடத்தில் அமர்ந்தது. அதன் கண்களுக்கு மட்டும் அதன் உடையில், முகத்தில் துவாரங்கள் விட்டிருந்த படியால் நான் ஒதுங்கி நின்று கொண்டேன், அதன் கண்களில் படாதிருக்க. அதிக நேரம் அங்கு நிற்கவில்லை நான் மெதுவாகப் படிகளில் ஏறி மேலே வந்து பழைய இடத்தில் படுத்து உறங்குவது போல் பாசாங்கு செய்தேன். அன்றிலிருந்து சில நாட்கள் அதைக் காணவில்லை. 

“அது உருவமல்லவென்பதையும், கறுப்பு உடையால் தன்னை மூடிக்கொண்டு பிசாசு வேஷம் போட்ட மனிதனேயென்பதையும் புரிந்து கொண்டதால் அங்கு படுக்கும்போதெல்லாம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன். பிறகு அந்த மலையில் படுக்காமல் கடலோர மலைப்பாறையில் படுத்தேன். அதற்குப் பிறகு அந்தப் பிசாசை நான் பார்க்கவில்லை. அந்த மனித பிசாசும் நான் பயந்து விட்டதாக நினைத்ததால் நான் நிர்ப்பயமாக உறங்கினேன். 

சில நாட்களில் அது வந்து போனபிறகு, நானும் அந்தப் பாறைகளை நகர்த்தி விட்டு அடிக்கடி பல்லவபீடத்தைத் தரிசித்து வந்தேன்.” 

“இப்படி இரண்டு ஆண்டுகள் கழிந்தபிறகு தாமரைச்செல்வியின் தாய் காலமானாள். அது எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கவே நான் கள்ளுக் கடைக்குச் செல்லத் துவங்கினேன். அந்தக் குடிப்பழக்கத்தி லிருக்கையில் ஒரு நாள் கடல்மல்லையில் சில புரவி வீரர்கள் வந்து என்னை மாடு பிடிக்கும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து மாடுகளைத் திருடினேன். அவற்றில் சிலவற்றை எனக்கு ஊதியத்திற்குப் பதில் அளித்தார்கள். அந்தக் கள்வர்கள்தான் களப்பிரர் என்பதை உணர்ந்தேன். இருப்பினும் களவையோ கள்ளையோ நிறுத்த என்னால் முடியவில்லை. திருடிய பசுக்களுக்கு நல்ல விலை கிடைத்தது. கொஞ்சம் பணமும் சேர்த்து வைத்தேன் செல்வியின் திருமணத்திற்கு. அந்தப் பணம் கூடக் குடியில் கரைந்து விட்டது. பிறகு அந்தக் கடையை காஞ்சியின் காவலர் தலைவன் தனது ஆட்களை விட்டுக் குத்தகை எடுத்தான். எனக்குக் குடியை அதிகமாகவும் அடிக்கடி கொடுத்தான். இருப்பினும் சில நாட்கள் நான் மறைந்து விடுவேன். யாருமறியாமல் சென்று பல்லவ பீடத்தை தரிசித்துவிட்டு வருவேன். 

“அப்படி ஒருமுறை சென்றபோது அந்த பீடத்தின் மீது சிறு பட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிசாசு வேஷக்காரன்தான் அதை வைத்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆகையால் அதைத் தொடவில்லை. அதைத் தொட்டாலோ, அகற்றினாலோ பல்லவ பீட சூட்சுமத்தை அறிந்தவன் இன்னொருவன் இருக்கிறானென்று அவன் தெரிந்து கொள்வான். தெரிந்து, கொண்டால் என்னை அழிக்கத் தவறமாட்டான் என்று உணர்ந்து அதைத் தொடாமலிருந்து விட்டேன். பிறகு நான் இங்கு அடிக்கடி வருவதையும் நிறுத்திக் கொண்டேன். 

“பல்லவ பீடத்தின் இரகசியம் எங்கள் இருவருடனும் இருந்தது. இப்பொழுது உங்களிருவரையும் சேர்த்து நால்வரிடம் இருக்கிறது. இருப்பினும் இந்தக் குகையில் நுழையும் மர்மம் எனக்கும் அந்த இன்னொருவனுக்கும் தான் தெரியும். அவன் யாரென்பதை அறிய நான் செய்த முயற்சிகள் வீணாயின. இதற்கிடையில் களப்பிரர் மாட்டுக் களவு அதிகரித்தது. எங்கும் போர் விளைவுக்கான குறிகள் தென்பட்டன. இடையில் ஆந்திரத்திலிருக்கும் பல்லவ மன்னரும் ஒரு ஒற்றனை அனுப்பியதாகத் தெரிகிறது. அது நீயாகத் தானிருக்கும் என்ற சந்தேகங் கூட ஒரு சமயத்தில் தோன்றியது. ஆனால் அது மாறி விட்டது. பின்னர் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் அந்த சந்தேகத்தைப் போக்கடித்து விட்டன. இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது எனக்கு.” -இப்படிப் பேசிய பெரிய மறவன் சிறிது மெளனம் சாதித்தான். 

“என்ன சந்தேகம்?” என்று ஆத்திரத்துடன் வினவினான் குமாரன். 

“இங்கு வந்து பல்லவ பீடத்தின் ரகசியத்தை அறிய முயன்றது நீயில்லா விட்டால் வேறொருவனாயிருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைப்பற்றிச் சிந்தித்தேன்” என்று பெரிய மறவன் சொன்னான். 

“ஏன் அப்பா?” என்று செல்வி வினவினாள். 

“அவன் கொடியவன். ஆனால் இத்தகைய பெரிய ரகசியத்தை மறைக்கும் திறன் அவனுக்கு இல்லை. அவன் இது இருப்பதை அறிந்திருந்தால் இத்தனை நாள் இது காஞ்சி அரண்மனையிலிருக்கும். அல்லது இந்தப் பீடத்திலுள்ள கற்களைச் சிறுகச் சிறுகப் பெயர்த்துவிற்றிருப்பான்” என்று விளக்கினான் பெரிய மறவன். 

“வேறு யாரைத்தான் சந்தேகிக்கிறீர்கள்?” என்று கேட்டான் குமாரன். 

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான் பெரிய மறவன். அவன் வாயில் பேச்சு வரவில்லை. கண்கள் பாறைக் கூரையை நோக்கின. திடீரென்று இரண்டு பாறைகள் நகரும் சத்தம் கரகரவென்று கேட்டது. குகையெங்கும் மை இருட்டு சூழ்ந்தது. யாரோ வெளியே நடந்து செல்லும் காலரவம் மட்டும் கேட்டது. அப்படி நடந்தபோது அணிந்திருந்த பாதக்குறடு டக்டக்கென்று ஒலி கிளப்பியது. பெரிய மறவன் மார்பு டக்டக்கென்று ஒலிகிளப்பிப் பாதக்குறட்டின் ஒலியுடன் கலந்து கொண்டது. 

20.கடல் கிரீடை 

இரண்டு பாறைகள் நகர்ந்து குகையில் மையிருட்டு சூழ்ந்ததும், வெளியில் யாரோ படிகளில் ஏறிச்செல்லும் பாதக்குறடுகளின் ஒலிகள் கேட்டதும், அச்சமென்பதை அறவே அறியாத பெரிய மறவன் இதயத்திலும் அச்சம் புகுந்து அது படபடவென அடித்துக் கொள்ளவே, சில விநாடிகள் அவன் சொல், செயல் இரண்டையுமே இழந்து நின்றான், அதன் விளைவாக, ‘வேறு யாரைச் சந்தேகிக்கிறீர்கள்?’ என்று குமாரன் கேட்ட கேள்விக்குப் பெரிய மறவன் பதில் இயம்ப இயலாமல் மௌனத்தின் வசப்பட்டான். ஆனாலும் சில நிமிடங்களில் சுயநிலையை அடைந்து “குமாரா! முதலில் நாம் இந்த இடத்தைவிட்டு வெளியேறுவோம்” என்று சொன்னான். 

பெரிய மறவன் திகிலுக்கும் மெளனத்துக்கும் காரணத்தை குமாரன் புரிந்து கொண்டாலும் அதைப் பற்றியோ, தாங்கள் குகைக்குள் சிறைப்பட்டு விட்டதையோ அணுவளவும் லட்சியம் செய்யாமல் தனது அருகில் நின்ற தாமரைச்செல்வியின் இடையைத் தனது இடதுகையால் இழுத்து அவள் உடலைத் தனது உடலுடன் இணைத்துக் கொண்டான். பிறகு வலது கையால் அவள் மார்பில் கையை வைத்து அவள் இதயத் துடிப்பைக் கவனித்தான். இதயம் படபடவென அடித்துக் கொண்டதால் அதை நிதானப்படுத்தும் பொருட்டுத் தனது கையால் அவள் இடது மார்பைத் தடவிக் கொடுத்து, ‘செல்வி! இப்பொழுது அச்சத்துக்கு அவசியமில்லை. இந்தக் குகையிலிருந்து வெளியேறுவது அப்படியொன்றும் பிரமாத காரியமல்ல” என்றான். அவன் அப்படிப் பேசியது தனது கையின் சேஷ்டையை மறைக்கவும் தனது தந்தை கண்ணில் மண்ணைத் தூவவுமே என்பதையும் உணர்ந்த தாமரைச்செல்வி தனது கையொன்றால் அவன் கையைப் பிடித்துத் தள்ள முயன்றாள். அது முடியாது போகவே இடது மார்பிலிருந்த அவனது வலது கையைத் தனது வலது கையால் இறுகப் பிடித்தாள். அப்படி கையைப் பிடித்ததும் அதன் பிடியிலேயே சென்ற குமாரனின் வலது கை அவள் வலது மார்பகத்தை அடைந்தது. ‘அவள் அவன் காதை நெருங்கி, “இதயம் வலது புறத்தில் இல்லை” என்று மிக ரகசியமாக ஓதினாள். அந்த அறையில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த நிசப்தத்தில் அந்த ரகசியச் சொற்களும் பெரிதாக ஒலிக்கவே, “என்ன செல்வி?” என்று பெரியமறவன் கேட்டான். 

”எனக்கென்னவோ பயமாக இருக்கிறது” என்று பொய் சொன்னாள் தாமரைச்செல்வி, உண்மையை மறைக்க. 

வயதின் காரணமாகப் பெரிய மறவன் காது அதிக தீட்சண்யமில்லாததால், “நானும் குமாரனுமிருக்க உனக்கு எதற்குப் பயம்?’ என்று கேட்டான். 

“முதலில் இங்கிருந்து போகவேண்டுமல்லவா?” என்ற தாமரைச் செல்வி, குமாரன் வலது கையைத் தனது வலது எழுச்சியிலிருந்து அகற்ற முயன்றாள். ஆனால் அந்தக் கொடிய கை இருந்த இடத்திலிருந்து அகல மறுத்தது. இடது கையும் அவள் இடையிலிருந்து நீங்கி அலையத் துவங்கியது. 

தாமரைச்செல்வி உணர்ச்சி அலைகளில் தூக்கி எறியப்பட்டு இன்ப வேதனையின் வசப்பட்டுத் துவண்டாள். மெல்ல குமாரன் மீது சாயவும் முற்பட்டாள். அப்பொழுது பெரிய மறவன் மெதுவாகப்பேச முற்பட்டு, “குமாரா! செல்வியைக் கவனித்துக் கொள். அவள் உலக அனுபவமில்லாத குழந்தை, வீணாகப் பயப்படுவாள். முதலில் நான் சற்று வெளியே போய்த் திரும்புகிறேன்” என்று கூறினான். 

“கவலைப் படாமல் சென்று வாருங்கள். செல்வியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற குமாரன், “எதற்கும் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். இந்தக் குகையை மூடியவன் உங்களுக்காக வெளியில் காத்திருப்பான். உங்களை அழிக்கத் தயங்கமாட்டான்” என்று எச்சரிக்கையும் செய்தான். 

“என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். அவன் என்னை எது செய்தாலும் அவனை அழித்துவிட என்னால் முடியும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். தவிர, தான் யார் என்று இந்தச் சமயத்தில் காட்டிக்கொள்ள அவன் இஷ்டப்படவும் மாட்டான்” என்று சொன்ன பெரிய மறவன், சொன்னதும் சொல்லாததுமாக வெளியே ஒரு புரவி மிக வேகமாக ஓடும் குளம்பொலி காதில் விழவே நகைத்தான் பெரிதாக. “பார்த்தாயா குமாரா! அவன் என்ன ஓட்டம் ஓடுகிறான்!” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே. 

குமாரன் பெரிய மறவன் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுத்து, “அவன் ஓடவில்லை. உங்களுக்காகக் காத்திருக்கிறான்” என்று திட்டமாகச் சொன்னான். 

“எப்படித் தெரியும் உனக்கு?” என்று வினவினான் பெரிய மறவன் சிறிது சினத்தைக் குரலில் காட்டி. 

“தெரியும்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன குமாரன், “நீங்கள் படிகளில் ஏறிச் சென்றதும் முதலில் உடலை வெளியில் காட்ட வேண்டாம். ஒரு கையை மட்டும் உயர்த்தி இழுத்துக் கொள்ளுங்கள்” என்று யோசனையும் சொன்னான். 

குமாரன் அளவுக்கு அதிகமாகப் பயப்படுவதாகத் தோன்றியது பெரிய மறவனுக்கு. ஆகையால் பதிலேதும் சொல்லாமல் மெல்லக் குகையில் முதல் பாறையை நகர்த்தினான். சுக்கான் கற்களை எடுத்து அடிக்க முயன்றான் தீ மூட்ட. “சுள்ளியை ஏற்றவேண்டாம். பாறைகளை நகர்த்த உங்கள் அனுபவமும் அனுமானமும் போதும்” என்று, பெரிய மறவன் முயற்சியை அப்பொழுதும் தடுத்தான் குமாரன். 

அத்துடன் கற்களைக் கீழே போட்ட பெரிய மறவன் தனது கையால் பாறையைத் தடவி ஏதோ ஒரு இடத்தில் தோளைக் கொடுத்து நகர்த்த, பாறையும் நகர்ந்தது சத்த மேதுமின்றி, பாறையை மீண்டும் மூடாமலே வெளியே சென்று நாலைந்து அடிகள் நகர்ந்து இன்னொரு பாறையையும் நகர்த்திவிட்டுப் படிகளில் மெதுவாக ஏறிச் சென்றான். அவன் காலடிகள் படிகளில் கேட்டதும் தாமரைச் செல்வியை இரு கைகளாலும் இறுகத் தழுவி அவள் கன்னமொன்றில் இதழ்களை ஆழப் புதைத்தான் குமாரன். “தந்தை போகட்டுமென்று காத்திருந்தீர்களா?” என்று கேட்ட செல்வி புன்முறுவல் செய்தாள். ஆனாலும் இருட்டில் அது தெரியவில்லை. 

“தந்தை இருந்தால்தானென்ன? இந்த இருட்டில் என்ன தெரிந்துவிடும்?” என்று குமாரன் கேட்டான். 

“நல்ல அழகு.” 

“எது?” 

“உங்கள் நடத்தை”

“எனது நடத்தைக்கு என்ன?” 

“மாமனார் இருக்கையிலேயே உங்கள் சுபாவத்தைக் காட்டுகிறீர்களே! உங்களுக்கு என்ன துணிவு இருக்க வேண்டும்?” 

“நான் வீரனல்லவா?” 

“அதனால்?” 

“துணிவு இருக்கத்தானே செய்யும்!” 

“நீங்கள் வீரனோ, காமனோ தெரியாது. இரண்டிலும் வல்லமை இருக்கிறது.” -இம்முறை சிறிது நகைத்தாள் தாமரைச்செல்வி. 

சிரித்த அவள் இதழ்களைத் தனது இதழ்களால் மூடினான் குமாரன். பல விநாடிகள் கழித்து அவள் இதழ்களுக்கு விடுதலையளித்து; “இன்று புரிந்து கொண்டேன்” என்றான். 

“என்ன புரிந்து கொண்டீர்கள்?” என்று அவள் கேட்டாள் நாணம் மிகுந்த குரலில். 

“துணிவில் வீரத்துணிவு, காமத்துணிவு என்று இருவகை உண்டு என்பதை இன்றுதான் உணர்ந்தேன்” என்ற குமாரன், “ஆனால் செல்வி, காமத் துணிவுக்கு வீரத்துணிவைவிட அதிக சாமர்த்தியம் வேண்டும்” என்றும் சொன்னான். 

“ஆம் ஆம்” என்றாள் தாமரைச்செல்வி. 

“என்ன ஆம் ஆம்?” என்று கேட்ட குமாரன் அவள் கழுத்தில் இதழ்களைப் புதைத்தான். 

“காமத் துணிவுக்குத் தியாகம் வேண்டும்” என்றாள் செல்வி. 

“தியாகமா?” வியப்புடன் வினவினான் குமாரன். 

“ஆம்” 

“என்ன தியாகமோ?’ 

“வெட்கத்தைத் தியாகம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தந்தை பக்கத்திலிருந்தாலும்…” வாசகத்தை முடிக்கவில்லை அவள்.

“தந்தை பக்கத்திலிருந்தாலும், சொல் செல்வி?’ என்று வற்புறுத்தினான் குமாரன். 

“உங்கள் கை சும்மா இருக்காது.” 

“கை மட்டுமா?” 

“உதடுகளுந்தான்.” 

“உதடுகள் மட்டுந்தானா?” 

“சே சே! உங்களுக்கு வெட்கமில்லை” என்று சீறினாள் அவள். 

அவள் ஊகத்தை நினைத்து நகைத்த குமாரன், “இதயம் மட்டும் சும்மா இருக்குமா?” என்று கேட்டான். 

அவள் நிம்மதிப் பெரூமுச்சு விட்டாள். தான் அத்துமீறிப் போய்விட்டதை நினைத்து வெட்கமும் கொண்டாள். மேலும் ஏதோ சொல்லப் போனவள் சட்டென்று அதிர்ச்சியுற்று நின்றாள். படிகளில் யாரோ உருளும் சத்தம் கேட்டது. குமாரன் வேகமாகப் படிகளை நோக்கி ஓடினான். நான்காவது படியில் உருண்டு கிடந்தான் பெரிய மறவன். அவன் இருந்த படியை அடைந்ததும் அவன் உடலைப் பரிசோதிக்க முயன்ற குமாரனைப் பெரிய மறவன் தடுத்து, “எனக்குக் காயமொன்றுமில்லை. வேண்டுமென்றுதான் உருண்டேன், சற்று நிதானித்திரு. இந்தக் குகைக்கு மேலே யாராவது தோன்றினால் உன் குறுவாளை எறிந்து அவனைக் கொன்றுவிடு” என்று கூறினான். 

குறுவாளை இடைக் கச்சையிலிருந்து எடுத்துக்கொண்டு மெதுவாகப் படிகளில் ஏற முயன்றான் குமாரன். அந்தச் சமயத்தில் மேல்பாறையும் உருண்டு வாயிலை அடைத்துக் கொண்டது. “சரி, அவன் போய் விட்டான்” என்ற பெரிய மறவன் படிகளில் உட்கார்ந்தான். “உங்களுக்குக் காயம் ஏதுமில்லையே?” என்று குமாரன் கேட்க, “ஏதுமில்லை. அவன் குறுவாளை வீசியதும் அதை நான் கையால் பிடித்து உருண்டு விட்டேன். அதற்கு நான் பலியாகி விட்டதாக நினைத்துப் பாறையால் இந்தக் குகையை மூடிவிட்டான். இனி வர மாட்டான். நீ போய் செல்வியை அழைத்து வா” என்றான். 

குமாரன் பெரிய மறவன் உத்தரவுப்படி கீழே சென்று செல்வியை அழைத்துக்கொண்டு இருபாறைகளையும் மூடி, பெரிய மறவன் உட்கார்ந்திருந்த படிக்கு வந்து, “வாருங்கள் போகலாம்” என்று கூறிக்கொண்டு தான் முன்னால் படிகளில் ஏறிச்சென்று குகையை மூடியிருந்த பாறையை அகற்றினான். மற்றவர்களும் வந்தபிறகு குகையைப் பாறையால் மூடிவிடவே இயற்கையின் சுத்தமான காற்றை மூவரும் முகர்ந்தார்கள். பகலவனும் கீழ்த்திசையில் எழுந்தான். 

கடல்மல்லையில் மலைகளின் அழகைத் தனது செவ்விய கிரணங்களால் அழகுபடுத்தினான் காலைக் கதிரவன். கறுப்பான பாறைகளில் தாக்கிய கிரணங்களால் சிவப்பும், கறுப்பும் கலந்து ஒரு புதுவிதக் கல்லையும் மலை மர இலைகளின் பசுமையில் பாய்ந்து பச்சையும் சிவப்பும் கலந்த புதியதொரு வண்ணத்தையும் சிருஷ்டித்து புதுப்புது ரசாயன வித்தைகளைச் செய்து கொண்டிருந்த கதிரவனுக்கு. தூரத்தே தெரிந்த கடலலைகள் கண்ணாடிகளைக் காட்டின. இந்த அற்புதங்களை ரசித்த வண்ணம் மலையிலிருந்து இறங்கிய மூவரும் கடலோரம் சென்றதும், “இங்கே நீராடினா லென்ன?” என்று குமாரன் பெரிய மறவனைக் கேட்க, “நீங்களிருவரும் நீராடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து நீராடுகிறேன்” என்று குறிப்பறிந்து பதில் சொன்னான். 

“ஏன்? நீங்களும் எங்களுடன் நீராடலாமே?” என்று குமாரன் மரியாதைக்குக் கேட்டான். 

”வேண்டாம். எனக்குச் சிறிது வேலையிருக்கிறது’ என்று சொல்லிப் போய்விட்டான் பெரிய மறவன். 

”உன் தந்தை எவ்வளவு நல்லவர்!” என்று குமாரன் சிலாகித்தான். 

“உங்களுக்கு அனுகூலமானவர்” என்றாள் செல்வி. 

“சரி சரி! நீராட உடை உடுத்திக்கொள்” என்ற குமாரன் எட்ட நின்ற தனது புரவிக்குக் குரல் கொடுக்க அது அருகில் வந்தது. அதில் தொங்கிய பையிலிருந்து மாற்றுடை எடுத்து அணிந்துகொண்டான். தனது உடைகளைக் களைந்து அதே பையில் திணித்துவிட்டுக் கடலை நோக்கி நடந்தான். 

அவன் நடக்க முற்பட்டதுமே நீராட்ட உடை அணிந்து உடலைப் போர்த்திய வண்ணம் ஒரு பாறையின் மறைவிலிருந்து வெளிப்போந்து அன்ன நடை நடந்து வந்த தாமரைச்செல்வியும் அவன் நீரில் இறங்கிய அதே சமயத்தில் நீரில் இறங்கினாள். மல்லைக் கடல் ஆரம்பம் மணல் படிந்திருந்ததால், அதிக ஆழமில்லாமல் முழந்தாளளவுக்கே நீர் இருந்ததால், ஆழத்தை நோக்கி நடந்தான் குமாரன். செல்வியும் அவனுடன் நடந்தாள். நல்ல ஆழத்துக்கு வந்ததும் கழுத்தளவு புதைந்த உடலுடன் பக்கத்தில் வந்த செல்வியையும் இழுத்துக்கொண்டான் தனது உடலுடன். அடுத்தடுத்து எழுந்து வீசிய அலைகளைத் தாண்டித் தாண்டிச் செல்வியை அணைத்த வண்ணம் நீந்தினான் குமாரன், “நீங்கள் என்ன அனாயாசமாக நீந்துகிறீர்கள்! நீங்கள் போன ஜன்மத்தில் மீனாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறிய தாமரைச்செல்வி வாயில் கடல்நீரை உறிஞ்சி வாணம்போல் மேலே, ஊதினாள். “நீயும் மீன்தான் செல்வி. வாளை மீன். உன் உடம்பு எத்தனை வழவழப்பாக இருக்கிறது!” என்று அவளைக் கைகளால் தழுவித் தடவினான். 

“உங்களுக்குச் சௌகரியமாகப் போய்விட்டது” என்று நகைத்தாள் செல்வி. 

“நீலத்திரை போடுகிறான் கடலரசன்” என்ற குமாரன், “வித்தியாசம் இனத்தில்தான் இருக்கிறது” என்றும் சொன்னான். 

”என்ன?” -சீறினாள் செல்வி. 

“மெல்லினத்துக்கும் வல்லினத்துக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொன்னேன். திரைக்குச் சின்ன ‘ர’ போட்டால் ஒரு பொருள், பெரிய ‘ற’ போட்டால் இன்னொரு பொருள், இரு பொருளும் இருக்கிறது இவன் போட்ட மறைவில்” என்றான் குமாரன். 

”ஓகோ! திரை இலக்கணம் படிக்கிறீர்களோ?” என்றாள் தாமரைச்செல்வி. 

“ஆம் செல்வி. நான் இலக்கணம் படித்தவன்” என்றான் குமாரன். 

“செயலிலிருந்தே தெரிகிறது” என்றாள் செல்வி. 

அடுத்து அவளுடன் நீருக்குள் மூழ்கிவிட்டான் குமாரன். நீருக்குள்ளேயே அவளை அணைத்த வண்ணம் நீந்தினான். கடைசியாக இருவரும் எழுந்தபோது அவள் பெருமூச்சு விட்டாள் சில விநாடிகள். அப்பொழுது அவர்கள் ஆழம் குறைவான இடத்துக்கு வந்திருந்ததால் பெருமூச்சில் அவள் மார்புகளிரண்டும் எழுந்து தாழ்வதை நோக்கிய குமாரனும் பெருமூச்சு விட்டான். அவள் அதற்குமேல் நிற்காமல் கரையை நோக்கி நடந்தாள். ஆழம் அவள் இடைக்குக் கீழே இறங்கியது. அவள் பின்னெழில்கள் அசையும் அழகைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் குமாரன். அவன் உணர்ச்சிகள் மல்லைக் கடலில் அலைகளைப் போலவே எழுந்து கொண்டிருந்தன. இருப்பினும் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவனும் கரைக்கு வந்தான். 

இருவரும் புத்தாடைகளை அணிவதற்கும், வேறுவாவி யொன்றில் நீராடிய பெரிய மறவன் வருவதற்கும் வேளை சரியாயிருக்கவே மூவரும் பயணத்தைத் துவங்கினர் காஞ்சி நோக்கி. 

புரவியில் ஏறி உட்கார்ந்த சமயத்திலிருந்து குமாரன் ஏதும் பேசவில்லை. ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். பெரிய மறவன் சிந்தனை எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. “இன்னும் நான்கே நாட்களில் களப்பிரர் படைகள் காஞ்சிக்குள் நுழையும்” என்று சற்று இரைந்தே சொன்னான் பெரிய மறவன்.

– தொடரும்…

– பல்லவ பீடம், பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *